Tuesday, November 28, 2006

என் வீட்டு தோட்டத்தில



சும்மா, பிரபலமான பாட்டுங்கிறதால 'என் வீட்டு தோட்டத்தில்'ன்னு தலைப்பு வச்சுட்டேன்.. நிஜத்துல இது 'என் தோட்டத்து வீட்டில்' எடுத்த படம்.. எத்தனை விதமான வண்ணங்கள்ல பூத்தாலும் செம்பருத்தி அழகு.. அதுவும் காலைப்பனித்துளியை தாங்கி நிக்கிற செம்பருத்தி.. அழகோ அழகு..

ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)

oOo

செம்பருத்தியோட சம்பந்தப்பட்ட செல்வரா'ஜோட ஒரு பழைய பதிவு.
நம்ம தோட்டத்துல செவ்வந்தியும் உண்டு.. :)


--
#214

Monday, November 27, 2006

இதுவும் கடந்து போகும்

வழக்கம் போல பின்னிரவு சாப்பாடா இல்லாம, இன்னைக்கு கொஞ்சம் நேரமே எழரை மணிக்கெல்லாம் உக்காந்தாச்சுங்க. வழக்கமெல்லாம் மாறுது :)
சப்பாத்தி குருமா. சப்பாத்தியுல கொஞ்சம் உப்புதூக்கல், மெதுமெதுன்னு இருக்க சேர்த்துன தயிர் வாசம் கொஞ்சம், முதநாள் ஆச்சே, ஆர்வத்துல தாளிக்கும்போது அள்ளிபோட்ட கடுகு குருமாவுல பட்டானிக்கு சமமா மிதக்குது. சாப்பிட்டுமுடிச்சுட்டு மெல்ல கண்ணை உயர்த்தி சிரிச்சுகிட்டே 'ம்'ன்னு தலையாட்டுறவன, பழிப்பு காட்டி 'அதை வாய திறந்துதான் சொல்லேன், தட்டை வை, நான் எடுத்துக்கிறேன்.. போய் கைய கழுவு'ன்னு சொல்லிட்டு சமையல் ரூம்பக்கம் போறவள பார்த்து சிரிச்சுகிட்டே எழுந்திருக்கும் போது, மேசை மேல இருந்த கைப்பேசியில 'ஆசை நூறு வகை'. நம்ம சகா வட்டத்து ரிங்டோன்..
நம்ம பய தான்..

'சொல்லு மாப்ள'

'டேய், சாப்பிட வரமாட்டேன், கால் இருக்கு.. எனக்கு சேர்த்து செய்யாத.. ' வழக்கம் போல அவசரக்குரல்.

'.... '

'ஹலோ.. ?'

'நான் இப்பத்தான் சாப்பிட்டேன்'

'அதுக்குள்ளயே...... ச்சே.. மறந்துட்டேன் பார்த்தியா.. நீ எங்க கூட இருக்கிற நினப்புலயே கூப்பிட்டுட்டேன்.'

'வேலையா?'

'ஆமான்டா, நை நைங்கிறானுக, அப்புறம் பேசறேன் உங்கிட்ட.. குட் நைட்!'

'டேய், நாளைக்கு இங்க வந்திரு சாப்பிட.'

'சொல்லாட்டியும் அங்கதான்.. அம்மணி மதியமே கூப்பிட்டு பேசிருச்சு.. நான்தான் இப்ப வேலை அவசரத்துல மறந்து, தங்கான கூப்பிடறதுக்கு பதிலா உன்னைய கூப்பிட்டுட்டேன்'

'.. சரி.. காலையில கூப்பிடுறேன்'

'ம்ம்.. .. டேய்'

'என்ன?'

'கதவுல ஒட்டி வச்சிருந்தியே..'

'என்னது..?'

' "இதுவும் கடந்து போகும்"ன்னு.. போகுமா.'

'போடாங்க... வாயுல நல்லா வருது.. போ, போய் வேலைய பாரு.. காலையில பேசலாம்... '




அழைப்பை துண்டிச்ச பிறகும்.. கைய கூட கழுவாம அப்படியே விட்டத்தை பார்த்து உக்காந்திருக்கறவன, தட்டு கழுவிவச்சுட்டு வந்து, சுவத்துல சாஞ்சுகிட்டு புருவத்தை தூக்கி, கண்ணாலயே 'என்ன?'ன்னு ஒரு கேள்வி..
என்னன்னுங்க சொல்றது..




'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?


pic : http://redshift.shutterchance.com/


--
#213

Friday, November 24, 2006

அறியாத வயசு.. புரியாத மனசு..











அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்க பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஓஹோ..
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
உறவுக்கு இது தான் கலவை
இதை உசுரா நினைக்கும் இளமை
காதலில் கடவுளும் நாண
அவன் பூமிக்கு தொட்டுவச்சான் தேன
.....
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது, தோளில சாயுது
ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமே சேர்ந்து
அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
---









---


படம் : பருத்திவீரன்
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
இயக்கம் : அமீர்
பாடல் கேட்க : ம்யூசிக்-இண்டியா
----


யுவன்?? அடப்போடா, கடைசி பத்தியில வர்ற 'அடி ஆத்தி இந்த வயசுல' முதல் சரணத்துல வர்ற 'காட்டுல மேட்டுல கலந்து', இதை கேட்டதுக்கப்புறமும் இது 'யுவன்' பாட்டுன்னுட்டு.. இது அக்மார்க் 'மொட்டை' பாட்டு பங்காளி..

அமீர் படத்துல மெளனம்பேசியதே, ராம் ரெண்டுலயும் பாட்டெல்லாம் சூப்பரா எடுத்திருப்பாங்க.. இந்த பாட்டு.. ம்ம் யாரோ எழுதியிருந்தாங்க.. பாலுமகேந்திர பட காதல்பாட்டு மாதிரி இருக்கப்போகுதுன்னு.. இருக்கலாம்.. கொஞ்சம் 'வேகமான' பாலுமகேந்திராவா இருக்கும்.. இருக்கனும்..


--
#212



Monday, November 13, 2006

முகூர்த்த போட்டோ


கல்யாணத்துக்கு நாம காசு குடுத்து ஒருத்தர போட்டோ புடிக்க வரச்சொன்னா, அவரே நாலு ஸ்டில்கேமிரா, மூனு மூவிகேமிரா'ன்னு வந்து சுத்தி நின்னு ஒரு வழி பண்ணிட்டாருங்க, இது பத்தாதுன்னு, நம்ம சகாகூட்டம் வேற 'வந்திறங்கும்' போது கொண்டு வந்த சைபர்ஷாட்'ட்டும், கேஸியோ'வயும் தூக்குட்டு சுத்தி நின்னு பாரா காத்துட்டாங்க.. பாவம்.. கிட்ட வர முடியாத ஒரு 'ஜார்கண்ஃட்' மாநிலத்து சகா எடுத்த படம் இது.. எடுத்ததோட மட்டுமில்லா, நம்ம வேலையிடத்துல பெருசா அச்செடுத்து ஒட்டி வேற வச்சுட்டாரு.. எல்லாம் ஆர்வக்கோளாருல நடக்கிறது.. :)

-00--

உடுமலைப்பேட்டை கொல்லம்பட்டரை ரோட்டுல மூணு அடிக்கு தண்ணி ஓடி இந்த 72 வருசத்துல நான் பார்த்ததேயில்லைன்னு நம்ம அம்மிணியோட சின்ன அப்பாரு ஒரு வாரமா, ஓயாமா சொல்லிகிட்டே இருந்தாருன்னா பாருங்க..
அந்தளவுக்கு வரலாறு காணாத மழைக்கு நடுவால, வெள்ளமா ஓடுற தண்ணியில சிக்கிகிட்ட மூணு வண்டிய, பட்டு வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு வெளிய எடுத்து, 'மாப்ள அந்த தண்ணியிலயும் நறுவுசா காரோட்றார், அவருதான் பெரிய வண்டி மூணையும் அலுங்காம தண்ணியில ஓட்டிட்டு வந்தாருன்னு'னு ஒரு பெருசு புகழுரைக்க பக்கத்துல நின்னுட்டிருந்த சகா 'ஏம்மாப்பு, அவரு சொல்றது எந்த தண்ணி?'ன்னு காதோரமா கேட்டத கண்டுக்காம ஓடிப்போயி துணிமாத்திட்டு, வெளியில மழையடிக்கறதால உள்பக்கமாவே குவிஞ்சுட்ட கூட்டத்துல மண்டபமே நிறைஞ்சு கிடக்க, 'மாப்ளைக்கு வழிஉடுங்கப்பா, அவர் வராட்டி அப்புறம் கல்யாணம் எப்படி நடக்கும்னு' கவுண்டமனி ரேஞ்சுக்கு கூட்டத்தை விலக்கி, சாயங்காலம் அஞ்சுல இருந்து அஞ்சரைக்குள்ளார மண்டபத்துக்குள்ள வர வேண்டியவன, ஒரு வழியா ஏழரை மணிக்கு மண்டபத்துல கொண்டு போயி சேர்த்தாங்க... அப்புறம் உருமால் கட்டுசீருக்கு உக்காந்தப்போத்தான் மழைவிட்டுது..

அப்புறம் எல்லாம் வழக்கப்படிதான்.. அணைத்தும் நலமாகவே நடந்தது.. நேரில் வந்தும், தொலைப்பேசியில் அழைத்தும், தந்தி அடித்தும், ஈ-வாழ்த்து அனுப்பியும், மனதார வாழ்த்திய அனைவருக்கு.. நன்றிகள் பல..

--
#211

Tuesday, October 17, 2006

அழைப்பு __/\__

All Men are not fools..
some are not married

நான் அடிக்கடி போட்டுகிட்டு திரியும் டீசர்ட் ஒன்னுல இருக்கிற வாசகம் இது. இனிமேல் இதெல்லாம் போட்டுக்க அனுமதி கிடைக்குமான்னு தெரியலைங்க.. :)




மக்களே, சில பல அலுவல் வேலைகளுக்கு மத்தியில சிக்கி சுழன்று ஓடிக்கிட்டு இருக்கிறதால, நான் நினைச்ச மாதிரி உங்க ஒவ்வொருத்தருக்கும் தனிதனியே அழைப்பு வைக்க முடியலைங்க. அதுனால, இங்க, உங்ககிட்ட எல்லாம் நான் அறிமுகமான இதே பதிவுல என்னோட அழைப்பை வச்சிடுறேன்.


உங்களின் வாழ்த்துக்களையும் வரவையும் நட்புடன் எதிர்பார்க்கும்
~கொங்குராசா

Monday, October 16, 2006

போகாத பாதை



Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I--
I took the one less traveled by,
And that has made all the difference.

-- Robert Frost


ஒம்பதாப்பு படிச்சப்போ பரிட்ச்சைக்காக மட்டுமே படிச்சதுங்க, இந்த் The Road Not Taken. மறுபடியும் பத்தாப்பு படிக்கும் போது பாலுசாமி சார் இதைய மறுபடியும் ஒரு தடவை எங்களுக்காக ஸ்பெஷலா நடத்துனதுல இருந்து.. இன்னைக்கு வரைக்கும் அடிதவறாம மனசுல இருக்கிற கவிதைங்க இது.

நம்ம பதிவு பக்கம் நம்மளும் புதுசா எதும் எழுத தோனாம இருந்ததுல திடீர்ன்னு ஒரு விவகாரமான யோசனை வந்துச்சுங்க.. இதைய தமிழ்படுத்தி போடுவமான்னு, சட்டுன்னு பேப்பரும் பேனாவுமா உக்காந்தேன்.. உக்காந்தேன், அவ்வளவுதான்.. அரைமணி நேரம் கண்டபடி யோசிச்சும்.. ஒன்னும் விளங்கல.. (தப்பிச்சீங்க!).

சரி, நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் முடிவு பண்ணி, போன வாரம் 'அர்க்காவதி-காவேரி சங்கம ஆற்று படுகை'யில கால்நடையா சுத்தி திரிஞ்சப்போ எடுத்த ஒரு படத்தை, லேசா 'பிக்காசா'வுல தொட்டு ஒத்தி, இங்க, அந்த கவிதையோட போட்டிருக்கேன்..

கவிதை நல்லா இருக்கும் தெரிஞ்சது தான்.. படம் நல்லாயிருந்தா சொல்லுங்க.. :)

--
#209

Monday, October 9, 2006

உள்ளேன் ஐயா

போன நாலு வாரத்தில மட்டும்,
மூணு தடவை வடக்க அரசியல் தலைநகரம் பக்கம் அடிச்சு தாக்குற வெய்யில்ல வீதியில நின்னுகிட்டு அலுமினிய காகிதத்துல சுத்தின முர்க்டிக்காவும், எக்ரோலுமா உள்ள தள்ளிகிட்டு,
அஞ்சு தடவை மத்தியில பொருளாதர தலைநகரம் பக்கம் நவராத்திரிக்கு போட்ட கோதுமைலட்டு, பால்கோவான்னு பாசமழையில நனைஞ்சுட்டு,
மிச்ச நேரத்துல வழக்கம் போல வெண்ணை மிதக்கிற செட்தோசையும், ஆந்திராமீல்ஸுமா சுத்திட்டு,
நடுவால ரெண்டு நாள் ஊருபக்கம் ஒதுங்கி அச்சாப்பீஸ், துணிக்கடைகன்னு சுத்தி.
"இப்படி அவசரமா ஓடறதுக்கு, இப்ப எதுக்கு வந்த? வந்தது வந்த, சொல்லிட்டாவது வந்திருக்கலாம், இப்பப்பாரு முததடவை என்கையால இதை சாப்பிடற".. ன்னு கோவமும் வருத்தமும் கலந்து ஊத்தி குடுத்த சோளதோசைய காரப்பொடி தொட்டு சாப்பிட்டுட்டு, அதைய "இதுவே சூப்பரா இருக்கு, இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை"ன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லியும் மசியாம.. மறுபடியும் மூக்கு உடைஞ்ச கையோட விடிய விடிய கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர்'ன்னு ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா செளக்கியம் விசாரிச்சு, ஒருவழியா இங்க வந்து சேர்ந்து, மூணு நாளா கதவடைச்சு வச்சுகிட்டு வெள்ளைக்கார துரைக பேசுனதுக்கெல்லாம் ஆமாம் போட்டு, நல்ல மழைநேரத்து சாயங்காலத்துல எல்லாப்பயலும் கையெழுத்து போட்டு தொலைஞ்சு.. அப்பாடான்னு மக்கள கூட்டிகிட்டு 'ஃக்குஃபா'ல போயி 'பழையகாலத்து' கூட கொண்டாடி.. (இப்ப எல்லாம் கையெழுத்து கிடையாது ஒரே நீலக்கலர் பழையகாலம் தான்)... ஸ்ஸ்ஸப்பா....

அதாவது ராசா என்ன சொல்ல வர்றாருன்னா.. அவரு ஒரு மாசமா பயங்கிற 'பிசி'யாம்.. அவ்ளோதான்.. காணதயெல்லாம் போயிடல. :) இவத்தயே தான் சுத்திகிட்டு இருக்காரு.. வருவாரு..

--
#208

Wednesday, September 6, 2006

அய்யர், தேவர், சுடலமாடன், பாய், நாயர்,

மீண்டும் ஒரு வயத்தெரிச்சல் சம்பாதிக்கிற பதிவு.

இப்பத்தான் ஒரு வயத்துகுறிப்பு எழுதி தூர தேசத்துல வரரொட்டி சாப்பிடுற பலபேரு வயத்தெரிச்சல :) கொட்டிகிட்டேன்..
(அது செல்லமா, போட்டிக்கு தலைப்பு குடுத்து வாங்கிட்டது கொஞ்சம் பலமாவே)
அதே வரிசையில் திரும்பவும் உங்க வயத்தெரிச்சல கூட்டுற மாதிரி ஒரு பாட்டு..

------------
அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஓட்டல் அல்வா மாதிரி
தாழம்பூவென தள தள தளவென
வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆழ்வார்குறிச்சி
அழகுத்தேவர் அருவா மாதிரி
பருமா தேக்கென பள பள பளவென
வந்தான் வந்தான் பாரு

கும்மியடி கும்மியடி
கும்மியடி ஹோய்
கொட்டு வட சத்தம் போட
கும்மியடி கும்மியடி
கும்மியடி ஹோய்
கொண்ட பூவில் வண்டு ஆட
கும்மியடி ஹோய்

அடி ராசா நீ ரோசா நீ ராசாமணி
நம்ம ராசாக்கு ராணி வந்துட்டா

ரொம்ப சோக்கானது இந்த சோடின்னு தான்
அந்த ஆத்தாவா சேர்த்துபுட்டா

தும்மல் வாராமத்தான் நம்ம சுத்திபோடனும்

சுடல மாடனுக்கு கிடா நேர்ந்துவிடனும்
நல்ல பொன்னான நாள் இது தான்

(அவளுக்கென்ன அம்பாசமுத்திர)

உப்புகண்டம் நீ வந்து சேரு
இங்க காத்திருக்கு கம்பங்கூளு தான்

பாய் கடை பிரியாணியப் போல
நெஞ்சு பக்குவமா வெந்து கெடக்க

அடி ஆறப்போட்டா கெட்டு போகும் தானே
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு

மச்சான் வெத்தலை பாக்கோட
வந்து வாசலில் நிக்கட்டா
இனி ஒத்திபோட்டா ஒத்துக்காது
பஞ்சு மிட்டாய் மனசு

அடி ஒத்தையில் தூங்காது
பஞ்சு மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கடை சாயா விட
ஏறிக்கிச்சு சூடு

(அவளுக்கென்ன அம்பாசமுத்திர)

பல்லு குத்தும் குச்சியால நீங்க
விட்டா நெல்லுகுத்தும் கெட்டிக்காரன்ங்க

பத்தமடை பாய போட்டுப் பாரு
பாட்டெடுக்கும் சூரன் நாந்தான

விட்டா போதும் வேலிய தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப 'இது'ங்க

கொத்துற சேவலும் நாந்தானே
ப்ராய்லர் கோழியும் நீதானே
ரெண்டும் மூக்கும் மூக்கு முட்டிகிட்டு
முத்தம் வைக்காதோ

மச்சான் ___ சூட்டோடு
ரெண்டும் நெஞ்சொடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலு இல்லாமத்தான்
ஒண்ணா தைக்காதோ..

(கும்மியடி கும்மியடி)
(அவளுக்கென்ன அம்பாசமுத்திர)

-----

'சில்லுன்னு ஒரு காதல்' படத்து பாட்டுங்க.
பாட்டு யாரு பாடுனது, என்ன விவரம்ன்னு எல்லாம் தெரியனும்னா
இந்த பாட்டை பத்தியும் படத்துல வர்ற மத்த பாட்டுக பத்துன விமர்சனம் 'இங்க'


--
#207

Tuesday, September 5, 2006

அதம் பத்தினு பொன்னோணம்


தமிழர்களுக்கு 'பொங்கல்' மாதிரி மலையாளிகளுக்கு 'ஓணம்'.

இன்னைக்கு பொன்னோணம் கொண்டாடும் 'இஷ்ட்டக்காரங்'களுக்கு:
'கானம் விட்டு ஓணம் உண்ணனும்'ன்னு சொல்லுவாங்க.. அப்படி 'கானம்' எல்லாம விக்காமயும் 'அடிப்பொள்ளியா யிருக்கட்டே நிங்கள் ஓண'சதயா' !!

--
#206

Monday, September 4, 2006

உங்க கூட ஒரே தமாசு !



தினம் தினம் எதிர்படுவோர் தரும்
நிறைந்த புன்னகை

மதிப்பு வைத்திருப்பவர்களிடம்
கிடைக்கும் மரியாதை

அடிக்கடி மோதிக்கொண்ட போதும்
விட்டுக்கொடுக்காத பாசம்

சலிக்காமல் சகித்துக்கொண்டு ஒருத்தி
வைத்திருக்கும் நம்பிக்கை

அதிர்ந்துபோகும் வசைவார்த்தைகளில்
மகிழ்ச்சியை கூட்டும் நட்பு

ஒவ்வொரு நொடியையும் என்னை
ரசிக்க வைக்கும் உலகம்


இதுக்கெல்லாம் ஆடாதவன், ஒரே ஒரு 'வெற்றி'க்கு ஆடுவான்னு நீங்க நினைச்சா.. அட போங்க சார்!.. உங்க கூட ஒரே தமாசு.. :)

--
#205

Friday, September 1, 2006

தேன்கூடு-தமிழோவியம் போட்டி: செப்டம்பர்' 06 தலைப்பு

'உனக்கெல்லாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க பாரு, அவுங்கள சொல்லனும். இது வரைக்கும் எவ்வளவு அருமையா உறவுகள், மரணம், வளர்சிதைமாற்றம்'ன்னு தலைப்பெல்லாம் குடுத்தாங்க, எத்தனை அருமயான படைப்பெல்லாம் வந்துச்சு. நல்லா போயிட்டிருக்கிற போட்டிய சொதப்பிராத, கம்முன்னு பயணம், தோல்வி இந்த மாதிரி எதாவது சொல்லிடு'

இதை தான் தலைப்பா குடுக்கப்போறேன்னு சொன்னதும், நம்ம சகா ஒருத்தன் கிட்ட இருந்து வந்த முதல் ரியாக்ஷன் தான் நீங்க மேலே பார்க்கிறது. அப்படி என்னடா தலைப்பு சொன்னேன்னு கேக்கரீங்களா? அவசரப்படாதீங்க, அதை சொல்லத்தான பதிவு போட்டிருக்கேன், சொல்றேன்.

முதபரிசு வாங்கி, தலைப்பு சொல்ற பெருமையெல்லாம் வாங்கிருக்கோம், சும்மா நீங்க வந்ததும் சொல்லிட முடியுமா? ம்ம் .. (யாருங்க அங்க அற்பனுக்கு வாழ்வு வந்தா..'ன்னெல்லாம் முனங்கிறது?)

சும்மா ஒரு வார்த்தையில தலைப்பு குடுத்துட்டு இருக்காதீங்க, முன்ன மரத்தடி'யில கூட குடுத்தாங்களே 'சிவாஜி வாயுல ஜிலேபி'ன்னு அந்த மாதிரி எதாவது குடுங்களேன்னு, தேன்கூடு நண்பர்கள் கூட சொன்னாங்க. சட்டுன்னு நமக்கு தோணுனது 'கஃப் வச்ச ஜாக்கெட்', பாப்பா கூட ஜாலி' இப்படித்தான்.. 'ஏன் இதுக்கு பதிலா அஞ்சரைக்குள வண்டி'ன்னு தலைப்பு குடுத்திடேன்'னு மறுபடியும் நம்ம சகா உதைக்க வந்துட்டேன்.

என்னடா செய்யலாம்னு பொட்டி முன்னால போயி உக்காந்தா நம்ம மயில்பொட்டியில ஒரு 'thanku - e - card'.... ஆஹா தலைப்பு கிடைச்சிருச்சின்னு அர்ச்சிமிட்ஸ் யுரேகா ய்ரேகா'ன்னு கத்திட்டு ஓடுன மாதிரியெல்லாம் விவகாரமா ஓடாமா, கட்டியிருந்த லுங்கியோடவே ஒரே குதியாட்டமா போயி என் சகா கிட்ட சொன்னேன், அதுக்கு அவன் குடுத்த பதில் தான் மேல சொன்னது.

ஆனாலும் இந்த தடவை அவன் பேச்சுக்கு நான் தலைப்பை மாத்திறதா இல்லை.. பரிசு வாங்கினது நான்.. ஒரே ஒரு ஓட்டு போட்டுட்டு, இவ்ளோ பண்னாட்டு பண்றானுக, அந்த ஒரு ஓட்டுக்கும் 'டென்னிஸ்'ல நான் தான கார்ட் தேச்சேன். பார்ட்டி வாங்கிட்டு ஓட்டு போட்ட உனக்கெல்லம் கேள்வி கேக்க உரிமை இல்லைன்னு சொல்லிட்டேன். :)

நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் என்னைக்காவது யாருகிட்டயாவது லிப்ட் கேட்டிருப்போம் அல்லது குடுத்திருப்போம் இல்லைன்னா ஒரு லிப்ட் கிடைக்கதான்னு ஏங்கி கூட இருப்போம். அது நடு ரோட்டுல நின்னுகிட்டு அடுத்த வண்டிக்காரன் கிட்ட கேக்கிற லிப்ட்'ஆவும் இருக்கலாம் அல்லது வாழ்க்கையில ஒரு தளத்துல இருந்து இன்னொரு தளத்துக்கு போக நமக்கு கிடைக்கிற லிப்ட்'ஆவும் இருக்கலாம்.

"ஒரு லிப்ட் கிடைச்ச போதும்ப்பா, கிளப்பிரலாம்"னு வேலையிடத்துல அல்லது தொழில்ல 'நம்பிக்கை' எட்டிப்பார்க்கிற அந்த வார்த்தைகள எத்தனை தடவை கேட்டிருப்போம், நீங்க கூட சொல்லியிருக்கலாம். கடைசிவரைக்கும் அவனுக்கு ஒரு லிப்டே கிடைக்கலைன்னு விரக்தியா கூட கேட்டிருக்கலாம்.

ஊருக்குள்ளார சும்மாவே சுத்திட்டு இருக்கயேன்னு எல்லாரும் கரிச்சு கொட்டிட்டு இருந்த ஒரு ஆள், ஒரு நாள் வால்பாறையில இருந்து இறங்கும் போது ஒருத்தருக்கு லிப்ட் குடுக்க போயி, அதுனால இப்ப அவர் 'லிப்ட்' ஆகி ரெண்டு தரம் எம்.எல்.ஏ'வாக கூட இருந்தாரு. ஒரு சின்ன லிப்ட் தான்!

ராத்திரி நேரத்துல தனியா நிக்கறானேன்னு பாவப்பட்டு லிப்ட் குடுக்கபோயி கையில கழுத்துல இருந்தத மட்டுமில்லாம வெள்ளி அரைஞான கழட்டி குடுத்தும், வயுத்துல ஸ்டில்ட்டோ குத்து வாங்கி, நுரையீரல் ஓட்டையோட மாசக்கணக்குல ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சவனும் இருக்கான்.

சும்மா நடந்து போனவன, வலிய போயி லிப்ட் குடுத்து, அடுத்த திருப்பத்துல குழியில இறக்கி முதுகெலுமை உடைச்ச கதை கூட நம்மள சுத்தி நடந்திருக்கு.

ஒவ்வொரு லிப்ட்'க்கும் பின்னால ஒவ்வொரு கதை!

அட அடுத்தவங்கள விடுங்க, நமக்கு கூடத்தான்.

காலையில பத்து மணி சென்னை அண்ணா சாலை ட்ராபிக்ல, என்னோட முதல் வெற்றிகரமான இன்டர்வ்யூக்கு போக தேனாம்பேட்டை சிக்னல்ல இருந்து நந்தனம் வரைக்கும் லிப்ட் குடுத்திருந்தவர் போட்டிருந்த சட்டையோ முகமோ இன்னைக்கு ஞாபகம் இல்லை, ஆனா போன வாரம் கார்ப்பரேஷன் சர்கிள்ல இருந்து ஜங்ஷன் வரைக்கும் நான் லிப்ட் குடுத்தவங்க கிட்ட இருந்து அடுத்த நாள் காலையில வந்த 'thanks e-card'அ பார்த்ததும், அந்த பதட்டமான குரலும் , (குர்லா டைம் சேஞ்ச் பண்ணிட்டாங்களாம்.. ரிசர்வேஷன் டிக்கெட்ல போடவே இல்லை) அந்த சென்ட் வாசமும் (ஆர்ச்சீஸ் டீப் க்ரீன்?) ஞாபகம் வருது. :)
(லிப்ட் குடுத்த கேப்'ல மெயில் ஐடி வரைக்கும் குடுத்திட்டயான்னு எல்லாம் கேட்டு, விவாகரத்தை கிளப்பக்கூடாது, அதெல்லாம் அப்புறம் நம்ம பதிவுல வச்சுக்கலாம், யூ நோ? திஸ் ஈஸ் அஃபீஷியல் ஃபார் தேன்கூடு.. ஓகே?)



இவ்ளோ மகத்துவம் வாய்ஞ்சது 'லிப்ட்', அதுனால இந்த மாசத்துக்கான (செப்டெம்பர் 06) தேன்கூடு தமிழோவியம் போட்டிக்கான தலைப்பு

'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'

அவ்ளோதான், மக்களே இனி என் பேரை காப்பாத்தறது உங்க கைவிரல்ல மாட்டிட்டு முழிக்க போற கீ போர்ட்ல தான் இருக்கு.

எனக்கென்னமோ வழக்கம் போல நட்பு, காதல், நினைவுகள், நம்பிக்கை'ன்னு சென்டியான கதைகளாகவோ, இல்லை லிப்ட் கேக்கிறது வச்சு தமாசா'ன கதையா மட்டும் இல்லாம இந்த தலைப்புக்கு யாராவது ஒரு நல்ல க்ரைம்/ஹாரர் கூட முயற்ச்சி செய்வாங்கன்னு தோணுது. செய்வீங்க தானே.. ?:)

போட்டியில கலந்துக்கபோறவங்க எல்லாம் ஜூட்.. வாழ்த்துக்கள்.

மக்களோடு மக்களா, நானும் உங்க படைப்புகளை படிக்க காத்திட்டிருக்கேன்.. அடிச்சு ஆடுங்க பார்க்கலாம்.. :)

அடச்சே.. ஒரு மேட்டர விட்டுட்டேன் பார்த்தீங்களா.. இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி குடுத்த தேன்கூட்டிற்க்கும், தமிழோவியத்துக்கும் .. ரொம்ப தாங்ஸ்ப்பா'

--
கூடுதல் தகவலுக்கு>>


போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php

படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - செப்டம்பர்' 20, 2006

செப்டம்பர்' 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் செப்டம்பர்' 26-27 அறிவிக்கப்படும்.

--
#204

Thursday, August 31, 2006

வேட்டையாடு விளையாடு


அவுங்ககிட்ட நீ அப்படி சொன்னயா?

எப்படி?

யூ ஆர் க்ரேசி எபவுட் மீ'ன்னு?

ஒட்டு கேட்டீங்களா?

நீ சொன்னது காதுல விழுந்துச்சு..
அவுங்க கிட்ட எல்லாம் சொல்ற, எங்கிட்ட மட்டும் சொல்லமாட்டேங்கிற..?

சொன்னாத்தான் தெரியுமா என்ன..?


--
#203

Monday, August 28, 2006

நன்றி சொல்ல...


August 06 Thenkoodu TamilOviam Contest First Prize Winner

நடந்து முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் 'தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்திய தமிழ் வலைப்பதிவர்களுக்கான மாதாந்திர போட்டியில் கலந்து கொண்ட என்னை, பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கொள்ள வைத்த சகபதிவர் மற்றும் ரசிக பெருங்குடி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. மொத்தம் பதிவான 153 வாக்குகளில் எமக்கு ஆதரவாக விழுந்த 53 ஓட்டுகளை அளித்த தமிழ் மக்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிகொன்டவனாக இருப்பேன்..

ச்சே.. இந்த மாதிரி முதபரிசு, ஜெயிக்கிறதுன்னெல்லாம் நடந்துச்சுன்னாலே.. உடனே அரசியல்வாதி கணக்கா பேச்செல்லாம் வருது..

நம்ம எழுதுனது மேல நல்ல அயிப்பராயம் வச்ச அந்த 53 பேருக்கும் (நிசத்துல 51 ஓட்டு தான்.. ரெண்டு ஓட்டு நமக்கு நாமே திட்டத்தின் படி நம்மளே போட்டுகிட்டது ஹீ.. ஹி, இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா).. ஓட்டு போடாட்டியும், நல்லா இருந்துச்சுன்னு நினைச்சுகிட்ட நல்ல உள்ளங்களுக்கும்.. இவ்வளவு ஓட்டு விழறதுக்கு ஒரு பெரிய காரணமா இருந்த பாஸ்டன்-பாலா'வுக்கும்... மற்றும்.. இன்னும் பல ...'க்கும்.. ..'க்கும்.. இதை எல்லாம் சாத்தியமாக்கி குடுத்த போட்டி அமைப்பாளர்களுக்கும்.. ரொமப டாங்க்ஸுங்கோவ்..

நன்றி x 51



--
#202

Friday, August 25, 2006

சென்னை - வயித்து குறிப்பு

எல்லாரும் சென்னைய பத்துல அவுங்க-அவுங்களோட நினைவுகள சொல்லிட்டு இருக்காங்க.. நம்ம பங்குக்கும்.. :) நம்ம நாக்குல உக்காந்து வயத்துல அடங்கி மனசுல இன்னும் நீங்கா இடங்களும் புடிச்சிருக்கிற சில இடங்களும் அது சம்பந்தபட்ட சில நினைவுகளையும் பத்தின குறுப்பு

--

ஒரு ப்ளேட் சாம்பார் இட்லிக்கு கிளிமூக்கு ஜக்கு நிறையா நெய் மணக்கற சாம்பார் குடுப்பாங்களான்னு ஆச்சிரியம் குடுத்த ரத்னா கபே.

ஸ்டார் ஹோட்டல் போயி சாப்பிட்டாலும் குடுக்காத சந்தோஷத்தை குடுத்த 'பாண்டி பஜார் ப்ரில்லியண்ட் டுட்டோரியல் முக்கு' ஆம்னிவேன் நைட்ஸ்டால் பொடி தோசை.

ரோகினி இன்டர்நேஷனல் பக்கத்துல 'பாபண்ணன் தள்ளு வண்டி'யில அர்த்த ராத்திரியிலயும் ருசியா கிடைக்கிற செட்தோசையும் சுக்காவருவலும்.

நாலு சுத்துக்கு அப்புறம் நட்புக்காக வீம்பா டீநகர்ல இருந்து வண்டி எடுத்துட்டு போயி 'வேலுமிலிட்டிரி'யில வாங்கிட்டு வந்த சிங்கிள் ப்ளேட் 'தலைஃப்ரை'

எந்த நேரம் பசிச்சாலும் சட்டுன்னு கிளம்பி போயி புல் கட்டு கட்டுன 'நடேசன்வீதி கனகதுர்கா மெஸ்'.

முதன் முதலா ஸ்க்ரூட்ரைவர்'ன்னா ஒரு திரவ சமாச்சாரம்னு தெளிவு குடுத்த ஜீ.என். செட்டி ரோடு 'பார்த்தன்'.

ஸ்வீட் லைம்'ன்னு சொன்னா அது சாத்துக்குடி ஜூஸ்ன்னு விளக்கம் கிடைச்ச 'கோடம்பாக்கம் நயாகரா'.

குஷ்பூ இட்லியும் அஞ்சு வகை சட்னியும் கூட அருமையான சைட்டிஷ்ன்னு சொல்லிகுடுத்த 'அம்மா மெஸ்' மொட்டை மாடி.

கீழ இத்தன ஃபிகருக டான்ஸ் ஆடும் போது இவனுக மேல போயி வெட்டியா பாட்டிலோட நிக்கறானுகளேன்னு முத தடவை போனப்போ முட்டாள்தனமா யோசிச்ச 'பைக்ஸ் அன்ட் பேரல்ஸ்'.

'பங்கு ரெண்டு காபி சாப்பிட்டதுக்கு 120 ரூ வாங்கிட்டானுகடா'ன்னு மூணு நாலு புலம்ப வச்ச 'நுங்கம்பாக்கம் பரீஸ்த்தா'.

சைனீஸ் புட்'ன்னா நம்மூர்ல சாப்பிட்ட நூடுல்ஸ் ப்ரைட்ரைஸ் மட்டுமில்லன்னு தெரிய வந்த கத்தீட்ரல் ரோடு 'சைனா டவுன்'.

இதென்னடா நம்மூர் தேங்காய் சாதம் மாதிரி இருக்கு, இது தான் மெக்ஸிக்கனா?ன்னு லொள்ளு பேசுன கோபாலபுரம் 'டான் பெபெ'.

கடல்காத்தும் மீன்கொத்தியும் அருமையான அழுத்தநிவாரணின்னு அலுவலக சகாக்களோட சேர்ந்து கண்டுபுடிச்ச 'எம்.ஜி.எம் குவாலிட்டி இன்'.

சீஸ் செர்ரி பைனாப்பிள்'ங்கிற அமிர்த்தத்த முதல் தடவையா கண்ணுல காட்டுன 'கெளதம்மெனார்'.

ரெண்டு புல் மீல்ஸ் பார்சல் வாங்கின கூடவே நண்டு க்ரேவி இனாம கிடைக்கும்னு நாங்க படையெடுத்த 'அஞ்சப்பர் செட்டிநாடு'.

ரெண்டு போண்டா ஒரு டீ சாப்பிட போனாலும் கூட பர்ஸ் வெயிட்டா இருக்கனும்னு கத்துகுடுத்த வடபழனி சரவணபவன்.

மட்டன் பிரியாணியும், போட்டி'யும் சாப்பிட்டதுக்கு அப்புறம் லெமன் டீ சாப்பிட்டா அருமையா இருக்கும்னு கண்டு புடிச்ச ஆற்காடு ரோடு 'ஹாலிவுட்'.

ஆம்பூர் பிரியாணி'யில அப்படி என்னடா விசேஷம்னு கேட்டவன, ஆம்பூர் ரசிகனாவே மாத்துன நந்தம்பாக்கம் 'பிரியாணிஸ்டால்'.

வெறும் நூத்தம்பது ரூவா செலவுல 'தோழிமை'யோட (நன்றி:செல்வராஜ்) மூணு மணி நேரம் இருக்கற ரகசியத்தை சொல்லிகுடுத்த 'குயின்க்கிஸ்'.

சாம்பார் வடை மட்டுமே தெரிஞ்சவனுக்கு ரசவடை'ன்னு ஒரு அப்பட்டைசர அறிமுகப்படுத்தின 'உஸ்மான் ரோடு அருணா'.

ஷூ போடாட்ட்டி உள்ள விடமாட்டானான்னு, கிண்டி ப்ளாட்பாரத்துல 300 ரூபாக்கு நாலு ஜோடி ஷூ வாங்கிபோட்டுகிட்டு உள்ள போயி, அப்புறம் வெளிய வரும் போது நக்கலா, அங்க வாசல்லயே அதை விட்டெறிஞ்சுட்டு வந்த 'லீ மெரிடியன் ஃப்ளேம்ஸ்'

இங்க விக்கிற ப்ரெட்டுக்கு இல்ல மாப்ள விலை, இங்கன உக்காந்து வேடிக்கை பார்க்கத்தான் அது'ன்னு சந்தோஷமா எதிர் பஸ்ஸ்டாப்பை பார்த்துகிட்டே செலவு செஞ்ச 'ஹாட்ப்ரட்ஸ்'

ஃப்ரைடு ஐஸ்க்ரீம்னு ஒரு அதிசியத்த உணர்ந்த 'ரெஸிடென்சி ஆஹார்'

அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும்னு அஞ்சு நாள் முன்னாடியே டேபிள் புக் பண்ணி, ஆசபட்டு போயி, ஒரே ராத்திரியில ஒரு மாச சம்பளத்தை காலி செஞ்ச 'லெதர்லவுஞ்ச்'.

--
ம்.ம்ம்.. இப்படயே நிறையா இருக்குதுங்க.. ஆனா இப்போ பயங்கிறமா பசியெடுக்க ஆரம்பிச்சிருச்சு.. அதுனால இதோட விட்டுட்டு போறேன்..

சாப்பாட்டுக்கு போற நேரத்துல இப்படி ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சிருக்க கூடாது.. இனி இந்த வெள்ளம் போட்ட சாம்பார் உள்ளயே இறங்காதே :(

--
#201

Wednesday, August 23, 2006

வாக்கு தவறாதவர்கள்



"மழைய ருசிச்சிருக்கயா?"
ஒரு மழைக்கால கல்லூரி சுற்றுலாவின்போது கேட்டாள்.

"ரசிச்சிருக்கறன்.. ருசிக்கறதா?"
புரியாமல் அவளை பார்த்தேன்.

விழி மூடி,
வானம் பார்த்து,
உதடு சுழித்து.
மழையை ருசித்துகொண்டிருந்தாள்.

அன்று தான் முதன் முதலில் மழையை ருசித்தேன்..,
அவள் உதடுகளில்.

"பின்னாடி ஒரு நாள் இங்க வரணும்"
வெட்கத்துடன் தோள்சாய்ந்து கேட்டவளுக்கு,
"மறுபடியும் மழையை ருசி பார்க்கவா?" குறும்பாய் கேட்டுவிட்டு
"கண்டிப்பா..?" தலைகோதி வாக்கு குடுத்தேன்.

இன்று
மீண்டும் வந்திருக்கிறேன்..
மழைக்காலம் தான்..
அவள் இடத்தில் 'இவள்'

"மழையை ருசிச்சிருக்கயா..?"
இந்த முறை இதை கேட்டது.. நான்.

அவளும் கேட்டிருப்பாள்..

நாங்கள் 'வாக்கு தவறாதவர்கள்'.


--
#200


Thursday, August 17, 2006

பாத கொலுசு பாட்டு

பொதுவாக மண்வாசனையோட வர்ற பாட்டுகன்னா, அடிச்சு தூள்பறக்கிற மாதிரி வர்ற குத்து பாட்டுக தாங்க ஜாஸ்த்தி. கொஞ்சம் இதமா, பதமா இந்த மனச வருடுற மாதிரின்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வர்ற மண்வாசனை பாட்டுக ரொம்ப கம்மிங்க. ரொம்பவும் சிலாகிச்சு பாராட்டுற மாதிரி பெரிய அளவுல கவிதை வரியெல்லாம் இல்லாம, சாதரணமா கிட்டத்தட்ட பேச்சுவழக்குலயே இருக்கிற பாட்டுகன்னா, சின்னகவுண்டர் படத்துல வர்ற 'முத்து மணி மாலை' தாங்க பிரபலம்.

அந்த வகையில 'திருமதி பழனிச்சாமி'யில வர்ற 'பாத கொலுசு பாட்டு' எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு. கொஞ்சம் அதிகமாவே கொங்குவாசம் வீசுற பாட்டு. ஒரு வேளை, அந்த பாட்டு படமாக்கினது பூராவும் காண்டூர் வாய்க்கால், நவமலை EB பஸ், தண்ணி நிறஞ்சு வழியுற கோட்டூர் தடுப்பனை, அதுக்கு பின்னால இருக்கிற தென்னந்தோப்பு, வயலை ஒட்டி இருக்கிற மாந்தோப்புன்னு நமக்கு தெரிஞ்ச, நம்ம கால்பட்ட பொள்ளாச்சி சுத்துவட்டாரம்ங்கிறதுனாலயோ என்னமோ, எப்பவுமே அந்த பாட்டு மேல ஒரு மயக்கம் உண்டுங்க.

திடீர்ன்னு என்னமோ அந்த பாட்டு கேக்கனும்னு ஒரு ஆசை. சரி'ன்னு வழக்கம் போல ராகா பக்கம் போன அங்கயும் கானோம், ம்யூசிக் இண்டியா பக்கம் போன அங்கயும் இல்லை.. விட்ருவமா என்ன, அங்க இங்கன்னு நம்ம சிஸ்டத்தை புரட்டி போட்டு புடிச்சிட்டமில்ல..

உங்களுக்காக இங்க..



பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்று பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
ஒய்யார மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வாணமெல்லாம் வாய்ச்சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீணிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகு
ஒன்னாக கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வச்ச சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனி சந்தனமே
தென்காசி தூறலிலே கண்விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்று பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..




இதே வரிசையில வர்ற பாட்டுக வேற என்னன்ன இருக்குன்னு அப்படியே ஒரு லிஸ்ட் குடுங்களேன், மொத்தமா ஒரு ப்ளேலிஸ்ட் போட்டு வைக்கனும் :)



--
#199

Friday, August 11, 2006

என்னைய பார்த்து.....

பட்டுகோட்டை

பப்பி

முதல் ராத்திரி

எது நடந்ததோ

பொண்ணும் பொண்ணும் செக்ஸ்

லூசா நீ

திரிஷா குளியல்


ஒன்னுக்கொன்னு சம்பந்த்தப்பட்டும் படாமயும் இருக்கிற இந்த வார்த்தைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுதுங்களா?

துண்டு துண்டான வாக்கியங்களை வச்சு எதாவது நவீன இலக்கியம் எதும்எழுத முயற்ச்சி பண்ண ஆரம்பிசுட்டானா ராசா'ன்னு நினைக்கரீங்களா.. அப்படி எல்லாம் இல்லீங்க. ஒரு தடவை எதோ அத மாதிரி எல்லாம் செஞ்சோம், மறுபடியும் அப்படி எல்லாம் எழுதற அளவுக்கு திராணி இல்லீங்க.. ( அடி தாங்க முடியலை, ரவுண்டு கட்டிட்டாங்க மக்கள்)

என்னடா இவன் நல்லாத்தான இருந்தான், திடீர்ன்னு இப்படி விவகாரமா ஆரம்பிக்கரானே, எதாவது போலி மகிமையான்னு பார்க்கரீங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. மேல சொன்ன வார்த்தைகள 'தேடு சொற்களா' உபயோகப்படுத்தி தேடுனவங்கள, கூகிளாண்டவர் நம்ம பதிவுக்கு கூட்டிட்டு வந்து விட்டிருக்காரு.. பாவம் மக்கள்.. அவுங்களுக்கு என்ன விசனமோ, என்ன அவசரமோ, இப்படி தேடியிருக்காங்க. தேடினவங்க இங்கன வந்து என்னைய என்னவெல்லாம் திட்டுனாங்களோ.. நல்லவேளை நமக்கு கூடப்பொறந்தவங்க யாரும் இல்லை :)

ஆனாலும் கூகிளாண்டவருக்கு ரொம்ப குசும்புங்க.. எதுக்கெல்லாம் நம்மள அடையாளம் காட்டுறாரு பாருங்க.. இந்த கொடுமை எல்லாம் நான் எங்க போயி சொல்றது..
மிஸ்டர் கூகிளாண்டவர், எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா எல்லாம் இருக்குது, தெரிஞ்சுக்கோங்க..

டெக்னாலஜி என்னதான் வளர்ந்தாலும், நம்ம மக்கள் தேடுற மேட்டர் மட்டும் வளரவும் இல்லை மாறவும் இல்லை..

நான் எதும் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க.. எல்லாம் சைட்டுமீட்டரு உதவியோட தான் சொல்றேன்.. வேணும்னா நீங்களும் சொடுக்கி பாருங்க..
(ராசபார்வை வருதான்னு மட்டும் தான் பாக்கனும்.. வேற எதும் பார்த்தீங்க. அப்புறம், அந்த பாவத்துகெல்லாம் நான் பொறுப்பில்ல ஆமா)

(பொண்ணும் பொண்ணும் செக்ஸ்)

(பப்பி)

(திரிஷா குளியல்)

(முதல் ராத்திரி)

(லூசா நீ)

(பட்டுகோட்டை)

(எது நடந்ததோ)






















Pictures from:
http://www.haloimages.com
http://: www.allposters.com
http://www.philkaplan.com
--
#198

Tuesday, August 8, 2006

என்ன உறவு ?

அன்னைக்கும் எப்பவும் போல டீக்கடை 'போசு' ஜன்னலை தட்டி 'டீ வச்சிருக்கண்ணே'ன்னு கத்திட்டு போற குரல் கேட்டுத்தாங்க முழிச்சுகிட்டேன். பொழப்புக்காக சென்னைபட்டனம் போயி டீ.நகர் மேன்ஷன்ல சகாக்களோட கூட்டா தங்கி, பொட்டி தட்டுற வேலைய வாங்கின நாள்ல இருந்து ஆறு மாசமா போசு குரல் கேட்டுத்தான் கண்ணை தொறக்கிறதுங்கிறது வழக்கமா இருந்துச்சுங்க. முத்துநகர் மாம்பலத்துக்கு வர லேட்டு ஆனாலும் ஆகும், போசு ஜன்னலை தட்டி டீ வச்சுட்டு போற நேரம் மட்டும் லேட்டு ஆகவே ஆகாதுங்க. ராத்திரி எத்தனை சுத்து போனாலும், நீ மட்டும் எப்படிடா காலங்காத்தால சரியா ஆபீஸ் வர்றேன்னு நம்ம சக பொட்டிதட்டியாளர்கள் கேக்கும் போதெல்லாம் எனக்கு போசு தான் ஞாபகத்துக்கு வருவான். சின்ன பையன், ஒரு பதிமூனு பதினாலு வயசிருக்கும்.. 'விருதாச்சலம் பக்கம்ண்ணே, அப்பா, அக்கா, ஒரு சின்னபய, எல்லாம் அங்க தான் இருக்குதுக, அப்பப்போ அப்பா வந்து துட்டு வாங்கிக்கினு போவாரு', எப்பவோ ஒரு சனிக்கிழமை ராத்திரி பதினோரு மணிவாக்குல தலைசுத்தல குறைக்க கட்டஞ்சாயா அடிக்கும் போது, அவன் சொன்னதா லேசா ஒரு ஞாபகம்.

எஸ்.கே'ல பொங்கலும் வடையும் சாப்பிட்டு, நுங்கம்பாக்கத்துல இருக்கிற ஆபீஸுக்கு கிளம்பினேன், அப்ப ஒரு வருஷம் நம்ம தினப்படி பயணமெல்லாம் ரயில்வண்டியில தான். சீசன் டிக்கெட் வச்சுகிட்டு மாம்பலத்துக்கு நுங்கம்பாக்கத்துக்கும் தோணுனப்ப எல்லாம் பயணப்படுவோம். 8.50 லேடீஸ் ஸ்பெஷல் வண்டிக்கு முன்னால 8.43க்கு வர்ற வண்டியிலயே போயிடறது தாங்க நம்ம வழக்கம், அன்னைக்கு எப்படியே 'டைமிங்' மிஸ் ஆகிப்போச்சுங்க, நான் ஸ்டேஷனுக்குள்ளார போகும்போது 8.43 வண்டி மூவ் ஆகிடுச்சு, நானும் ஒரே ஓட்டமா மெளனராகம் க்ளைமாக்ஸ்ல மோகன் ஓடுவாரே அந்த மாதிரி ரெண்டு ரெண்டு படியா தாண்டி ஓடினேன், ஆனாலும் நான் ப்ளாட்பாரத்துக்கு போறதுக்கு முன்னாடி வண்டி ப்ளாட்பாரத்தை தாண்டியிருச்சு, அப்புறம் என்னத்த செய்யிறது 'போகுதே போகுதே'ன்னு கடலோர கவிதைகள் சின்னப்பதாஸ் மாதிரி ஆடு ஒன்ன புடிச்சு கையில வச்சுகிட்டு இளையராஜா, எஸ்.பி.பி உதவியோட சோககீதமா இசைக்க முடியும், அடுத்து வரப்போற லேடீஸ் ஸ்பெஷல்லுக்க்காக காத்திருக்கிற மக்களை எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டே ஓரமா நின்னுட்டேன்.

8.50 வண்டி லேடீஸ் ஸ்பெஷல்ங்கிறதால அதுக்கு அப்புறம் 8.57 வண்டி எப்பவும் பயங்கிற கூட்டமா இருக்கும், அதுனால தான் நான் எப்பவும் அதுக்கு முன்னாடி போயிட பார்க்கிறது.. அப்படியே வேடிக்கை பார்த்துகிட்டு நின்னதுல நேரம் ஆனதே தெரியலைங்க லேடீஸ் ஸ்பெஷல் வந்து போயும் இன்னும் சேலை சுடிதார் கூட்டம் இருக்கத்தான் செய்யுது. 8.57 வண்டி வழக்கம் போல, கட்டுக்கு அடங்காம திமிறிகிட்டு இருக்கிற வக்கப்போரு லாரி மாதிரி நிறைஞ்சு வந்துச்சு, எப்படியோ ஒரு காலை.. காலா, ஒரு ரெண்டு விரலை வைக்க கதவுகிட்ட இடம் கிடைச்சுது, கிடைச்ச கேப்புல எங்கயோ மேல இருந்த ஒரு கம்பிய புடிச்சுகிட்டு தொத்திகிட்டேன், இதெல்லாம் சென்னபட்டணத்துல காலை பயணத்துல சகஜம் தானே..வயசுப்பையன் இதுக்கெல்லாம் அசரலாமா. ஒரு கையால மேல இருந்த கம்பிய எப்படியோ புடிச்சாச்சு, உசரமா இருக்கிறது நிறையா நேரம் வசதி தாங்க. இன்னொரு கையில புடிச்சுக்க எதாவது சிக்குமான்னு பார்த்தா, பக்கத்துல தொங்கிறவனோட காட்டன் சர்ட் தான் கிடைக்குது.. ரெண்டு விரலால காலை பாலன்ஸ் பண்ணிக்கிட்டே ஒரு கையால மேல்கம்பிய புடிச்சுகிட்டு காத்தார கோடம்பாக்கம் போயி சேர்ந்தாச்சு. இப்படி விவகாரமா தொங்கிட்டு போறதும் ஒரு த்ரில் தாங்க. கோடம்பாக்கத்துல ஒரு கூட்டம் இறங்குது, அதை விட ரெண்டு மடங்கு கூட்டம் ஏறுது.. ம்ம் எல்லாம் ஒரு ரெண்டுநிமிஷ லேட்டுனால.. மறுபடியும் அதே ரெண்டுவிரல் ஒத்தக்கை தொங்கல். இப்ப முன்னவிட இன்னும் வண்டிய விட்டு வெளிய தள்ளி தொங்கற மாதிரி இருக்குது. கம்பமெல்லாம் கிட்டக்க இருக்கிற மாதிரி இருந்துச்சு.

வழக்கமா கோடம்பாக்கம் தாண்டி ஒரே அழுத்துல அடுத்த ஸ்டாப்புக்கு போற வண்டி அன்னைக்குன்னு கிழட்டு மாட்டை பூட்டுன கட்ட வண்டி கணக்கா ஊறிட்டே போகுதுங்க, மொத்த உடம்பும் கிட்டத்தட்ட வண்டிக்கு வெளிய காத்துல தொங்குது, கால் பக்கம் ஒரு ரெண்டு விரல் தான் சப்போர்ட்டா, எத்தனை நேரம் தான் ஒரு கை தாங்கும்.. அப்படி ஒரு வலி. கைய மாத்தி புடிக்கலாம்னாலும் வழியே இல்லை. சென்னப்பட்டணத்தோட ஏப்ரல் மாச இளங்காலை(!) வெய்யிலோ இல்ல அந்த கூட்டமோ இல்ல படபடன்னு அடிச்சுக்கற மனசோ எது காரணம்னு தெரியலைங்க உள்ளங்கை எல்லாம் வேர்க்க ஆரம்பிச்சிருச்சு. மேல்கம்பியில புடிச்ச கையோட இறுக்கம் அப்படியே மெல்ல குறையுது, கொஞ்சம் எத்தி புடிக்கவும் வழி இல்லை.. இருக்கிறது ஒரே ஒரு புடிதான், இன்னொரு கை காத்துல.. இதுல எப்படி எத்தி கெட்டியா புடிக்கிறது.. அந்த இன்னொரு கையால எதையாவது புடிக்கலாம்னா நான் நின்ன வாக்குல இருந்து திரும்பவும் முடியலை. எப்படியும் இன்னும் ஒரு நிமிசத்துல வேர்வையில நனைஞ்ச கை எப்படியும் புடிய நழுவ விட போகுது.. காலை கொஞ்சம் ஆழமா உள்ள நகர்த்தனும்னாலும் கைப்புடி கொஞ்சம் பலமா இருக்கனும்.. முகமெல்லாம் வேர்த்து தொண்டை எல்லாம் வரண்டு.. பேச்சே வரலை.. கருவேப்பிலை கொத்து மாதிரி வூட்டுக்கு ஒரே புள்ளை, போகாத போகாதேன்னு எங்கய்யன் சொன்னதெல்லாம் ஞாபகம் வருது. விழுந்து செத்துப்போனா போஸ்ட்மார்டம் பண்ணுவாங்களோ? 24 மணி நேரத்துக்கு ரத்தத்துல இருக்கும்னு சொல்லுவாங்களே, நேத்து ராத்திரி பத்து மணிக்குமேல ஆரம்பிச்சது.. இன்னும் 12 மணி நேரம் கூட ஆகலையே, கண்டு புடிச்சிடுவாங்களோ? அய்யனுக்கு தெரிஞ்சா..? உயிர் போகலைன்னாலும் தண்டவாளத்துல விழுந்தா கைகால் போயி.. அடிவயத்துல கலக்கமா இருக்குது, அய்யோ 'எம்பையன் சிறுசுல ஒரு நாள் கூட பாயை நனைச்சதில்ல'ன்னு பெருமையா சொல்லுவீங்களேம்மா.. சாமி கும்பிட்டு பார்ப்பமா, பத்து வருஷமா அந்த பக்கமே போகலை, இப்ப கும்பிட்டா நடக்குமா?..'தன்மான வீரனை வருக வருக என வரவேற்க்கும் தென்னக ரயிலே மஜும்தார் யூனியன்', 'டாக்டர் அய்யா அழைக்கிறார்..!' வரிசையா சுவத்துல எழுதியிருக்கானுக, பார்வை கொஞ்சம் கலங்கலா இருக்குது, அழுகப்போறனோ? கடைசியா எப்ப அழுதேன்? சம்பந்தமில்லாம எது எதுவோ ஞாபகம் வருது. அழுகற மாதிரி இருந்தா அதுக்கு முன்னாடி நம்மளே விழுந்திடனும்.. தடுமாறி பக்கத்துல தொங்கறவனை இழுக்காம, நம்மளே கைய விட்டிரலாமா,.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷம் தான, தாக்குபுடிக்க முடியுமா.. கை புடியோட இறுக்கம் விலகிட்டே இருக்குது... புடிய விட்டிரலாமா... தொண்டை எல்லாம் அடைக்குது...கால் நழுவற மாதிரி இருக்குது, உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது. நடுங்கறனா? நானா?.. ' மொத்தம் ஏழு பேரு, ட்ராப்டர், ஸ்க்ரூ ட்ரைவர், ஹோஸ் பைப் எல்லாம் வச்சிருக்கானுக, நம்ம மாப்ள ஒத்த ஆளு, உக்காந்திருக்கிற வாட்டர் டாங்க் திட்டை விட்டு எந்திரிக்கக்கூட இல்ல, அப்படியே கால் மேல கால் போட்டு தம்மா உக்காந்திருக்கான்' ராத்திரி ஜமா சேர்ந்த உற்சாகத்துல நம்ம சகா காலேஜ் கதைய கதைய பேசுனப்ப கிளுகிளுப்பாத்தான் இருந்துச்சு.

இதுக்கு மேல முடியாது கைய விட்ருவோம், ஆனது ஆகட்டும்.. கண்ணை முடிக்கிட்டேன்... சட்டுன்னு யாரோ இடுப்பை அணைச்சு உள்ள இழுக்கறாங்க.. யாருன்னு கூட பார்க்கலை அப்படியே கண்ணை மூடினபடி மேல் கம்பிய புடிச்சிருந்த கைய இறுக்கிட்டேன்.. நுங்கம்பாக்கம் வந்திருச்சு. கூட்டம் அதுவா நம்மள இறக்கி விட்டிருச்சுங்க.. அப்படியே பக்கத்துல இருந்த பெஞ்சுல உக்காந்துட்டேன், அதே பெஞ்சுல உக்காந்திருக்கிற, நான் வழக்கமா பார்க்கவே புடிக்காத, அந்த அழுக்கு பிச்சக்காரனக்கூட கவனிக்கலைங்க. இன்னும் நடுக்கம் போகலை எனக்கு. வண்டி கிளம்பிருச்சு, சட்டுன்னு, யாரு நம்மள புடிச்சது.. தலைய தூக்கி நான் தொங்கிட்டு வந்த கதவு பக்கம் பார்க்கிறேன்.. இன்னும் நிறைய பேரு தொங்கறாங்க..வண்டி வேகம் எடுத்திருச்சு, சட்டுன்னு எந்திருச்சு இலக்கில்லாம தேடுறேன்.. ஒரு நீலக்கலர் முழுக்கை சட்டை போட்ட கை, டாட்டா காமிச்சு, விரல் உயர்த்தி காமிக்குது, பின்னால திரும்பி பார்க்கிறேன், யாரும் இல்லை, எனக்குத்தான் போல இருக்குது.. ச்சே, என்ன ஆளுடா நம்ம, ஒரு தாங்க்யூ கூட சொல்லலை.. எனக்கே வெக்கமா இருந்துச்சுங்க.

ஸ்டேசன் விட்டு வெளிய வந்து ஒரு 'ராஜா'வை பத்த வச்சகிட்டே, கண்ணுல நீர் கோர்த்துகிட்டதையும், உடம்பு நடுங்கினதையும் நினைச்சு சிரிச்சுக்கறவன, மேலயும் கீழயும் வித்தியாசமா பார்த்துகிட்டு ஹிண்டுவ மடிச்சுக்கிட்டே போனாரு ஒருத்தர். நுங்கம்பாக்கத்து ஸ்டேசன்ல காதல் காவியம் எழுதப்போற கிறுக்குபயன்னு நினைச்சிருப்பாரு.. :)

அந்த முகம் தெரியாத, நீலக்கலர் முழுக்கை சட்டைகாரருக்கும் எனக்கும் என்ன உறவு ?? யார் அவரு? இன்னைக்கு வரைக்கும் தெரியலைங்க.. கோயிலுக்கு போற பழக்கம் வேற இல்லை.. இருந்திருந்தா நீலக்கலர் சட்டை'ங்கிற பேருல ஒரு அர்ச்சணையாவது செஞ்சிருக்கலாம் :)

(மக்கள் விருப்பத்துக்கு அடிபணிந்து, 'தேன்கூடு' போட்டிக்கு சேர்த்திருக்கேன்)
--
#197

Monday, August 7, 2006

படக்குறிப்பு

வீணாப்போன ஒரு ஞாயித்துகிழமை சாயங்காலத்தை பத்தின படக்குறிப்பு..


விஷால்
(தாமிரபரணி நல்ல விலைக்கு போயிருக்குன்னு பேசிக்கறாங்க, அதுவும் பூஜை போட்ட அன்னைக்கே, தமிழ்நாடு பூராவும் வித்துபோச்சாம்.. இப்படி இன்னும் ஒரு படம் செஞ்சீங்க.. அப்புறம் அவ்வளவு தான்.. 'ஆதி'யே 'பேதி'யாக்கிடந்தது தெரியும் தான.. 'நான் சாணக்கியன் இல்லடா சத்ரியன்'ன்னு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச பார்க்கரீங்க.. ம்ம் நடத்துங்க.. வடக்கத்திகாரரா இருந்தாலும், 'நானும் மதுரக்காரண்தாண்டா'ன்னு சவுண்ட் குடுக்கும் போதெல்லாம மண்ணின் மைந்தன் மாதிரித்தான் இருக்கீங்க.. கொஞ்சம் கவனம் சாமி.. )

வடிவேலு
(நல்லாத்தான போயிட்டிருந்ததீங்க.. ஏன் திடீர்ன்னு இப்படி ஆம்பிளை சோடா, பொம்பிளை சோடான்னு, சூப்பர்ஸ்டார் மாதிரி சந்திரமுகி வழியில.... ம்ஹும் ஒன்னுஞ்சரியில்ல, இதுல ஒரு சோலோ குத்தாட்டம் வேற, நல்லதுக்கில்ல கைப்பு.. நல்லதுகில்ல)

மனோஜ்.கே.ஜெயின்
(கம்பீரமான மனோஜை சமீப காலத்துல இந்தளவுக்கு வெட்டியா யாருமே காமிக்கலைங்க. தமிழ் படத்துல கொஞம் துட்டு கூட தர்றாங்கன்னு நம்ம 'மல்லு' ஆளுக இந்த மாதிரி காமெடியெல்லாம் பல்லை கடிச்சுட்டு நடிச்சு குடுக்கறதா கேள்வி..)
'SS ம்யூசிக்' ஷ்ரேயா
(தேவையா அம்மணி உனக்கு, எல்லாம் கலி காலம்.. எவ்வளவு அழகா ஒரு இத்துனூன்டு டவுசரை போட்டுகிட்டு கலக்கிட்டு இருந்தீங்க, இதுல தாவணி எல்லாம் கட்டிகிட்டுடு, கண்ணை எல்லாம் உருட்டி, 'ஏய் இஸ்க்கு,... டேய் மாப்ளை'ன்னு சவுண்ட் எல்லாம் குடுத்து பார்க்கரீங்க, ஆனாலும் ம்ஹும்.. ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலையே..)

IM. விஜயன்
(கேரளா கால்பந்து விளையாட்டு வீரர், பாவம் ஒழுங்கா புட்பால் விளையாடி நல்ல பேரோட இருந்தவர கூட்டிட்டு வந்து நடிக்க வச்சு சொதப்பியிருக்காங்க)

ரீமாசென்
(உன்னைய போயி குத்தம் சொல்லுவனா தாயி.. உங்க வேலைய நீங்க திறம்பட செஞ்சிருக்கீங்க.. ம்ம்.. நமக்குதான் மனசு கெட்டுபோகுது உன்னைய பார்க்கையில )
டைரக்டர் தருண்கோபி
(சண்டைக்கோழி மாதிரி ஒரு படம்ன்னா ரைட்டு, அதுக்காக அச்சு அசலா அதே மாதிரியா இருக்கனும்.. ம்மஹும் இப்படியும் சொல்ல கூடாதுங்க, அப்புறம் அது சண்டைக்கோழி படத்துக்கு அசிங்கம். முதபடத்துலயே இப்படி சொதப்பிட்டயே தலைவா.. )

ம்யூஜிக் யுவன்சங்கராமில்ல.. வெளிய வரும் போது போஸ்டர்ல பார்த்து தான் தெரிஞ்சுது..
பங்கு அந்த போலீஸ்காரரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே.. 'அட நம்ம பானுசந்தர்ப்பா'.. மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு இதெல்லாம் நடிச்சாரே அவரு.. என்னாங்கடா இது, அந்தாளுக்கு ஒரு ஓபனிங்க் க்ளோசப் கூடவா வைக்காம விடுறது்.. என்னா படம் எடுத்திருக்கானுக..

அடபோங்கப்பா.. ஞாயித்துகிழமை சாயங்காலம் அப்படியே நாலு பேரு கூடுற எடத்துக்கு ஒரு அழுக்கு ஜீன்ஸை போட்டுகிட்டு போயி நின்னு சாகுபடிக்கு வாய்ப்பு தேடாம நல்ல புள்ளையா இங்கிட்டு வந்தா.. திமிராமுல்ல திமுரு...

--
#196

Friday, August 4, 2006

டவுன்பஸ்

டவுன்பஸ்ன்னு தலைப்பு பார்த்ததும் அஞ்சலிதேவி பஸ் கண்டக்டரா நடிச்ச டவுன்பஸ் படத்தை பத்துன பதிவுன்னு நினைச்சுறாதீங்க, நல்ல படம் தான், அதுவும் அந்த படத்துல கே.வி. மகாதேவன் இசையில


சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்ன விட்டு பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல

தலைய வாரி பூ முடிச்சேன், வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்னு நின்னு காலு வலிக்குது
வழிய வழிய பார்த்து பார்த்து கண்ணு நோகுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது



ங்கிற பாட்டு நம்ம ஆல் டைம் ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கிற பாட்டுங்க. அந்த பாட்டுக்கான ஆர்கெஸ்ட்ராவும் அந்த குரல்ல இருக்கிற குழைவும்.. ம்ம் அருமையான பாட்டுங்க அது, கேட்டதில்லைன்னா ஒரு தடவை கேட்டுப்பாருங்க.

ஆனா நான் சொல்ல வந்தது நிஜத்துல ஊருக்குள்ளார ஓடிட்டு இருக்கிற டவுன்பஸ் பத்திங்க. சென்னப்பட்டனம் மாதிரி பெரிய ஊருல எல்லாம் சிட்டி பஸ்ன்னு சொல்லுவாங்க, இங்க பொள்ளாச்சியில எல்லாம் டவுன் பஸ் தான், மப்ஸல் சர்வீசுன்னா ரூட்பஸ். இந்த டவுன் பஸ்ல பிராயணம் செய்யிறதுங்கிறது ரயில்பயணம் மாதிரியே ரொம்ப சுவாரசியமான விசயம்ங்க, ஆனா ரயில்பயணம் மாதிரி ரொம்ப தூரம் ஆறஅமர போகமாம சட்டுன்னு ஏறி கூட்டத்துல கசங்கிப்போயி சட்டுன்னு எறங்கிபோறதுனால, அதுல இருக்கிற சுவாரசியங்கள பத்தி நிறையாபேரு கவனிக்கறதில்லைன்னு நினைக்கிறனுங்க. இப்ப எதுக்கு அதுபத்தி பேசிட்டு இருக்கேன்னு கேட்டீங்கன்னா.. ரொம்ப நாளாச்சுங்க நம்மூர் டவுன்பஸ்ல எல்லாம் போயி, எங்க போனாலும் நம்ம RXலயே போறது இல்லைன்னா நம்ம 'மேதகு'வாகனம்ன்னு பழகுனதுக்கு அப்புறம், டவுன்பஸ்ல போறதுங்கிறதே மறந்து போச்சுங்க, எங்கயாவது வெளியூர் போனாக்கூட, வண்டிய எடுத்துட்டு போயி பஸ்ஸ்டான்ட் பக்கத்துல தம்பி டூ வீலர் ஸ்டான்ட்ல போட்டுட்டு தான் போறது, ரெண்டு நாள் ஆகும்னாலும் அதே கதை தான், அதுனால வெளியூர்ல இருந்து வந்தா வீட்டுக்கு போக டவுன்பஸ் புடிக்கிறதுங்கிற வழக்கம் கூட மாறிப்போச்சுங்க.



ஒரு காலத்துல பள்ளிக்கூடம் படிக்கும் போதெல்லாம் தினமும் ரெண்டு நேரமும் படியில தொங்கிட்டு போயி, கண்டக்ட்டர் சொல்லி பார்த்து, திட்டி பார்த்து, அப்புறம் இதுகள திருத்தமுடியாதுன்னு விட்டுட்டதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா அது மறுபடியும் ஒரு பெரிய வரலாற்று பதிவாயிடும்ங்க. அதுவும் பள்ளிக்கூடத்துல இருந்து படியில தொங்கிட்டு வந்து, நம்ம இறங்கிற இடத்துக்கு ஒரு ஸ்டாப் முன்னால படியில இருந்து ஏறி உள்ளார போயி நின்னுக்கிறது, நம்ம ஆளுக யாராவது பார்த்துட்டாங்கன்னா என்ன செய்யிறதுன்னு ஒரு முன்னெச்சிரிக்கை. நம்ம இறங்கவேண்டிய இடம் வந்த்தும் படியில நிக்கிறவனையெல்லாம் தள்ளிட்டு திக்குமுக்காடி இறங்கிறது, சீக்கிரம் இறங்கி தொலைங்களேன்டா'ன்னு கத்துற கண்டக்டர் கிட்ட, நீங்க தான படியில நிக்காத உள்ளார வான்னு சொன்னீங்க, உள்ளார வந்து நின்னா இறங்க தாமசமாகத்தான் செய்யும்'னு லொல்லு பேசுறது.. ம்ம் நமக்கு அப்பவே அம்புட்டு அறிவு.

இப்ப எதுக்கு இப்படி கொசுவர்த்தி சுருளை பத்த வைக்கிறேன்னு கேட்டீங்கன்னா, ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் டவுன் பஸ்ல ஏறினதுல வந்த வினைங்க இது. அதுவும் அதே மாதிரி பள்ளிக்கூடம் போற நேரத்துல, காலங்காத்தால நிரம்பி வழியுற கூட்டத்துல, அதே 14ம் நம்பர் பஸ்ல ஏறினா, அப்புறம் இப்படித்தான் கொசுவர்த்தி சுருள் நம்மள அறியாம பத்திக்குது. அப்பவிட இப்ப கொஞ்சம் கூட்டம் ஜாஸ்த்தி, யூனிபார்ம் போட்ட பசங்க கூட இப்பவெல்லாம் காலேஜ் பசங்க கூட்டமும் சேர்ந்திருக்கு. அப்ப நம்ம போகும்போது அந்த ரூட்ல ஒரு காலேஜும் கிடையாது, இப்ப ரெண்டு காலேஜ் வந்திருச்சுங்க், அதுனால பாவம் பள்ளிக்கூட பசங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கறாங்க போல.

'இத்துனூன்டு ஈக்குமார் குச்சி மாதிரி இருக்கானுக ஆனா படிய விட்டு மேல வர்றனுகளா பாரு, படிக்கிற பசங்களா இவனுக எல்லாம்'ன்னு புலம்பற பெருசு. 'உள்ளார ஏறி வாங்கடா, இவனுகளுக்கு கவர்மென்ட்ல பாஸை வேற குடுத்திடறாங்க, கூட்டமா ஏறி நம்ம உயிரை வாங்கிறானுக'ன்னு புலம்பற கண்டக்டர், கொஞ்சூன்டு மீசை எட்டி பார்க்கிற கதாநாயகனுக முன்பக்கம் ஏறி ஜன்னலோர மைனாக்க கிட்ட 'இந்த பேக்கை கொஞ்சம் வச்சுக்கோங்க'ன்னு குடுத்துட்டு ஒத்தக்கை ஒத்தகால்ல படியில நின்னுகிட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யிறது.. கொஞ்சம் தள்ளி உக்காந்திருக்கிற/நிக்கிற டீச்சருகள ஒர கண்ணுல பார்த்துகிட்டே, படியில தொங்கிற 'சிங்கங்க'ல கவனிக்கற யூனிபார்ம் போட்ட ரெட்ட ஜடைக, இந்த கூட்டத்தை கொஞ்சம் ஏக்கத்தோட பார்த்துகிட்டு அவங்களுக்குள்ளார சிரிச்சுகிற மில்லுக்கு போற மைனர்க, என்ன இப்பெல்லாம் மில்லுக்கு போற பசங்க எல்லாம் முன்ன மாதிரி லுங்கிவேட்டியும் தூக்குசட்டியுமா போறதில்லைங்க, ஜம்முன்னு சாயம்போன ஜீன்ஸ் போட்டுகிட்டு, தோள்ல தொங்கிற 'ஷோல்டர் பேக்'குமா போறாங்க. (அதுக்குள்ளாரதான் லுங்கியும் அழுக்கு சட்டையும் வச்சிருக்காங்க). திருமண திட்டத்துல மில்லுக்கு போற மைனாக்கூட்டத்தை எல்லாம் வேன் வச்சு கூட்டிட்டு போயிடறாங்களாம், அதுனால பஸ் பூராவும் படிக்கப்போற மைனாக்கூட்டமாத்தான் இருக்கு. ம்ஹும் எதுவும் பெருசா மாறலைங்க, அப்படியே தான் இருக்குது.. 14ம் நம்பர் பஸ் கண்டக்டர் கூட மாறலை, அதே எத்துபல்லு ஆறுமுகண்ணன்.. 'என்ன கண்ணு, பார்த்து ரொம்ப வருஷமாச்சு, நல்லா இருக்கியா?', நான் இடம் சொல்லாமயே சரியா டிக்கட் கிழிச்சு குடுக்கறாரு, தலையெல்லாம் நரைச்சிருச்சு. 'இருக்கிறனுங்க்ண்ணா' சரியான சில்லரைய குடுத்துட்டு மையமா சிரிச்சு வச்சேன்.

நம்ம இறங்கிற இடம் வந்ததும் படியுல நிக்கிற ஈக்குமார்குச்சிகள விலக்கிட்டு தக்கிமுக்கி இறங்கி வூட்ட பார்த்து நடக்கும் போது மனசுகுள்ளார ஒரு கேள்விங்க, 'இத்தனை வருஷமா இதே ரூட்ல ஓடுறாரு, எத்தனை பசங்கள பார்த்திருப்பாரு, அத்தனை பேரையுமா ஞாபகம் வச்சிருப்பாரு ஆறுமுக அண்ணன்...?'


--
#195


(முன்னாடி போட்ட பதிவை ப்ளாகர் சாப்பிட்டுட்டாரு, அதுனால மறுபடியும்.. விடமாட்டமில்ல :) )

Monday, July 31, 2006

நான் ஒரே பிஸி

' நாலு நாள் காய்ச்சல் வந்து படுத்திட்டினா, அப்புறம் தலைய கூட அசைக்க முடியாது'ன்னு உல்லாசம் படத்துல ஒரு வசனம் வரும்ங்க, பாலகுமாரன்னு ஞாபகம். அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் தயாரிப்புல ஜெடி-ஜெர்ரி இயக்கத்துல வந்த படம்ங்க.. இந்த ஓ போடுற சமாச்சாரத்தை தமிழகம் முச்சூடுக்கும் கொண்டு போய் சேர்த்த படம். அஜித் விக்ரம்'ன்னு ரெண்டு சூப்பர் பரசனாலிட்டிக, அருமையான பாட்டுக, பாலகுமாரன் வசனம், ரகுவரனோட கலக்கல், அருமையான படப்பிடிப்பு எல்லாம் இருந்தும் வெற்றிகரமா தோத்துபோன படம். சரி.. சரி.. நான் சொல்ல வந்தது படத்தை பத்தியில்லைங்க.. அந்த காய்ச்சல் பத்தி.

முழுசா ஆறு வருஷம் ஆச்சுங்க, டாக்டர் கிட்ட போயி மருந்து மாத்திரைன்னு வாங்கி சாப்பிட்டு. இடையில அப்பப்போ எட்டி பார்க்கிற சின்ன சின்ன ஜலதோஷத்துக்கு எல்லாம் குருமிளகு இல்லாட்டி மண்டைன்னே ஒதுங்கிடறது தாங்க வழக்கம். இடையில அந்த பயணக்குறிப்பு (1, 2) சம்பவத்துக்கு கூட மருந்தெல்லாம் வேண்டாங்கன்னு எங்க டாக்டர் கிட்ட பிடிவாதம் புடிச்சு ஒரே நாள் மருநதோட தப்பிச்சவன்ங்க நான். ஆனா, இப்போ ஆறு நாளா எதோ ஒரு வைரஸ் காய்ச்சலாம் ஒன்னுஞ்சாப்பிட முடியாம, வெறுப்போட ரொட்டியும் பாலும் சாப்பிட்டுட்டு நேரத்துக்கு ரெண்டு மூணு'ன்னு ஆன்ட்டிபயாடிக் எடுத்துகிட்டு, இப்பத்தான் ஒரளவுக்கு தேறி வந்திருக்கனுங்க.

வீட்டுல அய்யன், அமுச்சி, அம்மான்னு எல்லாரும் ஒரு வாரம் முறை வச்சு காய்ச்சல்ல படுத்து எந்திருச்சாச்சுங்க, அவுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் சிக்குனியா வைரஸ், நமக்கு சாதாரண வைரஸ்சாம்..

இந்த காய்ச்சல் சமாச்சரம் கூட பரவாயில்லைங்க, ஒரு வழியா சரியாபோச்சு, என்ன இன்னும் ஒரு நாலஞ்சு நாளைக்கு இந்த ஆன்ட்டிபயாட்டிக் எல்லாம் சாப்பிட்ட கிறக்கம் இருக்கும். அது தாண்டுனா சரியாபோகும்னு வச்சுக்கோங்க.. இந்த காய்ச்சல தொடர்ந்தாப்புல இலவச இணைப்பு மாதிரி வர்ற வில்லங்கம் இருக்குது பாருங்க, அது தான் பெரிய இம்சைய குடுக்கும் போல இருக்குதுங்க

குலதெய்வம் கோயல்ல ஒண்ணா போய் பொங்க வைக்கனும், ஆடி முடியறதுகுள்ளார மீன்குளத்தி பகவதியம்மன் கோயிலுக்கு ஒரு வாட்டி போகனும்'ன்னு எங்கம்மா என்னோட அடுத்த மூணு நாலு வாரக்கடைசிக்கான பயண ஏற்ப்பாட்டுல இறங்கிட்டாங்க.

சரி இது எப்பவும் நடக்கிற கதை தான, சரி சரின்னு தலையாட்டிட்டு கடைசி நேரத்துல வழக்கம் போல 'அவனவனுக்கு ஆயிரம் வேலை, இதுல நீங்க வேற'ன்னு சொல்லிட்டு தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சா, வில்லங்கம் வேற பக்கத்துல இருந்து வருதுங்க.

"ம்ம்.. கண்ணு பட்டிருச்சு, அன்னைக்கே சொல்லனும்னு நினைச்சனுங்க, மாப்ள'ய இந்த கருப்பு கலர்ல துணிமணியெல்லாம் போட வேண்டாம்னு சொல்லுங்க, கருப்பு நமக்கு ஆகாத கலருங்க, சும்மாவா சொல்லிவச்சிருக்காங்க பெரியவங்க", "அங்க பக்கத்துல கோயில் எல்லாம் இருக்குதுங்களா, விசாழக்கிழமை விசாழக்கிழமை ஒரு நாலு வாரத்துக்கு போயி விளக்கு வைங்க"ன்னு ஆரம்பிச்சு சும்மா டஜன் கணக்குல நம்ம பழக்க வழக்கத்துக்கு ஆகாத விசயமா கொட்றாங்க... நான் வச்சிருக்கிறதுல பாதி துணிமணி கருப்பு தான், முன்னயாவது வெள்ளிக்கிழமை வெள்ளிகிழமை கோயிலுக்கு போயிட்டிருந்தோம், அதுவும் இப்பெல்லாம் இல்லை, நம்மள போயி வாரவாரம் கோயிலுக்கு போயி விளக்கெல்லாம் வைக்க சொல்றாங்க.. அய்யா சாமிகளா, என்னை விட்ருங்கய்யான்னு கதறனும் போல இருக்குதுங்க, ம்ம்.. இதெல்லாம் எங்க போயி முடியுமோ..

எல்லாத்தையும் நல்ல புள்ளையாட்டம் சரி சரி'ன்னு வழக்கம் போல இந்த காதுல கேட்டு அந்த காதுல விட்டுட்டே இருக்கேன்.

ராத்திரியில நந்தினி பாக்கெட் வாங்கிட்டு வூட்டுக்கு போனா பசங்க ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்குறானுக.. நான் என்னமோ புதுசா இப்போ யாரோ சொல்லி இதெல்லாம் செய்யிற மாதிரி, உடம்பு கொஞ்சம் வீக்காயிடுச்சேன்னு தான்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறானுக.. ம்ம்.. உலகம் இப்படித்தான் என்னத்த செய்ய..

அப்புறம், 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கு நடுமனையில வை' ங்கிற கதையா, இந்த வருத்தப்படாத வாலிப சங்கத்துல இருந்து நம்மள ஆகஸ்ட் மாச அட்லாஸ் வாலிபர்ன்னு தட்டி வச்சிட்டாங்க.. இனி அந்த பொறுப்பை வேற தூக்கி சுமக்கனும்.. ம்ம்.. இதுக்கு நடுவால இந்த கிணத்தூர் எம்எலஏ வேற. ஒரெ நச்சு நச்சுன்னு தொந்திரவு பண்ணிகிட்டு, எதோ அவன் வீட்டு கல்யாணமாம், அவனாலயே முடியலைன்னு எங்கிட்ட வந்து சொல்லிட்டு.. டேய் நாராயணா, நான் ஒரே பிஸிடா..

--
#194

Wednesday, July 19, 2006

இன்று

கண்களுக்குள் வெதுவெதுப்பாக சூடு பறவுகிறது
மனது எதோ இருப்பில்லாமல கொஞ்சம் மிதப்பாக சுற்றுகிறது

ஒரு நாளைக்கு இரண்டு என்று உத்திரவாதத்தை
வழக்கம் போல இல்லாமல் இன்று மதிக்க தோன்றுகிறது

நேரம் ஆக ஆக,
உடம்புக்குள் எதோ புகுந்துவிட்டதை போல நடுக்கம்
அக்வாஃபினா கூட ஏனோ கசப்பாக உள்ளே இறங்குகிறது


'டேய் கொதிக்குது, இங்க ஏ.சி'யில உக்காந்து என்னடா செய்யுற, வூட்டுக்கு போ'
எத்தேசையாக தொட்டு பார்த்த சகா சொன்னதும் தான் புரிந்தது

இது 'காய்ச்சல்'. ;)
ஒரு டோலொ சாப்பிட்டு தூங்கனும்.. :(


---
#193

Wednesday, July 12, 2006

பாதுகாப்பு

உலகம் நொம்ப கெட்டுபோச்சுங்க, எங்க பார்த்தாலும் ஒரே கேப்மாரித்தனமா இருக்குங்க, 'இங்க எவனுக்கும் எதுக்கும் பாதுகாப்பு இல்லை'ன்னு குருதிப்புனல் கமல் மாதிரி கீச்சுன்னு கத்ததோணுதுங்க.
(ச்சே, சனிக்கிழமை சும்மாயிருக்காம 17 வது முறையா 'குருதிப்புனல்' பார்த்தது தப்பா போச்சு, எதுக்கெடுத்தாலும் அந்த பட வசனமே வருது)

ஒரு மனுசன் எவ்ளோ தான் பாதுகாப்பா இருக்க முடியும் சொல்லுங்க.. அட கோயிலுக்கு போயி நிம்மதியா சாமி கும்பிடலாம்னு வெளிய விட்டிருக்கிற செருப்பை எவனும் அடிச்சுட்டு போயிடாம இருக்கனும்ங்கிறது தான் முத வேண்டுதலா இருக்குது நிறையா பேருக்கு. இது பத்தி எங்கயோ எப்பவோ ஒரு 'ஹைக்கூ' படிச்சதா நினப்பு.. எங்க எப்ப என்னன்னு ஞாபகம் இல்லை.. மனசுகுள்ளார இருக்கிறத யாரு வந்து லவட்டிட்டு போறாங்கன்னு தெரியலை..

ஆனா, இங்க பாருங்க ஒருத்தர், வெளிய விடுற செருப்புக்கு எவ்ளோ பாதுகாப்பு வச்சிருக்காருன்னு..


நம்மாளுக எப்பவும் இந்த மாதிரி விசயத்துல எல்லாம் கெட்டிதான். :)


--
#192

Tuesday, July 11, 2006

அசிரீரி

அவன் பாட்டுக்கு மனசுகுள்ளார 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'ன்னு எஸ்.பி.பி. அளவுக்கு இல்லைன்னாலும், எதோ அவனுக்கு புடிச்ச மாதிரி சங்கதி எல்லாம் மாத்தி போட்டு பாடினபடியே சுத்திமுத்தியும் வேடிக்கை பார்த்துகிட்டு வீதியில போயிட்டிருந்தானுங்க, யாருடா அவன்'ங்கரீங்களா, அதெல்லாம் எதுக்குங்க, நம்ம பய, இது போதாதா.. சரி.. சரி கதைக்கு வாங்க.

அப்படியே போயிட்டிருந்த பயலுக்கு திடீர்ன்னு எங்கிருந்தோ ஒரு குரல் 'நில்லு! இன்னொரு அடி முன்னாடி எடுத்துவைக்காத, வச்சியன்னா மேல இருந்து ஒரு விளம்பர பலகை உன் மண்டை மேல விழுந்திரும்'ன்னு. என்னடா இது சத்தம்ன்னு அவனும் சுத்தியும் பார்க்கிறானுங்க, ஒருத்தரையும் பக்கத்துல காணோம், நேத்து ராத்திரி சாப்ட்ட 'சிம்ரனாஃப்' தாக்கமா இல்லை நிசமாலுமே இந்த அசிரீரிம்பாங்களே அந்த மாதிரி எதாவதா இல்லாங்காட்டி இந்த வடிவேலுவை கலாய்க்கிற பார்த்திபன் மாதிரி எவனாவது 'நம்மள வச்சு காமெடி கீமெடி செய்யுறானான்னு' ஒரு டவுட்டுல அப்படியே நின்னு யோசிக்கறவன் விருக்குன்னு துள்ற மாதிரி 'டமால்'ன்னு அவனுக்கு ஒரு ரெண்டுஅடி முன்னால அந்த யானை விலைக்கு விக்குற காத்தடைச்ச புளிச்ச சிப்ஸை கையில வச்சபடி சாயிஃப் அலிகான் தலைகீழா கிடக்கறாரு.

'ஆஹா.. இதென்னடா வம்பாபோச்சு, நல்ல வேளை அந்த குரலை அலட்ச்சியப்படுத்தாம நின்னோம், இல்லாங்காட்டி அத்தச்சோடு பலகை தலைமேல விழுந்து, இவன் மண்டைக்குள்ளார ஒன்னுமில்லைங்கிற ரகசியத்தை இந்நேரம் இந்த ஊரு உலகத்துக்கெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்குமே'ன்னு யோசிச்சிகிட்டே விசனத்தோட நடக்க ஆரம்பிச்சான்ங்க.

சும்மாவே நம்ம பய இலக்கியவாதிக கூட்டத்துல மாட்டுன கோயிஞ்சாமி மாதிரி தாங்க இருப்பான், பாவம் நம்மள மாதிரி பயந்த பய பாருங்க, இதுல இப்படி ஒரு 'அசிரீரி' கேட்டதுல ரொம்பவே 'டர்ரி'யாயிட்டான்ங்க. அதே நினப்புல அப்படியே வீதிய தாண்ட போனவன் காதுகுள்ளார, 'நில்லு!' மறுபடியும் அதே குரல். இந்த தடவை எதையும் யோசிக்காம சட்டுன்னு அப்படியே டிஸ்க் ப்ரேக் அடிச்ச புல்லட் மாதிரி டக்குன்னு நின்னுட்டான். எதுக்குடா நின்னோம்னு யோசிக்கும் போதே ஒரு அவன கிட்டத்தட்ட உரசிட்டு போகுது ஒரு புத்தம்புது சான்ட்ரோ. எவனோ சொகுசா கேம்பஸ்ல செலக்ட் ஆகி வந்தவன் ஈ.எம்.ஐ'ல வாங்கினது போல இருக்கு, பின்னாடி கண்ணாடி வழியா பார்த்தா ட்ரைவர் சீட்டுல ரெண்டு தலை தெரியுது, இவனுக அலம்பல் தாங்க முடியலை சாமி.

சரி, அதை விடுங்க அதை பத்தி எல்லாம் கவலைப்பட நம்ம உதை இருக்காரு, நமக்கு எதுக்கு அந்த கிரகமெல்லாம். நம்மாளு சமாச்சாரத்துக்கு வருவோம். நம்ம பயலுக்கு பயங்கிர ஆச்சிரியம் என்னடா இது நமக்கு ஒரு 'ஆபத்து'ன்னா உடனே குரல் கேக்க்து, நமக்கு எதும் 'ஐயர் தி க்ரேட்' மம்முட்டி மாதிரி இந்த இந்த ஈஎஸ்பி'யோ இல்லை யூஎஸ்பி'யோ சொல்லுவாங்களே, அது வந்திருச்சான்னு ஒரு குழப்பம்.

சரி, நமக்கு கேக்குதில்லை, அது மாதிரி நம்ம பேசுனா அதுக்கும் கேக்கும்னு முடிவு பண்ணி 'ஹலோ, யாருங்க அது!'ன்னு ஒரு மாதிரி தைரியமா கேட்டுட்டானுங்க. ஒரே அமைதி ஒரு பதிலையும் காணோம். நம்மாளுக்கு லைட்டா வயித்த கலக்குற மாதிரி ஆயிருச்சுங்க, இருந்தாலும் நம்ம கமல் குருதிப்புனல்'ல சொன்ன மாதிரி 'தைரியம்ங்கிறது பயப்படாத மாதிரி நடிக்கிறது'ங்கிற வேதவாக்கை நினைச்சுகிட்டு மறுபடியும் ஒரு தடவை சத்தமா 'யாருய்யா அது?'ன்னு ஒரு குரல் விட்டான்ங்க.

ஒரு நிமிஷம் ஒரு பதிலும் இல்லை, அப்புறம் பக்கத்துல இந்த விட்டலாச்சாரியர் படத்துல வர்ற மாதிரி காத்துல கலங்கலா ஒரு உருவம், இந்த கேஸ்பரோ ஜாஸ்பரோ சொல்லுவாங்களே அந்த மாதிரி. நம்ம பயலுக்கு இப்ப நிசமாலுமே வயித்த கலக்க ஆரம்பிச்சிருச்சு. அந்த உருவம் அவனை பார்த்து சிரிச்சுகிட்டே 'பயப்படாத, நான் உன் நலம் விரும்பி, உன்னை காப்பாத்துறது தான் என் வேலை, நீ செஞ்ச புண்ணியங்களுக்காக, உன்னோட நல்ல மனசுக்காக ஆண்டவன் என்னை அனுப்பி வச்சிருக்காரு, உனக்கு எதாவது ஒரு ஆபத்துன்னா நான் உடனே வந்து உன்னை காப்பாத்திருவேன்'ன்னு சொல்லுச்சுங்க.


'ஓ! அப்படியா'ன்னு ஆச்சிரியமா கேட்டுகிட்டே இருந்தவன், சட்டுன்னு கோவமாயி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி.. 'ஆமா இந்த மாதிரி சின்ன ஆபத்துக்கெல்லாம் வந்திரு, போன வாரம் எனக்கு கல்யாணம் ஆச்சே அப்ப எங்க போயி தொலைஞ்ச, இப்ப வந்து காப்பாத்துரேன் கீப்பாத்துரேன்னுட்டு'.

நம்ம பய இப்படியெல்லாம் கோவப்படவே மாட்டான், என்னவோ தெரியலைங்க இப்பவெல்லாம் இப்படி ஆயிட்டான்.

---
#191

Friday, July 7, 2006

கனவுக்குள் காவல்



வெந்நீரில் நீ குளிக்க,

விறகாகித் தீக்குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.


விழிமூடும்போதும் உன்னை,
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.

- நா.முத்துகுமார் / காதல் / உனக்கென இருப்பேன்
ராகா 'சுட்டி'



---
#190

Tuesday, July 4, 2006

காற்றினிலே வரும்...


ஜன்னலின் வழியே சுற்றி தவழும் காற்றில்
காதருகே மெலிதாக கேட்கிறது அந்த குரல்.
நான் கண்களை மூடிக்கொண்டதும்
சற்று சுதந்திரமாக, கொஞ்சம் சத்தமாகவே..

இரவும் பகலும் காற்றில் கலந்து
நான் போகுமிடமெல்லாம் பரவுகிறது.
கண்களை மூடிக்கொண்டு காதை திறந்துவைக்கிறேன்
காற்றில் வரும் அந்த குரலை கேட்க.

என் நினைவுகளை புரட்டி போட்டு,
அனுமதியின்றி இதயத்தில் நுழைந்து
என் எண்ணங்களை அள்ளிச்சென்ற பின்னும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது காதருகில் வீசும் காற்றில்.

நடுச்சாமத்தை நெருங்குகையில்
தென்றலாய் என்னை அமைதிப்படுத்திவிட்டு
சட்டென்று காதருகே ஒலித்துவிட்டு போகிறது..
'உடனே போகனுமா..?' ... காற்றில் அதே குரல்

மீண்டும் ஒரு தென்றலுக்காக காத்திருக்கிறேன்..
ஜன்னலருகிலேயே!

pic: http://www.bastet.it/

--
#189

Tuesday, June 27, 2006

டைமிங்

தலைவர் வாழ்க..!


**********************

ஏங்க பாட்டிமா, இவ்ளோ வயசாகி, இன்னுமா நீங்க பேச கத்துகல..

அதுக்கு பேச வராதுங்க..

அப்ப, பாடுமா?

அட அது ஊமைங்க..


**********************

இதுக்கு பேரு தான் டைமிங் ..

'சும்மா, கோமுட்டி தலையா..ன்னு கத்திட்டு காலை தூக்கிட்டு உதைச்சா அது காமெடியா'ன்னு கேக்கும் 'அறிவாளிகளுக்காக..

:)


படம் : ப்ரம்மா

--
#188

Monday, June 26, 2006

தலைப்புசெய்திகள் ஆறு


முன்ன ஒரு நா இப்படித்தான் நான் நாலு நாலு'ன்னு நாலு பேர இழுத்துவிட்டேன்.. அது அப்படியே ஒரு சுத்து சுத்தி ஓஞ்சு.. இப்ப அடுத்து இது.. ஆரு ஆரம்பிச்சு வச்சதுன்னு தெரியலைங்க, ஊருகுள்ளார எல்லாரு 'ஆறு, ஆறா' போட்டு தள்ளுறாங்க, நம்மளையும் புடிச்சு, சிறியபார்வை 'நரியா' தள்ளிவிட்டுட்டாருங்க..
நம்மளது பேரு ராசபார்வை, அவரோட பதிவு பேரு சிறியபார்வை.. ரெண்டுலயும் பார்வை இருக்குதேன்னு பாசமா நம்மளையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்க சொல்லிட்டாரு போல இருக்குதுங்க..
அப்புறம் நம்ம்ளும் என்னத்தை எழுதறதுன்னு மண்டைய ஒடச்சுகிட்டு இருக்கும் போது, யாராவது ஒரு தலைப்ப குடுத்தா வுட்ருவமா என்ன :)


ஆளாளுக்கு விதவிதமா ஆறு போட்டிருக்காங்க.. நம்ம பங்குக்கு நம்மளும் எதாச்சும் வித்தியாசமா போடனுமே.. அதுனால 1.1.2010'ல வரப்போற 'தினப்பார்வை'யில இருந்து ஒரு 'ஆறு' முக்கியமான தலைப்பு செய்திகள் மட்டும், உங்களுக்காக ஸ்பெஷலா இங்க--

******************************************
தலைப்புசெய்திகள்
தினப்பார்வை
1.1.2010

1. ஆறு நாள் சுற்றுபயணமாக டெல்லி வந்தார் 'இத்தாலி' பிரதமர் - ஜனாதிபதி 'சோனியாகாந்தி', பிரதமர் 'ராகுல்காந்தி' ஆகியோர் வரவேற்ப்பு.

2. முதலமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் - க.தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் கோரிக்கை.

3. இதுவே எனது கடைசி திரைப்படம் - புதுப்பட பாடல் வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூசகம்.

4. தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு நிச்சயம் ஒரு நாள் மருதநாயகம் வரும் - இணையதள பேட்டியில் கலைஞானி கமல்ஹாசன் உறுதி.

5. எனக்கான இடம் இன்னும் அணியில் காலியாகத்தான் உள்ளது, விரைவில் நான் அணியில் இடம் பிடிப்பேன் - முன்னால் இந்தியா கேப்டன் தாதா கங்குலி நம்பிக்கை.

6. வரும் மே 1 'தல'யின் பிறந்தநாள் அன்று 'காட்ஃபாதர்' திரைக்கு வரும் - ரசிகர்கள் மகிழ்ச்சி.


******************************************

நாமளும் ஒரு 'ஆறு' பேரை இழுத்து விடனுமாம்.. இல்லாங்காட்டி சாதரண குத்தமில்லைங்க.. ஸ்பெஷல் தெய்வகுத்தமாயிடுமாம், பயங்காட்டுறாங்க.. நாங்கெல்லாம் 'மாரியாத்தா கண்ணை குத்திரும், ஒழுங்கா ஹார்லிக்ஸ் குடி'ன்னு மிரட்டுன காலத்துலயே, அப்படியே கொஞ்சமா வாயுல அடக்கி வச்சிருந்துட்டு, டக்குன்னு சின்ன கேப்புல சோபா கிழிச்சல விலக்கி துப்பி, அரைடவுசர அரணாகயித்துல கட்டிட்டு சுத்துற காலத்துலயே மாரியாத்தாவ ஏமாத்துன ஆளுக, இதுக்கெல்லாம் பயந்துருவமா என்ன?
இருந்தாலும் ஆசைபட்டு கேட்டிருக்காங்க.. அதுக்கா கூப்பிடலாம்னு பார்த்தா, யாரும் மிச்சமிருக்கிற மாதிரியே தெரியலைங்க, நமக்கு தெரிஞ்ச வரைக்கும் மிச்சம் இருக்கிற ஆளுகல கூப்பிட்டிருவோம்னு.. ஒரு லிஸ்ட்

1.உதை
2.இளா
3.வித்யா
4.விட்ச்சி
5.கண்ணன்
6.ச்சிப்பர்

யப்பா.. பேரை காப்பாத்துங்கப்பா ;)

--
#187

நன்றி x 24


1. நன்றி
2. நன்றி
3. நன்றி
4. நன்றி
5. நன்றி
6. நன்றி
7. நன்றி
8. நன்றி
9. நன்றி
10. நன்றி
11. நன்றி
12. நன்றி
13. நன்றி
14. நன்றி
15. நன்றி
16. நன்றி
17. நன்றி
18. நன்றி
19. நன்றி
20. நன்றி
21. நன்றி
22. நன்றி
23. நன்றி
24. நன்றி

விவரமா தெரியனும்னா -- > [இங்கே]


June 06 Thenkoodu TamilOviam Contest Fourth Prize Winner


--
#186

Friday, June 16, 2006

சிலகேள்விகள்.

கேள்வி கேட்டா அறிவு விருத்தியாகும்னு சொல்லி வளத்திட்டாங்க போல, நம்மாளுக கேள்வி கேட்டா, அவங்களுக்கு அறிவு விருத்தியாகுதோ இல்லையோ, அதை காது குடுத்து கேக்கிறவங்க அறிவு ஒரு வழியாரும் போல இருக்குங்க..
என்னன்ன கேள்வி கேக்குறாங்க.. ஸ்ஸ்ஸ் அப்பாஆஅ...

இதோ, இங்க உங்க பார்வைக்கு சில சுவாரசியமான கேள்விகள்.


  • கோழி போட்ட முட்டையிலைருந்து கோழி வரும், வாத்து போட்ட முட்டையில இருந்து வாத்து வரும், ஆனா, வாத்தியார் போட்ட முட்டையில இருந்து வாத்தியார் வருவாரா?

  • தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டுனா வலிக்குமா?

  • நாய்க்கு நாலு கால் இருக்கலாம், அதுக்காக அது லோக்கல் கால், எஸ்.டி.டி. கால் என்ன ஒரு மிஸ்டு காலாவது நமக்கு குடுக்க முடியுமா?

  • மீன் புடிக்கறவன மீனவன் சொல்லலாம், அதுக்காக நாய் புடிக்கறவன நாய்-அவன்னு சொல்ல முடியுமா?

  • என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், ஒரு அவசரத்துக்கு அவன துப்பாக்கியில போட்டு சுட முடியுமா?

  • திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம், அதுக்காக அவரால அத்தனை குரல்ல பேச முடியுமா?

(அய்யா.. பொதுஜனங்களே.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் என்னைக்கும் ஆளாகவே மாட்டேன்.. ஏதும் திட்டுறதா இருந்தா, சந்தோஷமா திட்டுங்க, அது அத்தனையும், இதை ஒரு சமாச்சாரம்னு, 'முக்கியமான கேள்விகள்'ன்னு தலைப்பு போட்டு அனுப்புன என் சகா 'பாஸு'க்கு அனுப்பி வச்சிடுறேன்..)


img : http://www.puzzlepress.co.uk/

--
#185

Monday, June 12, 2006

மாறித்தான் ஆகனுமா?

'நீதான்டா எப்படியாவது சொல்லனும், மத்தவங்களை எல்லாம் கேக்க முடியாது'ன்னு கெஞ்சலா கேட்ட பாபுக்காக, 'நான் முடிச்சு குடுக்கறேன்'னு பந்தாவா சொல்லிட்டு, பஸ்ல கோயமுத்தூர்ல இருந்து பொள்ளாச்சி வர்ற வரைக்கும், 'இரு சிட்கோ கேட் தாண்டட்டும், கிணத்துகிடவு வரட்டும், முள்ளுபாடி கேட் தாண்டட்டும்னு' உள்ளார நடுங்கிட்டு வெளிய மிதப்பா உக்காந்திருந்ததா நினைச்சுட்டு இருந்த என்னை பொள்ளாச்சி பஸ்ஸ்டான்ட்ல எறங்கினதும் 'என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே, பாபு எதாவது கேக்க சொன்னானா?'ன்னு நிதானமா சுகன்யா கேட்ட அன்னைக்குத்தான் இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரத்தை நிஜத்துல கிட்டக்க பார்த்ததுங்க.

எப்பவுமே சாயம் போன கலர்ல சட்டையும், ப்ரவுன் கலர் முழுக்கால் டரவுசருமே போட்டுகிட்டு திரிஞ்சவன், திடீர்ன்னு க்ராஸ்கட் ரோடெல்லாம் சுத்தி டீ-ஷர்ட்'ம் ஜீன்ஸ் பேண்ட், ஆக்க்ஷன் ஷு'னு வாங்கினப்ப கூட பெருசா உறைக்கலைங்க, ஆனா, காலங்காத்தால அஞ்சரை மணிக்கு சைக்கிள் மிதிச்சுட்டு வந்து மூச்சு வாங்க எங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு 'ராசு, எல்லாம் வாங்கினோம், ஆனா சாக்ஸ் வாங்காம வந்துட்டோம், உன் சாக்ஸ் ஒன்னு குடு'ன்னு கேட்டு வாங்கிட்டு போறவனுக்கு ரகசியமா கட்டைவிரல் காட்டி அனுப்புனேன் பாருங்க அன்னைக்குத்தான், இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரம் நம்மள ரொம்ப நெருங்கி வந்து போனது.

இந்த பொதுசேவை'களுக்கு அப்புறம், பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்ங்கிற மாதிரி நானும் 'தொடதொட மலர்ந்ததென்ன' கேட்டு கண்மூடி உக்காந்த நேரம், 'நாம பெரிய ஆளாயிட்டோம்னு' தோணுச்சுங்க..

அப்புறம் சட்டுன்னு ஒரு நாள் 'நீ கண்டிப்பா இஞ்சினியர் ஆகி, இந்த உலகத்துக்கு சேவை செய்யனும்னு' ஊரை விட்டு தள்ளி கொண்டுபோயி உக்காரவச்சிருச்சுங்க விதி. அங்க போன பின்னாடி 'கண்மூடி' உக்கார வழக்கம் எல்லாம் 'சின்னபுள்ளதனமா' போயி, கழட்டி விட்ட மேல் பட்டனும், துவைக்காத ஜீன்ஸும் சாக்ஸ் போடாத பவர்ஷூவுமா, நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும் மறுகையில ராஜா'வுமா உக்காந்து பண்னாட்டு பண்ணிட்டு இருந்தகாலம் அது. கண்மூடி ஆகாசத்துல பறக்கிறவன லைட்டா உசுப்பேத்தி, அவன் காசுலயே சிந்தாமனி, ராஜம்னு நோம்பி கொண்டாடிட்டு, அப்புறம் சாவுகாசமா ஹாஸ்டலுக்கு வந்து 'இந்த மாதிரி எத்தனைய பார்த்திருக்கேன் போய் பொழப்பா பாருங்கடா டேய்'ன்னு உதாரா சொல்லிகிட்டு இருந்தேன்.

எவனோ திமிருக்கு செஞ்ச ப்ரச்சனைக்காக, வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ, 'பங்கு, ப்ரின்சி பேசிக்கலாம்னு கூப்புடறாரு, நீயும், செல்லானும் போங்க, அது தான் சரிவரும்'ன்னு சொல்லி மொத்த கூட்டத்தையும் விலக்கிட்டு 'ஹோ'ன்னு இரைச்சலுக்கு நடுவால படியேத்தி விட்டப்போ, கண்மூடி ஆகசத்தை பார்க்கிறவங்கள பார்த்து 'நாம அதெல்லாம் தாண்டி வந்துட்டோம்னு' தோனுச்சுங்க.

'டேய், வாழ்க்கை போயிரும்டா, பர்ஸ்ட் க்ளாஸ் கூட வாங்கலைன்னா எப்படி?'ன்னு HOD கூப்பிட்டு, டீ வாங்கி குடுத்து, உக்காரவச்சு பேசினதுல, ஒரு பதினைஞ்சு நாள் முன்னாடியே புஸ்தகத்தை எல்லாம் தேடி எடுத்து, மிச்சமிருந்த மூனு பேப்பரையும் முடிச்சு, எப்பவும் முதல் மார்க் வாங்கற 'காக்ஸ' கடுப்படிச்சு, பர்ஸ்ட்கிளாஸ தொட்டு பார்த்ததுட்டு. ரத்தகட்டும் சஸ்பென்ஷனுமா போயி நின்னப்போ நடந்தத நினைச்சுகிட்டே எங்கய்யன் கிட்ட கொண்டு போயி ஆர்டரை காட்டிட்டு , விழுந்து விழுந்து படிச்சவெனெல்லாம் அப்ரன்டீசா இருக்க, நாம டயர் கம்பெனியில ப்ரடொக்க்ஷன்ல பெருமையா சேர்ந்து, ராத்திரி ஷிப்டுல மலையாள சேட்டங்கிட்ட கத்திரியோட உலகநிகழ்வுகள், நவீனம், சிவப்புகொடின்னு பேசும் போது 'இப்பத்தான் நிசமாவே தாண்டியிருக்கோம்'னு தோனுச்சுங்க..

அப்புறம் சென்னைப்பட்டணதுக்கு வாழ்க்கை பட்டு போயி, சால்ட் பிஸ்கட்டும் டீயும் அடிச்சுட்டு, தினம் தினம் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வீதியெல்லாம் சுத்தி, எப்படியோ 'சாஃப்டா'ன ஆளா மாறி, அதுவரைக்கும் போடாத ப்ளைன் சர்ட்டெல்லாம் போட்டு டக் பண்ணி, ஆகசத்துல பார்த்த ப்ளைட்டெல்லாம் உள்ள போயி பார்த்து, கன்ஸ் அன் பேரல்ஸ்'ல பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துட்டு, சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு, சந்தோஷமா அவ ரிசப்சனுக்கு போயி போட்டாவுக்கு நின்னு, ஈசிஆர்'ல 100 -110 எல்லாம் சாதரணா தொட்டு, நீலாங்கரை தாண்டி கடல் மணல்ல படுத்துகிட்டு 'மண்டை' எபக்ட்டுல, 'வாழ்க்கை எப்படி மாறுது பார்த்தியா?'ன்னு ஆரம்பிச்சு நான் கோர்வையா பேசுறத வாயத்திறந்து பார்த்துகிட்டு இருந்த சகா'க்க மத்தியில 'நாம ரொம்ப தூரம் தாண்டி வந்துட்டோம்'னு தோனுச்சுங்க.

'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும், 'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும், 'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா?'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும், 'ஏங்கண்ணு சித்தப்பா ஒரு ஜாதகம் சொல்றாரு'ன்னு சாப்பாட்டுக்கு மத்தியில மெதுவா எங்கம்மா ஆரம்பிக்கும் போதும், 'திஸ் ஈஸ் நாட் தி பைனல், யூ ஹாவ் டூ ப்ரூவ் மோர்'னு கோட்டு போட்ட பெருசு கைகுடுத்து பாராட்ட, கூட இருந்தவன் எல்லம் கைதட்டும் போதும், 'துரை, சாப்பாடு வச்சிருட்டுமா, சீக்கிரம் வந்துருவயா? லேட்டான கேப் புடிச்சு வா, டூ வீலர் வேண்டாம்'ன்னு நம்ம சகாவுக்கு போன் போட்டு பொறுப்பா பேசிட்டு, ராத்திரியில குக்கர் வைக்கும் போதும் கூட மறுபடியும் தோணுச்சுங்க.. 'நாம அதெல்லாம் தாண்டிட்டோம்'னு.

வாரக்கடைசியில, நம்ம இடுப்பு அளவு உசரம் இருக்கிற பசங்கள கூட்டிட்டு 'அதெல்லாம் இல்ல சிக்ஸ்தான் அது'ன்னு தெரியாத மொழியில அரைகுறையா பேசி சண்டைபுடிச்சுட்டு இருக்கும் போதும், எல்லாரும் ரொம்ப சுவாரசியமா படம் பார்க்கையில 'ஜீசஸோட பேத்தி நீதான்னு' நம்ம ஹீரோ சொல்லும் போது, 'இன்னுமா இந்த ஊரு உன்னை நம்புது'ன்னு கைபுள்ள கணக்கா சவுண்ட் விட்டு, மொத்த தியேட்டரும் அரை நிமிஷம் சிரிக்கும்போதும், பக்கத்து மாடியில இருக்கிற பொண்ணுக மொட்டைமாடிக்கு போகுற நேரம் பார்த்து நாமளும் மொட்டைமாடிக்கு புஸ்தகமும் ராஜா'வுமா போகலாம்ங்கிற போது தாங்க தோணுது.. 'அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..!'ன்னு.

ஒரு வேளை இதையும் தாண்டி போவமோ என்னமோ, ஆனா அதுக்கெல்லாம் விருப்பமில்லைங்க..

'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :).



சமர்பணம் : வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.

(என்ன்டா புலம்பியிருக்கான்னு புரியாதவங்களுக்கு.. இங்க பாருங்க.. சும்மா ஒரு ஆசை.. ஹி.ஹி.. )


---
#184