Friday, June 24, 2005

அரசியல்வாதி


அரசியல்வாதியும் அவர் மகனும்
நான் பார்க்கிற பெண்ணை தான் நீ கட்டிக்கனும்..
அதெல்லாம் முடியாது. நான் தான் என் சம்சாரம் யாருங்கிறத முடிவு செய்வேன்..
டேய், நான் பார்த்திருக்கிற பொண்ணு, நம்ம நாட்டுலயே பெரிய கோடீசுவரர் 'ரவி' பொண்ணுடா..
அப்படின்னா.. சரி.. நான் பொண்ண பார்த்துட்டு சொல்றேன்..

அரசியல்வாதியும் கோடீசுவரர் 'ரவி'யும்
சார், உங்க பொண்ண என் பையனுக்கே குடுக்கனும்..
இல்லீங்க.. நான் இப்போதைக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை..
என் பையன், வேர்ல்ட் பேங்க் பிரதிநிதியா இருக்கான்..
அப்போ, நான் வீட்டுல கலந்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்றேன்..

அரசியல்வாதியும் வேர்ல்ட் பேங்க் ஆபீசரும்
என் பையனுக்கு அந்த உலக வங்கி பிரதிநிதி வேலைய குடுப்பீங்களா மாட்டீங்களா..
சார், அதுக்கு ஏற்க்கனவே நிறையா பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட் கிட்ட இருந்தெல்லாம் சிபாரிசு வந்திருக்கு சார்..
என் பையன், நம்ம நாட்டோட பெரிய கோடீசுவரர் 'ரவி'யோட மருகமன் ஆகப்போறான்..
அப்படியா.. அப்ப நான் இத பத்தி மத்த மெம்பர்ஸ மீட் பண்ணிட்டு, கன்பஃர்ம் பண்னிடறேன்..

--
எனக்கு வந்த மடலோட தமிழாக்கம்.. அந்த மடல்ல இந்த அரசியல்வாதி பேரு 'லாலு', எனகேன்னவோ அப்படி ஒருத்தர மட்டும் சொல்ல தோணலை.. அதுனால பொதுவா 'அரசியல்வாதி'

--
#99

Thursday, June 23, 2005

கல்யாணம் - சம்சாரம் - வேலை - சம்பளம்

பிரம்மச்சாரிகளை விட கல்யாணமான, அதுவும் சம்சாரத்தை வேலைக்கு அனுப்பாம வீட்டுலயே வச்சுக்கிற ஆளுக அதிகமா சம்பாரிப்பாங்களாம்..
பொதுவா கல்யாணம் ஆனவங்க அதிகம் சம்பாரிக்கறாங்க, அதுலயும் வீட்டுக்காரம்மா வேலைக்கு எங்கயும் போகாம, வீட்டு வேலைகள பார்த்துகிட்டா, அவுங்க இன்னும் அதிகம் சம்பாரிக்கறாங்கன்னு ஒரு ஆராய்ச்சியில சொல்லியிருக்காங்க..

அனுபவம் உள்ள ஆளுக இதை பத்தி என்னப்பா நினைக்கரீங்க??
சொன்னீங்கன்னா நமக்கும் பிற்காலத்துல உபயோகம் ஆகும்.. :-)

--
#98

Tuesday, June 21, 2005

வருஷமாகிபோச்சுங்க..!

'வணக்கமுங்க..!!! - அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன எழுதறதுன்னு தெரியாம, அதையே புலம்பல்'ன்னு தலைப்பு போட்டு புலம்பி, அதுக்கப்புறம் தமிழ்பதிவுகள் பக்கத்துல நம்ம பேரு வந்ததுக்காக சிவப்பு விளக்கு எரியுது'ன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கப்புறம் பைக்ல இருது கீழ விழுந்து கைய உடைச்சுகிட்டத ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!'ன்னு எழுதி, அதை படிச்சு நல்லா தமாசா எழுதறீங்க ராசா, வலைப்பூ பக்கம் வாங்கன்னு மதி கூப்பிட்டு, அங்க நம்மள கடவுள் என்னும் முதலாளி கொடுத்த தொழிலாளி 'ன்னு அறிமுகப்படுத்தி, வலைப்பூவ நம்ம எழுத்தால ஒரு வாரம் சீரழிச்சுட்டு வந்து, சும்மா வெட்டியா எழுதறமேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்!!ன்னு தலைப்பு போட்டு நான் எழுதின கவிதைய போட்டு, சந்தோஷப்பட்டு, அப்புறம் நமக்கு வலைப்பூவில அறிமுகமான சத்யராஜ்குமார் ஊருக்கு வந்தப்போ என்ன கூப்பிட்டு பேசினத ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!ன்னு எழுதி, அப்படியே ஜாலியா இருந்தப்போ, இந்த காஞ்சி பிரச்சனை வந்து, நான் சும்மா இருக்கமாட்டாம அந்த ஒரு கேள்வின்னு ஒரு பதிவு போட்டு, அதுக்கு பின்னூட்டம் மட்டுமில்லை, மொத்தம் 6 தனிமடல் வந்துச்சு, நல்லா அழகான தமிழ் வார்த்தையில திட்டி, அப்புறம் அந்த பதிவை பத்தி மரத்தடியில விமர்சனம் ஆரம்பிச்சு, அப்புறம் அதுக்காக நான் ஒரு பதில் பதிவு போட்டு விளக்கி, கொஞ்சம் கடுப்பாகி, அந்த சமாச்சாரத்தையெல்லாம் விட்டுபுட்டு கொஞ்சம் கலகலப்பா, கவர்ச்சியா எதாவது போடுவோம்னு, ஒரு மும்பாய்ல வளர்ந்துட்டு இருக்கிற , ஒரு கோயமுத்தூர் தமிழ் பொண்னு, அவளோட வார கடைசியல என்னவெல்லாம் செஞ்சான்னு அவ பதிவுல போட்டிருந்தத நான் மும்பாய் டயரி'ன்னு இங்க போட, ரெண்டே நாள்ல எனக்கு மறுபடி ஒரு மடல், இங்க்லீஸ்ல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு, தமிழ் பொண்ணாச்சே, யாரோ அவளோட உறவுக்காரங்க, என்மூலமா அவளோட பதிவை பார்த்துட்டு, அவளை கண்டிக்க, எனக்கு மெயில்ல வந்தது சனி, (இப்போ அந்த பதிவையே காணோம்.. பாவம் :-( ), அப்புறம் தமிழ்மணம் வந்து, அப்புறம் கொஞ்ச நாள்ல நம்ம இலக்கிய ஆசை கொஞ்சம் ரொம்பவே நம்மள நோண்டிவிட சரி சிறுகதை எதாவது எழுதுவோம்னு வென்னிலா கேக் எழுதி, அதுவேற நல்லாயிருக்குன்னு நாலு பேரு சொல்லி, இப்பொ அடுத்தது எழுதலாமான்னு ஒரு யோசனை இருக்கு, நடுவால கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியானதுல, சும்மா அதையும் இதையும் எழுதி பதிவ ஓட்டிட்டு, கடைசியா நிஜமா..??ன்னு 17ம் தேதி எழுதிட்டு போனது, இன்னைக்கு வந்து பார்த்தா.. அப்பு 19ம் தேதியோட நான் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிருக்கு..

நான் முன்னமே வலைப்பூவில சொன்ன மாதிரி உருப்படியா எதும் எழுதனும்னு ஆசைபட்டு வரலைங்க, சும்மா பதிவுகள் படிக்க வந்த ஆளு தான் நான், சரி, பள்ளிக்கூடத்தோட தமிழ் எழுதறதுக்கு ஜூட் விட்டுடமே, சும்மா ஒரு பதிவுன்னு வச்சு எதாசது எழுதுவோம்னு விளையாட்ட ஆரம்பிச்சது.. இன்னைக்கு ஒரு வருஷம் ஆகிபோச்சு, இன்னமும் ஆரம்பிச்சப்போ என்ன எழுதறதுன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு பாருங்க, அந்த குழப்பம் அப்படியே இருக்குதுங்க.

இவனெல்லாம் பதிவு வச்சுகிட்டு, நம்மள தொல்லை பண்றானே, இதுல ஒரு வருஷம் ஆச்சுன்னு சந்தோஷம் வேற படுறானேன்னு, உங்களுக்கு என் மேல எதும் கோவம் வந்தாக்க.. நான் தமிழ்பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்க காரணமான ஐகாரஸ்பிரகாஷ், காசி , கே.வி.ராஜா, பி.கே.எஸ் என் பதிவுல முதல் முதலா பின்னூட்டம் குடுத்த மதி, 'மழை'ஷ்ரேயா, இன்னும் யாருனே தெரியாத ஆதித்யா, இவுங்களயெல்லாம் திட்டிக்கோங்க.


--
#97

Friday, June 17, 2005

நிஜமா..??

சன் டி.வி.'காரங்க 'தினகரன்க்ரூப்'பை வாங்கிட்டாங்களாம்??.. புதன்கிழமையே டீல் முடிஞ்சிருச்சாம்.. சன்.டி.வீ'யில இருக்கிற என் சகா ஒருத்தன் கிட்ட மதியம் பேசிட்டு இருந்தப்ப அவன் சொன்னது.. 99% உண்மையா இருக்கக்கூடய வாய்ப்பு இருக்கு..

ஏற்கனவே பாதி மக்களுக்கு சன் நியூஸ் தான் கதி, இனி பேப்பரும்..
scv'n கேபிள் நெட்வொர்க் துணையோட ஏற்க்கனவே எலக்ட்ரானிக் மீடியாவ கையகபடுத்தியாச்சு, இனி ப்ரிண்ட் மீடியாவுமா??

யாராவது உருப்படியா ஒரு போட்டியாளர் வாங்கப்பா.. இல்லாட்டி கூடிய சீக்கிரம் 'Tommorow never dies'ல வந்த மாதிரி கூட ஆகலாம்.. :-)

--
#96

Tuesday, June 14, 2005

ஆள் கூட்டத்தில தனியே :-)

'ஆள் கூட்டத்தில தனியே',... மம்முட்டி, மோஹன்லால், சீமா எல்லாம் நடிச்சு, எம்.டி-I.V.சசி காம்பினேஷன்ல வந்த மலையாள படம் அது. இந்த பதிவு அந்த படத்தை பத்தி இல்லைங்க, அதை பத்தி இன்னொரு நாளைக்கு எழுதுவோம். (நான் எழுதறத விட கே.வி.ஆர் எழுதினா நல்லா இருக்கும்..) சும்மா ஒரு விளம்பரத்துக்காக இந்த டைட்டில் அவ்ளோதான்.
ஊரு உலகத்துல பதிவு வச்சிருககிறவங்க எல்லாரும் ஆளாளுக்கு அஞ்சு பேரை கட்டி இழுத்து book meme வெளையாட்டு விளையாடி ஓஞ்சுட்டாங்க.
நம்மள யாரும் அந்த விளையாட்டுக்கு கூப்பிடலை, :-(, அதுக்காக..., நம்ம சும்மா விட்டுற முடியுமா என்ன, சொல்லுங்க?
நம்ம என்னைக்கு கூப்பிட்டு ஒரு பக்கம் போனோம், நம்மளா போயி 'நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன்'ன்னு நிக்கிற ஆளு தான, அதுனால என் சார்பா என்னோட 'பொஸ்தக வாசிப்பு புலமை'ய நானும் ஊரு உலகத்துக்கு சொல்லிடலாம்னு முடிவு செஞ்சுட்டனுங்க.
(வேற வழி, பதிவுன்னு ஒன்னு வச்சுகிட்டு, அப்புறம் அதுல எதாவது உருப்படியா(..?) போடனுமில்ல, எத்தன நாளைக்கு தான் சும்மா வெறும் படமா போட்டு தள்ளுறது..?)

ஆகவே மகாஜனங்களே, இதோ உங்கள் பார்வைக்கு என்னுடைய 'புஸ்தக மீமீ'

---

என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை

இன்றைய நிலவரம் சரியா 46.
(எப்படியும் மாசம் ஒரு தடவை கோவை டவுன்ஹால் 'செல்வி' - பழையபுஸ்தககடைக்கும் நமக்கும் குடுக்கல் வாங்கல் இருக்கும்)

கடைசியாக வாங்கிய புத்தகம்

'புதுசு' :
மாலனின் சிறுகதை தொகுப்பு (எழில் செய்த சிபாரிசு)
காடு - ஜெயமோகன் (படிக்கலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையா இருக்கு)

'பழசு' :(செல்வி கடை உபயம்)
The Forerunner - Kahlil Gibran (மீனாக்ஸோட பதிவுகள்ல தான் இவர் நமக்கு அறிமுகமே)

வாசித்து கொண்டிருக்கும் புத்தகம்

காக்டெயில்
The Alchemy of Desire (இந்த ரெண்டையும் வச்சு என்னை பத்தி தப்பான அபிப்பராயத்துக்கு வந்துராதீங்க..:-( , எத்தேசயா நடந்த விஷயம் அது)
இந்த வார ஆனந்தவிகடன்
இந்த வார அவுட்லுக்
புதுசா நம்ம வண்டியில மாட்டுன பயோனீர் DEH-P6700MP சிஸ்டத்தோட யூசர் மேனுவல் (ஒன்னும் புரியவே மாட்டேங்குது..!)


கடைசியாக படித்து முடித்த புத்தகம்

ஜனகனமன - மாலன்
Glaucoma பத்தி அரவிந்த் ஹாஸ்பிடல்ல குடுத்த 6 பக்க 'துண்டு' பிரசுரம்


மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள்

என் செல்ல Rxன் RCபுக் (என் சுய சம்பாத்தியத்துல என் பேருல நான் ஆசைய வாங்கினது). என் பேங்க பாஸ்புக், இது ரெண்டும் தான் இதுல டாப் 1,2'ல வர வேண்டியது, ஆனா உங்க கோவத்துக்கு ஆளாக வேண்டாம்ங்கிறதுக்காக அதை விட்டுட்டு என் லிஸ்டை சொல்றேன்.

1.வாஷிங்டனில் திருமணம்
(அனேகமா டபுள் செஞ்சுரி அடிச்சிருப்பேன், அத்தனை தடவை படிச்சாலும் மறுபடியும் படிக்க சொல்லுது)

2.இரும்புக்குதிரைகள்
(twinkle, gokulam, ராணிகாமிக்ஸ்'ல இருந்து தடாலடியா 90ல இதுல இறங்கினேன். அதுக்கப்புறம் தான் ராஜேஷ்குமார், சுபா, பட்டுகோட்டை பக்கமெல்லாம் கூட போனேன்.. 2000க்கு அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்)

2.Yusuf Khan- Rebel Commander
(சேப்பாக்கத்துல சாயித் அன்வர் 194 அடிச்ச அன்னைக்கு திருவெல்லிகேணி ரோட்டுகடையில வாங்கின புஸ்தகம், ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வரை இருந்துச்சு, இப்போ எங்க வச்சேன்னு தெரியாம தேடிட்டு இருக்கேன், அதுல கிளார்க், யுசுப்கான், அவுங்க மேல்/கீழ் அதிகாரிகளுக்கு நடுவே எழுதிகிட்ட கடிதங்கள்... ம்ம்.. எப்படியாவது கண்டு புடிக்கனும்.. எடுத்து வச்சுகிட்டா 'மருதநாயகம்' வரும் போது உபயோகமா இருக்கும்)

3.Doctors - Erichsegal
(வேற ஒரு 'விஷயத்து'க்காக, சும்மா பிலிம் காட்ட வாங்கின புஸ்தகம்,..;-) , இன்னைக்கு வரைக்கும் பேவரிட் லிஸ்ட்'ல இருக்கு)

4.Kane & Abel - Jeffrey
(நிறைய பேருக்கு புடிச்ச புஸ்தகம், எனக்கும் புடிச்சிருக்கு, எங்கய்யனுக்கும்..!)

6.பொன்னியின்செல்வன்
( எனக்கென்னவோ இதைவிட 'பார்த்திபன் கனவு' ரொம்ப புடிக்கும்னாலும், ஹிஸ்ட்ரி மேடம் மனசு வருத்தப்படுமேன்னு இதை இங்க ஆறாவதா சேர்த்திருக்கேன்.. ஹிஸ்ட்ரிமேடம் - எங்கம்மா!!)

புடிக்காத புத்தகங்கள் (இது நம்ம சொந்த சரக்கு)

சுய முன்னேற்றம் பத்தின புத்தகங்கள். நமக்கும் இந்த மாதிரி புத்தகங்க ரொம்பவுமே அலர்ஜிங்க..
எல்லாரும் பெருமையா பேசி, நீ இன்னும் படிக்கலையா'ன்னு கொஞ்சம் கேவலமா கேட்டதுனால தான் 'you can win - shivkera' படிச்சேன்னா பாருங்களேன்..
(ஒரு வேளை நமக்கு புடிக்காத 'முன்னேற்றம்' பத்தி இருக்கிறதுனாலயோ என்னவோ ;-) )

கடைசியா ஒரு அஞ்சு பேர இதுல இழுத்து விடனுமாம்.... யாரு விட்டு போயிருக்காங்க கூப்பிட.. போங்கப்பா..

--
அப்பா.. இப்பத்தான் நிம்மதி.. !!

--
#95

--

அப்டேட்:

(சற்று முன் வந்த நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...)

அஞ்சு நாள் முன்னாடியே கோபி நம்மள இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டிருக்காரு, அதை கவனிக்காம யாரும் கூப்பிடலைன்னு புலம்பியிருக்கேன்.. .. ச்சே.. ஒரே பப்பி ஷேம்மா இருக்குதுங்க.. :-(

கலக்கல் படங்கள்

சமீபத்தில் என்னை 'கலக்கிய' படங்கள்

உன் பார்வை போலே என் பார்வை இல்லை.. :-)

(என்ன எழுதறதுன்னு தெரியலைன்னா இப்படித்தான், சும்மா எதாவது படத்தை போட்டு தள்ளுறது...விளையாட்டா போட்ட படம்ங்க, உடனே யாரும் என்னப்பா 'ஜாஸ்தியாயிடுச்சா'ன்னு கேட்டுறாதீங்க..)

--
#94

Monday, June 13, 2005

smsல் ஒரு தமிழ் கவிதை

இன்னைக்கு காலையில கூட்டுறவு பேங்கில ஒரு வேளையா உக்காந்திருக்கும் போது, எனக்கு வந்த ஒரு SMS

---
தமிழ் கவிதை # 3

ஜானி.. ஜானி..

இன்னா நைனா..

சீனி துன்றயா..??

இல்ல நைனா..

டபாய்க்கரியா..??

இல்ல நைனா...

வாய தொற..

ஹா..ஹா...

---


தமிழ வளர்க்கராங்களாம்.. :-)

சின்ன வயசுல படிச்ச மாதிரி ஜானி ஜானி எஸ் பாப்பா'ன்னு அதே ரிதம்ல படிச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சேன் பாருங்க், சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிடாங்க. சும்மாவே நான் எப்ப போனாலும் அங்க ஒரு மாதிரியாதான் பார்பாங்க, இதுல தனியா உக்காந்து சிரிச்சுகிட்டு இருந்தா.. :-(
#3 தான் எனக்கு வந்தது, 1,2ம் என்ன மாதிரி கவிதைன்னு தெரியலைங்க..

எப்படி இப்படி பொறுமையா உக்காந்து டைப் பண்ணி, அதுவும் தங்க்லீஷ்'ல, அனுப்பறாங்கன்னே புரியல.. நமக்கு வரும் போது forwarded msgஆ தான் வருது, ஆனா யாரோ ஒருத்தர் டைப் பண்ணியிருக்கனுமில்லை..

--
#93

இறைவா

தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் நினைச்சுக்கறவங்க ஒருவகை, அந்த மாதிரி ஆளுக கிட்ட எதாவது காரியம் ஆகணும்னா, கொஞ்சம் நாசூக்கா பேசி சமாளிக்கனும், இல்லாட்டி கஷ்டம், அவுங்கள கூட சமாளிச்சிடலாம்ங்க, ஆனா தனக்கு ஒன்னுமே தெரியாதுங்கிறதே தெரியாம இருக்கிறவங்கள சமாளிக்கிறது இருக்குதே..


அப்பா சாமீ... ரெண்டு நாளா நான் பட்ட கஷ்டம்.."இறைவா!! எனனை ஏன்தான் இந்த மாதிரி கழிசடை பசங்க கூடவே கூட்டு சேர்க்கரயோ.."---
#92

Wednesday, June 8, 2005

பழைய பேப்பர்

பழைய பேப்பர்
இந்த பழைய பேப்பர் படிக்கிறதுங்கிறது, எப்பவுமே கொஞ்சம் சுவாரசியமான சமாச்சாரம்ங்க, இந்த பஜ்ஜி கட்டி குடுக்கிற போன வாரத்து பேப்பரை விட, ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு பேப்பரோ இல்லை வாராந்திரியோ கிடைச்சதுனா நான் விடமாட்டனுங்க, எடுத்து அட்டை டூ அட்டை படிச்சிருவேன். இன்னைக்கு தேதிக்கு வர சென்சேஷன் விஷயங்கள விட அது ரொம்ப சுவாரசியமா இருக்கும், இந்த படத்தோட கதை இப்படி, இவன் இவகூட கல்யாணம் பண்ணிக்கபோறான், இவரு இந்த தேர்தல்ல கட்சி மாற போறாரு, அப்படி இப்படின்னு எத்தனை கதைய நம்ம ரிப்போர்ட்டர்க சூட குடுத்திருப்பாங்க, அந்த சூடெல்லாம் ஆறி, வீனாபோனதுக்கப்புறம் அதை எடுத்து பார்த்தா செம காமெடியா இருக்கும்ங்க. சில நேரம் ரொம்பவும் டச்சிங்கான விஷயம் கூட கிடைக்கும். நம்ம வீட்டுகள்ல சாதரணமா இந்த மாதிரியெல்லாம் கிடைக்காது, அதுதான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இங்க்லீஸ் பேப்பர்க்கு ஒரு ரேட், தமிழ் பேப்பர்க்கு ஒரு ரேட்டுன்னு பழைய பேப்பர்காரனுக்கு போட்டு எதாவது ப்ளாஸ்டிக் குடம், எவர்சில்வர் கரண்டின்னு வாங்கி வச்சிருவாங்களே, ஒரு வேளை லைப்ரரியில கிடைக்கும், நாம அந்த ஏரியா பக்கமே போறாதில்லைங்க, அதுனால அந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் அப்பப்போ எப்படியாவது பழையபேப்பர் ஒன்னு நம்ம கண்ணுல சிக்கிரும்.
திடீர்னு எப்பவோ நம்ம வீட்டு விஷேசத்துக்கு கிப்ட்'டா வந்து, நாம உபயோகபடுத்தாம (ஒருவேளை அம்மாவுக்கு ஆகாத நங்கை குடுத்ததா இருக்கும்) அட்டாலியில அடுக்கி வச்ச எவர்சில்வர் பாத்திரத்துக்குள்ள 'எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்'ன்னு ஹெட்லைனோட ஒரு பேப்பர் கிடைக்கும். எடுத்து குப்பையில போடறதுக்கு முன்னாடி ஒரு வரி விடாம அதை படிச்சிருவோம், அவ்ளோ சுவாரசியமா இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள் எங்க அத்தை வீட்டு அட்டாலிய சுத்தம் பண்றப்போ, அதுவரைக்கும் சும்மா twinkle, gokulam அதை விட்டா ராணிகாமிக்ஸ், தினமணி குழந்தைகள் மலர், குமுதத்துல ஆறு வித்தியாசம், விகடன்ல ஜோக்குன்னு பார்த்திட்டிருந்தவன் முதல் முதலா பாலகுமாரன படிச்சேன்.. (இரும்புகுதிரைகள்). அந்த புக்கை எங்க அத்தை எப்பவோ எங்கயோ ட்ரெயின்ல வாங்கும் போது வாங்கி, படிக்காமயே அட்டாலியல போட்டிருந்தாங்க, நம்ம வூட்டாளுக புஸ்தகம் வாங்கினதே பெரிசு, அதை படிக்கலைங்கிறதுக்காக ஒன்னுஞ்சொல்ல முடியாதுங்க.
என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. பழைய பேப்பர் படிக்கிறது பத்தி சொல்லிடிருந்தேன்.. என்னடா திடீர்ன்னு பழைய பேப்பர் தேடுற கழுதை (கழுதை.. அவ்ளோதான் கழுதைபுலியெல்லாம் கிடையாது ஆமாம்..) மாதிரி ஆயிட்டேன்னு கேக்கரீங்களா.. அது எல்லாம் கீழ போட்டிருக்கனே அந்த படம் நமக்கு மெயில் வந்ததுனால வந்த வினை.
படம் நிஜமானதா இல்லை எதாது போட்டொஷாப் கில்லாடியோட வேலையான்னு தெரியலை (காஞ்சிபிலிம்ஸ் மாதிரி கில்லாடிக யாராவது பார்த்து சொன்னா தேவலை)


[படத்து மேலஒரு அழுத்து அழுத்தி பெருசா பார்த்துக்கோங்க ]


நன்றி : ஒடையகுளம் செந்தான்

--
#91

Tuesday, June 7, 2005

கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள்

இந்த கழுதைப்புலி இருக்குதுங்களே.. ஒரு சாயல்ல ஓனாய் மாதிரி, இன்னொரு சாயல்ல பார்த்தா ஊருக்குள்ள திரியுமே சொறி புடிச்சு, எப்பவும் பல்லைகாட்டிட்டு, பார்க்கவே கொஞ்சம் பயமா.. வெறிநாய்ன்னு சொல்லுவாங்களே, அதே மாதிரி தான் இருக்கும், எப்பவாது டிஸ்க்கவரி சேனல்ல பார்த்திருப்பீங்க, அதை பத்தி தான் இந்த பதிவு.

 


 


கழுதைப்புலியில மூனு வகை இருக்குதுங்க, striped, brown and spotted, இதுல நம்மூர்ல, அதாவது இந்தியாவுல இருக்கிறாது striped வகைமட்டும்தான். எப்பாவுமே தனியாவோ, சிலநேரங்கள்ல ஜோடியா திரியும், ஆனா கூட்டமா இருக்கிறது ரொம்ப அபூர்வம்ன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல நிறையா பேரு கழுதைப்புலியயும் செந்நாய்'யும் குழப்பிக்கறாங்க, செந்நாய் எப்பவும் கூட்டமா திரியும், ஆனா கழுதைப்புலி அப்படிகிடையாது. நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும். மத்த மிருகங்க சாப்பிடாம விட்டுடர எலும்பு மாதிரியான சமாச்சாரங்கள் கூட கழுதைபுலி ரொம்ப சாதாரணமா சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். நம்மாளுக சொல்லுவாங்களே 'கல்லை தின்னாலும் ஜீரணமாகிற வயசு'ன்னு, அந்த மாதிரி. ஆனா என்னதான் இவ்ளோ பயங்கிறமா சொன்னாலும், ஒரு கழுதைப்புலியோட முக்கியமான உணவு என்னன்னு பார்த்தீங்கன்னா, காட்டுல இருக்கிற பூச்சிக, இந்த காட்டு எலி, முயல், புதர்ல கிடைக்கிற பறவைகளோட முட்டை.. சிலநேரங்கள்ல பழம் காய்கறின்னுகூட இருக்கும்.
பெரும்பாலும், நம்ம கரும்புதோட்டத்துல எல்லாம் திரியுமே குள்ளநரி, அந்த மாதிரி புதர்லயும், வங்குகள்லயும் தான் இருக்கும்.

 


 


மேல சொன்ன கழுதைப்புலி சமாச்சாரம், போன வருஷம் (வீரப்பன் சாவுக்கு ஒரு மாசம் முன்னாடி) பந்திப்பூர் காட்டுப்பக்கமா ஒரு வாரம் நம்ம கூட்டாளிக கூட ட்ரெக்கிங் போயிருந்தேன், அப்பொ அங்க ரேஞ்சர் ஆபீஸ்ல கைட்' வேலை பார்க்கிற 'மாரிசாமி'ங்கிற ('ச்' கிடையாது) ஆளு நமக்கு சொன்னதுங்க. என்னவோ திடீர்ன்னு இப்போ ஞாபகம் வந்துச்சு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, இவ்வளவு விஷயம் கழுதைப்புலிய பத்தி சொன்னாரே ஒழிய கடைசிவரைக்கும் மாரிசாமி மூனு நாள் காட்டுல சுத்தி ஒரு தடவை கூட அதை கண்ணுல காட்டல..அப்புறம் வந்து மிருககாட்சிசாலையில தான் பார்த்தோம். (ஒரு வேளை நம்மள பார்த்து பயந்துருச்சோ என்னமோ?)

பி.கு. :

இந்த பதிவுக்கும் தற்போது தமிழ்வலைப்பதிவுகள்ல பரவலா எல்லாரும் அலசிட்டு இருக்கிற 'கழுதைப்புலி' சமாச்சாரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை

--
# 90

Monday, June 6, 2005

மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்

ஒரு வேலையா கோயமுத்தூர் வரைக்கும் நேத்து போயிருந்தனுங்க, போன இடத்துல சும்மா இருக்காம 'ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா'ன்னு பேனர் கட்டியிருந்தாங்கன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த பக்கம் போனேன் பாருங்க அது தான் தப்பாயிப்போச்சுங்க. நமக்கும் இந்த மாதிரி கூட்டத்துக்கும் பெரிசா சம்பந்தம் இல்லைன்னாலும், இப்ப கொஞ்ச நாளா இங்க வலைப்பதிவுகள்ல இதை பத்தி நிறைய பேரு எழுதி, அதை படிச்சதுல கொஞ்சம் நமைச்சல் எடுத்து உள்ளார போயிட்டன். அதுவும் நான் மட்டும் போயி தொலைக்காம கூட வந்து எங்கய்யன் கூட்டாளியோட அவிலா'வுல பதினோராவது படிக்கிற புள்ளைய கூட்டிட்டு போனேன் பாருங்க, அது அதை விட பெரிய தப்புன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது.
நான் போகும் போது கூட்டமெல்லாம் ஆரம்பிச்சிருந்தது. வெளிய நமக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் அவரோட பட்டாளத்தோட நின்னுட்டிருந்தாரு. அப்பவே எனக்கு உரைச்சிருக்கனும், நான் கேனத்தனமா அவருக்கு கைய காட்டிட்டு, அதுக்கப்புறமும் உள்ள போனேன் பாருங்க, என்னை சொல்லனும்.
கரெக்டா நான் உள்ள போகவும், உள்ள இருந்து 'சமஸ்கிருதத்துல பேசுடா நாயே, ஏண்டா தமிழ்ல பேசுற.. ங்ஒ... .ஆ..ஊ..'ன்னு காதுல விழுந்தது, கூட வந்த புள்ளை நம்மள ஒரு மாதிரி பார்க்குது, எனக்குகூட எங்காவது திடீர்ன்னு முனிசிபால்டி கவுன்சிலர் கூட்டம் நடக்குதா?ன்னு ஒரு சந்தேகம் ஆகிபோச்சு, என்னா ஏற்க்கனவே சிலதடவை அங்க போயி இந்த மாதிரி அனுபவம் நமக்கு நிறையா இருக்கு.
அப்புறம் வெளிய இருந்து போலீஸ் உள்ள வந்து, எல்லாரையும் புடிச்சு வெளிய தள்ளி.. ஒரு பெரிய தமாசாகி.. அடப்போங்கப்பா, இவுங்க எல்லாம் சேர்ந்து வளர்த்துவிடாட்டி, தமிழ் வளராதா என்ன??. நம்மூருல ஒரு இருவது வருஷம் முன்னாடி எழுதபடிக்க தெரிஞ்ச ஆளுகளே ரொம்பவும் கம்மி, அப்பவெல்லாம் இலக்கியம் படிச்சு, இலக்கியம் வளார்த்து(!) தான் தமிழ் வளர்ந்துச்சா என்ன.. அவனவன் அவனவனுது பார்த்துட்டு இருந்தாலே எல்லாம் ஒழுங்கா இருக்கும். ரெண்டு மூனு பேருகிட்ட வெளிய வந்து பேச்சு குடுத்து பார்த்தேன், எனக்கென்னமோ அங்க ரகளை பண்னின ஆளுக நிறையா பேருக்கு ஜெயகாந்தன் என்ன பேசுனாருன்னே தெரியாதுன்னு தோனுது..
அடப்போங்கப்பா எனக்கு ஆயிரம் ஜோலி இருக்குது, அதை விட்டுட்டு..
சரி வந்தது வந்துட்டோம் ஜெயகாந்தன் பேசுறத கேட்டுட்டு போலாம்னு பார்த்தேன், ஆனா கூட வந்த ஆளு முறைச்ச முறைப்புல வேண்டாம்னு வந்துட்டனுங்க. வெளிய படியெறங்கும் போது எதோ 'மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள், 'ன்னு சத்தம் கேட்டுது, ஜெயகாந்தன்'தானாம் அது, காலையில பேப்பர்ல போட்டிருந்தாங்க. நானும் அதையே தான் திரும்பி வர்ற வழியெல்லாம் சொல்லிட்டு வந்தேன், பாவம் கான்வெண்ட்ல படிக்கிற புள்ளை,ஏதோ நம்மளையெல்லம் இது வரைக்கு படிச்ச ஆளுகன்னு ஒரு மரியாதையா பர்த்துட்டு இருந்துச்சு.. இனிமேல் எப்படின்னு தெரியல.. எனக்கு வேணும்..

நமக்கு முன்னாடியே பத்ரி இதை பத்ரி எழுதிட்டாரு :-(

--
#89

Thursday, June 2, 2005

இப்பத்தான் நிம்மதி


பதினஞ்சு நாளா இணையத்துல இணையவே இல்லைங்க, மெயில் பாக்காம, தமிழ்மணம் பக்கம் வராம... கொஞ்சம் கஷ்டமான சமாச்சரம் தான் போங்க.. என்னவோ பொறந்ததுலயிருந்து இணையத்துலயே வாழுற மாதிரி சலிச்சுக்கிறேன்னு நினைக்கரீங்களா.. அப்படியெல்லாம் ரொம்ப பெரிய சொந்தம் இல்லைன்னாலும், ஆறு வருஷமா எதுக்கெடுத்தாலும் கம்புயூட்டர், நெட்'டுன்னே இருந்துட்டு, திடீர்ன்னு இந்த மாதிரி தொடர்ச்சியா பதினஞ்சு நாள் (நடுவால, ஒரு நாள் ஒரு கால் மணி நேரம் மட்டும் விதிவிலக்கு) இணையபக்கமே வராம இருக்கிறது இப்ப தானுங்க.. இன்னைக்கு காலையில வீட்டுக்குள்ள வந்ததும், எங்கய்யன் 'முதல்ல பல்லு கில்லு தேய்ச்சு, மூஞ்சிய கழுவிட்டு வந்து உக்காருடா'ன்னு சொல்லியியும், நான், 'ஆன் பண்ணி விட்டுட்டு போயி விளக்கிகறனுங்க'ன்னுட்டு நேரா கம்ப்யூட்டர் பக்கம் தான் போனேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து நம்ம டயலப்ப தட்டி ப்ரவுசர்ல 'யாஹூ'வ பார்த்ததும் தான் ஒரு நிம்மதி. அதென்னமோ இப்பவெல்லாம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது இணையம் பக்கம் வராட்டியோ, இல்ல நம்ம செல்'ல கவரேஜு இல்லாட்டியோ, என்னமோ ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ் ஆகிபோகுதுங்க..
ஒரு ரெண்டு நாள் விட்டாலே நம்ம தமிழ்மணத்துல எக்கச்சக்கமா ஓடியிருக்கும், இப்போ பதினஞ்சு நாள்!!.. எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கனும்..
படிச்சுட்டு அப்புறம் வந்து வச்சுக்கிறேன் எல்லாரயும்..

--
# 88