Wednesday, December 28, 2005

சிரிப்பு

ஒரு சின்ன வேலையா கோயமுத்தூர்ல பேங்க் வரைக்கும் போக வேண்டியிருந்துச்சுங்க, சரின்னு கிளம்பினேன், நம்மாளுக சும்மா இருப்பாங்களா? கூடவே இன்னொரு வேலையும் சேர்த்து தலையில கட்டி விட்டாங்க, போயிட்டு வரும்போது கோயமுத்தூர்ல இருக்கிற என் சகாவோட அக்கா புள்ளைய பொள்ளாச்சி கூட்டிட்டு வந்து விடனும், புள்ளை அரைப்பரிட்ச்சை லீவுக்கு பாட்டி தாத்தாவோட இருக்கனும்னு பிரியப்படுதுன்னாங்க, சரின்னு கிளம்புனேன்.
என் நேரம் போன வேலை கொஞ்சம் இழுத்திருச்சு, (என் தப்பு இல்ல, ஆனா எங்கய்யன் ஒத்துக்க மாட்டாரு). சரி புள்ளைய கூட்டுட்டு அப்புற்ம் போற வழியில வந்து வேலைய பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு, அவளையும் (ஏழாவது படிக்குது - பேரு சுனிதா) கூட்டிட்டு மறுபடியும் பேங்க்குக்கு போனேன். போன இடத்துல கொஞ்ச நேரம் மறுபடியும் காத்திருக்க வேண்டியதா போச்சுங்க.
'என்னம்மா செய்யிறது காலையில இருந்து அலையவிடுறானுக, இதுக்கு தான் நான் இந்த கவர்மென்ட் பேங்க்காரங்ககிட்ட கொஞ்சம் கொஞ்சமா சவகாசத்தை குறைச்சுட்டிருக்கேன்'னு, புலம்பிகிட்டு இருந்தேன். டக்குனு சுனிதா இப்ப என்ன வேனும் உங்களுக்கு நான் முடிச்சுதர்றேன்னு சொல்லிட்டு என் கையில இருந்த பேப்பர வாங்கிட்டு போயி ஆக வேண்டிய வேலைய 10 நிமிஷத்துல முடிச்சுட்டு வ்ந்திருச்சு, நான் இதுக்கு காலையில அரை மணி நேரம் மறுபடியும் மதியம் அரை மணி நேரம்னி காத்துட்டிருக்கேன் :-(, நம்ம ராசி அப்படி.
முடிச்சுட்டு வந்ததுல விஷயம் இல்லீங்க எப்படி இவ்ளோ சீக்கிரம்ன்னு நான் கேட்டதுக்கு அவ சொன்ன பதில் தான் மேட்டரே'..
'ஒரு புள்ளை போயி சிரிச்சுட்டே கேட்டா, எல்லாம் சீக்கிரம் முடியும்னு சிரிச்சுகிட்டே சொன்னா..

நிசம்தானுங்க..

புள்ளைக வந்து சிரிச்சதும் வேலைய செஞ்சு குடுக்கிறது ஒரு தப்பு, ஆனா அதை விட, இந்த வயசுலயே 'ஒரு எட்டாவது படிக்கிற புள்ளைக்கு, வேலை ஆகனும்னா நம்ம போயி சிரிச்சு பேசுனா போதும்னு யாரு சொல்லி குடுத்தா?
நம்ம கூட்டாளிக கிட்ட பேசினா 'எல்லாம் சினிமா மாப்ளே'ங்கிறாங்க..
எனக்கென்னமோ எல்லாத்தையும் சினிமா மேல பழி போடுறதுல நம்பிக்கை இல்லீங்க.. எங்கயோ கத்துகிட்டிருக்கா.. அதை விடுங்க.. நம்மளும் 'இல்ல கண்ணு இதெல்லாம் தப்பு'ன்னு சொல்ல முடியாது பத்தாம் பசலித்தனமா இருக்கும், ஆனா அதுக்காக அவள பாராட்ட முடியுமா? இதெல்லாம் நல்லதுக்கா?

'ஒன்னுமே புரியல உலகத்திலே'

---
#129

Thursday, December 22, 2005

தொலைத்துவிட்டேன்!



அவள்..

நேர்மையை எனக்கு அறிமுகபடுத்தியவள்
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை உணர்த்தியவள்

அவளுடைய நேர்மையை காட்டி என்னை பயங்கொள்ள செய்தவள்

என்னை முழுமையாக மாற்றியவள்..
நம்பிக்கைஉடையவனாக.. நம்பத்தகுந்தவனாக

ஆனால்...

இன்று
அவள் நேர்மையை தொலைத்துவிட்டாள்


நானும் தொலைத்துவிட்டேன்,
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை..

--
#128

Monday, December 19, 2005

எங்க முறையிடுவேன்..?

pic courtesy :http://peeron.com

சட்டை கிழிஞ்சிருந்தா...
தச்சு உடுத்திக்கலாம்..

நெஞ்சு கிழிஞ்சிருச்சே...
எங்க முறையிடுவேன்...?


----
சும்மா,..காலையில ரெயின்போ எப்.எம்'ல தலைவர் பட பாட்டு கேட்டுகிட்டே வண்டி ஓட்டுனதுலைருந்து, இதே வரியத்தான் பாடிகிட்டு இருக்கேன்.. உங்களுக்கும் சொல்லாலாமேன்னு தான் :-)

--
#127

Wednesday, December 14, 2005

அதே மெனு


நம்ம வீட்டுல இந்த டிசம்பர் மாசம் ஆம்பிச்சா வருஷம் தவறாம ஒரு நாடகம் நடக்கும்ங்க, ஒண்ணாந்தேதி வாக்குல இருந்தே 'புது சேலை எடுக்கனும்'னு எங்கம்மா ஆரம்பிப்பாங்க, 'ஆமா ஏற்க்கனவே எடுத்து வச்சிருக்கிறதுல எதாவது ஒண்ணு கட்டிக்க வேண்டியதுதான'ன்னு எங்கய்யனும் வழக்கம் போல கடைசி நேரம் வரைக்கும் பிகு பண்ணிகிட்டே இருப்பாரு, எப்படியும் முத நாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும், 'வண்டியில முன்னாடி சீட்டுல ஒரு கவர் இருக்குது பாரு'ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு கைகால் கழுவ போயிருவாரு, எங்கம்மாவும் படபடப்பா ஒரு சிரிப்போட போயி அந்த கவரை எடுக்கிறதும், அதுக்குள்ளார ஒரு புது பட்டுசேலை இருக்கிறதும்..
நானும் நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்த பார்த்துட்டு தாங்க வர்றேன், எப்படியும் அடுத்த நாள் எனக்கு அவ்வளவா புடிக்காத ஆனா எங்கய்யனுக்கு புடிச்ச ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் உண்டு..கூடவே எங்கய்யன் புதுதுணி உடுத்திலைங்கிற புலம்பலோட..
வருஷம் தவறாம இதே 'மெனு' தானான்னு நான் சும்மா அலுத்துகிட்டாலும், நிஜத்துல இன்னும் நிறையா வருஷம் இதே மாதிரி ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் சாப்பிடனும்னு தான் ஆசைப்படுறேன்.
பார்த்தீங்களா எல்லாம் சொன்னேன், ஆனா என்ன விஷேசம்னு சொல்லாமயே விட்டுட்டேன்.. நான் இப்படித்தாங்க சொல்ல வந்தத விட அதை சுத்தி இருக்கிறதுல தான கவனம் போகும் எனக்கு..
விஷேசம் என்னன்னா எங்க வீட்டுல எங்க்கய்னுக்கும், அம்மாவுக்கும் இன்னைக்கி (14-டிசம்பர்) கல்யாண நாள்.. 29வது வருஷம்..

நம்ம சகா ஒருத்தன் காலையில என்கிட்ட 'நீ என்ன கிப்ட் குடுத்தே'ன்னு கேட்டேன்.. 'ச்சே ச்சே, நமக்குத்தான் இந்த கிப்ட் குடுக்கிற பழக்கம் எல்லாம் இல்லையே, வழக்கம் போல 'இதே மெனுவா'ன்னு அலுத்துகிட்டு சாப்பிட வேண்டியதுதான்.. ;-)


--
#126

Tuesday, December 13, 2005

போன மச்சான் திரும்பி வந்தான்..

எல்லாருக்கும் வணக்கம்ங்க..
ரொம்ப நாள் கழிச்சு, சொந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு, திரும்பவும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கேன்.
நடுவால கொஞ்ச நாள் காணாம போன காலத்துல இங்க நிறைய விஷயம் நடந்திருக்கு, எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து படிக்கனும்.
அப்புறம்.. ஊர்ல மழை பரவாயில்லைங்க.. ஊரெல்லாம் பேய் மழை அடிச்சிருக்கு, நிறையா பேருக்கும் மழைய பத்தி இப்ப பேசுனாலே பத்திக்கிட்டு வரும், ஆனா நம்மூருபக்கம் பக்கம் அந்தளவுக்கு பேய் மழை இல்லீங்க, ஆனா நல்ல மழை..
நாலு வருஷமா தண்ணியில்லாத கிணத்துல, அதுல இருந்த மோட்டார கூட கழட்டி வச்சிருந்தோம், இப்போ அதுல கடை எடுத்துவிட்டு, பொழுதுக்கும் வாய்க்கால்ல தண்ணி வெளியபோயிட்டிருக்கு, அந்தளவுல நல்ல மழை. நாலு அஞ்சு வருஷமா மழையே இல்லாம, என்னாடா இது தெரியாத்தனமா இப்படி விவசாயம்னு வந்து மாட்டிகிட்டமோன்னு நினைச்சேன், ஆனா இந்த மழை இன்னும் ரெண்டு மூனு வருஷம் எல்லாம் ஒழுங்கா போகும்னு தோணுதுங்க..
வேற என்னங்க..
கொஞ்ச நாள் கேப் விட்டுட்டு மறுபடியும் வந்ததுல என்ன எழுதறதுன்னே தெரியலைங்க, இதுக்கு முன்னால மட்டும் அப்படி என்ன உருப்படியா எழுதி கிழிச்ச்னேன்னு கேக்கரீங்களா, அதுவும் சரிதான்..
ஆனாலும் எதாவது எழுதுவேன்.. இப்போதைக்கு இவ்ளோதான்..

மீண்டும் வருவேன்..

என்றும் அன்புடன்
உங்கள்
கொங்கு'ராசா

--
#125