Wednesday, June 30, 2004

நம்ம வரிசையில் இனி பில்கேட்ஸும்..!!

சொந்தமா வலைப்பூ வெச்சிருக்கவங்க எல்லாரும் இனிமேல் காலர தூக்கி விட்டுக்கலாம்.. (நம்மளை மாதிரி சட்டை போடாத ஆளுக தலையில கட்டியிருக்கிற துண்டை தூக்கி விட்டுக்கலாம்.. இதெல்லம் சொல்லித்தர வேண்டியிருக்கு..!)..
பின்னே என்னங்க.. நம்ம இங்கே எழுதறத பத்தி ஒரு கூட்டம் (சரி..சரி.. நம்ம இல்ல.. 'நீங்க' போதுமா!!!.) இதெல்லம் வேலையத்தவன் செய்யிர வேலை, வெட்டிப்பசங்க கூட்டம் அப்படி. இப்படின்னு நிறையா சொல்றவங்களுக்கு பதில் சொல்ல ஒரு மேட்டர் கிடைச்சிருக்குங்க..
ஆனானப்பட்ட.. பில்கேட்ஸ் கூட அவருக்கே அவருக்குன்னு ஒரு blog ஆரம்பிக்கபோறாருங்க..
யாருக்கு எப்படியோ.. நமக்கு ஊருக்குள்ள 'அப்படி என்னத்ததாண்ட கம்ப்யூட்டருல செய்யுற??'ன்னு கேக்குறவனுக கிட்ட பெருமையா சொல்லிக்கலாம்.. 'நான் ஏற்க்கனவே செஞ்சிட்டு இருக்கிற வேலையத்தான் இனிமேல் பில்கேட்ஸ் கூட செய்யபோறாருன்னு'..

போற போக்குல கொங்குபாஷைய பதிவு செய்ய ஒரு பதிவு ஆரம்பிச்சி இருக்கிறத பார்த்தேன். நாமளும் அதுல் பங்கெடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.. (இது ஒண்ணு தான் குறைச்சல்!!)

Sunday, June 27, 2004

BBC நண்பர்கள்

மூக்கன்'ணன் மாறும் மதிப்பீடுகள்'ல அவர் கூட படிச்ச 'பெரிய செட்டு' பசங்களை பத்தி எழுதினதை படிச்சதும் நமக்கும் பழைய நினைப்பு வந்திருச்சுங்க.. எங்க காலேஜுல 'பெரிய செட்டு' கிடையாது.. BBC நண்பர்கள் தான்..அதென்ன BBCன்னா... அதாங்க Back Bench Commitee .
எந்த புரபஸர், என்ன பாடம், எப்படி எடுத்தாலும்..நாங்க பாட்டுக்கு எங்கேயோ இடி இடிக்குது எங்கேயோ மழை பேய்யுதுங்கர மாதிரி உக்காந்திருப்போம். அவுங்களும் இதுகளை எந்த கொம்பன் வந்தாலும் திருத்த முடியாதுன்னு விட்ருவாங்க.
நாலு வருஷமும்....,
பக்கத்து தியேட்டர்ல ஓடுற எல்லா படமும் 2-3 வாட்டி பார்த்ததும்.. வேற வழியில்லம கிளாஸ் பக்கம் போய்..
சரளமா கானா எடுத்து விடும் எங்க சபையின் 'ஆஸ்த்தான புலவர் திரு.டகால்டி' (இப்போ அவன் செக்க்ஷன் இன்ஜினியர்...), எங்க ஹால் வழியா அடிக்கடி போற PG dept'ன் கேரளத்து பைங்கிளிகளை பத்தி மெல்லிய குரலில் பாட்டு எடுத்து விடுறத கேக்கிறதும்,
எல்லா பாடத்திலும், எல்லா நேரத்திலும், டவுட் கேக்கும் முன்பெஞ்ச்சு பார்ட்டிகளை வம்பிழுப்பதும்,
கொஞ்சம் நம்மள மதிக்கிற வாத்தியாரா இருந்தா..'இதா தண்ணி குடிச்சுட்டு இப்போ வந்திருவோம்'னு சத்தியம் பண்ணி நேரா தம் அடிக்கபோறதுமாவே போச்சு..
நாலு வருஷம் படிச்சு.. கடைசி கடைசியா ஒவ்வொருத்தருகிட்டேயும் ஆட்டோக்ராஃப் வாங்கும் போது, 'உன் கூடவெல்லம் contact வெச்சு என்ன செய்ய போறேன்?'னு முன்பெஞ்ச்சு பார்ட்டி ஒருத்தன் ஆட்டோக்ராஃப் எழுதாம போனபோதுதாங்க.. நேர நடுமண்டையல ஒரு தேங்காய்குலையே நச்சுன்னு விழுந்த மாதிரி இருந்தது..
ஆனா, அதுக்கப்புறம் அப்படி சொன்னவனே ஒரு வருஷத்தில, சென்னப்பட்டனதுல புதுசா வேலைக்கு வந்து எங்க எங்கேயோ சுத்தி ரூம் சவுகரியப்படாம, நிகழ்ச்சியாளரா (அதாங்க programmer) வேலையில இருந்த என்கூட வந்து தங்கினது தான்ங்க தமாசு.. (ஒரே ரூம்ல இருந்த்துட்டு ஆபீஸ் போய் thanq & sorry'ன்னு கார்ட் அனுப்பினத சொல்லி இன்னும் அவன கலாய்ச்சுட்டு தான் இருக்கோம்)

ஒன்னு மட்டும் எனக்கு புரியலீங்க..!! BBC'ல பாதி பேருக்கு மேல அமேரிக்கா, ஐரோப்பான்னு, இருந்துகிட்டு யாஹூல வந்து hi buddy!ன்னு, இங்கே இருக்கவனுக கூட பீட்டர் வுட்டுகிட்டு இருக்கும் போது.. முன்பெஞ்ச்சு பார்ட்டிக சிலர் இன்னும் apprenticeஆகவும், traineeஆகவும் இருக்காங்களே அது ஏன்?? ...'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

Saturday, June 26, 2004

sms குழப்பம்..??!!!

அதென்னமோ தெரியலைங்க ஒரு 2 -3 வாரமா எனக்கு வர்ற sms (இதுக்கு தமிழ்ச்சொல் என்னான்னு யாரவது வெவரமானவங்க சொல்லுங்கய்யா.. நான் பாட்டுக்கு எதாவது சொல்லி அது ஒரு பிரச்சனைய கிளப்பிட போகுது..)எல்லாம் கல்யாணம், காதல்ன்னு ஒரு ரேஞ்சாவே வருது..

உதாரணமா..

காதல் கல்யாணம் நல்லதா? இல்லை வீட்டுல பார்த்து வைக்கிற கல்யாணம் நல்லதா??? -- ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. ஒண்னு தற்க்கொலை. இன்னொண்னு கொலை...அவ்ளோதான்'

ஜோசியர்: உனக்கு ஒரே ஒரு தோஷம் இருக்கு, கல்யாணம் பண்னினா அந்த தோஷம் போய்டும்.. ராசா:அதென்னங்க தோஷம்...ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்...

இந்த மாதிரி தினம் 3-4 மெஸ்ஸேஜ் வருதுங்க.. இதென்ன தென்மேற்க்குபருவமழை மாதிரி எதாவது கல்யாணமெஸ்ஸேஜ்மழை சீசனா???

இப்பத்தான் எங்க அய்யா 'உனக்கும் கழுதை வயசு ஆகுது.. ஒரு பொண்னு பாத்துரலாமா தம்பி? கூடமாட தோட்டத்துல வேலைக்கும் ஒரு ஆளு ஆகுமில்ல'ன்னு கேக்க ஆரம்பிச்சிருகாரு.. அதை எப்படியோ மோப்பம் புடிச்ச மாதிரி எல்லாப்பயலும் தமாசுங்கிற பேருல ரவும்பகலும் இந்த மாதிரியே மெஸ்ஸேஜ் அனுப்பி குழப்புறானுக.... (இந்த மாதிரி நேரத்தில தான் ஏன்டா இந்த Aircellக்காரங்க மெஸ்ஸேஜ் ஃப்ரீயா குடுக்கிறாங்கன்னு தோணும்). நாம ஏற்க்கனவே ஒரு பெரிய குழப்பவாதி.. மொத்தத்தில... எப்பவும் போல...'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'



Friday, June 25, 2004

எங்கிருந்தாலும் வாழ்க!!!!

வலைப்பதிவு செய்யரவங்க எல்லாரும் சென்னை மாநகரத்தில்.. சைதைக்கரையோரம் ஒரு மீட்டிங் போடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. எல்லாரும் வந்து கலந்துக்கனும்னு நம்ம கிருபாக்கன்னு கூப்பிட்டிருக்குது..
நம்ம பா.ரா. வருவாங்க , ஐகாரஸ்பிரகாஷ் வருவாங்க , கிருபாக்கன்னு வருவாங்க, மற்றும் நம்ம உறவு வலைப்பதிவுக்காரங்க எல்லாரும் வருவாங்க.. நாமளும் போலாம்னு நினைக்கும் போது நல்லாத்தாங்க இருக்கு.. (அதுலயும் பீச்சோர பானி பூரி வேறயாமே!!) ஆனா இங்கே தென்னந்தோப்பையும், மாடு கண்ணுகளையும் விட்டுட்டு நான்பாட்டுக்கு சென்னப்பட்டனம் வந்துட்டா.. அப்புறம் இங்கே நடக்கபோற பானிப்பட் யுத்தத்த நினைச்சு பார்த்து, நமக்கு உக்கடம் பஸ்டாண்ட் பானி பூரியே போதும்னு மனசதேத்திக்கிட்டேனுங்க.. (ஆஹா!!! உக்கடம் பஸ்டாண்ட் பானி பூரி.. அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சுருச்சேய்!!) எல்லத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்ங்க!! (இத தான் எங்க ஊருல 'ஆசை இருக்கு தாசில் செய்ய, ஆனா அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'ம்பாங்க!!... என்ன ஒரு வித்தியாசம் .. நான் மாடு மேய்கிறேன்..)

ஆகவே நண்பர்களே... " நான் எங்கே இருந்தாலும் என் மனசு உங்க மீட்டிங்க சுத்தி சுத்தியே வரும்" (இதை மட்டும் கொஞ்சம் பாரதிராஜா பட கிளைமக்ஸ் வசனம் மாதிரி படிச்சுக்கோங்க.!! )... யாருப்பா அங்கே 'அப்பா நிம்மதி!!!'ன்னு குரல் குடுக்கிறது..!!!!

கூட்டம் நம்ம கிருபா ஆசைப்படி சூப்பரா சொதப்ப.. எல்லாம் வல்ல பாபாவை.. ச்சே..அது பழசு.. எல்லாம் வல்ல 'ஜக்குபாய்'ய வேண்டி என்னோட இந்த பதிவை முடிச்சுக்கிறேனுங்க

All the Best Folks.......Hats Off to all the initiators ....

Thursday, June 24, 2004

சிவப்பு விளக்கு எரியுது..

ஆஹா..!! பிறவிப்பயனை அடைந்துவிட்டது மாதிரி ஒரு சந்தோசம்... நம்ம பேருக்கு நேரா ஒரு சிவப்பு சுழல் விளக்கு போட்ருக்காங்க.... (எங்க ஊர் ப்ரசிடெண்ட் வூட்டுக்கரம்மா கார்ல எரியர மாதிரி)bloglist'ல

'இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் ராசா!!'ன்னு சந்தோஷம் ஒருபக்கம் ..
'இனி தான் மகனே இருக்கு!!'ன்னு கலக்கம் ஒரு பக்கம்...
'ஐய்யோ இருக்கிறா தொல்லயில இவன் வேறயான்னு' உங்களோட பரிதாப குரல் ஒருபக்கம்...

என்ன எழுதறதுன்னு ரொம்ப யோசிச்சபோது.. நமக்கு கருத்து சொல்லி உதவிய 'நாமக்கல் ராஜா', 'ஷ்ரெயா', கார்திக்ராம்ஸ்'க்குகாகவாது இனிமேல் வாரம் இருமுறை இங்கே எதாவது எழுதறதுன்னு முடிவு பண்ணிடேன்...
(background'லா பாட்ஷா மாதிரி.. 'ராசா..ராசா..' அப்படின்னு ஓடுற மாதிரி கற்பனை பண்ணிகோங்க..)