Tuesday, May 30, 2006

சிணுங்கல் - நினைவுகள்

அது ஒரு அஞ்சு வருஷம் ஆச்சுங்க. அப்ப நான் சென்னைபட்டணத்துல கையில மூணு அட்டைய வச்சுகிட்டு, எப்பவேணா எப்படிவேணான்னு ரவுண்ட் கட்டி ஆடிட்டு இருந்த காலம். (படிச்ச பையன், புதுசா சம்பாரிக்கிறான் இருக்கட்டும்னு அப்போ விட்டு வச்சிருந்திருக்காங்க.. இப்பத்தான் தெரியுது அது) பட்டணத்துல அவன் அவன் கலர் கலரா, பல சைஸ்ல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்திய கையில புடிச்சுகிட்டு அவ சிணுங்கலுக்கு பதில் சொல்லிட்டே கெத்தா நடந்துட்டிருந்தாங்க. நமக்கும் ஆசை.. தேவையான்னு கூட கேட்டாங்க, கூட இருந்த சகா'எல்லாம். 'ஆசை தான் துன்பத்துக்கு வாசப்படி'ன்னு புத்த தத்துவம் எல்லாம் கூட சொல்லிபாத்தானுக, நாம யாரு, என்னைக்கு அதெல்லாம் காதுல போட்டிருக்கோம், அடப்போங்கடா, நடு ராத்திரியில கட்டுன பொஞ்சாதி, குழந்தை, நம்பி இருக்கிற நாடு, மக்கள், அத்தனையும் விட்டுட்டு போனத விட ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லைன்னு மப்பா சொல்லிட்டு, என் ஆசைய நிறைவேத்திக்க போயிட்டேன்.

அப்போ அஞ்சு வருஷம் முன்னாடி, இப்ப மாதிரி இல்லீங்க.. இப்பவெல்லாம் சும்மா ஸ்கூல் போற பையன் கூட தனக்கு புடிச்ச மாதிரி ஒண்னை செலக்ட் பண்ணி கூச்சப்படாம இடுப்புல கோர்த்துகிட்டு போறாங்க.. அப்போ எல்லாம் நல்ல 'ஐட்டமா' வேனும்னா நாலு இடம் சுத்தனும், நாப்பது ஐட்டத்தை பார்க்கனும், நம்ம பர்ஸ் தாங்குமான்னு வேற யோசிக்கனும். அப்படி அத்தனையும் முறையா செஞ்சு, ஸ்பென்ஸர்ஸ்ல ஒரு மூலையில, தலைக்கு கலர் அடிச்ச ஒரு வடநாட்டுகாரன் கிட்ட ஒரு மணி நேரம் ரேட் பேசி, எனக்கு புடிச்ச மாதிரி ஒரு ஐட்டத்தை கூட கூட்டிட்டு வந்தேன். அப்போ நாம வாங்கின சம்பளத்துக்கு அது கிட்டத்தட்ட ஒரு மாச சம்பளம். ஆனாலும் என்ன செய்ய வயசு அப்படி, மனசு ஆசைபட்டுட்டா எப்படியும் செஞ்சுடனும்னு ஒரு வெறி.
நேரா நம்ம சேவல்பண்னைக்கு போனா, அவ்ளோ நேரம் எனக்கு தேவையா ஆசையான்னு வகுப்பு எடுத்தவனுக, என்னைய ஒரு மூலையில அம்போன்னு விட்டுட்டு ஆளாளுக்கு ஷிப்ட் போட்டு வெளையாடிட்டானுக.. பாவம் அவனுக என்ன செய்வாங்க.. சும்மாவாச்சுக்கும் தேவையான்னு தத்துவம் பேசுனாலும், ஆசை எல்லாருக்கு இருக்கிறது தான. அதுவும் புதுசா ஃப்ரஷ்சா கண்ணு முன்னாடி பார்த்தா?? எல்லாப்பயலும் பார்த்து ஓய்ஞ்ச பின்னாடி, அப்புறம் தான் நான் தொட்டேன். ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை. ஒவ்வொரு பாகமுமா ஒவ்வொரு வளைவா தொட்டு தடவி ஒரு பூவை ரசிக்கிற மாதிரி ரசிச்சேன். அந்த சினுங்கல கேக்க கேக்க மனசுல என்னமோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.

அப்புறம் இடுப்போட சேர்த்து கோர்த்துகிட்டு ஊரெல்லாம் சுத்தினது ஒரு பெரிய கதை. ம்ம்.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, நமக்கு ஆசை/தேவைன்னு பாடம் எடுத்தவனுக எல்லாம் நம்மள விட கொஞ்சம் பெரிய ரேஞ்சு பார்டிகள கூட்டிகிட்டு திரிய ஆரம்பிச்சானுக. போக போக அது ஒரு ஸ்டேடஸ் சிம்பளாகிபோச்சு இங்க. அவனவன் கையில காசு வாயுல தோசைன்னு தினம் தினம் ஒரு தினுசு, ஒரு கலருன்னு சுத்திட்டு இருந்தானுக. ஆனா பாருங்க எனக்கு என்னமோ முதல் தடவையா நாம தொட்டது, அதை விட கூடாதுன்னு ஒரு பெரிய கொள்கை ஆயிபோச்சுங்க.. எனக்கு மட்டுமில்லைங்க, அவளுக்கும் நான் தான் முதல் கஸ்டமர். (இந்த வார்த்தையே புடிக்கலை தான்.. இருந்தாலும் சொல்றேன்) அன்னையில இருந்து அவள பிரியாத நேரமே கிடையாதுன்னு ஆகிபோச்சு. எங்க போனாலும் சரி, எப்ப போனாலும் சரி, ராத்திரி பகல்ன்னு இல்லாம எல்லா நேரமும் என் கூடவே இருக்க வச்சு அழகு பார்த்துட்டிருந்தங்க. குளிக்க போனாக்கூட கூடவே வெக்கமில்லாம கூட்டிகிட்டு போய் உக்காரவச்சுகிட்டு தான் குளிப்பேன்.

'ஊர் உலகத்தை பாருடா, இன்னும் இதையே ஏன்டா கட்டிகிட்டு அழுவற'ன்னு எத்தனயோ பேர் சொன்னப்ப கூட, எனக்கு அவளை விட மனசே இல்லீங்க.. எத்தனையே விதவிதமா பல தினுசுல பல கலர்ல பல பேரு நமக்கு ஆசைகாட்டுனப்பவும், நமக்கும் கட்டுபடி ஆகும்ங்கிற நிலமை இருந்த போதும், எனக்கென்னமோ மனசே இல்லீங்க.. 'டேய் பொண்டாட்டிய தான்டா மாத்த கூடாது, இதெல்லாம் மாத்தலாம்'ன்னு நம்ம செந்தான் கூட திட்டுனான். எங்க போனாலும் இதையே கட்டிகிட்டு சுத்துற உனக்கு நல்லாவா இருக்குன்னாங்க.. ம்ஹும்.. நான் எதுக்கு மசியலையே.. யாரு என்ன சொன்னாலும் சரி, எனக்கு இவதான்னு பிடிவாதமா இருந்தேன். இத்தனை நாள் கூட வச்சுகிட்டு இன்னைக்கு வேற ஒன்னு அழகா இருக்குதுங்கிறதுக்காக, வேற ஒருத்தன் கிட்ட குடுக்க மனசுவரலை..

ஆனா பாருங்க.. காலம்னு ஒண்ணு இருக்கு, அது எல்லாத்தையும் மாத்திடுது. நாம விரும்புனாலும் சரி விரும்பாட்டியும் சரி, சில விஷயங்கள் தவிர்க்கவே முடியறதில்லை.. போன வாரம் ஒரு நாள் வழக்கம் போல நம்ம Rxல இன்னர் ரிங்ரோட்டுல விரட்டிகிட்டு இருந்தேன், திடீர்ர்னு இடுப்புல கிச்சுகிச்சு மூட்டின மாதிரி இருந்துச்சு, கவனிச்சா, நம்ம ஆளு தான், எதோ சினுங்கறா.. சரின்னு வண்டிய ஒரு கையால ஓட்டிகிட்டே பேசி சமாதனபடுத்தினேன். அதுவரைக்கு எல்லாம் நல்லாத்தாங்க நடந்ததுது.. அதுக்கப்புறம் தான் விதி விளயாடிருச்சு, நான் பேசி சமாதனபடுத்தின கையோட கொஞ்சம் சரியா கவனிக்காம விட்டுட்டேன், வண்டி ஒரு குழியில இறங்கிருச்சு, உங்களுக்கு தான் தெரியுமே இங்க இருக்கிற ரோட்டை பத்தி, குழியும் குண்டுமா.. குழியில விட்டாலும் நான் சுதாரிச்சிகிட்டேன், ஆனா என்னைய நம்பி வேற எந்த பிடிமானமும் இல்லாம என் இடுப்பை தொட்டுகிட்ட இருந்த அவ அப்படியே ரோட்டுல விழுந்துட்டா.. நான் போன வேகமும், குழியில விட்ட அதிர்ச்சியும், கிழ விழுந்த உடனே அப்படியே அவளோட அழகான உடம்பு அப்படியே துடிச்சு போயிருக்கும். நான் சட்டுன்னு வண்டிய ஓரங்கட்டிட்டு திரும்பறதுகுள்ள, பின்னாடி வேகமா வந்த ஒரு ஆந்திரா லாரிக்காரன், இத்தனை வருஷமா என்னைய சந்தோஷப்படுத்திட்டு இருந்த என் செல்லத்து மேல வண்டிய ஏத்தி.. ம்ம்... நடு ரோட்டுல இப்படி லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போறதுக்கா இத்தனை நாளா உன்னை இப்படி பொத்தி பொத்தி வச்சிருந்தேன்.. என்னோட ஒரு நிமிஷ கவனக்குறைவுனால இப்படி ஆயிருச்சு. அவ்ளோதான் இனி கண்டிப்பா அவ உயிரோட இருக்க மாட்டான்னு தோனுச்சு.. லாரிக்கடியில சிக்கி... அவளை அப்படி பார்க்க கூட எனக்கு மனசு வரலைங்க.. சட்டுன்னு திரும்பி கூட பார்க்காம வண்டிய எடுத்துட்டு வந்துட்டங்க..

வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டு மணி நேரம் மனசே சரியில்லைங்க.. அப்படி நடு ரோட்டுல லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போனவள திரும்பி கூட பார்க்காம வந்துட்டமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி .. பார்த்திருந்தா நான் தாங்கியிருக்க மாட்டேன்னு எனக்கு நானே சொல்லி சமாதானப்படுத்திகிட்டேன்.. இனி மேல் இப்படி ஒரு உறவே வச்சுக்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன்..
எங்க..?? இங்கயும் காலம் தான் முடிவு செய்யுது. நம்ம கையில என்ன இருக்கு.. :(

ஒரு வாரம் பொறுத்து பார்த்தேன்.. முடியலைங்க.. நிஜம்மா முடியலை.. தினம் தினம் அவ ஸ்பரிசமும் சினுங்கலும் கேட்டே பழகியாச்சு.. காலையில அஞ்சரை மணிக்கு கண்முழிக்கறதே அவ குரல் கேட்டுதான். இப்போ திடீர்ன்னு அவ கூட இல்லைன்னா எப்படிங்க.. ரொம்ப கஷ்டம்.. சரி போனது போயிருச்சு.. அதை நினைச்சு என்ன செய்யன்னு நானே மனசை தேத்திகிட்டு இன்னைக்கு மறுபடியும் ஒரு புது துணை தேடிக்கிட்டேன்..
நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு கட்டுபடியாகுற ரேட்டுல (இன்ஸ்டால்மென்ட் கூட இருக்காம்) எடுத்துக்க இங்க பெங்களூர்ல இப்போ இதுக்கெல்லாம் நிறையா இடம் இருக்குங்க.. ஆனா இந்த தடவை முதல் தடவை மாதிரி ஒரு பரவசமும் இல்லை..எதோ கடமை மாதிரிதான் செஞ்சேன். போனேன், கையகாட்டுனேன், காசைகுடுத்தேன்.. கூட்டிட்டுவந்துட்டேன்..

என்னமோ பாலிபோனிக், mp3tunes'ங்கிறாங்க.. ஆயிரம் இருந்தாலும் அவ சிணுங்கல் மாதிரி வராதுங்க.. கீழ உள்ள படத்துல வட்டம் போட்டு காட்டியிருக்கேன் பாருங்க அது தான் அவ.. stable 3310 model :(
---
#178

33 comments:

ILA (a) இளா said...

//இத்தனை வருஷமா என்னைய சந்தோஷப்படுத்திட்டு இருந்த என் செல்லத்து மேல வண்டிய ஏத்தி// இது ரொம்ப கொடுமை ராசா. ஆழ்ந்த அனுதாபங்கள், புது.....க்கு என் வாழ்த்துக்கள்

Udhayakumar said...

அந்த காலத்துல சும்மா கைக்கு அடங்காம திமிரிட்டு இருக்கும். இன்னும் ஊருல சில பேரு அந்த மாதிரிதான் வேணும்ன்னு தேடி புடிச்சி வச்சுக்கறான். இப்பொத்தான், கை வைக்கரப்பவே பார்த்துத்தான் வைக்கணும் போல, அவ்வளவு சின்னது ஆயிடுச்சு...

ஏஜண்ட் NJ said...

ரொம்ப தத்ரூபமா,
சஸ்பென்ஸ் வச்சி,
உணர்ச்சிகளக் கொட்டி எழுதிருக்கீங்க தல!

வாழ்த்துக்கள்!!

Pavals said...

இளா >> நன்றி.. நன்றி..

உதயா >> ரைட்டு.. செம பார்ம் போல ;)

ஞான்ஸ் >> வர வர நீர் என்ன சொன்னாலும் அதுல 'குத்து' தேட சொல்லுது.. இதுல என்ன இருக்குன்னு தெரியலியே.. :)

ஏஜண்ட் NJ said...

தல,

நோ.. நோ.. நோ..
யூ குட் பாய்...
மே... வெரி குட் பாய்!
;-)

ilavanji said...

ராசா.. இதெல்லாம் ஓவரு! ஒரு நிமிசம் திரைச்சித்ரா, மருதம் எல்லாம் ஃப்ளாக் ஆரம்பிச்சுட்டாங்களான்னு ஷாக்காகிட்டேன்!

ஆமா 5 வருசத்துக்கு முன்னாடி மாடலா?! செங்கல் சைசுல இருக்குமேப்பா! லாரிக்கு அடிகிடி எதுவும் இல்லையே!? :)))

அனுசுயா said...

ஒரு கைப்பேசி தொலைஞ்சதுக்கு இவ்வளவு பெரிய பதிவா?

//நடு ராத்திரியில கட்டுன பொஞ்சாதி, குழந்தை, நம்பி இருக்கிற நாடு, மக்கள், அத்தனையும் விட்டுட்டு போனத விட ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லை//
எங்கயோ போயிட்டீங்க ராசா :)

Pavals said...

ஞான்ஸ் >> //வெரி குட் பாய்!// தெரியுமே :)

இளவஞ்சி >> //திரைச்சித்ரா, மருதம்// ஆமா இதெல்லாம் என்னங்க..?

//லாரிக்கு அடிகிடி எதுவும் இல்லையே!?// அதான் திரும்பி பாக்காம வந்திட்டமில்ல.. :)

அனுசுயா >> என்னங்க இவ்ளோ சாதரணமா சொல்லிட்டீங்க..
//எங்கயோ போயிட்டீங்க ராசா // எங்கயாவது போடனுமேன்னு தோணுச்சு.. போட்டாச்சு :)

ஏஜண்ட் NJ said...

திரைச்சித்ரா = அவர் ஒரு கெளரவமான நடிகை!!

மருதம் = 5 வகை நிலங்களில் ஒன்று எனப் படித்த ஞாபகம்!

யாத்ரீகன் said...

@ராசா:
பாதி படிக்கையிலேயே கண்டுபிடிச்சிட்டேன்.. ஆனாலும் பயங்கர சுவாரசியமாத்தான் எழுதியிருக்கீங்க.. :-)

Pavals said...

ஞான்ஸ் >> சித்ரா தெரியும். ஜெயசித்ரா தெரியும்.. திரைசித்ரா'ன்னு ஒரு நடிகையா.. (ஒரு வேளை பேரெல்லாம் தேவைப்படாத 'திரை'படங்கள்ல நடிச்சாங்களா?)

//படித்த ஞாபகம்!// படிச்சதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களா.. பெரியா ஆளுங்க நீங்க.. :)

யாத்ரீகன் >> எந்த இடத்துல கண்டுபுடிச்சீங்க..?

ilavanji said...

//திரைச்சித்ரா, மருதம்// ஆமா இதெல்லாம் என்னங்க..? //

இதெல்லாம் எங்க காலத்து பயகளுக்கு பொதுஅறிவு விருத்திக்காக வெளிவந்த அஜால்குஜால் பொஸ்தகங்க..

இதெல்லாம் என்னன்னு கேட்டுப்புட்டீகளே!!! ஆமா ராசா, எவ்வளவு காலத்துக்குதான் நல்லவனாகவே நடிக்கறதா உத்தேசம்? :)))

Pavals said...

இளவஞ்சி >> விளக்கத்துக்கு நன்றி.. :)

//எவ்வளவு காலத்துக்குதான் நல்லவனாகவே நடிக்கறதா உத்தேசம்? :// என்ன இன்னும் ஒரு 152 நாள்.. அவ்ளோ தான். :)

Anonymous said...

Hi Rasaa,
Paathi padikkarappove therunjuduchu...etho sappa matter...summa build-up kudukkareenga nu....anyway..itz good...

Oh.....count down start aagiduchu pola (152 days a sonnen)...aama akkava (unga veetu thanga mani - thanks to Dubukku) pathi onnume sollalaye?

SweetVoice.

ILA (a) இளா said...

படத்தை ஏம்பா ரிலீஸ் பண்றீங்க? உங்க படத்தை சொன்னேன்

Pavals said...

SweetVoice >> சப்பை மேட்டருக்கு தாங்க பில்ட்-அப் குடுக்க முடியும்.. அதான் :)

//akkava pathi onnume sollalaye?// சொல்லலாம் சொல்லாம்.. என்ன அவசரம் :)

இளா >> //படத்தை ஏம்பா ரிலீஸ் பண்றீங்க?// இன்னும் மறைச்சு வச்சு என்னத்த செய்ய அதான். :)

Unknown said...

சகிக்கலை :(

Also it was predictable after the first couple of paragraphs.

152? கார்த்திகைலியா கல்யாணம்? தையாயிருந்தா நாங்களும் வந்து கல்யாண சாப்பாட்ட ஒரு பிடி பிடிச்சுருப்போமே

Pavals said...

WA >> //சகிக்கலை :(// அது..!!

//152? கார்த்திகைலியா கல்யாணம்?// கணக்கு சரியா போடுங்க மேடம்..

நீங்க வர்றதா இருந்தா தைமாசம் கூட ஒரு சாப்பாடு போடலாம் தான்.. :)

Unknown said...

சரி சரி, அப்போ ஐப்பசி?

Unknown said...

இப்பவும் தப்புன்னு சொன்னீங்கன்னா, will have to go back and learn my tamil months again :(

Pavals said...

WA >> //இப்பவும் தப்புன்னு சொன்னீங்கன்னா, will have to go back and learn my tamil months again :(//


அந்தளவுக்கு மோசமில்லைங்க.. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. :)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

'சகிக்கலை' அளவுக்குப் போகாமல் 'ரசிக்கவில்லை' என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

கைப்புள்ள said...

மாஸ்டர் ராசாலேருந்து மிஸ்டர் ராசா ஆவப் போற தைரியத்துல பெரிய பேச்செல்லாம் பேசுறீக? ஹ்ம்ம்ம். கொஞ்சம் கொஞ்சமா ஆளும் வெளியே வர ஆரம்பிச்சிட்டீங்க...இதுல எதோ தல ஞான்ஸ் பாணியிலே சிம்பாலிக்கா சொல்ல வர்றீங்கன்னு நெனக்கிறேன். இருங்க என் பங்குக்கு நீங்க அங்க பண்ற வேலையை நான் இங்கே பண்ணி வைக்கிறேன்.

"நான் முழு மனுஷனா ஆயிட்டு வர்றேண்டா"னு சத்தமா எல்லாருக்கும் சொல்ல வர்றீங்க...ரைட்டா?
:))

Syam said...

ஐயா ராசா நீங்க கொங்கு ராசான்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சேன் அப்புறம் தான் தெரிந்தது மன்மத ராசான்னு :-)

Pavals said...

செல்வராஜ் >> //'ரசிக்கவில்லை' // அசிங்கமா எதும் திட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. இவ்ளோதானா.. அப்ப சரி..


கைபுள்ள் >> ஞான்ஸ் ரேஞ்செல்லாம் வேறங்க.. நாமெல்லாம் சும்மா..

//"நான் முழு மனுஷனா ஆயிட்டு வர்றேண்டா"னு சத்தமா எல்லாருக்கும் சொல்ல வர்றீங்க...ரைட்டா?// பழைய செல்போன் போச்சு, புதுசு வாங்கிருக்கேன்ங்கிறது தவிர வேற ஒரு வெங்காயாமும் சொல்ல வரலை.. உங்களுக்கு எதாவது வேற மாதிரி புரிஞ்சா.. அது உங்களுக்கு நல்லதில்லை :)

ஸ்யாம் >> வாங்க.. வாங்க..

Udhayakumar said...

//ராசா.. இதெல்லாம் ஓவரு! ஒரு நிமிசம் திரைச்சித்ரா, மருதம் எல்லாம் ஃப்ளாக் ஆரம்பிச்சுட்டாங்களான்னு ஷாக்காகிட்டேன்! //

இள்வஞ்சி, இப்பொ இதெல்லாம் வரதில்லைன்னு ஒரு கேள்வி...

கைப்புள்ள said...

//அது உங்களுக்கு நல்லதில்லை :)//

இது நெசமாலுமே புரியலை ராசா...என் லெவலுக்கு புரியற மாதிரி சொல்லுங்க.
:)

Pavals said...

கைபுள்ள >> அந்த உள்குத்து சமாச்சாரமெல்லாம் புரிஞ்சுதுன்னா, அப்புறம் அது நம்ம வ.வா.ச'த்துகாரங்களோட இயல்பெல்லாம் போயிடும்.. அதை சொன்னேன்.. :)

Murthi said...

ராசாவுக்கு நல்லா கதை எழுத வரும்போல இருக்கு.அசத்திட்டீங்க ராசா.

புதுசா ஏதாவது அஜால்குஜால் பத்திரிக்கை ஆரம்பிச்சி எழுதினீங்கன்னா பிசினஸ் பிச்சிக்கிட்டு போகும். :)

பொன்ஸ்~~Poorna said...

அடடா! இப்படிப் பட்ட 'கருத்துள்ள பதிவை' நேத்திக்கு தலைப்பைப் பார்த்துப் படிக்காம போய்ட்டேனே..!!!

சரி சரி விடுங்க.. இத்தனை வருசம் உங்க செல்போன் பெங்களூர்ல தொலையாம இருந்ததே பெரிய விஷயம்.. அதிலயும், கொஞ்சம் புது மாடலா வச்சிருந்தாத் தானே கல்யாணத்தப்போ அம்மணி வீட்டுக்காரங்க முன்னாடி சீன் போட முடியும்?!!

Udhayakumar said...

ராசா, கதையோட கிக்குல மெயின் மேட்டர் கோட்டை விட்டுட்டேன். அதே செல் நம்பர்தானா, இல்லை மாத்தீட்டீங்களா???

Pavals said...

மூர்த்தி >> உங்கள மாதிரி ஆளுக ஆதரவு இருக்கும் போது.. ஆரம்பிக்கலாம்னு தான் தோணுது..

பொன்ஸ் >> தலைப்பை வச்சு எதையும் தப்பா எடை போட கூடாதுங்க..
(அப்புறம் இப்ப வாங்குனது.. பழைய மாடல் தான்..)

உதய் >. நம்பரெல்லாம் மாத்திடுவமா என்ன.. அதுல எத்தினி 'காண்டாக்ட்' இருக்கு.. (ஐ மீன், உங்கள மாதிரி நண்பர்கள்)

Udhayakumar said...

//உதயா >> ரைட்டு.. செம பார்ம் போல ;)//

ராசா, உங்க பார்ம்க்கு முன்னாடி நானெல்லாம் நிக்க கூட முடியாது...