Showing posts with label ஹாசினி. Show all posts
Showing posts with label ஹாசினி. Show all posts

Wednesday, October 10, 2007

ஹாசினி - திரைப்பார்வை

தியோடர்'சார் அவரோட கட்டுரைகள்ல ரெண்டுமூணு இடத்துல சொல்லியிருப்பாருங்க. "தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லைன்னா அதுக்கு முக்கிய காரணம் சரியான விமர்சகர்கள் இல்லாதது தான்.. இன்னும் நம்ம, படத்தின் ஹீரோ விஜய் அவரோட காதலி அசினின் அப்பாவாகிய குமாரிடம் சென்று.. அப்படின்னு நடிகநடிகையர முன்னிலைப்படுத்திதான் இருக்குது" அப்படிங்கற மாதிரி.. அது எவ்ளோ தூரத்துக்கு சரியோ தெரியலைங்க.. நமக்கு சினிமா விமர்சனம்ங்கிறது எந்த வகையில பார்த்தாலும் சினிமா பார்க்கிற மாதிரியே புடிச்ச சமாச்சாரமாத்தான் இருக்குது.. சும்மாவா, பள்ளிக்கூடத்துல விளாட்ட்டு பீரியட்ல எவனாவது ஒருத்தன் முதநாள் சாய்ங்காலம் கொட்டாயில பார்த்த ரஜினி படத்துல அவர் எத்தனை குட்டிகரணம் போட்டு வில்லன, சில நேரத்துல சைட்-வில்லன, எப்படி உதைச்சாருன்னு விவரமா சொல்லுவான், அதை வாயப்பொழந்து கேட்டுட்டு விளையாட கூட போகாம இருந்த கூட்டத்த சேர்ந்தவஙக் தான நம்ம எல்லாம்.

கொஞ்சம் வயசு வந்த காலத்துல நமக்கு சினிமா விமர்சனம்ன்னா விகடன்ல மதன் எழுதறது தான் வேதவாக்கு.. அதுவும் மகாநதிக்கு 'காட்டாற்று வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்த கமல் மகாநதியாய் உருவெடுத்திருக்கிறார்'ங்கிற மாதிரி ஆரம்பிச்சு 65 மார்க்கோ என்னமோ குடுத்ததுல இருந்து சினிமா விமர்சனம்னா அது மதன் தான்னு ஆயிப்போச்சு.. அவரும் சில நேரத்துல சொதப்பி வைக்கிறது உண்டு.. 'அருணாச்சலம்' படத்துக்கு விமர்சனம் எழுதுனப்ப எல்லாம்.. 'யூ டூ ப்ரூட்டஸ்'ன்னு தான் தோனுச்சு.. ஆனாலும் விகடன்ல 40'க்கு மேல மார்க் இருந்த தகிரியமா போலாம்னு ஒரு பெரிய நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா, அவுங்களும் நடிகன்' டப்பா படம்ன்னாங்க.. மக்கள் அதைய பெரிய ஹிட் ஆக்கிடாங்க.. நமக்கும் புடிச்சு தான் இருந்துச்சு. :)

இப்ப பாருங்க.. சமீப காலத்துல விகடன் எல்லாம் வாங்கறதேயில்லை. ஓசியில இணையத்துல குமுதம் ரிப்போர்டர் படிக்கறதோட சரி..:) "அட்டைய பிரிச்சுட்டு படிச்சு பார்த்தா, எது எந்த புஸ்தகம்னே தெரியலையே நண்பா"ன்னு சொல்லுவான் நம்ம சகா ஒருத்தான்.. இப்பவெல்லாம்.. நம்ம விமர்சனத்தேடல்(!) இணையத்துலயும் டீ.வி. பொட்டியிலயும் தான்..

முகத்துல எந்த உணர்ச்சிமாற்றமும் இல்லாம, நம்ம இளையதளபதி நடிப்பு மாதிரி, ஒரு அக்கா சூரியடீ.வில விமர்சனம் செய்ய்வாங்க.. பல நேரம் பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கும், நடுவால அப்பப்ப அவிங்க காமிக்கற வடிவேலு க்ளிப்பிங்க்ஸ்க்காக அதைய பொறுத்துக்கலாம்ன்னா.. முடிவுல தியேட்டர் வாசல்ல போயி நம்ம மக்கள் கிட்ட மைக்க நீட்டி கருத்து கேப்பாங்க பாருங்க, அது சுவாரசியமா இருக்கும், மைக் கிட்ட எட்டி வந்து 'சூப்பரு'ன்னு ஒரு சில்வண்டு கத்தும், இன்னொருத்தர் அம்பது வயசுல புதுசா வயசுக்கு வந்த புள்ளை மாதிரி வெக்கத்தோட கேமராவ பார்த்து சிரிச்சுகிட்டே நழுவுவாரு, ஒருத்தரு உணர்ச்சிவசப்பட்டு மைக்க புடுங்கி "அற்புதம், அதிசியம்"னு நம்ம 'பொள்ளாச்சி ரயில்வேடேசனை காப்பாத்த வந்த புதுதெய்வம்' வைகோ மாதிரி நரம்பு புடைக்க உணர்ச்சிகரமா பேசுவாரு, பின்னாடி ஒரு புள்ளை துப்பட்டாவுல மூஞ்சிய மூடிட்டு அழுக்கு ஜீன்ஸ் போட்ட பையன் முதுகுபக்கமா ஒதுங்கும்.. நம்ம எஸ்.ஜே.சூரியா படத்த விட அந்த கருத்து கேக்கிற பார்ட்டு தான் படு சுவாரசியமா இருக்கும். அப்புறம் ராஜ்'ல ஜெ'லன்னு வரிசையா ஒரு விமர்சனமும் விளங்கல.. எல்லாம் எழுதி குடுக்கிற ஸ்க்ரிப்ட்டல வர்ற ஒவ்வொரு அரைப்புள்ளி, முழுப்புள்ளிக்கும் ஒரு புன்னகைங்கிற ஒரே ஒரு தியரியோட பார்த்து படிக்கிற விமர்சன்மாத்தான் இருந்துச்சு.. அடப்போங்கய்யான்னு இருந்தா, அப்புறம் விஜய்'ல வந்தாரு மதன்.. ஓகே.. பழைய விகடன் விமர்சனம் படிச்ச திருப்தி, அப்போ நடக்கிற மாதிரியே இப்பவும் அப்பப்போ சில வழிசலான சொதப்பல்களும் உண்டு..(அதுவும் இயக்குனர் - நடிகர் ப்ரவீன்காந்த்'கிட்ட பேசுனது எல்லாம்.. சரி விடுங்க.. இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் தான்). டீ.வி.டி அறிமுகம் எல்லாம் குடுக்கறாரு.. நம்ம அம்மணி தான் ஞாயித்து கிழமையானா காலையில விஜய் டீ.வி பார்த்துட்டு உடனே போயி அந்த டீவிடிய எடுத்துட்டு வந்து நம்ம செய்யுற அழிச்சாட்டியத்துக்கு எப்படி முடிவு கட்டறதுன்னு தீவிரமா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கறா. :)

வழக்கம் போல சொல்ல வந்த சமாச்சரத்த விட்டுட்டு எங்க எங்கயோ போயிட்டேன்.. இப்ப புதுசா ஜெ'ல நம்ம சுஹாசினி மணிரத்னம் வர்றாங்க.. ஹாசினி திரைப்பார்வை'ன்னு (தான் மீடியாவுக்கு அறிமுகப்படுத்தின தன்னோட தங்கச்சி அனு' டீ.வி'யில கலக்குறாங்களேன்னு இவங்க அவசரமா வந்த மாதிரி இருக்குது). எழுதி குடுத்தத படிக்கிற விமர்சணங்கள விட இவுங்க செய்யுற விமர்சனம் தான் சொதப்பலோ சொதப்பலா இருக்கு.. எதுக்காக இப்படி டிரெஸ்ன்னு தெரியல.. எனக்கு அதைய பார்த்தாலே எரிச்சலா இருக்கு :).
பல நேரத்துல அது சினிமா விமர்சனம் செய்யுற நிகழ்ச்சியா இல்ல, பெரிய டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ தன்னோட புள்ளைக்கு இது தெரியும், அது தெரியும்னு ஒரு விசிட்டிங்கார்ட்டா ஒரு படம் எடுத்து தருவாங்களே, அந்த மாதிரி தனக்கு சினிமாவுல எல்லாம் தெரியும்னு சொல்றதுக்காக நடத்துற நிகழ்ச்சி மாதிரித்தான் இருக்கு..

பள்ளிக்கூடம் படம் விமர்சனம், அதுவும் தவளை தங்கர் கிட்ட நேர்முகம்னு வேற சொன்னாங்க, நமக்கு பழைய தமிழன் கொம்பு எல்லாம் மனசுக்குள்ளார வந்து, அடிச்சு புடிச்சு போயி பார்த்தா, அது பள்ளிகூடம் படத்த விட சப்'புன்னு ஆயிருச்சு.

மொத்தத்துல நிறைய எதிர்ப்பார்ப்பை ஆரம்பத்துல குடுத்துட்டு சப்பை நிகழ்ச்சியா போற லிஸ்ட்ல சேர வேண்டிய நிகழ்ச்சி இது.. ஒரு பெரிய படைப்பாளிக்கு மனைவி, சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம், பெரிய இயக்குனர் அறிமுகப்படுத்தினது.. இதெல்லாம் மட்டுமே விமர்சனம் செய்ய தகுதி குடுத்திருமா என்ன?.. ச்சும்மா ச்சும்மா நேம் ட்ராப்பிங்.. 'சீனி-கம்' படத்துக்காக அமிதாப் கிட்ட பேசும்போதெல்லாம்.. வீடாப்போச்சுங்க, தியேட்டரா இருந்தா நல்லா நாலு வார்த்தை சொல்லி கத்தியிருப்பேன்..

ம்ஹும். நமக்கு மறுபடியும் மதன'யும் இணையத்தையும் விட்டா வேற வழியில்லை.

--
#249