விழிப்பு தட்டிவிட்ட வாரயிறுதி அதிகாலையில்
பிடித்த கட்டங்காபியும் மெல்லிசையுமாய் சிலநேரம்
நேரம் பார்க்காமல் காட்டோடையில் மூழ்கி திளைத்து
ஈரம் சொட்ட சொட்ட கரையில் அமர்ந்து சிலநேரம்
மின்சாரமில்லா மழைநேரத்து மாலையில்
வாசலில் தெறிக்கும் சாரலோடு தனிமையில் சிலநேரம்
உறக்கமில்லா நெடுந்தூர இரவு பயணத்தில்
ஆளில்லா அத்துவான சாலையோரங்களில் சிலநேரம்
கலோரி கணக்கு பார்க்காமல் மனசு நிறைய உண்டுவிட்டு
கொழுந்து வெற்றிலையோடு தென்னந்தோப்பில் சிலநேரம்
வெட்டிப்பேச்சும் போதையுமாய் போகும் நட்புகூட்டம்
சட்டென்று அமைதியாகி மெளனம் நிறைக்கும் சிலநேரம்
காமம் கொண்டாடி கரைந்து களைத்துவிட்ட பிறகு
சாளரம் வழியே நட்சத்திரங்களை பார்த்தபடி சிலநேரம்
இப்படி ரசித்து புகைத்த நேரங்கள் பல உண்டு
இத்தனையையும் விஞ்சி விட்டது
நேற்று
அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்.