Thursday, November 5, 2009

சும்மா குறிச்சு வச்சுக்க

நட்பு வட்டத்துல ஒவ்வொருத்தனா கல்யாணம் செஞ்சுக்கா ஆரம்பிச்சப்போ போட்ட பதிவு இது... காலச்சக்கரம் சுத்திட்டே இருக்குங்களே நம்ம மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன, அதுவும் கடந்து போச்சு. அடுத்த கட்டத்துக்கு போகனுமில்லைங்களா. சும்மா ரகளையா "உங்க தங்கச்சி புள்ளை வளைகாப்புக்கெல்லாம் நான் லீவு போட முடியாது, மார்க்கெட் இருக்கிற நிலவரத்துல"ன்னு சலிப்பா விட்டுக்கு போன் பேசிட்டு சுத்திட்டு இருந்த பயலுக எல்லாம், "வீட்டுல அவுங்க அப்பாவுக்கு கேட்ராக்ட் மாதிரி இருக்கும் போல, அரவிந்த் கூட்டிட்டு போகனும், அதுனால அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு"ன்னு 'ஷை'யே படாம பேச ஆரம்பிச்ச காலமும் வந்து தானுங்களே ஆகனும்.. அதுக்கப்புறம் ராத்திரி வெள்ளிக்கிழம ராத்திரி ஒரு பத்து பதினோரு மணி வாக்குல அடுத்தநாள் ஷெட்யூல் கன்பர்ம்ங்க செய்யலாம்னு போன போட்டா.. பாசமா 'மாமா..'ன்னு ஆரம்பிச்சு "அப்புறம் கூப்பிடறன்.. ஜூனியர் அழுவாச்சி ஆரம்பிச்சுருச்சு"ன்னு சொல்லி வைச்சுட்டு, மறுபடி திங்கட்கிழமை காலையில மெசஞ்சர்ல வந்து.. "அப்புறம்.. அன்னைக்கு கூப்பிட்ட, அப்புறம் கூப்பிடலாம்னு அப்படியே மறந்துட்டேன்"னு ஆரம்பிப்பானுக... ம்ம்.. நாமளும் இதுக்கெல்லாம் தப்பிக்க முடியாது பாருங்க.. நமக்கு அதுக்கான் நேரம் வந்துது..

லக்கி எழுதின மாதிரித்தான்னாலும் அந்தளவுக்கு அதிகமா அலைக்கழிக்க படாம, ஒரு சின்ன சுத்துக்கப்புறம் சட்டுன்னு ரெண்டு நாள் வெயிட் பண்ணி கன்பர்ம் ஆனதுல பெரும்பான்மை மாதிரி ஹோம் டெஸ்ட் - ஆஸ்பத்திரி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாம டக்குன்னு 'Dad in waiting' ஸ்டேட்டஸ் வந்திருச்சு..

அப்ப இருந்தே குடும்ப சகா'க்க கூட்டம் சேரும் போதெல்லாம், இதே பேச்சு தான்.. பையனா? பொண்ணா? இது வரைக்கும் பையன் பொறந்த கூட்டாளிக எல்லாத்தையும் "அப்புறம் செஞ்ச அட்டகாசத்துக்கெல்லாம், ஒரு பையன் பொறந்து அதே ஆட்டம் ஆடித்தான தண்டனை குடுக்கனும்".. "எல்லா தல்லவாரிகளுக்கும் பையன் தான்.. அனுபவிக்கனும் இல்ல"ன்னு வம்பாவே பேசிட்டு இருந்தாச்சு. எல்லா கூட்டத்துலயும் எல்லாருமே முடிவாத்தான் இருந்தாங்க.. பையன் தான்.. வயிரு பெருசே ஆகலை பையன் தான்.. அப்படி இருக்கு, இப்படி இருக்கு அதுனால பையன் தான்'னு ஆளாளுக்கு தீர்ப்பு சொல்லிட்டே இருந்தாங்க.. நம்ம வுட்டம்மிணி உட்பட.. உள்ளார இருக்கிறவன் கிட்டத்தான் கம்ப்ளெயின்ட் செய்யிறத எல்லாம்.. உம் கடைசியில நம்மள பத்தி சொல்லிகுடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சு அவுங்களுக்கும்..
இப்படியே பேசிட்டு இருந்த ஒரு நாள் தான், வீட்டுக்கு வந்த ஒரு தோழி, எல்லாரும் பேசு கத்தி கலாய்ச்சு அமைதியான பிறவு சொன்னா.. 'உனக்கு பொண்ணுதான்டா... பொறுப்பான பசங்களுக்கு பொண்ணுதான்.. வேணா பாரு'ன்னா.. அவளுக்கு பையன்.. பாவம் அவ வீட்டுக்காரன் மேல அவளுக்கு என்ன கோவமா.. என்ன இருந்தாலும் இந்த தோழிக தோழிக தான்.. நம்மள சரியா புரிஞ்சுக்கறவங்க அவுங்க தான் :)

நமக்கும் மனசுல.. 'பொண்ணாயிருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு.. மூணு தலைமுறையா எங்க வூட்ல பொண்ணுகளே பிறக்கல.. (அதுக்கு முன்னத்துன வரலாறு எல்லாம் தெரியற அளவுக்கு பாரம்பரிய பலம் இல்லைங்க நமக்கு) நான் பொறந்ததுக்கே எங்காத்தா ஒரு நா கழிச்சு தான் வந்து பாத்துதாம்.. வந்ததும் எங்கம்மா கிட்ட.. 'வாசக்கூட்டி கோலம் போட ஒரு புள்ளை வேணும்னு இருக்கேன்.. நீ பையன பெத்து வச்சிருக்கே'ன்னு புலம்பியிருக்காங்க. அவுங்க விதி அதுக்கப்புறம் வந்த ரெண்டு மருமகளும் கூட அவுங்க ஆசைய நிறைவேத்த முடியல... அந்த ஆசை தான் வேதாளம் மாதிரி எங்காத்தாவோட பெரிய பேரன்'ங்கிற முறையில என் தோள்ல தொங்கிட்டு இருந்துச்சோ என்னவோ.. ஆனா வூட்டம்மிணியும் எங்கய்யனும் கூட்டணி போட்டு ஸ்ட்ராங்கா 'பையன் தான்'ன்னு சொல்லும் போது.. சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டு இருந்தேன்..

நம்ம வாரிசு நம்மள மாதிரி தான் இருக்கும்.. அவசரக்குடுக்கையா.. சொன்ன தேதிக்கு 17 நாள் முன்னாடியே உள்ளார எதோ ரகளைய செஞ்சு, சரி இன்னைக்கே எடுக்கனும்னு உள்ள தள்ளிட்டு போயிட்டாங்க... எல்லாரும் கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தாங்க.. நானும் எங்கய்யனும் வழக்கம் போல.. இப்படி மார்பிள்ஸ் போட்டதுக்கு பதிலா டைல்ஸ் போட்டிருக்கனும் ஆஸ்பத்திரியில எல்லாம் வழுக்கிட்டா கஷ்டமில்லன்னு எங்க சமூக அக்கரைய வெளிக்காட்டிட்டு உக்காந்திருந்தோம்.. அம்மா முறைச்சு பார்க்க.. சரி நாமளும் கொஞ்சம் பொறுப்பா இருப்பம்னு அதுக்கும் முயற்ச்சி செஞ்சேன்.. அதுக்கு புவியியல் சதி செஞ்சு ஒர்க் அவுட் ஆகாம போயிருச்சு..

அப்புறம் 'யாவரும் நலம்'ன்னு கூப்பிட்டு கையில குடுத்துட்டு உடனே வாங்கிட்டாங்க.. நம்ம அம்மணி அரைமயக்கத்துல சிரிக்க முடியாம ஒரு புன்னகையோட படுத்திருக்கு.. என்ன செய்யன்னு தெரியாம.. கங்கிராட்ஸ்'ன்னு மட்டும் கைய அழுத்திட்டு சொல்லிட்டு வந்துட்டேன்.. வெளிய எல்லாருக்கும் ஒரே குஷி.. பெருசு பெருசா ஸ்வீட் பாக்ஸ் வாங்கி எல்லாருக்கும் குடுத்துட்டு, ஒவ்வொரு வட்டத்துலயும் ஒவ்வொரு சகா'க்கு போன போட்டு சொல்லி, எல்லாருக்கும் சொல்லிடு, நான் அப்புறம் பேசுறன்னு வந்துட்டேன்.. பொறுப்பான புருஷனா இருக்கனுமில்ல..

அப்புறம் ஒரு நாலு மணி நேரம் கழிச்சு இணையபக்கம் வந்தா.. ஒரு சகா எல்லாருக்கும் மெயில் போட்டிருக்கான் குரூப்ஸ்ல, "ஒரு சந்தோஷமான வருத்த செய்தி.. ராசு தல்லவாரி இல்ல.. பொறுப்பான ஆள்ன்னு சொல்றம் மாதிரி ஆயிருச்சு"ன்னு ... வயத்தெரிச்ச புடிச்ச பயலுக.. "ஒருத்தன், லைஃப் லாங்கா தல்லவாரியாவேவா இருப்பான்"... திருந்தவே கூடாதா, ப்ளடி ஃபெல்லோஸ்.. அப்புறம் நானே எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன், "நாங்களும் பொறுப்பு தான்.. பொறுப்பு தான்.. எல்லாரும் பார்த்திகிடுங்க.." ரேஞ்சுல..

பிகு:
தகப்பனான சந்தோசத்துல.. சின்னம்மை வந்து பொண்டாட்டி புள்ளைய கண் கொண்டு பார்க்க முடியாம ஒதுக்கி வச்சிருக்காங்க.. வாரிசு நலமா இருக்கிறதா போன்ல தான் க்ஷ்சொல்றாங்க.. 'அப்படியே பெங்களூர் போயிரு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வா'ன்னு உத்தரவு வேற.. ம்ம்.. எங்க போயிரப்போகுது வந்து பார்த்துக்குவோம்..