Showing posts with label படிப்பினை. Show all posts
Showing posts with label படிப்பினை. Show all posts

Friday, April 25, 2008

ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.


"எல்லா ரிலிஜியனும் பழசாயிடுச்சு, எல்லாமே ஒரு மாதிரி பழைய சம்பிரதாயத்த வச்சுகிட்டு.. ஒரு கூட்டத்தோட கையில.. மோனோபாலியா போச்சு.. பேசாம நம்ம.. புதுசா ஒரு ரிலீஜியன் ப்ரபோஸ் செஞ்சிருவோம்.. ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.. புடிச்சவங்க யாரு வேணும்னானுல் சேரலாம்.. எல்லாரும் சேர்ந்து சரியான நெறிமுறைகளை சொல்லுவோம்.. ஒரு ப்ரெயின்ஸ்ட்ராமர் மாதிரி ரெகுலரா வச்சு ரீஃபைன் பண்ணிட்டே போவோம் எப்படி.. !"


காலங்காத்தால ஆறரை மணிக்கு ஒருத்தன் கைபேசியில கூப்பிட்டு இப்படி சொன்னா, நீங்க என்ன செய்வீங்க?..

நான் என்ன செஞ்சனா..?

"இதுக்கு தான் நைட்டே சோடா நிறையா ஊத்திக்கோ ஊதிக்கோன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. தங்கச்சி எந்திருச்சிருந்தா சுடுதண்ணி விளாவிவச்சுட்டு சூடா ஒரு லெமன்கட்டன் சாயவோட ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பச்சொல்லிட்டு மறுபடி இறுக்கமா போத்தி தூங்கு மாப்ள"ன்னு சொல்லிட்டு நம்ம அம்மணி குடுத்த லெமன் கட்டன் சாயாவோட பால்கனியில போயி கொஞ்ச நேரம் காத்தார நின்னேன்..

'சாப்டும்' போது கண்டதையும் படிச்சுட்டு பேசாதீங்கடான்னா எவன் கேக்குறான்.. இப்படி நமக்கு காலங்காத்தால வெறி ஏத்தறானுக..

--
#266

Wednesday, December 19, 2007

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!


இன்றும் உன்னை மனதார விரும்புகிறேன்..
சிலநேரங்களில்...
உன்னுடன் சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பது எப்படி இருந்திருக்குமென்று எண்ணி வியக்கிறேன்.

ஒரு முறை ஒரே முறை 'நீ'யும் 'நானு'ம் என்பதை விட்டு மனம்திறந்து பேசியிருக்கலாம்.
ஆனால்,
நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த வெறுப்பு அதை செய்ய விடவில்லை.
இளரத்தம்.. கொஞ்சம் முரடனாய்தான் இருந்தேன்.
இன்னும் அந்த மிச்சம் இருக்கிறது.

என்னை முழுவதுமாக உன்னிடம் கொடுத்தேன், உன் அன்பினால் என்னை பாதுகாப்பாய் என்று,
உன்னை நம்பியதற்க்காக வருத்தபட வைத்தாய்,
கண நேரத்தில்
நம் வாழ்க்கையை சிக்கலாக்கினாய்.

நீயும் உன் அம்மாவும் நலம் என்று அறிந்தேன்.. யாரோ சொன்னார்கள்,
நீ மிகவும் சந்தோசமாக நல்ல வேலையில நல்ல முறையில் இருப்பதாக.
எனக்கு இன்னும் சந்தேகமுண்டு,
நானில்லாமல் நீ சந்தோசமாக இருப்பாயா என்ன?
தினம் தினம் உன் வாழ்க்கையில் நான் இல்லாமல், தனிமையில்..?

என்னை தவிக்கவிட்டிருக்கிறாய்..
ஓடவிட்டு
அலையவிட்டு,
மனம்குறுகச்செய்து..
நீ எக்காளமிட்டு கொண்டிருப்பாய்..
உள்ளே 'ஆண்பிள்ளை' கொதித்தெழுவான்..வெளியே புன்னகைப்பேன்..
நீ செய்த அத்தனையும் வெறுத்தேன்..
ஆனால்
உன்னை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்று மனதார நினைத்தேன்.

உன் அம்மாவும் நலமாக சந்தோசமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்..
ம்ம்... கண்டிப்பாக இருப்பார்கள்,
நான் உன்னைவிட்டு வெகுதூரம் தள்ளிவந்துவிட்டேனே, அதை தான் அவரும் விரும்பினார்.
உன் அம்மாவுக்காக தான் அத்தனையும் செய்தாய், என்னை நீ என்னை விட அதிகம் விரும்பியபோதும்.
சில நேரம் உனக்காக பரிதாபப்படுகிறேன்.. பாவப்பட்ட ஜென்மம் நீ!
உன்னால் உனக்கு கூட உதவிசெய்ய முடிவதில்லை, அவர்கள் மேல் நீ வைத்திருக்கிற அன்பினால்.

ஒரு நாள் நீ உணர்வாய் என்று நம்புகிறேன்..
நீ என்னை தவிக்கவிட்டதை,
என் வலியை..

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..
மனம்திறந்து நீ மன்னிப்பு கேட்பாய் என்று எண்ணி..
நடக்காத ஒன்று தான்..
இருந்தாலும் காத்திருக்கிறேன்..

அப்புறம் கடைசியாக..

நானும் நலமாக இருக்கிறேனென்று கேள்விபட்டிருப்பாய்..
அது நிஜம் தான்!!

--
வேறொரு 'நட்பு 'ஆங்கிலத்தில் எழுதியதை தழுவி எழுதியது.. !!

Tuesday, October 9, 2007

எனக்கு 'ஹேப்பி பர்த்டே ' :)

மூணு நாளு மாசம் முன்னாடியிருந்தே எனக்கு 'ஹேப்பி பர்த்டே வருது'ன்னு ஊரெல்லாம் சொல்லி திரிஞ்சுட்டு இருந்தது ஒரு காலம்.. புரட்டாசி கடைசியில வர்ற அந்த கிரகத்துக்கு நம்ம வூட்ல 'ஆடி தள்ளுபடி'யில ஒப்பனக்கார வீதியில அங்கராக்கு வாங்கிட்டு வந்துருவாங்களா, அப்ப இருந்து பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் 'எனக்கு ஹேப்பி பர்த்டே வருது' புராணம் தான்.

'க்வீ'பாலீஷ் பளபளக்க பாட்டா ஷூ போட்டுட்டு, முதுகுல புத்தகபொதியும், ஒரு கையில சாப்பாட்டு பையும், மறுகையில முட்டாய்பொட்டியுமா பள்ளிக்கூடம் போயி பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் எனக்கு ஹேப்பி பர்த்டே'ன்னு சொல்லி முட்டாயி குடுத்து, ரெண்டு மூணு முட்டாய் எடுத்துக்கிற மிஸ்'கள எல்லாம் மனசுகுள்ளாரயே திட்டிகிட்டு, இன்னைக்கு பூராவும் யாரும் நம்மள 'ஷோ யுவர் ஹான்ட்'ன்னு 'ஸ்டிக்' எடுக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல க்ளாஸ் லீடர் பேர் எழுதிவச்சாலும் பரவாயில்லைன்னு பக்கத்துல உக்காந்திருக்கிற சிவா'னையும், சுதா'வையும் வம்பிழுத்து பேசிகிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு போறதுகுள்ளார தீர்ந்துட போகுதுன்னு முட்டய் போட்டியில இருந்து ஒரு கை அள்ளி புத்தக பையில போட்டு வச்ச சரக்க அப்ப அப்ப தொட்டு தொட்டு பார்த்துட்டே சந்தோசமா போயிடும் ஒரு நாள் முழுசும்..

அப்புறம் ஒரு காலத்துல ஆடித்தள்ளுபடியில ஓடிப்போயி வாங்க வேண்டியதெல்லாம் இல்லாம என்னைய கூட்டிட்டு போயி புடிச்ச மாதிரி கோட்டும் டையும் 'பிங்கி ரெடிமேட்ஸ்'ல எடுக்கிற காலத்துல தான் புதுசா சாயங்கால நேரத்துல காலனியில சுத்துற எல்லா குரங்குளையும் கூப்பிட்டு 'ப்ரெட்டிஹவுஸ்'ல ஆர்டர் செஞ்ச கேக்கு மேல மெழுகுவர்த்தி எல்லாம் கொளுத்தி வச்சு அப்புறம் அதை ஊதி அணைச்சுட்டு கேக் வெட்டுற சடங்கெல்லாம்..

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வயசு ஏற ஏற, 'வயசு ஏற ஏற அறிவு ஏறும்னு' நாலு பேரு சொன்னதுல, நம்மளா நமக்கு அறிவு வந்திருச்சுன்னு நினைச்சுகிட்டு, பொறந்தநாளும் அதுவுமா இதென்ன ஊதி அணைக்கிற பழக்கம்னு 'வெவரமா' பேசி புரட்சியா கெளம்பி 'அன்னை இல்லத்து'க்கு போயி டொனேசன் ரசீது வாங்கிட்டு வந்திட்டிருந்தேன்..

இன்னும் கொஞ்சம் வயசு ஏறிப்போயி பொறந்தநாள் அன்னைக்கு வூட்ல இருக்க வேண்டியதில்லைன்னு ஆனதுக்கப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு புரட்சி பீர்பாட்டில்ல பொங்கிவர ஆரம்பிச்சுது..

மெதுமெதுவா.. நம்ம பொறந்த நாள நம்மளே கொண்டாட கூடாது, நம்மள சுத்தி நாலு பேரு அதை ஞாபக வச்சு கொண்டாடனும்னு தத்துவம் பேசிட்டு திரிஞ்சது சமீபகாலம் வரைக்கும்.. இன்னும் அப்படித்தான் நெனச்சாலும்.. 20 வருசம் முன்னாடி இருந்த கதை தான் இன்னைக்கும் ரிப்பீட் ஆகுது.. என்ன முன்ன நானே போயி ஊரெல்லாம் எனக்கு 'ஹேப்பி பர்த் டே'ன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இப்போ அந்த வேலைய எனக்கு பதிலா 'ஆர்க்குட்' செய்யுது :)

'வாழ்த்து சொன்ன சங்கத்து சிங்கங்களுக்கு, நண்பர்களுக்கும் நன்றி..

Monday, August 13, 2007

ர்ரிப்பீட்டு

கடைசியா அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு தை மாசத்து நிறைஞ்ச முகூர்த்த நாள்ல, வடக்கத்திக்காரங்க பாணியில கட்டுன ஒரு பஞ்சுமுட்டாய் கலர் பட்டுபுடவையில, லார்ட்ஸ் ஹாஸ்பிடல் சர்ஜன் 'ரஞ்சித்'கூட ஜோடியா நம்மூர் வழக்கப்படி 'வரவேற்ப்பு'க்கு நின்னப்ப பார்த்தது, அதுக்கப்புறம் இப்பத்தாங்க, நேத்து சகா ஒருத்தன வண்டி ஏத்திவிட போனப்ப எத்தேசையா சுமி'ய பார்த்தேன். கொஞ்சம் பூசினாப்புல ஆயிட்டா.




'ஹேய்..எப்படிப்பா இருக்கே?' இன்னும் கண்ணுல அதே சிரிப்பு..
'ரஞ்ச், இது ராஜ், என் ஸ்கூல்மேட், நம்ம மேரேஜ்ல மீட் பண்ணினது, டு யூ ரிமம்பர்?'.. டாக்டர் அப்ப மாதிரியே ட்ரிம்மா இருக்காரு.முன்னந்தலை தான் கொஞ்சம் ஏறியிருக்கு. கல்யாணத்தன்னைக்கு ஒரு பூங்கொத்து குடுத்து சம்பிரதாயமா பேசுனது, அதுவும் ஆறு வருஷம் முன்னாடி, பாவம் அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இருந்தாலும் 'யா!யா!..ஹவ் டு யு டூ?'ன்னு ஒரு ஆச்சிரிய புன்னகையோட கைகுடுத்தாரு.

ஒரு மாச லீவுல வந்திருக்காங்களாம், சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு, அப்படியே கொஞ்சம் ஊர்சுத்தல், இப்ப ரஞ்ச்'க்கு எதொ கான்ஃப்ரன்ஸ் அட்டன்ட் பண்ணனுமாம், அதுனால சுமி'மட்டும் சென்னையில இன்-லா வீட்டுக்கு போறதுனால ட்ராப் பண்ண வந்திருக்காராம்..
சுமி சொன்னத சுருக்கி குடுத்திருக்கேன், சரியான வாயாடி.. ஸ்கூல் படிக்கும் போது சுமி, மரக்கடை செட்டியார் பொண்ணு பொன்னரசி, நான், அப்புறம் துரை எல்லாரும் ஒரே பெஞ்ச். (ஃபார் யுவர் இன்போ : நாங்க படிச்சப்போ எங்க ஸ்கூல்ல நாலாவது வரைக்கும் தான் கோ-எட்) பக்கத்துல உக்காந்துட்டு, பெஞ்ச், டேபிள் எல்லாம் பென்சில்ல கோடு போட்டு, இதை தாண்டி உன் நோட்டு, பென்சில்பாக்ஸ் எதுவும் வரக்கூடாதுன்னு என்னையும் துரையனையும் ஒரு வழி பண்ணிருவா.. மிஸ் கிட்ட சொன்னாலும் கடைசியில எங்களுக்கு தான் திட்டு விழும், சில நேரங்கள்ல அடியும்.. ஏன்னா இவ வாய் சாமார்த்தியம் அப்படி, அது போக நம்ம துரையன் ட்ராக் ரெக்கார்ட் அப்படி..(நான் குட்பாய்!)

நாலாவதோட ஸ்கூல் மாறி போயிட்டாலும், அடுத்த வீதியில தான் சுமி'யும் இருந்தாங்கிறதுனால அந்த நட்பு மட்டும் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. நமக்கு சும்மா புஸ்தகத்தை பார்த்தாலே எதோ பேயடிச்ச மாதிரி ஆயிடும், தினமும் 'இப்படியே போனா நீ சினிமா கொட்டாயில முறுக்கு விக்கத்தான் போக போற'ன்னு தினமும் வீட்டுல சாபம் குடுப்பாங்க.. நமக்கு மனசுகுள்ள ஒரே சந்தோஷம், அப்படி போன தினமும் சினிமா பார்க்கலாமேன்னு, அதுனால நம்ம வீட்டாளுக எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி நான், சிவா, ஸ்ரீ, மங்கை அப்படின்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி பத்தாவது படிக்கும் போது எல்லாம் சுமி வீட்டுல தான் க்ரூப் ஸ்டடி..
எல்லாரும் ஒழுங்கா படிக்க, நான் மட்டும் மும்முரமா புஸ்தகத்தோட பின்னட்டையில படம் வரைஞ்சுகிட்டு இருப்பேன், சுமி' பயங்கிற தொணதொணப்பு, எதாவது பேசிகிட்டே இருப்பா. 'நான் இன்னைக்கு கருப்பு பென்சில் வாங்கினேன், கருப்பு பேனா வாங்கினேன், கருப்பு டாப்ஸ் வாங்க போறேன்னு, ஒரே கருப்பு புராணமா இருக்கும்..அவளுக்கு கருப்பு ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிருக்காம், 'ஐ ஹாவ் ஸ்டார்டர்ட் லவ்விங் ப்ளாக்'ன்னு அவ சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் தெரியும் அவ கண்ணுல.. கருப்பா ஒருத்தன தான் கட்டிக்குவேன்னு வேற சொல்லுவா..

நமக்கு வீட்டுல் உக்காந்து வரைஞ்சாத்தான் எங்க அம்மா 'படிக்கறத வுட்டுபோட்டு என்னடா எப்பப்பாரு கிறுக்கிட்டே கிடக்கற'ன்னு தொணதொனக்க ஆரம்பிச்சிருவாங்கன்னு இங்க வந்தா, இவ வேறன்னு ஒரே எரிச்சலா இருக்கும்.. இதுக்கு நடுவால மத்தவங்க வேற பயங்கிர படிப்பாளிக நம்மள இவகிட்ட விட்டுட்டு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டாங்கன்னா அவ்ளோ தான், சுமி'யோட அம்மா காம்ப்ளான் கொண்டு வந்தாத்தான் புஸ்தகத்துகுள்ளார இருந்து தலைய எடுக்குங்க.. அன்னைக்கு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டது, இன்னைக்கும் கம்ப்யூட்டருக்குள்ளார தலையவிட்டுட்டு கிட்க்கறாங்க.. ஒரு வித்தியாசமும் இல்ல..

அப்படி இருந்த நாங்க இந்த அஞ்சு வருஷமா மட்டுமில்லீங்க, அதுக்கு முன்னாலயும் ஒரு நாலு வருஷம் எந்த தொடர்புமில்லாம தான் இருந்தோம்.. அதுக்கு காரணம் 'சந்துரு', அவனும் எங்க செட்' தான். அவனுக்கு சுமி' மேல 'தெய்வீக' காதல், அப்படித்தான் எங்கிட்ட சொன்னான்!.. நான் இன்னொன்னு சொல்லலையே, சுமி' எங்க ஏரியாவும ரொம்ப பிரபலமான் 'பிகர்', தெரு முக்குல ஒரு கூட்டமே அவ தரிசனத்துக்கு நிக்கும், ஆனா நம்ம தான் பள்ளிகூடம் தாண்டுற வரைக்கும் பச்சபுள்ளையாவே இருந்துட்டமா, அதுனால அந்த தெரு முக்குல நிக்கிற சமாச்சாரத்துல எல்லாம் நான் (அப்போ!) கலந்துகிட்டதில்லைங்க..
(அவங்களும் நம்மள சேத்திக்கலைங்கிறது வேற விஷயம்)

அந்த கூட்டத்துல முக்கியமான் ஆள் இந்த சந்துரு'. நம்மகிட்ட வந்து 'மாப்ளே, நீ தான்எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்'ன்னு சொல்ல, அதுவரைக்கும் நம்மள ஒரு பொருட்டா கூட சீன்டாத பசங்க, நம்மள வந்து மாப்ளே'ங்கிறானுகன்னு ஒரு மிதப்பாகி நானும் பெருமையா அவன்கிட்ட இருந்து 'லவ்லெட்டர்' வாங்கி போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், அப்படியே இதை சாக்கா வச்சு, அவனுக கூட்டத்துல கலந்துடனும், நாமளும் அப்படியே ஒரு ஜமாவா தெருமுக்குல நிக்கனும்னு ஒரு நப்பாசை. எவ்ளோ நாள் தான் குட்பாய்'யாவே இருக்கிறது.. !

நம்மள எதோ அல்லக்கை வேலைக்கு அவனுக பயன்படுத்திருக்கானுகங்கிறதெல்லாம் பிற்காலத்துல தான் நமக்கு தெரிஞ்சுது.. அப்படி ஒரு கேடுகெட்ட போஸ்ட்மேன் வேலை பார்த்ததுல தான் சுமி'க்கு பயங்கிற கோபம், என்னை கிட்டத்தட்ட சட்டைய புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிட்டா,எப்படிடா நீ இதை செய்யலாம், உன் மூஞ்சியிலயே இனிமேல் முழிக்க மாட்டேன்னு அழுது சத்தம் போட்டுட்டு போயிட்டா...எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, ச்சே அந்த பெரிய பசங்க கூட்டத்துல சேர ஒரு சான்ஸ் கிடைச்சுது. இவ இப்படி அதை கெடுத்துட்டாலேன்னு.. நல்ல வேளை வீட்டுல யாரு கிட்டயும் சொல்லாம விட்டாளேன்னு ஒரு சந்தோஷம்..

அப்புறம் அப்படியே கொஞ்ச நாள்ல அவுங்க வீட்டுல வேற பக்கம் வீடுகட்டி அங்க குடி போயிட்டாங்க, நாமளும் அப்புறம் +2 பிசி, வெளியூர்ல காலேஜ்ன்னு அப்படியே வேற மாதிரி போயிட்டோம். அப்புறம் அவ கல்யாணத்துக்கு எங்கய்யன் எங்கயோ வேற வேலையா போனதுனால எங்கம்மாவுக்கு சாரதியா போயி, ரிசப்ஷன்ல வாழ்த்து சொல்லிட்டு வந்ததோட சரி.. அதுக்கப்புறம் நேத்து தான் பார்க்கிறேன்...

'வண்டி வேற ஒரு மணிநேரம் லேட்டு, ரஞ்சித்துக்கு எதோ அப்பாயின்ட்மென்ட் இருக்காம், ஒரே போர்ப்பா'ங்க, நான் 'ஃப்ரி தான், நான் இருக்கேன், வண்டி கிளம்பர வரைக்கும்னு' சொல்லி ரஞ்சித்த அனுபிச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் காபிஷாப்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்..
மலரும் நினைவுகள் எல்லாம் பேசிட்டு இருந்தோம், அப்போத்தான் சுமி கேட்டா, 'கல்யாணம் எப்படா?'. வர வர யாரை பார்த்தாலும் இதே கேள்விய தான் கேக்குறாங்க, நானும் வழக்கம் போல சிரிச்சுகிட்டே 'பண்ணிக்கலாம்னு' வழக்கம் போல சொன்னேன்.. 'யாராவது பார்த்து வச்சிருக்கியா?' இது அடுத்த கேள்வி.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவளே 'உன்கிட்ட போயி இதை கேக்குறேன் பாரு , நீ எங்க போயி...'
'ஏன் அப்படி, என்னை பார்த்தா அவ்ளோ இளக்காரமா இருக்கா என்ன?'
'பின்ன என்ன, உனக்கு என்னைக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்கு.. சரி அதை விடு.. சிவா,எப்படி இருக்கான்'ன்னு அப்படியே பேச்ச மாத்திட்டா... நானும் கண்டுக்கல.. அப்புறம் ஒரு மணி நேரம் லேட்டுன்ன வண்டி ஒன்னரை மணி நேரம் கழிச்சு கிளம்ப தயாராக, (என்னைக்காவது ஏர்-டெக்கான் நேரத்துக்கு கிளம்புமா.. ஒரு போட்டியே வைக்கலாம் போல அதுக்கு) நாங்க பரஸ்பரம் போன் நம்பர், ஈமெயில் ஐடி எல்லாம் குறிச்சுகிட்டோம்.

போகும் போது கடைசியா 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, இப்ப பார்க்க கொஞ்சம் கலராயிட்ட'ன்னு சிரிச்சுகிட்டே கிளம்புனா.. 'ம்ம்.. அப்படியா'ன்னு பக்கத்துல இருந்த கண்ணாடியில பெருமையா பார்த்துகிட்டேன்.. 'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா, growup man! ஆல் தி பெஸ்ட்'ன்னு சொல்லிட்டு டாடா காமிச்சுட்டு போயிட்டா..



திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சுகிட்டே வந்தேன்.. 'growup man'?.. நம்மள பார்த்து எதுக்கு அப்படி சொன்னா?? நல்லா வளர்ந்து மலமாடு மாதிரித்தான இருக்கோம்... ம்ம்.. அப்படியே யோசிக்கிட்டே போயி சிக்னல்ல வண்டிய நிறுத்துனேன். இந்த 200 செகன்ட் சிக்னல்ல நிக்கிறது மாதிரி ஒரு கொடுமையே இல்லீங்க.. எப்எம்'ல எதோ இங்க்லீஸ் பாட்டு.. ஆயிரம் இருந்தாலும் நம்மூரு ரெயின்போ மாதிரி வராதுன்னு மனசுகுள்ள சொல்ல சொல்ல.. டக்குன்னு
அவ சொன்னது ஞாபகம் வந்துச்சுங்க 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, கொஞ்சம் கலராயிட்ட'..

நமக்கு எல்லாமே லேட்டாத்தான் புரியுது.. இன்னும்..!!



(ஏற்க்கனவே எழுதினது தான்.. ஏன் இங்க மறுபடியும்னு கேட்டீங்கன்னா.. இதுக்கு பேரு தான் நினைவுகுப்பைகள கிளருறது :) )

pic :http://www.martinejardin.com/:


---
#241

Friday, July 13, 2007

இன்றைய படிப்பினை

ஒவ்வொரு நாளும் ஒரு புது விசயம் தெரிஞ்சுக்கனும்னு சின்னவயசில வூட்ல சொல்லி சொல்லி வளத்தாங்க, தினமும் 8.30 மணிக்கு ரேடியோ முன்னாடி உக்காந்து கோவைவானொலி'யில சொல்ற பொது அறிவு வினா எல்லாம் நோட்புக்குள எழுத சொன்னாங்க.. ம்ம்.. நம்ம என்னைக்கு பிறாத்தியார் சொல் கேட்டிருக்கோம்..

அப்படி இருந்தும் தினம் தினம் எதாவது ஒரு படிப்பனைய இந்த ஒலகம் நமக்கு கத்துகுடுத்துகிட்டே தான் இருக்கு.. இப்படித்தான் பாருங்க போன வாரம் சனிக்கிழமை புல்லா 'வட்ட'கணக்கில்லாம கையெழுத்து உள்ள போனதுக்கப்புறம் இனிப்பான பால்கோவா சாப்பிட்டு அப்புறம் ஏற்ப்பட்ட சிலபல பாதிப்புல இருந்து ஒரு படிப்பினை நமக்கு கிட்டுச்சு..
(என்ன ஏதுன்னு ரொம்ப விவரம் வேணும்ங்கிற குழந்தைகளுக்கு எல்லாம்.. இதெல்லாம் வளந்தபசங்க சமாச்சாரம். வயசு வந்ததுக்கு அப்புறம் படிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்.. ஓக்கே!)



சரி அது ஒரு சோக கதை, அதை விடுங்க.. இன்னைக்கு ஒரு படிப்பினை கிடைச்சுது நமக்கு.. உங்களுக்கும் சொல்லலாம்னு ஒரு ஆசை.. இதோ..

நிறையாப்பேர் ஒரே மாதிரி சிந்திச்சா, அதாவது பெருவாரியான மக்கள் நினைக்கறதையே நினைச்சாக்க, அவுங்க எல்லாம் :
ஆட்டுமந்தைகள், சாமானியர்கள், பாமரர்கள், சராசரி மனிதர்கள், கோயிஞ்சாமிகள், சுயசிந்தனையற்று மனிதர்கள் எனும் பேரில் உலாவும் #$^%^^&***'

ஒரு சிலர் மட்டும் ஒரே மாதிரி சிந்தித்தால், அதாவது கண்டிப்பா மெஜாரிட்டி கிடைக்காதுங்கிற கருத்தை நினைச்சா (உறுதி செஞ்சுகிட்டு) அவர்கள்:
இன்டெலக்ச்சுவல்கள், புத்திசாலிகள், எலக்கியவாதிகள்.



நீ எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது.. அதெல்லாம் நல்லதுக்கில்ல.. ஆமாம்..!! :)

இதை இன்று தன்னுடைய அயரால வேலைப்பளுவிக்கிடையே எனக்கு விளக்கு எனக்கு ஞானோபதேசம் செய்த #$^$^#$^#$^***** நண்பனுக்கு நன்றி..!!

--
#235