Monday, September 27, 2004

ஒரு காபி?

கொஞ்சம் ஒல்லியா.., கொஞ்சமில்ல ரொம்பவே.. ஒல்லியா, கிட்டத்தட்ட ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி, எலும்பும் தோலுமா இருப்பானே, நம்ம நடேசன், அவன்பாட்டுக்கு தனியா பஸ்ஸ்டான்டுல நின்னுகிட்டிருந்தானுங்க. பஸ்ஸ்டாண்ட்ல எதுக்கு நிப்பாங்க? எல்லாம் பஸ்ஸுக்காகத்தான்!.நடேசனுக்கு அப்படி இப்படி, ஒரு பொண்ணுக்குகாகவெல்லாம் காத்திட்டுருக்கிற ஆளில்லை, அவனே பாவம், ஒருத்தியும் திரும்பி பார்க்க மாடேங்கிறான்னு நொந்து போய் இருக்கான், நீங்க வேற..

திடீர்ன்னு ஒரு கார் அவன் பக்கத்துல வந்து நிக்குது, அதுலேயிருந்து ஒரு அழகான பொண்ணு அவன பார்த்து கைகாட்டி, 'வண்டியில ஏறுடா நடேசு'ன்னு கூப்பிடுது. நம்ம நடேசனுக்கு 'யாருடா இது. நம்மளை ஏன் கூப்பிடுது'ன்னு ஒரு சந்தேகம், இருந்தாலும் பொண்ணு, அதுவும் அழகா வேற இருக்கு, அப்புறம் எப்படி போகாம இருக்கிறதுன்னு, கிட்ட போய் பார்த்தா, "நிர்மலா".

நிர்மலா யாருடாங்கரீங்களா? அதாங்க, நடேசன் கூட காலேஜ்ல படிச்சுதே, அந்த பொண்ணுக்கு கூட காலேஜ்ல ஏகப்பட்ட பேரு போட்டி போட்டாங்கன்னு நடேசன் ஒருமாதிரி விரக்த்தியா சொல்லுவானே, அதே நிர்மலா தான். 'என்னடா காலேஜ்ல நம்மளை ஒரு குப்பையா கூட கண்டுக்காத பொண்ணு, இப்படி காருல வந்து கூப்பிடுதே'ன்னு, நம்ம பையனுக்கு ஒரு கலக்கம் இருந்தாலும், இப்பவாது அவ பக்கம் உக்கார ஒரு சான்ஸ் கிடைச்சுதேன்னு டக்குன்னு காருல ஏறிட்டான்.

காரும் போகுது, நம்ம நடேசனுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ' ஒரு கப் காபி சாப்பிடுறயா என்கூட?'ன்னு நிர்மலா கேட்டதும், நடேசனுக்கு, காலேஜ்ல அவ காபி சாப்பிடுற அதே நேரத்துல கான்டீன்ல இன்னோரு மூலையிலகூட இவனுக்கு காபி சாப்பிட குடுத்த வைக்காததெல்லாம் நினவுக்கு வர, அத்தனை டிராபிக்கான டி.பி. ரோட்டுல பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி வெள்ளை டிரஸ் தேவதையெல்லாம் அப்படியே 'லாலாலா'ன்னு பாடிட்டு வர்ற மாதிரி தோனியிருக்குது, உடனே தலைய ஆட்டிட்டான். 'இப்பப்போனா கடையெல்லாம் கூட்டமா இருக்கும், என்னோட வீட்டுக்கு போயிடலாம், அங்கதான் அமைதியா இருக்கும்'ன்னு நிர்மலா சொல்ல்ட்டு நிர்மலா பாட்டூக்கு வண்டியா ஒட்டுது. நம்ம பையன் ஒரு புல் பாட்டில கிங்பிஷர் பக்கத்துலவச்சு ஓப்பன் பண்ணினாலே உளர ஆரம்பிச்சுடுவான், அவனைப்பார்த்து ஒரு அழகான் பொண்ணு, அதுவும் ஆட்டோகிராப் படம் மாதிரி, காளேஜ்ல சைட் அடிச்ச பொண்ணு, வீட்டுக்கு போய் தனியா காபி சாப்பிடாலாம்ன்னு கூப்பிட்டா, எதோ முதல் முதல்லா சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போற ஸ்கூல் பையன் மாதிரி ஒரே படபடப்பா தலையாட்டிருக்கான். அப்புறம் அவன் என்ன செய்யுவான், பேச்சு வந்தாத்தான?

வீட்டுக்கும் போயிட்டாங்க..'. என் பெட்ரூம்ல உக்காந்துக்கலாமே, அங்க தான் ஏ.சி.யிருக்கு'ன்னு நிர்மலா சொல்ல, இங்க நடேசனுக்கு, உடம்புல இருக்கிற அத்தனை ஹார்மோன் சமாச்சரங்களும், (வியர்வையும் சேர்த்துதான்) ஊத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏ.சி. ரூமுக்குள்ள வேர்த்து விறுவிறுத்து நிக்கிறவனை பார்த்துட்டு நிர்மலா 'ஏய், ஏன்டா உனக்கு இப்படி வேர்க்குது, எதுக்கும் சட்டைய கழட்டிட்டு இப்படி கட்டில்ல உக்காரு, இதோ நான் ஒரு நிமிஷத்துல வந்துர்ரன்'ன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டா, நடேசனுக்கு அவன் பத்து வருஷம் முன்னாடி முருகன் தியேட்டர்ல பார்த்த 'டியுசன் டீச்சர்'ல இருந்து போன வாரம் கனகதாராவுல பார்த்த 'தி டூ விமன்' வரைக்கும் அந்த நேரத்துல ஏன் ஞாபகம் வருதுன்னு ஒரே குழப்பம், அந்த குழப்பத்துக்கு நடுவாலயும் நிர்மலா சொன்ன மாதிரி சட்டைய கழட்டி வச்சுட்டு, (இந்த இடத்துல, நடேசனுக்கு பனியன் போட்டுக்கிற வழக்கம் இல்லைங்கிற முக்கியமான விஷயத்தை நாம் மறந்துரக்கூடாது) கட்டில்ல உக்காந்திருக்கான்.

இதோ வர்றேன்னு போன நிர்மலா அஞ்சு நிமிஷமா வரலை, இங்க நடேசனுக்கு, காலேஜ் டூர்ல நிர்மலா போட்டுட்டு வந்த டைட் ஜீன்ஸும், லோகட் டாப்ஸும், திடீர்ன்னு ஞாபகத்துக்கு வந்து பாடா படுத்துது.

பத்து நிமிஷம் ஆச்சு, நிர்மலா ரூமுகுள்ள வர்றா.... அவ கூட ரெண்டு சின்ன குழந்தைக, உள்ள வந்ததும் அந்த குழந்தைக கிட்ட சட்டையில்லாம உரிச்ச கோழி மாதிரி உக்காந்திருக்கிற நடேசன காட்டி 'பாத்துக்கங்க கண்ணுகளா, நீங்க ஒழுங்கா ஹார்லிக்ஸ், காம்ப்ளான், எல்லாம் குடிக்காட்டி இப்படித்தான் இந்த மாமா மாதிரி ஒல்லியாயிடுவீங்க'ன்னு சொல்ல சொல்ல
"அய்யோ! நம்ம நடேசன் ஏங்க திடீர்ர்ன்னு நெஞ்ச புடிச்சுட்டு கட்டில்ல சாயுறான், யாராவது ஒரு ஹார்லிக்ஸ் இல்லாட்டி காம்ப்ளான் கலந்துட்டு வாங்களேன்"

-----------------------
கவிதை (மாதிரி எதாவது) எழுதினா, காதலா?ன்னு கேக்கிறாங்க, (தாடி வச்சுட்டு சுத்துன காலத்திலயும் அதே கேள்வி தான் கேட்டாங்க), அதுனால இனிமேல் கவிதை கிவிதை எல்லாம் எழுதி இலக்கியசேவை செய்யிரது இல்லைன்னு முடிவு செஞ்சுட்டேனுங்க, (நமக்கும் பெருசா ஒன்னும் தோணலைங்கைறது தான் நிசம்).
எப்பவோ எங்கயோ கேட்ட ஒரு மேட்டர சும்மா கொஞ்சம் பில்டப் குடுத்து கதை மாதிரி எழுதி பார்ப்பமேன்னு தோனுச்சு, முயர்ச்சி செஞ்சிருக்கேன்.. ம்ம்.. என்ன செய்யிறது.. உங்க தலைவிதி இப்படி இருக்குது, எனக்கு இப்படியெல்லாம் தோணுது..

(உனக்கு மட்டும் எப்படிரா ராசா.. என்னவோ போடா..)

Saturday, September 25, 2004

மழைக்காலம்


இந்த மழைக்காலத்தின் முதல் துளி..

சுவாசம் நிரப்பும் மண்வாசம்
எலும்பும் சிலிர்க்கும் குளிர்காற்று
மரக்கிளைகளுக்கு நடுவே தென்றல்
நனைந்துபடி உற்சாகமாய் பூக்கள்
ஜன்னலில் தெறிக்கும் சங்கீதம்..

நீயும் நானும்..

மனதில் ஆயிரம் கனவுகள்
ஒவ்வொரு கனவும்..
மழையில் குளிக்கும் நம் கண்களில் நிஜமாக

...கைகள் கோர்த்துபடி

இன்னும் நடக்கிறோம்..

மழையின் இசைக்கேற்ப்ப..
தூரல்களுக்கு நடுவே...
மனது நிறைய நம்பிக்கையோடு...

ஏன் இந்த மழை தினமும் வருவதில்லை??


rain

(சத்தியமா இதை நான் கவிதைன்னெல்லாம் சொல்லிக்கலீங்க.. !)

Thursday, September 16, 2004

கேள்வி மேல கேள்வி

இந்த நிமிஷம் உலகத்தோட மொத்த மக்கள்தொகை எவ்வளவு?
இந்த வருஷம் இதுவரைக்கும் உலகத்தில எத்தனை குழந்தைக பிறந்திருக்கு? இன்னைக்கு மட்டும் எவ்வளவு?
பிறப்பு மாதிரியே இறப்பு எவ்வளவு?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை ஹெக்ட்டேர் காடுகளை அழிச்சிருக்கோம்?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை டன் மீன் புடிச்சிருக்கோம்?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எவ்வளவு புஸ்த்தகம் பதிப்பாயிருக்கு?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை கார் தயாரிச்சிருக்காங்க? அதே மாதிரி எத்தனை சைக்கிள்?
இந்த நிமிஷம் பூமியோட எடை என்ன?

(போதும்டா டேய்!!)

-என்னடா இவன் திடீர்ன்னு கணக்கு வழக்கெல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டான், அமாவாசை ஏதும் பக்கத்துல வருதான்னு யோசிக்கரீங்களா? அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க, (நான் கணக்கு வழக்கு கேட்டு அதுனால நம்ம தமிழ்நாட்டுல எதாவது அரசியல் மாற்றமா வரப்போகுது.. சும்மா பொழுது போகாம கேக்குறது தான, அதுனால மன்னிச்சு விட்ருங்க)
நான் மேல கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் வேணுமின்னா www.worldometers.info ந்னு ஒரு இணயதளம் இருக்கு அங்க போய் பாத்துக்கோங்க..நான் கேட்டிருக்கிற கேள்விக மட்டுமில்லை இன்னும் நிறையா கேள்விகளுக்கு புள்ளிவிவரமா பதில் சொல்லியிருக்காங்க..(இந்த டெக்னிக்கல் ஜிகிடிக்காரங்க செய்யுற ரவுசு தாங்க முடியலைங்க)

ஒரு புலம்பல்:

விநாயகருக்கு பிறந்தநாள் வருதாமா.. நம்ம சகாக்கள் எல்லாரும் அவுங்க அவுங்க ஆபீஸ் தொடர்ந்தாப்புல ரெண்டு நாள் லீவுன்னு சந்தோஷமா இருக்கிறாங்க.. நமக்கு அப்படியா..ரெண்டு மூனு வருஷம் கழிச்சு வாய்க்கால்ல தண்ணி வருது.. ராவும் பகலுமமா நமக்கு இங்க வேலை பெண்டு நிமுத்துது.. இதுக்கு நடுவால இங்க பதிவு பக்கம் வந்து இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு உங்க அரிவையெல்லாம் பெருக்க வேண்டியது இருக்கு(!)... என்னத்த சொல்றதுங்க, வர வர நமக்கு சமுதாய கடமைக ஜாஸ்த்தியாயிட்டே இருக்குது போங்க..

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா,, (இந்த விநாயகர் சதுர்த்தி, டிசம்பர் 6, இந்த தேதியெல்லாம் வந்தாலே நமக்கு வயித்த கலக்குதுங்க)
முதல் வசந்தம் படத்துல குங்ககுமபொட்டு கவுண்டர் சொல்ற மாதிரி "சந்தோசமாவும் இருந்துக்கோ, அதே நேரம் சாக்கிரதையாவும் இருந்தக்க கண்ணு".....

Wednesday, September 15, 2004

புதுசு கண்ணா புதுசு!!

என்னடா கொஞ்ச நாளா காணாத போயிருந்தான், திடீர்ன்னு இப்ப "புதுசு கண்ணா புதுசு!!"ன்னு எதோ விளம்பர பாணியில சொல்லிட்டு வர்ரானே, எதாவது புதுசா கவிதை, கிவிதை எழுதிட்டானான்னு யாரும் பயந்துராதீங்க, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை, ஒரு 'பெயில்' மேட்டருல நம்ம ஆளுக ஒரு புதுசு செஞ்சிருக்காங்க, அதை பத்தி தான் இந்த பதிவு
(கடைசி வரை படிச்சுட்டு, ஏண்டா வெட்டியா எங்க நேரத்தை வீணாக்குறேன்னு தனி மடல்ல நம்ம ஆளுக கோவிசுக்கராங்க, அதான் இந்த திகில் படமெல்லாம் பார்க்க போன, முதல்லயே எச்சரிக்கை போடுவாங்களே அது மாதிரி ஒரு எச்சரிக்கையா முதல்லயே சொல்லிடறேன், இந்த தடவை கவிதை எல்லாம் ஒன்னும் எழுதலை சாமிகளா!!)

குஜராஜ் கலவரத்துக்கு வழி வகுத்த கோத்ராவில நடந்த ரயில் எரிப்பு விவகாரத்துக்காக (அது திட்டமிட்ட எரிப்பு இல்லை, எதோ கரண்ட் ஷார்ட்சர்க்யூட் காராணமா ஏற்ப்பட்ட விபத்துன்னு இப்போ சொல்லிகிட்டிருக்காங்க) நிறையா ஆட்களை, கிட்டத்தட்ட 95 பேரை கைது செஞ்சு ஜாமீன்ல வெளிவராதபடி உள்ள வச்சிருக்காங்க. அதுல 'ஃப்ரோஸ்கான்'ன்னு ஒருத்தர் சார்பா பெயில்ல வெளிய போறதுக்காக ஒரு மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. இதுல என்னடா புதுசு இருக்கு, ஒருத்தனை கைது செஞ்சா, அவன் பெயில் மனு போடுற்து வழக்கம் தானங்கரீங்களா? அதெல்லாம் வழக்கம்தானுங்க, ஆனா அவன் பெயில் கேக்குற காரணம் தான் புதுசு, பெயில்ல வெளிய போய் அம்மாவை பார்க்கனும், குழந்தைய பார்க்கனும், (சினிமாவுல வர்ற மாதிரி) பெயில்ல வெளிய போய் கல்யானம் செஞ்சுக்கனும்னெல்லால் கேப்பாங்க, இதெல்லாம் தான் நாம ஏற்க்கனவே கேள்விபட்டிருக்கோம், ஆனா இவர் புதுசா ஒரு மேட்டருக்காக பெயில் கேட்டிருக்கருங்க. அவரோட பெயில் மனுவில அவர் என்ன சொல்லியிருக்காருனா "கடந்த 30 மாசாமா நான் ஜெயிலுக்குள்ளயே இருக்கேன், இவ்வளவு நாளா செக்ஸே வெச்சுக்காம என்னொட மனநிலை ரொம்பவும் பாதிக்கபட்டிருக்கு, என்னோட கலாச்சார(!) முறை வேற நான் என் மனைவி தவிர வேர யார்கூடயும் செக்ஸ் வச்சுக்க அனுமதி தரமாட்டேங்குது, அதுனால மனிதாபிமான அடிப்படையில எனக்கு ஒரு 2 நாள் பெயில் குடுத்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்'ன்னு கேட்டிருக்கான்.

இதை பத்தி என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலைங்க (நம்ம கருத்த எதிர்பார்த்து இங்க யாரும் காத்து கிடக்கலைங்கிறது வேற விஷயம்!!) , ஆனா கடைசியா நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செஞ்சிட்டாருன்னு செய்தி பார்த்தேன். நீதிபதி " இந்த மனுவை ஏத்துகிட்டு இவனுக்கு பெயில் குடுத்தா, அது ஒரு தவறான முன்னுதாரனமா ஆகிடும்"ன்னு சொல்லியிக்காங்க.

அவன் பெயில் கேட்ட காரணம் சரியா? அதை நீதிபதிக தள்ளுபடி செஞ்சது சரியா? இங்க நம்ம சகாக்கள் கிட்ட பேசுனா வழக்கம் போல ரெண்டு பக்கமும் பேசறானுக, நமக்கும் ஒன்னும் தீர்மானமா புரியா மாட்டேங்குது, அதான் இந்த சமாச்சாரத்த பத்தி நம்ம 'வலை'மக்கள் என்ன நினைக்கராங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆசைப்பட்டு இங்க எழுதிட்டேன்,

இந்த பெயில் மனுவில் சொல்லப்பட்ட காரணம் 'கொழுப்பா!' இல்லை 'நியாமனதுதானா' ... என்ன நினைக்கரீங்கன்னு சொல்லுங்களேன்....!

இந்த விஷயம் பத்தி BBCயோட சுட்டி

confusion

Thursday, September 9, 2004

ஒரு கவிதை எழுதினேன்!!

எனக்கும் என் சகா ஒருத்தனுக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் ஆகிப்போச்சுங்க.. எதோ பெரிய உலக அரசியல், பக்கத்துநாட்டு பிரச்சனைங்கற மாதிரி சின்ன பிரச்சனை இல்லைங்க.. கொஞ்சம் ரொம்பவும் அறிவுபூர்வமான பிரச்சனை..
பிரச்சனை என்னன்னா? "ஒருத்தன் கவிதைன்னு எதாவது எழுதறான்னா அவன் கண்டிப்பா காதல்ல விழுந்திருகனும்"ங்கிறது அவனோட அயிப்பராயம், நான் 'கம்'முன்னா இருப்பேன்?, வழக்கம் போல விதன்டாவாதமா எதாவது பேசாட்டி நமக்கு மண்டை வேடிச்சுடுமே, "அப்படியில்லாம் கிடையாது அது மனசும், புத்தியும் சம்பந்தபட்டது"ன்னு நான் சொல்ல, அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் பேசி, பேசி, பேசி,.. "அப்ப நீ ஒரு காதல் கவிதை எழுது பார்ககலாம்"னு நம்ம தன்மானத்தை(!) உரசி பார்க்கிற மாதிரி ஒரு இடத்துல வந்து பேச்சுவார்த்தை நின்னுருச்சுருங்க.
"என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை"ன்னு நினைச்சுகிட்டு, நானும் டக்குன்னு சரின்னு சொல்லிட்டனுங்க (எதை சொன்னாலும் செய்யறேன்னு சொல்ற இந்த அதிகப்பிரசங்கித்தனம் தான் எனக்கு ஒரு நாள் குழி வெட்ட போகுது). அப்புறம் என்ன வழக்கம் போல ஒரு காரியம் செஞ்சிரலாம்னு ஒத்துகிட்டு, அப்புறம் மூளை குழம்பி போய் சுத்த வேன்டியது தான் வழக்க்மாகிப்போச்சே, இருக்கிறதே கொஞ்சூன்டு மூளை, அதையும் குழம்ப விட்டா, அப்புறம் கள்ளு குடிச்ச குரங்கு, இஞ்சியையும் கடிச்சுகிட்ட மாதிரி ஒரு நிலைமையாகி போச்சுங்க.
நமக்கு இந்த கவிதைகளுக்கும் பொதுவா ஏழாம் பொருத்தம்தான். காலேஜ்ல மூனாவது வருஷம் படிக்கும் போது, அதுவரைக்கு தன் கிளாஸ்ல படிச்சுட்டு இருந்த ஒரு கேரளா பொண்னு மேல பைத்தியமா இருந்த எங்க BBC Gang மணி, அந்த பொண்ணோட தங்கச்சி பர்ஸ்ட் இயர் வந்து சேர்த்ததும், அவ பின்னாடி போனதை நான் (வழக்கம் போல அதிகப்பிரசங்கித்தனமா) எங்க ஹாஸ்டல் போர்ட்ல எழுதி கலாய்க்க, அதை எடுத்து எங்க MIB* கிளப் ஷங்கர், அங்ககங்க கொஞ்சம் வெட்டி சரி செஞ்சு, 'ஷங்கர்-ராஜா' ங்கிற பேருல அதை எங்க காலேஜ் 'yearbook'ல போடவச்சான், (அது அப்புறம் விகடன்' காலேஜ் காம்பவுன்ட்'லயெல்லாம் வந்து, அந்த நாலு வரி கவிதைக்கு! பதினஞ்சு பாட்டில் பீர் செலவு ஆகிபோச்சு) அந்த கவிதை..
' உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்
உன் சிஸ்டரை கண்டேன்
உன்னை மறந்தேன் '


*(MIB - Men in black, கொஞ்சம் கருப்பா, என்னை மாதிரி, இருக்கிற பசங்க எல்லாரும் சேர்ந்து நடத்துன கேண்டீன் கிளப்)

அதுக்கப்புறம் ரெண்டு மூனு தடவை, அந்த மாதிரி முயற்ச்சியில இறங்கி, அப்புறம் நம்ம கூட்டாளிக கிட்ட இருந்து கிடைச்ச 'பெட்ஷீட்பூசை'க்கு பயந்த்துகிட்டு, நான் அந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுல இறங்கிறது இல்லைங்க, (நாம என்ன 'மீனாக்ஸ்'ஆ?, மனுஷன், பசங்க தண்ணியடிக்கும் போது, சும்மா கூட போய் சும்மா உக்காந்துட்டு வந்து படுற அவஸ்த்தைய பத்தியெல்லாம் கூட அழகாக எழுதறாருங்க).
இருந்தாலும், நம்ம கிட்ட ஒருத்தன் சவால் விட்டுடானேன்னு, இந்த தடவை அந்த ஆபத்தான விளையாட்டுல இறங்கிட்டேன்ங்க. ராத்திரியெல்லாம் யோசிச்சு யோசிச்சு, (பேனாவை கன்னத்துல வச்சுகிட்டு கவிஞர்க மாதிரி யோசிச்சா ஒரு வேளை எதாவது தோனுமோன்னு, அப்படி கூட யோசிச்சேன்) கஷ்டப்பட்டு ஒரு 6-7 வரி எழுதினேன்.. எழுதினதை படிச்சு பார்த்தா எனக்கே ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப ஆர்வமா நம்ம சகா கிட்ட காட்டினேன், அதை படிச்சுட்டு அவன் ஒரு இடியை போட்டான் பாருங்க, நொந்து போயிட்டன் நான். நானா யோசிச்சு எழுதினதை படிச்சுட்டு, அவன் "இது நான் ஏற்க்கனவே படிச்சிருக்கேன், எங்கேன்னு தான் ஞாபகம் இல்லை, எங்க இருந்து சுட்டேன்னு ஒழுங்கா சொல்லு"ன்னு ஒரே அடியா அடிச்சுட்டானுங்க. எதோ பெரிய, கவிதையெல்லாம் எழுதிட்டம்னு ஒரு மிதப்பா இருந்தேன், இப்படி ஒருத்தர்(ன்) எனக்கு முன்னாடியே அதை எழுதியிருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ 'சத்தியாமா நான் தான் எழுதினேன், எனக்கு யாரும் எழுதி தரலைன்னு' திருவிளையாடல் தருமி மாதிரி புலம்பிட்டு இருக்கேன்..

எனக்கு ஒரு உதவி செய்யுங்க சாமிகளா!!
யாரவது இதை படிச்சு பார்த்துட்டு, நம்ம சகா சொன்னது நிசமான்னு சொல்லுங்க... (அப்படி ஏதும் இருக்காதுன்னு இன்னும் எனக்கு ஒரு சின்ன நம்பிக்கை!!)
---------------

உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

--------------
TheSadClown_90_100

டேய்! சகா!!.. இப்படி என்னை தனியா புலம்பற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டியே!!

Monday, September 6, 2004

கிருஷ்னர் ஜாதகம்

ஒவ்வொரு எலக்ஷ்சனுக்கும் முன்னாடி, அரசியல் தலைவர்களோட ஜாதகமும், அவுங்க கட்சி ஜாதகமும் எல்லா பத்திரிக்கையிலையும் போட்டு, அவங்களோட வெற்றி வாய்ப்பு, அவுங்களோட எதிர்காலம்னு பலதையும் பத்தி நம்ம பிரபல(!)ஜோசியர்களோட கருத்தெல்லாம் வரும். சிலநேரம் இது நம்ம கோடம்பாக்கத்து தெய்வங்களுக்கும் பொருந்தும். இப்பொ அந்த வரிசையில 'கிருஷ்ன' பரமாத்மாவோட ஜாதகத்தையும் கம்ப்யூட்டர் உதவியோட கணிச்சிருக்காங்களாம். அவரோட பிறந்த நாள் July 21, 3228 BCனு சொல்லியிருக்காரு பிரபல ஜோசியர் அருன்.கே.பன்ஸால். பிருந்தாவனத்துல வாழ்ந்த கிருஷ்னரும், மகாபாரத கிருஷ்னரும் ஒரே ஆளா(!) இல்லை வேற வேறயாங்கிற குழப்பத்துக்கே இன்னும் முழுசா பதில் தெரியலை, இதுல இவர் வேற புதுசா பிறந்ததேதி எல்லாம் சொல்றாரு, இதை வெச்சு புதுசா யாராவது ஒரு பிரச்சனைய கிளப்பாம இருந்தா சரி.. (கிருஷ்னர் ஜாதகம்)

இன்னொரு ஜோசியர், சோனியாவோட அரசியால் வாழ்க்கை இந்த வருஷத்தோட முடிஞ்சுரும்னு சொல்றாரு, இவர் ஏற்கனவே வாஜ்பாயி, சோனியா ரெண்டு பேருமே பிரிதமர் ஆக மாட்டாங்ன்கன்னு எலக்ஷ்சனக்கு முன்னடியே கரெக்ட்டா கணிச்சு சொன்னாருன்னு சொல்றாங்க..., அது நடக்காது, இது நடக்காதுன்னு மட்டும் சொல்றாங்க, ஆனனா என்ன நடக்கும்னு சொல்லமாட்டேங்கிறாங்களே!!

Saturday, September 4, 2004

பதில் கடிதம்.

கேள்வி பதில் பாணியில நம்ம பையன் குடுத்த காதல் கடிதத்துக்கு அந்த பொண்ணோட பதில் கடிதம்:
---------------------------------------------------------------

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு.

1) கிளாஸ்ல முதல் பெஞ்சுல யாராவது உக்காந்திருந்தா, உள்ளே வர்ரவங்க அவங்களை பார்கிறது சகஜம்
அ) ஆம்
ஆ) இல்லை

2) ஒரு பொண்ணு சிரிச்சுட்டு, ஒருத்தரை பார்த்த்தா அதுக்கு பேரு காதல்
அ) ஆம்
ஆ) இல்லை

3) பாட்டு பாடும் போது, திடீர்ன்னு பாட்டு வரி மறந்துபோயிட்டா, பாடுறவங்க பாடுறத பாதியில நிறுத்திருவாங்க
அ) ஆம்
ஆ) இல்லை

4) நான் என்னோட சின்ன வயசு போட்டோவை என்னோட நன்பர்கள்கிட்ட காமிச்சிட்டு இருக்கும்போது, நீ நடுவுல வந்து மூக்க நுழைச்சிட்ட
அ) ஆம்
ஆ) இல்லை

5) பிக்னிக்ல உன் கைய புடிச்சு மேடு ஏறுரத நான் தவிர்த்தேன். அது ஏன்னு உனக்கு இன்னும் புரியல
அ) ஆம்
ஆ) இல்லை

6) நான் என்னோட (பெண்)நண்பருக்காக பஸ்ஸ்டான்ட்ல காத்திட்டு இருக்ககூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

7) உன்னை நான் என்னோட அப்பாகிட்ட 'நண்பன்'னு அறிமுகப்படுத்த கூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

8)உனக்கு ரோஜா மட்டுமில்லை, தாமரை, மேஃப்ளவர், காலிப்ளவர், கூட புடிக்கும்னு சொன்னியே, அது உண்மை தானே?
அ) ஆம்
ஆ) இல்லை

9) ஓ! அன்னைக்கு உன் பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயில் பக்கம் பார்த்தேனா?. நான் தினமும் காலையில கோயிலுக்கு வருவேன், அது உனக்கு தெரியுமா?
அ) ஆம்
ஆ) இல்லை

மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'ஆம்'னு சொல்லியிருந்தா "நான் உன்னை காதலிக்கலை"
மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'இல்லை'னு சொல்லியிருந்தா "உனக்கு காதல்னா என்னன்னே தெரியலை"

--விஜி
------

பதில் கடிதத்தை படிச்சு பார்த்துட்டு நம்ம பையன் எதோ பேயடிச்ச மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பாவம்..!!

Friday, September 3, 2004

ஒரு காதல் கடிதம்..

நம்ம பையன் ஒருத்தனுக்கு, அவன் கூட படிக்கிற பொண்ணு மேல திடீர்ன்னு பயங்கிறமா 'தெய்வீககாதல்' (அவன் இப்படித்தான் சொன்னான்) வந்திருசச்சுங்க. நம்ம கிட்ட வந்து "ஒரு லவ்லெட்டர் எழுதனும், வித்தியாசமா எதாவது ஒரு ஐடியா குடுங்க"ன்னு ஒரே தொல்லை. (இந்த வித்தியாச வியாதி சினிமாக்காரங்ககிட்ட இருந்து இப்போ எல்லாருக்கும் தொத்திகிருச்சு போல) நமக்கும் என்னங்க தெரியும் அதை பத்தி, காதலுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே!!. "ஆளை விடுறா சாமி"ன்னு எஸ்கேப் ஆயிட்டேன். அவன் ம்னசு தளராம அவ்னே ஒரு வித்தியாசமான(!) கடிதம் எழுதி அதை எங்கிட்ட காமிச்சான். இதோ அந்த கடிதம்...

-------
அன்பே விஜி,

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு

1) நீ நம்ம க்ளாஸுக்கு உள்ள வரும்போதெல்லாம், கண்டிப்பா உன் பார்வை எம்மேல விழுது, அதுக்கு காரணம்:
அ) "காதல்"
ஆ) "என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல"
இ) "நிஜம்மாவா..!!அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை"

2) யாராவது க்ளாஸ்ல ஜோக்கடிச்சா, உடனே நீ சிர்ச்சுகிட்டே என்னை திரும்பி பார்க்குற, அதுக்கு காரணம்:
அ) "நீ சிரிச்சிட்டு இருக்கிறதை நான் பார்க்கனும்"
ஆ) "உனக்கு இந்த மாதிரி ஜோக்கெல்லாம் புடிக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்"
இ) "உன் சிரிப்பு எனக்கு புடிச்சிருக்கு"

3)நீ ஒரு நாள் கிளாஸ்ல பாடிட்டு இருந்த, அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன், நீ உடனே பாடுறத நிறுத்திட்ட, அதுக்கு காரணம்:
அ) "உன் முன்னாடி பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்தது"
ஆ) "நீ திடீர்ன்னு உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு"
இ) "நான் பாடிட்டு இருந்தது உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு எனக்கு பயமாயிருச்சு"

4) உன்னோட சின்ன வயசு புகைப்படத்தை நீ எல்லாருக்கும் சாமிச்சுட்டி இருந்த, ஆன நான் கேட்டதும், நீ அதை மறச்சுட்ட, அதுக்கு காரணம்:
அ) "எனக்கு வெட்கமா இருந்துச்சு"
ஆ) "உன்கிட்ட காமிக்கிறதுக்கு எனக்கு எதோ ஒரு சங்கடம்"
இ) "எனக்கு தெரியலை"

5) நாம அருவிக்கு பிக்னிக் போனப்போ, ஒரு மேடு ஏறும் போது, நானும் என் கூட இருந்த நண்பனும் உனக்கு கை குடுக்க வந்தோம், நீ அவனோட கைய புடிச்சு மேல ஏறி வந்த, அதுக்கு காரணம்:
அ) "உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்"
ஆ) "உன் கைய புடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது"
இ) " எனக்கு தெரியல "

6) நீ நேத்து பஸ் ஸ்டாப்புல காத்திட்டு இருந்த, ஆனா பஸ்ஸுல ஏறுல, அதுக்கு காரணம்:
அ) "உனக்காக காத்திட்டு இருந்தேன்"
ஆ) "உன்னை நினைச்சிட்டு நின்னதுல, பஸ் வந்ததை கவனிக்கலை"
இ) "பஸ் கூட்டமா இருந்தது"

7) உங்க அப்பா காலேஜுக்கு வந் தப்ப, நீ என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வச்ச, அதுக்கு காரணம்:
அ) "நீ தான் என்னோட வருங்காலம்னு சொல்ல ஆசைப்பட்டேன்"
ஆ) "எங்கப்பாவுக்கு உன்னை புடிக்குதாஅன்னு தெரிஞ்சுக்க"
இ) "சும்மா, அறிமுகப்படுத்தனும்னு தோனுச்சு"

8) எனக்கு ரோஜாப்பூ புடிக்கும்ன்னு ஒரு நாள் சொன்னேன், அடுத்த நாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சுகிட்ட வந்த அதுக்கு காரணம்:
அ) "உன் ஆசைக்காகத்தான்"
ஆ) "உனக்குத்தான் ரோஜாப்பூ புடிக்குமே அதுக்காக"
இ) "அது தற்செயலா நடந்தது"

9) என் பிறந்த நாளன்னைக்கு காலையில 5 மணிக்கு நான் கோவிலுக்கு வந்தேன், நீயும் அன்னைக்கு கலையில கோயிலுக்கு வந்திருந்த, அதுக்கு காரணம்:
அ) "உன் பிறந்த நாளன்னைக்கு உன் கூட சாமி கும்பிடலாம்னு"
ஆ) "உன் பிறந்த நாளன்னைக்கு எல்லாருக்கும் முதல்ல, நான் உன்னை பார்க்கனும்னு"
இ) "உனக்கு கோயில்ல வச்சு வாழ்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்"

எந்த பதிலும் தப்பில்லை, எல்லா பதில்களுக்கு ஒரு மார்க் இருக்குது
(அ)10, (ஆ)5, (இ)3 மார்க்.

40 மார்க்குக்கு மேல வாங்கியிருந்தா, "நீ என்னை காதலிக்கிற, ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிற"
30க்கும் 40க்கு இடையில இருந்தா, "உனக்கு எம்மேல காதல் வர ஆரம்பிச்சிருச்சு"
30க்கும் கீழ இருந்தா, "உனக்கு என்னை புடிச்சிருக்கு, ஆனா காதலிக்கலாமா, வேண்டாமான்னு யோசிக்கிற"


உன்னோட பரிட்சை முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
--உன் அன்பு காதலன்(?).

-------------------------------------------------------------------
இதை எடுத்துட்டு அவனும், ஒரு நல்ல நாள் பார்த்து, சாமி எல்லாம் கும்பிட்டு, அந்த பொண்ணுகிட்ட குடுத்திருக்கான், அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு, அப்புறம் தான்ங்க கிளைமாக்ஸே!! . இவன் குடுத்த கேள்விக்கு நேரிடையா பதில் குடுக்காம அந்த பொண்ணும் ஒரு கேள்வித்தாள் எழுதி குடுத்திருச்சு, அது அடுத்த பதிவுல... :-)

Wednesday, September 1, 2004

ஒரு எச்சரிக்கை!

கொஞ்சம் தோட்டத்துல வேலை ஜாஸ்த்தியா போச்சுங்க, அவ்ளோதான், சீக்கிரம் வந்துருவேன்.
நான் வரமாட்டேன்னு நினைச்சு எங்கயாவது போனீங்க...


a
<