Monday, October 13, 2008

,

,

ஊர் நிலவரம்

ஊர்ல யாருகிட்ட பேச்சுகுடுத்தாலும் பவர்கட் சமாச்சாரம் தான் டாபிக்.. யூ.பி.எஸ் போட்டாச்சா? எதோ பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிச்சாச்சாங்கிற மாதிரி கேக்கறாங்க.. ரெண்டு வருசம் முன்னாடி 8500ரூபா கேக்கராங்கன்னு அதெதுக்கு வெட்டியா, சிஸ்டத்துக்கு மட்டும் இருந்தா போதும்னு விட்டாச்சு.. இப்போ 20ஆயிரம் கேக்கிறாங்க.. ஓகே ரைட்டு, வந்து மாட்டிருங்க'ன்னா.. பதினஞ்சு நாள் ஆவும்ங்க.. ஒரே டிமான்டு'ன்னு பதில்வருது.. சரி சீக்கிரம் எப்படியாவது செய்யுங்கன்னு சொல்லியிருக்கு. அது வரைக்கும் தாங்கனும் எப்படியாவது..

ஷெட்யூல் போட்டு தாக்குறாங்க.. போன வாரம் வரைக்கும் ராத்திரி 12-1.30 வரைக்கும் இல்ல.. இந்த வாரம் காலையில 4.30-60 வரைக்கும், பாவம் படிக்கற புள்ளைக, ஒழுங்க தூங்கனும்.. அப்புறம் தான எந்திருச்சு படிக்கறது எல்லாம். ம்ம் எல்லாம் நம்மள மாதிரி அலாரம் வச்சு எந்திருச்சு மொட்ட மாடி லைட்ட போட்டுவிட்டு தூங்கியே படிச்சதா பேரு பண்ணிக்க முடியுமா, இன்னைக்கு அம்மாக்க எல்லாம் உஷாரா இருக்காங்க.. கூடவே வந்து உக்காந்துக்கறாங்களாம்.

"பகல் கூட பரவாயில்லை, ராத்திரியில ரெண்டு மணி நேரம் எல்லாம் ரொம்ப ஓவர்"ப்பான்னு எதார்த்தமா சொன்னேன், "உனக்கென்ன, மாசம் ரெண்டு தடவை வந்துட்டு ஓடிருவ, இங்க தொழில் செய்யரவனுக்கு தான் தெரியும் கதை"ன்னு ஆரம்பிச்சு கொட்டி தீர்த்துட்டான் கூட வந்த ஒரு தொழிலதிபர் சகா. "ஒரு நாள் ஆள் கூலி குடுத்தா வேலை செய்ய மூணு மணி நேரம் தான் கரண்ட் இருக்கு.. 300 பீசு ரெடியாகனும் பாம்பே ஆர்டர், இவனுக எல்லாம் என்ன கவர்மென்ட் நடத்துறானுகளோ, சரி மெஷ்ன் ஓடாத நேரம் கவர்மென்ட் வேலைய முடிக்கலாம்னு டாக்ஸ் ஆபீஸ் பக்கம் போனா,  எல்லாம் கம்ப்யூட்டர் மயம் செஞ்சாச்சு, அதுனால கரண்ட் இருக்கும் போது வாங்கன்னு வாசலோட அனுப்பிடுறாங்க.."ன்னு ஒரு மணி நேரம் திட்டி தீர்த்தாரு.. "கேரளாவுல பாருங்க இந்த பவர்ஷெட்டிங்'கெல்லாம் ஒண்ணுமே கிடையாது" - தோழர் ஒருத்தர் பெருமையா சொன்னாரு.. நம்ம உள்ளூர் தொழிலதிபர் கடுப்பாகி.. "ஆமா, அங்க என்ன தொழில் செய்ய விடறீங்க.. பூராப்பயலையும் கொடியபுடிச்சு தொரத்திருங்க.. எல்லாரும் இங்க பார்டர் தாண்டி வந்து தொழில்செய்யறான்.. அதான் இங்க பத்தாகுறையா இருக்கு"  பத்து நிமிசம் முன்னாடி இதே தொழிலதிபர் பேசுன பேச்ச நினைச்சா.. ம்ம்.. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு.

"ஆயிரம் சொன்னாலும் கேரளாக்காரம் வேக்யானமானவன் தான்.. இத்தனை வருசமா பொள்ளாச்சி ரயில்வே மதுரைக்கு கீழ தான் இருந்துச்சு, என்னத்த கழட்டுனாங்க.. இப்போ பாருங்க கேரளாவூக்கு தள்ளி விட்டதும் அவுங்க வந்து ப்ராட்கேஜ் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. ஒட்டஞ்சத்திரம், பொள்ளாச்சி சந்தைகளும் பழனிக்கு வர்ற பாலக்காட்டு கூட்டமும் அவங்களுக்கு சவுரியமா தெரியுது -   அங்க எதாவது ஒன்னு இலவசமா தர்றானா.. இங்க 1300கோடி சம்ஸ்டேஷன் வேல மூணு வருசமா பெண்டிங், ஆனா 6500கோடி செல்வௌ செஞ்சு டி.வி பொட்டி குடுக்கறாங்க.."தோழர் அடுக்கிட்டே போனாரு, சரி வெளியூர் கதைய விடுங்கப்பா, நம்மூர் கதையே ஆயிரமிருக்குன்னு ஒரு வழியா முடிச்சு வைச்சேன்.

ஆற்க்காடு வீராஸ்வாமிய தான் இன்னைய தேதிக்கு தமிழகத்தின் கெட்ட வார்த்தைன்னு நினைக்கிறேன், அந்தளவுக்கு மரியாதை அய்யா பேர சொன்னாலே :) தயாநிதிய தூக்கினப்போ சில சில்பான்ஸுக "அய்யகோ எல்லாம் போச்சே"ன்னு அலறுனதும், அறச்சீற்றம் கொண்டு எழுந்து "மந்திரி என்னையா மந்திரி, எல்லாம் சீஃப் செக்ரட்டரி தான்"னு சொன்னவங்க கூட இன்னைக்கு அதிகாரிகளவிட்டுட்டு ஆற்க்காட்டார தான் காரணம் காட்டிட்டு இருக்காங்க.. பாவம்.

பேசிகிட்டே "கத்திகப்பல்" ஓடுற தியேட்டர் பக்கம் வந்துட்டோம்.. அந்த தியேட்டர்ல நம்ம எப்பவும் டிக்கெட் வாங்கறதில்லை, அய்யன் சிநேகிதம், "மணிரத்னம் அசிச்டெண்ட்டாம், போலாமா?"ன்னு தொழிலதிபர் கேட்டதும், சரின்னு உள்ள போனோம், உள்ள நுளையும் போதே எதோ தப்பா தெரிஞ்சுது, ஒரு பரபரப்பே இல்ல, ஒரு நா முன்னாடி தான் படம் ரிலீஸுன்னாங்க.. தியேட்டர் மேனேஜர் வெளிய நின்னிகிட்டிருந்தாரு,  "எப்படின்னே? பார்க்கலாமா?" .. சிரிச்சாரு.. "மார்னிங்ஷோ ஒரு ஆள் கூட வரலை.. இப்போ ரெண்டு டிக்கெட் குடுத்திருக்கோம், மூணாவதா நீ வந்திருக்கே".. 40 வருட தியெட்டர் வரலாற்றில் முதல்முறையாக ஒரு புது ரிலீஸ் படத்துக்கு, ரெண்டாவது நாளே இந்த கதியாம்..  ஆஹா சாமி ஆள விடுங்க, அந்த பாவத்தை வேற நான் சுமக்கனுமான்னு ஒடியாந்துட்டோம்.

பொட்டி தட்ட திரும்ப கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன்'ல நின்னோம், வழக்கம் போல ஐலேண்ட் லேட்டு தான், ஆனா இன்னைக்கு அரைமணி நேரம் தான் டிலே.. ப்ளாட்பாரத்துல ஐபாடும், செல்ஃபோனுமா சிணுங்கிட்டு இருந்தவங்கள வேடிக்க பார்த்துகிட்டே சுத்தறப்போ, 10.30 மணிக்கு சரியா பவர்கட், ஒரு நிமிசம் இருட்டாகி, பேட்டரி லைட்டுக மறுபடியும் வெளிச்சம் கொண்டுவந்துச்சு.. கூட வந்த சகா சொன்னான் "இப்படி பவர் கட் ஆச்சுன்னா அப்புறம் ரயில் எல்லாம் எப்படி நேரத்துக்கு வரும்?" .. "உனக்கெல்லாம் எவன்டா அத்தாப்பெரிய கம்பெனியில மேனேஜர் போஸ்ட் குடுத்தானுக"ன்னு கேட்டேன், விடலையே அவன்,  மறுபடியும் கேட்டான் "கரெண்ட் போனா உடனே டீசலுக்கு மாத்திக்குவாங்களோ"..  ஸ்ஸப்ப்பா.. ராமா, என்னை ஏன்தான் இப்படிபட்ட ஆளுக கூடவே கூட்டு சேர்த்தரயோ..

Tuesday, October 7, 2008

♫ ஆண்பாவம் - கொல்லங்குடி கருப்பாயி ♫


கூத்து பார்க்க அவரு போன.. தன்னானேனானே..
கோடி சனம் கூட வரும் தில்லேல்லேலேலே

ஆத்து பக்கம் அவரு போனா தன்னானேனானே..
ஆதவன் கொடப்புடிக்கும் தில்லேல்லேலேலே

திருப்பதில நிப்பாரு பாரு தன்னானேனானே..
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவரு பேரு தானே ..

பாட்டு கேக்க

Friday, October 3, 2008

கருத்து

வழக்கமா மாசம் ரெண்டு தடவை வந்து போகும் அதே ஏசி செமிஸ்லீப்பர் பஸ்.. 10.00 மணி'க்கு கிளம்பறதா டிக்கெட்டுல போட்டிருப்பாங்க, வழக்கமா 10.30க்கு தான் வண்டி கிளம்பும், அன்னைக்கு அதிசியமா 10.05'க்கு எல்லாம் கிளம்பிருச்சு. பெங்களூர் ட்ராஃபிக் தெரியும் தான, பொம்மனஹள்ளி போயி சேரவே 40 நிமிசம்.. அங்க தான் பெரும்பாலும் நம்ம பொட்டி தட்டுற மக்கள் எல்லாம் ஏறுவாங்க.. பொம்மனஹள்ளி'யில பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது பார்த்து, பழகி.. இப்போ ஐப்பசி'ல கல்யாணம்.. ஒரு சகா'க்கு.. ஆனா இந்த பதிவு அதை பத்தி இல்லை. :)

பொட்டிதட்டுற மக்கள் எல்லாம் ஏறி, கூகிள் உதவியில்லாம டிக்கெட்ல இருக்கிற சீட்டு நம்பர ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு குழப்பி குழம்பி, ஒரு வழியா உக்காந்து.. வண்டி  எடுச்சாச்சு..

ஒசூர் தாண்டி ராயக்கோட்டை வழியா விட்டுட்டானுக அன்னைக்கு.. ஹைவேஸ்ல ரோட்டு வேலை நடக்கறதால, பெரும்பாலும் அந்த வழி தான் இப்போ எல்லாம்.. முன்னாடி சீட்டுல உக்காந்திருந்த தலைவர் நல்லா தலை வரைக்கும் கம்பிளிய போர்த்திகிட்டு தூங்கியாச்சு..  ஆனாலும் அவர் மொபைல் ஹெட்போன்ல இருந்து பாட்டு எனக்கு நல்லாவே கேக்குது..

திடீர்னு தூக்கம் கலைஞ்சிருச்சு..  எனக்கு ஒரு பழக்கம், வண்டி நிக்கும் போது தூங்க முடியாது.. மூவிங்ல இருந்துட்டா ஓகே.. ஆனா நின்னுட்டா தூக்கம் கலைஞ்சிரும்..  ஏசி பஸ் வேறைங்களா.. ஜன்னல திறக்கவும் வழி இல்ல.. வெளிய இருட்டுல நிறைய வண்டி நின்ன மாதிரி இருந்துச்சு.. சரி  எதோ ட்ராஃபிக் போல'ன்னு மறுபடி தூங்க முயற்ச்சி செஞ்சேன். ஒரு அரை மணி நேரம், தூங்கவும் முடியல.. வண்டியும் நகரலை.. மெதுவா எந்திருச்சு யார் தூக்கத்தையும் கலைக்க கூடாது இல்ல.. முன்சீட்டு தலைவர் வேற லைட்டா குறட்டையோட சுகமா தூங்கறாரு..

வண்டிய விட்டு இறங்குனா. எதோ மெப்கோ'க்கு போறா சரக்கு லாரிபோல.. நடு ரோட்டுல தலைகீழா பார்க் ஆயிருந்துது.. நம்ம மக்கள் வழக்கம் போல. ரிக்கவரி வேன் கூட ஸ்பாட்டுக்கு வர முடியாத மாதிரி ரெண்டு பக்கமும் வண்டிய போட்டுவச்சுட்டு நின்னிருந்தாங்க..  இவனுகள திருத்தவே முடியாது.. சரியா நாலுமணிநேரம்.. ஒரு வழியா மேட்டுர்ல இருந்து  க்ரேன் வந்து, இழுத்து போட்டு, தாறுமாரா நின்னிருந்த வண்டிகள  எல்லாம் ஒழுங்கு பண்ணி.. வண்டி கிழம்புறதுக்குள்ள நமக்கு போதும் போதும்னு ஆயிருச்சு.. சும்மா நின்னு டிரைவர் கிட்ட வாங்கின 'ஸ்மால்'ஊதிட்டு வேடிக்கை பார்க்கவே..

வண்டி எடுத்ததும் சீட்டுக்கு வந்தா.. முன்சீட்டு தலைவர் ஆனந்த சயனம்.. ஹெட்ஃபோன் காதுல இருந்து நழுவி வெளிய தொங்குது.. கொடுத்து வச்சன்னு நினைச்சுகிட்டேன்..

வழக்கமா 7 மணி வாக்குல பொள்ளாச்சி கொண்டு போயி சேர்த்துவாங்க.. இன்னைக்கு இங்கயே நாலு மணிநேரம் லேட்டு..  எப்படியும் மதிய சோத்துக்கு தான் நினைச்சுகிட்டே தூங்கி போயிட்டேன்..

காலையில ஒரு 6.30 மணிக்கு தூக்கம் கலைஞ்சு பார்க்கும் போது திருப்பூர நெருங்கிட்டு இருந்துச்சு வண்டி.. பரவாயில்ல அடிச்சு ஓட்டிட்டு வந்துட்டார் போலன்னு.. சந்தோசப்பட்டுகிட்டேன்..

மணி 7.20. திருப்பூர்ல எறங்கவேண்டிய ஆளுக எல்லாம் இறங்கியாச்சு.. டிரைவர் எதோ இன்வாய்ஸ் பேப்பரோட கீழ இறங்கி நின்னுட்டிருக்காரு.. மொத்தமா திருப்பூர்ல வண்டி நின்னே ஒரு 3 நிமிசம் தான் இருக்கும்..  அப்பத்தான் முன்சீட்டுக்காரர் செல்ஃபோன் அலறுச்சு..  எதோ ஒரு mp3 ரிங்டோன்.. தடாபுடான்னு தூக்கம் கலைஞ்சு  எந்திருச்சு கம்பிளிய விலக்கி.. ஹெட்ஃபோன கழட்டி, தடவி, ஒரு வழியா பட்டன அமுக்கி பேசுனாரு.. பாவம் நல்ல தூக்கத்துல இருந்தாரு போல..

எல்லாம் வூட்ல இருந்துதான் போல..   7 மணிக்கெல்லாம் வந்திரவேண்டிய வண்டி இன்னும் வரலைன்னு கூப்பிட்டுருப்பாங்க, தலைவர் ஸ்க்ரீன விலக்கி வெளிய எட்டி பார்த்தாரு, சுத்தி முத்தி பதட்டமா பார்த்தாரு.. அப்புறம் போன்ல ஒரு கருத்து சொன்னாரு பாருங்க.. " இந்த கருமம் புடிச்ச வண்டில வந்தாலே இப்படித்தான், அங்க அங்க நிறுத்தி வச்சுக்குவான்..  இப்போ திருப்பூர்ல நிறுத்தி வச்சிருக்கான்.. டிரைவர வேற காணோம், அதுக்கு தான் நான் இந்த வண்டில வர்றதே இல்ல.."ன்னு ஆரம்பிச்சு..அப்புறம் அதுக்குமேல எனக்கு ஒன்னுமே கேக்கல..

பயபுள்ளைக எப்படியெல்லாம் 'கருத்து சொல்றானுக..

நாலுமணி நேரம் ஒரே இடத்துல நின்னும்.. சமாளிச்சு ஓட்டி ரெண்டுமணி நேர டிலே'ல கொண்டுவந்துட்டிருக்காங்க.. இவரு சூப்பரா தூங்கிட்டு, சட்டுன்னு எந்திருச்சு ஒரே நிமிசம் வெளியபார்த்துட்டு போட்டு தாக்குறாரு..

Wednesday, September 24, 2008

செம்மானம் இடறுது



"எங்கயோ செம்மானம் இடறுதுன்னு நான் நினைச்சேன்.. 
இங்க தான் எம்மானம் இடறுதுன்னு அறியலையே.."


"நீங்க செத்துபோயிட்டா நான் என்னன்னு பாடி அழுகறது"ன்னு சாவோட வலி தெரியாம  கேட்ட 9 வயசு பேரனுக்கு அவுங்க அப்பாரு சொல்லி குடுத்த ஒப்பாரி பாட்டு இது..   அன்னைக்கு அந்த பேரனுக்கு பொறந்த நாள் வேற..  அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பொறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையவே கிடையாது அவருக்கு.

இன்னைக்கு அந்த பேரனுக்கு 61வது பிறந்த நாள்.. இந்த நாள் ஞாபகம் இருக்கறதே, அவரோட தம்பி பையன் பொறந்தநாளுங்கிறதால தான். இன்னைக்கும் வழக்கம் போலவே எதும் விசேஷம் இல்ல.. . அப்பாரு சொல்லிகுடுத்த பாட்டை முதன்முதலா ரெண்டாம்மனுசங்க - மகனும் மருமகளும் - கிட்ட சொன்னது தவிர..

இன்னும் எதேதோ நினைவுகள்.. சப்-ஜெயில் வார்டனா இருந்த அவுஙக் அப்பாரு மீசை, வெள்ளை டவுசர், காக்கி பட்டை'ன்னுபெருமைய எல்லாம் சொல்லிகிட்டிருக்காரு.. மகனுக்கு புடுங்க வேண்டிய ஆணிகளோட ஞாபகம்.. 11.30 மணிக்காவது வேலையிடத்துக்கு போகனுமே.. சாயங்காலம் பேசுவோம்ன்னு ஒடியாந்துட்டான்..

வந்து ஆணி புடுங்கறதுக்கு நடுவால.. இந்த பதிவு.!!

இந்த 29 வயசுல ரெண்டாவது தடவையா எங்கய்யன் கண்ணுல கண்ணீர் எட்டிபார்க்கிறத பார்த்திருக்கேன்.. சாயங்காலம் நேரத்தோட வூட்டுக்கு போகனும்.. யாரவது வந்து 'ஆணிய புடுங்க வேண்டாம்னு' சொல்லுங்களேன்..


* செம்மானம் - செவ்வானம்
* இடறுது - இடி இடிக்கிறது
- கொங்கு பேச்சு வழக்கு


Friday, September 19, 2008

அப்பா

"ஒன்னு கேக்கனும் தம்பி", 'இன்னைக்கு ராத்திரிக்கு தாங்காதுங்கிறத டாக்டர் பதமான இங்கிலீசுல சொல்லிட்டு போனது ஆஸ்பத்திரி கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து சன்னமா கேட்டதுக்கப்புறம் உள்ளார வந்து பக்கத்துல நிக்கிற எம்மவன் கிட்ட கேட்டேன்.

"சொல்லுங்க" கொஞ்சம் குழப்பமா பதட்டமா பார்த்தான்.

" நீ இப்போ இங்க எதுக்கு வந்த?" வத்திபோயிட்டு இருக்கிற சக்தியெல்லாம் சேர்த்து வச்சு, தேவையில்லாத கேள்வி தான் கேட்டேன், ஆனாலும் எனக்கு தெரிஞ்சுக்க ஆசை.

"என்ன கேக்கரீங்க?" கண்ணுல குழப்பம் அதிகமானாலும், உதட்டோரம் சின்ன சிரிப்பு எட்டிப்பாக்குது

"இல்ல.. பதில் சொல்லு" தொண்டை அடைக்கிற மாதிரி இருக்கு, ட்ரிப்ஸ் போட்ட இடத்த லேசா வருடிக்குடுத்துக்கறேன்.

" நீங்க என் அப்பா, நான் இந்த நேரத்துல இங்க இருக்கனும்" கொஞ்சம் அழுத்தமாவே சொன்னான்.

"அதில்ல.. " தலைய ஆட்ட பார்த்தேன், முடியல.

ஒரு பெருமூச்சு அவன்கிட்ட இருந்து, அப்போ நான் இருந்த மாதிரியே நல்லா உடம்ப வச்சிருக்கான், மூச்சுவிடும் போது டீ சர்ட்ட துறுத்திட்டு ஏறி இறங்குது.. என் கிட்ட வந்து "என்ன சொல்ல வர்றீங்க?" என் மணிகட்டை புடிச்சிகிட்டே கேக்கிறான்.

"ஒண்ணுமில்ல விடு" பார்வைய ஜன்னல் பக்கம் திருப்பிகிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா போச்சு, மருமவபுள்ள துணி மாத்த வீட்டுக்கு போயிருக்கலாம். குழந்தைக எல்லாம் பள்ளிக்கூடத்துல இருந்து களைச்சி போயி வந்திருக்கும்.. அவன் பக்கம் பார்க்காம ஜன்னலுக்கு விட்டத்துக்கும் நடுவால பார்வைய அலையவிட்டேன்.

மனசுக்குள்ளார என்ன என்னமோ ஓடுது. அவன் வழியில நான் எப்பவுமே குறுக்க போனதில்ல, அவன் வாழ்க்கைய அவனே வாழ்ந்துக்க விட்டேன், அவன் முடிவுகள அவனே எடுக்கனும்னு நினைச்சேன். பல பேர் மாதிரி என் வாழ்க்கைய அவன வாழவச்சு பார்க்கனும்னு நினைக்கவே இல்ல நான். என்ன படிக்கிறதுன்னு அவனே தான் முடிவு செஞ்சான், நான் கையெழுத்து மட்டும் தான் போட்டேன், அவனே வேலை தேடிகிட்டான், தப்பான ஒரு ஜோடி கூட தேடிக்கிட்டான். சின்ன புள்ளையா இருக்கும் போது கூட அவன எதிலயுமே தடுத்தது இல்ல, அவன் சேக்காளிகள்ல எவனயாவது புடிக்கலைன்னாகூட, எனக்குள்ளய வச்சுக்குவேன், அவன் கிட்ட சொன்னதே இல்ல. அவன் தப்புகள அவனே தான் தெரிஞ்சு திருத்திகனும்.

"உனக்கு ஞாபகம் இருக்கா.. " பேசனும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு மெதுவா " அப்போ, உனக்கு நான் சைக்கிள் ஓட்ட சொல்லி குடுத்தப்போ.. "

குனிஞ்சு தரைய பார்த்து உக்காந்திருந்தவன், தலை நிமிந்து.. "ம்ம்.. ஞாபகம் இருக்கு, ஒரு நா நீங்க வந்தீங்க.. அப்புறம், நானே தனியா க்ரவுண்ட்டுக்கு எடுத்துட்டு போயி ஓட்ட கத்துகிட்டேனே.." குரல்ல கொஞ்சம் நிறையவே அழுத்தம் இருந்த மாதிரி பட்டுது.

நான் மறுபடி ஜன்னல் பக்கம் பார்வைய திருப்பி, அமைதியாயிட்டேன்.




[pic : http://www.burnside.sa.gov.au]




Friday, September 12, 2008

ஓர் இரவு / ஒரு கேள்வி

"உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்ங்க", ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் மேசையில இருந்து வூட்டம்மிணி தட்டெடுத்துட்டு நகர்ந்ததும் அய்யன் கிட்ட கேட்டேன். ராகி குழாபுட்டும் சுண்டகடல குருமாவும், அவ சமைச்சது, முததடவையா, எங்கய்யனுக்கும் ரொம்ப புடிச்ச ஐட்டம்.., எனக்கும்.

"கேளு" கையத்தொடச்சிகிட்டே கேட்டாரு.

மிச்ச பாத்திரங்கள எடுக்க மறுபடி மேசைக்கு வந்த வூட்டம்மிணிய விலக்க வேண்டி அவசரமா குருமா பாத்திரத்தையும் காலி டம்ளரையும் நகர்த்தி குடுத்தேன். மெலிசா சிரிச்சுகிட்டே வாங்கிட்டு போனா. "கேக்கிறதுக்கு முன்னாடியே சொல்லீறனுங்க, கண்டிசனா சரியான பதில சொல்லோனும்"

" அப்படி என்னத்த கேக்க போற?"

வேகமா தலையாட்டுறேன் "கண்டிசனா சொல்றேன்னு சொல்லுங்க, கேக்குறன்"

கைய தொடச்ச துண்டை மடியில போட்டுகிட்டு நல்லா சாய்ஞ்சு உக்காந்துகிட்டு சரிங்கற மாதிரி தலையாட்டினாரு.

"ரொம்ப நாளாவே கேக்கனும்ன்னு தானுங்க நினைச்சிட்டிருந்தன்.. " கொஞ்சம் தண்ணி குடிச்சிகிட்டேன், "என்னைய பத்தி நிசமாலுமே பெருமையா நினைச்சுக்கறீங்களா...?

....

# 70 [பழைய நினப்பு]



Wednesday, August 13, 2008

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவிஸ்ட்டுகள்

கொஞ்ச நாளா திடீர்ன்னு முளைச்சிருக்கிற இந்த க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டுக [க்ரீன்பீஸ்ன்னா பச்சை பட்டானி தான்னு எல்லாம் கேக்ககூடாது. நான் சொல்றது Green peace Activist' ஓகே.] ரவுசு தாங்க முடியறதில்லைங்க. அவுங்க கொள்கைக எல்லாம் சரிதான், பெரிய விசயம் பேசுறாங்க.. உலகத்தை காப்பாத்தனும்னு சொல்றாங்க.. ரைட்டு, ஒரு பெரிய சலாம் போட்டுறலாம் அதுக்கு. ஆனா இதை சாக்காட்டி வச்சுக்கிட்டு அந்த வேசத்துல இந்த வியபாரிகளுக்கு ப்ரோக்கல் வேல பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க பாருங்க, அது தான் மனுசனுக்கு எரிச்சல குடுக்குது.

லேட்டஸ்ட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிட்டவன் எல்லாம் ஆக்டிவிஸ்ட் ஆயிடரானுக, வேலையிடத்துல தனிசுற்றுக்கு வர்ற வாராந்திரில ஆரம்பிச்சு டெஸ்க்குல போஸ்ட்டர் ஒட்டுற வரைக்கும் இவனுக அலம்பல் ரொம்ப ஓவரா போச்சு. எனக்கு சில சந்தேகம்.. நிசமாவே எலக்ட்ரிக் வண்டிகளால சுகாதரகேடு எதுவும் வராதா என்ன?

1) இதுக ஓடுறதுக்கு கரண்ட் வேணும், அந்த கரண்ட்டும் நிலக்கரியவோ இல்ல இயற்க்கைவாயுவையோ எரிச்சு தான் உருவாக்கறாங்க.. அப்போ அது சுற்றுசூழல பாதிக்காதா. அதுவும் இல்லாட்டி அணுசக்தி, இத பத்தி தான் ஆறு மாசமா ஊரே சிரிசிரியா சிரிக்குதே, அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான்.. நம்மூர்ல பெரும்பகுதி மின்சாரம் தண்ணியில எடுக்கறாங்க, தண்ணின்னா சும்மா வயர்ர தண்ணியில போட்டான்னு எல்லாம் கேக்ககூடாது, அது தாங்க ஹைடல் பவர் ப்ளான்ட். அப்படி கட்டியிருக்கிற உற்பத்தி நிலையம் எல்லாம் சுற்று சூழல அழிக்காம 'தரிசு' நிலத்துல கட்டுனதா என்ன.. அந்த உற்பத்தி நிலயத்த கட்ட இடத்தை குடுத்துட்டு ரெண்டு தலைமுறையா அதுக்கான இழப்பீடும் சரியா கிடைக்காம, அவன் குழந்தைக எல்லாம் ட்ராபிக் சிக்னல்ல நம்ம ஏசி வண்டிய அழுக்காக்கிட்டு சுதந்திர கொடி வித்துட்டு கிடக்கு.. சரி அது வேற கதை.. நம்ம சுற்று சூழம் பாதுகாப்பு பத்தி மட்டும் பேசுவோம்.

2)மின்சாரத்த சேமிக்க அந்த வண்டிகல்ல இருக்கிற பேட்டரி நாளைக்கு அதோட ஆயுசு முடிஞ்சுபோச்சுன்னா என்ன ஆகும், வெளிய தூக்கி போட்டா அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான? எங்க ஆத்தா குடிதண்ணி தொட்டிமேல போயி பேட்டரிகட்டைய வைக்காத உள்ளார விழுந்தா விசம்னு சொல்லும், அந்த பேட்டரிகட்டைகள விட இந்த பேட்டரிக வீரியம் வாய்ஞ்சது.. சக்தியிலயும் சுற்று சூழல மாசு படுத்தறதிலயும்..

3) சரி அந்த கிரகத்தையெல்லாம் விடுங்க.. வீட்டு உபயோகத்துக்குன்னு மானிய விலையில குடுக்கற LPGய உங்க வாகனத்துக்கு போட்டாக்க, அது தப்பு, ஜெயில்ல போட்டுறவோம்னு ஒரு கேவலமான டப்பிங்கோட டீவியில கவர்மென்ட்ல விளம்பரம் குடுக்கறாங்க பார்த்திருப்பீங்க.. அப்படி இருக்கப்போ, வீட்டுக்கு மாணியத்துக அரசாங்கம் தர்ற மின்சாரத்துல வண்டிக்கு சக்தியேத்தி ஓட்டுறது மட்டும் தப்பில்லையா என்ன?

இப்படி மூணு கேள்விய இந்த வாரத்துக்கான் உள்வட்டார வாரந்திரி;ல கேட்டிருக்கேன். பார்ப்போம் இந்த ஆக்டிவிஸ்ட்டுக என்ன சொல்றாங்கன்னு..

பி.கு. : அப்புறம் நீ என்ன மசுருக்கு பேட்டரி ஸ்கூட்டர் வாங்கி வச்சிருக்கேன்னு கேட்டீங்கன்னா? நாலு காசு குறையும்ன்னு ஒரே காரணத்துக்காக தான்.. நான் பெரிய க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டும் இல்ல ப்ளாக் க்ராம் ஆக்டிவிஸ்ட்டோ இல்ல.. சத்தியமா :)

Thursday, June 26, 2008

நாக்கமுக்க

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
தொல வச்சி மேளம் கட்டி,
அடரா அடரா நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

ஒய்யாரம ஊட்டுல கோழிகுழம்பு கொதிக்குது
எலிபெண்ட்டு கேட்டுல கிக்கு மேட்டர் விக்குது
கெல்லீஸு ரோட்டுல புள்ளிமானு நிக்குது
வேட்டையாடி புடிங்கடா..
வேகவச்சி தின்னுங்கடா
எங்கடா இங்கடா.. ஆள விடுங்க தேவுடா

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

யேய்..
குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது
அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி..

எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

கிறுகிறு ராட்டிணம் தலைய சுத்தி ஓடுது
பரபரபர பட்டணம் ஆந்தை போல விழிக்குது
வெள்ளிக்காசு வேணுன்டா கண்ண காட்டு தேவுடா

அடிங்கடா அடிங்கடா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

விறுவிறு மீட்டரு..
இங்கலீசு மேட்டரு
ராத்திரிக்கு குவாட்டரு
விடிஞ்சிருச்சு எந்திரு

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

- Version 2 sung by சின்னபொண்ணு..



மேலும் :
http://24-7frames.blogspot.com/2008/05/4.html
http://naanavanillai.blogspot.com/2008/04/blog-post_20.html

Monday, June 23, 2008

வார இறுதி குறிப்புகள்

05:30 - பஃகிள்ராக் பார்க் உலா
[இவ்ளோ மெதுவா நடக்க காலங்காத்தால அலாரம் வச்சு எந்திருச்சு வரனுமா?
நான் நடக்க வந்தேன்னு யாரு சொன்னா?? ]
06.30 - டைம்ஸ் - கொத்துமல்லி டீ
[இந்த பார்டிக்கு போறவங்க எல்லாம் எப்பவும் ஏன் கன்னத்துலகன்னம் வச்ச்சேங்கிற மாதிரியே போஸ் குடுக்கறாங்க..]
07.30 - கடலோரக்கவிதைகள்
[திருட்டு டிவிடி வாழ்க, இளவரசு'க்கு அதே இயல்பான நடிப்பு அப்பவும்..
படத்துக்காக வெள்ளையடிச்ச வீடு, க்ரேன் ஷாட்ல பல்லிளிக்குது.. ஹிஹி.. ]
09.00 - தோசை வெங்காயசட்னி
[போதுமா?..
போதும்ன்னா சொல்லுவேன்.. நீ ஊத்திகிட்டே இரு..]
10.15 - சவுண்ட் ஆஃப் ம்யூசிக்
[பெண்ணுரிமை #%!@, ஐயம் சிக்ஸ்ட்டீன் கோயிங் செவன்ட்டீன்' என்னம*# இருக்கு இதுல]
12.00 - மை ஃபேர் லேடி
[ஆ...வ்]
14.00 - பருப்புஞ்சாதம், கத்திரிக்கா பொறியல், தயிர், பூண்டு ஊறுகாய்
[அடுத்த தடவை ருச்சி தான் எடுக்கனும் ப்ரியா அவ்ளோ சரியில்ல.. ஊறுகாய சொன்னேன்]
14.30 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள்
15.15 - உண்ட மயக்கம்
15.45 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள் - தொடர்ச்சி
16.30 - இஞ்சிடீ, நேந்திரசிப்ஸ், க்ளாசிக் ரெகுலர்
17.00 - கே.ஆர் பார்க், சிறு உலா, வேடிக்கை.. வேடிக்கை..
[வூட்டுக்காரிய பக்கத்துல வச்சுகிட்டு சைட்டடித்தல்ன்னு சொன்னா பொலிட்டிக்கல்லி கரெக்ட்டா இருக்காது)
19.30 - கடைவீதி, பூக்கடை உலா..
20.30 - ஆந்திராஸ்பைஸ் - சப்பாத்தி - தால் - டபுள்ஆம்லெட்
21.15 - ஃக்ளோரி
[டென்ஷல் வாஷிங்க்டன்'க்காக மீண்டும் மீண்டும்.. He a weak white boy, and beatin' on a nigger make him feel strong]
23.00 - சபாபதி
[இணையம் வாழ்க..
எனக்கு ரோஷம் வந்தால் ஒரு போக்கிலே, அவரை டோன்ட் டாக் சார் என்பேன்..
ஒட்டு ப்ளாஸ்த்திரி கோட்டு போடும் வாத்தி.. ஓயாமல் வாங்கி ஓசி பொடி போடுவதும் ஜாஸ்த்தி]
00.30 - ஏலக்காய் வாழைப்பழம் - சோயாபால் - க்ளாசிக் ரெகுலர்
01.30 - சபாபதி - மீள்பார்வை -ரீவைண்ட் ஃபார்வர்ட் ரீவைண்ட்
xx.xx - (தன்னை மறந்த) உறக்கம்
06.30 - கொத்துமல்லி டீ ராகவேந்தரமட புறாக்கள்
07.30 - ஆரவாரமில்லாத சாலை - நடை
08.15 - காராபாத் - வடா - ப்ராமின்ஸ் காஃபி ஃபார்
[நட்பு கூட்டு சேர்ந்துட்டா மட்டும் பாப்பான் ம்$@#ங்கறீங்க.. ஆனா டிபன் சாப்பிட மட்டும் இங்க கூட்டிட்டு வர்றீங்க.. ]
09.00 - டைம்ஸ் - படுக்கை - எஸ்.பி.பி ஜானகி காதல் பாடல்கள் MP3
[கலாசிபாளயா தெருவோரத்தில் முத்துக்கள்]
12.00 - புத்தகம் - சீ.டிக்கள்- ஒழுங்குபடுத்தல்
[ஒரு பாசாங்கு தான்.. நாங்களும் வீட்டு வேலை செய்வோமில்ல]
13.00 - காமத் பஃகிள்ராக் - ஜோவார்பக்ரெ மீல்ஸ்
[இவ்ளோ வெண்ணைய தேய்ச்சு சோளரொட்டி சாப்பிட்டா எப்படி டயட்டாகும்.. ]
14.30 - ஃபோர்த் எஸ்ட்டேட்
[எத்தனையாவது முறைன்னு மறந்துபோச்சு?]
17.00 - லெமன் டீ - மணல் போட்டு வறுத்த நிலக்கடலை
[நம்ம வீட்டுல இதையே வேற.. சரி.. சரி.. இதுவே நல்லாத்தான் இருக்கு]
17.30 - ராகவேந்தரமட புறாக்கள் - க்ளாசிக் ரெகுலர்
18.00 - தி பைரேட்'ஸ் டைலமா
[நானெல்லாம் இந்த காலத்து இளைஞன் இல்லையா??.. பயங்கிர டைலமாவா இருக்கே..]
20.00 - ராகிதோசை - நிலக்கடலை சட்னி
[அம்மா சுடுறது கொஞ்ச வேற மாதி.. இல்ல இதும் நல்லாத்தான் இருக்கு.. ஹி.. ஹி ]
20.30 - கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை
[எஸ்.பி.ரோடு தெருவோர பைரசிக்காரர்கள் வாழ்க]
21.50 - வாழைப்பழம் - க்ளாசிக் ரெகுலர்
22.10 - சாயாவனம்
[தீ மூங்கிலை பொசுக்கிட்டு இருந்துச்சு.. இனி என்னன்னு தெரியல]
23.xx -

Friday, April 25, 2008

ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.


"எல்லா ரிலிஜியனும் பழசாயிடுச்சு, எல்லாமே ஒரு மாதிரி பழைய சம்பிரதாயத்த வச்சுகிட்டு.. ஒரு கூட்டத்தோட கையில.. மோனோபாலியா போச்சு.. பேசாம நம்ம.. புதுசா ஒரு ரிலீஜியன் ப்ரபோஸ் செஞ்சிருவோம்.. ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.. புடிச்சவங்க யாரு வேணும்னானுல் சேரலாம்.. எல்லாரும் சேர்ந்து சரியான நெறிமுறைகளை சொல்லுவோம்.. ஒரு ப்ரெயின்ஸ்ட்ராமர் மாதிரி ரெகுலரா வச்சு ரீஃபைன் பண்ணிட்டே போவோம் எப்படி.. !"


காலங்காத்தால ஆறரை மணிக்கு ஒருத்தன் கைபேசியில கூப்பிட்டு இப்படி சொன்னா, நீங்க என்ன செய்வீங்க?..

நான் என்ன செஞ்சனா..?

"இதுக்கு தான் நைட்டே சோடா நிறையா ஊத்திக்கோ ஊதிக்கோன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. தங்கச்சி எந்திருச்சிருந்தா சுடுதண்ணி விளாவிவச்சுட்டு சூடா ஒரு லெமன்கட்டன் சாயவோட ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பச்சொல்லிட்டு மறுபடி இறுக்கமா போத்தி தூங்கு மாப்ள"ன்னு சொல்லிட்டு நம்ம அம்மணி குடுத்த லெமன் கட்டன் சாயாவோட பால்கனியில போயி கொஞ்ச நேரம் காத்தார நின்னேன்..

'சாப்டும்' போது கண்டதையும் படிச்சுட்டு பேசாதீங்கடான்னா எவன் கேக்குறான்.. இப்படி நமக்கு காலங்காத்தால வெறி ஏத்தறானுக..

--
#266

Tuesday, March 4, 2008

முதுமை!!



பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுகுள்ளே சொர்கம் இருக்கு
அட சின்னச்சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்திற்க்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும்கண்ணே காசு பணம் என்னத்துக்கு

அந்த விண்ணில் ஆனந்தம்.. இந்த மண்ணில் ஆனந்தம்
அடிப்பூமிப் பந்தில் முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்- அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவி என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்
என் காது வரைக்கும் கம்பிளி போர்த்தும் கருனை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்..

--

சில நாளாவே பொட்டியில உறங்கிகிடந்த படம் இது.. ஒரு மந்தமான ஞாயிறு மதியானம் கோபால்சாமிபெட்டா'வில் எடுத்த படம்.
இப்படி தனியா விட்டுட்டு தூரதேசம் போயிட்ட புள்ளைகள பத்தி பேசிட்டிருக்காம.. " பழைய நினப்புடா பேராண்டி.. பழைய நினப்புடா"ன்னு சிறு வயசுல தனியா யாருக்கும் தெரியாம குளக்கரையில உக்காந்திருந்தத பத்தி தான் அவுங்க பேசிட்டிருந்திருக்கனும்னு விரும்பறேன்....

--
#265

Thursday, February 28, 2008

குன்னக்குடி மச்சான்

வா..
வா..
வா.. வா.. வா.. வாவாவாவா வா..
வா.. வா.. வா.. வாவாவாவா வா..

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி-

--போதையென்பது ஒரு பாம்புவிஷம் தான்...
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம் தான் --

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

வா..
வா..

பொண்டாட்டி .. புள்ளைக.. தொல்லைக இல்லா இடம்
இந்த இடம் தானே..

இந்த இடம் இல்லேன்னா சாமிமடம் தானே

மேஸ்த்த்ரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே

இயக்குனர் யாரு.. அங்க பாரு.. புலம்புராரு
நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே
ஊர தாண்டுனா நடக்க பாதையில்லையே

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

வா..
வா..

அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்கே வந்தா
டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுதுன்னா வெட்டுகுத்து தானே

எங்களுக்கு தண்ணியிலே கண்டமில்ல
எங்களுக்கு ஜாதிமதம் ரெண்டுமில்ல
கட்ச்சிக்கார மச்சி.. என்ன அச்சி.. வேட்டி அவுந்து போச்சி

-- ரோட்டு கடையில மனுசன் ஜாலியப்பாரு
சேட்டுகடையில மனைவி தாலியப்பாரு.. --

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி

--போதையென்பது ஒரு பாம்புவிஷம் தான்...
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம் தான் --

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

---
திரைப்படம் : அஞ்சாதே
இசை : சுந்தர்.சி.பாபு

------

இந்த பதிவுக்கும் ரெண்டுநாள் முன்னாடி போட்ட இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.. இல்லவே இல்லை


--
#264


வாழ்க்கை - Progressive compromises



ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால்) ஆனது.

Tuesday, February 26, 2008

பொழப்பத்த @#$^#&

"கொஞ்சம் சீக்கிரமாவே வேலையிடத்தை விட்டு வந்தாச்சு..என்ன செய்ய.. தனியா 'சாப்ட்டு' நாளாச்சு போலாம.." யோசித்து கொண்டிருந்த நொடியில் எதிரில் அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சி அமைதியானது.. பிடி ரோட் தாண்டிபோய்கொண்டிருந்தேன் (வீட்டை பூட்டினது, சாலைய கடக்கும் போது என்னை தாண்டிப்போன நீலதுப்பட்டாவ பத்தியெல்லாம் விலாவரியா சொல்லிட்டு இருக்க முடியாது.. இது ஆன்டனி' டைப் எடிட்டிங் காலகட்டம்).

பஃகிள்ராக் ரோட்டில் விரைந்து எதிரே வரும் வாகணங்கள் இரைச்சலிலையும் மீறிக்கொண்டு கேட்கும் கூட்டுக்குவிரைந்துவிட்ட பறவைகள் கூப்பாட்டுக்கும் முகத்தை மோதும் மெலிதான குளிர்காற்றுக்கும் புன்னகைத்து கொள்கிறேன். லேசாக மணிக்கட்டை சாய்த்ததும் பச்சை விளக்கெரிந்து மணிகாட்டும் என் 'கேசியோ'வில் ஏழை தாண்டிவிட்ட சின்னமுள்ளை பெரிய முள் நெருங்கிகொண்டிருந்தது. "எங்க போயி சாப்டலாம்" யோசிக்க தேவையே இல்லாமல் நியான் விளக்கொளி வரவேற்றது.

'குடீவ்னிங்' சொன்னவன விறைப்பா பார்த்து சல்யூட் அடிச்ச செக்யூரிட்டிய தாண்டி முதல்மாடி கதவை திறந்தால்.. தாம்தூம் சத்தத்துடன் கசகசவென்று கூட்டம். மீண்டும் ஒரே நொடி, சட்டென்று ஒரு வெள்ளுடை சேவகன், இரண்டாம் தளத்துக்கு வழி சொன்னார்.. அவ்ளோ தெளிவா பிரதிபலிக்குதா என் முகம்.. ஊரே 'அமுக்கன்'னு கூப்பிடுற எனக்கு?? இரண்டாம் தளத்தின் வளைவுக்கு முன் நின்று திரும்பி பார்த்தேன்.. வெள்ளுடை சேவகன் எவரையும் காணவில்லை.. "மேஜிக்கல் ரியலிசமா.. ?? இன்னும் சாப்டவே இல்ல, அதுக்குள்ளாரயா"ன்னு எனக்குள் அலுத்து கொண்டேன்.

இரண்டாம் தளம் கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே அமைதியாக இருந்தது. தள்ளி தனிதனித்தீவாக கிடக்கும் மேஜைகள். ஒரு ஓரத்தில் உயரமான மேடையில் 'உதயா'வின் புண்ணியத்தில க்ரேஸிஸ்டார் ரவிச்சந்திரன் யாரோ ஒரு 'மைதாமாவை' கட்டிபுரண்டு கொண்டிருந்தது கண்ணில் பட்டது. நேர்கீழே இரண்டு பொடியன்கள் நின்று பார்த்துகொண்டிருந்தனர். அந்த இடத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளுடை இல்லை, அழுக்குநீளம்.

ஓரமாக ஒரு மேஜையில் என் முதல் சுற்றில் கவனமாக இருந்தேன். நான்கடி தள்ளி ஒரு மேஜையில் இரண்டு பேர், நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் 'சாப்ட்டு' கொண்டிருந்தனர்.. அரை மணி நேரமாக பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, ஆர்டர் தரும் போது கலந்துபேசிக் கொண்டது தவிர. கடமையாக ஒவ்வொரு தம்ளரையும் ஒரே வேகத்தில் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.. ம்ம் குடும்பஸ்த்தர்கள் போல.. வீட்டுக்கு வீடு வாசப்படி..

'எக் புதினா'வை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திரும்பினேன், இடப்புற மேஜையில் ஒரு சற்றே பருத்தவர், முழுக்கையும், தளர்த்திவிடப்பட்ட டையும், லெதர் பேக்கும் முகத்தில் நிறைந்து கிடக்கும் சோர்வையும் பார்த்தால் நாள் முழுதும் சுற்றி அலையும் வேலை போல.. ஒவ்வொரு மிடிருக்கும் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தார், சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மேசை விரிப்ப்பின் அழுக்கை நிமிண்டிக்கொண்டிருந்தார். மதியம் சந்தித்த வியாபாரியையோ, நாளைய டார்க்கெட்டையோ அல்லது ஊரில் இருக்கும் உறவுகளை பற்றிய நினைப்போ என்னவோ.

வகை வகையாக எத்தனை பதார்த்தம் வாங்கினாலும், லெமன் பிக்கிள் சுவை தனிதான். எதிர்மூலையில் விடாமல் பேசிக்கொண்டே இருந்த இருவரும் எழுந்து விட்டனர். அதில் ஒருவர் போகும்முன் மேஜைக்கு மேலும் கீழுமாக தேடியதை பார்த்து நான் மட்டுமல்ல, அவர் கூட வந்தவரும் புன்னகைத்து கொண்டார். 'எதிலையும் ஜாக்கிரதையா இருக்கனும்' என்று படியிறங்கும் போது கூட வந்தவரிடம் கண்டிப்பாக சொல்லுவார் என்று பட்டது. இப்படி மேஜையை புரட்டி பார்துவிட்டு போகிறவர்கள் பெரும்பாலும் அடுத்த தெருத்திருப்பத்தில் லத்தியும் குறிப்பு நோட்டுமாக காத்திருக்கும் காவலரிடம் கண்டிப்பாக கப்பம் கட்டுவார்கள்.

பச்சை வெள்ளிரியும் தக்காளியும் கொஞ்சம் போல குருமிளகும் உப்பும் தூவப்பட்டு, இதற்க்கு காசு இல்லை, இலவசம்.. இருந்தபோதும் நன்றாகவே இருந்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், 'உதயா'வையாவது பார்ப்போம் என்று பார்வையை திருப்பினேன், ஒரு தாடிக்கார கணவான் கோட்சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வெகுவாக 'கேப்'விட்டு சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் மூக்கை தேய்த்து கொண்டிருந்தார் அந்த பெண்ணும் வெட்கபடாவிட்டால் பண்பாட்டு காவலர்கள் வந்துவிடுவார்களோ என்று வராத வெட்கத்தை கைவைத்து மறைத்து கொண்டிருந்தது. பாவம் இயக்குனர் என்று தோன்றியது.

சலித்து போய், உடைத்து வைத்த சோடா பாட்டிலில் பொங்கிக்கொண்டிருக்கும் குமிழ்களில் பார்வையை செலுத்தினேன். லெஹர் சோடாவில் மேலெழும்பும் காற்று குமிழ்கள் எப்பொழுதுமே அழகு தான். ஏனோ எனக்கு பிடிரோட்டில் என்னை தாண்டி போன நீளத்துப்பட்டா ஞாபகம் வந்தது, அவசரத்தில் முகத்தை பார்க்கவில்லை என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மடக்கென்று அடுத்த சுற்றை முடித்தேன். 'பாட்டம்ஸ் அப்'. முடித்ததாக கைகாட்டிவிட்டு தீப்பெட்டு கேட்டு வாங்கிகொண்டேன்.

வாகண இரைச்சல் அடங்கிவிட்ட இரவில் லேசான குளிரில் மெதுவாக சீட்டியடித்தபடி நடந்து வந்த போது என்னவென்று தெரியாமல் 'கோடைகால காற்றே' ஞாபகம் வந்தது.. கூடவே சாந்திகிருஷ்ணா'வின் முகமும். எதற்க்கோ கீழே கிடந்த ஒரு கல்லை வேகமாக உதைததேன், தரையோடு தரையாக தேய்த்து கொண்டு சென்று குவிந்து கிடந்த சருகுகளோடு சத்தத்தோடு ஐக்கியமானது.

துணி மாற்றக்கூட தோன்றவில்லை, சன்ம்யூசிக்கில் வீஜே தொல்லை இல்லாமல் பாட்டு போட்டுகொண்டிருந்தார்கள். மேஜை மீது இன்னும் உயிருடன் என் மடிக்கணினி.. எதுவுமே யோசிக்காமல் திட்டமிடாமல் மடியில் எடுத்து வைத்துகொண்டு உள்ளிட ஆரம்பித்தேன்..



பி.கு.: அப்படி என்னத்த உள்ளிட்டேன்ன்னு தெரியனும்னா இந்த பதிவை மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் :)

Thursday, February 21, 2008

சைக்கிள் கேப்பில் ஏரோப்பிளேன் ஓட்டுதல்

ஊருபக்கம் புகைச்சலுக்காக ஒதுங்கினப்போ 'ஆல்பம்' பார்க்கிறதுக்காக மட்டுமே விகடன் வாங்கிற ஒரு சகா கேட்டான்..
'ஏம் மாப்பு, அன்னைக்கு வச்சிருந்தியே கருப்பு அட்டை போட்ட வேதாள உலகம்'னு ஒரு புஸ்த்தகம், அந்தாளு தான இது'ன்னு..
'ஆமா.. அது வேதாளஉல்கம் இல்ல. ஏழாவது உலகம்'..
'எத்தனவாது உலகமோ.. அந்த புஸ்த்தகத்துல ஒரு பக்கம் கூட புரியல, அதே ஆளு தானா இந்த ரவுசு உட்டுருக்காரு..'ன்னு ஆச்சிரியப்பட்டு போனான்.

மொத்தத்துல ஜெயமோகன் 'கோயினோஸ்ஃப்ரஷ்கி'ல இருந்து 'கோயிஞ்ச்சாமி' வரைக்கும் 'ரீச்' ஆயிட்டாரு :)


சரி அதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.. இந்த பதிவான்னு கேட்காதீங்க, அந்தளவுக்கு எல்லாம் இதுல விசயம் இல்ல.. இந்த கலவரத்துக்கு நடுவால வந்திருக்கிற சாரு கட்டுரை தான் தலைப்புக்கு விளக்கம்..


http://snapjudge.wordpress.com/2008/02/16/jeyamohan-vs-anandha-vikadan-backgrounder-tamil-blogs-mgr-sivaji-et-al/

http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_16.html

http://chenthil.blogspot.com/2008/02/jeyamohan-charu-nivedita.html

http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_9085.html

ம்ஹ்ம்.. இந்த கலவரத்துலயும் உனக்கு ஒரு கிளிகிளுப்பு கேக்குது..
பீ கேர்ஃபுல் ( நான் எனக்கு சொன்னேன்!)