Friday, January 17, 2014

படிமம்

‘(சம்வித்யாகம் போறா) இயக்கம் பத்தாது, இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கவேண்டும், நாயகனுக்கு கொஞ்சம் கூடுதல் க்ளோசப் வைத்திருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் பரபரப்பு சென்று சேரும்’ என்று தொடங்கும் உரையாடல் தான் கதை நாயகன் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் முதல் வசனம்.

‘த்ரிஷ்யம்’ - திரைப்படத்தின் நாயகன் அதன் இயக்குனர் ஜீத்துஜோசப் தான். இயக்கம் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை எழுதியவரும் அவரே. அந்த முதல் வசனத்தில் சொலவது போல் எந்த ’கைநாற்காலி’ விமர்சகரும் சொல்வதற்க்கு வழியில்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்.

மலையாளம் கண்ட மாபெரும் வெற்றிப்படமான ‘யவனிகா’வுடன் இந்தப்படத்தையும் அதே தளத்தில் வைத்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. யவனிகா’வும் ‘த்ரில்லர் வகைதான், ஆனால் அது வேறு தளம் இது வேறு தளம். யவனிகா’வின் பரப்பு இன்னும் கொஞ்சம் விஸ்தீரமானது. ‘த்ரிஷ்யம்’ வேறு வகை. தெளிவாக பார்வையாளர்களை கவரவேண்டும் என்ற மசாலாபடங்களின் ஒரே குறியை வைத்து திட்டமிட்டு பின்னப்பட்ட கதை தான்.

ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவன் குடும்பத்தை பற்றிசொல்லி, அவன் பூர்வீகத்தை அலசி, அவனைப்பற்றி மானே தேனே போட்டு நல்லவிதமாக பார்ப்பவர்கள் மனதில் ‘ச்சே எம்புட்டு நல்லவன்’ என்று முழுவதுமாக ஒத்துக்கொள்ளுமாறு காட்சியமைப்புகளை நகர்த்தி, பார்வையாளர்கள் அந்த குடும்பத்தை முழுவதுமாக நேசிக்கும் பொழுது திடும் என்று ஒரு சிக்கல் வந்து நிற்கிறது - டொட்டடய்ங் என்ற இசையில்லாமல். அதுவும் இரண்டு சின்ன பெண்கள் இருக்கும் அழகிய குடும்பத்தில், (கொஞ்சம் நிறையவே பூசினாற்போல் இருந்தாலும் பெண்களின் தாயாக வரும் மீனா இன்னும் அழகு தான்) வயசுவந்த பெரிய பெண் தான் சிக்கலின் மையப்புள்ளி. வயசுபுள்ளைக்கு சிக்கல் எனும்போதே அரங்கில் அமர்ந்திருக்கும் 90சதம் பேருக்கும் அடிவயிறு கலங்கித்தான் போகிறது. குறி தவறவே இல்லை.

வந்த சிக்கலுக்கும் கொஞ்சம் பலம் வேண்டுமே, எம்ஜிஆருக்கு ஏற்ற நம்பியார் போல், வில்லனுக்கு கெத்து இருந்தாத்தான ஹீரோவுக்கு மரியாதை, இங்கே நாயக்ன் சாமான்யன். நம்மூரில் பெரும்பான்மையோர் மிரள்வது அதிகாரவர்கத்தின் கோரமுகத்துக்கு தான், அதைவிடவா சிக்கலுக்கு வெயிட் வேண்டும், பெரும் அதிகாரத்தில் இருப்பவரின் வாரிசு தான் உள்ளே நுழைந்த சிக்கல். சிக்கலை துரத்திவிட்டு சட்டத்தில் இருந்து தப்பிக்க போராடுவது தான் மிச்சம். சாமன்ய நாயகன் மற்றவரைப்போல் ஆகாயசூரனாக இருக்கமுடியாது ஆனால் புத்திசாலி, புத்தியை உபயோகித்து தப்பிக்க திட்டமிடுகிறான், அதிகாரவர்கத்தையே ஏமாற்ற வேண்டுமே, கொஞ்சம் பலமான திட்டமிடல் தான். படிப்பதற்க்கு ஒன்றுமே விசேஷமாக தெரியவில்லை அல்லவா, ஆமாம் அதே தான். ஆனால் இதை 2.45 மணிநேரம் பார்ப்பவர்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப்போட்டு பார்க்க வைத்ததில் தான் வெற்றி இருக்கிறது.

இரண்டரை மணிநேர திரைப்படத்தில் சவுத் இண்டியன் புல்மீல்ஸ் போல வகைக்கொன்றாய் பாடல்கள், நடனங்கள், தனிக்குலுக்கல்கள், கூட்டுகுலுக்கல்கள், நமது ட்வீட்டரில் சுட்டு பாலீஷ் போடப்பட்ட நகைச்சுவைத்தோரணங்கள், அதிரடி சண்டைகள், பறக்கும் கார்கள், அயல்தேச அழகிய லொக்கேஷன்கள், தங்கத்தில் சுவரெழுப்பும் நவீன ஆசாரிகளின் வேலைப்பாடுகள் என்றெல்லாம் நிறைத்தும் படம் பார்ப்பவன் என்னவோ பொது கக்கூசில் சங்கடத்துடன் உக்கார்ந்திருப்பவன் மனநிலையில், ‘எப்படா முடிப்பீங்க’ என்று கதறும்படியான சமகால திராபைப்படங்களுக்கு நடுவில் ‘த்ரிஷ்யம்’ கொண்டாடப்படவேண்டியது தான்.

நமது புரட்சிகலைஞரின் பாணியை பின்பற்றி நாயகனே கடைசியில் ஒரு நீண்ட வசனத்தில் ‘ஒரு பெரும் சிக்கல் எங்கள் குடும்பத்திற்க்கு வந்தது, அந்த சிக்கல் எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துபோடப்பார்த்தது, நாங்கள் கெஞ்சி கதறினோம் போராடினோம் அதற்கிடையில் எதிர்பாராமல் அந்த சிக்கல் என்றென்னைக்குமாய் எங்கள் குடும்பத்தை மீண்டும் தொந்தரவு செய்யாதபடி செய்ய நேர்ந்துவிட்டது, எங்களுக்கு வேறு வழி இல்லை, இனி அந்த சிக்கல் எங்களை நெருங்காது என்ற நிம்மதி இருந்தபோதும், தெரிந்தோ தெரியாமலோ சிலரின் கனவுகளை சிதைத்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள்’ என்று ‘கதையின் சாரம்சம்சத்தை சொல்லி விமர்சகர்களின் வேலையை சுலபமாக்கிவிடுகிறார். அந்த இடத்தில் படம் முடிந்துவிட்டது தான், இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு முந்தய சீனிலே கூட படம் முடிந்துவிட்டது தான்.. ஆனால் அதற்க்கு அப்புறமும் ஒரு சீன் வைக்கிறார் பாருங்கள்.. அங்கே தான் சாமான்யன் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு போகிறார்.. அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.. அங்கே நிற்கிறார் இயக்குனர்..  ஜீதுஜோசப் - இனி நமது ‘should not miss list'ல் இவர் கண்டிப்பாக இருப்பார்.

கேரளா லொக்கேஷன் நல்லாஇருந்தது, மோகன்லால் நல்லா நடித்தார், துணை கதாப்பாத்திரங்கள் கூட அருமையான நடிப்பு என்ற விஷயங்களை எல்லாம் இந்த படத்தின் விமர்சனங்களில் சொல்லியிருப்பார்கள், படித்துக்கொள்ளவும்.

படம் முடிந்து வெளிவரும்பொழுது உடன் வந்த நண்பர் ”இதை தமிழில் எடுப்பதாக சொன்னார்களே, அதுவும் சமீபமாக ராடான்’ நிறுவனம் தான் மலையாளத்தை தமிழ் ‘படுத்தி’ வருகிறது.. ஒருவேளை சரத் அல்லது சேரனை வைத்து இந்தப்படம் தமிழில் வந்துவிடுமோ” என்ற சந்தேகத்தை  கேட்டு என் ஒட்டுமொத்த திரையனுபவத்தையும் கெடுத்துவிட்டார் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். 

Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia