Tuesday, August 30, 2005

அழுகைஆடி மாசம் முடிஞ்சுது,

வெய்யில் இறங்கிற நேரம்..
பஸ்ல அவ்வளவு கூட்டமில்லை..
குழந்தை மடியில தூங்குது..
பஸ் கிளம்ப போகுது..


என்கிட்ட ரகசியமா
'சிவசு வீட்டுல நல்லாயிருக்காங்களா??'
பதில் சொல்ல முகத்தை பார்த்தா
அவ கண்ணுல தண்ணி..

அவனுக்காக அழுகறா,
ரெண்டு வருஷம் கழிச்சு..

ம்.ம்...
அறிவுகெட்ட ஜென்மங்க..

சூழ்நிலை புரியாம எனக்கு வேற சிரிப்பு வருது.. :-(

--
#118

Tuesday, August 23, 2005

பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு மனசு இருக்கிறதா?
பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு நிழல் விழுமா?

என்னடா நல்லாத்தான இருந்தான், திடீர்ன்னு இப்படியெல்லாம் கேக்கிறானேன்னு நினைக்கரீங்களா, நானா கேக்கலைங்க, கேக்க வச்சுட்டாங்க. சகா ஒருத்தன் கல்யணத்துக்காக ஞாயித்துகிழமை கிளம்பி நாமக்கல் போயிட்டு நேத்து மதியானமா ஊருக்கு திரும்பி வந்திட்டிருந்தங்க, வழியில ஈரோடு பஸ்ஸ்டாண்ட் வந்ததும், வழக்கம் போல சிந்தாமணியில விழாம்பழஜூஸ் சாப்பிட இறங்கினேன், அதென்னமோ ஈரோடு'ன்னு போயிட்டு அப்புறம் சிந்தாமணியில விழாம்பழஜூஸ் சாப்பிடாம வர்றதேயில்லீங்க நான். சிந்தாமணி பக்கத்துல புதுசா 'பெரியார் பகுத்தறிவு புத்தகநிலையம்'னு போர்ட் போட்டு பூட்டி வச்சிருக்காங்க (நான் சொல்ல வந்ததுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை தான், ஆனாலும் இதை ஏன் சொல்றென்னா 'இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்' தெரிஞ்சுக்கோங்க.)
நான் சொல்ல வந்தது ஈரோடு பூரா எல்லா இடத்துலயும் நலலா பெருசா, மூனுக்கு நாலு அகலத்துல, மூனு விதமா ஒட்டியிருக்கிற வெள்ளை போஸ்டர்கள பத்தி. அந்த போஸ்டர்கள்ல அடிச்சிருக்கிறது தான் நான் முதல்ல சொன்ன கேள்விகள்.

பேய்க்கு மனசு இருக்கிறதா?
பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு நிழல் விழுமா?

ஒவ்வொரு போஸ்டர்லயும் ஒவ்வொரு கேள்வி. நல்லா பளீச்சுன்னு வெள்ளை கலர் போஸ்டர், நடுமத்தியில கருப்புல இந்த கேள்வி மட்டும். கீழ சின்ன எழுத்துல 'இந்த கேள்விகளுக்கு பதில்களை SMS செய்து பரிசுகளை அள்ளுங்கள்' அறிவிப்போட ஒரு மொபைல் நம்பர் வேற குடுத்திருந்தாங்க. கூட்டத்துல பஸ் புடிக்கிற அவசரத்துல நம்பரை குறிச்சுக்காம விட்டுட்டேன். முகூர்த்தநாள்ல வெளியூர்க்கு பஸ்ல போறது ஒரு பெரிய கொடுமைங்க, அதுவும் ஆடி முடிஞ்சு முதல் முகூர்த்த நாளாம், ஏகபட்ட கல்யாணம், ஊருபட்ட கூட்டம், அதுபோக எல்லா பஸ்லயும் டிஜிட்டல் சவுண்ட்ன்னு காது ஜவ்வை அத்துடறாங்க.. :-(
அது ஒரு பெரிய சோக கதை, ஆனா இந்த பதிவு பேய்க்கதை பத்தினது, அதை பார்ப்போம்.
நானும் திரும்பி ஊர் வர்ற வரைக்கும், இது எதாவது விளம்பர உத்தியா? அப்படின்னா என்ன பொருள்க்கான விளம்பரம்ன்னு, நானும் மண்டைய போட்டு குழப்பி பார்க்கறேன், ஆனா ஒண்ணும் புடிபடவே மாட்டேங்குதுங்க.. நமக்கு பொதுவாவே அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சு தொலையாது, அது வெற சமாச்சாரம்..

யாருக்காவது எதாவது தெரியுங்களா இதை பத்தி..? இல்லை ஏதும் தோணுதா?
செல்வராஜண்ணா (வயசுக்கு மரியாதை!) உங்களுக்கு எதும் தெரியுமா?

ஆமா நிஜம்மாலுமே பேய் இருக்கா? *

*(கல்யாணம் செஞ்சுக்காத ஆட்கள் மட்டும் பதில் சொல்லவும்)

--
#117

Saturday, August 20, 2005

விடை இல்லா கேள்விகள்

பத்து நாளா 'ராசபார்வை'யில புதுசா நான் எதுவுமே எழுதலைங்களா, உலகம் பூராவும் இருந்து ஏன் எழுதலை? ஏன் எழுதலை? உங்க எழுத்தை படிக்காம எனக்கு தூக்கமே இல்லை, அப்படி இப்படின்னு நூத்துகணக்கான ரசிகர்கள் எனக்கு தனிமடல் போட்டு கேட்டுட்டே இருக்காங்க..
சரி.. சரி.. எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. நிப்பாடிக்கறேன்.. ஒரே ஒருத்தர் தான் கேட்டாரு, அதையே நான் பாட்ஷா மாதிரி நூறாக்கிட்டேன், அவ்வளவுதான், அதுக்கு எதுக்கு இப்போ நீங்க இப்படி டென்ஷன் ஆவரீங்க, அவனவன் என்னென்னமோ கதை சொல்லிட்டு திரியறான், அதையெல்லாம் கண்டுக்க மாட்டீங்க, நான் எதாவது சொன்னா மட்டும் கோவப்படுறீங்க. என்னத்த செய்யறது? அப்படியே பழகிட்டோம் நம்ம.. கிரிக்கெட்ல தோத்து போயிட்டா உடனே நம்மாளுக வீட்டுல கல்லுவீசுறோம், படத்துக்கு தீ வைக்கிறோம், ஆனா, நம்ம வோட்டு போட்டு ஜெயிக்கவச்சு சட்டசபைக்கு அனுப்பினவங்க அங்க போயி பெஞ்ச தேய்ச்சுகிட்டு, டேபிளை தட்டிட்டு வெட்டியா திரும்பி வந்திட்டா, அவுங்கள நம்ம எதாவது கேக்கிறமா என்ன? நம்ம உணர்ச்சிவசப்படுறதே இந்த மாதிரி பைசா பெறாத விஷயத்துக்கு மட்டும்தான்..
சரி, அதை விடுங்க, நான் ஏன் பத்து நாளா ஒண்ணுமே எழுதலை? பத்து நாளா பதிவு எழுதற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா.. இல்லையே...
திருவாசகம், ஒரிஜினல் சிடி வாங்கி, எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல ஆடியோ சிஸ்டத்துல போட்டு, அமைதியான நேரத்துல வீட்டுல எல்லாரும் தூங்கினதுக்கப்புறம், சோபாசெட் கைப்புடியில தலைகாணி வச்சு படுத்துகிட்டே கேட்டாச்சு, அதை பத்தி எழுதியிருக்கலாம்.
அழகியதீயே டைரக்ட் செஞ்ச ராதாமோகன், அந்த படத்துக்கு வசனம் எழுதின விஜி, இவுங்களோட காம்பினேஷன்ல வந்த 'பொன்னியின் செல்வன்' பார்த்தாச்சு, அதுல AMரத்னம் தெலுங்கு தேசக்காரர்ங்கிறத யாரும் மறந்திரக்கூடாதுன்னு 'மாதங்கி - அனுராதாஸ்ரீராம்' காம்பினேஷன்ல ஒரு 'கிக்' பாட்டு போட்டிருக்காங்களே அதை பத்தி கூட எழுதியிருக்கலாம்.
வீட்டு வாசல்ல இருக்கிற வேப்பமரத்துல புதுசா முளைச்சிருக்கிற தேன்கூட்டை, மேல்கிளையில இருக்கிறதால அப்படியே விட்டறலாமா, இல்லை எதுக்கு வீணா வம்பு கலைச்சிரலாமான்னு, எங்க வீட்டுல இன்னும் நடந்துட்டு இருக்கிற பட்டிமன்றத்த பத்தியாவது எழுதியிருக்கலாம்.
லாம்.. லாம்.. லாம்.. ஆனா நான் ஏன் எழுதலை??
உடம்பு கிடம்பு சரியில்லையா, அதெல்லாம் ஒண்ணுமில்லையே நல்ல பாத்திகட்டி அடிச்சுட்டு மலைமாடு மாதிரி தான் திரியறேன், சிஸ்டத்துல எதும் பிரச்சனையான்னா, அதுவும் இல்லை.. அப்புறம் ஏண்டா'?ன்னா..
வேலுநாயக்கர் அவர் பேரன் கிட்ட சொல்ற மாதிரித்தான்.. 'த்தெர்ரியலையேப்பா'..இந்த மாதிரி விஷயங்களைத்தான் பெரியவங்க 'சில கேள்விகளுக்கு வாழ்க்கையில விடையே கிடையாது'ன்னு தத்துவார்த்தமா சொல்லியிருப்பாங்களோ?? ;-)

யாருங்க அது பின்னால இருந்து 'போடா சோம்பேறி'ன்னு சவுண்ட் குடுக்கறது.. ம்

--
#116

Tuesday, August 9, 2005

தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..

கொஞ்ச நாளைக்கு முன்னால என் சகா ஒருத்தன் ஆன்சைட்'ல இருந்து வரும் போது எனக்கு பாசமா ஒரு PDA வாங்கிட்டு வந்து குடுத்தான், நானும் கொஞ்ச நாள் பந்தாவா, அதை பாக்கெட்டுல வச்சுகிட்டு, அங்கங்க நாலுபேர் இருக்கும் போது எடுத்து எதையாவது, 'சாயங்காலம் சொசைட்டியில போயி பால் பணம் வாங்கனும்' அப்படிங்கிற மாதிரி ரொம்ப முக்கியமான வேலை(!)யெல்லாம் குறிச்சு வச்சுகிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நாள் எனக்கே அது கொஞ்சம் ஓவரா இருக்க, தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டேன்.
நேத்து திடீர்ன்னு அதை துழாவ வேண்டிய வேலை வந்திருச்சுங்க, அதை துழாவிகிட்டு இருக்கும் போது இன்னொன்னு கையில சிக்குச்சு, 'தளபதி' பட சிடி.. ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது, வாங்கின புதுசுல, அப்போ சென்னையில, என் சிஸ்டத்துல ஒரு 500 ஷோவாது ஓடியிருக்கும் இந்த படம்.. எனக்கு ரொம்ப புடிச்ச படம், ரொம்ப ஸ்டைலான படம். PDAவ துழாவற வேலைய அப்போதைக்கு தள்ளி வச்சுட்டு படம் பார்க்க உக்காந்துட்டேன்..போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு சேரை பின்னாடி தள்ளிவிட்டுட்டு, 'கிட்டி' கிட்ட 'அடிர்றா.. அடிர்றா பாக்கலாம்'ன்னு டக்குன்னு எந்திரிப்பாரே ரஜினி, அந்த சீனை இப்ப பார்க்கும் போதுகூட, இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன், அப்ப சிலிர்த்த மாதிரியே இப்பவும் சும்மா 'ஜிவ்வு'ன்னு இருக்குதுங்க.. ம்ம். அது ரஜினி... இப்போ அதே ரஜினி, சொர்ணா கூட போர்வைய போர்த்திகிட்டு.. சரி வேண்டாம்.. சொன்னா நம்மாளுக சண்டைக்கு வந்திருவாங்க.. படம் வேற நூறு நாள் ஓடிருச்சு.. எதோ நல்லா இருந்தா சரி..

ஆனா, நான் சொல்ல வந்தது அதை பத்தி இல்லைங்க. அப்போ, படம் வந்த முதல் நாள், 1991 தீபாவளி (இல்ல பொங்கலா?) இங்க பொள்ளாச்சி 'நல்லப்பா'வுல, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள், இன்னொரு பக்கம் கேரளாவுல இருந்து வந்த மம்மூக்கா ரசிகர்ள்ன்னு சும்மா களை கட்டி இருந்துச்சு, (பக்கத்து துரைஸ்'ல நம்மாளு குணா படம்.) படம் ஆரம்பச்சுதல இருந்து ரஜினி, ரஜினி, ரஜினி தான்.. ரஜினி ரசிகர்க சும்மா ரவுண்ட் கட்டி ஆடிட்டிருந்தாங்க.. 'ராக்கம்ம கைய தட்டு'எல்லாம் டீ.டி.எஸ் இல்லாமயே காதுல அதிருன நாள் அது.. பின்னாடி ஒரு சீன் வரும், மமுட்டி கீதா, சார்லி எல்லாரையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போவாரு, அப்போ போலீஸ் வந்து அவுங்க ஆளுகளை எல்லாம் அடிச்சு இழுத்துகிட்டு போகும்.. அப்படியே கோவமா கோயில்ல இருந்து மமுட்டி வெளிய ஓடிவருவாரு, வந்து ஒரு சின்ன திட்டுலயிருந்து அப்படியே எகிறி குதிப்பாரு,, குதிக்கும் போது அப்படியே டக்குன்னு காத்துலயே வேட்டிய மடிச்சு கட்டிக்குவாரு, சாமி.. மம்மூக்கா ரசிகர்கள் விட்ட விசில்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் தியேட்டரே ஆடிபோன சீன் அது. டிபிகல் மம்மூட்டி ஸ்டைல்!!

படம் பார்த்துட்டு வந்து, எங்க வீட்டு மாடிப்படி வளைவுல நானும் என் கூட்டாளி சிவா'னும் ரெண்டு படி மேல இருந்து குதிச்சுகிட்டே லுங்கிய மடிச்சுகட்ட முயற்ச்சி பண்ணினோம், நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணி அப்புறம் தடுமாறி கைப்பிடி க்ரில்ல முட்டிகிட்டு முட்டியில அடிவாங்கினதுக்கப்புறம் தான், 'மூட்டுன'லுங்கியில அப்படி செய்ய முடியாதுங்கிற வரலாற்று உண்மை எங்களுக்கு விளங்குச்சு, அப்புறம் கொஞ்ச நாளைக்கு, எப்பவெல்லாம் வேட்டி கட்டறமோ, அப்பவெல்லாம் அதை ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம். அது ஒரு அழகிய 'வேட்டி' காலம் :-)

நேத்து ராத்திரி கண் முழிச்சு ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி 2.30 மணி வரைக்கும் படம் பார்த்துட்டு, காலையில 7.30 மணி வரைக்கும் தூங்கிதொலைச்சுட்டேன்.. காலையில எங்கய்யன் கூட ஒரு பக்கம் போக வேண்டியிருதுச்சு, நான் குளிச்சு முடிச்சு வர்றதுகுள்ளார, அவர் வண்டி ஏறி ரெடியா இருந்தாரு, சரின்னு அவசரமா கிளம்புனவன், என்னையும் அறியாம, சிட்டவுட் விட்டு இறங்கும் போது, டக்குன்னு ஒரு ஜம்ப் பண்ணி, அப்படியே வேட்டிய மடிச்சு கட்டினேன்..
கார்ல இருந்து எங்கய்யன் அப்படியே வெறுப்பா ஒரு பார்வை பார்த்தாரு.. 'ம்ஹும்.. கழுதை வயசாகுது..!!'..:-(

எனக்கே கொஞ்சம் வெட்கமா தாங்க இருதுச்சு.. . இருந்தாலும் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு கட்டுனமில்ல.. சாயங்காலம் சிவா'னுக்கு ஒரு போன் போட்டு சொல்லனும். ;-).. அவன் இப்போ சென்னைக்கும் பெங்களூருக்கும் பறந்து பறந்து எதோ மிஸைல்க்கு ட்ரைவர் எழுதிட்டு இருக்கான் ..


'Life is not filled with great truimph, but with small smiles'ன்னு சும்மாவா சொன்னாங்க..

--
#115

Saturday, August 6, 2005

ஒரு அழகி இருந்தாள்

ஒரு மாசமா பேஞ்ச மழையில ஊருக்குள்ள கேபிள் டீ.வி'காரங்க நட்டுன கம்பமெல்லாம் அங்கங்க கோக்கு மாக்கா சாஞ்சுட்டு நிக்குதுன்னு நேத்து 'மெயிண்டனன்ஸ் டே' அறிவிப்பு குடுத்துட்டாங்க.. நமக்குத்தான் அந்திசாஞ்சிருச்சுன்னா டீ.வி பொட்டிய விட்டா வேற கதி கிடையாதே (ராசா நல்ல பையன்'ங்கிறதுக்கு மறுபடியும் ஒரு சாட்சி).

கேபிள் இல்லாததால நேத்து வெள்ளிக்கிழமையா வேற போச்சுங்களா, படம் போடுவாங்களே பார்ப்போம்னு DD பக்கம் போனேன், கொஞ்சம் பழைய நினைப்புல, முன்ன இந்த 'சிட்டி' நெட்வொர்க் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி வெள்ளிகிழமை ராத்திரிகள் தான் நமக்கு அமிதாப்பச்சனையே காமிச்சு குடுத்தது, இன்னும் அதே வாசனையில தான் படம் போடறாங்க, அதுவும் அந்த 'வீக்கோ டர்மரிக் க்ரீம்' விளம்பரம் !!!.. அநேகமா அதுல நடிச்ச மாடல் நடிகைகளோட பேரன் பேத்தியெல்லாம் கூட இப்போ நடிக்க வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இன்னும் அவுங்க விளம்பரத்த மாத்த மாட்டாங்க போல.. வீக்கோ டர்மரிக்குக்கும், டாபர் ஹாஜ்மோலாவுக்கும் நடுவால ஒரு படம் போட்டாங்க..
'ஏக் ஹஸீனா தீ'.. (ஒரு அழகி இருந்தாள்.. சரியா?)ராம்கோபால்வர்மா'வோட பாக்டரி ப்ராடக்ட்.., டைரக்டர் ஸ்ரீராம்ராகவன், சாயிப் அலிகான், ஊர்மிளா நடிச்சது.. நம்ம கூட்டாளிக வேற நல்லாயிருக்குனு நொல்லியிருந்தாங்க, நானும் ரொம்ப நாளா பார்கனும்னு நினைச்சிட்டிருந்த படம், கோயமுத்தூர்ல போட்டு ஒரே வாரத்துல தூக்கிட்டாங்க.
அரதப்பழசான பாதிக்கபட்ட கதாநாயகி பழிவாங்கிற கதை தான், ஆனா, படம் எடுத்த விதமும், சாயிஃப்போட நடிப்பும் தான் டாப்க்ளாஸ். எனக்கு சொன்னவங்க ஊர்மிளா சூப்பரா செஞ்சிருக்கிறதா சொன்னாங்க,, ஆனா எனக்கென்னமோ, ஊர்மிளாவ விட சாயிப் தான் கலக்கியிருக்கிறதா தோனுச்சு, அப்புறம் அந்த போலீஸ் ஆபீசர் வேஷத்துல, சீமா பிஸ்வாஸ், வக்கீலா வர்ற ஆதித்யா, எல்லாருமே அப்படியே செதுக்கிவிட்ட மாதிரி அழகா நடிச்சிருக்காங்க.
எனக்கென்னமோ அந்த ஜெயில் சீனெல்லாம் பார்க்கும் போது 'மகாநதி' ஞாபகம் வந்துச்சுங்க, தப்பு சொல்ல முடியாது, ராம்கோபல்வர்மா படம் எல்லாமே பெரும்பாலும் 'இன்ஸ்பிரேஷன்' படங்களா தான் இருக்கு.. அப்புறம் பின்னனி கலக்கியிருக்கும்னு வேற சொன்னாங்க, ஆனா நம்ம DDயில புள்ளிக்கும் கரகரப்புக்கும் நடுவால பார்த்துட்டு அதை பத்தி என்னத்த சொல்றது..? டீ.வீ.டீ, கிடைச்சா மறுபடியும் ஒரு தடவை பார்க்கனும்.

அப்புறம் படம் பார்த்துட்டு சென்னையில இருக்கிற சகா ஒருத்தன் கிட்ட போன்ல பேசிட்டிருந்தேன்.. 'மிஸ் பண்ணிட்டடா மாப்ள.. ராஜ்'ல 'ராஜகாளியம்மன்' போட்டிருந்தாங்க'ன்னு வருத்தப்பட்டான்.. :-(

--
#114

Thursday, August 4, 2005

மூன்று குணம்..

மூன்று குணம்னு சொன்னதும் எதும் த்ரீ ரோஸஸ் டீ மாதிரி 'நிறம், மணம், சுவை' சமாச்சாரம்னு நினைச்சிருப்பீங்களே.. அதெல்லாம் இல்லீங்க இது வேற சமாச்சாரம், ஆனா, இதுவும் டீ சாப்பிடும் போது கேட்ட சமாச்சாரம் தான்.. டீக்கடை பெஞ்ச் மாதிரி.. உடனே தினமலர் ஆதரவாளன்னு எதும் பட்டம் குடுத்துராதீங்க. குடுத்தாலும் குடுக்கலைன்னாலும் நான் கொஞ்சம் தினமலர் ஆதரவு ஆள் தான்.. அவுங்க அளவுக்கு வேற யாரும் லோக்கல் மேட்டர எழுதறது இல்லை, அதுனால..
சரி இப்பொ எதுக்கு அது, நான் சொல்ல வந்தது வேற விஷயம், அதை விட்டுட்டு எப்பப்பாரு நான் இப்படித்தாங்க, வேலியில போறத எடுத்து எங்கயோ விட்டுகற மாதிரி.. விஷயத்துக்கு வர்றேன்..
நேத்து ஆடிபெருக்கு பாருங்க, அதுவும் நாலஞ்சு வருஷம் கழிச்சு இப்பத்தான் ஆடி மழைய எங்க ஊர்காரங்க பார்க்கிறாங்களா, நம்மாளுக எல்லாம் சந்தோஷமா திருமூர்த்திமலை, அமராவதின்னு கிளம்பிட்டாங்க, அதுனால வேலை ஒன்னுமில்லாம வெட்டியா உக்காந்திருந்தேன், ஆளுக இருந்தா மட்டும் நீ என்னத்த கிழிச்சிருப்பேன்னு கேட்டீங்கன்னா.. சாரி, நோ கமெண்ட்ஸ். மேட்ச் பார்க்கலாம்னா, அது வேற எதோ டெஸ்ட் மேட்ச் மாதிரி ரொம்ப சாவுகாசமா விளையாடிட்டிருந்தாங்க, ரொம்ப போர் அடிச்சு பக்கத்துல வழக்கமா போற 'அக்க்ஷயா டீ பார்'க்கு போனேன். எப்பவும் அங்க டீ சாப்பிட போனா யாராவது கூட போவேன், போனமா டீ சாப்டமா வந்தமான்னு இருப்பேன், (ராசா நல்ல பையன், தெரியுமில்ல..) நேத்து பாருங்க, நான் போன நேரம் பார்த்து அங்க கடையிலயும் யாரும் இல்லை, வேலை பார்க்கிற பசங்க எங்கயோ பக்கத்துல எங்கயோ போயிருந்தாங்க போல, ஆறுமுகம் மாஸ்டரே டீ போட்டு சப்ளை பண்ணிகிட்டு இருந்தாரு, அவரும் பாவம் என்னைய மாதிரியே போரடிச்சு இருந்திருப்பாரு போல.. 'என்ன சார் தனியா..?' ஆரம்பச்சாரு.. மழை வேற மறுபடியும் ஆரம்பச்சிருச்சு, கடையிலயும் வேற ஆள் இல்ல.. சரின்னு கொஞ்ச நேரம் 'டாபிக் போட்டு'ட்டிருந்தேன். நமக்கு அதுதான் கை வந்த கலையாச்சே!!.. மழை விவசாயம், அரசியல்ன்னு எதேதோ பேசிட்டிருந்தோம். பேச்சு வாக்குல ஒரு சமாச்சாரம் சொன்னாரு பாருங்க, அதான் அந்த 'மூணு குணம்' சமாச்சாரம்..

" ஒவ்வொரு மனுஷனுக்கும் மூணு குணம் இருக்கும், ஒண்னு, அவன் அடுத்தவங்ககிட்ட தன்னோட குணமா காட்டிக்கிறது, அடுத்து, அவனுக்குன்னு இயல்பா இருக்கிற குணம், அதுபோக முக்கியமானது மூணாவது, அது எதுன்னா, இது தான் தன்னோட இயல்பான குணம்'னு ஒவ்வொரு மனுஷனும் தன்னை பத்தியே (தப்பா) நினைச்சுகிட்டிருக்கிறது.."
தத்துவமா கதை கட்டுரைன்னு எழுதி கிளப்ப வேண்டியா ஆளு.. அக்க்ஷ்யா பார்'ல டீ ஆத்திட்டு இருக்காரு.. வகையே இல்லாம என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பதிவு கிதிவுன்னு எழுதிகிட்டு இருக்கிறோம்..
இதுல ஆயிரம் சண்டை, சச்சரசு, மூடுவிழா, வெங்காயம்...
எல்லாம் நேரம்.. :-(

--
#113

Monday, August 1, 2005

அமைதி..


(இந்த படம் எடுக்கும் போது மதியம் 1:00 மணி)


தேக்கடி பெரியார் ஏரியில மழைநேரத்துல படகுசவாரி போனப்ப எடுத்த படம். படகுல ஏறும்போது கொஞ்சம் வெயில் இருந்துச்சுங்க, ஆனா கொஞ்ச நேரத்துல மழை வந்திருச்சு.. நாலு மணி நேரம் கழிச்சு கரைக்கு வர்ற வரைக்கும் மழைதான்
.. .. 'அமைதியான' மழை..


படத்தை மட்டும் போடாம கூடவே எதாவது கவிதை மாதிரி எழுதலாம்னு முதல்ல தோணுச்சு (ரெண்டு மூனு வரிகூட எழுதினேன்), அப்புறம் எதையாவது கிறுக்குத்தனமா எழுதி, இந்த படம் சொல்ற அமைதியான அழகை கெடுக்க வேண்டாம்னு.. ஒன்னும் எழுதாம விட்டுட்டேன்.. :-)


--
#112