Wednesday, June 27, 2007

நான் செய்த அருஞ்சாதனை..

இங்க ஒரு எட்டு வந்து எட்டு போட்டுட்டு போங்கன்னு ப்ரசன்னா நம்மள கூப்பிட்டுருக்காரு.. கொஞ்ச நாளா அதிகம் இந்த பக்கம் வராதவனுக்கு ஒரு புடி கிடைச்சிருக்கு.. இத வச்சு எப்படியும் ஒரு பதிவை போட்டு மக்களை மகிழ்ச்சி கடல்ல இறக்கி விட்டுறதுன்னு முடிவு செஞ்ட்டேன்..

நான் செயத அருஞ்சாதனைகள் என்னன்னு உக்காந்துட்டு யோசிக்கிறேன்.. நடந்துட்டு யோசிக்கிறேன்.. படுத்துட்டு யோசிக்கிறேன்... விடிய விடிய யோசிக்கிறேன், ஒரு கிரகமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்க மாட்டேங்குது.. இதென்றா வம்பா போச்சு அந்தளவுக்கா நம்ம ஞாபகமறதி அதிகமாயிருச்சுன்னு விசனத்தோட உக்காந்திருக்கவன் கொமட்டுல இடிச்சு "நீ எதாவது சாதிச்சிருந்தாத்தானே ஞாபகம் வரும்ன்னு வூட்டம்மிணி சொன்னதும் தான் எனக்கே தெரியுது.. நிசமாலுமே நம்ம ஒரு சாதனையும் செய்யலைன்னு :(.. என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு மனசு வெறுத்து போயி டீவி பொட்டி முன்னாடி போயி உக்காந்தனுங்க.. அதுல கனா காணும் காலங்கள்' சட்டுன்னு அந்த படத்துல நம்ம 'திவ்யா'ம்மா உலுக்குவாங்களே 'அது எப்படிடா ஒன்னுமே தெரியாம ஒருத்தன் இருப்பான்னு' அந்த காட்சி நம்ம முன்னாடி வருது.. ஆஹா அந்த மாதிரி எம்புட்டு சாதனை செஞ்சிருப்போம்.. அதை லிஸ்ட் போட்டு குடுக்கறதவிட்புட்டு இப்படி இடிஞ்சு போயி உக்காந்திருக்கயே ராசா'ன்னு சட்டுன்னு ஒரு.. அது என்னாங்க சொல்லுவாங்க. .. ஞானமா.. ம்ம் அதுதான் அது கிட்டிருச்சுன்னு வையுங்களேன்..

எழுத ஆரம்பிச்சா லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது.. எட்டு தான் போடனுமாமே, நாம பொதுவா எந்த சட்டதிட்டத்தையும் மதிக்கறதில்லைன்னாலும்.. கூப்பிட்டவங்க சொல்லியிருக்காங்க.. அந்த மரியாதைக்காக நான் செஞ்ச சாதனைகள்ல பெரிய சாதனையா ஒரு எட்டு மட்டும் இங்க.. (முழு சாதனை லிஸ்ட்டும் கேட்டு 'சுகப்படனும்னு நினைக்கிறவங்க, தனியா ஒரு மயில் தட்டிவுடுங்க)


1. என் வாழ்க்கையில ஒரே ஒரு முறை தான் மேடை ஏறி பாடியிருக்கேன்.. நாலாப்பு படிக்கும் போது, ஈரமான ரோஜாவே :) அதுல நமக்கு கிடைச்ச முதபரிசு.. அதுக்கப்புறம் அந்த கொடுமைய என் கல்யாணத்துல மட்டும் தான் செஞ்சேன்.. வேறஎப்பவுமே மேடையேறி பாடினதே கிடையாது.
(உங்கம்மா டீச்சரு அதுனால உனக்கு முதபரிசு குடுத்துட்டாங்கன்னு இன்னைக்கு வரை சொல்லி சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்கான் ஒருத்தன்)

2. ஊர் உலகத்துல நாய் கடிச்சவன், தேள்கடிச்சவன் இருக்கான்.. ஏன் புலி சிங்கம் கடிச்சவன் கூட இருக்கான்.. ஆனா பெருச்சாளி கடிச்ச முத ஆள் நீதான்டா'ன்னு எங்க தெருடாக்டர் (குடும்பத்துக்கு வைத்தியம் பார்த்த குடும்படாக்டர், தெருமுச்சூடுக்கும் இவரே அத்தாரிட்டி அதுனால தெருடாக்டர்) என்னைய பார்த்து ராத்திரி ரெண்டு மணிக்கு விழுந்து விழுந்து சிரிச்சது ஒரு சாதனை.
(நான் செஞ்ச சாதனையா இல்ல பெருச்சாளி செஞ்ச சாதனையான்னு தெரியல..எப்படியோ ஒரு சாதனை)

3. முதமுதலா கியர் வண்டி -பைக் ஓட்டி பழகறீங்க, எங்க ஓட்டுவீங்க.. ஒரு க்ரவுண்ட்லயோ இல்லா அதிகம் போக்குவரத்து இல்லாத வீதியா பார்த்து ஓட்டுவீங்க.. நாம அதுல ஒரு சாதனை செஞ்சோம்.. முதல்முறையா கியர் வண்டி ஓட்டுனது தொடர்ந்து 55கிமி, வால்பாறை டவுன்ல இருந்து ஆளியார் வரைக்கும். 40+ கொண்டைஊசி வளைவுக இருக்கிற மலைப்பாதை. சமீபத்துல கூட ரெண்டு நாள்ல 1300 கிமி தூரம் பைக்ல சுத்திட்டு வந்தேன்னாலும், முத தடவை பை ஓட்டத்தெரியும்னு பொய் சொல்லி பைக் எடுத்துட்டு அந்த பாதைய எப்படி தனியா, அதுவரைக்கும் கியர் வண்டி ஓட்டாத நான் ஓட்டிட்டு வந்தேங்கிறது இன்னைக்கு வரைக்கும் எனக்கே ஆச்சிரியம் குடுக்கிற சாதனை.
(பொள்ளாச்சி வரைக்கும் வராம ஏன் ஆளியார் வரைக்கும்தான் வந்தேன்னு தோணலாம்.. அது ஏன்னா.. மலைப்பாதையில ஒழுங்கா வந்த நான் சமவெளிக்கு வந்ததும் தடுமாறி விழுந்து ஹேன்டில்பார் திரும்பி.. அப்புறம் அங்க இருந்து வண்டிய தள்ளிட்டு வந்து போன் போட்டு ஒரு சகாவ வரசொல்லி ஊருக்கு வந்து சேர்ந்தேன்)

4. தமிழகத்தின் மாபெரும் பொழுதுபோக்கான 'சீரியல் பார்க்கிறதுங்கிற சமாச்சாரத்துல இது வரைக்கும் ஈடுபட்டதே இல்லை.. வெளிமாநிலத்துல /நாட்டுல பொட்டிதட்டுற ஜென்டில்மேன்-லேடீஸ் எல்லாம் இருப்பீங்க இந்த லிஸ்ட்ல், ஆனா நான் வூட்ல இருந்த காலத்துலயும், வூட்டாளுக சீரியல் பார்த்த காலத்துலயும் சரி, இன்னைக்கு வரை எந்த டீவியலயும் எந்த மெகா தொடரையும் ஒரு எபிசோட் கூட முழுசா பார்த்ததில்லை.
(எங்கம்மா சின்ன வயசுல 'ரயில்சினேகம்' முச்சூடும் பார்த்தியேன்னு சொல்றாங்க.. நமக்கு 'இந்த வீனைக்கு..' பாட்டை தவிற வேற எதுவும் ஞாபகம் இல்லை. அப்படியே இருந்தாலும்.. அது அறியாத வயசு, இப்போ தினமும் காய்கறி அரிஞ்சு குடுக்கற வயசு)

5. வலையுலகத்துலயே, ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே மாபெரும் வெற்றி பெற்ற 'அந்த' படத்தை பத்தி பதிவு எழுதாத ஆள் நான் ஒருத்தன் தான்ன்னு நினைக்கிறேன், இதுவும் ஒரு சாதனை.
(ஆனா படத்தை மட்டும் வக்கனையா ரெண்டு தடவை பார்த்து தொலைச்சுட்டேன்.. என்ன செய்யறது நம்மள ஓசியில பார்க்க விடுற ரெண்டு தியேட்டர்லயும் ஓடுதே)

6. தீபாவளிக்கு ரிலீஸ் ஆனா அஞ்சு படத்துல நாலு படத்தை ஒரே நாள்ல பார்த்துட்டு, அடுத்த நாள் செமஸ்டர் பரிட்ச்சை முடிஞ்சதும் அவசரமா மெஸ்ல கொட்டிகிட்டு விட்டுபோன அந்த அஞ்சாவது படத்தையும் மேட்னி பார்த்தது. இது தனி மனித சாதனை இல்லைங்க.. இந்த தேசத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமுதாயத்துல இருந்து 'நாலு' பேர் சேர்ந்து செஞ்சது.
(நாலாவது படத்துக்கு அஞ்சாவது படத்துக்கும் நடுவால ஒரு பேப்பர் எழுதினனே, அது ஒன்னு மட்டும் ஏழாவது செமஸ்ட்டர் வரைக்கும் கூடவே வந்து காட்டுன 'த்ரில்' இருக்கே அது அந்த நாலு படம் பார்க்க ஒவ்வொரு தியேட்ட்ர்ல இருந்து அடுத்த தியேட்டர் வரைக்கும் ப்ரூட்டி குடிச்சுகிட்டே ஓடுனப்பா கூட கிடைக்கலைங்க)

7. உலக வரலாறுலயே ஒரு செமஸ்ட்டர்ல துவைச்சுகாயப்போட்டுட்டு (வாஷஅவுட் ஹி ஹி) ஆயிட்டு அதுக்கு அடுத்த செமஸ்ட்டர்ல வழக்கம்போல ப்ராக்டிக்கல்ல ஆப்பு அடிச்சும், க்ளாஸ் பர்ஸ்ட் எடுத்து சாதனை செஞ்சது நான் மட்டும் தான்னு எங்க 'தல' (HOD) பெருமையா சொன்னாரு.. எங்கய்யன்கிட்ட.
(ஆனா, நான் வாஷஅவுட் ஆன விவரம் அதுக்கு முன்னாடி எங்கய்யனுக்கு தெரியாதுங்கிறது தான் இதுல கொடுமை :( )

8. தனியா படிக்க ஒரு புஸ்த்தகம் இல்லாம, பாட்டு கேக்காம, பேச கூடமாட ஒருத்தர் இல்லாம, அட புட்டியோ, புகையோ கூட இல்லாம, சும்மாவே மூணு நாள் இருந்திருக்கீங்களா.. வெளிய அடிச்சு கொட்டுற மழைய பார்த்துகிட்டு, ரெண்டு பாக்கெட் ப்ரட்டை அப்பப்போ சிம்னிவிளக்கு மேல ஈயத்தட்டை வச்சு டோஸ்ட் செஞ்சு சாப்டுகிட்டு, இளநி குடிச்சுகிட்டே மூணு நாள் உக்காந்திருக்கேன் எங்க தோட்டத்து சாலையில.. :)
(இதுக்கு பேரு சாதனையா, கிறுக்குபுடிச்சு கிடந்திருப்பன்னு சொல்றீங்களா.. இருக்கலாம்.. அந்த கிறுக்கு இப்பவும் தெளிஞ்சதா எனக்கு தெரியல :). ஒரு போட்டிக்காக செஞ்ச வேலை அது.. ஜெயிச்சதுல எனக்கு கிடைச்சது இன்னைக்கு தேதியில சவுத்ல most charming'ன்னு என் பக்கத்து கூட்டு திருப்பதி இளஞ்சிட்டு மெச்சறவனோட நட்பு )


அப்பா எப்படியோ முக்கி தக்கி நான் செஞ்ச சாதனைக லிஸ்ட்ல இருந்து ஒரு எட்டே எட்டை எடுத்து விட்டிருக்கேன்.. நேரம் கிடைக்கும் போது மிச்ச சொச்சத்தையும் லிஸ்ட் போடுறேன். ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதா :)

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.




நான் கொஞ்சம் தமிழ்பதிவு உலகத்தை க்ளோசா ஃபாலோ செய்யலை கொஞ்ச நளா,, அதுனால யாரு இன்னும் சாதனைய சொல்லல, இன்னும் யாருமே கூப்பிடாம இருக்காங்களோ, அப்படி யாரும் இருந்தா, இந்த பதிவ படிச்சா.. சட்டுன்னு பின்னுட்டத்துல சொல்லிட்டு நிங்களே இந்த சங்கிலிய இழுத்திருவீங்களாம் . சரியா.. (உன் சோம்பேரித்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லாம போகுது ராசா)

--
#230

Monday, June 18, 2007

ஒரே கேள்வி!

புதுசா ஒன்னுமில்லைங்க..
ரொம்ப நாளாவே மனசுல இருக்கிற கேள்விதான்..
இன்னைக்கு பொதுவில கேக்குறேன் அவ்ளோ தான்..




" இவுங்களுக்கெல்லாம் நிசமாலுமே அறிவு இல்லையா..
இல்ல, அறிவு இல்லாத மாதிரி நடிக்கறாங்களா "



--
#230


Thursday, June 14, 2007

சிக்'ன்குனியா !!

கேரளாவுல சிக்கன்குனியா பரவலா இருக்குதாங்க.. ஆறு மாசம் முன்னாடி நம்மூர் பக்கமெல்லாம் ஒரே ரகளையா இருந்துச்சு, ஆளாளுக்கு முட்டிய புடிச்சுக்குட்டு படுத்திருந்தாங்க.. எல்லா க்ளினிக்'லயும் ஹவுஸ் புல் போர்ட் மாட்டாத குறை..

க்ளினிக் பக்கத்துல இருந்த ஷெட்ட வாடகைக்கு புடிச்சு அங்க பெட் போட்டு க்ளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு ஒரு பெரிய கலெக்ஷ்ன் பார்த்தாங்க. :)

நம்ம சகா ஒருத்தன் மெடிக்கல்ஷாப் வச்சிருக்கறவன்.. 'அது பொற்க்காலம்'ன்னு சொன்னது இன்னும் மனசுல இருக்கு.

இப்ப கேரளாவ ஆட்டிவச்சுட்டு இருக்குதாம், பருவ காத்து வேற அடிக்க ஆரம்பிச்சிருக்கு, மழை கொஞ்சமா வருட்டுமா வேண்டாமான்னு போக்கு காட்டிட்டு இருக்கு.. கொசுவுக்கு அருமையான காலம் தான்.. :( அதுனால நம்மூரு பக்கம் எல்லாம் கொஞ்சம் கிலியாத்தான் இருக்காங்க..

கேரளாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு பரவாம இருக்க தமிழக அரசு முன்னேற்ப்பாடு செஞ்சிருக்குன்னு சொன்னாங்க.. சந்தோசமா இருந்துச்சுங்க .. கொஞ்ச நேரம் வரைக்கும்..

என்ன முன்னேற்ப்பாடுன்னா? பெரிய ஆஸ்பத்திரியில எல்லாம் மருந்துக்கு ஆர்டர் குடுத்திருக்காங்களாம், அதுபோக, கேரளா பார்டர் தாண்டி வர்ற எல்லா வண்டியயும் நிறுத்தி கொசுமருந்து அடிக்கறாங்களாம்.. சித்த முன்னாடி எங்கய்யன் 'பார்டர்' தாண்டி வந்தப்போ அடிச்சிருக்காங்க.. 'சுத்தி சுத்தி அடிக்கறானுக.. டிக்கு ஓப்பன் செய்ய சொல்லி வேற அடிச்சானுக'ங்கிறாரு..

அடப்பாவிகளா.. கொசு பஸ் / வேன் புடிச்சா வருது.. !!

என்ன கொடுமைங்க சரவணன் இது.. :(

நம்ம அரசாங்க இயந்திரத்தோட கடம உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சு.. பார்டர் தாண்டி மேஞ்சுட்டு வர்ற எருமைமாட்டுக்கு மருந்து அடிக்கனும்னு கணக்கு எழுதி அள்ளாத வரைக்குஞ்சரி..

--
#229

நான் தான் பேசுறேன்

ஒருத்தரை தொலைபேசியில கூப்பிட்டு, அவர் அந்த பக்கம் ஹலோ'ன்னு சொன்னதும் 'டேய், நான் தான் பேசுறேன்' / 'நான் தாம்பா பேசுறேன்' / நான் தாங்க பேசறேன்'னோ சொல்றவங்க அத்தனை பேரும் நரகத்துல அரக்கன் கையால எண்ணைச்சட்டியில வறுபடுவாங்கன்னு யாராவது ஒரு ஸ்ரீ ஸ்ரீ டகால்டியானந்தா சுவாமிகள் மாதிரியான ஆளுகலாவது அறிவிச்சிடுங்கப்பா..

:(



இவுங்க ரவுசு தாங்கமுடியல.

மத்த நேரத்துல கூட சரிங்க, ஆனா, காலங்காத்தால பெங்களூர் ட்ராபிக்க நொந்துகிட்டு சிக்னல்ல கியரும் க்ளட்ச்சுமா நிக்கும் போது சுத்தியும் அத்தனை சத்தத்துக்கு நடுவால காதுல மாட்டியிருக்கிற ஈயர்போன்ல 'நான் தான் பேசுறேன்'னு சொன்னா.. ங்ஙொய்யால.. நல்லா வருது வாயுல..
சில நேரம் நம்ம மாமனார் வீட்டு ஆளுகலும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க.. அதுனால 'நா காக்க' வேண்டியிருக்கு..

மனுசனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாருங்க.. ச்சே :)

img : http://www.jezblog.com/

--
#228