Wednesday, December 19, 2007

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!


இன்றும் உன்னை மனதார விரும்புகிறேன்..
சிலநேரங்களில்...
உன்னுடன் சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பது எப்படி இருந்திருக்குமென்று எண்ணி வியக்கிறேன்.

ஒரு முறை ஒரே முறை 'நீ'யும் 'நானு'ம் என்பதை விட்டு மனம்திறந்து பேசியிருக்கலாம்.
ஆனால்,
நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த வெறுப்பு அதை செய்ய விடவில்லை.
இளரத்தம்.. கொஞ்சம் முரடனாய்தான் இருந்தேன்.
இன்னும் அந்த மிச்சம் இருக்கிறது.

என்னை முழுவதுமாக உன்னிடம் கொடுத்தேன், உன் அன்பினால் என்னை பாதுகாப்பாய் என்று,
உன்னை நம்பியதற்க்காக வருத்தபட வைத்தாய்,
கண நேரத்தில்
நம் வாழ்க்கையை சிக்கலாக்கினாய்.

நீயும் உன் அம்மாவும் நலம் என்று அறிந்தேன்.. யாரோ சொன்னார்கள்,
நீ மிகவும் சந்தோசமாக நல்ல வேலையில நல்ல முறையில் இருப்பதாக.
எனக்கு இன்னும் சந்தேகமுண்டு,
நானில்லாமல் நீ சந்தோசமாக இருப்பாயா என்ன?
தினம் தினம் உன் வாழ்க்கையில் நான் இல்லாமல், தனிமையில்..?

என்னை தவிக்கவிட்டிருக்கிறாய்..
ஓடவிட்டு
அலையவிட்டு,
மனம்குறுகச்செய்து..
நீ எக்காளமிட்டு கொண்டிருப்பாய்..
உள்ளே 'ஆண்பிள்ளை' கொதித்தெழுவான்..வெளியே புன்னகைப்பேன்..
நீ செய்த அத்தனையும் வெறுத்தேன்..
ஆனால்
உன்னை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்று மனதார நினைத்தேன்.

உன் அம்மாவும் நலமாக சந்தோசமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்..
ம்ம்... கண்டிப்பாக இருப்பார்கள்,
நான் உன்னைவிட்டு வெகுதூரம் தள்ளிவந்துவிட்டேனே, அதை தான் அவரும் விரும்பினார்.
உன் அம்மாவுக்காக தான் அத்தனையும் செய்தாய், என்னை நீ என்னை விட அதிகம் விரும்பியபோதும்.
சில நேரம் உனக்காக பரிதாபப்படுகிறேன்.. பாவப்பட்ட ஜென்மம் நீ!
உன்னால் உனக்கு கூட உதவிசெய்ய முடிவதில்லை, அவர்கள் மேல் நீ வைத்திருக்கிற அன்பினால்.

ஒரு நாள் நீ உணர்வாய் என்று நம்புகிறேன்..
நீ என்னை தவிக்கவிட்டதை,
என் வலியை..

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..
மனம்திறந்து நீ மன்னிப்பு கேட்பாய் என்று எண்ணி..
நடக்காத ஒன்று தான்..
இருந்தாலும் காத்திருக்கிறேன்..

அப்புறம் கடைசியாக..

நானும் நலமாக இருக்கிறேனென்று கேள்விபட்டிருப்பாய்..
அது நிஜம் தான்!!

--
வேறொரு 'நட்பு 'ஆங்கிலத்தில் எழுதியதை தழுவி எழுதியது.. !!

Friday, December 7, 2007

காதலிக்க நேரமில்லை


என்னை தேடி காதல் என்ற
.... வாத்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்
.... மொத்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
.... செய்தி அனுப்பு..


என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலை சொல்லுகிற வழி தெரிந்தால்
.... சொல்லியனுப்பு


பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற
.... வாத்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்
.... மொத்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
.... செய்தி அனுப்பு..


பாடல் : தேன்மொழி தாஸ்
இசை : விஜய் ஆண்டனி

Thursday, November 29, 2007

ஆதி தமிழன்

"ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதி தமிழன் அடிமைகள் ஆனான்"

பில்லா படத்துல மலேசியா முருகன் கோயில்ல படமாக்கப்ட்ட "சேவல் கொடி பறக்குதடா.. சேர்ந்து இடி இடிக்குதடா"ங்கிற பாட்டுல (2.20) வர்ற வரி இது..

Friday, November 2, 2007

Tuesday, October 30, 2007

ஜகதி'யின் நவரசம்உதயனானுதாரம் - படத்துல இருந்து ஒரு காட்சி. சமீபத்தில சிவா இந்த படத்தை பத்தி எழுதியிருந்தாரு.

படத்துல சூப்பர்ஸ்டார் ஆகிற ராஜப்பன் (எ) சரோஜ்குமார்'க்கு அவரோடடான்ஸ் மாஸ்டர் கம் மேனேஜர் 'பஷி'யா வர்ற ஜகதி நடிப்பு பத்தி சொல்லிகுடுக்கற மாதிரியான ஒரு காட்சி.. ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஒன்னும் சரியா வரலை.. இன்னைக்கு ஒரு ஃபார்வார்டா இந்த காடசி யூட்யூப்ல கிடைச்சுது. போட்டாச்சி.. :)

நவரசம் கேள்வி பட்டிருப்பீங்க.. இது ஜகதி கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா ரசம்' காட்டியிருப்பாரு.

பி.கு : ஜகதி - கவுண்டமனி'க்கு அப்புறம் நான் அதிகம் விரும்பற காமெடியன்.

Tuesday, October 23, 2007

யாரும் இதை படிக்காதீங்க..!!


இங்க உருப்படியான விஷயம் எதுவும் இல்லீங்க.. அதுனால மேற்கொண்டு இந்த பதிவை படிக்காதீங்க..


அட.. அதுதான் சொல்றனிலலைங்க.. இது ஒன்னும் பெரிய சுவாரசியமான எழுத்தில்லீங்க..யாரும் இதை படிக்கறதுமில்லை, இதை படிக்கனும்னு நினைக்கறதுமில்லீங்க. இதை படிக்கறதுக்காக உங்க பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க..அய்யோ நான் சொல்றத ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கரீங்க, படிக்கதீங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க இன்னும் படிச்சுட்டே இருக்கறீங்க.. எனுங்க, உங்க நேரத்தை இப்படி ஒரு உதவாக்கரை விஷயத்தை படிக்க செலவு செய்யரீங்க?. எப்படி இந்த மாதிரி ஒரு வெட்டியான விஷயத்தை உங்க மனசு ஏத்துக்குது? உங்களுக்கே தெரியலையா, இது வெறும் குழப்பமான, ஆகாவலி விஷயம்ன்னு?..அட போங்க நீங்க ஒன்னும் கேக்குற மாதிரி இல்லை, நான் உங்களுக்காகத்தான் இவ்ளோ சொல்றேன், உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், இதையெல்லாம் படிக்கதீங்க. தயவு செஞ்சு வேண்டாங்க. இது சுத்தமா ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத, ஒரு அர்த்தமும் இல்லாத குப்பை, இதைப்போய் எதுக்கு இப்படி நான் சொல்ல சொல்ல படிக்கறீங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது போங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு விடாம இன்னும் இதை படிச்சுட்டே இருக்கறீங்க.


ஓ!! நீங்க யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ரொம்ப அடம்புடிக்கிர ஆளு போல, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேங்கரீங்க, நான் சொல்றத காதுலயே போட்டுக்க மாட்டீங்க போல??.. இது உன்மையிலயே படு முட்டாள்தனமுங்க, வடிகட்டுன கிறுக்குதனமுங்க..... சரி!!. எப்படியோ போங்க!!.. நான் எதுக்கு என்னோட உருப்படியான நேரத்தை இந்த மாதிரி ஒரு அளுகிட்ட வெட்டியா புத்திசொல்லிட்டு இருக்கனும், அதுவும் நான் சொல்றத கேக்கவே மாட்டேன்னு அடம் புடிக்கற ஆளுகிட்ட நான் எதுக்காக கெஞ்சிட்டு இருக்கனும், அதுனால, இத்தோட சரி, இனி நான் உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்லப்போறதில்ல்.. படிக்கறதுன்னா படிங்க.. உங்க இஷ்டம் அது... ஆனா எனக்காக ஒரே ஒரு சகாயம் மட்டும் செய்யுங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இதை படிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..

இது ஒரு ரிப்பீட்டு மொக்கை :)

Thursday, October 18, 2007

கற்றது தமிழ்

சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி ஐஸ்கட்டிகளுக்கு நடுவால முன்னாடி போட்டத விட சின்ன டவுசர் போடவிட்டு இடுப்புல் இடுப்புல சேர்த்திவச்சு ஒரு குத்தப்போடுறத விட்டுட்டு, இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..

நாலு வயசுல இருந்து தொடைய தட்டி 'சரிகமபத்நி' கத்துகிட்ட தினவுல ராஜா என்னைக்குத்தான் சுதி விலகாம பாடுவாரோன்னு பேசுன நம்ம சகா மூஞ்சிய பார்த்து "நல்ல" வார்த்தையா நறுக்குன்னு சொல்லிட்டு 'பறவையே எங்கு இருக்கிறாய்'ன்னு நாமளும் கண்ண திறந்துட்டே எங்கயோ பறக்கும் போதும் நல்லாத்தான் இருக்கு..

ஆனா, படம் எப்படின்னு கேட்டீங்கன்னு.. 'போடா லூசு'ன்னு தான் சொல்லனும்.

"அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்
பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து :-) ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று."
அப்படின்னு நம்ம ப்ரகாஷ் சொல்றாரு..

எனக்கு தெரிஞ்சு பராசக்தி காலத்துல இருந்து divided society ப்ரச்சனைய பத்தி எடுத்துட்டு தான் இருக்காங்க... இப்போ என்ன புதுசா.??? எதோ ஐடி'னால மட்டும் தான் இப்படிங்கற மாதிரி நிறையா பேரு எழுதறாங்க, பேசறாங்க.. என்னங்க இது அநியாயம்.. மொத்தமா இந்தியாவ எடுத்துகிட்டா.. சரி வேண்டாம், அது பெரிய ஏரியா.. தமிழ்நாட்டை எடுத்திகிட்ட.. சென்னை'ங்கிற ஒரு பெரு நகரத்துல தான் ஐடி மக்கள் இருக்காங்க.. கோவையில இருக்காங்க. அது ரொம்ப கொஞ்சம்.. மதுரையுல அதைவிட கொஞ்சம்.. இந்த மூணு ஊரையும் விட்டிருவோம்.. இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு தெக்கத்திகுக்கிராமத்த எடுத்துக்குவோம், (அது தான் இப்ப ஃபேஷன், சவுத்துல ஒரு வில்லேஜ்'ன்னு ஆரம்பிச்சா உடனே கோடம்பாக்கத்துல கதை சொல்ல வர சொல்றாங்களாம்.. ) அங்க இந்த மாதிரி சமுதாய பிரிவினை இருக்ககூடாதில்ல.. தினம் தினம் கோழியடிச்சு விருந்து வச்சு கொண்டாடுற விவசாயியும் உண்டு, வருசத்துல அறுபது எழுபது நாள் மட்டும் அரிசி கஞ்சி சாப்புடுற விவசாயியும் உண்டு, அவுங்க economicial status differece'க்கும் ஐடி தான் காரணமா?? என்ன சாமி இது அநியாயம், மாசம் பூராவும் நைட்ஷிப்ட் பார்த்து மாசக்டைசியில 20-25ரூவா சம்பளம் வாங்கி அதுல 10ரூ வாடகைய குடுத்துட்டு பாதிபணத்த ஊருல கூலி வேலைக்கு கூட போக முடியாம கிடக்குற குடும்பத்துக்கு அனுப்பற பலபேரை எனக்கு தெரியும். நானே கிட்டத்தட்ட ஒரு 15-20 பேரை "வெறும் டிகிரி வச்சுகிட்டு என்னங்க செய்யிறது"ன்னு லாரியில க்ளீன்ராவும், சந்தையில லாரிக்கு டோக்கன் போட்டுட்டும் இருந்த ஆளுகள கூட்டுட்டு வந்து BPO'ல தள்ளி விட்டிருக்கேன். அவுங்க வூட்ல எல்லாம் மூணு நேரம் இப்ப அரிசிச்சோறு சாப்பிடுறாங்க.. ஒரு நோம்பிநொடின்னா குடும்பமே சென்னைசில்க்ஸ் போயி நல்ல துணி எடுத்து போடுது. அவன் இங்க ஐடி'யில வேலை பார்க்கிறது தான் குத்தமா படுது உங்களுக்கு.. என்ன சிந்தனை கர்ம்மம்ங்க இது.

இதுல ":சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல்"
ன்னு வேற ப்ரகாஷ் சொல்றாரு.. கண்டிப்பா ஷங்கர் படத்துல சொல்ற தீர்வு எல்லாம் அபத்தம் தான், ஆனா அதே நேரத்துல

"B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு கேக்கிறதும் நீ மட்டும் உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிருக்கே, நான் பிஞ்ச செருப்பு போட்டிருக்கேன்னு, போயி சண்டை புடிக்கிறதும்" எந்த வகையில அபத்தம் இல்லைன்னு என்ககு புரியவே மாட்டேங்குதுங்க.

[ஷங்கர் படத்துல அவர் சொல்ற அபத்த தீர்வுகளாது ஒத்த மனுசன் மொத்த லஞ்சத்தையும் அழிக்கறதுங்கிற மாதிரி மேட்டர், நம்ம பய கவுந்தடிச்சு படுத்துட்டு கனவுல அதை செஞ்சு பார்த்துட்டு, காலையில எழுந்திருச்சு வழக்கம் போல வேலைய பார்க்க போயிடுவான்]

இந்த ஐடி'ங்கிற ஒரு வார்த்தை எனக்கெல்லாம் தெரியவர்றதுக்கு முன்னாடியே வெறும் pucயோ இல்ல +2வோ diplamoவாதான் படிச்சதுனால கடைவீதியில செட்டியார் கடையில கணக்குபுள்ளையாவோ, இல்ல லாட்டிரி கடையில போர்டு எழுதவோ இல்ல சிப்காட்'ல லேத்' ஓட்டவோ போன ஆளுகளுக்கும் டிகிரி முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி கவர்மென்டுலயோ, இல்ல பேங்க்லயோ, எல்.ஐ.சி'யிலயோ வேலைபார்த்தவங்களுக்கும் இடையே economical inequality இருந்துட்டு தான் இருந்துச்சு, 800ரூ/1000ரூ சம்பளம் வாங்கிற ஆளுக 7/8ஆயிரம் சம்பளம் வாங்கிறவங்களால ஏறிப்போன வீட்டு வாடகையும் காய்கறி விலையாலயும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தாங்க.. ஒவ்வொரு தடவை சம்பளகமிஷன் இப்பவும் அதே நிலமைதான்.. எதோ புதுசா ஐடி'ன்னு ஒன்னு வந்திட்டதால தான் இந்த நிலமைன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டிட்டு இருக்கம்னு தான் தோணுது.

Social inequalityங்கிறது தவறான அரசு கொள்கைகளும்ம், தனிமனித சுயநலமும் தான் காரணமா இருந்திருக்கு, இருந்திட்டிருக்கு.. ITன்னால மட்டும் புதுசா எதுவும் ஆயிடல.. 'எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்'னு டீசன்ட்டா சொல்லுவாங்க நம்ம சுத்துவட்டாரத்துல அந்த கதையா சும்மா சும்மா ஐடி'ய மட்டம் தட்டாம.. உருப்படியா எதாவது யாராவது செய்யுங்க.. மொத்த ஐடி சனமும் உங்களுக்கு உறுதுணையாத்தான் இருக்கும் :)

மொத்தத்துல முத்து சொல்ற மாதிரி
"இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்க"

இந்த பந்தா பகட்டெல்லாம் வேண்டாம்னா, தமிழ் படிச்சுட்டு, வாழ்க்கைக்கு (bread winning) எதாவது ஒரு கடையில பொட்டலம் கட்டிட்டு, தனக்கு புடிச்ச தமிழ் மேல நேசத்தோட நாலு பேருக்கு தமிழ் கத்து குடுத்துட்டு இருக்கனும். ஒரு வேளை தமிழே கூட க்ளிக் ஆயிட்டா அப்புறம் கவியரசு மாதிரி அதையும் வித்து பொழைக்கலாம்.. [BPO'ல சேர்ந்து பொட்டிதட்டிட்டு உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிகிட்டு இணையத்துல தமிழ் வளர்க்க கூட வந்திருக்கலாம்] அதை விட்டுட்டு இந்த படத்துல கூட நம்ம ஹீரோ சும்மா சுத்திட்டு ஊருக்கெல்லாம் கிடைச்சது நமக்கு ஏன் கிடைக்கலைன்னு ஒரு போறாமையால, சுயநலத்தால தான் இப்படி லூசுத்தனமெல்லாம் செய்யறது எல்லாம் நல்ல சிந்தனையுமில்ல வெங்காயமும் இல்ல.

Growing economical imbalance is not good.. ஆனா IT is not the (sole) reason for that..
நல்லா கவனிங்க 'Growing'.. இப்ப ஐடி வந்து தான் இதைய புதுசா உருவாக்கிடல.. நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நம்ம ஊருல இருந்திருக்காங்க..

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு 'அபத்தம்' தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

[ பொதுவா திருட்டு சிடி'யில படம் பார்க்கிறது இல்லைன்னாலும், ஒரு வாரம் முன்னாடி எத்தேசையா ஒரு சகா வீட்டு இந்த படம் பார்க்க கிடைச்சது.. பார்த்ததுமே எழுதனும்னு தோனுச்சு.. ஆனா எப்படியோ தள்ளிப்போயிருச்சு. நேத்து வேலையிடத்துல ஆணி கம்மியானதுல சட்டுன்னு எதோ தோணி, கூட இருந்து ரெண்டு தடியனுகள கூட்டிட்டு பார்டர் தாண்டி ஒசூர்ல படத்த போயி பார்த்துட்டு வந்தாச்சு, அதுனால சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்.. மன்னிக்கறவன் மனுசன்.. மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுசன்னு விருமாண்டி கூட சொல்லியிருக்காரு.. மனுசனா நடந்துக்கங்க, ஆமா :) ]

--
#251

Monday, October 15, 2007

முதன்முறை வாழப்பிடிக்குதே..


பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..
அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..

பார்க்கும் திசைகளெல்லாம்..
பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

உன்னோடு நானும்.. போகின்ற பாதை
இது நீளாதோ, தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்
இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே..
இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..பாடல் : நா.முத்துகுமார்
இசை : யுவன்சங்கர் ராஜா
குரல் : இளையராஜா
படம் : கற்றது தமிழ் (தமிழ் M.A.)
[பாடல்கேட்க]


pics : http://www.copperpress.com

--
#250

Wednesday, October 10, 2007

ஹாசினி - திரைப்பார்வை

தியோடர்'சார் அவரோட கட்டுரைகள்ல ரெண்டுமூணு இடத்துல சொல்லியிருப்பாருங்க. "தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லைன்னா அதுக்கு முக்கிய காரணம் சரியான விமர்சகர்கள் இல்லாதது தான்.. இன்னும் நம்ம, படத்தின் ஹீரோ விஜய் அவரோட காதலி அசினின் அப்பாவாகிய குமாரிடம் சென்று.. அப்படின்னு நடிகநடிகையர முன்னிலைப்படுத்திதான் இருக்குது" அப்படிங்கற மாதிரி.. அது எவ்ளோ தூரத்துக்கு சரியோ தெரியலைங்க.. நமக்கு சினிமா விமர்சனம்ங்கிறது எந்த வகையில பார்த்தாலும் சினிமா பார்க்கிற மாதிரியே புடிச்ச சமாச்சாரமாத்தான் இருக்குது.. சும்மாவா, பள்ளிக்கூடத்துல விளாட்ட்டு பீரியட்ல எவனாவது ஒருத்தன் முதநாள் சாய்ங்காலம் கொட்டாயில பார்த்த ரஜினி படத்துல அவர் எத்தனை குட்டிகரணம் போட்டு வில்லன, சில நேரத்துல சைட்-வில்லன, எப்படி உதைச்சாருன்னு விவரமா சொல்லுவான், அதை வாயப்பொழந்து கேட்டுட்டு விளையாட கூட போகாம இருந்த கூட்டத்த சேர்ந்தவஙக் தான நம்ம எல்லாம்.

கொஞ்சம் வயசு வந்த காலத்துல நமக்கு சினிமா விமர்சனம்ன்னா விகடன்ல மதன் எழுதறது தான் வேதவாக்கு.. அதுவும் மகாநதிக்கு 'காட்டாற்று வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்த கமல் மகாநதியாய் உருவெடுத்திருக்கிறார்'ங்கிற மாதிரி ஆரம்பிச்சு 65 மார்க்கோ என்னமோ குடுத்ததுல இருந்து சினிமா விமர்சனம்னா அது மதன் தான்னு ஆயிப்போச்சு.. அவரும் சில நேரத்துல சொதப்பி வைக்கிறது உண்டு.. 'அருணாச்சலம்' படத்துக்கு விமர்சனம் எழுதுனப்ப எல்லாம்.. 'யூ டூ ப்ரூட்டஸ்'ன்னு தான் தோனுச்சு.. ஆனாலும் விகடன்ல 40'க்கு மேல மார்க் இருந்த தகிரியமா போலாம்னு ஒரு பெரிய நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா, அவுங்களும் நடிகன்' டப்பா படம்ன்னாங்க.. மக்கள் அதைய பெரிய ஹிட் ஆக்கிடாங்க.. நமக்கும் புடிச்சு தான் இருந்துச்சு. :)

இப்ப பாருங்க.. சமீப காலத்துல விகடன் எல்லாம் வாங்கறதேயில்லை. ஓசியில இணையத்துல குமுதம் ரிப்போர்டர் படிக்கறதோட சரி..:) "அட்டைய பிரிச்சுட்டு படிச்சு பார்த்தா, எது எந்த புஸ்தகம்னே தெரியலையே நண்பா"ன்னு சொல்லுவான் நம்ம சகா ஒருத்தான்.. இப்பவெல்லாம்.. நம்ம விமர்சனத்தேடல்(!) இணையத்துலயும் டீ.வி. பொட்டியிலயும் தான்..

முகத்துல எந்த உணர்ச்சிமாற்றமும் இல்லாம, நம்ம இளையதளபதி நடிப்பு மாதிரி, ஒரு அக்கா சூரியடீ.வில விமர்சனம் செய்ய்வாங்க.. பல நேரம் பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கும், நடுவால அப்பப்ப அவிங்க காமிக்கற வடிவேலு க்ளிப்பிங்க்ஸ்க்காக அதைய பொறுத்துக்கலாம்ன்னா.. முடிவுல தியேட்டர் வாசல்ல போயி நம்ம மக்கள் கிட்ட மைக்க நீட்டி கருத்து கேப்பாங்க பாருங்க, அது சுவாரசியமா இருக்கும், மைக் கிட்ட எட்டி வந்து 'சூப்பரு'ன்னு ஒரு சில்வண்டு கத்தும், இன்னொருத்தர் அம்பது வயசுல புதுசா வயசுக்கு வந்த புள்ளை மாதிரி வெக்கத்தோட கேமராவ பார்த்து சிரிச்சுகிட்டே நழுவுவாரு, ஒருத்தரு உணர்ச்சிவசப்பட்டு மைக்க புடுங்கி "அற்புதம், அதிசியம்"னு நம்ம 'பொள்ளாச்சி ரயில்வேடேசனை காப்பாத்த வந்த புதுதெய்வம்' வைகோ மாதிரி நரம்பு புடைக்க உணர்ச்சிகரமா பேசுவாரு, பின்னாடி ஒரு புள்ளை துப்பட்டாவுல மூஞ்சிய மூடிட்டு அழுக்கு ஜீன்ஸ் போட்ட பையன் முதுகுபக்கமா ஒதுங்கும்.. நம்ம எஸ்.ஜே.சூரியா படத்த விட அந்த கருத்து கேக்கிற பார்ட்டு தான் படு சுவாரசியமா இருக்கும். அப்புறம் ராஜ்'ல ஜெ'லன்னு வரிசையா ஒரு விமர்சனமும் விளங்கல.. எல்லாம் எழுதி குடுக்கிற ஸ்க்ரிப்ட்டல வர்ற ஒவ்வொரு அரைப்புள்ளி, முழுப்புள்ளிக்கும் ஒரு புன்னகைங்கிற ஒரே ஒரு தியரியோட பார்த்து படிக்கிற விமர்சன்மாத்தான் இருந்துச்சு.. அடப்போங்கய்யான்னு இருந்தா, அப்புறம் விஜய்'ல வந்தாரு மதன்.. ஓகே.. பழைய விகடன் விமர்சனம் படிச்ச திருப்தி, அப்போ நடக்கிற மாதிரியே இப்பவும் அப்பப்போ சில வழிசலான சொதப்பல்களும் உண்டு..(அதுவும் இயக்குனர் - நடிகர் ப்ரவீன்காந்த்'கிட்ட பேசுனது எல்லாம்.. சரி விடுங்க.. இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் தான்). டீ.வி.டி அறிமுகம் எல்லாம் குடுக்கறாரு.. நம்ம அம்மணி தான் ஞாயித்து கிழமையானா காலையில விஜய் டீ.வி பார்த்துட்டு உடனே போயி அந்த டீவிடிய எடுத்துட்டு வந்து நம்ம செய்யுற அழிச்சாட்டியத்துக்கு எப்படி முடிவு கட்டறதுன்னு தீவிரமா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கறா. :)

வழக்கம் போல சொல்ல வந்த சமாச்சரத்த விட்டுட்டு எங்க எங்கயோ போயிட்டேன்.. இப்ப புதுசா ஜெ'ல நம்ம சுஹாசினி மணிரத்னம் வர்றாங்க.. ஹாசினி திரைப்பார்வை'ன்னு (தான் மீடியாவுக்கு அறிமுகப்படுத்தின தன்னோட தங்கச்சி அனு' டீ.வி'யில கலக்குறாங்களேன்னு இவங்க அவசரமா வந்த மாதிரி இருக்குது). எழுதி குடுத்தத படிக்கிற விமர்சணங்கள விட இவுங்க செய்யுற விமர்சனம் தான் சொதப்பலோ சொதப்பலா இருக்கு.. எதுக்காக இப்படி டிரெஸ்ன்னு தெரியல.. எனக்கு அதைய பார்த்தாலே எரிச்சலா இருக்கு :).
பல நேரத்துல அது சினிமா விமர்சனம் செய்யுற நிகழ்ச்சியா இல்ல, பெரிய டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ தன்னோட புள்ளைக்கு இது தெரியும், அது தெரியும்னு ஒரு விசிட்டிங்கார்ட்டா ஒரு படம் எடுத்து தருவாங்களே, அந்த மாதிரி தனக்கு சினிமாவுல எல்லாம் தெரியும்னு சொல்றதுக்காக நடத்துற நிகழ்ச்சி மாதிரித்தான் இருக்கு..

பள்ளிக்கூடம் படம் விமர்சனம், அதுவும் தவளை தங்கர் கிட்ட நேர்முகம்னு வேற சொன்னாங்க, நமக்கு பழைய தமிழன் கொம்பு எல்லாம் மனசுக்குள்ளார வந்து, அடிச்சு புடிச்சு போயி பார்த்தா, அது பள்ளிகூடம் படத்த விட சப்'புன்னு ஆயிருச்சு.

மொத்தத்துல நிறைய எதிர்ப்பார்ப்பை ஆரம்பத்துல குடுத்துட்டு சப்பை நிகழ்ச்சியா போற லிஸ்ட்ல சேர வேண்டிய நிகழ்ச்சி இது.. ஒரு பெரிய படைப்பாளிக்கு மனைவி, சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம், பெரிய இயக்குனர் அறிமுகப்படுத்தினது.. இதெல்லாம் மட்டுமே விமர்சனம் செய்ய தகுதி குடுத்திருமா என்ன?.. ச்சும்மா ச்சும்மா நேம் ட்ராப்பிங்.. 'சீனி-கம்' படத்துக்காக அமிதாப் கிட்ட பேசும்போதெல்லாம்.. வீடாப்போச்சுங்க, தியேட்டரா இருந்தா நல்லா நாலு வார்த்தை சொல்லி கத்தியிருப்பேன்..

ம்ஹும். நமக்கு மறுபடியும் மதன'யும் இணையத்தையும் விட்டா வேற வழியில்லை.

--
#249

Tuesday, October 9, 2007

எனக்கு 'ஹேப்பி பர்த்டே ' :)

மூணு நாளு மாசம் முன்னாடியிருந்தே எனக்கு 'ஹேப்பி பர்த்டே வருது'ன்னு ஊரெல்லாம் சொல்லி திரிஞ்சுட்டு இருந்தது ஒரு காலம்.. புரட்டாசி கடைசியில வர்ற அந்த கிரகத்துக்கு நம்ம வூட்ல 'ஆடி தள்ளுபடி'யில ஒப்பனக்கார வீதியில அங்கராக்கு வாங்கிட்டு வந்துருவாங்களா, அப்ப இருந்து பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் 'எனக்கு ஹேப்பி பர்த்டே வருது' புராணம் தான்.

'க்வீ'பாலீஷ் பளபளக்க பாட்டா ஷூ போட்டுட்டு, முதுகுல புத்தகபொதியும், ஒரு கையில சாப்பாட்டு பையும், மறுகையில முட்டாய்பொட்டியுமா பள்ளிக்கூடம் போயி பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் எனக்கு ஹேப்பி பர்த்டே'ன்னு சொல்லி முட்டாயி குடுத்து, ரெண்டு மூணு முட்டாய் எடுத்துக்கிற மிஸ்'கள எல்லாம் மனசுகுள்ளாரயே திட்டிகிட்டு, இன்னைக்கு பூராவும் யாரும் நம்மள 'ஷோ யுவர் ஹான்ட்'ன்னு 'ஸ்டிக்' எடுக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல க்ளாஸ் லீடர் பேர் எழுதிவச்சாலும் பரவாயில்லைன்னு பக்கத்துல உக்காந்திருக்கிற சிவா'னையும், சுதா'வையும் வம்பிழுத்து பேசிகிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு போறதுகுள்ளார தீர்ந்துட போகுதுன்னு முட்டய் போட்டியில இருந்து ஒரு கை அள்ளி புத்தக பையில போட்டு வச்ச சரக்க அப்ப அப்ப தொட்டு தொட்டு பார்த்துட்டே சந்தோசமா போயிடும் ஒரு நாள் முழுசும்..

அப்புறம் ஒரு காலத்துல ஆடித்தள்ளுபடியில ஓடிப்போயி வாங்க வேண்டியதெல்லாம் இல்லாம என்னைய கூட்டிட்டு போயி புடிச்ச மாதிரி கோட்டும் டையும் 'பிங்கி ரெடிமேட்ஸ்'ல எடுக்கிற காலத்துல தான் புதுசா சாயங்கால நேரத்துல காலனியில சுத்துற எல்லா குரங்குளையும் கூப்பிட்டு 'ப்ரெட்டிஹவுஸ்'ல ஆர்டர் செஞ்ச கேக்கு மேல மெழுகுவர்த்தி எல்லாம் கொளுத்தி வச்சு அப்புறம் அதை ஊதி அணைச்சுட்டு கேக் வெட்டுற சடங்கெல்லாம்..

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வயசு ஏற ஏற, 'வயசு ஏற ஏற அறிவு ஏறும்னு' நாலு பேரு சொன்னதுல, நம்மளா நமக்கு அறிவு வந்திருச்சுன்னு நினைச்சுகிட்டு, பொறந்தநாளும் அதுவுமா இதென்ன ஊதி அணைக்கிற பழக்கம்னு 'வெவரமா' பேசி புரட்சியா கெளம்பி 'அன்னை இல்லத்து'க்கு போயி டொனேசன் ரசீது வாங்கிட்டு வந்திட்டிருந்தேன்..

இன்னும் கொஞ்சம் வயசு ஏறிப்போயி பொறந்தநாள் அன்னைக்கு வூட்ல இருக்க வேண்டியதில்லைன்னு ஆனதுக்கப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு புரட்சி பீர்பாட்டில்ல பொங்கிவர ஆரம்பிச்சுது..

மெதுமெதுவா.. நம்ம பொறந்த நாள நம்மளே கொண்டாட கூடாது, நம்மள சுத்தி நாலு பேரு அதை ஞாபக வச்சு கொண்டாடனும்னு தத்துவம் பேசிட்டு திரிஞ்சது சமீபகாலம் வரைக்கும்.. இன்னும் அப்படித்தான் நெனச்சாலும்.. 20 வருசம் முன்னாடி இருந்த கதை தான் இன்னைக்கும் ரிப்பீட் ஆகுது.. என்ன முன்ன நானே போயி ஊரெல்லாம் எனக்கு 'ஹேப்பி பர்த் டே'ன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இப்போ அந்த வேலைய எனக்கு பதிலா 'ஆர்க்குட்' செய்யுது :)

'வாழ்த்து சொன்ன சங்கத்து சிங்கங்களுக்கு, நண்பர்களுக்கும் நன்றி..

Friday, September 28, 2007

அன்றும்! இன்றும்.!

அன்று
இன்று:


மக்கள் தீர்ப்பு .. :)
(விளங்கிடும்)

நாளைக்கு.. என்ன செய்வாங்களோ..? Dhoni's boys பத்தி சொல்லைலைங்க.. நம்ம மக்கள பத்தி சொல்றேன்.

--
#247

Tuesday, September 25, 2007

ஆக்கிரமிப்பு

நம்மூர்ல தான் ஏரி குளம் எதுவும் விட்டுவைக்காம ஆக்கிரமிக்கறாங்கன்னா.. பாங்காக்'ல இன்னும் ஒரு படி மேல போயிட்டாங்க..

நம்மாளுக ரயில்வேடேசன், ப்ளாட்பாரம்னு தண்டவாள ஓரம்னு எவ்ளோ தூரம் ஆக்கிரமிச்சாலும்.. இதுக்கு ஈடு ஆகாது..
நிசமா பொய்யான்னு தெரியல.. ம்ம்.. கில்லாடிகளா இருக்காங்க..

--
#246

Friday, September 14, 2007

இதபார்றா!!

ரோடு குண்டும் குழியுமா இருந்தா என்ன செய்வீங்க.. ? நீங்க என்ன செய்வீங்களோ, நானெல்லாம் வருசா வருசம் மார்ச் மாசம் வரி கட்டும்போது படுற கடுப்பையும், ரெண்டு மூணு வருசத்துக்கொரு தடவை ஓட்டு போட வரிசையில நிக்கிற கடுப்பையும் சேத்தி, இந்த அரசியல்வாதிகள மனசுக்குள்ளார இல்லாட்டி கூட இருக்கிற பாவப்பட்ட ஜென்மத்துகிட்ட நல்லா நாலு கெட்ட வார்த்தைய சொல்லி திட்டிட்டு.. வேலைய பார்க்க போயிருவேன்..

இவுங்க வேற மாதிரி போல.. நம்மள மாதிரி இல்ல :).. நமக்கு நாமே திட்டம் மாதிரி.

--
#245

Thursday, September 6, 2007

நிலவு


பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

பூவிலே ஒரு பாய் போட்டு
பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல்
பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத சாபம்
தனிமையே போ
இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு


காவலில் நிலை கொள்ளாமல்
தாவுதே மனது
காரணம் துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப் போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

--

மேல போட்டிருக்கிற 'நிலா' படம் நம்ம வூட்டம்மிணி போன வாரம் எடுத்தது.. கீழ போட்டிருக்கிற பாட்டு 1986'ல மெளனராகம் படத்துக்கு கவிஞர் வாலி எழுதினது :)


நீ என்ன செஞ்சேன்னு கேக்கிறவங்களுக்கு.. 'கேமிரா வாங்கி குடுத்திருக்கேன்.. இப்போ பதிவு போட்டிருக்கேன்' பத்தாதா?

--
#244

Wednesday, August 29, 2007

ஒரு கவிஞன் ஒரு கவிதை

நம்ம நடேசு இருக்கான் பாருங்க நடேசு, அவனே தாங்க, அவனும் வெகு காலமா இந்த கவிதை கிவிதை எல்லாம் எழுதிட்டு தான் இருக்கான், என்ன ஒரு பயலும் அதை கவிதைன்னு ஒத்துகிடறதில்ல.. அவன் அதுக்கெல்லாம் சளைச்சுகிறதே இல்லை. 'நாலு பேரு நாலும் சொல்லுவாங்க, அதுக்காக நம்ம நம்ம கடமைய கை விட்றமுடியுமா என்ன?'ன்னு சொல்லிட்டு எழுதி தள்ளிகிட்டே தான் இருக்கான். இன்னைக்கு நேத்து ஆரம்பிச்சதுங்களா அது, பத்தாப்பு படிக்கும்போதும் அமராவதி ஸ்கவுட்கேம்ப்'ல மூணு நாளும் பார்க்கும் போதெல்லாம் இவன பார்த்த்து சிரிச்ச அவிலா'ப்ரின்ஸ்மேரி, நாலவது நாள் கேம்ப் முடிஞ்சு அவுங்கவுங்க ஸ்கூல்பஸ்ல ஏறும் போது இவன்கிட்ட ஒரு 'சீ..யூ' கூட சொல்லிக்காம போனாளே, அன்னைக்கு தான் அதுவரைக்கும் கோணக்கால் நடேசனா சுத்திட்டு இருந்தவன் 'நடேச கவிஞனார்'ன்னு ஆனது, அந்த கொடுமை இன்னைக்கு வரைக்கும் தொடருது.

ஒரு 'சீ.. யூ' கூட கிடைக்கலையேன்னு மனசு வருத்தப்பட்டு எழுத ஆரம்பிச்சது, அது பாட்டுக்கு காலத்துக்கு தகுந்தாப்புல விதவிதமா மாறிட்டு தாங்க இருந்துச்சு, மூணு வரியுல எழுதினா ஹைக்கூ, மடிச்சு போட்ட உரைநடையா இருந்தா புதுக்கவிதை, செவப்பு சாயத்துல அடிபட்ட மக்களுக்காக, பிரிவு வலியுல, சமுக கோவத்துல'ன்னு பல விதமா எழுதிதள்ளிட்டடே தான் இருக்கான். ஆனா பாருங்க எழுதினது அத்தனையும் எல்லாருக்கும் வாசிக்க விடறதில்லை.. எதுக்கு வம்புன்னு தான். மனுசங்க எல்லா நேரத்துலயும் அஹிம்சைய கடைபுடிக்கறதில்லையே, பல நேரத்துல கவிதைக்கு விமர்சணமா அடி உதை கிடைக்க ஆரம்பிச்சதும், அவனுக்குன்னு தனியா ஒரு நோட்ட போட்டு வச்சுக்க ஆரம்பிச்சுட்டான்.எங்க கூட்டத்துல என்னதான் அவன லூசு நடேசுன்னு கூப்பிட்டாலும் இந்த வகையில நடேசு புத்திசாலி தான்.

சில நேரத்துல அவன் எழுதிற கவிதை அவனுக்கே புடிச்சு போச்சுன்னாவோ, இல்ல அவனுக்கு அடுத்த தடுப்புல உக்காந்திருக்கற சின்ன புள்ளைக்கு புடிச்சிருந்தாலோ, பொதுவா அப்ரைசல் கிட்ட வர்ற காலத்துல இவன் கிறுக்கிறது அந்த புள்ளைக்கு புடிக்க ஆரம்பிச்சுரும். அந்த மாதிரி நேரத்துல தான் நமக்கு கோடும் கட்டமும் சரி இல்லாம போறது. அப்படி புடிச்சு போன கவிதை எல்லாம் நம்ம மெயில் பாக்ஸ்ல வந்து நிறையும். அப்படித்தான் போன வாரம் ஒரு கவிதை வந்துச்சு, எனக்கே அது ரொம்ப புடிச்சிருந்துன்னா பாருங்களேன். :) சிவப்போ, வலியோ, கோவமோ இல்லாம ஒரு சிற்றின்ப கவிதை (எது சிற்றின்பம், எது பேரிண்பம்'ன்னு ஒரு குளருபடி இருக்குதுதான்.. இப்போதைக்கு நடைமுறையில இருக்கிற கருத்த எடுத்துக்குவோம்) உருகி உருகி ஒரு காதல் கவிதை, ஒரு காதலன் தன் காதலிக்காக தன் காதலை சொல்ல எழுதின மாதிரின்னு வச்சுக்கோங்களேன். காலம்போன காலத்துல நடேசனுக்கு எதுக்கு காதல் கவிதைன்னு மனசு கேட்டாளும்.. கவிதை சுமாரா நல்லா தான் இருந்துச்சுங்க.இந்த மெயில் அனுப்பிற விசயத்துல நடேசு பாகுபாடெல்லாம் காட்டுறதில்லைங்க.. தெரிஞ்சவன், தெரியாதவன், ரெண்டு நிமிச சந்திப்புல மெயில் ஐடி குடுத்தவன், ஃரிபரன்ஸ்சுக்காக மெயில் அனுப்பிச்சவன், இப்படி ஒரு வகைதொகையே இல்லாம எல்லாருக்கும் அடிச்சு விடுறது தான் அவன் வழக்கம்.. வழக்கபடி அந்த காதல் கவிதையும் அனுப்பிச்சு வச்சான். அங்க தான் அவனுக்கு கோடும் கட்டமும் சரி இல்லாம போச்சு. ஊரு உலகம் பூராவும் அனுப்பிச்சவன், அப்படியே சுமதி'க்கும் அனுப்பிச்சு வச்சிருக்கான். சுமதி யாருன்னு கேக்கரீங்களா, சொல்லுவனில்ல.. இவ்வளவு சொன்னவன் அதை சொல்ல மாட்டனா? சுமதி'ய நானும் அவனும் தான் போன வாரம் சந்திச்சோம், வழக்கம் போல வார இறுதிக்கு ஊரு பக்கம் போகும் போது ரயில் பயணத்துல எங்க கூட ஒரு கூபே'வில வந்த புள்ளை. இங்க தான் புதுசா ஆணிபுடுங்கிற வேலையில இருக்காம்.. விடிய விடிய நடேசு கூட பேசிக்கிட்டே தான் வந்துச்சு, நமக்கு இந்த விசயமெல்லாம் அவ்வளவு விவரம் பத்தாததால, நான் பாட்டுக்கு மேல் பர்த்துல ஏறி சால்வைய போத்தி கனவுல இறங்கிட்டேன்.

இவன் பாட்டுக்கு bccல போட்டு எல்லாருக்கும் கவிதைய அனுப்பி வைக்க, அந்த புள்ளைக்கும் அது போயிருக்கு. எப்பவும் போல இல்லாம கவிதை வேற கொஞ்சம் சுமாரா இருக்க, அதுல புள்ளை லேசா ஜெர்க் ஆயிருச்சு போல இருக்கு. மறுநாள் பதட்டமா நடேசு கிட்ட இருந்து ஃபோன் வருது 'மாப்ள சுமதி கிட்ட இருந்து ஒரு மெயில், உனக்கு ஃபார்வர்ட் செஞ்சிருக்கேன் கொஞ்சம் பாரு'ன்னு.. என்னடா இது ஒரு சிட்டு கிட்ட இருந்து வந்த மெயில நமக்கு ஏன் அனுப்பியிருக்கான்னு ஒரு குழப்பம் வந்தாலும், பொதுவாவே நமக்கு இருக்கிற கிசுகிசு படிக்கிற ஆர்வத்துல நான் ஆணிய பாதியில விட்டுட்டு மெயில் பக்கம் போனேன். ம்ம்.. நடேசு பதட்டமா இருந்த காரணம் நமக்கும் புரிஞ்சுது.. இவன் ஊருக்கே அனுப்பின கவிதைய தனக்கு தான் அனுப்பியிருக்கான்னு நினைச்சிருச்சு போல அந்த புள்ளை, கவிதையில இவன் சொன்ன காதல் தன் கிட்ட தான்னு நினைச்சு அங்க இருந்து ஒரு பதில் 'எனக்கும் ஓகே, நீங்க ஃபார்மலா உங்க வீட்டு பெரியவங்க மூலமா வந்து எங்க வீட்டுல பேசுங்க'ன்னு நடு நடுவால மானே தேனே எல்லாம் போட்டு, எனக்கு சிரிக்கிறதா அழுவறதான்னு தெரியல.. இப்பத்தான் முப்பதா தாண்டற கோப்புல நடேசுக்கு நல்ல இடமா ஒன்னு வந்திருக்கு, தேதி கூட முடிவாகி மணடபத்துக்கு அட்வான்ஸ்சும் குடுத்திருக்கு, இந்த நேரத்துல இப்படி ஒரு கலாட்டா. :)

சரி ஆயிரம் இருந்தாலும் நம்ம நண்பன் நடேசன் அவனுக்கு உதவாட்டி எப்படின்னு அவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்த புள்ளைக்கு ஒரு நீளமான மெயில் தட்டினேன்.. இப்படி இப்படி நடேசு இந்த மாதிரி கவிதை கிறுக்கெல்லாம் ரொம்ப காலமா இருக்குது.. நீ தான் தப்பா நினைச்சுட போல இருக்கு அப்படி இப்படின்னு வழக்கம் போல நீட்டு முழக்கி விவரமா எழுதி அனுப்பிச்சேன்.

அனுப்புன மறுநாள் சுமதி கிட்ட இருந்து பதில் வந்திருச்சு.. நம்ம நடேசு பய கிட்ட எல்லாம் சரி ஆயிருச்சு, குழம்பாம வேலைய பாருன்னு சொல்லிட்டேன். அவன் தான் சும்மா எப்படி? என்ன?ன்னு விவரம் கேட்டுக்கிட்டே இருக்கறான்.. நான் சொல்லவே இல்லை.. அவனுக்கு வருத்தம் தான்.. இருந்தாலும் அதுக்காக அதை எப்படிங்க அவன் கிட்ட சொல்றது.. நீங்களே சொல்லுங்க.

அந்த புள்ளை குடுத்த பதிலோட சாரம்சம் இது தான் "இந்த கவிதை எழுதிற நாய்கள எல்லாம் சுட்டு கொல்லனும், சும்மா வார்த்தைக்கு வார்த்தை பொய்ய எழுதி தள்ளராங்க.. இனிமேல் செத்தாலும் ஒரு கவிஞன் கூட நட்பு வச்சிக்க மாட்டேன்" அப்படி இப்படின்னு ஒரு முழ நீளத்துக்கு கவிஞர்களையும் கவிதைகளையும் திட்டு திட்டுன்னு திட்டி. இதைய போயி அவன் கிட்ட சொல்லனுமா என்ன..?


நன்றி : கலீல்ஜிப்ரன் :)
pic : http://www.joycegordongallery.com/

--
#243

Tuesday, August 28, 2007

Stressbuster

பெட்ரமாக்ஸ்சே தான் வேணுமா? இந்த பந்தமெல்லாம் புடிச்சுக்க குடாதா?------------------------

கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு, அவனுகளுக்கு பொறாமைடா..

அக்காங்ண்ணே..!!


--
#243

Monday, August 13, 2007

ர்ரிப்பீட்டு

கடைசியா அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு தை மாசத்து நிறைஞ்ச முகூர்த்த நாள்ல, வடக்கத்திக்காரங்க பாணியில கட்டுன ஒரு பஞ்சுமுட்டாய் கலர் பட்டுபுடவையில, லார்ட்ஸ் ஹாஸ்பிடல் சர்ஜன் 'ரஞ்சித்'கூட ஜோடியா நம்மூர் வழக்கப்படி 'வரவேற்ப்பு'க்கு நின்னப்ப பார்த்தது, அதுக்கப்புறம் இப்பத்தாங்க, நேத்து சகா ஒருத்தன வண்டி ஏத்திவிட போனப்ப எத்தேசையா சுமி'ய பார்த்தேன். கொஞ்சம் பூசினாப்புல ஆயிட்டா.
'ஹேய்..எப்படிப்பா இருக்கே?' இன்னும் கண்ணுல அதே சிரிப்பு..
'ரஞ்ச், இது ராஜ், என் ஸ்கூல்மேட், நம்ம மேரேஜ்ல மீட் பண்ணினது, டு யூ ரிமம்பர்?'.. டாக்டர் அப்ப மாதிரியே ட்ரிம்மா இருக்காரு.முன்னந்தலை தான் கொஞ்சம் ஏறியிருக்கு. கல்யாணத்தன்னைக்கு ஒரு பூங்கொத்து குடுத்து சம்பிரதாயமா பேசுனது, அதுவும் ஆறு வருஷம் முன்னாடி, பாவம் அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இருந்தாலும் 'யா!யா!..ஹவ் டு யு டூ?'ன்னு ஒரு ஆச்சிரிய புன்னகையோட கைகுடுத்தாரு.

ஒரு மாச லீவுல வந்திருக்காங்களாம், சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு, அப்படியே கொஞ்சம் ஊர்சுத்தல், இப்ப ரஞ்ச்'க்கு எதொ கான்ஃப்ரன்ஸ் அட்டன்ட் பண்ணனுமாம், அதுனால சுமி'மட்டும் சென்னையில இன்-லா வீட்டுக்கு போறதுனால ட்ராப் பண்ண வந்திருக்காராம்..
சுமி சொன்னத சுருக்கி குடுத்திருக்கேன், சரியான வாயாடி.. ஸ்கூல் படிக்கும் போது சுமி, மரக்கடை செட்டியார் பொண்ணு பொன்னரசி, நான், அப்புறம் துரை எல்லாரும் ஒரே பெஞ்ச். (ஃபார் யுவர் இன்போ : நாங்க படிச்சப்போ எங்க ஸ்கூல்ல நாலாவது வரைக்கும் தான் கோ-எட்) பக்கத்துல உக்காந்துட்டு, பெஞ்ச், டேபிள் எல்லாம் பென்சில்ல கோடு போட்டு, இதை தாண்டி உன் நோட்டு, பென்சில்பாக்ஸ் எதுவும் வரக்கூடாதுன்னு என்னையும் துரையனையும் ஒரு வழி பண்ணிருவா.. மிஸ் கிட்ட சொன்னாலும் கடைசியில எங்களுக்கு தான் திட்டு விழும், சில நேரங்கள்ல அடியும்.. ஏன்னா இவ வாய் சாமார்த்தியம் அப்படி, அது போக நம்ம துரையன் ட்ராக் ரெக்கார்ட் அப்படி..(நான் குட்பாய்!)

நாலாவதோட ஸ்கூல் மாறி போயிட்டாலும், அடுத்த வீதியில தான் சுமி'யும் இருந்தாங்கிறதுனால அந்த நட்பு மட்டும் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. நமக்கு சும்மா புஸ்தகத்தை பார்த்தாலே எதோ பேயடிச்ச மாதிரி ஆயிடும், தினமும் 'இப்படியே போனா நீ சினிமா கொட்டாயில முறுக்கு விக்கத்தான் போக போற'ன்னு தினமும் வீட்டுல சாபம் குடுப்பாங்க.. நமக்கு மனசுகுள்ள ஒரே சந்தோஷம், அப்படி போன தினமும் சினிமா பார்க்கலாமேன்னு, அதுனால நம்ம வீட்டாளுக எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி நான், சிவா, ஸ்ரீ, மங்கை அப்படின்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி பத்தாவது படிக்கும் போது எல்லாம் சுமி வீட்டுல தான் க்ரூப் ஸ்டடி..
எல்லாரும் ஒழுங்கா படிக்க, நான் மட்டும் மும்முரமா புஸ்தகத்தோட பின்னட்டையில படம் வரைஞ்சுகிட்டு இருப்பேன், சுமி' பயங்கிற தொணதொணப்பு, எதாவது பேசிகிட்டே இருப்பா. 'நான் இன்னைக்கு கருப்பு பென்சில் வாங்கினேன், கருப்பு பேனா வாங்கினேன், கருப்பு டாப்ஸ் வாங்க போறேன்னு, ஒரே கருப்பு புராணமா இருக்கும்..அவளுக்கு கருப்பு ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிருக்காம், 'ஐ ஹாவ் ஸ்டார்டர்ட் லவ்விங் ப்ளாக்'ன்னு அவ சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் தெரியும் அவ கண்ணுல.. கருப்பா ஒருத்தன தான் கட்டிக்குவேன்னு வேற சொல்லுவா..

நமக்கு வீட்டுல் உக்காந்து வரைஞ்சாத்தான் எங்க அம்மா 'படிக்கறத வுட்டுபோட்டு என்னடா எப்பப்பாரு கிறுக்கிட்டே கிடக்கற'ன்னு தொணதொனக்க ஆரம்பிச்சிருவாங்கன்னு இங்க வந்தா, இவ வேறன்னு ஒரே எரிச்சலா இருக்கும்.. இதுக்கு நடுவால மத்தவங்க வேற பயங்கிர படிப்பாளிக நம்மள இவகிட்ட விட்டுட்டு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டாங்கன்னா அவ்ளோ தான், சுமி'யோட அம்மா காம்ப்ளான் கொண்டு வந்தாத்தான் புஸ்தகத்துகுள்ளார இருந்து தலைய எடுக்குங்க.. அன்னைக்கு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டது, இன்னைக்கும் கம்ப்யூட்டருக்குள்ளார தலையவிட்டுட்டு கிட்க்கறாங்க.. ஒரு வித்தியாசமும் இல்ல..

அப்படி இருந்த நாங்க இந்த அஞ்சு வருஷமா மட்டுமில்லீங்க, அதுக்கு முன்னாலயும் ஒரு நாலு வருஷம் எந்த தொடர்புமில்லாம தான் இருந்தோம்.. அதுக்கு காரணம் 'சந்துரு', அவனும் எங்க செட்' தான். அவனுக்கு சுமி' மேல 'தெய்வீக' காதல், அப்படித்தான் எங்கிட்ட சொன்னான்!.. நான் இன்னொன்னு சொல்லலையே, சுமி' எங்க ஏரியாவும ரொம்ப பிரபலமான் 'பிகர்', தெரு முக்குல ஒரு கூட்டமே அவ தரிசனத்துக்கு நிக்கும், ஆனா நம்ம தான் பள்ளிகூடம் தாண்டுற வரைக்கும் பச்சபுள்ளையாவே இருந்துட்டமா, அதுனால அந்த தெரு முக்குல நிக்கிற சமாச்சாரத்துல எல்லாம் நான் (அப்போ!) கலந்துகிட்டதில்லைங்க..
(அவங்களும் நம்மள சேத்திக்கலைங்கிறது வேற விஷயம்)

அந்த கூட்டத்துல முக்கியமான் ஆள் இந்த சந்துரு'. நம்மகிட்ட வந்து 'மாப்ளே, நீ தான்எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்'ன்னு சொல்ல, அதுவரைக்கும் நம்மள ஒரு பொருட்டா கூட சீன்டாத பசங்க, நம்மள வந்து மாப்ளே'ங்கிறானுகன்னு ஒரு மிதப்பாகி நானும் பெருமையா அவன்கிட்ட இருந்து 'லவ்லெட்டர்' வாங்கி போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், அப்படியே இதை சாக்கா வச்சு, அவனுக கூட்டத்துல கலந்துடனும், நாமளும் அப்படியே ஒரு ஜமாவா தெருமுக்குல நிக்கனும்னு ஒரு நப்பாசை. எவ்ளோ நாள் தான் குட்பாய்'யாவே இருக்கிறது.. !

நம்மள எதோ அல்லக்கை வேலைக்கு அவனுக பயன்படுத்திருக்கானுகங்கிறதெல்லாம் பிற்காலத்துல தான் நமக்கு தெரிஞ்சுது.. அப்படி ஒரு கேடுகெட்ட போஸ்ட்மேன் வேலை பார்த்ததுல தான் சுமி'க்கு பயங்கிற கோபம், என்னை கிட்டத்தட்ட சட்டைய புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிட்டா,எப்படிடா நீ இதை செய்யலாம், உன் மூஞ்சியிலயே இனிமேல் முழிக்க மாட்டேன்னு அழுது சத்தம் போட்டுட்டு போயிட்டா...எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, ச்சே அந்த பெரிய பசங்க கூட்டத்துல சேர ஒரு சான்ஸ் கிடைச்சுது. இவ இப்படி அதை கெடுத்துட்டாலேன்னு.. நல்ல வேளை வீட்டுல யாரு கிட்டயும் சொல்லாம விட்டாளேன்னு ஒரு சந்தோஷம்..

அப்புறம் அப்படியே கொஞ்ச நாள்ல அவுங்க வீட்டுல வேற பக்கம் வீடுகட்டி அங்க குடி போயிட்டாங்க, நாமளும் அப்புறம் +2 பிசி, வெளியூர்ல காலேஜ்ன்னு அப்படியே வேற மாதிரி போயிட்டோம். அப்புறம் அவ கல்யாணத்துக்கு எங்கய்யன் எங்கயோ வேற வேலையா போனதுனால எங்கம்மாவுக்கு சாரதியா போயி, ரிசப்ஷன்ல வாழ்த்து சொல்லிட்டு வந்ததோட சரி.. அதுக்கப்புறம் நேத்து தான் பார்க்கிறேன்...

'வண்டி வேற ஒரு மணிநேரம் லேட்டு, ரஞ்சித்துக்கு எதோ அப்பாயின்ட்மென்ட் இருக்காம், ஒரே போர்ப்பா'ங்க, நான் 'ஃப்ரி தான், நான் இருக்கேன், வண்டி கிளம்பர வரைக்கும்னு' சொல்லி ரஞ்சித்த அனுபிச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் காபிஷாப்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்..
மலரும் நினைவுகள் எல்லாம் பேசிட்டு இருந்தோம், அப்போத்தான் சுமி கேட்டா, 'கல்யாணம் எப்படா?'. வர வர யாரை பார்த்தாலும் இதே கேள்விய தான் கேக்குறாங்க, நானும் வழக்கம் போல சிரிச்சுகிட்டே 'பண்ணிக்கலாம்னு' வழக்கம் போல சொன்னேன்.. 'யாராவது பார்த்து வச்சிருக்கியா?' இது அடுத்த கேள்வி.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவளே 'உன்கிட்ட போயி இதை கேக்குறேன் பாரு , நீ எங்க போயி...'
'ஏன் அப்படி, என்னை பார்த்தா அவ்ளோ இளக்காரமா இருக்கா என்ன?'
'பின்ன என்ன, உனக்கு என்னைக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்கு.. சரி அதை விடு.. சிவா,எப்படி இருக்கான்'ன்னு அப்படியே பேச்ச மாத்திட்டா... நானும் கண்டுக்கல.. அப்புறம் ஒரு மணி நேரம் லேட்டுன்ன வண்டி ஒன்னரை மணி நேரம் கழிச்சு கிளம்ப தயாராக, (என்னைக்காவது ஏர்-டெக்கான் நேரத்துக்கு கிளம்புமா.. ஒரு போட்டியே வைக்கலாம் போல அதுக்கு) நாங்க பரஸ்பரம் போன் நம்பர், ஈமெயில் ஐடி எல்லாம் குறிச்சுகிட்டோம்.

போகும் போது கடைசியா 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, இப்ப பார்க்க கொஞ்சம் கலராயிட்ட'ன்னு சிரிச்சுகிட்டே கிளம்புனா.. 'ம்ம்.. அப்படியா'ன்னு பக்கத்துல இருந்த கண்ணாடியில பெருமையா பார்த்துகிட்டேன்.. 'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா, growup man! ஆல் தி பெஸ்ட்'ன்னு சொல்லிட்டு டாடா காமிச்சுட்டு போயிட்டா..திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சுகிட்டே வந்தேன்.. 'growup man'?.. நம்மள பார்த்து எதுக்கு அப்படி சொன்னா?? நல்லா வளர்ந்து மலமாடு மாதிரித்தான இருக்கோம்... ம்ம்.. அப்படியே யோசிக்கிட்டே போயி சிக்னல்ல வண்டிய நிறுத்துனேன். இந்த 200 செகன்ட் சிக்னல்ல நிக்கிறது மாதிரி ஒரு கொடுமையே இல்லீங்க.. எப்எம்'ல எதோ இங்க்லீஸ் பாட்டு.. ஆயிரம் இருந்தாலும் நம்மூரு ரெயின்போ மாதிரி வராதுன்னு மனசுகுள்ள சொல்ல சொல்ல.. டக்குன்னு
அவ சொன்னது ஞாபகம் வந்துச்சுங்க 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, கொஞ்சம் கலராயிட்ட'..

நமக்கு எல்லாமே லேட்டாத்தான் புரியுது.. இன்னும்..!!(ஏற்க்கனவே எழுதினது தான்.. ஏன் இங்க மறுபடியும்னு கேட்டீங்கன்னா.. இதுக்கு பேரு தான் நினைவுகுப்பைகள கிளருறது :) )

pic :http://www.martinejardin.com/:


---
#241

Tuesday, August 7, 2007

சொகம்!

ஊருக்கு தெக்கால நெருக்கிட்டு நிக்கிற தென்னந்தோப்புகள தாண்டி, பருவகாலத்துல மட்டும் செவையேன்னு செம்மண்ணு தண்ணி ஓடுற சூலக்கல் ஓடக்கரைக்கு பக்கமா, கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஆள்ஆரவம் எதுவுமேயில்லாம வத்தலும் தொத்தலுமா விரிஞ்சு கிடக்கற சோளக்காட்டுக்கு நடுவால, பெரிய சந்தையில தக்காளி கூடை இறக்க போனப்போ ஒட்டஞ்சத்திர துலுக்கன் கிட்ட விடாப்பிடியா பேரம் பேசி மோனக்காரரு வாங்கிட்டு வந்த அந்த நஞ்சுபோன கனகாம்பரக்கலர் ஃபுல்கை அங்கராக்கும் வெளிரிப்போயி நூலெல்லாம் பிரிஞ்ச யானைக்கால் குழாயக்கும் ஊடால பிதுங்கிக்கிட்டு எட்டிப்பார்க்கிற வக்கப்புல்லும், ஒறட்டான் கையில எந்தி கிடக்கற கரித்துணியும், மண்சட்டியில காவியும் கரியும் குழைச்சு போட்ட தல வேசமுமா தன்னந்தனியா வரப்புக்கு நடுவே மூங்ககழியில தொக்கி நின்னுகிட்டிருக்கான் அவன்.


டவுன்கார இஞ்சினீரு தோட்டத்து சாலையில எப்பவும் இளைப்போட கயித்துகட்டில்ல கிடக்கற அவுங்க அப்பாரு மாதிரி, "இப்படி பேச்சு துணைக்கு கூட யாருமில்லாம ரவும்பகலும் காட்டுக்கு நடுவால நின்னு நின்னு சடஞ்சு போயிருப்பே, பாவம் நீயு"ன்னு ஒரு சோலிய அவன தாண்டி போகும் போது கேட்டு வச்சேன்.
"அப்படியெல்லாம் இல்ல.. நாலு உசுர பயமுறுத்தறுதல இருக்கற சொகம் இருக்கே, அது கிடைக்கிற வரைக்கும் ஒரு பொழுது கூட நான் சடஞ்சுக்கமாட்டேன்"
"ஆமாமா, அதென்னமோ நிசம் தான், எனக்கும் அந்த சொகம் தெரியும்" ஒரு நிமிசம் ரோசணையா அவன பார்த்து சிரிச்சுகிட்டே சொல்லிவச்சேன்.
"காஞ்ச வக்கப்புல்ல இப்படி உள்ளார தினிச்சு என்னைய மூங்கிகழியில தூக்கி நிப்பாட்டினவங்களுக்குத்தான் அது தெரியும்" - சட்டுன்னு பதில் வந்துச்சு.
அந்த பதில் நான் சொன்னத ஆமோதிச்சு சொன்னதா இல்ல நம்மள குத்திக்காட்டவா'ன்னு விவரம் புரியாம குழப்பத்தோட சோலிய பார்க்க போயிட்டேன்.
வருசமாச்சு அவன பார்த்து. பின்னாடி ஒரு நாள் வேறொரு சோலியா அந்தபக்கம் போனப்போ தான் கவனிச்சேன், பருவமழையில சாயம் கரைஞ்சு காவியும் கருப்புமா கலந்து கிடந்த அவன் சட்டித்தலைக்கு கீழே, அந்த கனகாம்பர கலர் வெளுத்து போன அங்கராக்கு இன்னும் கொஞ்சம் பெருசா கிழிஞ்சு, வெளியே தெரிஞ்ச வக்கபுல்லுல... ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சு பொறிச்சிருந்தது.. 'ம்ம் எல்லாப்பயலும் ஒரு நா சடஞ்சு போயித்தான ஆகனும்'.நன்றி : கலீல்ஜிப்ரன் (கொஞ்சம் ஓவராத்தான் போறனோ!)

--
#240

Monday, July 23, 2007

கிரீடம்!விளையாடு விளையாடு..

ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு..(உங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்யா இருக்கு.. ஆனா ப்பினிஷிங் சரியில்லையே!)

--
#239

Thursday, July 19, 2007

டாக்டர்!

இனவெறியை எதிர்த்து போராடிய இணையில்லா போராளி, தன்னம்பிகை ஊற்று, இளையசமுதாயாத்தின் வழிகாட்டி, தாய்நாட்டின் பொறுமை குணத்தை வெளிநாட்டிலே தூக்கிநிறுத்திய 'பெரியண்ணன்' புகழ், சில்ப்பாசெட்டி அவர்கள் இனிமேல் டாக்டர்.சில்ப்பாசெட்டி என்று அழைக்கப்படுவார்..
செய்தி

--
#238

நான்.. நான் நானும்

எல்லாரும் பொகைப்படபோட்டியில கலந்துக்கறாங்க.. நாம மட்டும் ச்சும்மா இருந்தா என்னத்துக்கு ஆகறது..

நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன் :)

இதோ என் பங்குக்கு..


ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. இது என்னமோ 'நடுவர்'க தேர்ந்தெடுக்கிறதாம்.. இதுல நம்ம ரெட்ஃபயர் வேற என்னமோ சலுகை எல்லாம் குடுத்திருக்காரு.. ம்ம் அதுக்காக..
போட்டின்னு வந்துட்டா, நாங்க டவுசர் கழன்டாலும் பரவாயில்லைன்னு ஓடி காட்டிருவமில்ல :)


மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்.

---
#237

Friday, July 13, 2007

மன்சூர்..!!

இப்படி ஒரு போஸ்ட்டர் அடிக்கிற லொல்லு எவனுக்கும் வராது.. :)

அய்யா சாமீ முடியல..வாரக்கடைசியில சன்ம்யூசிக்'ல மன்சூர் யாராவது பார்த்தீங்களா... ரொம்ப ஓவர் மன்சூர்.. போன் செய்யறவன் கிட்ட.. ஆமா உனக்கெல்லாம் வேலையே இல்லையா சினிமாக்காரன் டீவி'யில வந்தா கூப்பிட்டா நல்லாயிருக்கியான்னு கேக்கற. இல்ல அழகா ஒரு புள்ளை இருந்தா கூப்பிட்டு கல்லை போடுற, எதாவது வேலை வெட்டி இருக்கா இல்லையா'ன்னு இந்தாளு கேக்க கூட நின்ன தொகுப்பாளர்.. பாவம்.. சிரிச்சு சிரிச்சு சமாளிச்சாரு.. :)

இன்றைய படிப்பினை

ஒவ்வொரு நாளும் ஒரு புது விசயம் தெரிஞ்சுக்கனும்னு சின்னவயசில வூட்ல சொல்லி சொல்லி வளத்தாங்க, தினமும் 8.30 மணிக்கு ரேடியோ முன்னாடி உக்காந்து கோவைவானொலி'யில சொல்ற பொது அறிவு வினா எல்லாம் நோட்புக்குள எழுத சொன்னாங்க.. ம்ம்.. நம்ம என்னைக்கு பிறாத்தியார் சொல் கேட்டிருக்கோம்..

அப்படி இருந்தும் தினம் தினம் எதாவது ஒரு படிப்பனைய இந்த ஒலகம் நமக்கு கத்துகுடுத்துகிட்டே தான் இருக்கு.. இப்படித்தான் பாருங்க போன வாரம் சனிக்கிழமை புல்லா 'வட்ட'கணக்கில்லாம கையெழுத்து உள்ள போனதுக்கப்புறம் இனிப்பான பால்கோவா சாப்பிட்டு அப்புறம் ஏற்ப்பட்ட சிலபல பாதிப்புல இருந்து ஒரு படிப்பினை நமக்கு கிட்டுச்சு..
(என்ன ஏதுன்னு ரொம்ப விவரம் வேணும்ங்கிற குழந்தைகளுக்கு எல்லாம்.. இதெல்லாம் வளந்தபசங்க சமாச்சாரம். வயசு வந்ததுக்கு அப்புறம் படிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்.. ஓக்கே!)சரி அது ஒரு சோக கதை, அதை விடுங்க.. இன்னைக்கு ஒரு படிப்பினை கிடைச்சுது நமக்கு.. உங்களுக்கும் சொல்லலாம்னு ஒரு ஆசை.. இதோ..

நிறையாப்பேர் ஒரே மாதிரி சிந்திச்சா, அதாவது பெருவாரியான மக்கள் நினைக்கறதையே நினைச்சாக்க, அவுங்க எல்லாம் :
ஆட்டுமந்தைகள், சாமானியர்கள், பாமரர்கள், சராசரி மனிதர்கள், கோயிஞ்சாமிகள், சுயசிந்தனையற்று மனிதர்கள் எனும் பேரில் உலாவும் #$^%^^&***'

ஒரு சிலர் மட்டும் ஒரே மாதிரி சிந்தித்தால், அதாவது கண்டிப்பா மெஜாரிட்டி கிடைக்காதுங்கிற கருத்தை நினைச்சா (உறுதி செஞ்சுகிட்டு) அவர்கள்:
இன்டெலக்ச்சுவல்கள், புத்திசாலிகள், எலக்கியவாதிகள்.நீ எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது.. அதெல்லாம் நல்லதுக்கில்ல.. ஆமாம்..!! :)

இதை இன்று தன்னுடைய அயரால வேலைப்பளுவிக்கிடையே எனக்கு விளக்கு எனக்கு ஞானோபதேசம் செய்த #$^$^#$^#$^***** நண்பனுக்கு நன்றி..!!

--
#235

Wednesday, July 11, 2007

'வாழக்கா பச்சி' - சமைப்பது எப்படி?

ஊரு உலகத்துல இப்போதைக்கு சமையல் பதிவு போடுறது தான் வழக்கா இருக்கு, நம்ம தான் எப்பவும் ஊரோட ஒட்டாத பயன்னு விலக்கி விலக்கி விட்டுறானுகளே, அதுனால இந்த தடவை ஊரோட ஒட்டி நானும் ஒரு சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டுறலாம்ன்னு பார்க்கிறேன்.

உனக்கு சமைக்கிறது பத்தி என்ன தெரியும்னு நீ இப்ப சமைப்பது எப்படின்னு எழுதப்போற?, அதுவும் பஜ்ஜி சமைக்கிறது பத்தி!!

இந்த லோலாயி பேச்செல்லாம் எல்லாம் எங்கிட்ட வேனாம், நம்ம சூப்பர் ரைட்டரு கூடத்தான் திரைக்கத எழுதறது எப்படின்னு புஸ்த்தகம் போட்டிருக்காரு, அவரு சோலோவா எத்தன வெற்றிகரமான திரைக்கத எழுதியிரருக்காரு சொல்லுங்க பார்ப்போம், அனுபவிச்சு எழுதறது ஒரு வகைன்னா அனுபவத்துல எழுதறதும் ஒரு வகை, நான் ரெண்டாவது வகையரான்னு வச்சுக்கோங்க.

ஒரு வாழக்கா பஜ்ஜி'க்கு இவ்ளோ பெரிய பேர இழுக்கறதெல்லாம் நல்லாயில்ல, பிரகாசரு சப்பாட்டிகல்ல இருக்காருங்கிற தகிரியமா? சரி அத விடு, அப்படி என்ன பஜ்ஜி அனுபவம் இருக்கு உனக்கு.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலுக்கு பொறவால இருக்கற போண்டா செட்டியார் கடையில ஆரம்பிச்சு கோயமுத்தூர் மரக்கடை மலையாளத்தான் கடை, மாம்பலம் ஆரியகவுடா வீதி, இன்னைக்கு மடிவாலா ஐயப்பன் கோவில் கிட்ட நிக்குற தள்ளுவண்டி, காந்திபஜார் டீ.வீ.ஜீ ரோடு கடைசியில இருக்கிற ஐயர் கடை, ஹனுமந்த்நகர் பஸ்டாப்புல ரஜினி வூட்டுக்கு திரும்புற திருப்பத்துல ராத்திரி பத்து மணிக்கு சூடா கிடைக்கிற பஜ்ஜி வரைக்கும் என்னோட பஜ்ஜி வரலாறு சொல்ல ஆரம்பிச்சா அப்புறம் இன்னைக்கு பூராவும் முடியாது, ஆனா என்ன படிக்கறவங்க பாவம், அதுக்காக பூகோள சுருக்கத்தோட நிப்பாட்டிக்கிடுறேன்

சரி பேசிகிட்டே இருக்காத 'எப்படி சமைக்கிறது'ங்கிற சமாச்சாரத்துக்கு வா

வந்தாச்சு வந்தாச்சு. முதல்ல பஜ்ஜி மாவை அளவா உப்பு போட்டு நல்ல தண்ணி வுட்டு கொஞ்சம் கெட்டியா கரைச்சுக்கனும்

பஜ்ஜி மாவா? அதென்னடா அது, அது எங்க கிடைக்கும்.

அட அன்னைக்கு இடுப்பு வரைக்கும் ஒத்த பின்னலும் டைட் ஜீன்ஸுமா ஒரு புள்ளைய பார்த்தமோ, அந்த கடையி பேரு என்ன

இந்தியன் ஸ்டோரு

ஆங். அதேதான் அந்த கடையில கூட வடக்க மூணாவது சந்துல நாலாவது ராக்குல மேல் வரிசையில கூட பஜ்ஜி மாவு வச்சிருந்தாங்க, அதுவும் அனில் மார்க், அங்கயெல்லாம் கிடைக்குது, உனக்கு கிடைக்காத, தெருமுக்கு அண்ணாச்சி கடையில போயி கேளு தருவாரு.

சரி விடு, அண்ணாச்சி கடையில அக்காச்சி சாயங்காலமா தான் வரும், அப்ப போயி வாங்கிட்டு வந்திடுறேன், நீ மேல சொல்லு

நல்ல வாழக்காயா வாங்கிட்டு வந்து தோலை லேசா சீவிட்டு அரிஞ்சு வச்சுகிற. வடக்கஞ்சேரிக்காரன் சிப்ஸ்'க்கு போடுற மாதிரி அரிஞ்சுடாத, நல்ல நீளமா அயிர மீனு அரியற மாதிரி அரியனும். அப்புறம் கரைச்சு வச்சிருக்கிற மாவுல உங்க எளையதளபதி அந்த சூ.. ச்சே யூத்து படத்துல சொல்லுவாரே 'அப்படியே லேசா வயசு பொண்ணு உதட்டுல முத்தம் குடுக்கற மாதிரி பட்டும் படாம மாவுல முக்கி எடுத்து எண்ணையில போடனும்'

ஆமா, அதெப்படி பட்டும் படாம முத்தம் குடுக்கறது

அடப்பாவிகளா! ஏதோ ஜனரஞ்சகமா சொல்லுவமேன்னு எளைய தளபதி வசனத்த சொன்னேன், நான் எதோ ஹாலிடே ப்ரைம் டைம்'ல கேப் ஃபில்லிங்க்கு சமையல் ப்ரோக்ராம் சொன்னா நீ சனிக்கிழமை ராத்திரி லேட்நைட் ஸ்பாட்டுக்கு ப்ரோக்ராம் செய்ய சொல்லுவ போல இருக்கு. அதுக்கெல்லாம் வேற ஆளுக இருக்காங்க.. நமக்கு அந்தளவுக்கு அனுபவம் பத்தாது அதுல..

உனக்கு எதுல தான் பத்துற அளவுக்கு இருக்குது, சரி, பஜ்ஜி சமாச்சாரத்துக்கு வா..

இன்னும் என்னத்த வர்றது.. அதான் எண்ணையில போட்டாச்சே.. நல்லா செவந்து பொறிஞ்சதும் எடுத்து சல்லடை பாத்திரத்துல போட்டு வை. வீட்டுல என்ன பேப்பர் வாங்கற.

ஒன்னாம் நம்பர் தான்

ஒன்னாம் நம்பரா, நீ ரத்தத்தின் ரத்தமாச்சேடா,, நீயுமா? சரி நீயெல்லாம் சகாயத்துல கிடைச்சா சாணிபவுடர கூட சரஞ்சரமா சாக்குல கட்டி வாங்கிற சல்லிபயலாச்சே வேற எத வாங்குவ.
(ஆஹா தொடர்ந்து எத்தன 'ச', மடிச்சு போட்டு எழுதனா அடுத்து கவித எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு கூட வரும் போல இருக்கே)

அதெல்லாம் நீ பேசாத, பேப்பர் வச்சு என்ன செய்யறதுன்னு மட்டும் சொல்லு

பேப்பர் வச்சு எண்ணைய இழு. அந்த பேப்பர் என்னைய இழுக்கலைன்னாலும் எண்ணை நல்லா இழுக்கும். இழுத்ததும், வரமிளகாய் போட்டு ஆட்டுன தேங்காய் சட்னிய தொட்டுகிட்டு கணக்கு பார்க்காம சாப்பிடு, மழை காலத்துல இதமா இருக்கும்.

அடப்பாவி இந்த குறிப்பு சொல்லவா இந்த பாடு படுத்துன.. நாங்கெல்லாம் மழை காலத்துக்கு அடுத்த வீதி கவுடாஷாப்'ல போயி ஒரு பாட்டிலும் கூடவே சூடா ஒரு பொட்டலம் சில்லி'யும் வாங்கிட்டு வந்து சன்னலோரம் உக்காந்தே சொர்க்கத்த பார்துருவோம், பஜ்ஜி சாப்பிட்ட இதமா இருக்குமாம.. திருவாத்தானோட்ட பேசிட்டு கிடக்காத போயி ஆகிற வேலைய பாரு, சும்மா மொக்கைய போடாம..

(வேலையிடத்துல அழுத்தம் கொஞ்சம் ஓவராப்போச்சு அவ்ளோ தான், வேற ஒன்னுமில்ல, ஹி. ஹி.. )

---
#234

Thursday, July 5, 2007

அன்னமே, மது கிண்ணமே!அன்னம் போல ஆடையணிஞ்சு
அழகாக வந்தாயே.. இப்படி
அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

--
#233

Tuesday, July 3, 2007

மழை!


செய்தி 1: கோவைமாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
(அதான் மழை எல்லாம் நல்லா பேயுதே, ஊருலயே இருந்திடறது'ங்கிற சத்தம் இந்த வருசம் கொஞ்சம் கூடுதல் ஆகலாம்)

செய்தி 2: பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிடும்.
( ஏற்க்கனவே PAP திட்டத்தை ஒத்தக்கால் மண்டபம் வரை இழுத்துட்டீங்க, இதைய சாக்காட்டி இன்னும் இழுத்துறாதீங்கப்பு, அப்புறம் பாசனமண்டலத்துல வர்ற எல்லாருக்கும் உயிர் தண்ணி மட்டும் தான் விடமுடியும்)

செய்தி 3: வழக்கம் போல மழைக்காலத்தில் எங்கய்யன்னோடா பாட்டுக்கு நடுவே சொல்லாம கொள்ளாம 'மழையில் ஒரு மலைசவாரி' இந்த தடவையும் செஞ்சாச்சு
(கூடவே கட்டுனவ பாட்டும் இந்த தடவை கூடுதல் சேர்த்தி)

செய்தி 4: எங்க கிட்டயும் ஒரு டிஜிட்டல் கேமிரா சும்மாவே இருக்குது:)
(ஹி.ஹி)

(படங்களை அமுக்கி பெருசா பார்த்துக்கோங்க)

--
#232

Monday, July 2, 2007

பலிகுடுத்தா என்ன??
மிச்ச மீதி இருந்த ஆணியெல்லாம் புடுங்கிதள்ளிட்டு, புடுங்கிட்டதா பேரு பண்ணிட்டு, ராவோட ராவா கிடைச்ச வண்டியில ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா நின்னு நின்னு ஊருக்கு போயி, வழியில வர்ற சொந்தபந்தங்களையெல்லாம் பார்த்து ஒரு டீத்தண்ணி குடிச்சுட்டு, தோட்டத்து பக்கம் ஒரு சுத்து சுத்தி வந்து மழைக்காலத்து மராமத்து வேலைக்கு ஆள் சொல்லிவிட்டு, கிடைச்ச நேரத்துல நம்ம அம்மிணி வூட்டுக்கு வேற போயி நலம் விசாரிச்சு, குதூகலப்படுத்தி, பக்கத்துலயே நடக்கிற இணையநண்பர்கள் சந்திப்புக்கு கூட போகமுடியாம அடிச்சு தாக்குற மழைக்கு நடுவால பொறுப்பா எல்லா வேலையும் முடிச்சு, கடைசி சீட்டு கிடைச்சாலும் பரவாயில்லை நாளைக்கு காலையில கூலிக்கு போயே ஆகனும்னு ராத்திரி சொகுசுபேருந்துல ஏறி, நல்லவேளை இப்ப எல்லாம் இந்த தெருமுக்குல வாங்கின இந்த இழவெடுத்த டிவிடி'ய போட்டு இவனுக தூக்கத்த கெடுக்கறதில்லைன்னு நினைச்சுகிட்டே கொஞ்சம் சந்தோஷமா, தூக்கி தூக்கி போடுற கடைசியில உக்காந்தா, ஆப்பீஸ்ல குடுத்த ஏசர்'ல கசகசன்னு பாதிபடம், அதுவும் ஒரு கோணத்துல கேவலமா தெரியற இணையத்துல திருட்டுதனமா இறக்குன 'போக்கிரி'ய போட்டு உக்காந்து சீன் குடுத்தானே.. முன்சீட்டுல இருந்த ஒரு 'மாப்ள' அப்ப தோணுச்சுங்க.. இவனுகள எல்லாம் பலிகுடுத்தா என்ன??

--
#231

Wednesday, June 27, 2007

நான் செய்த அருஞ்சாதனை..

இங்க ஒரு எட்டு வந்து எட்டு போட்டுட்டு போங்கன்னு ப்ரசன்னா நம்மள கூப்பிட்டுருக்காரு.. கொஞ்ச நாளா அதிகம் இந்த பக்கம் வராதவனுக்கு ஒரு புடி கிடைச்சிருக்கு.. இத வச்சு எப்படியும் ஒரு பதிவை போட்டு மக்களை மகிழ்ச்சி கடல்ல இறக்கி விட்டுறதுன்னு முடிவு செஞ்ட்டேன்..

நான் செயத அருஞ்சாதனைகள் என்னன்னு உக்காந்துட்டு யோசிக்கிறேன்.. நடந்துட்டு யோசிக்கிறேன்.. படுத்துட்டு யோசிக்கிறேன்... விடிய விடிய யோசிக்கிறேன், ஒரு கிரகமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்க மாட்டேங்குது.. இதென்றா வம்பா போச்சு அந்தளவுக்கா நம்ம ஞாபகமறதி அதிகமாயிருச்சுன்னு விசனத்தோட உக்காந்திருக்கவன் கொமட்டுல இடிச்சு "நீ எதாவது சாதிச்சிருந்தாத்தானே ஞாபகம் வரும்ன்னு வூட்டம்மிணி சொன்னதும் தான் எனக்கே தெரியுது.. நிசமாலுமே நம்ம ஒரு சாதனையும் செய்யலைன்னு :(.. என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு மனசு வெறுத்து போயி டீவி பொட்டி முன்னாடி போயி உக்காந்தனுங்க.. அதுல கனா காணும் காலங்கள்' சட்டுன்னு அந்த படத்துல நம்ம 'திவ்யா'ம்மா உலுக்குவாங்களே 'அது எப்படிடா ஒன்னுமே தெரியாம ஒருத்தன் இருப்பான்னு' அந்த காட்சி நம்ம முன்னாடி வருது.. ஆஹா அந்த மாதிரி எம்புட்டு சாதனை செஞ்சிருப்போம்.. அதை லிஸ்ட் போட்டு குடுக்கறதவிட்புட்டு இப்படி இடிஞ்சு போயி உக்காந்திருக்கயே ராசா'ன்னு சட்டுன்னு ஒரு.. அது என்னாங்க சொல்லுவாங்க. .. ஞானமா.. ம்ம் அதுதான் அது கிட்டிருச்சுன்னு வையுங்களேன்..

எழுத ஆரம்பிச்சா லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது.. எட்டு தான் போடனுமாமே, நாம பொதுவா எந்த சட்டதிட்டத்தையும் மதிக்கறதில்லைன்னாலும்.. கூப்பிட்டவங்க சொல்லியிருக்காங்க.. அந்த மரியாதைக்காக நான் செஞ்ச சாதனைகள்ல பெரிய சாதனையா ஒரு எட்டு மட்டும் இங்க.. (முழு சாதனை லிஸ்ட்டும் கேட்டு 'சுகப்படனும்னு நினைக்கிறவங்க, தனியா ஒரு மயில் தட்டிவுடுங்க)


1. என் வாழ்க்கையில ஒரே ஒரு முறை தான் மேடை ஏறி பாடியிருக்கேன்.. நாலாப்பு படிக்கும் போது, ஈரமான ரோஜாவே :) அதுல நமக்கு கிடைச்ச முதபரிசு.. அதுக்கப்புறம் அந்த கொடுமைய என் கல்யாணத்துல மட்டும் தான் செஞ்சேன்.. வேறஎப்பவுமே மேடையேறி பாடினதே கிடையாது.
(உங்கம்மா டீச்சரு அதுனால உனக்கு முதபரிசு குடுத்துட்டாங்கன்னு இன்னைக்கு வரை சொல்லி சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்கான் ஒருத்தன்)

2. ஊர் உலகத்துல நாய் கடிச்சவன், தேள்கடிச்சவன் இருக்கான்.. ஏன் புலி சிங்கம் கடிச்சவன் கூட இருக்கான்.. ஆனா பெருச்சாளி கடிச்ச முத ஆள் நீதான்டா'ன்னு எங்க தெருடாக்டர் (குடும்பத்துக்கு வைத்தியம் பார்த்த குடும்படாக்டர், தெருமுச்சூடுக்கும் இவரே அத்தாரிட்டி அதுனால தெருடாக்டர்) என்னைய பார்த்து ராத்திரி ரெண்டு மணிக்கு விழுந்து விழுந்து சிரிச்சது ஒரு சாதனை.
(நான் செஞ்ச சாதனையா இல்ல பெருச்சாளி செஞ்ச சாதனையான்னு தெரியல..எப்படியோ ஒரு சாதனை)

3. முதமுதலா கியர் வண்டி -பைக் ஓட்டி பழகறீங்க, எங்க ஓட்டுவீங்க.. ஒரு க்ரவுண்ட்லயோ இல்லா அதிகம் போக்குவரத்து இல்லாத வீதியா பார்த்து ஓட்டுவீங்க.. நாம அதுல ஒரு சாதனை செஞ்சோம்.. முதல்முறையா கியர் வண்டி ஓட்டுனது தொடர்ந்து 55கிமி, வால்பாறை டவுன்ல இருந்து ஆளியார் வரைக்கும். 40+ கொண்டைஊசி வளைவுக இருக்கிற மலைப்பாதை. சமீபத்துல கூட ரெண்டு நாள்ல 1300 கிமி தூரம் பைக்ல சுத்திட்டு வந்தேன்னாலும், முத தடவை பை ஓட்டத்தெரியும்னு பொய் சொல்லி பைக் எடுத்துட்டு அந்த பாதைய எப்படி தனியா, அதுவரைக்கும் கியர் வண்டி ஓட்டாத நான் ஓட்டிட்டு வந்தேங்கிறது இன்னைக்கு வரைக்கும் எனக்கே ஆச்சிரியம் குடுக்கிற சாதனை.
(பொள்ளாச்சி வரைக்கும் வராம ஏன் ஆளியார் வரைக்கும்தான் வந்தேன்னு தோணலாம்.. அது ஏன்னா.. மலைப்பாதையில ஒழுங்கா வந்த நான் சமவெளிக்கு வந்ததும் தடுமாறி விழுந்து ஹேன்டில்பார் திரும்பி.. அப்புறம் அங்க இருந்து வண்டிய தள்ளிட்டு வந்து போன் போட்டு ஒரு சகாவ வரசொல்லி ஊருக்கு வந்து சேர்ந்தேன்)

4. தமிழகத்தின் மாபெரும் பொழுதுபோக்கான 'சீரியல் பார்க்கிறதுங்கிற சமாச்சாரத்துல இது வரைக்கும் ஈடுபட்டதே இல்லை.. வெளிமாநிலத்துல /நாட்டுல பொட்டிதட்டுற ஜென்டில்மேன்-லேடீஸ் எல்லாம் இருப்பீங்க இந்த லிஸ்ட்ல், ஆனா நான் வூட்ல இருந்த காலத்துலயும், வூட்டாளுக சீரியல் பார்த்த காலத்துலயும் சரி, இன்னைக்கு வரை எந்த டீவியலயும் எந்த மெகா தொடரையும் ஒரு எபிசோட் கூட முழுசா பார்த்ததில்லை.
(எங்கம்மா சின்ன வயசுல 'ரயில்சினேகம்' முச்சூடும் பார்த்தியேன்னு சொல்றாங்க.. நமக்கு 'இந்த வீனைக்கு..' பாட்டை தவிற வேற எதுவும் ஞாபகம் இல்லை. அப்படியே இருந்தாலும்.. அது அறியாத வயசு, இப்போ தினமும் காய்கறி அரிஞ்சு குடுக்கற வயசு)

5. வலையுலகத்துலயே, ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே மாபெரும் வெற்றி பெற்ற 'அந்த' படத்தை பத்தி பதிவு எழுதாத ஆள் நான் ஒருத்தன் தான்ன்னு நினைக்கிறேன், இதுவும் ஒரு சாதனை.
(ஆனா படத்தை மட்டும் வக்கனையா ரெண்டு தடவை பார்த்து தொலைச்சுட்டேன்.. என்ன செய்யறது நம்மள ஓசியில பார்க்க விடுற ரெண்டு தியேட்டர்லயும் ஓடுதே)

6. தீபாவளிக்கு ரிலீஸ் ஆனா அஞ்சு படத்துல நாலு படத்தை ஒரே நாள்ல பார்த்துட்டு, அடுத்த நாள் செமஸ்டர் பரிட்ச்சை முடிஞ்சதும் அவசரமா மெஸ்ல கொட்டிகிட்டு விட்டுபோன அந்த அஞ்சாவது படத்தையும் மேட்னி பார்த்தது. இது தனி மனித சாதனை இல்லைங்க.. இந்த தேசத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமுதாயத்துல இருந்து 'நாலு' பேர் சேர்ந்து செஞ்சது.
(நாலாவது படத்துக்கு அஞ்சாவது படத்துக்கும் நடுவால ஒரு பேப்பர் எழுதினனே, அது ஒன்னு மட்டும் ஏழாவது செமஸ்ட்டர் வரைக்கும் கூடவே வந்து காட்டுன 'த்ரில்' இருக்கே அது அந்த நாலு படம் பார்க்க ஒவ்வொரு தியேட்ட்ர்ல இருந்து அடுத்த தியேட்டர் வரைக்கும் ப்ரூட்டி குடிச்சுகிட்டே ஓடுனப்பா கூட கிடைக்கலைங்க)

7. உலக வரலாறுலயே ஒரு செமஸ்ட்டர்ல துவைச்சுகாயப்போட்டுட்டு (வாஷஅவுட் ஹி ஹி) ஆயிட்டு அதுக்கு அடுத்த செமஸ்ட்டர்ல வழக்கம்போல ப்ராக்டிக்கல்ல ஆப்பு அடிச்சும், க்ளாஸ் பர்ஸ்ட் எடுத்து சாதனை செஞ்சது நான் மட்டும் தான்னு எங்க 'தல' (HOD) பெருமையா சொன்னாரு.. எங்கய்யன்கிட்ட.
(ஆனா, நான் வாஷஅவுட் ஆன விவரம் அதுக்கு முன்னாடி எங்கய்யனுக்கு தெரியாதுங்கிறது தான் இதுல கொடுமை :( )

8. தனியா படிக்க ஒரு புஸ்த்தகம் இல்லாம, பாட்டு கேக்காம, பேச கூடமாட ஒருத்தர் இல்லாம, அட புட்டியோ, புகையோ கூட இல்லாம, சும்மாவே மூணு நாள் இருந்திருக்கீங்களா.. வெளிய அடிச்சு கொட்டுற மழைய பார்த்துகிட்டு, ரெண்டு பாக்கெட் ப்ரட்டை அப்பப்போ சிம்னிவிளக்கு மேல ஈயத்தட்டை வச்சு டோஸ்ட் செஞ்சு சாப்டுகிட்டு, இளநி குடிச்சுகிட்டே மூணு நாள் உக்காந்திருக்கேன் எங்க தோட்டத்து சாலையில.. :)
(இதுக்கு பேரு சாதனையா, கிறுக்குபுடிச்சு கிடந்திருப்பன்னு சொல்றீங்களா.. இருக்கலாம்.. அந்த கிறுக்கு இப்பவும் தெளிஞ்சதா எனக்கு தெரியல :). ஒரு போட்டிக்காக செஞ்ச வேலை அது.. ஜெயிச்சதுல எனக்கு கிடைச்சது இன்னைக்கு தேதியில சவுத்ல most charming'ன்னு என் பக்கத்து கூட்டு திருப்பதி இளஞ்சிட்டு மெச்சறவனோட நட்பு )


அப்பா எப்படியோ முக்கி தக்கி நான் செஞ்ச சாதனைக லிஸ்ட்ல இருந்து ஒரு எட்டே எட்டை எடுத்து விட்டிருக்கேன்.. நேரம் கிடைக்கும் போது மிச்ச சொச்சத்தையும் லிஸ்ட் போடுறேன். ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதா :)

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
நான் கொஞ்சம் தமிழ்பதிவு உலகத்தை க்ளோசா ஃபாலோ செய்யலை கொஞ்ச நளா,, அதுனால யாரு இன்னும் சாதனைய சொல்லல, இன்னும் யாருமே கூப்பிடாம இருக்காங்களோ, அப்படி யாரும் இருந்தா, இந்த பதிவ படிச்சா.. சட்டுன்னு பின்னுட்டத்துல சொல்லிட்டு நிங்களே இந்த சங்கிலிய இழுத்திருவீங்களாம் . சரியா.. (உன் சோம்பேரித்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லாம போகுது ராசா)

--
#230

Monday, June 18, 2007

ஒரே கேள்வி!

புதுசா ஒன்னுமில்லைங்க..
ரொம்ப நாளாவே மனசுல இருக்கிற கேள்விதான்..
இன்னைக்கு பொதுவில கேக்குறேன் அவ்ளோ தான்..
" இவுங்களுக்கெல்லாம் நிசமாலுமே அறிவு இல்லையா..
இல்ல, அறிவு இல்லாத மாதிரி நடிக்கறாங்களா "--
#230


Thursday, June 14, 2007

சிக்'ன்குனியா !!

கேரளாவுல சிக்கன்குனியா பரவலா இருக்குதாங்க.. ஆறு மாசம் முன்னாடி நம்மூர் பக்கமெல்லாம் ஒரே ரகளையா இருந்துச்சு, ஆளாளுக்கு முட்டிய புடிச்சுக்குட்டு படுத்திருந்தாங்க.. எல்லா க்ளினிக்'லயும் ஹவுஸ் புல் போர்ட் மாட்டாத குறை..

க்ளினிக் பக்கத்துல இருந்த ஷெட்ட வாடகைக்கு புடிச்சு அங்க பெட் போட்டு க்ளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு ஒரு பெரிய கலெக்ஷ்ன் பார்த்தாங்க. :)

நம்ம சகா ஒருத்தன் மெடிக்கல்ஷாப் வச்சிருக்கறவன்.. 'அது பொற்க்காலம்'ன்னு சொன்னது இன்னும் மனசுல இருக்கு.

இப்ப கேரளாவ ஆட்டிவச்சுட்டு இருக்குதாம், பருவ காத்து வேற அடிக்க ஆரம்பிச்சிருக்கு, மழை கொஞ்சமா வருட்டுமா வேண்டாமான்னு போக்கு காட்டிட்டு இருக்கு.. கொசுவுக்கு அருமையான காலம் தான்.. :( அதுனால நம்மூரு பக்கம் எல்லாம் கொஞ்சம் கிலியாத்தான் இருக்காங்க..

கேரளாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு பரவாம இருக்க தமிழக அரசு முன்னேற்ப்பாடு செஞ்சிருக்குன்னு சொன்னாங்க.. சந்தோசமா இருந்துச்சுங்க .. கொஞ்ச நேரம் வரைக்கும்..

என்ன முன்னேற்ப்பாடுன்னா? பெரிய ஆஸ்பத்திரியில எல்லாம் மருந்துக்கு ஆர்டர் குடுத்திருக்காங்களாம், அதுபோக, கேரளா பார்டர் தாண்டி வர்ற எல்லா வண்டியயும் நிறுத்தி கொசுமருந்து அடிக்கறாங்களாம்.. சித்த முன்னாடி எங்கய்யன் 'பார்டர்' தாண்டி வந்தப்போ அடிச்சிருக்காங்க.. 'சுத்தி சுத்தி அடிக்கறானுக.. டிக்கு ஓப்பன் செய்ய சொல்லி வேற அடிச்சானுக'ங்கிறாரு..

அடப்பாவிகளா.. கொசு பஸ் / வேன் புடிச்சா வருது.. !!

என்ன கொடுமைங்க சரவணன் இது.. :(

நம்ம அரசாங்க இயந்திரத்தோட கடம உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சு.. பார்டர் தாண்டி மேஞ்சுட்டு வர்ற எருமைமாட்டுக்கு மருந்து அடிக்கனும்னு கணக்கு எழுதி அள்ளாத வரைக்குஞ்சரி..

--
#229

நான் தான் பேசுறேன்

ஒருத்தரை தொலைபேசியில கூப்பிட்டு, அவர் அந்த பக்கம் ஹலோ'ன்னு சொன்னதும் 'டேய், நான் தான் பேசுறேன்' / 'நான் தாம்பா பேசுறேன்' / நான் தாங்க பேசறேன்'னோ சொல்றவங்க அத்தனை பேரும் நரகத்துல அரக்கன் கையால எண்ணைச்சட்டியில வறுபடுவாங்கன்னு யாராவது ஒரு ஸ்ரீ ஸ்ரீ டகால்டியானந்தா சுவாமிகள் மாதிரியான ஆளுகலாவது அறிவிச்சிடுங்கப்பா..

:(இவுங்க ரவுசு தாங்கமுடியல.

மத்த நேரத்துல கூட சரிங்க, ஆனா, காலங்காத்தால பெங்களூர் ட்ராபிக்க நொந்துகிட்டு சிக்னல்ல கியரும் க்ளட்ச்சுமா நிக்கும் போது சுத்தியும் அத்தனை சத்தத்துக்கு நடுவால காதுல மாட்டியிருக்கிற ஈயர்போன்ல 'நான் தான் பேசுறேன்'னு சொன்னா.. ங்ஙொய்யால.. நல்லா வருது வாயுல..
சில நேரம் நம்ம மாமனார் வீட்டு ஆளுகலும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க.. அதுனால 'நா காக்க' வேண்டியிருக்கு..

மனுசனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாருங்க.. ச்சே :)

img : http://www.jezblog.com/

--
#228

Friday, May 18, 2007

களப்பணியாளர்

Field work செய்யறவங்களை 'களப்பணியாளர்'ன்னு சொல்லலாம்.. (நாங்கெல்லாம் பல தேர்தல்ல பல கட்சிகளுக்கு களப்பணி ஆற்றியிருக்கோம்)சரி.. அதுக்காக க்ரிக்கெட் Fielderகளப்பணியாளர்'ன்னு சொல்லாமா??

இன்னைக்கு காலையில முத பந்துல வாசிம்ஜாபர் 'இன்னாங்கடா நடக்குது இங்க'ன்னு சோகத்தோட வெளியபோன ஆட்டத்த 'ராஜ் டி.வி'யில பார்க்கும் போது காதுல விழுந்த ஒரு வர்ணனை

'அந்த பந்தை களப்பணியாளர் சரியாக கணித்து பிடித்தார்'..

சரிதானா??

--
#227

Tuesday, May 15, 2007

சுகமோ சுகம்..

மழையை பார்ப்பதும் சுகம்
மழையில் நனைவதும் சுகம்
மழையை பற்றி எழுதுவதும் சுகம்
மழையை பற்றி பேசுவதும் சுகம்
மழையை படம் புடிப்பதும் சுகம்..வெளிய வெய்யில் போட்டுதள்ளுற சோம்பலான ஒரு விடுமுறையில மதியத்துக்கு வூட்டம்மிணி வச்ச மோர்க்குழம்பும் வெண்டக்காய் பொரியலும் தக்காளிரசமும் ஒரு கட்டு கட்டிட்டு மூணுபக்கமும் தலைகானி வச்சுகிட்டு அரை மயக்கத்துல எந்த மொழின்னே தெரியாம ஒரு பாடாவதி படத்தை பார்த்துக்கிட்டு இருக்கும் போது லேசா இருட்டி மண்வாசனைய கிளப்பி சட்டுன்னு பெருமழையாகிற இந்த கோடைமழை சுகமோ சுகம்..
அதுக்கு அப்புறம் வந்த வெங்காய பக்கோடா வாசம் இன்னும் சுகம்.. :)

--
#226

Friday, May 11, 2007

குதம்பாய்..
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி!
குதம்பாய்..
காசு முன் செல்லாதடி!
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி!
குதம்பாய்..
குதம்பாய் காசு முன் செல்லாதடடி!
....

முட்டாபயலயெல்லாம் தாண்டவகோனே,ஏ..
சில முட்டாபயலயெல்லாம் தாண்டவகோனே
பணம் முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே!
....

கட்டி அழும்போதும் தாண்டவகோனே!
பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவகோனே,
பணப்பெட்டி மேல கண் வைய்யடா தாண்டவ கோனே!
....


மதியாணம் கே.டி.வி'யில பராசக்தி பார்த்த பாதிப்பு.. வேற ஒன்னுமில்ல.. :)pictures :
http://library.thinkquest.org
http://images.odeo.com/--
#225