Monday, June 6, 2005

மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்

ஒரு வேலையா கோயமுத்தூர் வரைக்கும் நேத்து போயிருந்தனுங்க, போன இடத்துல சும்மா இருக்காம 'ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா'ன்னு பேனர் கட்டியிருந்தாங்கன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த பக்கம் போனேன் பாருங்க அது தான் தப்பாயிப்போச்சுங்க. நமக்கும் இந்த மாதிரி கூட்டத்துக்கும் பெரிசா சம்பந்தம் இல்லைன்னாலும், இப்ப கொஞ்ச நாளா இங்க வலைப்பதிவுகள்ல இதை பத்தி நிறைய பேரு எழுதி, அதை படிச்சதுல கொஞ்சம் நமைச்சல் எடுத்து உள்ளார போயிட்டன். அதுவும் நான் மட்டும் போயி தொலைக்காம கூட வந்து எங்கய்யன் கூட்டாளியோட அவிலா'வுல பதினோராவது படிக்கிற புள்ளைய கூட்டிட்டு போனேன் பாருங்க, அது அதை விட பெரிய தப்புன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது.
நான் போகும் போது கூட்டமெல்லாம் ஆரம்பிச்சிருந்தது. வெளிய நமக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் அவரோட பட்டாளத்தோட நின்னுட்டிருந்தாரு. அப்பவே எனக்கு உரைச்சிருக்கனும், நான் கேனத்தனமா அவருக்கு கைய காட்டிட்டு, அதுக்கப்புறமும் உள்ள போனேன் பாருங்க, என்னை சொல்லனும்.
கரெக்டா நான் உள்ள போகவும், உள்ள இருந்து 'சமஸ்கிருதத்துல பேசுடா நாயே, ஏண்டா தமிழ்ல பேசுற.. ங்ஒ... .ஆ..ஊ..'ன்னு காதுல விழுந்தது, கூட வந்த புள்ளை நம்மள ஒரு மாதிரி பார்க்குது, எனக்குகூட எங்காவது திடீர்ன்னு முனிசிபால்டி கவுன்சிலர் கூட்டம் நடக்குதா?ன்னு ஒரு சந்தேகம் ஆகிபோச்சு, என்னா ஏற்க்கனவே சிலதடவை அங்க போயி இந்த மாதிரி அனுபவம் நமக்கு நிறையா இருக்கு.
அப்புறம் வெளிய இருந்து போலீஸ் உள்ள வந்து, எல்லாரையும் புடிச்சு வெளிய தள்ளி.. ஒரு பெரிய தமாசாகி.. அடப்போங்கப்பா, இவுங்க எல்லாம் சேர்ந்து வளர்த்துவிடாட்டி, தமிழ் வளராதா என்ன??. நம்மூருல ஒரு இருவது வருஷம் முன்னாடி எழுதபடிக்க தெரிஞ்ச ஆளுகளே ரொம்பவும் கம்மி, அப்பவெல்லாம் இலக்கியம் படிச்சு, இலக்கியம் வளார்த்து(!) தான் தமிழ் வளர்ந்துச்சா என்ன.. அவனவன் அவனவனுது பார்த்துட்டு இருந்தாலே எல்லாம் ஒழுங்கா இருக்கும். ரெண்டு மூனு பேருகிட்ட வெளிய வந்து பேச்சு குடுத்து பார்த்தேன், எனக்கென்னமோ அங்க ரகளை பண்னின ஆளுக நிறையா பேருக்கு ஜெயகாந்தன் என்ன பேசுனாருன்னே தெரியாதுன்னு தோனுது..
அடப்போங்கப்பா எனக்கு ஆயிரம் ஜோலி இருக்குது, அதை விட்டுட்டு..
சரி வந்தது வந்துட்டோம் ஜெயகாந்தன் பேசுறத கேட்டுட்டு போலாம்னு பார்த்தேன், ஆனா கூட வந்த ஆளு முறைச்ச முறைப்புல வேண்டாம்னு வந்துட்டனுங்க. வெளிய படியெறங்கும் போது எதோ 'மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள், 'ன்னு சத்தம் கேட்டுது, ஜெயகாந்தன்'தானாம் அது, காலையில பேப்பர்ல போட்டிருந்தாங்க. நானும் அதையே தான் திரும்பி வர்ற வழியெல்லாம் சொல்லிட்டு வந்தேன், பாவம் கான்வெண்ட்ல படிக்கிற புள்ளை,ஏதோ நம்மளையெல்லம் இது வரைக்கு படிச்ச ஆளுகன்னு ஒரு மரியாதையா பர்த்துட்டு இருந்துச்சு.. இனிமேல் எப்படின்னு தெரியல.. எனக்கு வேணும்..

நமக்கு முன்னாடியே பத்ரி இதை பத்ரி எழுதிட்டாரு :-(

--
#89

3 comments:

Badri said...

நீங்க நேரிலயே பாத்துட்டு வந்திருக்கீங்க. நான் பேப்பர் புலிதான்.

ஜெயகாந்தனுக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. அவருடைய கருத்துகளில் பலதும் நமக்கு ஏற்புடையதாக இல்லாதிருக்கலாம். ஆனால் எப்படி எதிர்ப்பைக் காண்பிக்கிறோம் என்பது முக்கியம். மேடையின் முன் சென்று அசிங்கமாகப் பேசுவது கலாசார சீரழிவுதான்.

அதனை அரசியல் சமுதாய அமைப்பான திராவிடர் கழகம் செய்திருக்கக் கூடாது. சட்டக் கல்லூரி மாணவர்களும் தரம் தாழாது எதிர்ப்பைக் காண்பித்திருக்க வேண்டும். சென்னையில் ஜெயகாந்தனை எதிர்த்தவர்கள் தரத்துடனேயேதான் செய்தார்கள்.

தமிழ்நாட்டிலேயே மரியாதைக்குப் பெயர்போன கோவை நகரில் இப்படி நடந்திருக்கக் கூடாது.

Anonymous said...

Badri,

Dinamani claims that DK members disturbed the meeting. Thatstamil.com claims that Periyar DK members disturbed the meeting. Periyar DK is a group headed by Kollathur Mani (veerappan fame) and known for these kind of rebelious activities. Can you check the details & post them here

Agent 8860336 ஞான்ஸ் said...

கோவையில் ஜெயகாந்தனுக்குப் பாராட்டு விழா பற்றி தினமணி வெளியிட்ட செய்தி இங்கே