Sunday, August 29, 2004

போன மச்சான் திரும்பி வந்தான்..

ஒரு வாரம் வலைப்பூ பக்கமா ஒதுங்கிட்டு, இதோ இப்பொழுது, மீண்டும் உங்களுடன், உங்கள் அபிமானத்துகுரிய, உங்கள்'ராசா'....
(ச்சே, இப்படி சொன்னதும் எல்லாரும் கை தட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா, இந்த முறைப்பு முறைக்கரீங்க?)

'குடில்', தமிழ்மணம்', 'Tamil Bloggers List', - இவுங்களோட துணையோட, சும்மா அவுங்க இப்படி எழுதியிருக்காங்க, இவுங்க இப்படி எழுதறாங்கன்னு, எப்படியோ ஒரு வாரம் ஓட்டியாச்சு.
"என்னடா வெற்றிகரமா முடிச்சிட்டியா"ன்னு இங்க என் சகா ஒருத்தன் கேக்கிறான்ங்க. என்னத்த சொல்றது, ஒரு வாரம் முழுசா முடியறதுக்குள்ள இங்க அவனவனுக்கு நுரை தள்ளியிருச்சு, இதுல வெற்றிகரமா முடிச்சியான்னு ஒரு கேள்வி வேற, எல்லாம் என் நேரம்!!.

ஒரு வாரம் வலைப்பூவுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு, உழைச்சு, ஓடா தேய்ஞ்சு போயிட்டதுனால, இன்னைக்கு நல்லா ஒரு விடைக்கோழியா அடிச்சு, ஒரு புடி புடிச்சுட்டு, நல்லா ஒரு தூக்கம் போடனும்.
வரட்டுங்களா!!

(வர்றேன்னு சொல்றதுக்கு ஒரு பதிவாடா'ங்கரீங்களா?.. என்ன செய்யரது, நாட்டுல நிறைய பரபரப்பான விஷயமெல்லாம் நடக்குது, இதுக்கு நடுவால நம்மளை யாரும் மறந்துரக்கூடாது பாருங்க, அதுக்கு தான் இப்படியெல்லாம்..!!)


imback
அய்யோ..!!..வந்துட்டியா...??


Monday, August 23, 2004

நச்சுன்னு ஒரு கேள்வி

அதென்னமோ தெரியலைங்க, நாலு படிச்ச பெரியவங்க மத்தியில, எனக்கு புடிச்ச காமெடி நடிகர் கவுண்டமனி தான்னு சொன்னா, ஒரு இளக்காரமான பார்வை வருது. "சும்மா கால தூக்கி இடுப்புல உதைக்கிறதுக்கு பேரெல்லாம் காமெடியா?? காமெடின்னா கொஞ்சம் ஹெல்த்தியா செய்யனும்" அப்படி இப்படின்னு ஒரு பெரிய லெக்சர் வேற குடுக்கிறாங்க.

ஒத்துகிறேன், கால தூக்கி இடுப்புல உதைக்கிறதுக்கு மட்டும் காமெடியில்லை, ஆனா கவுண்டமனி காமெடி அது மட்டும் தானா? ஒரு வாழைப்பழ சீனுல அவர் உதைக்கிறது மட்டுமா பிராதானம்? வைதேகி காத்திருந்தால் படத்துல செந்தில் பெட்ரமாக்ஸ் லைட்ட உடைச்சதும் ஒரு பார்வை பார்ப்பாரே, அப்போ எதுக்கு சாமி சிரிச்சீங்க?, அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லி ஒரு சமாளிப்பு சமாளிப்பாரே, அது கூட காமெடி இல்லையா?
இப்படி கேள்வி கேக்க ஆரம்பிச்சா, அப்புறம் அதுக்கு ஒரு முடிவே இருக்காது, அவர் நடிச்ச எல்லாப்படத்தையும் பத்தி பேசனும். எனக்கு என்னமோ அவர் காமெடி புடிச்சிருக்கு. அப்ப்டி இல்லாம சும்மாவா 20 வருஷம் ஒரு ஹீரோக்கு சமமா நிக்க முடியும். அதுவும் நன்னை பத்தி விளம்பரமா ஒரு பேட்டியும் குடுக்காம, ஒரு விழாவுலையும் கலந்துக்காம, மக்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கிரதுன்னா அது சாதரண விஷயாமா?


நான் சொல்ல வந்தது கவுண்டமனி காமெடிய பத்தியில்லை, (அப்புறம் ஏண்டா கண்டதையும்பேசர..?) சரி.. சரி விஷயத்துக்கு வர்றேன். இங்க எங்க ஊரு பக்கம் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடக்கும், எங்க ஆளுகளும் ஏதோ காணாததை கண்டவங்க மாதிரி வேலை வெட்டிய விட்டுபுட்டு சுத்தி குமுஞ்சுகிட்டு வேடிகை பார்ப்பாங்க. என் பங்காளி ஒருத்தன் தொந்திரவு தாங்காம நானும் ஒரு நாள் வேடிக்கை பாக்குற கூட்டத்துக்கு கூட போனேன். அங்க போன நம்ம கவுண்டமனி நடிச்சுட்டு இருக்காரு, எதாவது வடநாட்டு பொண்ணு தொப்புளையும், ***\, காட்டிட்டு வயல்ல இறங்கி ஆடுவா, நேருல பார்க்கலாம்ம்னு வந்த நம்ம பசங்க வெறுப்பாகி திரும்பிட்டாங்க. நான் நம்ம ஆளு இருக்காரே கொஞ்ச நேரம் வேடிக்க பாக்கல்லாம்னு அங்கயே நின்னுட்டன். நமக்கு தெரிஞ்சவங்க தோட்டதுல தான் ஷூட்டிங் நடந்துதா, அந்த தோட்டதுக்காரர், அவரோட செல்வாக்க காட்டனும்னு, என்னை கூட்டீட்டு போய் கவுண்டமனி கிட்ட அறிமுகப்படுத்திவச்சாரு, நானும் கொஞ்ச நேரம், சும்மா, எனக்கு உங்க படமெல்லாம் ரொம்ப புடிக்கும் அது இதுன்னு திருவாத்தான் மாதிரி பேசிட்டு இருந்தேன் (மாதிரி என்ன, மாதிரி நிஜம்மாவே அப்படித்தான்). அவரும் மரியாதையா, என்ன செய்யரீங்க அப்படி இப்படின்னு விசாரிச்சுட்டு, ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க, அதுதான் நான் சொல்ல வந்த சமாச்சாரம். அதை சொல்றதுக்கு பதிலா தேவையில்லாம, காமெடி, ஷூட்டிங்க்ன்னு கண்டதையும் பேசிட்டன். அப்படி என்ன கேட்டாருங்கரீங்களா?. "நாங்க பாட்டுக்கு எங்க வேலையா பார்த்துட்டு இருக்கோம், நீங்க ஏன்ப்பா இப்படி உங்க வேலைய விட்டுபுட்டு எங்கள வேடிக்கை பார்த்துட்டு நிக்கரீங்க, நீங்க வேலை செய்யும் போது யாராவது இப்படி வந்து வேடிக்கை பார்ப்பாங்களா?"ன்னு கேட்டாரு. ஒரு கேள்வின்னாலும் நச்சுன்னு நடு மண்டையில கடப்பறைய போட்ட மாதிரி கேட்டாரு பாருங்க, அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் நான் ஷூட்டிங் நடக்குற பக்கம் தலை வச்சு படுக்கறது கூட இல்லைங்க (அன்பேசிவம் படத்துக்காக கமல்ஹாசன் வந்தப்பவும் சரி, வின்னர் படத்துகாக அருவியில கிரண் இழுத்து போத்திட்டு (!) பாட்டு சீன் எடுக்கறாங்க மாப்பிள்ளைன்னு பசங்க என்னை உசுப்பேத்துனப்ப கூட, ம்ஹூம் சத்தியமா நான் அந்த பக்கம் போகலை)

Sunday, August 22, 2004

வலைப்பூ பக்கம் போறேன்.

யாரு நம்மளைப்பத்தி என்ன சொல்லிகுடுத்தாங்கன்னு தெரியல, திடீர்ன்னு போன வாரம் "உங்களை பத்தி சொல்லுங்க ராசா"ன்னு மதி(யக்கா?)கிட்ட இருந்து ஒரு கடுதாசி வந்துச்சு. சரி, நம்மளையும் மதிச்சு கேக்க கூட ஆள் இருக்கு இந்த உலகத்திலன்னு, நானும் என் அருமை பெருமையெல்லாம் தெளிவா(!) எடுத்து சொல்லி ஒரு பெரிய கடுதாசிய அனுப்பிட்டு, காய் புடுங்கினா காட்டுல அடுத்த மழைக்கு முன்னால ஒரு உழவு ஓட்டி விட்ருவோம்னு கிளம்பிட்டேன்.
திரும்பி வந்து பார்த்தா, காத்து பலமா அடிச்சா குப்பை கூட கோபுரத்துல ஏறி பரதநாட்டியம் ஆடும்பாங்களே, அந்த மாதிரி, மதிகிட்ட இருந்து "நீதாண்டா இந்த வாரம் 'வலைப்பூ'க்கு ஆசிரியர்"ன்னு மறுபடியும் ஒரு கடுதாசி.
சரி தான், குழந்தைக்கு அழகா தலை சீவி, பவுடர் எல்லாம் போட்டு, கொஞ்சம் மையெடுத்து கன்னத்துல வப்பாங்களே, கண்ணு பட்டுரக்கூடாதுன்னு, அதுமாதரி, வாராவாரம் ஒரு ஆளுன்னு, கலக்கிட்டு இருக்கிற வலைப்பூ'க்கு, ஒரு திருஷ்டி பொட்டு வைக்க ஆசப்படுராங்க போல, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பனேன்னு, நானும் சரின்னு சொல்லிட்டன். (நமக்கு தான் தாராள மனம் ஆச்சே, யார் எது கேட்டலும் மறுக்க மாட்டமே!!)

அதுனால, இந்த ஒரு வாரம் பூராவும் தோட்ட வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு 'வலைப்பூ' பக்கம் போகப்போறேன். வலைப்பூ ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
இருக்குற பதிவுல எழுதவே ஒன்னும் தெரியல, நம்மளைப்போய் வலைப்பூ'ல எழுதுன்னா? சும்மா, ஒரு ஆர்வத்துல சரின்னு சொல்லிட்டேன் இப்போ என்ன எழுதறதுன்னே தெரியல, யாரவது எதாவது ஒரு வரி எடுத்து குடுங்கப்பா...

(ச்சே..!! 25வது பதிவும் அதுவுமா, எதாவது ஒரு கலக்கல் மேட்டர் எழுதி பின்னிரனும்னு நினைச்சேன், இப்படி என்ன எழுதறதுன்னு சொல்லி குடுங்கப்பான்னு கெஞ்சற மாதிரி ஆயிடுச்சே.. எல்லாம் நேரம் "ஆசை இருக்கு தாசில் செய்ய, அதிர்ஷ்ட்டம் இருக்கு எருமை மேய்க்க'"ன்னு சும்மாவா சொன்னாங்க)

Wednesday, August 18, 2004

சும்மா ஒரு பதிவு

busy@farm


அடிக்கடி பதிவு செய்யலைன்னா எங்க நம்ம பட்டா'வ தூக்கிடுவாங்களோங்கிற பயத்துல.. ஒரு படப்பதிவு..

Saturday, August 14, 2004

ஒரு கவிதை

நேத்து எங்கய்யனுக்கு 'சாரதி'யா பாலக்காடு வரைக்கும் போயிருந்தனுங்க (அதையாவது உருப்படியா செய்யுங்கறீங்களா??). எங்கய்யனுக்கு ஒரு பழக்கம், எங்கே போனாலும் என்னை கண்டிப்பா கூட கூட்டிட்டு போய்டுவாரு(!), ஆனா போற இடத்துல என்னை வெளிய வண்டிக்கு காவல் விட்டுட்டு அவர் மட்டும் வேலைய பார்க்க போய்டுவாரு, (நம்ம மேல அவ்வளவு மரியாதை!!..ம்.ம்!!). அதுனால எப்ப எங்கய்யன் கூட வெளியூர் போனாலும் (ஆ.வி., குமுதம்'ன்னு) எதாவது ஒரு ரெண்டு புஸ்த்தகம் வாங்கி வண்டிக்குள்ள போட்டுக்குவேன். இந்த தடவை போகும்போது இந்த வார பதிப்பெல்லாம் ஏற்க்கனவே படிச்சுட்டதுனால, போற வழியில டீ சாப்பிட நிறுத்தும்போது 'மிருகபாலிகை'ன்னு ஒரு புஸ்த்தகம் வாங்கிவச்சேன். (அட்டை கொஞ்சம் விளம்பரமா இருந்துதா, சரி, இந்த மாதிரி புஸ்த்தகம் எல்லாம் கையில வச்சிருந்தாலாவது நம்ம கொஞ்சம் விவரமான ஆளுன்னு பாக்கிறவங்க நம்புவாங்களேன்னு வாங்கினேன்).
நான் இன்னும் அதை முழுசா படிக்கல, இருந்தாலும் நிறையா கவிதை நல்லா இருந்ததுச்சுங்க, அதுல இருந்து ஒரு கவிதை.

காதல்.

நீண்டதூரம் அழைத்துவந்து
சட்டென்று கை உதறி
மறைந்து கொண்டதில்
அல்லலுறுகிறது ஒரு காதல்.

அங்குமிங்கும் ஓடுகிறது.
அல்லாடுகிறது.
அலைபாய்கிறது.

சற்று நேரம்தான்.
எதுவும் கேட்கவில்லை
எல்லாம் புரிந்தது போல்
சட்டென்று ஒரு வழி பிடித்து
நடந்து மறைகிறது.

வந்ததும் தெரியாமல்
போனதும் தெரியாமல்.

- வஸந்த்செந்தில் (மிருகபாலிகை)

இதேமேட்டரத்தான் நம்ம வாசூல்ராஜ'வுல வைரமுத்து (கொஞ்சம் நமக்கு புரியர மாதிரி) எழுதி, கமல் பாடியிருக்காரு,
'ஆள்வார்ப்பேட்டை ஆண்டவா,
வேட்டிய போட்டு தாண்டவா,
ஒரே காதல் உலகில் இல்லையடா'.

இதெல்லாம் ரைட்டுதான்,
நமக்கு இங்க ஒன்னுக்கே வழிய காணல, இதுல இவுங்க வேற ஆள் மாத்தி ஆளு வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க.. ச்சே!! (நம்ம ஊருப்பக்கம் இப்போ அமேரிக்கா பையனகளுக்கு தான் மதிப்பு, நம்மள மாதிரி உள்ளூருல மாடு மேய்க்கிற பசங்களையெல்லம் ஒரு புள்ளையும் திரும்பிக்கூட பார்க்கிறதில்ல..)

ஒரு அஞ்சலி:
இந்த பாட்டெல்லாம் கேக்கறதுக்கு இல்லாம, 'பூவே உனக்காக' கிளைமாக்ஸ்'ல வர்ற 'ஒரு பூ செடியில இருந்து உதிர்ந்துட்டா, அது மறுபடியும் செடியுல ஒட்டாது'ன்னு விளங்காத தத்துவம் பேசிட்டு, UKG'ல இருந்து +2 வரைக்கு ஒட்டுக்கா படிச்ச என்னையும், 23 வருஷம் தங்கம் போல வளர்த்த அவுங்க ஆயிஅப்பனையும், விட்டுட்டு, 2 வருஷம் முன்னாடி இதே ஆகஸ்ட் 14ம்தேதி 'எக்கலக்ஸ்' குடிச்சுட்டு (கசப்பு தெரியாம இருக்க பெப்ஸி கலந்து) காதல்ல 'ஜெயிச்ச' எங்க முட்டாள் 'சிவசு'வை பெத்தவுங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.


r

Tuesday, August 10, 2004

நான் கொஞ்சம் வசதியான ஆளுங்க...!!!

'சும்மா வெட்டியாவே எழுதிட்டிருக்ககியே மாப்ள'ன்னு இங்க நம்ம தோழர்கள் ரொம்ப சடைஞ்சுக்கிறதால, இந்த தடவை கொஞ்சம் தத்துவத்தை கொட்டலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். அதுக்காக ஒரு கதை சொல்ல போறேன்....
(இதையெல்லம் தொகுத்து பிற்காலத்தில 'ராசாவின் தத்துவமுத்துக்கள்'ன்னு ஒரு புஸ்தகம் போடலாம்னு ரோசனை..!!)

கதை:
ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் (நம்ம கவுண்டமனி சொல்லுவாரே 'கடலைஉடைக்கிற மெஷின் வெச்சிருக்கிறவனெல்லாம் தொழிலதிபர்ங்கிறாண்டா'ன்னு அந்த மாதிரி இல்லை.. நிஜம்மாலுமே பெர்ர்ரிய தொழிலதிபர்) செல்வசெழிப்புல வளர்ந்த அவரோட செல்லப்பையனை, ஏழைகளோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க, (எங்க ஊரு மாதிரி..!) ஒரு கிராமத்துக்கு அனுப்பி வச்சிருக்காரு. அந்த பையனும் கிராமத்துக்கு போய் ஒரு ரெண்டு நாள் தங்கியிருந்து சுத்திபார்த்துட்டு வந்திருக்கான்.(என்னை மாதிரி அப்பா பேச்சு கேட்டு நடக்குற சமத்து பையன் போல. :-)...)
சுத்திபார்த்துட்டு வந்த பையன்கிட்ட அவுங்க அப்பா "என்ன தம்பி எல்லாம் சுத்தி பாத்தியா? எப்படி இருந்தது?"ன்னு கேக்க.. பையனும் "ரொம்ப நல்ல இருந்ததுங்ப்பா"ன்னு சொல்லியிருக்கான்.
"ரெண்டு நாள் தங்கியிருந்து சுத்தி பார்த்து என்ன கண்ணு தெரிஞ்சுகிட்ட?"ன்னு அவரும் ஆர்வாமா கேட்டிருக்காரு..
அதுக்கு அந்த பையன் " நம்ம வூட்டுல ஒரே ஒரு நாய் வச்சிருக்கோம், ஆனா அங்கேயெல்லாம் வீதி பூரா ஏகப்பட்டா நாய்க சுத்துது (அதுல ஒன்னு தான் நம்ம நாமக்கல் ராஜாவை கவுத்திருக்குமோ??), நம்ம வூட்டுல தோட்டத்துக்கு நடுவால சின்னதா ஒரு குளம் வெட்டி வெச்சிருக்கோம், ஆனா அவுங்க வீதி பூராவும் இருக்கிற குளங்களுக்கு கரையே இல்லை, நம்ம வீட்டு திண்னை மாதிரி இல்லாம அவுங்க வீட்டுகள்ல ரோட்டு வரைக்கும் திண்னை இருக்குது, நம்ம வீட்டுக்கெல்லாம் நம்ம தனியா கரண்ட் கனக்க்ஷன் வாங்கி பணம் கட்டுறோம் ஆனா அவுங்களுக்கு எல்லாம் அரசாங்கமே நம்ம தோட்டத்துல இருக்கிற மாதிரி மஞ்சலைட் போட்டு குடுத்திருக்கு, உங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லனும்ப்பா, நாம எவ்வளவு ஏழைங்கறதை நீங்க எனக்கு புரிய வச்சுட்டீங்க"ன்னு சொன்னான், இதை கேட்ட நம்ம தொழிலதிபர் வாயடைச்சு போய் நின்னுட்டாராம்.

இதைத்தான் பெரியவங்க.."உங்களோட வசதிங்கிறது உங்ககிட்ட இருக்கிற பொருளோட பணமதிப்புல இல்லை, பணத்துக்காக நீங்க எதை விற்க தயாரா இல்லையோ அதுல தான் இருக்கு"ன்னு சொல்றாங்க.
(எங்கயோ படிச்ச மாதிரி இருக்கா??.. அடப்போங்க ஷிவ்கேரா'வே அடுத்தவங்க எழுத்தை தடவி (!) எழுதறாராமா .. நான் எழுதக்கூடாதா??)
மேல சொன்ன சங்கதி பிரகாரம் பார்த்தா... நிஜம்மாலுமே நான் ரொம்ப வசதியான ஆளுங்க..!!!

ஒரு குறிப்பு:
நெல்லுக்கு பாயற தண்ணி புல்லுக்கும் பாயும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வலைவலம் பகுதியில இந்த பதிவு பத்தி நம்ம சந்திரவதனாக்கா ஒரு வார்த்தை எழுதினாலும் எழுதினாங்க, சும்மா 'ஈ'யாடிட்டுருந்த நம்ம பதிவோட visitor count, திடீர்ன்னு எகிரிடுச்சு.... எல்லாம் நேரம்..ம்.ம்,
(இந்த நேரத்தில அவார்ட் வாங்கின பெரியவங்க சொல்ற மாதிரி.. "இப்பத்தான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கிடைச்சதை தக்க வச்சுகனுமே, எம்மேல ரொம்ப பொறுப்பு ஏறிட்டதா நினைக்கிறே"ன்னெல்லம் கொஞ்சம் பிலில் காட்டலாம்னு எனக்கும் ஆசை தான்.. ஆனா எங்க கல் எடுத்து வீசி மண்டைய பொளந்திருவீங்களோங்கிற பயத்துல 'கப்சிப்')....

Sunday, August 8, 2004

ஒரு வித்தியாசமான பதிவு..!!!

என்ன எழுதறதுன்னு யோசிச்சுகிட்டே நிறையா வலைப்பூக்களை வாசம் பார்த்ததில.. எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்துல 'எனக்கு பிடித்தவை' அல்லது 'எனக்கு பிடித்த தருணங்கள்'ன்னு ஒரு பதிவு செஞ்சிருக்காங்க (இப்பத்தான் வேலை வெட்டியில்லாமல் வலை மேய்பவர்கள்ன்னு ஒரு பிரிவு இருக்கிறதா நம்ம 'நியோ' வலைப்பூவில சொல்லியிருக்காரு, அதுக்கு ஆதாரம் கிடைச்சிருச்சா!!).....
சரி, நாம தான் ரொம்ப வித்தியாசமான ஆளாச்சே(என்ன சிரிப்பு..??.. ம்.. எல்லா சினிமாக்காரங்களும் படம் ரிலீசு பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் சொல்றாங்க.. படம் வந்தா ஒரு வெங்காயமும் வித்தியாசம் இருக்கறது இல்ல.. அது மாதிரித்தான் இதுவும் .. சும்மா ஒரு விளம்பரம்....) அதுனால நமக்கு புடிச்சதெல்லாம் லிஸ்ட் போடுறதுக்கு முன்னாடி 'எனக்கு பிடிக்காதவை/பிடிக்காத தருணங்கள்'ன்னு ஒரு பதிவு எழுதியிருவோம்னு முடிவு செஞ்சு.....

எனக்கு பிடிக்காதவை:
1. தினமும் ஷேவ் செஞ்சுக்கறது. ரொம்ப பேஜார் புடிச்ச வேலைங்க இது.. ஒரு நாள் ஷேவ் பண்ணாட்டியும்.. "என்ன பங்காளி டல்லா இருக்கே"ன்னு ஆரம்பிக்குற என்னோட ஒண்னு விட்ட அண்ணன்ல இருந்து.. உரக்கடை முதலியார் வரைக்கும் பதில் சொல்லி தீராம, வெறுப்போட தினமும் செய்யிர வேலை.. (படிக்கிற காலத்துல சந்தோஷமா தாடி விட்டுட்டு சுத்துனது ..ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!)
2. சில நேரங்கல்ல கரெக்ட்டான நேரத்துக்கு கிளம்பிடுற 'நீலகிரி எக்ஸ்ப்பிரஸ்' (நாம லேட்டா போகும் போது மட்டும் அவுரு கரெக்ட்டா கிளம்பிடுவாரு.. )
3. நல்லா ஒரு விடைக்கோழி அடிச்சு, பெரியாத்தா புண்ணியத்துல ஒரு புடிபுடிச்சுட்டு தூங்ககுற ஞாயித்துகிழமை மத்தியானம் வர்ற ராங்கால்கள். ( நல்ல தூக்கம் கலைஞ்சு போய் போன் எடுத்தா யார் பேசாறாங்கன்னு தெரியாமலே 'நான்தான் பேசுரேன்'னு ஆரம்பிக்குற ஆளுக மட்டும் என் கையில கிடைச்சா......!@$$@!)
4. எப்ப பாரு யாரவது ஒரு பொண்ணு நிறையா நகை போட்டுகிட்டு (ஒரு கூலிங்கிளாசஸ் வேற!!) லேடி நம்பியார் மாதிரி வசனம் பேசுற.. டி.வி சீரியல்கள். (இதுக்கு பயந்துகிட்டு தான் நான் ராத்திரி 10 மணி வரைக்கு வீட்டுக்கே போறதில்லை.. சத்தியமா . வேற ஒரு காரணம் எதுவும் இல்லை :-) )
5. நேரம் காலம் இல்லாம.. எப்பப்பாரு சூரியன் எப்.எம்'ல எதாவது ஒரு போன்'இன். நிகழ்ச்சியை சத்தமா அலற விட்டுடிட்டு டி.வி.எஸ்'ல பறக்குற எங்க ஊரு மைனர்கள். (இந்த மொபெட்டுல ரேடியோ மாட்டிக்கிற ஸ்டைல யாருங்க கணடுபுடிச்சாங்க)
6. 3 ஜோக்கர் கையில இருந்தும், 4-5 ரவுண்ட் போயும், ஒரிஜனல் சேராமா ஆட்டம் காட்டும் ரம்மியாட்டம் ( எனக்கு மட்டும் எனுங்க இப்படி.. ச்சே..நமக்கு எப்பவுமே அப்படி ஒரு ராசி..!!!)

இப்படி பல விஷயம் இருக்குதுங்க......
எங்க ஊருபக்கமெல்லாம் 'கொங்க'மழை சும்மா விடாம அடிச்சுட்டுருக்கு,
"வெட்டாப்பு விட்ட நேரத்தில காய் புடுங்கி போட்டுரலாம்ன்னு பார்த்தா.. இவன் எங்க கானாமபோயிட்டான்"ன்னு எங்கய்யன் குரல் வெளிய கேக்குது.. அதுனால இப்போதைக்கு.. நீங்க தப்பிச்சுடீங்க.. காய் புடுங்கி பொட்டுட்டு வந்ததும் மீண்டும் தொடரும்.... (இந்த மாதிரி நேரத்துல எங்கய்யன் குரல் கூட.... பிடிக்காதவை லிஸ்ட்டுல சேர்க்க வேண்டிய விஷயம் தான்)

நில்..!! ஜமாய்..!! செல்..!!

நில்..!! ஜமாய்..!! செல்..!!
சும்மா..
நாமளும் படப்பதிவு செஞ்சதா ஒரு வரலாறு(?) இருக்கட்டுமேன்னு ஒரு பதிவு..

Thursday, August 5, 2004

ஒரு கணவன் மனைவியின் டைரி குறிப்பு..!!!

ஏன்தான் இந்த பொண்ணுக வாழ்க்கை மட்டும், பசங்க வாழ்க்கை மாதிரி இல்லாம, அதிகம் குழப்பமும், புலம்பலுமாவே இருக்குன்னு ரொம்ப நாளா யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் .. அதுக்கு ஒரு விடையே கிடைக்கல.., நானும் எருமைத்தயிர கரைச்சு ஒரு புடிபுடிச்சுட்டு, வேப்ப மர நிழல்ல கயித்து கட்டில்ல போட்டு, மல்லாக்க படுத்துட்டு பல காலமா யோசிக்கிறேன்..ம்ஹூம்..நம்ம புத்திக்கு ஒரு இழவும் விளங்கலை.. எங்க ஊரு மணியகாரர்'ல இருந்து எங்க தோட்டத்துல சாணி அள்ளுற சின்னான் வரைக்கு எல்லார்கிட்டயும் பேசி பார்த்துட்டேன்.. ஒன்னும் புரியல,, யாருக்கும் இதுக்கு காரணம் தெரியல...
ரொம்ப நாளா இருந்த இந்த பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சுருச்சு..
நேத்து எத்தேசையா ஒரு புருஷன்-பொஞ்சாதியோட டயிரியை படிச்சு பார்த்தேன்.(சரி.சரி...திருட்டுதனமாத்தான்!!.. தேவைப்பட்டா பொய் சொல்லலாம்னு வள்ளுவரே சொல்லியிருக்கரு, நான் சொன்னா மட்டும் என்ன நக்கலா ஒரு சிரிப்பு!!)
இதோ அந்த டையிரிலிருந்து .....

---------------------------
மனைவியின் டயிரி:
3/8/04


என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு, ஒரே மூட் அவுட்டா இருக்காரு, கேட்டா ஒன்னுமில்லைங்கிறாரு,
நான் எதாவது தப்பு பண்ணியிருப்பனோ??, அதை கேட்டாலும் அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறாரு,
வீட்டுக்கு திரும்பி வரும்போது எவ்ளோ ஆசையா பேசினேன், அதுக்கு அவர் எதாவது பேசியிருக்கலாம், சும்மா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு இருக்காரு,
ஏந்தான் இப்படி இருக்காரோ, எனக்கு புரியவேயில்லை.. ஆனா ஒன்னு அவருக்கு எம்மேல பிரியம் இல்லைன்னு மட்டும் தெரியுது..
வீட்டுக்கு வந்ததும் அதே கதை தான், அவர் பாட்டுக்கு டி.வியை போட்டு உக்காந்த்துட்டாரு, நானும் எவ்ளோ நேரம் பக்கத்துல உக்காந்த்திருந்தேன், ஆன அவர் என்னை கண்டுக்கவே இல்லைஎனக்கு என்னமோ அவர் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி இருக்கு. ஒரு 15 நிமிஷம் டி.வி பார்த்துட்டு அப்புறம் நான் வந்து படுத்திட்டேன். அவரும் ஒரு 10 நிமிஷத்தில வந்து படுத்துட்டாரு, என்னால தாங்க முடியல, அப்படி என்னதான் பிரச்சனைன்னு கேக்கலாம்னு முடிவு எடுத்து அவர் பக்கம் திரும்பினா, அவர் சுகமா தூங்கிறாரு....
எனக்கு ஒரே அழுகையா வந்துது, ராத்திரி பூராவும் அமைதியா அழுதிட்டு இருந்தேன்..அப்புறம் எப்போ தூங்கினேன்னு தெரியல...
எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது, அவர் நெனைப்பு வெற எங்கயோ இருக்கு, அவருக்கு எம்மேல அக்கறையே இல்லை..
என் வாழ்க்கையே சூனியமாகி போச்சு....

கணவனின் டயிரி:
3/8/04


இன்னைக்கு மேட்ச்சுல இண்டியா தோத்திருச்சு...ச்சே.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இப்படி அநியாயமா சொதப்பி தோத்துடானுகளே....!!
---------------------------

இதை படிச்சதும்.. நான் ஒரு தெளிவுக்கு வந்துட்டேன்.. நீங்க..????

Monday, August 2, 2004

சில விமர்சனங்கள் !!

சில விமர்சனங்கள் !!
சில கேள்விகள்!!
சில தீர்க்கதரிசனங்கள்!!
இந்த மூணுல எதை தலைப்பா வைக்கறதுன்னு பயங்கர குழப்பத்துக்கப்புறம்,
எண், கனித, நாடி, கைரேகை, முகரேகை, வாஸ்த்து (நம்ம ஊரு முறை, சைனீஸ் முறை ரெண்டும்!!), 'ன்னு எல்லா வகை ஜோஸியத்ததையும் பார்த்து (கிளி ஜோஸியம் மட்டும் விட்டு போச்சு.. மன்னிச்சுக்குங்க!!), கடைசியா எங்க ஊரு மாரியம்மன் கோவில்ல பூக்கேட்டு சில விமர்சனங்கள் !! அப்படிங்கிற இந்த தலைப்பை வெச்சிருக்கேன் (யப்பா!! இதுக்கே மூச்சு வாங்குது..)

போனதடவை கடைசியா கேள்வியை சொன்னது மாதிரி இல்லாம .. இந்த தடவை ஒரே கேள்விகள் தான் போங்க... ஆனா பதில் மட்டும் கடைசியா!!


கேள்வி 1:
பள்ளிகூடத்தில ஒழுங்கா கணக்கு போடாம "இந்த சாதாரன கணக்கு கூட உன்னால போடமுடியலயே, நீயெல்லம் வாழ்க்கையில எந்த நேரத்திலும் உருப்படவே மாட்டே"ன்னு டீச்சரி கிட்ட பேச்சு வாங்கின பையன், பிற்காலத்தில பெரிய விஞ்ஞானி ஆயிட்டராம்.. யாரு அந்த பையன்??

கேள்வி 2:
நாலு வயசுல நிமோனியா காய்ச்சல் வந்து, இடது கால் பாதிக்கப்பட்டு கம்பி கட்டி நடந்துட்டு இருந்த புள்ள, திடீர்ன்னு ஒரு 13 வயசுல கம்பிய கழட்டி வீசீட்டு இனிமேல் நான் இப்படியே நடப்பேன்னு சொன்னதோட மட்டுமில்லாம ஒட்டபந்தயங்களிலுல் கலந்துக்க ஆரம்பிச்சா. கொஞ்ச காலத்தில் தான் ஓடுன எல்லா பந்தயதிலும் அந்த புள்ளையே ஜெயிச்சதா சரித்திரம் சொல்லுது.. யாரு அந்த பொண்னு??

கேள்வி 3:
1940ல செஸ்டெர்கார்ல்ஸன்'னு ஒருத்தர் அவரோட கண்டுபிடிப்பை எடுத்துகிட்டு அமேரிக்காவுல இருக்கிற பெரிய பெரிய கம்பெனிக்கு போனாரு, கிட்டத்தட்ட ஒரு 20 கம்பெனிக்காரங்க அவரோட கண்டுபிடிப்பை ஒதுக்கீட்டாங்க, அப்புரம் ஹலாய்ட்'ன்னு நியுயார்க்'ல ஒரு சின்ன கம்பெனி அவரோட கண்டுபிடிப்பை விலை கொடுத்து வாங்கிருச்சு, அதை சந்தையில அறிமுகம் செஞ்சு, பின்னாடி ஹலாய்ட்'ங்கிர அவுங்க கம்பெனிய அந்த கண்டுபிடிப்பு பேருக்கே மாத்திட்டாங்க... அந்த கம்பெனி பேரு என்ன??

கேள்வி 4:
1962ல 4 சின்ன பசங்க 'டெக்காரெகார்டிங்' கம்பெனியில அவுங்களோட முதல் record audition(இதை எப்படீங்க தமிழ்ல சொல்றது..- அய்யா ஈழநாதன் please help!! குரல்வளபரிட்ச்சை'ன்னு சொல்லலாமா??) முடிஞ்சதும், அங்க இருந்த ஒருத்தர் சொன்னாரு 'என்னமோ ஆளுக்கு ஒரு கிதார வெச்சுகீட்டு சும்மா எதோ ச்வ்ய்ண்ட் உடுறானுகாப்பா, இது போணியாகாது'.. யாரு அந்த 4 சின்ன பசங்க??

கேள்வி 5:
ரேடியோவில செய்தி வாசிக்க போய், 'இந்த குரலையெல்லாம் மக்கள் கேக்க பிரியபடமாட்டங்க, அதுவும் இப்படி ஒரு நீளமான பேரு வெச்சுகிட்டு பிரபலம் ஆக ஏம்ப்பா நீ ஆசப்படுறது தப்பு'ன்னு, விமர்சணம் செய்யப்ப்ட்டா ஆளு யாரு?

கேள்வி 6:
1944'ல ஒரு மாடாலிங் ஏஜன்சிக்கு வேலைகேட்டு போய்,' நீ கம்முன்னு செக்ரட்டரி வேலை கத்துக்கோ, இல்லை கல்யாணம் பன்னிக்கோ, நீ எல்லாம் மாடலிங்க்கு லாயக்கு இல்லை'ன்னு அறிவுறை வாங்கிட்டு வந்தது யாரு?

கேள்வி 7:
1954'ல ஒரு இசைசங்கத்துல இவர் பாடுன முதல் கச்சேரியோட வெளியனுப்பினதுமில்லாம, அந்த மெனேஜர் கிட்ட 'நீ எல்லாம் லாரி ஓட்டத்தான் லாயக்கு'ன்னு பாராட்டு வாங்குனது யாரு?

கேள்வி 8:
தொலைத்தொடர்ப்புக்கு இவர் கண்டுபிடிச்சதை பார்த்துட்டு ரூதர்ஃபோர்ட் (அப்போதைய அமேரிக்க ஜனாதிபதி) ' அற்புதமான கண்டுபிடிப்பு, ஆனா யாரு இதை உபயோகப்படுத்தபோறங்க'ன்னு சொன்னராம். யாரு அவரு, அவர் என்ன கண்டுபுடிச்சாரு?




பதில் 1:
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (இவரே கணக்குல வீக்குதானா, ஸ்கூல் படிக்கும் போது தெரியாம போச்சு!!!)

பதில் 2:
3 தடவை ஒலிம்பிக்குல தங்கம் ஜெயிச்ச 'வில்மா ருடொல்ஃப்'

பதில் 3:
அந்த கம்பெனி 'ஜெராக்ஸ் கார்ப்பரேஷன், அந்த கண்டுபிடிப்பு தான் 'எலெக்ட்ரோஸ்டேட் பேப்பர் காப்பியிங்'

பதில் 4: அந்த நாலு சின்ன பசங்களைத்தான் பின்னாடி உலகம் 'பீட்டில்ஸ்'ன்னு கொண்டாடுச்சு (இப்பவும் அடிக்கடி poggo சேனல்ல பாட்டு பொடறாங்க)

பதில் 5:
அமித்தாப்பச்சன் (இவரு எகிப்து போனப்போ அந்த நாட்டோட பாதி மிலிட்டரி இவரோட பாதுகாப்புக்கு போச்சாமே??)

பதில் 6: இன்னைக்கு வரைக்கும் காத்துல பாவாடை பறக்குறதும் அதை ஹீரோயின் ஸ்டைலா புடிக்கறதும் எல்லா படதுலயும் வருதே.. அந்த சீனுக்கு பிதாமகள் மார்லின்மன்ரோ

பதில் 7:
எல்விஸ்ப்ரஸ்லீ (நம்ம ஊரு 'ஐயம் ஏ டிஸ்கோ டான்சர்களோட பிதாமகன்)

பதில் 8:
டெலிஃபோன் கண்டுபுடிச்ச 'அலக்ஸாண்டர் கிரகாம் பெல்'க்கு கிடைச்ச பாராட்டு அது.

நம்ம ஆளுக தீர்க்கதரிசனத்தை நினைச்சா அப்படியே எனக்கு புல்லரிக்குது போங்க.. இந்த மாதிரி விமர்சனங்களால எத்தனை பேரு வீணாப்போனங்களோ???

என்னைக்கூட இப்படித்தான்.. எங்கய்யன் " நீ எல்லாம் எங்க உருப்படப்போற, மாடு மேய்க்க கூட லயக்கு இல்லாத ஆளு நீ" அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்காரு.. "சரித்திரம் நாளைக்கு உங்களுக்கு பதில் சொல்லும்"னு வீறாப்பா சொல்லீட்டு திரியறேன்... இதுக்கு நடுவால எங்கம்மா வேற "டேய் உங்கய்யனுக்கு கருநாக்கு, அவரு சொன்னா பலிச்சுரும்டா"ன்னு பயங்காட்டுறாங்க....

ஒன்னுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது