Friday, December 31, 2004

ஆண்டொன்று போனால...

புது நாள், புது வருஷம், இன்னொரு புது ஆரம்பம்..

ம்.ம்... இந்த வருஷமும் எப்பவும் போல எந்த புதுவருஷ தீர்மானமெல்லாம் எடுக்காமத்தான் இருக்கப்போறனுங்க. எனக்கென்னவோ இந்த மாதிரி எடுக்கிற தீர்மானங்கள்ல எல்லாம் பெருசா நம்பிக்கையில்லைங்க, அதுவுமில்லாம, என்னால அப்படியெல்லாம் ஒரு தீர்மானம் எடுத்து அதை கெட்டியா புடிச்சுகிட்டு நம்மால நடக்கமுடியாதுங்கிறது முக்கியமான் விஷயம்ங்க.

நானும் ஒரு நாலு வருஷம் முன்னாடி, இதே மாதிரி ஒரு புது வருஷ நாள்ல தான், 'இனிமேல் தம்மடிக்க கூடாதுன்னு', 'சைட் அடிக்ககூடாது',... அப்படி இப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே போட்டேன், எப்படியோ அன்னைக்கு ஒரு நாள் பூராவும் எதையும் அடிக்காமத்தான் இருந்தேன், அப்புறம்.. ம்..ம்.. அது ஒரு தொடர்கதை... தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க..

இப்பவெல்லாம், ஜனவரி ஒன்னாம் தேதி விடுமுறையெல்லாம் இல்லை, எல்லாரும் ஒழுங்கா வந்து வேலைய பாருங்கன்னு 'அம்மா' சொல்லிட்டதுனால, எல்லாப்பயலும் ராத்திரி நேரத்தோட தூங்க போயிடறானுக. சீக்கிரமா போறானுக அவ்ளோதாம், அதுக்காக அமைதியா போரானுகன்னு அர்த்தம் இல்லீங்க. எல்லாரும் எப்படியும் 'கையெழுத்து' போட்டுட்டு தான் போவாங்க ('கையெழுத்து'கெல்லாம் விளக்கம் கேக்க மாட்டீங்கள்ல..??)

வழக்கமா, நம்ம சகாக்கள் எல்லாரும் சேர்ந்து காசு போட்டு புதுவருஷ பார்ட்டி நடத்துவோம், இந்த வருஷம் அந்த காசையெல்லாம் 'சுனாமி'நிதிக்கு அனுப்பிடலாம்னு முடிவு செஞ்சதுல, வழக்கமா கலெக்ட் ஆகிறத விட மூனு மடங்கு அதிகம் வசூலாச்சு.. அனுப்பி வச்சாச்சுங்க..

"ஆண்டொன்று போனால்.. வயதொன்று போகும்.."

Tuesday, December 28, 2004

வார்த்தைகள் இல்லை...


என்னத்த சொல்றது போங்க.. :-(

Thursday, December 23, 2004

ஊருசுத்த போறேன்..

செமத்தியான வேலைக்கு நடுவால திடீர்ன்னு ரெண்டு நாள் வண்டிய எடுத்துகிட்டு மலைப்பிரதேசமா ஒதுங்கிறதுங்கிறது.. ரொம்ப சந்தோஷமான விஷயம்ங்க.. இப்போதைக்கு தலைக்கு மேல வேலை இருக்குதுன்னாலும் (இப்பத்தான் ஞாபகம் வருது, முடி வேற வெட்டிக்கனும்.. காலையிலயே எங்கம்மா கிட்ட பேச்சு வாங்கினேன்) அந்த சந்தோஷத்துலயே வேலையெல்லாம் கொஞ்சம் ஜரூரா நடக்குதுங்க..

பாத்தீங்களா.. எங்க போறேன்னே சொல்லாம என்னத்தையோ சொல்லிட்டு இருக்கேன்.. இந்த வருஷத்தோட கடைசி வாரக்கடைசிய 'மூனார்'ல கொண்டாடிவோம்னு நம்ம சகாக்கள் கூட்டத்துல முடிவு செஞ்சு, அவசரஅவசரமா, மூனார்ல இருக்கிற நம்ம 'டேனியல' புடிச்சு ஒதுக்குப்புறமா டெண்ட் அடிக்க இடம் புடிக்கச்சொல்லி.. வீட்டுல சொல்லி பர்மிஷன் வாங்கி (நாங்கெல்லாம் வீட்டுக்கு அடங்கின புள்ளைகளாச்சே!!), மூணு வண்டிய தயார் பண்ணி.. ம்ம்.. இருக்கிற வேலைக்கு நடுவால இது ஒரு தொல்லைன்னாலும், அந்த ரெண்டு நாள் கூத்துக்காக எல்லாத்தயும் சந்தோஷமா செஞ்சாச்சுங்க..
எங்கய்யன் வேற "இந்த வருஷம் குளிர் பயங்கிறமா இருக்குதாம், (மைனஸ்ல அடிக்குதாம்)எதுக்குடா இப்போ அங்க போறீங்க"ன்னு கேக்குறாரு அவருகிட்டபோயி .. "அதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்.. அதுக்கு தான் துணைக்கு smirnoff'ம் oldmonk'ம் இருக்குதில்லை"ன்னா சொல்ல முடியும்..

ம்... ரெண்டு நாள் எந்த தொல்லையும் இல்லாம ஏகாந்தமா சுத்திட்டு வரப்போறேன்.. குறிப்பா.. நம்ம செல்போன் வேற அங்க எடுக்காது, அதுவே ஒரு பெரிய சந்தோஷம்ங்க, (கிறுஸ்த்துமஸ் வேறயா... கேரளா களைகட்டி இருக்கும்..) வரட்டுங்களா.......

(இந்த மாதிரி வித்தியாசமான படமா புடிச்சு போட்டா, என்னையும் அறிவுஜீவி வகையில சேத்துக்குவாங்கதான??)

Thursday, December 9, 2004

கல்வெட்டுகள்

--------------------
காலம் கடந்து
பழைய பாதைகளில்
பயணிக்கிற போது
பழைய ஞாபகங்கள்..

அந்த
அறைகள்தான் எங்களின் சொர்கங்கள்..

அந்த
மைதானங்கள்தான்
எங்கள் நட்பு வளர்த்த ஊடகங்கள்..

அந்த
அடுமணைகள் தான்
அன்பு வேரோட தேனீர் ஊற்றிய
அட்சய பாத்திரங்கள்

காக்கைகளாய் தான்
இல்லை இல்லை
காக்கைகளாய் மட்டுமே வாழ்ந்தோம்

காரணமில்லாமல் இறுகிப்போனோம்

உயிரோடு உயிராய் உருகிப்போனோம்

பகலை இரவாக்கி
இரவை பகலாக்கி
காலத்தை வென்றிருக்கிறோம்

எங்கள்
குரல் கேட்காத திரையரங்குகள் இல்லை..

நாங்கள்
பயணிக்காத இரவு நேரப் பேருந் துகள் குறைவு

பணம் எங்களை பாகுபடுத்தவில்லை

குணம் பார்த்து நாங்கள் பழகியதில்லை

எதன் பொருட்டும் எங்கள் நட்பில்லை

அமைந்து போனது அப்படித்தான்..

பிரியும் நேரம் வந் தது

பிரிவு உபச்சரங்கள்
அழுகைகள்
அரவணைப்புகள்
ஆட்டோகிராப்புகள்

பிரிய மனமில்லாமல்
வேறு வழியில்லாமல்
பிரிந்து போனோம்

காலம் கடந்தது, வயது கரைந்தது..

நண்பர்கள் உயர்ந்தார்கள்
உருமாரிப்போனார்கள்

இறுகி உயிராய் கிடந்த
ஒரிரு நண்பர்கள் சந்தித்து கொண்டோம்
வாழ்க்கை பயணத்தில்

அழுது அரற்றிய அதே நண்பர்கள்

கண்ணீர் சிந்திய அதே கண்கள்

இரும்பாய் கனத்த அதே மனது

இவை எல்லாம்
இரண்டு நிமிடத்துக்கு மேல்
என்னோடு நேரம் செலவிட தயராய் இல்லை

அடுத்தமுறை
அவசியம் வீட்டுக்கு வா..

வீட்டருகே சொன்னார்கள்..

நேரத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு..

இபோழுதெல்லாம்
மரியாதைக்குரிய மனிதர்களை
எதிரிலே பார்த்தால்..
விலகியே போகிறேன்

காலத்தின் பிணைக்கைதிகள்..
அவர்கள் மீது தவறில்லை..

நிகழ்கால மாற்றம் பார்த்து
பழைய கல்வெட்டுகளை
அழித்தெழுத
நான் தயாராய் இல்லை...

----------------

யாரு எழுதினதுன்னு தெரியலைங்க.. forward mail'ஆ வந்தது..

இதை படிச்சதும் ஏனோ தெரியலைங்க.. எல்லா பசங்களுக்கும் போன் போட்டு சும்மானாச்சும் எதாவது பேசனும்னு தோனுச்சுங்க.. பேசிட்டேன்..


Tuesday, December 7, 2004

கனா காணும் காலங்கள்

(வழக்கம் போல) எங்கய்யனுக்கு சாரதியா கோயமுத்தூர் வரைக்கும் போக வேண்டியிருந்ததுங்க.. சூரியன் FM 105.8'ல்ல.. "குங்குமம், இந்த வாரம், எனக்கு திருமணத்தில நம்பிக்கை இல்லை" கமல் ப்ரத்தியேக பேட்டி"ன்னு நிமிஷத்துக்கு மூனு தடவை சொல்ற இரைச்சல் தாங்காம RAINBOW FM 103'க்கு தாவினேன்.. அப்பத்தான் ஹிந்தி பாட்டெல்லாம் முடிஞ்சு நம்மபக்கம் வந்திருந்தாங்க.. வந்ததும் முதல் பாட்டா.. 7Gரெயின்போ காலனியிலிருந்து

"கனா காணும் காலங்கள், கரைந்தோடும் நேரங்கள்.." போட்டாங்க.. அப்பா.. என்ன பாட்டுங்க அது.. 100-120ல போயிட்டிருந்த வண்டி எப்படி 40-50க்கு வந்ததுன்னே தெரியலைங்க.. எத்தனயோ தடவை கேட்ட பாட்டுதான் ஆனாலும் ஒவ்வொருதடவையும் இந்த பாட்ட கேக்கும் போது எதோ அப்படியே மிதக்கற மாதிரி இருக்குதுங்க ..

அப்படியே அந்த மிதப்புலயே போயிட்டிருந்தேன், ஆனா, டக்குன்னு அடுத்தபாட்டு 'சத்ரபதி'ல இருந்து போட்டு வெறுப்பேத்திட்டாங்க..
(ச்சே, இப்பெல்லாம் கேசட்டும் வாங்கிறதில்லை, இதுக்கு தான் இந்த செட்ட குட்டுத்துட்டு ஒரு நல்ல mp3 ப்ளேயர் வாங்கி மாட்டலாம்னு பாக்கறேன்.. யாராவது எது நல்லா இருக்கும்னு சொல்லுங்கப்பா)

ரொம்ப நாளைக்கு அப்புறம், பிதாமகன் - 'இளங்காத்து வீசுதே'க்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு mesmerising பாட்டு (நடுவால அலைபாயுதே'வில 'உண்மை சொன்னால் நேசிப்பாயா'வும் சேர்த்துக்கலாம்)
பாரதிராஜா - இளையராஜா -வைரமுத்து மாதிரி செல்வராகவன்-யுவன்சங்கர்-முத்துக்குமார் கூட்டணி வரும்போல தெரியுதுங்க..


=====================================
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயதில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம்,
இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்,
கடவுளின் ரகசியம்

உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவே இனி மழை வரும் ஒசை

நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வஎறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிகொண்டு அந்தி வேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம், தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மவுனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனொ மயக்கங்கள் பிறக்கும்

பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன்?
நில நடுக்கம்.. அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம்.. அது மிக கொடுமை
=========================================

Saturday, December 4, 2004

ஒரு பதிவு, 220+ பின்னூட்டங்கள்.

க்ருபாஷங்கர் : சென்னையை சேர்ந்த ஆங்கில வலைப்பதிவாளர்கள்ல ரொம்ப முக்கியமான ஆளுங்க இவரு. சும்மா போற போக்குல அப்படியே சொல்லிட்டு போற மாதிரியான நடையிலயே பல மேட்டர பதிவு செய்யிற ஆளு. திடீர்ன்னு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு விவகாரமான பதிவு ஒன்னு போட்டாருங்க, அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்க 220 தாண்டி போயிட்டிருக்கு (இன்னும் போகுது).
அப்பப்போ எதாவது விவகாரமான சமாச்சரத்தை பதிவுல எழுதி, அப்புறம் பின்னுட்டத்துல நம்ம ஆளுக பூந்து வூடு கட்டி அடிக்கிறதெல்லாம் சகஜம்தாங்க. ஆனாலும் இந்த சமாச்சரம் என்னமோ கொஞ்சம் ஓவராத்தாங்க தெரியுது..
பதிவுல சொல்லியிருக்கிற சாமாச்சரத்தை விட பின்னூட்டத்துல இருக்கிற விஷயங்கதான் கலக்கலா இருக்குது போய் பாருங்க..
சுட்டி...

(ஆமா, அது நிஜம்மாவே அவுங்க தானா?? )

Tuesday, November 23, 2004

தெய்வம் தந்த வீடு..

அம்மாடி... பதினைஞ்சு நாளா வீட்டுல வேலை 'பெண்ட' நிமித்திருச்சுங்க.. புதுசா ஒரு வீட்டுக்கு குடி போறது கூட பரவாயில்லைங்க, இருக்கிற வீட்டை சுத்தம் செஞ்சு பெயின்ட் செய்யனும்னா.. அதுவும் பத்து வருஷமா பெயின்ட் பண்ணாம, மொத்தமா எல்லாப்பொருளையும் வெளிய எடுத்து வச்சு, சுத்தம் செஞ்சு, மறுபடியும் உள்ள அடுக்கிவச்சு, சாமி, இதுக்குதானுங்க வீட்டுல பொண்ணுக வேணும்ங்கிறது.. ஒத்த பையனா இருந்தா சந்தோஷம்ங்கிறாங்க, எனக்குத்தான தெரியும் நிஜம்.
என்ன கலர் பெயிண்ட் அடிக்கிறதுங்கிறதுல இருந்து, எந்த சாமானத்தையெல்லாம் மறுபடியும் வீட்டுக்குள்ள கொண்டு போறதுன்னு ஒவ்வொவ்வுக்கும் பெரிய விவாதமே நடத்த வேண்டியதா போச்சுங்க, மரத்தடியே பரவாயில்லை போல.. (ஹி..ஹி.. சும்மானாச்சுக்கும்.. தமாசு!!)
நான் காலேஜ் போயே அஞ்சு வருஷம் ஆச்சுங்க, எங்கம்மா அவுங்க அந்த காலத்துல அவிநாசிலிங்கத்துக்கு கொண்டுபோன கூடைப்பையை இன்னும் என் ரூம் மேல் 'லாப்ட்'ல பத்திரமா வச்சிருந்தங்க, அதையெல்லாம் மறுபடியும் உள்ளயே வச்சுகனும்னு அவுங்க ஒரு பக்கம், 'வீடா, குப்பத்தொட்டியா இது?, எல்லாத்தையும் தூக்கு வெளிய எறி'ன்னு எங்கய்யன் ஒருபக்கம். இப்பத்தான் ஒவ்வொரு சண்டையா முடிஞ்சுட்டு இருக்குது.. (ம், அவரவருக்கு தானுங்க தெரியும், ஒவ்வொரு பொருள்லயும் என்னன்னா வரலாறு எழுதியிருக்குதுன்னு..)
ஒவ்வொரு அறையா சுத்தம் சுத்தம் செய்ய செய்யத்தான், எதோ அலிபாபா குகை மாதிரி எப்பவோ வாங்கிவச்ச பொக்கிஷமெல்லாம் கண்னுக்கு தட்டுபட்டுதுங்க,எங்க சித்தப்பா பையனுக்கு வாங்கின தூளிமெத்தை (அவன் இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறான்), நான் நாலாவது படிக்கும் போது எங்கய்யனுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகி அப்போ வாங்கின வெயிட் (கால்ல கட்டி தூக்கி தொங்க விடுவாங்களே அது), 'பேக்' பிரிக்காத எலெக்ட்ரானிக் சைக்கிள் பெல் (என் சைக்கிள எங்கூட்டாளியோட தம்பி எடுத்துட்டு போயே பத்து வருஷம் ஆச்சு), இதுக்கு நடுவால எப்பவோ அலமாரியோட மேலைரையில நான் வச்சுட்டு மறந்து போன ஒத்தை 'கிங்ஸ்'. (நல்லவேளை, அதை எடுக்கும் போது அய்யன் அம்மா யாரும் கிட்டத்துல இல்லை..)
எப்படியோ ஓயாம பெயின்ட் தூசிக்கு நடுவால சண்டை போட்டுகிட்டே, 'இப்படியா வீட்டை வச்சிருப்பீங்க'ன்னு அம்மா மேல பழியபோட்டுட்டு (நீ, குடும்பம் நடத்தும் போது பார்க்கத்தான போறேன்னு வேற பயமுருத்தறாங்க) மறுபடியும் வீட்டுக்குள்ள வந்தாச்சுங்க..
இனி ஒரு வாரம் மறுபடியும் புது பெயின்ட் வாசத்துல படுத்து தூங்கி, சளி புடிச்சு.. அய்யோ சாமி...
இந்த குடைச்சலுக்கு நடுவால "மாப்ள, சிக்கிட்டியா, சொல்லவே இல்லை, எப்ப?, யாரு?"ன்னு கேக்கறவனுக்கெல்லாம், "அதெல்லாம் இல்லைடா சும்மா ரொம்ப நாளேச்சேன்ன்னு பெயின்ட் அடிச்சோம் அவ்வளவுதான்"னு பதில் சொல்லியே வெறுப்பாகிபோச்சுங்க.

ஆனாலும், கலரெல்லாம் மாத்தி, வீடெல்லாம் ஒழுங்கா அடுக்கி வச்சுபார்த்தா.. நம் வூடுங்கூட அழகாத்தாங்க இருக்குது..
Saturday, November 20, 2004

என் ஆசை மைதிலியே..

தீபாவளி முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு, இன்னும் தீபாவளி ரிலீஸ் படம் இன்னும் ஒன்னுங்கூட பார்க்காம இருந்தா, அப்புறம் சாமி கண்ண குத்திருமேன்னு, நேத்து எதாவது ஒரு படத்துக்கு போறதுன்னு முடிவு செஞ்சு பொதுக்குழுவ கூட்டினதுல, நம்ம சகாக்கள் மத்தியில அட்டகாசம், ட்ரீம்ஸ்'ன்னு ஒவ்வொரு படமா கழிச்சு கடைசியில 'மன்மதன்' போலாம்னு முடிவு ஆச்சு.. (எல்லாரும் சாமியார் சமாச்சாரத்துல பிசியா இருக்கிறதுனால, விமர்சனம் எழுதாம விட்டுடாங்க போல, அதான் எங்களுக்கு குழப்பமாகிபோச்சுங்க)

சரி இதுவரைக்கும் நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார வெள்ளித்திரையில பார்த்ததே இல்லை, முதன் முதல்ல ஒரு முயற்சி செஞ்சிருவோம்னு நானும் தலையாட்டிட்டு, அடிக்கிற குளிருல, கொட்டுர பனியில, ரெண்டாவது ஆட்டம் கிளம்பிபோயிட்டனுங்க (உங்க ஊரு என்னடா குளிரு, இங்க அமேரிக்காவுல, லண்டன்ல இல்லாத குளிரா'ன்னு கேக்காதீங்க, நமக்கு தெரிஞ்சது, நம்ம ஊரு மார்கழி பனிதாங்க).
நல்ல வேளை நாங்க ஒரு நாலு பேரா போனோம்ங்க, எங்க ஊருலயே அதிக சீட் இருக்கிற ATSC தியேட்டருல படம் போட்டிருந்தாங்களா, தனியா போயிருந்தா தியேட்டருல பயமா இருந்திருக்கும்.. அவ்ளோ கூட்டம்ங்க.

நீ படத்துக்கு போன கதைய விட்டுட்டு. படத்தை பத்தி சொல்லுங்கரீங்களா, அதுக்கு தான வர்றேன் அவசரப்படாதீங்க.
D:\manmd

படத்தோட கதையெல்லாம் எல்லாரும் இணையத்துல சுத்துர பல இழைகள்ல படிச்சிருப்பீங்க, அதுனால நானும் நீட்டி முழக்க வேண்டாம்னு நினைக்கிறனுங்க. கொஞ்சம் சிவப்பு ரோஜக்கள் கதை மாதிரி இருந்தாலும், கடைசியில ஒரு எதிர்பாராத முடிச்சு வச்சிருக்காங்க, அது கொஞ்சம் புதுமாதிரியா தாங்க இருந்துச்சு.

ரஜினி படம் பார்க்கிர மாதிரி முதல்ல இருந்து கடைசி வரை சிம்பு, சிம்பு சிம்பு மட்டுமே.. முதல் அரை மணி நேரத்துக்கு அவர் வர்ற எல்லா காட்சியுமே அறிமுக காட்சி மாதிரி கால் தனியா, கை தனியா, பின்னாடி கொஞ்சம்ன்னு பில்டப்புலயே காட்டுனதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் (மத்த படத்துக்கு இது பரவாயில்லைன்னு சொன்னாங்க).எங்கூட வந்த சகா ஒருத்தன் 'சிம்பு நடிச்சு இதுவரைக்கும் வந்த படத்துல இது தான் ஒரளவுக்காது தேறுது'ன்னு சொன்னான்.
ஆனா எனக்கென்னமோ சிம்பு இந்த இயக்கம், திரைக்கதைக்கெல்லாம் இன்னும் பக்குவப்படலைன்னு தாங்க தோணுது. அதுவும் நிறையா காட்ச்சிகள்ல அவர் தான் சொல்ல நினைச்சதா முழுசா காட்சியா காமிக்காம, திரையிலயும் நம்ம முன்னாடி உக்காந்து கதை சொல்ற மாதிரியே சொல்லியிருக்கிறது, என்னவோ ரேடியோ நாடகம் கேக்குற மாதிரி இருந்துச்சுங்க.. (கொஞ்சம்) வலுவான கதைத்தளத்தை கையில வச்சுகிட்டு அதுக்கு இப்படி வலுவில்லாத திரைக்கதைய செஞ்சது தான் தப்பு.
அதுல்குல்கர்னி, கவுண்டமனி, மந்திராபேடி'ன்னு பெரிய நட்சத்திர பட்டளத்தை சுத்தமா வீணடிச்சிருக்காங்க. (அதுல்குல்கர்னி மாதிரியான ஒரு கலைஞனை இப்படி வெட்டியா உலாவவிட்டது நினைக்கும் போது..நற..நற)

சரி.. சும்மா எதுக்கு குத்தமே சொல்லிட்டு. நல்லதா சொல்லவும் நாலு விஷயம் இல்லமாலா போச்சு. குறிப்பா யுவன்சங்கர்ராஜா'வொட பின்னனி இசை, அதுதான் rd.ராஜசேகரோட கேமிராவும் தான் படத்தை இழுத்துட்டு போற முக்கியமான குதிரைக. (ஆமா, யுவனுக்கு பின்னனி இசை செஞ்சு குடுக்கிறது கார்த்திராஜா'ன்னு சொல்ராங்களே, அது உண்மையா?).
அப்புறம் ஜோதிகா.. துளியூண்டு பொண்ணா மேக்கபெல்லாம் இல்லாம கலக்கறாங்க, இந்த மேட்டர இதோட நிறுத்திக்கிறனுங்க, எப்படியும் மீனாக்ஸ் இதை பத்தி சொல்லுவாரு அப்ப பார்த்துக்கோங்க.

முதல் பாதியில நாம படுற அவஸ்த்தைய புரிஞ்சுகிட்டோ என்னவோ ரெண்டாவது பாதியில கொஞ்ச நேரம் வந்தாலும் நம்ம சகலைரகளை 'சந்தானம்' பட்டைய கிளப்பிட்டு போறாருங்க. அவர் சிம்புவ பார்த்து "குணா கமல் மாதிரி இருந்துட்டு சிவப்பு ரோஜாக்கள் கமல் வேலையெல்லாம் செய்யிறயே"ன்னு சொல்ற வசனம், எதோ படத்தோட கதைய பத்தி 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை'ன்ன சொல்ற மாதிரி பட்டுதுங்க.

'என் ஆசை மைதிலியே..' பாட்டு சும்மா ஆட வைக்கிற ரகம். என்ன செய்யிறது, உள்ளூரு, அதுவும் நமக்கு தெரிஞ்ச தியேட்டரா வேற போச்சுங்களா, கைய கால கட்டிகிட்டு அமைதியா உக்காந்திருந்தனுங்க.

மொத்ததுல மேல போட்டிருக்கிற படத்துல சிம்பு உக்காந்திருக்கிறாரே அதே மாதிரி தான் நான் உக்காந்திருந்தேன், படம் பூராவும். (ஜோதிகா வர்ற சீன் தவிர:-)..). படம் போன போக்கு மட்டும் அதுக்கு காரணமில்நலைங்க, தியேட்டரோட ஆடியோ சிஸ்ட்டமும் கொஞ்சம் அப்படித்தான்.. (கேட்டா, இப்பத்தான் ரெண்டு வருஷம் முன்னாடி DTS செஞ்சோம்ங்கிறாங்க..).

"வீட்டுல ஆயிரஞ்சோலி கிடக்குது எல்லாத்தையும் விட்டுட்டு துரை ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போயிட்டியா"ன்னு எங்கய்யன் காலையில பாட்டு ஆராம்பிப்பாரு, அதுக்கு அதே மாதிரி உக்காந்திர வேண்டியதுதான்..

Friday, November 19, 2004

பதில் பதிவு.

என்னோட முந்தய ஒரே கேள்வி பதிவுக்கு
பின்னுட்டம் குடுக்கிற விதமா 'சீமாச்சு' மரத்தடியில ஒரு மடல் போட்டிருந்தாருங்க.
அதை வழிமொழிஞ்சு 'ஜெயஸ்ரீ'யும் ஒரு மடல் போட்டிருந்தாங்க...

அவரோட பின்னுட்டத்துக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

----

சீமாச்சு சார்..

நீங்க சொன்ன மாதிரி
//இந்த நான்கு காட்சிகளிலுமே "அந்த கேள்வி" யாருக்கும் தவறாகப் படவில்லை.//

ஆனால் எனக்கு மட்டும் ஏன் பட்டுதுங்கரீங்க?? நீங்க சொன்ன நிகழ்ச்சியும் நான் சொன்ன நிகழ்ச்சியும் ஒரே தர வரிசைதாங்கரீங்களா?

//வன்மத்தையும் இத்தனை நாளாக அடை காத்து இன்று வலைப் பதிவில் குஞ்சு பொரித்திருக்கிறார்//

இப்படியெல்லாம் நீங்க நினைக்கவே வேண்டியதில்லை..

பாவம், நிறைய பேரு (எங்கம்மா உட்பட!) அவர் 'இந்து மதத்தின் தலைவர்'ன்னு நினைக்கிறாங்க அந்த மாதிரி ஆளுகளுக்கு வெணுமின்னா அவர் இப்படி கேட்டது தப்பா பட்டிருக்கலாம்.. சாமி சத்தியமா எனக்கும் அது தப்பா படலைங்க..

எல்லா உயிரனங்களையும் 'நம்மவாளா' நினைக்கிறதுக்கு ஜெயெந்திரர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மொத்த தலைவரோ, இல்லை பெரிய மக்கள் தலைவரோ கிடையாது, அவர் 'நம்மவளோட' ஒரு பெரிய, முக்கிய பிரதிநிதிங்கிறது எனக்கு புரியுது.. சும்மா எனக்கு ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை சொன்னனுங்க அவ்வளவுதான்.. மத்தபடி எனக்கு சம்பந்தமில்லாத வேறொரு துறைத்தலவரோட நடவடிக்கை பத்தியெல்லாம் நான் தப்பா பேசரதில்லீங்க..

எல்லாம் சாதிக்காரங்களும் மதத்துக்காரங்களும் தான் வேளாங்கன்னிக்கும், ஏர்வாடிக்கும் போறாங்க, ஆனாலும் அதெல்லாம் ஒரு பிரிவுக்காரங்களோட இடம் தான, அந்த மாதிரித்தான் 'காஞ்சிமடமும்'ங்கிறது எனக்கு தெளிவா இருக்கிறதுனால கண்டிப்பா, அவர் கேட்ட அந்த கேள்வி மேல எந்த வன்மமும் இல்லைங்க..

அப்புறம் ஜெயஸ்ரீ மேடம்..

//செக்ஷன் 302-வரை போயிருக்கிறார். அவரைப்பற்றி இப்போதுதான் தம்மாத்தூண்டெல்லம் எடுத்துப்போட்டு சந்திலே சிந்து பாடுகிறது மொத்த இணையமும் //

யாரு சந்தில சிந்து பாடுறாங்கன்னு எனக்கு தெரியலைங்க..நான் கண்டிப்பா பாடுல.. அப்படி நான் சந்துல சிந்து பாடி அதுனால அவருக்கு ஒன்னும் ஆகப்போறதில்லைங்க.. எதோ திடீர்ன்னு எங்காவது பஸ்ஸுல போகும் போது FM ரேடியோவுல "செனோரீட்டா"ன்னு "ஜானி"ப்படபாட்டு போட்டா உடனே நமக்கு எப்பவோ பார்த்த அந்த படத்துல டைட்க்ளோசப்ஷாட்டுல தலையில முக்காடோட தீபா சிரிக்கிற அந்த காட்சி ஞாபகத்துக்கு வருமே (ஒரு வேளை ரஜினிராம்கி மாதிரி ஆளுகளுக்கு அவங்க தலைவர் ஸ்டைலா பைப் புடிக்கிறது கூட ஞாபகம் வரலாம்). அந்த மாதிரி எல்லாரும் 'ஜெயேந்திரர்'ன்னு பேசும்போது நமக்கும் அவருக்குமான அந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சுங்க.. எழுதிட்டன் அவ்ளோதாங்க.. அதுல வேற எந்தமாதிரி உள்ளர்த்தமும் கிடையாதுங்க..

//அவர் கொடுத்திருந்த பில்ட்-அப் பார்த்து நான் கூட, ஏதோ 'ஏன் இவர்களை உள்ளே வீட்டீர்கள்?' ரேஞ்சுக்கு ஏதோ சொல்லிவிட்டாரோ என்று ரொம்பத்தான் எதிர்பார்த்துவிட்டேன்.//

இதை எனக்கு கிடைச்ச பாராட்டா எடுத்தக்கறனுங்க.. (டேய் ராசா.. கடைசி வரைக்கும் எதிர்பார்ப்போட படிக்கிற மாதிரி எழுதறளவுக்கு பெரிய ஆளாகிட்ட..ம்ம்.. கலக்கற போ!!)

கலக்கீட்ட கண்ணு!!


(இந்த பதிவை மரத்தடி குழுமத்திலும் பொது மடலா போட்டிருக்கேன்..)

Thursday, November 18, 2004

அந்த ஒரு கேள்வி....

ஜெயேந்திரர், ஜெயேந்திரர்ன்னு வலைப்பூக்களும், மீடியாவும் பரபரப்பா இருக்கிறாங்க..
நிஜம்மாலுமே மீடியா மட்டும் தாங்க நாடெங்கும் பரபரப்பு அப்படி இப்படிங்கிறாங்க,,
இங்க ஊருக்குள்ள யாருகிட்டயாவது ஜெயேந்திரர்'ன்னு ஆரம்பிச்சா, 'அட நீ வேற பெரிய வாய்க்கால்ல தண்ணி விட்டுருக்காங்க, நாங்க அதை பத்தி நினைச்சுட்டு இருக்கோம், நீ என்னம்மோ பெரிய சாமியரை பத்தி பேசிட்டிருகே'ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு போயிடறாங்க..
ஒரு வேளை சென்னையில எல்லாம் பரபரப்பு இருக்குமோ என்னவோ, இங்க நம்ம ஊருப்பக்கம் ஒரு பரபரப்பயும் காணோம்.

சரி.. சொல்ல வந்தது விட்டுபுட்டு வழக்கம் போல கதை பேசிட்டிருக்கேன்..

ஒரு 5 வருஷம் முன்னாடி, எங்கய்யனோட கூட்டாளிக ரெண்டுபேரு குடும்பம், எங்கய்யன் அம்மா, நான்னு ஒரு கூட்டம ஒரு புனித யாத்திரை போயிருந்தோமுன்ங்க. புனித யாத்திரைன்னதும் யாரும் எதோ பெருசா காசி (தமிழ்மணம் காசி'யிலீங்க.. இது வேற), இமயமலைன்னு நினைச்சுராதீங்க, இங்க இருந்து அப்படியே கெளம்பி திருப்பதி போயி அப்படியே வரும்போது காஞ்சிபுரம், திருத்தனின்னு வந்தோம் அவ்ளோதான்..
நமக்கு எற்க்கனவே இந்த சாமி, பக்தி.. இதுக்கெல்லாம் கொஞ்சம் தூரம்ங்க, இருந்தாலும் அப்போ காலேஜ் முடிச்சுட்டு வீட்டுல வெட்டியா இருந்த நேரமா, சரின்னு நானும் போயிருந்தனுங்க.
எல்லாம் நல்லத்தான் இருந்துச்சு, இவுங்க ஒவ்வொரு பக்கமா ஓடி ஓடி சாமி கும்பிடறதும் (அதென்னமோ இந்த பொம்பிளைக, எந்த கோயிலுக்கு போனாலும், எல்லாரும் வெளிய வந்த பின்னாடி மறுக்கா ஒரு தடவை உள்ள போயி சாமி கும்பிட்டுட்டு தான் வருவோம்ன்னு அடம் பிடிக்கறாங்க).
கூடவே நானும், செந்தானும் (செந்தில்குமார் - எங்கய்யனோட கூட்டாளி பையன், எனக்கும்தான்), இவங்களுக்கு பாதுகாப்பா போயி எங்களால முடிஞ்சளவுக்கு 'தரிசனம்' செஞ்சுகிட்டு வந்திருவோம்.
அப்படிபோனப்பத்தான் நமக்கு காஞ்சிபுரம் ஜெயேந்திரரை தரிசிக்கிற வாய்ப்பு கிடைச்சது. எங்க அய்யனுக்கு கொஞ்சம் பழக்கமான் சென்னை 'வக்கீல் அங்கிள்' தான் எங்களை கூட்டிட்டு போயி இன்னாருன்னு சொல்லி ஆசிர்வாதம் வாங்கி குடுதாருங்க,
சாமியாரு முன்னாடி உக்காந்திருக்க, ஒவ்வொருத்தரா போயி கும்பிடு போட்டுட்டு வந்தாங்க, நானும் எங்கம்மாவோட 'அக்னிப்பார்வை'ய சமாளிக்க முடியாம போய் அசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே பக்கத்துல நின்னேன்.
எனக்கு அடுத்து செந்தான், அவன் தங்கச்சி, அவுங்க அய்யனம்மா எல்லாரும் ஆசிர்வாதம் வாங்க வந்தாங்க.
(இந்த எடத்துல ஒன்னு சொல்லனும் - நானும் எங்கம்மாவும் கொஞ்சம் திராவிட கலர்.. சரிங்க.. கொஞ்சம் கருப்பு. எங்கய்யன் நல்ல கலரா இருப்பாருங்க, ஆனா செந்தான் குடும்பத்துல எல்லாரும் கொஞ்சம் நல்லாவே பளபளப்பா இருபாங்க, இதுல செந்தானோட அய்யன், மீசையெல்லம் வழிச்சுட்டு ஜம்முன்னு இருப்பாருங்க)
இவுங்க குடும்பமா வந்து சாமியார் முன்னாடி நின்னது சாமியார் வக்கீல் அங்கிள் பக்காமா திரும்பி ஒரு கேள்வி கேட்டருங்க, அது எனக்கு நல்லாவே காதுல விழுத்துச்சுங்க.. அதை நான் வெளிய வந்தததும் எங்க கூட்டத்துல சொன்னேன், ஆனா ஒரு ஆளும் (எங்கய்யனும், அவரோட இன்னொரு கூட்டளி தவிர) யாரும் நான் சொன்னதை நம்பவேமாட்டேனுட்டாங்க.
ஆனா, நிஜம்மா சொல்றேனுங்க, அவர் அப்படி கேட்டது உண்மை. சரி என்னை நம்பாட்டி 'வக்கீல் அங்கிள்'கிட்ட கேட்டு பாருங்கன்னு சொன்னேன், வேண்டாம்னு தடுத்துட்டாங்க.. நானும் அதுக்கப்புறம் 'வக்கீல் அங்கிள்'ல பார்க்கிறப்பெல்லாம் கேக்கனும்னு நினைக்கிறது, ஆனா, சரி வேண்டாம், நமக்கு ஆகாதுன்னா விலகிறனும், எதுக்கு சும்மா அதை கிளறிட்டுன்னு விட்டுறது..

அப்படி என்னடா கேட்டாருங்கரீங்களா??
பார்த்தீங்களா.. நான் எப்பவுமே இப்படிதானுங்க.. சொல்ல வேண்டியதை சொல்லாம எல்லாத்தையும் சொல்லுவேன்.. ச்சே.. இந்த பழக்கத்தை எப்படியாவது மாத்தனுமுங்க..

அவர் கேட்டது "இவா நம்மவாளா?"

------------------------------------

சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திக்கலாம்..
நெஞ்சு கிழிஞ்சிருச்சே.. எங்க முறையிடலாம்...

------------------------------------

எல்லாரும் நல்லா இருக்கீங்களா??

வீரப்பன், ஜெயெந்திரர், தனுஷ்-ஐஸ்வர்யா'ன்னு பல விறுவிறுப்பான, பரபரப்பான, செய்திகளுக்கு நடுவாலயும், இந்த 'ராசா'வை காணமுன்னு நேத்திக்கு உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் அவுஙகவுங்க வீட்டுல, அலுவலகத்தில, அவுங்களோட கணிணி முன்னாடி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கங்கிற செய்தி, என்னுடய ஜப்பான் நாட்டு ரசிகையான செல்வி.ஜியாவூ(!) சித்த முன்னாடி என்னை என்னோட கைத்தொலைபேசியில கூப்பிட்டு சொல்லித்தாங்க தெரிய வந்துச்சு.

உலகமெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களின் நலன் கருதி(!),
அவர்களுடைய ஆர்ப்பாட்டத்திற்க்கு மதிப்பு குடுத்து,
அதுமட்டுமில்லாம,
தனிமடல் மூலமாக என் பதிவை பத்தி வருத்ததோட விசாரிச்ச, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என்னுடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்கி,
கொஞ்ச நாளா கண்டுக்காம விட்டிருந்த என்னோட இந்த பதிவை மறுபடியும் தூசு தட்டி ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கனுங்க..

//
டேய்.. டேய்.. இது அடுக்குமா, இத்தனை நாளா பதிவு செஞ்சு, உன்னோட hitcounter இப்பத்தான் 2000த்தை தாண்டியிருக்கு, இதுக்கே பல்லாயிரக்கனக்கான ரசிகர்களா??..ம்ம்

சரி..சரி.. ஒரு பேச்சுக்கு ஒரு வார்த்தை சொன்னா, உடனே கோவிச்சுக்குவீங்களே!
//

தூசு தட்டியாச்சு... இனி என்ன..??

அது தெரிஞ்சா நான் எழுதிர மாட்டனா?
அதைதாங்க யோசிச்சிட்டு இருக்கேன்.. அவசரப்படாதீங்க..


Friday, November 5, 2004

என்னவென்று சொல்வதம்மா..

dogஎன்னத்த சொல்லறது போங்க...
வலைப்பக்கம் வரனுமின்னுதான் நினைக்கிறனுங்க.. ஆனா??
ம்ம்..
"நேரம் வரும் காத்திருந்து பாரு ராசா"

(யாருங்க அது?? காணாத போயிட்டான்னு நினைச்சு சந்தோஷமா இருந்தேன்னு முனங்கிறது..)

Wednesday, October 27, 2004

பேரும் தெரியாம, மொழியும் தெரியாம, ஒரு விமர்சனம்.

நான் பொதுவா இந்த சீரியல் பார்க்கிற நேரத்துல (7-9 மணி வரை) வீட்டு பக்கமே போறதில்லைங்க, நேத்து மழையினால கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு, என்ன செய்யறதுன்னு தெரியாம ரிமோட்ட கையில எடுத்துட்டு சும்மா எல்லா சேனலையும் ஒரு சுத்து வந்தேன். (நான் வீட்டுக்குள்ளார வந்து ரிமோட்ட கையில எடுத்துட்டா, அப்புறம் நம்ம வீட்டுல யாரும் டீ.வி. பக்கமே வரமாட்டாங்க!).. சும்மா அப்படியே சுத்திட்டு இருந்தப்போ, திடீர்ன்னு ஒரு சேனல்ல நம்ம மொளனிகா சாயல்ல ஒரு சின்ன பொண்ணு பாட்டு பாடுற மாதிரி இருந்துச்சு, டக்குனு நிறுத்தி பார்த்தா, "தேஜா டீ.வி" யில நிஜமாவே மொளனிகா தான்.. கொஞ்சம் சின்ன வயசு மொளனிகா, எதோ படம்ன்னு கொஞ்சம் அசுவராசியமா மறுபடியும் சேனல் தாவ ஆரம்பிச்சுட்டேன், ஒரு சுத்து சுத்தி மறுபடியும் 'தேஜா'பக்கம் வந்தா இப்போ அடர்த்தியான தாடியோட, அழுக்கு கோட்டு ஒண்ணு போட்டுகிட்டு பானுசந்தர், சரி ஒரு ரெண்டு நிமிஷம் பார்க்கலாம்னு அதே சேனல்ல நின்னுட்டேன், அப்புறம் தான், அதிகமா லைட்டிங் இல்லாதது, மோளனிகா கூட பஸ்ஸுல இருந்த பொண்ணு வச்சிருந்த பெரிய சிவப்பு பொட்டு, இதெல்லாம் கவனிச்சேன்.. ஓஹோ, நம்ம பாலுமகேந்திரா படம் போலிருக்குன்னு அப்படியே டீ.வி. முன்னால செட்டிலாகிட்டேன்.

நமக்கு தெலுங்கு சுத்தமா தெல்லேதுன்னாலும், பாலுமஹேந்திரா பெருசா வசனத்தை நம்பி படமெடுக்க மாட்டாருங்கிற தைரியத்துல முழு படத்தையும் பார்த்தேன். அங்கங்க கொஞ்சம் வசனம் புரியலைன்னாலும் மொத்தமா கதையும் சம்பவங்களும் புரிஞ்சதுனால ரசிச்சு பார்த்தேன்..

ரொம்ப சிக்கலெல்லாம் இல்லாத கதை, ஹீரோ முரளி (பானுசந்தர்) ஒரு ஆனாதை பாரஸ்ட் ஆபீசர், புதுசா டிரான்ஸ்பர் ஆகி ஆதிவாசி குடியிருப்பை ஒட்டுன காட்டுக்கு வேலைக்கு போறாரு(அப்புறம் பாரஸ்ட் ஆபிஸர் வேற எங்க போவாரு!). அங்க அவர் பாவம் சமைக்க தெரியாம கஷ்ட்டப்பட, அந்த பழங்குடி கூட்டத்துல இருக்கிற ஒரு குடிகார மரவெட்டி கிழவனோட பொண்ணு துளசி (அர்ச்சனா) சமைச்சு குடுக்க வருது. அந்த பொண்ணுமேல அவருக்கு ஒரு இது.. (ஆனா சொல்லிக்கிறதில்லை).. திடீர்ன்னு ஒரு நாள் ஊருல இருக்கிற அவரோட நண்பனை பார்க்க போறாரு, அங்க அந்த நண்பன் ஒரு விபத்துல சிக்கி செத்து போனதை கேள்விப்பட்டு, இனி அவருக்கு துளசிய விட்டா யாருமில்லைன்னு சோகமா திரும்பி வர்றார்.. இந்த இடத்துல இருந்து தான் படத்தோட கதை ஆரம்பமாகுது.. சோகமா திரும்பி வர்ற முரளியை போலீஸ் வேறொரு கிரிமினெல்லோட சாயல்ல இருக்கிறதுனால, இவரை தப்பா கைது செஞ்சிடுறாங்க. போலீஸ்ஸ்டேஷன்ல இவரொரு பாரஸ்ட் ஆபீஸர்ன்னு சொல்றதை யாரும் நம்பாம இவரை அவமானப்படுத்த, ஒரு கட்டத்துல கோபமாகி அங்கிருந்து தப்பிக்க முயற்ச்சி செய்யறாரு. அந்த முயற்ச்சி ஒரு போலிஸ்காரரை இவர் அடிச்சு கொல்றதுல முடிஞ்சிருது. தப்பு செய்யாம போலீஸ்கிட்ட மாட்டி, அப்புறம் ஒரு கொலைகாரனா ஜெயிலிக்கு போறாரு. அஙகேயும் அவமானங்கள், சக ஜெயில்வாசியியோட சோகம், தப்பிக்க நினைச்சு அப்புறம் மாட்டிகிட்டு அடிவாங்கிறது,துளசி இவர பார்க்க ஜேயிலுக்கு வர்றதுன்னு போகுது. (ஒரு தடவை துளசியோட குடிகார அப்பா வந்து இருமலுக்கு நடுவால எதோ நிறையா பேசிட்டு போனாரு, ஆனா நம்ம தெலுங்கு புலமைக்கு அது என்னன்னு புரியலை..ஹி..ஹி..!)
தனக்காக துளசி காத்திட்டிருக்க வேண்டாம்னு, ரிலீஸ் ஆகி வெளிய போற ஒருத்தர் கிட்ட, தான் வெளிய இருந்து எழுதின மாதிரி ஒரு லெட்டர் எழுதிகுடுத்து வெளிய போய் போஸ்ட் பண்ண சொல்லி குடுத்து விடுறாரு (அப்படித்தன்னு நினைக்கிறேன், நிறையா அழுதுட்டே பானுசந்தர் பேசுன தெலுங்கில எனக்கு அப்படித்தான் புரிஞ்சுது!). அப்புறம் கொஞ்ச நாள்ல எதோ காரணத்துனால திடீர்னு இவரை விடுதலை செஞ்சிடுறாங்க (காரணம் சொல்லுவாங்க, ஆனா நம்ம மொழிப்பிரச்சினைதான்...!!)
ரிலீசானதும், வழக்கமா மத்த படங்கள்ல வர்ற மாதிரி, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின அந்த ஒரிஜினல குற்றவாளியை தேடி குதிரை எல்லாம் ஏறாம, அமைதியா, அந்த காட்டு கிராமத்துக்கு துளசிய பார்க்க போறாரு,
அங்க, துளசி மழையில நிறையா விளக்கெல்லாம் பத்த வெச்சுகிட்டு (கலை!) இவருக்காக காத்திட்டிருக்காங்க.. இவரும் போய் கட்டி புடிச்சு.... அதோட.. 'a film by balumahendra' போட்டுடறாங்க..

இதுல மொளனிகா எங்க வாந்தாங்கன்னு கேக்கரீங்களா?.. காட்டுக்கு திரும்பி வர்ற ஹீரோ ஒரு ஸ்கூல் பஸ்சுல லிப்ட கேட்டு வர்றாரு, அந்த பஸ்சுல வர்ற கூட்டத்துல பாட்டு பாட ஒரு ஆளு வேனுமே, அதுதான் மொளனிகா, அந்த பஸ்சுல வரும் போது ஹீரோ தன் கதைய பிளாஷ்பேக்குல சொல்லுறாரு..

படத்துல நிறையா டைட் க்ளோசப், அப்புறம் அடிக்கடி கொஞ்சி பேசுற அர்ச்சனா, ரொம்ப தெளிவா நடிக்கிற துனை நடிகர்கள், காட்டுல திரியற பூனைக்குட்டிக, சும்மா வெட்கமெல்லாம் படமா இயல்பா தொட்டு பேசுற ஹீரொயின், போலீஸ்ஸ்டேஷன் மற்றும் ஜெயில் காட்சிகள்ல வர்ற எதார்த்தம்னு நிறையா பாலுமஹேந்திரா 'டச்'ன்னு இருந்தாலும்.. இருந்தாலும், எனக்கென்னவோ பாலுமஹேந்திரா திரைக்கதை லாஜிக்ல ரொம்ப சொதப்பின மாதிரி இருந்துச்சு.. (ரொம்ப பேசுறனோ?)

யாராவது இந்த படத்தை பார்த்திருக்கரீங்களா? அப்படி பார்த்திருந்தா, படதோட பேரு என்னன்னு சொல்லுங்க (விளம்ப்ர இடைவேளையில 'ஈ சித்திர'ன்னு எதோ சொன்னாங்க, அதுதான் படத்து பேரோன்னு நினைச்சு பக்கத்துல உக்காந்திருந்த எங்கய்யன் கிட்ட சொன்னேன்.. அதுக்கு அவர் பார்த்த பார்வை.. சரி விடுங்க, நான் எங்கய்யன்கிட்ட எதாவது சொல்றதும் அப்புறம் அசிங்கப்படுறதும், அது வழக்கம் தான் ..) . கூடவே நான் புரிஞ்சுகிட்ட கதையும் சரிதானான்னு யாரவது சொல்லுங்கய்யா..

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன், பாலுமஹேந்திரா காமிரா வழியா அர்ச்சனாவை, அதுவும் ரவிக்கை இல்லாம பார்க்கும் போது.. கொஞ்சம் கிளுகிளுப்பாத்தாங்க இருந்தது..
இன்னொரு விஷயம், தன்னோட படத்துல எங்கயாவது ஒரு சீன்லயாவது கதாநாயகன சட்டயில்லாம காட்டிருவாரு பாலுமஹேந்திரா'ன்னு என் சகா ஒருத்தன் சொல்லுவான், அந்த வார்த்தைய இந்த படத்துலயும் காப்பாத்திருக்காரு..

Wednesday, October 20, 2004

ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!

(வர வர, இந்த தலைப்பு வைக்கிற சமாச்சாரத்துல ஏகப்பட்ட குழப்பம் வருதுங்க, ஆனாலும் இந்த மாதிரி யாருக்கும் புரியாம, எதோ பெரிய சமச்சாரம் இருக்கிற மாதிரி தலைப்பு வைக்கிறதுங்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது)

சினிமா:

வழக்கமா எதாவது நல்ல படம் வந்தா (ஒரு எதிர்ப்பார்ப்பு தான்), டக்குன்னு எந்த விமர்சனத்தையும் படிக்காம படத்தை பார்த்துட்டு, அப்புறம், படத்தை பத்தி நம்ம பெரியவங்க எல்லாரும் விமர்சனம் எழுதினதை படிச்சுட்டு, மறுபடியும் ஒருதடவை போய் அந்த படத்தை பார்க்கிறது நம்ம பழக்கம்ங்க. இந்த தடவை ஒரு பட விமர்சனத்தையும் காணோம், இந்த வீரப்பன் சமாச்சாரம் சூடா இருக்கிறதுனால இதை எல்லாரும் கிடப்புல போட்டுட்டாங்க போலிருக்குதுங்க.
7gr


செல்வராகவனின்' 7 G ரெயின்போ காலனி படத்துக்கு போயிருந்தனுங்க, ஏற்க்கனவே அவரோட 'துள்ளுவதோ இளமை' படம் புடிச்சுப்போய், அப்புறம் 'காதல்கொண்டேன்' பார்த்து ரொம்ப புடிச்சு போய் (இந்த படத்தை பார்க்க எங்க அப்பா, அம்மாவோட போனேன், அது ஒரு தனி சோகக்கதை!) 7gr பாட்டெல்லாம் கேட்டு, அதுனால கொஞ்சம் ஜாஸ்த்தி எதிர்ப்பார்ப்போட தியேட்டருல போய் உக்காந்தேன். சத்தியமா, தியேட்டருலதாங்க பார்த்தேன்! எங்க ஊருல எல்லாப்படமும் ரிலீஸ் தேதியன்னைக்கே சீ.டி. கிடைக்கும், ஆனாலும் சீ.டி'யில புது படம் பார்க்கிறதில்லைங்கிறது நம்ம கொள்கை. (சந்தடி சாக்குல நம்ம நேர்மையா கொஞ்சம் தம்பட்டமடிச்சாச்சு!!).. சரி படத்துக்கு வருவோம்.

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துக்கு, அடிப்பம்புல தண்ணியடிக்கிற (குடிக்கிறதண்ணிங்க!) பையன், அங்க வந்து குனிஞ்சு குடத்தை எடுக்கிற ஆன்ட்டிகளை பார்க்கிறது, கூட்டமான பஸ்ஸுல அடிச்சு புடிச்சு ஏறிட்டு பஸ் எடுக்கிரறதுக்கு முன்னாடி கீழ எறங்கிவந்து மத்த பசங்களை பெருமையா(!) பார்க்கிறதுன்னு.. போக, நமக்கு "ஆஹா! ஏற்க்கனவே ஷங்கரும், சுஜாதா'சாரும் பட்டது போதாதா, இவுங்களுமா?"ன்னு ஒரு பயம் வந்திருச்சு. ஆனா நேரம் போக போக படம் கொஞ்சம் அப்படியே வேற பாதையில போனதும் தான் நமக்கு கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் நம்ம விஜய் டி.வி. சலனம் 'ஷாலினி'யை சும்மா ரெண்டே ரெண்டு பிரேம்ல காமிச்சுட்டு அப்புரம் காமிக்கவே இல்லைங்கிறது கொஞ்சம் மன்சுக்கு கஷ்டமாத்தாங்க இருந்துச்சு.. சரி.. என்ன செய்ய்றது.. சென்ஸார்போர்ட்டோட சதி போல!

எல்லாம் வழக்கம் போல கொஞ்சம் பெரிய எடத்து பொண்ணை டாவடிக்கிற வயசு பையன் கதை தான்.. என்ன கொஞ்சம் நிஜமா! (நிஜத்துக்கு ரொம்ப பக்கமா?) நம்மளை சுத்தி நடக்கிற மாதிரி காமிச்சதுலதான் சாமர்த்தியம்.

எல்லாரும், ஏற்க்கனவே சோகமா இருக்கிற ஹீரோவை பாட்டு பாடுன்னு கிண்டல் செய்யும் போது, பையன் அப்படியே ரொம்ப பீலாகி கொஞ்ச நேரம் நின்னுட்டு டக்குன்னு 'கண் பேசும் பாஷைகள் புரிவதில்லை'ன்னு பாடுற சீனுல, தியேட்டருல, பாட்ஷா படத்துல ரஜினி 'உள்ளே போ'ன்னு சொல்லுவாரே, (ரஜினி படம் வேண்டாம்னு நினைச்சா, 'ரன்' படத்துல மாதவன் சுரங்க பாதையில ஓடிப்போய் ஷட்டரை மூடுவாரே அதை வச்சுக்கோங்க), அப்ப வர்ற மாதிரி விசிலும், கைதட்டலும் சும்மா கிளப்புது பாருங்க.., "நீங்க என்னதான் கதை கதைன்னு படம் எடுத்தாலும் நாங்க அதுலயும் ஹீரோயிஸம் கண்டுபுடிப்பமில்லை"னு நம்ம ஆளுக சொல்லாம சொல்றாங்கன்னு எனக்கு தோனுச்சுங்க.

அப்புறம், வழக்கமா, எப்பப்பாரு ராத்திரி பூரா கண்னு முழிச்சு படிச்சுட்டு, பயத்தோட காலேஜ் வர்ற படிப்பாளி பொண்ணு மாதிரியே முகத்தை வச்சுகிட்டு, எல்லா சீனுலயும் (டூயட் சீன்லயும்! - மதுர!) வர்ற சோனியா அகர்வால், இந்த படத்துல சும்மா சூப்பரா நடிச்சிருக்குது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துறதுல செம கலக்கல், இது கொஞ்சம் (எனக்கு) ஆச்சிரியமான விஷயம் தான்.

ஹீரொயின் பத்தி சொல்லிட்டு ஹீரொ பத்தி சொல்லாட்டி அப்புறம் என்னை தப்பா நினைச்சுகவீங்க, அதுனால.. ஹீரோ 'ரவிகிருஷ்னா'வும் நல்ல செஞ்சிருக்காரு, ஆனா வேற வேஷமெல்லாம் இவருக்கு பொருந்துமான்னு தெரியலை.. ஒரே ஒரு குறை.. கொஞ்சம் கண்ண மூஉடிட்டு இவர் பேசுறதை கேட்ட தனுஷ் பேசின மாத்ரியே இருக்குது (ஒரு வேளை செல்வராகவன் அப்படி பேச சொல்லியிருப்பாரோ?)
ஏன் இந்த மாதிரி நல்ல டைரக்டர்கள் எல்லாருமே (உ.ம். பாலா.) டிராஜெடியை மையமா வெச்சே படம் எடுக்கிறாங்க, ஒரு வேளை டிராஜெடியா படம் எடுத்தாத்தான், இந்த இலக்கியவாதிகளை சந்தோஷப்படுவாங்கன்னா?
அதுக்காக படத்துல ஒரேயடியா டிராஜடியும் கிடையாது.. காலையில 5 மணிக்கு ஆலாரம் வச்சுட்டு ஹீரோ அவரோட நண்பனை படாதபாடு படுத்தற சீனெல்லாம் காமெடிதான், ஆனா, கொஞ்சம் பழைய வாசனை வருது. (எத்தனை டிராஜெடியா படமெடுத்தாலும், பாலுமகேந்திரா படத்துல நடு நடுவால மெல்லிசா ஒரு காமெடி வருமே, அது மாதிரி கொஞ்சம் இருந்திருக்கலாம், அந்த வகையில பாலா கலக்கறாரு)

அப்பாயின்மென்ட் ஆர்டரை அப்பா(விஜயன்)கிட்ட போய் குடுத்ததும் நல்லதா நாலு வார்த்தை எதும் சொல்லாம, அப்புறம் தனியா போய் விஜயன் பையனை பத்தி பெருமையா பேசுறது, கொஞ்சம் 'உன்னால் முடியும் தம்பி' பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளைய ஞாபகப்படுத்தினாலும், அடுத்த நாள் காலைலயில அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவால நடக்கிற அந்த காட்சிகள்,ம்.. அதுவும் எந்த வசனமும் இல்லாம வெறும் விஷுவலாவே, ஒரு இயல்பான, சந்தோஷமான தடுமாற்றத்தை காட்டியிருக்கிறது கலக்கல்.

படத்தோட கதைய ஒரே வரியில சொல்லனும்னா, படத்துல வர்ற பாட்டு இருக்குதே "முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே"ன்னு, அதுதான்..

யாராவது சீக்கிரமா ஒரு விமர்சனம் எழுதுங்கய்யா. படத்தை மறுபடியும் பார்க்கனும் போல இருக்குது..

-----------------------
சந்திப்பு:

நம்ம துகள்கள் சத்தியராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தாருங்க. என்னை மறக்காம எனக்கு ஒரு மடல போட்டு, எனக்கு முகவரி எல்லாம் குடுத்தாரு (நம்ம வீட்டுக்கு 1 கிமி. தூரத்துல தான் இருந்திருக்காரு!), அவரை போய் பார்த்து நிறையா பேசனும்னு நினைச்சேன் (அப்படி ஒன்னும் உருப்படியா நாம பேசிறப்போறதில்லை, இருந்தாலும் அவர் எதாவது சொன்னா கேட்டுகிலாம்னு தான்!!), ஆனா நம்ம வேலைக்கு நடுவால எங்க முடியுது, அவரு கிளம்புற அவசரத்துல, கொட்டுற மழைக்கு நடுவால, ஒரு நடை போய் பார்த்து, ஒரு வணக்கம் போட்டுட்டு வந்தேன். (சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் குடுத்தாரு). அவரும் என்னைய பார்கனும்னு ஆசையா இருந்திருப்பாருப்பாரு(!) போல, ஆனா, என்னையா பார்த்ததும் பாவம், இவன் கிட்ட என்னத்த பேசறதுன்னு, ரொம்ப குழம்பி போயி.. (அப்புறம், நமக்கும் இலக்கியத்துக்கும் தான் பயங்கிர நெருக்கமாச்சே).. சிரிச்சுகிட்டே இருந்தாரு.
என்ன செய்யரீங்க, எங்க இருக்கரீங்க, குடும்பத்தை பத்தின்னு கொஞசம் பேசிட்டு வந்துட்டேன். அடுத்த தடவை வந்தா கண்டிப்பா பார்க்கலாம்னு சொல்லியிருக்காருங்க.. பார்ப்போம்..நல்லா எழுதரீங்கன்னு வேற சொன்னாரு.. :-)
(அடப்பாவி.. எதோ பேசனுமேன்னு சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னேன் அதை போய் இவன் சீரியசா எடுத்துகிட்டானே -சத்யராஜ்குமார்)

Friday, October 15, 2004

எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்..

என்னடா இது, மீனாக்ஸ் தான் ஏற்கனவே இந்த வேலைய உருப்படியா செஞ்சுகிட்டிருக்காரே, இவன் எதுக்குடா இதுல மூக்கை, (மவுஸை!?) நுழைக்கிறான்னு" யாரும் டென்ஷன் ஆகாதீங்க,.. அப்படி ஒரு புண்ணிய காரியமெல்லாம் என்னைக்கும் இந்த ராசா செய்ய மாட்டான்..
இது சும்மா ஒரு கலாய்ச்சல் மார்க்கெட்டிங்..

----
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Direct Marketing

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க கூட இருக்கிற ஒரு நண்பன் அந்த பொண்ணுகிட்ட போய், உங்களை கை காட்டி "அவரு ஒரு பெரிய பணக்காரர், அவரை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கிறாரு - அதுக்கு பேருதான் Advertising.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் அவளோட டெலிபோன் நம்பரை கேட்டு வாங்கிக்கரீங்க, அடுத்த நாள் அவளுக்கு போன் செஞ்சு "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Telemarketing.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க சட்டையெல்லாம் சரி செஞ்சுகிட்டு அந்த பொண்ணு பக்கத்துல போய் நின்னுக்கரீங்க, அவ சாப்பிடும்போது கூடவே பரிமாறி உதவி செய்யரீங்க, போகும் போது கீழ தவறவிட்ட அவளோட கைப்பயைய எடுத்து குடுக்கரீங்க, அவ எங்க போகணும்னு கேட்டு உங்க காருலயே கூட்டீட்டு போரீங்க, கடைசியா "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Public Relations Management.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. அந்த பொண்ணும் உங்களை பார்க்குது, உடனே உங்க கிட்ட வந்து " நீங்க பணக்காரரா?"ன்னு கேக்குது - அதுக்கு பேருதான் Brand Recognition.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க, உடனே அந்த பொண்ணு உங்களை..

..பளார்ன்னு ஒரு அறை அறையுது... - அதுக்கு பேருதான் Customer Feedback.

---

இதெப்படி இருக்குது..!!

Thursday, October 14, 2004

அய்யோ கல்யாணமா..

மேல்கண்ட்'ல நம்ம மீனாக்ஸ் கல்யாணம் என்பது எதுவரை..? ன்னு ஒரு படம் போட்டிருக்காருங்க, அந்த படத்தை பார்த்ததும் எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு யாரோ அனுப்பிவச்ச இந்த படம் ஞாபகம் வந்துடுச்சு..
மனுஷங்க மட்டுமில்லை, காட்டு ராஜாவும் கூட இப்படித்தான் போல...
lions

வீட்டுல இப்பத்தான் பொண்ணு பார்க்கலாமான்னு கேட்டிருக்காங்க.. இந்த நேரத்துல இப்படி ஆளாளுக்கு இப்படி பயமுறுத்தராங்களே!!

Monday, October 11, 2004

தலைப்பு??

(எழுதியாச்சு, என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தெரியலைங்க.. அதுனாலதான் இப்படி ஒரு தலைப்பு, இது தான் இப்போதைய பேஷன்!! )

ஒரு ரெண்டு மூணு வாரமா, கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியா போயி, நம்ம பொழப்பு கொஞ்சம் நாய்பொழப்பாகிபோச்சுங்களா, வலைக்கரையோரம் நிம்மதியா ஒதுங்க முடியாமா போச்சுங்க. அப்பப்போ இடையில கொஞ்ச நேரம் வந்து எட்டிப்பார்த்தேன், அவ்ளோதான்.
நம்ம வேலைக்கு நடுவால, கொச்சின்ல ஒரு பிரவுசிங் சென்டர் பக்கம் தலைய காட்டினேன், அங்க ஒரு இன்ப அதிர்ச்சி (கேரளாவுல, எந்த பக்கம் திரும்பினாலும் நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தொடர்ந்துட்டே தான் இருக்கும், அது வேற கதை), அந்த பிரவுசிங்க சென்டர்ல நம்ம ஈ-கலப்பை இன்ஸ்ட்டால் செஞ்சிருக்காங்க.., கலப்பை'ய பார்த்ததும் கொஞ்சம் சந்தோஷமாகி 'கல்யாணம்தான் கட்டிகிட்டு'ன்னு ஒரு சமாச்சரம் பதிவு செஞ்சேன் (விதி!).
எனக்கென்னா ஆச்சரியம்னா, இங்க தமிழ்நாட்டுக்குள்ளாரா எந்த ஒரு பொது பிரவுசிங்சென்டர் பக்கம் போனாலும் கலப்பையோ இல்லை முரசு சாமச்சாரமோ காண கிடைக்கிறதில்லை, ஆனா கொச்சின்ல, ஒரு பொது பிரவுசிங்சென்டர்ல (இதை தமிழ்ல எப்படிங்க சொல்றது, 'பொது இணைய உலவகம்'ன்னு சொன்னா சரியா இருக்கும்ங்களா?) கலப்பை, முரசு எல்லாமே வச்சிருக்காங்க. நம்ம ஊருகள்லயும் இதை பத்தி ஒரு நாலு பேருக்கு தெரியர மாதிரி எதாவது செஞ்சோம்னா, இந்த 'இன்னும் நிறையா பேரு எழுதனும், சமூகத்தோடா எல்லா பிரிவுல இருக்கிறவங்களும் எழுதனும்'னெல்லால் ஆதங்கப்படுறங்களுக்கு எல்லாம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு நினைக்கிறனுங்க. (ஆனா அதுல இன்னொரு ஆபத்தும் இருக்குதுங்க, என்னைய மாதிரி ஆளுகெல்லாம் நிறையா பேரு எழுத ஆரம்பிச்சுடுவாங்க, அப்புறம் பாவம் நீங்க!)
நம்ம லைட்டா அசந்த நேரம், இங்க டக் டக்குன்னு புதுசு புதுசா சுவரசியமான வலைப்பதிவுகள ஆரம்பிச்சு கலக்கிட்டிருக்காங்க நம்மாளுக. எல்லாத்தையும் ஒரு சுத்து படிச்சு முடிக்கனும். குறிப்பிட்டு சொல்லனும்னா சசியின் டைரி , மேல்kind, இந்த ரெண்டையும் ஒரு வரி விடாம படிக்கனும். (ரெண்டும் நம்ம சம்பந்தப்பட்ட விஷயம்ங்கிறதுனால), எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு, கொஞ்சம் பாதியில விட்டுட்டு போன வேலையெல்லாம் முடிச்சிட்டு..., அப்புறம் ஆரம்பிக்குது பாருங்க உங்களுக்கெல்லாம் ஒரு சோதனை காலம்..

Wednesday, October 6, 2004

கல்யாணம்தான் கட்டிகிட்டு...

இங்க கல்யாணமாகாத பேச்சிலர் பசங்க நம்ம மீனாக்ஸ் தலைமையில 'மேல்கைன்ட்'ன்னு பதிவு ஆரம்பிச்சு கலக்கிட்டிருக்காங்க. அதே நேரம் மலேஷியா'வுல ஒருத்தர் தன்னோட 53வது கல்யாணத்தை வெற்றிகரமா நடத்தியிருக்காரு.
(ஒரே ஒரு கல்யாணம் செஞ்சுகிட்டு நம்ம சகாக்கலெல்லாம் நம்மளை பயமுறுத்திட்டு இருக்கானுக, இந்தாளு எப்படி 53 கல்யாணம் செஞ்சுக்கிட்டரு, ஒரே குழப்பமா இருக்குதுப்பா??)

polygamy

மலேஷியாவுல 'கம்ருதீன்'ன்னு ஒரு 72 வயசு ஆளு 53வது தடவையா கல்யாணம் செஞ்சிக்கிட்டுருக்காருங்க, அதுவும் யாரை? அவரோட கல்யாண வேட்டைய அவர் ஆரம்பிச்ச முதல் மனைவியை.!!..
1957ல அவரு முதன்முதல்லா ஒரு பொண்னை கல்யாணம் செஞ்சிருக்காருங்க, அப்புறம் ஒரே வருஷத்துல அவுங்களை விவாகரத்தும் செஞ்சிட்டாரு. அதுக்கப்புறம் சும்மா சலைக்காம அவரும் அடுத்தடுத்து 51 கல்யாணம் செஞ்சிகிட்டிருக்காரு (அதுல ஒரு இங்கிலீஸ்காரம்மாவும் ரெண்டு தாய்லாந்துக்காரங்களையும் சேர்த்தி, மத்ததெல்லாம் மலேஷியாக்காரங்க).
ஒரு பெரீரிய சுத்து முடிஞ்சு, இப்போ மறுபடியும், விட்ட இடத்துக்கே வர்ற மாதிரி, தன்னோட 'முதல் முன்னால் மனைவியை' மறுபடியும் இந்த 72வது வயசுல கல்யாயணம் கட்டியிருக்காராம், இவுங்களுக்கு முதல்தடவை கல்யாணம் ஆனப்பவே ஒரு குழந்தையும் உண்டு (அந்த 'குழந்தை'க்கு இப்போ 47 வயசு).
இத்தனை தடவை கல்யாணம் செஞ்சிகிட்டாலும் ஒரு நேரத்துல ஒரு கல்யாணத்துக்கு மேல செஞ்சுக்கிட்டதில்லைன்னு தலைவருக்கு ஒரு பெருமை வேற!!.
கல்யாணம் மட்டுமில்லைங்க இவர் வேலைபார்த்ததும் கூட அப்படித்தான், ஒரு வேலையில கூட அவரு நிரந்திரமா இருந்ததில்லையாம். ஒரு போலீஸ்க்காரரா தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சு, அப்புறம் அதுல தொடர முடியாம, அங்க இங்கன்னு 1992ல ரிட்டயர் ஆகுற வரைக்கும் வேலை மாறிக்கிட்டே இருந்திருக்காருங்க.

இத்தனை கல்யாணம் செஞ்சுகிட்டாலும் "நான் ஒன்னும் 'playboy' கிடையாது (இதுக்கு தமிழ்ல என்னங்க சொல்றது?), எனக்கு அழகான பொண்னுகளை பார்க்க (!) புடிக்கும் அவ்ளோதான்"ன்னு வேற சொல்லியிருக்காரு.
மலேஷியாவுல சும்மா ஒருத்தன் தன்னோட சம்சாரத்தை பார்த்து 'நான் உன்னை விவாரத்து செய்யிறேன்'ன்னு சொன்னாவே போதும், உடனே விவாகரத்து ஆனமாதிரிதான் அதுனால தான் இந்த மாதிரி ஆளுக எல்லாம் இப்படி ஆடுறாங்கன்னு சொல்றாங்க.
(அய்யா சாமிகளா, இப்படி சொல்றாங்கன்னு சொன்னேன், அவ்வளவுதான், உடனே யாராவது நீ எப்படிரா எங்க பழக்க வழக்கத்தை தப்பு சொல்லலாம்னு கிளம்பிராதீங்கய்யா!!)
செய்தி சுட்டி

Tuesday, October 5, 2004

குழப்பமய்யா குழப்பம்

gandhi


அக்டோபர் 2ம் தேதி காலையில எந்திரிச்சு பேப்பர் பார்த்த ஜார்க்கண்ட் மாநிலத்துக்கரங்களுக்கு ஒரே குழப்பம். ஏன்னா காந்தி ஜெயந்திக்காக இன்னைக்கு லீவுன்னு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு, அவுங்க மாநில முதல்வர் ' அர்ஜுன்முண்டே' சார்பாவும், கவர்னர் 'ப்ரகாஷ்மார்வா' சார்பாவும், எல்லாப்பேப்பருலயும் வந்திருந்த வாழ்த்து செய்திதான். எதாவது திருவுழா, விசேஷம்னா இந்த அரசியல் தலைவர்கள் மந்திரிக எல்லாரும் மக்கள் செலவுல மக்களுக்கு வாழ்த்து சொல்றது ஒன்னும் புதுசில்லியேங்கரீங்களா?. வாழ்த்து சொன்னதுல குழப்பம் இல்லைங்க, வாழ்த்துல வந்திருந்த மேட்டருல தான் குழப்பம்.
பேப்பர்ல கவர்னர் சார்பா குடுத்த வாழ்த்து விளம்பரத்துல 'ராஷ்ட்ரபதி'மகாத்மாகாந்தின்னும், முதல்வர் சார்பா வந்த விளம்பரத்துல 'மகாத்மாவின் நினைவுநாளை' முன்னிட்டுன்னு வந்திருந்ததாம்.
பாவம், லீவு நாளும் அதுவுமா கொஞ்சம் லேட்டா எந்திருச்சு தூக்க கலக்கத்துலயே பேப்பர் பார்த்தவங்க்களுக்கு,என்னடா நம்ம அக்டோபர் 1ம் தேதி நைட்தூங்கி ஜனவரி 30ம்தேதி தான் எந்திரிச்சிருக்கமோன்னு கண்டிப்பா ஒரு குழப்பம் வந்திருக்கும்.
விளம்பரம் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் 'நாங்க ராஷ்ட்டிரப்பிதா'ன்னு (தேசதந்தை) தான் குடுத்தோம் அவுங்க ராஷ்ட்ரபதின்னு போட்டிட்டாங்கன்னு எதோ ஒரு சப்பை காரணம் சொல்றாங்க, இருந்தாலும் தப்புக்கு அவுங்க தான பொறுப்பு.
இதுக்கு கண்டிப்பா அந்த முதல்வரோ, இல்லை கவர்னரோ, பொறுப்பாக முடியாதுதான், இருந்தாலும் ஒரு பொறுப்புல இருக்கிறவங்க பேருல வந்த ஒரு விளம்பரம் இவ்வளவு பொறுப்பில்லாம இருந்தா, அந்த பொறுப்பான பதிவியில உக்காந்து அவுங்களோட பொறுப்புகளை எவ்வளவு பொறுப்பா பார்த்துக்குவாங்கன்னு பொறுப்பான மக்களுக்கு கொஞ்சம் கலக்கமாத்தான இருக்கும்.
செய்தி சுட்டி

Monday, September 27, 2004

ஒரு காபி?

கொஞ்சம் ஒல்லியா.., கொஞ்சமில்ல ரொம்பவே.. ஒல்லியா, கிட்டத்தட்ட ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி, எலும்பும் தோலுமா இருப்பானே, நம்ம நடேசன், அவன்பாட்டுக்கு தனியா பஸ்ஸ்டான்டுல நின்னுகிட்டிருந்தானுங்க. பஸ்ஸ்டாண்ட்ல எதுக்கு நிப்பாங்க? எல்லாம் பஸ்ஸுக்காகத்தான்!.நடேசனுக்கு அப்படி இப்படி, ஒரு பொண்ணுக்குகாகவெல்லாம் காத்திட்டுருக்கிற ஆளில்லை, அவனே பாவம், ஒருத்தியும் திரும்பி பார்க்க மாடேங்கிறான்னு நொந்து போய் இருக்கான், நீங்க வேற..

திடீர்ன்னு ஒரு கார் அவன் பக்கத்துல வந்து நிக்குது, அதுலேயிருந்து ஒரு அழகான பொண்ணு அவன பார்த்து கைகாட்டி, 'வண்டியில ஏறுடா நடேசு'ன்னு கூப்பிடுது. நம்ம நடேசனுக்கு 'யாருடா இது. நம்மளை ஏன் கூப்பிடுது'ன்னு ஒரு சந்தேகம், இருந்தாலும் பொண்ணு, அதுவும் அழகா வேற இருக்கு, அப்புறம் எப்படி போகாம இருக்கிறதுன்னு, கிட்ட போய் பார்த்தா, "நிர்மலா".

நிர்மலா யாருடாங்கரீங்களா? அதாங்க, நடேசன் கூட காலேஜ்ல படிச்சுதே, அந்த பொண்ணுக்கு கூட காலேஜ்ல ஏகப்பட்ட பேரு போட்டி போட்டாங்கன்னு நடேசன் ஒருமாதிரி விரக்த்தியா சொல்லுவானே, அதே நிர்மலா தான். 'என்னடா காலேஜ்ல நம்மளை ஒரு குப்பையா கூட கண்டுக்காத பொண்ணு, இப்படி காருல வந்து கூப்பிடுதே'ன்னு, நம்ம பையனுக்கு ஒரு கலக்கம் இருந்தாலும், இப்பவாது அவ பக்கம் உக்கார ஒரு சான்ஸ் கிடைச்சுதேன்னு டக்குன்னு காருல ஏறிட்டான்.

காரும் போகுது, நம்ம நடேசனுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ' ஒரு கப் காபி சாப்பிடுறயா என்கூட?'ன்னு நிர்மலா கேட்டதும், நடேசனுக்கு, காலேஜ்ல அவ காபி சாப்பிடுற அதே நேரத்துல கான்டீன்ல இன்னோரு மூலையிலகூட இவனுக்கு காபி சாப்பிட குடுத்த வைக்காததெல்லாம் நினவுக்கு வர, அத்தனை டிராபிக்கான டி.பி. ரோட்டுல பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி வெள்ளை டிரஸ் தேவதையெல்லாம் அப்படியே 'லாலாலா'ன்னு பாடிட்டு வர்ற மாதிரி தோனியிருக்குது, உடனே தலைய ஆட்டிட்டான். 'இப்பப்போனா கடையெல்லாம் கூட்டமா இருக்கும், என்னோட வீட்டுக்கு போயிடலாம், அங்கதான் அமைதியா இருக்கும்'ன்னு நிர்மலா சொல்ல்ட்டு நிர்மலா பாட்டூக்கு வண்டியா ஒட்டுது. நம்ம பையன் ஒரு புல் பாட்டில கிங்பிஷர் பக்கத்துலவச்சு ஓப்பன் பண்ணினாலே உளர ஆரம்பிச்சுடுவான், அவனைப்பார்த்து ஒரு அழகான் பொண்ணு, அதுவும் ஆட்டோகிராப் படம் மாதிரி, காளேஜ்ல சைட் அடிச்ச பொண்ணு, வீட்டுக்கு போய் தனியா காபி சாப்பிடாலாம்ன்னு கூப்பிட்டா, எதோ முதல் முதல்லா சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போற ஸ்கூல் பையன் மாதிரி ஒரே படபடப்பா தலையாட்டிருக்கான். அப்புறம் அவன் என்ன செய்யுவான், பேச்சு வந்தாத்தான?

வீட்டுக்கும் போயிட்டாங்க..'. என் பெட்ரூம்ல உக்காந்துக்கலாமே, அங்க தான் ஏ.சி.யிருக்கு'ன்னு நிர்மலா சொல்ல, இங்க நடேசனுக்கு, உடம்புல இருக்கிற அத்தனை ஹார்மோன் சமாச்சரங்களும், (வியர்வையும் சேர்த்துதான்) ஊத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏ.சி. ரூமுக்குள்ள வேர்த்து விறுவிறுத்து நிக்கிறவனை பார்த்துட்டு நிர்மலா 'ஏய், ஏன்டா உனக்கு இப்படி வேர்க்குது, எதுக்கும் சட்டைய கழட்டிட்டு இப்படி கட்டில்ல உக்காரு, இதோ நான் ஒரு நிமிஷத்துல வந்துர்ரன்'ன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டா, நடேசனுக்கு அவன் பத்து வருஷம் முன்னாடி முருகன் தியேட்டர்ல பார்த்த 'டியுசன் டீச்சர்'ல இருந்து போன வாரம் கனகதாராவுல பார்த்த 'தி டூ விமன்' வரைக்கும் அந்த நேரத்துல ஏன் ஞாபகம் வருதுன்னு ஒரே குழப்பம், அந்த குழப்பத்துக்கு நடுவாலயும் நிர்மலா சொன்ன மாதிரி சட்டைய கழட்டி வச்சுட்டு, (இந்த இடத்துல, நடேசனுக்கு பனியன் போட்டுக்கிற வழக்கம் இல்லைங்கிற முக்கியமான விஷயத்தை நாம் மறந்துரக்கூடாது) கட்டில்ல உக்காந்திருக்கான்.

இதோ வர்றேன்னு போன நிர்மலா அஞ்சு நிமிஷமா வரலை, இங்க நடேசனுக்கு, காலேஜ் டூர்ல நிர்மலா போட்டுட்டு வந்த டைட் ஜீன்ஸும், லோகட் டாப்ஸும், திடீர்ன்னு ஞாபகத்துக்கு வந்து பாடா படுத்துது.

பத்து நிமிஷம் ஆச்சு, நிர்மலா ரூமுகுள்ள வர்றா.... அவ கூட ரெண்டு சின்ன குழந்தைக, உள்ள வந்ததும் அந்த குழந்தைக கிட்ட சட்டையில்லாம உரிச்ச கோழி மாதிரி உக்காந்திருக்கிற நடேசன காட்டி 'பாத்துக்கங்க கண்ணுகளா, நீங்க ஒழுங்கா ஹார்லிக்ஸ், காம்ப்ளான், எல்லாம் குடிக்காட்டி இப்படித்தான் இந்த மாமா மாதிரி ஒல்லியாயிடுவீங்க'ன்னு சொல்ல சொல்ல
"அய்யோ! நம்ம நடேசன் ஏங்க திடீர்ர்ன்னு நெஞ்ச புடிச்சுட்டு கட்டில்ல சாயுறான், யாராவது ஒரு ஹார்லிக்ஸ் இல்லாட்டி காம்ப்ளான் கலந்துட்டு வாங்களேன்"

-----------------------
கவிதை (மாதிரி எதாவது) எழுதினா, காதலா?ன்னு கேக்கிறாங்க, (தாடி வச்சுட்டு சுத்துன காலத்திலயும் அதே கேள்வி தான் கேட்டாங்க), அதுனால இனிமேல் கவிதை கிவிதை எல்லாம் எழுதி இலக்கியசேவை செய்யிரது இல்லைன்னு முடிவு செஞ்சுட்டேனுங்க, (நமக்கும் பெருசா ஒன்னும் தோணலைங்கைறது தான் நிசம்).
எப்பவோ எங்கயோ கேட்ட ஒரு மேட்டர சும்மா கொஞ்சம் பில்டப் குடுத்து கதை மாதிரி எழுதி பார்ப்பமேன்னு தோனுச்சு, முயர்ச்சி செஞ்சிருக்கேன்.. ம்ம்.. என்ன செய்யிறது.. உங்க தலைவிதி இப்படி இருக்குது, எனக்கு இப்படியெல்லாம் தோணுது..

(உனக்கு மட்டும் எப்படிரா ராசா.. என்னவோ போடா..)

Saturday, September 25, 2004

மழைக்காலம்


இந்த மழைக்காலத்தின் முதல் துளி..

சுவாசம் நிரப்பும் மண்வாசம்
எலும்பும் சிலிர்க்கும் குளிர்காற்று
மரக்கிளைகளுக்கு நடுவே தென்றல்
நனைந்துபடி உற்சாகமாய் பூக்கள்
ஜன்னலில் தெறிக்கும் சங்கீதம்..

நீயும் நானும்..

மனதில் ஆயிரம் கனவுகள்
ஒவ்வொரு கனவும்..
மழையில் குளிக்கும் நம் கண்களில் நிஜமாக

...கைகள் கோர்த்துபடி

இன்னும் நடக்கிறோம்..

மழையின் இசைக்கேற்ப்ப..
தூரல்களுக்கு நடுவே...
மனது நிறைய நம்பிக்கையோடு...

ஏன் இந்த மழை தினமும் வருவதில்லை??


rain

(சத்தியமா இதை நான் கவிதைன்னெல்லாம் சொல்லிக்கலீங்க.. !)

Thursday, September 16, 2004

கேள்வி மேல கேள்வி

இந்த நிமிஷம் உலகத்தோட மொத்த மக்கள்தொகை எவ்வளவு?
இந்த வருஷம் இதுவரைக்கும் உலகத்தில எத்தனை குழந்தைக பிறந்திருக்கு? இன்னைக்கு மட்டும் எவ்வளவு?
பிறப்பு மாதிரியே இறப்பு எவ்வளவு?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை ஹெக்ட்டேர் காடுகளை அழிச்சிருக்கோம்?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை டன் மீன் புடிச்சிருக்கோம்?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எவ்வளவு புஸ்த்தகம் பதிப்பாயிருக்கு?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை கார் தயாரிச்சிருக்காங்க? அதே மாதிரி எத்தனை சைக்கிள்?
இந்த நிமிஷம் பூமியோட எடை என்ன?

(போதும்டா டேய்!!)

-என்னடா இவன் திடீர்ன்னு கணக்கு வழக்கெல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டான், அமாவாசை ஏதும் பக்கத்துல வருதான்னு யோசிக்கரீங்களா? அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க, (நான் கணக்கு வழக்கு கேட்டு அதுனால நம்ம தமிழ்நாட்டுல எதாவது அரசியல் மாற்றமா வரப்போகுது.. சும்மா பொழுது போகாம கேக்குறது தான, அதுனால மன்னிச்சு விட்ருங்க)
நான் மேல கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் வேணுமின்னா www.worldometers.info ந்னு ஒரு இணயதளம் இருக்கு அங்க போய் பாத்துக்கோங்க..நான் கேட்டிருக்கிற கேள்விக மட்டுமில்லை இன்னும் நிறையா கேள்விகளுக்கு புள்ளிவிவரமா பதில் சொல்லியிருக்காங்க..(இந்த டெக்னிக்கல் ஜிகிடிக்காரங்க செய்யுற ரவுசு தாங்க முடியலைங்க)

ஒரு புலம்பல்:

விநாயகருக்கு பிறந்தநாள் வருதாமா.. நம்ம சகாக்கள் எல்லாரும் அவுங்க அவுங்க ஆபீஸ் தொடர்ந்தாப்புல ரெண்டு நாள் லீவுன்னு சந்தோஷமா இருக்கிறாங்க.. நமக்கு அப்படியா..ரெண்டு மூனு வருஷம் கழிச்சு வாய்க்கால்ல தண்ணி வருது.. ராவும் பகலுமமா நமக்கு இங்க வேலை பெண்டு நிமுத்துது.. இதுக்கு நடுவால இங்க பதிவு பக்கம் வந்து இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு உங்க அரிவையெல்லாம் பெருக்க வேண்டியது இருக்கு(!)... என்னத்த சொல்றதுங்க, வர வர நமக்கு சமுதாய கடமைக ஜாஸ்த்தியாயிட்டே இருக்குது போங்க..

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா,, (இந்த விநாயகர் சதுர்த்தி, டிசம்பர் 6, இந்த தேதியெல்லாம் வந்தாலே நமக்கு வயித்த கலக்குதுங்க)
முதல் வசந்தம் படத்துல குங்ககுமபொட்டு கவுண்டர் சொல்ற மாதிரி "சந்தோசமாவும் இருந்துக்கோ, அதே நேரம் சாக்கிரதையாவும் இருந்தக்க கண்ணு".....

Wednesday, September 15, 2004

புதுசு கண்ணா புதுசு!!

என்னடா கொஞ்ச நாளா காணாத போயிருந்தான், திடீர்ன்னு இப்ப "புதுசு கண்ணா புதுசு!!"ன்னு எதோ விளம்பர பாணியில சொல்லிட்டு வர்ரானே, எதாவது புதுசா கவிதை, கிவிதை எழுதிட்டானான்னு யாரும் பயந்துராதீங்க, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை, ஒரு 'பெயில்' மேட்டருல நம்ம ஆளுக ஒரு புதுசு செஞ்சிருக்காங்க, அதை பத்தி தான் இந்த பதிவு
(கடைசி வரை படிச்சுட்டு, ஏண்டா வெட்டியா எங்க நேரத்தை வீணாக்குறேன்னு தனி மடல்ல நம்ம ஆளுக கோவிசுக்கராங்க, அதான் இந்த திகில் படமெல்லாம் பார்க்க போன, முதல்லயே எச்சரிக்கை போடுவாங்களே அது மாதிரி ஒரு எச்சரிக்கையா முதல்லயே சொல்லிடறேன், இந்த தடவை கவிதை எல்லாம் ஒன்னும் எழுதலை சாமிகளா!!)

குஜராஜ் கலவரத்துக்கு வழி வகுத்த கோத்ராவில நடந்த ரயில் எரிப்பு விவகாரத்துக்காக (அது திட்டமிட்ட எரிப்பு இல்லை, எதோ கரண்ட் ஷார்ட்சர்க்யூட் காராணமா ஏற்ப்பட்ட விபத்துன்னு இப்போ சொல்லிகிட்டிருக்காங்க) நிறையா ஆட்களை, கிட்டத்தட்ட 95 பேரை கைது செஞ்சு ஜாமீன்ல வெளிவராதபடி உள்ள வச்சிருக்காங்க. அதுல 'ஃப்ரோஸ்கான்'ன்னு ஒருத்தர் சார்பா பெயில்ல வெளிய போறதுக்காக ஒரு மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. இதுல என்னடா புதுசு இருக்கு, ஒருத்தனை கைது செஞ்சா, அவன் பெயில் மனு போடுற்து வழக்கம் தானங்கரீங்களா? அதெல்லாம் வழக்கம்தானுங்க, ஆனா அவன் பெயில் கேக்குற காரணம் தான் புதுசு, பெயில்ல வெளிய போய் அம்மாவை பார்க்கனும், குழந்தைய பார்க்கனும், (சினிமாவுல வர்ற மாதிரி) பெயில்ல வெளிய போய் கல்யானம் செஞ்சுக்கனும்னெல்லால் கேப்பாங்க, இதெல்லாம் தான் நாம ஏற்க்கனவே கேள்விபட்டிருக்கோம், ஆனா இவர் புதுசா ஒரு மேட்டருக்காக பெயில் கேட்டிருக்கருங்க. அவரோட பெயில் மனுவில அவர் என்ன சொல்லியிருக்காருனா "கடந்த 30 மாசாமா நான் ஜெயிலுக்குள்ளயே இருக்கேன், இவ்வளவு நாளா செக்ஸே வெச்சுக்காம என்னொட மனநிலை ரொம்பவும் பாதிக்கபட்டிருக்கு, என்னோட கலாச்சார(!) முறை வேற நான் என் மனைவி தவிர வேர யார்கூடயும் செக்ஸ் வச்சுக்க அனுமதி தரமாட்டேங்குது, அதுனால மனிதாபிமான அடிப்படையில எனக்கு ஒரு 2 நாள் பெயில் குடுத்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்'ன்னு கேட்டிருக்கான்.

இதை பத்தி என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலைங்க (நம்ம கருத்த எதிர்பார்த்து இங்க யாரும் காத்து கிடக்கலைங்கிறது வேற விஷயம்!!) , ஆனா கடைசியா நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செஞ்சிட்டாருன்னு செய்தி பார்த்தேன். நீதிபதி " இந்த மனுவை ஏத்துகிட்டு இவனுக்கு பெயில் குடுத்தா, அது ஒரு தவறான முன்னுதாரனமா ஆகிடும்"ன்னு சொல்லியிக்காங்க.

அவன் பெயில் கேட்ட காரணம் சரியா? அதை நீதிபதிக தள்ளுபடி செஞ்சது சரியா? இங்க நம்ம சகாக்கள் கிட்ட பேசுனா வழக்கம் போல ரெண்டு பக்கமும் பேசறானுக, நமக்கும் ஒன்னும் தீர்மானமா புரியா மாட்டேங்குது, அதான் இந்த சமாச்சாரத்த பத்தி நம்ம 'வலை'மக்கள் என்ன நினைக்கராங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆசைப்பட்டு இங்க எழுதிட்டேன்,

இந்த பெயில் மனுவில் சொல்லப்பட்ட காரணம் 'கொழுப்பா!' இல்லை 'நியாமனதுதானா' ... என்ன நினைக்கரீங்கன்னு சொல்லுங்களேன்....!

இந்த விஷயம் பத்தி BBCயோட சுட்டி

confusion

Thursday, September 9, 2004

ஒரு கவிதை எழுதினேன்!!

எனக்கும் என் சகா ஒருத்தனுக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் ஆகிப்போச்சுங்க.. எதோ பெரிய உலக அரசியல், பக்கத்துநாட்டு பிரச்சனைங்கற மாதிரி சின்ன பிரச்சனை இல்லைங்க.. கொஞ்சம் ரொம்பவும் அறிவுபூர்வமான பிரச்சனை..
பிரச்சனை என்னன்னா? "ஒருத்தன் கவிதைன்னு எதாவது எழுதறான்னா அவன் கண்டிப்பா காதல்ல விழுந்திருகனும்"ங்கிறது அவனோட அயிப்பராயம், நான் 'கம்'முன்னா இருப்பேன்?, வழக்கம் போல விதன்டாவாதமா எதாவது பேசாட்டி நமக்கு மண்டை வேடிச்சுடுமே, "அப்படியில்லாம் கிடையாது அது மனசும், புத்தியும் சம்பந்தபட்டது"ன்னு நான் சொல்ல, அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் பேசி, பேசி, பேசி,.. "அப்ப நீ ஒரு காதல் கவிதை எழுது பார்ககலாம்"னு நம்ம தன்மானத்தை(!) உரசி பார்க்கிற மாதிரி ஒரு இடத்துல வந்து பேச்சுவார்த்தை நின்னுருச்சுருங்க.
"என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை"ன்னு நினைச்சுகிட்டு, நானும் டக்குன்னு சரின்னு சொல்லிட்டனுங்க (எதை சொன்னாலும் செய்யறேன்னு சொல்ற இந்த அதிகப்பிரசங்கித்தனம் தான் எனக்கு ஒரு நாள் குழி வெட்ட போகுது). அப்புறம் என்ன வழக்கம் போல ஒரு காரியம் செஞ்சிரலாம்னு ஒத்துகிட்டு, அப்புறம் மூளை குழம்பி போய் சுத்த வேன்டியது தான் வழக்க்மாகிப்போச்சே, இருக்கிறதே கொஞ்சூன்டு மூளை, அதையும் குழம்ப விட்டா, அப்புறம் கள்ளு குடிச்ச குரங்கு, இஞ்சியையும் கடிச்சுகிட்ட மாதிரி ஒரு நிலைமையாகி போச்சுங்க.
நமக்கு இந்த கவிதைகளுக்கும் பொதுவா ஏழாம் பொருத்தம்தான். காலேஜ்ல மூனாவது வருஷம் படிக்கும் போது, அதுவரைக்கு தன் கிளாஸ்ல படிச்சுட்டு இருந்த ஒரு கேரளா பொண்னு மேல பைத்தியமா இருந்த எங்க BBC Gang மணி, அந்த பொண்ணோட தங்கச்சி பர்ஸ்ட் இயர் வந்து சேர்த்ததும், அவ பின்னாடி போனதை நான் (வழக்கம் போல அதிகப்பிரசங்கித்தனமா) எங்க ஹாஸ்டல் போர்ட்ல எழுதி கலாய்க்க, அதை எடுத்து எங்க MIB* கிளப் ஷங்கர், அங்ககங்க கொஞ்சம் வெட்டி சரி செஞ்சு, 'ஷங்கர்-ராஜா' ங்கிற பேருல அதை எங்க காலேஜ் 'yearbook'ல போடவச்சான், (அது அப்புறம் விகடன்' காலேஜ் காம்பவுன்ட்'லயெல்லாம் வந்து, அந்த நாலு வரி கவிதைக்கு! பதினஞ்சு பாட்டில் பீர் செலவு ஆகிபோச்சு) அந்த கவிதை..
' உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்
உன் சிஸ்டரை கண்டேன்
உன்னை மறந்தேன் '


*(MIB - Men in black, கொஞ்சம் கருப்பா, என்னை மாதிரி, இருக்கிற பசங்க எல்லாரும் சேர்ந்து நடத்துன கேண்டீன் கிளப்)

அதுக்கப்புறம் ரெண்டு மூனு தடவை, அந்த மாதிரி முயற்ச்சியில இறங்கி, அப்புறம் நம்ம கூட்டாளிக கிட்ட இருந்து கிடைச்ச 'பெட்ஷீட்பூசை'க்கு பயந்த்துகிட்டு, நான் அந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுல இறங்கிறது இல்லைங்க, (நாம என்ன 'மீனாக்ஸ்'ஆ?, மனுஷன், பசங்க தண்ணியடிக்கும் போது, சும்மா கூட போய் சும்மா உக்காந்துட்டு வந்து படுற அவஸ்த்தைய பத்தியெல்லாம் கூட அழகாக எழுதறாருங்க).
இருந்தாலும், நம்ம கிட்ட ஒருத்தன் சவால் விட்டுடானேன்னு, இந்த தடவை அந்த ஆபத்தான விளையாட்டுல இறங்கிட்டேன்ங்க. ராத்திரியெல்லாம் யோசிச்சு யோசிச்சு, (பேனாவை கன்னத்துல வச்சுகிட்டு கவிஞர்க மாதிரி யோசிச்சா ஒரு வேளை எதாவது தோனுமோன்னு, அப்படி கூட யோசிச்சேன்) கஷ்டப்பட்டு ஒரு 6-7 வரி எழுதினேன்.. எழுதினதை படிச்சு பார்த்தா எனக்கே ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப ஆர்வமா நம்ம சகா கிட்ட காட்டினேன், அதை படிச்சுட்டு அவன் ஒரு இடியை போட்டான் பாருங்க, நொந்து போயிட்டன் நான். நானா யோசிச்சு எழுதினதை படிச்சுட்டு, அவன் "இது நான் ஏற்க்கனவே படிச்சிருக்கேன், எங்கேன்னு தான் ஞாபகம் இல்லை, எங்க இருந்து சுட்டேன்னு ஒழுங்கா சொல்லு"ன்னு ஒரே அடியா அடிச்சுட்டானுங்க. எதோ பெரிய, கவிதையெல்லாம் எழுதிட்டம்னு ஒரு மிதப்பா இருந்தேன், இப்படி ஒருத்தர்(ன்) எனக்கு முன்னாடியே அதை எழுதியிருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ 'சத்தியாமா நான் தான் எழுதினேன், எனக்கு யாரும் எழுதி தரலைன்னு' திருவிளையாடல் தருமி மாதிரி புலம்பிட்டு இருக்கேன்..

எனக்கு ஒரு உதவி செய்யுங்க சாமிகளா!!
யாரவது இதை படிச்சு பார்த்துட்டு, நம்ம சகா சொன்னது நிசமான்னு சொல்லுங்க... (அப்படி ஏதும் இருக்காதுன்னு இன்னும் எனக்கு ஒரு சின்ன நம்பிக்கை!!)
---------------

உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

--------------
TheSadClown_90_100

டேய்! சகா!!.. இப்படி என்னை தனியா புலம்பற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டியே!!

Monday, September 6, 2004

கிருஷ்னர் ஜாதகம்

ஒவ்வொரு எலக்ஷ்சனுக்கும் முன்னாடி, அரசியல் தலைவர்களோட ஜாதகமும், அவுங்க கட்சி ஜாதகமும் எல்லா பத்திரிக்கையிலையும் போட்டு, அவங்களோட வெற்றி வாய்ப்பு, அவுங்களோட எதிர்காலம்னு பலதையும் பத்தி நம்ம பிரபல(!)ஜோசியர்களோட கருத்தெல்லாம் வரும். சிலநேரம் இது நம்ம கோடம்பாக்கத்து தெய்வங்களுக்கும் பொருந்தும். இப்பொ அந்த வரிசையில 'கிருஷ்ன' பரமாத்மாவோட ஜாதகத்தையும் கம்ப்யூட்டர் உதவியோட கணிச்சிருக்காங்களாம். அவரோட பிறந்த நாள் July 21, 3228 BCனு சொல்லியிருக்காரு பிரபல ஜோசியர் அருன்.கே.பன்ஸால். பிருந்தாவனத்துல வாழ்ந்த கிருஷ்னரும், மகாபாரத கிருஷ்னரும் ஒரே ஆளா(!) இல்லை வேற வேறயாங்கிற குழப்பத்துக்கே இன்னும் முழுசா பதில் தெரியலை, இதுல இவர் வேற புதுசா பிறந்ததேதி எல்லாம் சொல்றாரு, இதை வெச்சு புதுசா யாராவது ஒரு பிரச்சனைய கிளப்பாம இருந்தா சரி.. (கிருஷ்னர் ஜாதகம்)

இன்னொரு ஜோசியர், சோனியாவோட அரசியால் வாழ்க்கை இந்த வருஷத்தோட முடிஞ்சுரும்னு சொல்றாரு, இவர் ஏற்கனவே வாஜ்பாயி, சோனியா ரெண்டு பேருமே பிரிதமர் ஆக மாட்டாங்ன்கன்னு எலக்ஷ்சனக்கு முன்னடியே கரெக்ட்டா கணிச்சு சொன்னாருன்னு சொல்றாங்க..., அது நடக்காது, இது நடக்காதுன்னு மட்டும் சொல்றாங்க, ஆனனா என்ன நடக்கும்னு சொல்லமாட்டேங்கிறாங்களே!!

Saturday, September 4, 2004

பதில் கடிதம்.

கேள்வி பதில் பாணியில நம்ம பையன் குடுத்த காதல் கடிதத்துக்கு அந்த பொண்ணோட பதில் கடிதம்:
---------------------------------------------------------------

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு.

1) கிளாஸ்ல முதல் பெஞ்சுல யாராவது உக்காந்திருந்தா, உள்ளே வர்ரவங்க அவங்களை பார்கிறது சகஜம்
அ) ஆம்
ஆ) இல்லை

2) ஒரு பொண்ணு சிரிச்சுட்டு, ஒருத்தரை பார்த்த்தா அதுக்கு பேரு காதல்
அ) ஆம்
ஆ) இல்லை

3) பாட்டு பாடும் போது, திடீர்ன்னு பாட்டு வரி மறந்துபோயிட்டா, பாடுறவங்க பாடுறத பாதியில நிறுத்திருவாங்க
அ) ஆம்
ஆ) இல்லை

4) நான் என்னோட சின்ன வயசு போட்டோவை என்னோட நன்பர்கள்கிட்ட காமிச்சிட்டு இருக்கும்போது, நீ நடுவுல வந்து மூக்க நுழைச்சிட்ட
அ) ஆம்
ஆ) இல்லை

5) பிக்னிக்ல உன் கைய புடிச்சு மேடு ஏறுரத நான் தவிர்த்தேன். அது ஏன்னு உனக்கு இன்னும் புரியல
அ) ஆம்
ஆ) இல்லை

6) நான் என்னோட (பெண்)நண்பருக்காக பஸ்ஸ்டான்ட்ல காத்திட்டு இருக்ககூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

7) உன்னை நான் என்னோட அப்பாகிட்ட 'நண்பன்'னு அறிமுகப்படுத்த கூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

8)உனக்கு ரோஜா மட்டுமில்லை, தாமரை, மேஃப்ளவர், காலிப்ளவர், கூட புடிக்கும்னு சொன்னியே, அது உண்மை தானே?
அ) ஆம்
ஆ) இல்லை

9) ஓ! அன்னைக்கு உன் பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயில் பக்கம் பார்த்தேனா?. நான் தினமும் காலையில கோயிலுக்கு வருவேன், அது உனக்கு தெரியுமா?
அ) ஆம்
ஆ) இல்லை

மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'ஆம்'னு சொல்லியிருந்தா "நான் உன்னை காதலிக்கலை"
மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'இல்லை'னு சொல்லியிருந்தா "உனக்கு காதல்னா என்னன்னே தெரியலை"

--விஜி
------

பதில் கடிதத்தை படிச்சு பார்த்துட்டு நம்ம பையன் எதோ பேயடிச்ச மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பாவம்..!!

Friday, September 3, 2004

ஒரு காதல் கடிதம்..

நம்ம பையன் ஒருத்தனுக்கு, அவன் கூட படிக்கிற பொண்ணு மேல திடீர்ன்னு பயங்கிறமா 'தெய்வீககாதல்' (அவன் இப்படித்தான் சொன்னான்) வந்திருசச்சுங்க. நம்ம கிட்ட வந்து "ஒரு லவ்லெட்டர் எழுதனும், வித்தியாசமா எதாவது ஒரு ஐடியா குடுங்க"ன்னு ஒரே தொல்லை. (இந்த வித்தியாச வியாதி சினிமாக்காரங்ககிட்ட இருந்து இப்போ எல்லாருக்கும் தொத்திகிருச்சு போல) நமக்கும் என்னங்க தெரியும் அதை பத்தி, காதலுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே!!. "ஆளை விடுறா சாமி"ன்னு எஸ்கேப் ஆயிட்டேன். அவன் ம்னசு தளராம அவ்னே ஒரு வித்தியாசமான(!) கடிதம் எழுதி அதை எங்கிட்ட காமிச்சான். இதோ அந்த கடிதம்...

-------
அன்பே விஜி,

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு

1) நீ நம்ம க்ளாஸுக்கு உள்ள வரும்போதெல்லாம், கண்டிப்பா உன் பார்வை எம்மேல விழுது, அதுக்கு காரணம்:
அ) "காதல்"
ஆ) "என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல"
இ) "நிஜம்மாவா..!!அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை"

2) யாராவது க்ளாஸ்ல ஜோக்கடிச்சா, உடனே நீ சிர்ச்சுகிட்டே என்னை திரும்பி பார்க்குற, அதுக்கு காரணம்:
அ) "நீ சிரிச்சிட்டு இருக்கிறதை நான் பார்க்கனும்"
ஆ) "உனக்கு இந்த மாதிரி ஜோக்கெல்லாம் புடிக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்"
இ) "உன் சிரிப்பு எனக்கு புடிச்சிருக்கு"

3)நீ ஒரு நாள் கிளாஸ்ல பாடிட்டு இருந்த, அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன், நீ உடனே பாடுறத நிறுத்திட்ட, அதுக்கு காரணம்:
அ) "உன் முன்னாடி பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்தது"
ஆ) "நீ திடீர்ன்னு உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு"
இ) "நான் பாடிட்டு இருந்தது உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு எனக்கு பயமாயிருச்சு"

4) உன்னோட சின்ன வயசு புகைப்படத்தை நீ எல்லாருக்கும் சாமிச்சுட்டி இருந்த, ஆன நான் கேட்டதும், நீ அதை மறச்சுட்ட, அதுக்கு காரணம்:
அ) "எனக்கு வெட்கமா இருந்துச்சு"
ஆ) "உன்கிட்ட காமிக்கிறதுக்கு எனக்கு எதோ ஒரு சங்கடம்"
இ) "எனக்கு தெரியலை"

5) நாம அருவிக்கு பிக்னிக் போனப்போ, ஒரு மேடு ஏறும் போது, நானும் என் கூட இருந்த நண்பனும் உனக்கு கை குடுக்க வந்தோம், நீ அவனோட கைய புடிச்சு மேல ஏறி வந்த, அதுக்கு காரணம்:
அ) "உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்"
ஆ) "உன் கைய புடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது"
இ) " எனக்கு தெரியல "

6) நீ நேத்து பஸ் ஸ்டாப்புல காத்திட்டு இருந்த, ஆனா பஸ்ஸுல ஏறுல, அதுக்கு காரணம்:
அ) "உனக்காக காத்திட்டு இருந்தேன்"
ஆ) "உன்னை நினைச்சிட்டு நின்னதுல, பஸ் வந்ததை கவனிக்கலை"
இ) "பஸ் கூட்டமா இருந்தது"

7) உங்க அப்பா காலேஜுக்கு வந் தப்ப, நீ என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வச்ச, அதுக்கு காரணம்:
அ) "நீ தான் என்னோட வருங்காலம்னு சொல்ல ஆசைப்பட்டேன்"
ஆ) "எங்கப்பாவுக்கு உன்னை புடிக்குதாஅன்னு தெரிஞ்சுக்க"
இ) "சும்மா, அறிமுகப்படுத்தனும்னு தோனுச்சு"

8) எனக்கு ரோஜாப்பூ புடிக்கும்ன்னு ஒரு நாள் சொன்னேன், அடுத்த நாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சுகிட்ட வந்த அதுக்கு காரணம்:
அ) "உன் ஆசைக்காகத்தான்"
ஆ) "உனக்குத்தான் ரோஜாப்பூ புடிக்குமே அதுக்காக"
இ) "அது தற்செயலா நடந்தது"

9) என் பிறந்த நாளன்னைக்கு காலையில 5 மணிக்கு நான் கோவிலுக்கு வந்தேன், நீயும் அன்னைக்கு கலையில கோயிலுக்கு வந்திருந்த, அதுக்கு காரணம்:
அ) "உன் பிறந்த நாளன்னைக்கு உன் கூட சாமி கும்பிடலாம்னு"
ஆ) "உன் பிறந்த நாளன்னைக்கு எல்லாருக்கும் முதல்ல, நான் உன்னை பார்க்கனும்னு"
இ) "உனக்கு கோயில்ல வச்சு வாழ்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்"

எந்த பதிலும் தப்பில்லை, எல்லா பதில்களுக்கு ஒரு மார்க் இருக்குது
(அ)10, (ஆ)5, (இ)3 மார்க்.

40 மார்க்குக்கு மேல வாங்கியிருந்தா, "நீ என்னை காதலிக்கிற, ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிற"
30க்கும் 40க்கு இடையில இருந்தா, "உனக்கு எம்மேல காதல் வர ஆரம்பிச்சிருச்சு"
30க்கும் கீழ இருந்தா, "உனக்கு என்னை புடிச்சிருக்கு, ஆனா காதலிக்கலாமா, வேண்டாமான்னு யோசிக்கிற"


உன்னோட பரிட்சை முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
--உன் அன்பு காதலன்(?).

-------------------------------------------------------------------
இதை எடுத்துட்டு அவனும், ஒரு நல்ல நாள் பார்த்து, சாமி எல்லாம் கும்பிட்டு, அந்த பொண்ணுகிட்ட குடுத்திருக்கான், அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு, அப்புறம் தான்ங்க கிளைமாக்ஸே!! . இவன் குடுத்த கேள்விக்கு நேரிடையா பதில் குடுக்காம அந்த பொண்ணும் ஒரு கேள்வித்தாள் எழுதி குடுத்திருச்சு, அது அடுத்த பதிவுல... :-)

Wednesday, September 1, 2004

ஒரு எச்சரிக்கை!

கொஞ்சம் தோட்டத்துல வேலை ஜாஸ்த்தியா போச்சுங்க, அவ்ளோதான், சீக்கிரம் வந்துருவேன்.
நான் வரமாட்டேன்னு நினைச்சு எங்கயாவது போனீங்க...


a
<

Sunday, August 29, 2004

போன மச்சான் திரும்பி வந்தான்..

ஒரு வாரம் வலைப்பூ பக்கமா ஒதுங்கிட்டு, இதோ இப்பொழுது, மீண்டும் உங்களுடன், உங்கள் அபிமானத்துகுரிய, உங்கள்'ராசா'....
(ச்சே, இப்படி சொன்னதும் எல்லாரும் கை தட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா, இந்த முறைப்பு முறைக்கரீங்க?)

'குடில்', தமிழ்மணம்', 'Tamil Bloggers List', - இவுங்களோட துணையோட, சும்மா அவுங்க இப்படி எழுதியிருக்காங்க, இவுங்க இப்படி எழுதறாங்கன்னு, எப்படியோ ஒரு வாரம் ஓட்டியாச்சு.
"என்னடா வெற்றிகரமா முடிச்சிட்டியா"ன்னு இங்க என் சகா ஒருத்தன் கேக்கிறான்ங்க. என்னத்த சொல்றது, ஒரு வாரம் முழுசா முடியறதுக்குள்ள இங்க அவனவனுக்கு நுரை தள்ளியிருச்சு, இதுல வெற்றிகரமா முடிச்சியான்னு ஒரு கேள்வி வேற, எல்லாம் என் நேரம்!!.

ஒரு வாரம் வலைப்பூவுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு, உழைச்சு, ஓடா தேய்ஞ்சு போயிட்டதுனால, இன்னைக்கு நல்லா ஒரு விடைக்கோழியா அடிச்சு, ஒரு புடி புடிச்சுட்டு, நல்லா ஒரு தூக்கம் போடனும்.
வரட்டுங்களா!!

(வர்றேன்னு சொல்றதுக்கு ஒரு பதிவாடா'ங்கரீங்களா?.. என்ன செய்யரது, நாட்டுல நிறைய பரபரப்பான விஷயமெல்லாம் நடக்குது, இதுக்கு நடுவால நம்மளை யாரும் மறந்துரக்கூடாது பாருங்க, அதுக்கு தான் இப்படியெல்லாம்..!!)


imback
அய்யோ..!!..வந்துட்டியா...??


Monday, August 23, 2004

நச்சுன்னு ஒரு கேள்வி

அதென்னமோ தெரியலைங்க, நாலு படிச்ச பெரியவங்க மத்தியில, எனக்கு புடிச்ச காமெடி நடிகர் கவுண்டமனி தான்னு சொன்னா, ஒரு இளக்காரமான பார்வை வருது. "சும்மா கால தூக்கி இடுப்புல உதைக்கிறதுக்கு பேரெல்லாம் காமெடியா?? காமெடின்னா கொஞ்சம் ஹெல்த்தியா செய்யனும்" அப்படி இப்படின்னு ஒரு பெரிய லெக்சர் வேற குடுக்கிறாங்க.

ஒத்துகிறேன், கால தூக்கி இடுப்புல உதைக்கிறதுக்கு மட்டும் காமெடியில்லை, ஆனா கவுண்டமனி காமெடி அது மட்டும் தானா? ஒரு வாழைப்பழ சீனுல அவர் உதைக்கிறது மட்டுமா பிராதானம்? வைதேகி காத்திருந்தால் படத்துல செந்தில் பெட்ரமாக்ஸ் லைட்ட உடைச்சதும் ஒரு பார்வை பார்ப்பாரே, அப்போ எதுக்கு சாமி சிரிச்சீங்க?, அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லி ஒரு சமாளிப்பு சமாளிப்பாரே, அது கூட காமெடி இல்லையா?
இப்படி கேள்வி கேக்க ஆரம்பிச்சா, அப்புறம் அதுக்கு ஒரு முடிவே இருக்காது, அவர் நடிச்ச எல்லாப்படத்தையும் பத்தி பேசனும். எனக்கு என்னமோ அவர் காமெடி புடிச்சிருக்கு. அப்ப்டி இல்லாம சும்மாவா 20 வருஷம் ஒரு ஹீரோக்கு சமமா நிக்க முடியும். அதுவும் நன்னை பத்தி விளம்பரமா ஒரு பேட்டியும் குடுக்காம, ஒரு விழாவுலையும் கலந்துக்காம, மக்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கிரதுன்னா அது சாதரண விஷயாமா?


நான் சொல்ல வந்தது கவுண்டமனி காமெடிய பத்தியில்லை, (அப்புறம் ஏண்டா கண்டதையும்பேசர..?) சரி.. சரி விஷயத்துக்கு வர்றேன். இங்க எங்க ஊரு பக்கம் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடக்கும், எங்க ஆளுகளும் ஏதோ காணாததை கண்டவங்க மாதிரி வேலை வெட்டிய விட்டுபுட்டு சுத்தி குமுஞ்சுகிட்டு வேடிகை பார்ப்பாங்க. என் பங்காளி ஒருத்தன் தொந்திரவு தாங்காம நானும் ஒரு நாள் வேடிக்கை பாக்குற கூட்டத்துக்கு கூட போனேன். அங்க போன நம்ம கவுண்டமனி நடிச்சுட்டு இருக்காரு, எதாவது வடநாட்டு பொண்ணு தொப்புளையும், ***\, காட்டிட்டு வயல்ல இறங்கி ஆடுவா, நேருல பார்க்கலாம்ம்னு வந்த நம்ம பசங்க வெறுப்பாகி திரும்பிட்டாங்க. நான் நம்ம ஆளு இருக்காரே கொஞ்ச நேரம் வேடிக்க பாக்கல்லாம்னு அங்கயே நின்னுட்டன். நமக்கு தெரிஞ்சவங்க தோட்டதுல தான் ஷூட்டிங் நடந்துதா, அந்த தோட்டதுக்காரர், அவரோட செல்வாக்க காட்டனும்னு, என்னை கூட்டீட்டு போய் கவுண்டமனி கிட்ட அறிமுகப்படுத்திவச்சாரு, நானும் கொஞ்ச நேரம், சும்மா, எனக்கு உங்க படமெல்லாம் ரொம்ப புடிக்கும் அது இதுன்னு திருவாத்தான் மாதிரி பேசிட்டு இருந்தேன் (மாதிரி என்ன, மாதிரி நிஜம்மாவே அப்படித்தான்). அவரும் மரியாதையா, என்ன செய்யரீங்க அப்படி இப்படின்னு விசாரிச்சுட்டு, ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க, அதுதான் நான் சொல்ல வந்த சமாச்சாரம். அதை சொல்றதுக்கு பதிலா தேவையில்லாம, காமெடி, ஷூட்டிங்க்ன்னு கண்டதையும் பேசிட்டன். அப்படி என்ன கேட்டாருங்கரீங்களா?. "நாங்க பாட்டுக்கு எங்க வேலையா பார்த்துட்டு இருக்கோம், நீங்க ஏன்ப்பா இப்படி உங்க வேலைய விட்டுபுட்டு எங்கள வேடிக்கை பார்த்துட்டு நிக்கரீங்க, நீங்க வேலை செய்யும் போது யாராவது இப்படி வந்து வேடிக்கை பார்ப்பாங்களா?"ன்னு கேட்டாரு. ஒரு கேள்வின்னாலும் நச்சுன்னு நடு மண்டையில கடப்பறைய போட்ட மாதிரி கேட்டாரு பாருங்க, அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் நான் ஷூட்டிங் நடக்குற பக்கம் தலை வச்சு படுக்கறது கூட இல்லைங்க (அன்பேசிவம் படத்துக்காக கமல்ஹாசன் வந்தப்பவும் சரி, வின்னர் படத்துகாக அருவியில கிரண் இழுத்து போத்திட்டு (!) பாட்டு சீன் எடுக்கறாங்க மாப்பிள்ளைன்னு பசங்க என்னை உசுப்பேத்துனப்ப கூட, ம்ஹூம் சத்தியமா நான் அந்த பக்கம் போகலை)

Sunday, August 22, 2004

வலைப்பூ பக்கம் போறேன்.

யாரு நம்மளைப்பத்தி என்ன சொல்லிகுடுத்தாங்கன்னு தெரியல, திடீர்ன்னு போன வாரம் "உங்களை பத்தி சொல்லுங்க ராசா"ன்னு மதி(யக்கா?)கிட்ட இருந்து ஒரு கடுதாசி வந்துச்சு. சரி, நம்மளையும் மதிச்சு கேக்க கூட ஆள் இருக்கு இந்த உலகத்திலன்னு, நானும் என் அருமை பெருமையெல்லாம் தெளிவா(!) எடுத்து சொல்லி ஒரு பெரிய கடுதாசிய அனுப்பிட்டு, காய் புடுங்கினா காட்டுல அடுத்த மழைக்கு முன்னால ஒரு உழவு ஓட்டி விட்ருவோம்னு கிளம்பிட்டேன்.
திரும்பி வந்து பார்த்தா, காத்து பலமா அடிச்சா குப்பை கூட கோபுரத்துல ஏறி பரதநாட்டியம் ஆடும்பாங்களே, அந்த மாதிரி, மதிகிட்ட இருந்து "நீதாண்டா இந்த வாரம் 'வலைப்பூ'க்கு ஆசிரியர்"ன்னு மறுபடியும் ஒரு கடுதாசி.
சரி தான், குழந்தைக்கு அழகா தலை சீவி, பவுடர் எல்லாம் போட்டு, கொஞ்சம் மையெடுத்து கன்னத்துல வப்பாங்களே, கண்ணு பட்டுரக்கூடாதுன்னு, அதுமாதரி, வாராவாரம் ஒரு ஆளுன்னு, கலக்கிட்டு இருக்கிற வலைப்பூ'க்கு, ஒரு திருஷ்டி பொட்டு வைக்க ஆசப்படுராங்க போல, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பனேன்னு, நானும் சரின்னு சொல்லிட்டன். (நமக்கு தான் தாராள மனம் ஆச்சே, யார் எது கேட்டலும் மறுக்க மாட்டமே!!)

அதுனால, இந்த ஒரு வாரம் பூராவும் தோட்ட வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு 'வலைப்பூ' பக்கம் போகப்போறேன். வலைப்பூ ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
இருக்குற பதிவுல எழுதவே ஒன்னும் தெரியல, நம்மளைப்போய் வலைப்பூ'ல எழுதுன்னா? சும்மா, ஒரு ஆர்வத்துல சரின்னு சொல்லிட்டேன் இப்போ என்ன எழுதறதுன்னே தெரியல, யாரவது எதாவது ஒரு வரி எடுத்து குடுங்கப்பா...

(ச்சே..!! 25வது பதிவும் அதுவுமா, எதாவது ஒரு கலக்கல் மேட்டர் எழுதி பின்னிரனும்னு நினைச்சேன், இப்படி என்ன எழுதறதுன்னு சொல்லி குடுங்கப்பான்னு கெஞ்சற மாதிரி ஆயிடுச்சே.. எல்லாம் நேரம் "ஆசை இருக்கு தாசில் செய்ய, அதிர்ஷ்ட்டம் இருக்கு எருமை மேய்க்க'"ன்னு சும்மாவா சொன்னாங்க)

Wednesday, August 18, 2004

சும்மா ஒரு பதிவு

busy@farm


அடிக்கடி பதிவு செய்யலைன்னா எங்க நம்ம பட்டா'வ தூக்கிடுவாங்களோங்கிற பயத்துல.. ஒரு படப்பதிவு..

Saturday, August 14, 2004

ஒரு கவிதை

நேத்து எங்கய்யனுக்கு 'சாரதி'யா பாலக்காடு வரைக்கும் போயிருந்தனுங்க (அதையாவது உருப்படியா செய்யுங்கறீங்களா??). எங்கய்யனுக்கு ஒரு பழக்கம், எங்கே போனாலும் என்னை கண்டிப்பா கூட கூட்டிட்டு போய்டுவாரு(!), ஆனா போற இடத்துல என்னை வெளிய வண்டிக்கு காவல் விட்டுட்டு அவர் மட்டும் வேலைய பார்க்க போய்டுவாரு, (நம்ம மேல அவ்வளவு மரியாதை!!..ம்.ம்!!). அதுனால எப்ப எங்கய்யன் கூட வெளியூர் போனாலும் (ஆ.வி., குமுதம்'ன்னு) எதாவது ஒரு ரெண்டு புஸ்த்தகம் வாங்கி வண்டிக்குள்ள போட்டுக்குவேன். இந்த தடவை போகும்போது இந்த வார பதிப்பெல்லாம் ஏற்க்கனவே படிச்சுட்டதுனால, போற வழியில டீ சாப்பிட நிறுத்தும்போது 'மிருகபாலிகை'ன்னு ஒரு புஸ்த்தகம் வாங்கிவச்சேன். (அட்டை கொஞ்சம் விளம்பரமா இருந்துதா, சரி, இந்த மாதிரி புஸ்த்தகம் எல்லாம் கையில வச்சிருந்தாலாவது நம்ம கொஞ்சம் விவரமான ஆளுன்னு பாக்கிறவங்க நம்புவாங்களேன்னு வாங்கினேன்).
நான் இன்னும் அதை முழுசா படிக்கல, இருந்தாலும் நிறையா கவிதை நல்லா இருந்ததுச்சுங்க, அதுல இருந்து ஒரு கவிதை.

காதல்.

நீண்டதூரம் அழைத்துவந்து
சட்டென்று கை உதறி
மறைந்து கொண்டதில்
அல்லலுறுகிறது ஒரு காதல்.

அங்குமிங்கும் ஓடுகிறது.
அல்லாடுகிறது.
அலைபாய்கிறது.

சற்று நேரம்தான்.
எதுவும் கேட்கவில்லை
எல்லாம் புரிந்தது போல்
சட்டென்று ஒரு வழி பிடித்து
நடந்து மறைகிறது.

வந்ததும் தெரியாமல்
போனதும் தெரியாமல்.

- வஸந்த்செந்தில் (மிருகபாலிகை)

இதேமேட்டரத்தான் நம்ம வாசூல்ராஜ'வுல வைரமுத்து (கொஞ்சம் நமக்கு புரியர மாதிரி) எழுதி, கமல் பாடியிருக்காரு,
'ஆள்வார்ப்பேட்டை ஆண்டவா,
வேட்டிய போட்டு தாண்டவா,
ஒரே காதல் உலகில் இல்லையடா'.

இதெல்லாம் ரைட்டுதான்,
நமக்கு இங்க ஒன்னுக்கே வழிய காணல, இதுல இவுங்க வேற ஆள் மாத்தி ஆளு வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க.. ச்சே!! (நம்ம ஊருப்பக்கம் இப்போ அமேரிக்கா பையனகளுக்கு தான் மதிப்பு, நம்மள மாதிரி உள்ளூருல மாடு மேய்க்கிற பசங்களையெல்லம் ஒரு புள்ளையும் திரும்பிக்கூட பார்க்கிறதில்ல..)

ஒரு அஞ்சலி:
இந்த பாட்டெல்லாம் கேக்கறதுக்கு இல்லாம, 'பூவே உனக்காக' கிளைமாக்ஸ்'ல வர்ற 'ஒரு பூ செடியில இருந்து உதிர்ந்துட்டா, அது மறுபடியும் செடியுல ஒட்டாது'ன்னு விளங்காத தத்துவம் பேசிட்டு, UKG'ல இருந்து +2 வரைக்கு ஒட்டுக்கா படிச்ச என்னையும், 23 வருஷம் தங்கம் போல வளர்த்த அவுங்க ஆயிஅப்பனையும், விட்டுட்டு, 2 வருஷம் முன்னாடி இதே ஆகஸ்ட் 14ம்தேதி 'எக்கலக்ஸ்' குடிச்சுட்டு (கசப்பு தெரியாம இருக்க பெப்ஸி கலந்து) காதல்ல 'ஜெயிச்ச' எங்க முட்டாள் 'சிவசு'வை பெத்தவுங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.


r

Tuesday, August 10, 2004

நான் கொஞ்சம் வசதியான ஆளுங்க...!!!

'சும்மா வெட்டியாவே எழுதிட்டிருக்ககியே மாப்ள'ன்னு இங்க நம்ம தோழர்கள் ரொம்ப சடைஞ்சுக்கிறதால, இந்த தடவை கொஞ்சம் தத்துவத்தை கொட்டலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். அதுக்காக ஒரு கதை சொல்ல போறேன்....
(இதையெல்லம் தொகுத்து பிற்காலத்தில 'ராசாவின் தத்துவமுத்துக்கள்'ன்னு ஒரு புஸ்தகம் போடலாம்னு ரோசனை..!!)

கதை:
ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் (நம்ம கவுண்டமனி சொல்லுவாரே 'கடலைஉடைக்கிற மெஷின் வெச்சிருக்கிறவனெல்லாம் தொழிலதிபர்ங்கிறாண்டா'ன்னு அந்த மாதிரி இல்லை.. நிஜம்மாலுமே பெர்ர்ரிய தொழிலதிபர்) செல்வசெழிப்புல வளர்ந்த அவரோட செல்லப்பையனை, ஏழைகளோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க, (எங்க ஊரு மாதிரி..!) ஒரு கிராமத்துக்கு அனுப்பி வச்சிருக்காரு. அந்த பையனும் கிராமத்துக்கு போய் ஒரு ரெண்டு நாள் தங்கியிருந்து சுத்திபார்த்துட்டு வந்திருக்கான்.(என்னை மாதிரி அப்பா பேச்சு கேட்டு நடக்குற சமத்து பையன் போல. :-)...)
சுத்திபார்த்துட்டு வந்த பையன்கிட்ட அவுங்க அப்பா "என்ன தம்பி எல்லாம் சுத்தி பாத்தியா? எப்படி இருந்தது?"ன்னு கேக்க.. பையனும் "ரொம்ப நல்ல இருந்ததுங்ப்பா"ன்னு சொல்லியிருக்கான்.
"ரெண்டு நாள் தங்கியிருந்து சுத்தி பார்த்து என்ன கண்ணு தெரிஞ்சுகிட்ட?"ன்னு அவரும் ஆர்வாமா கேட்டிருக்காரு..
அதுக்கு அந்த பையன் " நம்ம வூட்டுல ஒரே ஒரு நாய் வச்சிருக்கோம், ஆனா அங்கேயெல்லாம் வீதி பூரா ஏகப்பட்டா நாய்க சுத்துது (அதுல ஒன்னு தான் நம்ம நாமக்கல் ராஜாவை கவுத்திருக்குமோ??), நம்ம வூட்டுல தோட்டத்துக்கு நடுவால சின்னதா ஒரு குளம் வெட்டி வெச்சிருக்கோம், ஆனா அவுங்க வீதி பூராவும் இருக்கிற குளங்களுக்கு கரையே இல்லை, நம்ம வீட்டு திண்னை மாதிரி இல்லாம அவுங்க வீட்டுகள்ல ரோட்டு வரைக்கும் திண்னை இருக்குது, நம்ம வீட்டுக்கெல்லாம் நம்ம தனியா கரண்ட் கனக்க்ஷன் வாங்கி பணம் கட்டுறோம் ஆனா அவுங்களுக்கு எல்லாம் அரசாங்கமே நம்ம தோட்டத்துல இருக்கிற மாதிரி மஞ்சலைட் போட்டு குடுத்திருக்கு, உங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லனும்ப்பா, நாம எவ்வளவு ஏழைங்கறதை நீங்க எனக்கு புரிய வச்சுட்டீங்க"ன்னு சொன்னான், இதை கேட்ட நம்ம தொழிலதிபர் வாயடைச்சு போய் நின்னுட்டாராம்.

இதைத்தான் பெரியவங்க.."உங்களோட வசதிங்கிறது உங்ககிட்ட இருக்கிற பொருளோட பணமதிப்புல இல்லை, பணத்துக்காக நீங்க எதை விற்க தயாரா இல்லையோ அதுல தான் இருக்கு"ன்னு சொல்றாங்க.
(எங்கயோ படிச்ச மாதிரி இருக்கா??.. அடப்போங்க ஷிவ்கேரா'வே அடுத்தவங்க எழுத்தை தடவி (!) எழுதறாராமா .. நான் எழுதக்கூடாதா??)
மேல சொன்ன சங்கதி பிரகாரம் பார்த்தா... நிஜம்மாலுமே நான் ரொம்ப வசதியான ஆளுங்க..!!!

ஒரு குறிப்பு:
நெல்லுக்கு பாயற தண்ணி புல்லுக்கும் பாயும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வலைவலம் பகுதியில இந்த பதிவு பத்தி நம்ம சந்திரவதனாக்கா ஒரு வார்த்தை எழுதினாலும் எழுதினாங்க, சும்மா 'ஈ'யாடிட்டுருந்த நம்ம பதிவோட visitor count, திடீர்ன்னு எகிரிடுச்சு.... எல்லாம் நேரம்..ம்.ம்,
(இந்த நேரத்தில அவார்ட் வாங்கின பெரியவங்க சொல்ற மாதிரி.. "இப்பத்தான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கிடைச்சதை தக்க வச்சுகனுமே, எம்மேல ரொம்ப பொறுப்பு ஏறிட்டதா நினைக்கிறே"ன்னெல்லம் கொஞ்சம் பிலில் காட்டலாம்னு எனக்கும் ஆசை தான்.. ஆனா எங்க கல் எடுத்து வீசி மண்டைய பொளந்திருவீங்களோங்கிற பயத்துல 'கப்சிப்')....

Sunday, August 8, 2004

ஒரு வித்தியாசமான பதிவு..!!!

என்ன எழுதறதுன்னு யோசிச்சுகிட்டே நிறையா வலைப்பூக்களை வாசம் பார்த்ததில.. எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்துல 'எனக்கு பிடித்தவை' அல்லது 'எனக்கு பிடித்த தருணங்கள்'ன்னு ஒரு பதிவு செஞ்சிருக்காங்க (இப்பத்தான் வேலை வெட்டியில்லாமல் வலை மேய்பவர்கள்ன்னு ஒரு பிரிவு இருக்கிறதா நம்ம 'நியோ' வலைப்பூவில சொல்லியிருக்காரு, அதுக்கு ஆதாரம் கிடைச்சிருச்சா!!).....
சரி, நாம தான் ரொம்ப வித்தியாசமான ஆளாச்சே(என்ன சிரிப்பு..??.. ம்.. எல்லா சினிமாக்காரங்களும் படம் ரிலீசு பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் சொல்றாங்க.. படம் வந்தா ஒரு வெங்காயமும் வித்தியாசம் இருக்கறது இல்ல.. அது மாதிரித்தான் இதுவும் .. சும்மா ஒரு விளம்பரம்....) அதுனால நமக்கு புடிச்சதெல்லாம் லிஸ்ட் போடுறதுக்கு முன்னாடி 'எனக்கு பிடிக்காதவை/பிடிக்காத தருணங்கள்'ன்னு ஒரு பதிவு எழுதியிருவோம்னு முடிவு செஞ்சு.....

எனக்கு பிடிக்காதவை:
1. தினமும் ஷேவ் செஞ்சுக்கறது. ரொம்ப பேஜார் புடிச்ச வேலைங்க இது.. ஒரு நாள் ஷேவ் பண்ணாட்டியும்.. "என்ன பங்காளி டல்லா இருக்கே"ன்னு ஆரம்பிக்குற என்னோட ஒண்னு விட்ட அண்ணன்ல இருந்து.. உரக்கடை முதலியார் வரைக்கும் பதில் சொல்லி தீராம, வெறுப்போட தினமும் செய்யிர வேலை.. (படிக்கிற காலத்துல சந்தோஷமா தாடி விட்டுட்டு சுத்துனது ..ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!)
2. சில நேரங்கல்ல கரெக்ட்டான நேரத்துக்கு கிளம்பிடுற 'நீலகிரி எக்ஸ்ப்பிரஸ்' (நாம லேட்டா போகும் போது மட்டும் அவுரு கரெக்ட்டா கிளம்பிடுவாரு.. )
3. நல்லா ஒரு விடைக்கோழி அடிச்சு, பெரியாத்தா புண்ணியத்துல ஒரு புடிபுடிச்சுட்டு தூங்ககுற ஞாயித்துகிழமை மத்தியானம் வர்ற ராங்கால்கள். ( நல்ல தூக்கம் கலைஞ்சு போய் போன் எடுத்தா யார் பேசாறாங்கன்னு தெரியாமலே 'நான்தான் பேசுரேன்'னு ஆரம்பிக்குற ஆளுக மட்டும் என் கையில கிடைச்சா......!@$$@!)
4. எப்ப பாரு யாரவது ஒரு பொண்ணு நிறையா நகை போட்டுகிட்டு (ஒரு கூலிங்கிளாசஸ் வேற!!) லேடி நம்பியார் மாதிரி வசனம் பேசுற.. டி.வி சீரியல்கள். (இதுக்கு பயந்துகிட்டு தான் நான் ராத்திரி 10 மணி வரைக்கு வீட்டுக்கே போறதில்லை.. சத்தியமா . வேற ஒரு காரணம் எதுவும் இல்லை :-) )
5. நேரம் காலம் இல்லாம.. எப்பப்பாரு சூரியன் எப்.எம்'ல எதாவது ஒரு போன்'இன். நிகழ்ச்சியை சத்தமா அலற விட்டுடிட்டு டி.வி.எஸ்'ல பறக்குற எங்க ஊரு மைனர்கள். (இந்த மொபெட்டுல ரேடியோ மாட்டிக்கிற ஸ்டைல யாருங்க கணடுபுடிச்சாங்க)
6. 3 ஜோக்கர் கையில இருந்தும், 4-5 ரவுண்ட் போயும், ஒரிஜனல் சேராமா ஆட்டம் காட்டும் ரம்மியாட்டம் ( எனக்கு மட்டும் எனுங்க இப்படி.. ச்சே..நமக்கு எப்பவுமே அப்படி ஒரு ராசி..!!!)

இப்படி பல விஷயம் இருக்குதுங்க......
எங்க ஊருபக்கமெல்லாம் 'கொங்க'மழை சும்மா விடாம அடிச்சுட்டுருக்கு,
"வெட்டாப்பு விட்ட நேரத்தில காய் புடுங்கி போட்டுரலாம்ன்னு பார்த்தா.. இவன் எங்க கானாமபோயிட்டான்"ன்னு எங்கய்யன் குரல் வெளிய கேக்குது.. அதுனால இப்போதைக்கு.. நீங்க தப்பிச்சுடீங்க.. காய் புடுங்கி பொட்டுட்டு வந்ததும் மீண்டும் தொடரும்.... (இந்த மாதிரி நேரத்துல எங்கய்யன் குரல் கூட.... பிடிக்காதவை லிஸ்ட்டுல சேர்க்க வேண்டிய விஷயம் தான்)

நில்..!! ஜமாய்..!! செல்..!!

நில்..!! ஜமாய்..!! செல்..!!
சும்மா..
நாமளும் படப்பதிவு செஞ்சதா ஒரு வரலாறு(?) இருக்கட்டுமேன்னு ஒரு பதிவு..

Thursday, August 5, 2004

ஒரு கணவன் மனைவியின் டைரி குறிப்பு..!!!

ஏன்தான் இந்த பொண்ணுக வாழ்க்கை மட்டும், பசங்க வாழ்க்கை மாதிரி இல்லாம, அதிகம் குழப்பமும், புலம்பலுமாவே இருக்குன்னு ரொம்ப நாளா யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் .. அதுக்கு ஒரு விடையே கிடைக்கல.., நானும் எருமைத்தயிர கரைச்சு ஒரு புடிபுடிச்சுட்டு, வேப்ப மர நிழல்ல கயித்து கட்டில்ல போட்டு, மல்லாக்க படுத்துட்டு பல காலமா யோசிக்கிறேன்..ம்ஹூம்..நம்ம புத்திக்கு ஒரு இழவும் விளங்கலை.. எங்க ஊரு மணியகாரர்'ல இருந்து எங்க தோட்டத்துல சாணி அள்ளுற சின்னான் வரைக்கு எல்லார்கிட்டயும் பேசி பார்த்துட்டேன்.. ஒன்னும் புரியல,, யாருக்கும் இதுக்கு காரணம் தெரியல...
ரொம்ப நாளா இருந்த இந்த பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சுருச்சு..
நேத்து எத்தேசையா ஒரு புருஷன்-பொஞ்சாதியோட டயிரியை படிச்சு பார்த்தேன்.(சரி.சரி...திருட்டுதனமாத்தான்!!.. தேவைப்பட்டா பொய் சொல்லலாம்னு வள்ளுவரே சொல்லியிருக்கரு, நான் சொன்னா மட்டும் என்ன நக்கலா ஒரு சிரிப்பு!!)
இதோ அந்த டையிரிலிருந்து .....

---------------------------
மனைவியின் டயிரி:
3/8/04


என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு, ஒரே மூட் அவுட்டா இருக்காரு, கேட்டா ஒன்னுமில்லைங்கிறாரு,
நான் எதாவது தப்பு பண்ணியிருப்பனோ??, அதை கேட்டாலும் அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறாரு,
வீட்டுக்கு திரும்பி வரும்போது எவ்ளோ ஆசையா பேசினேன், அதுக்கு அவர் எதாவது பேசியிருக்கலாம், சும்மா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு இருக்காரு,
ஏந்தான் இப்படி இருக்காரோ, எனக்கு புரியவேயில்லை.. ஆனா ஒன்னு அவருக்கு எம்மேல பிரியம் இல்லைன்னு மட்டும் தெரியுது..
வீட்டுக்கு வந்ததும் அதே கதை தான், அவர் பாட்டுக்கு டி.வியை போட்டு உக்காந்த்துட்டாரு, நானும் எவ்ளோ நேரம் பக்கத்துல உக்காந்த்திருந்தேன், ஆன அவர் என்னை கண்டுக்கவே இல்லைஎனக்கு என்னமோ அவர் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி இருக்கு. ஒரு 15 நிமிஷம் டி.வி பார்த்துட்டு அப்புறம் நான் வந்து படுத்திட்டேன். அவரும் ஒரு 10 நிமிஷத்தில வந்து படுத்துட்டாரு, என்னால தாங்க முடியல, அப்படி என்னதான் பிரச்சனைன்னு கேக்கலாம்னு முடிவு எடுத்து அவர் பக்கம் திரும்பினா, அவர் சுகமா தூங்கிறாரு....
எனக்கு ஒரே அழுகையா வந்துது, ராத்திரி பூராவும் அமைதியா அழுதிட்டு இருந்தேன்..அப்புறம் எப்போ தூங்கினேன்னு தெரியல...
எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது, அவர் நெனைப்பு வெற எங்கயோ இருக்கு, அவருக்கு எம்மேல அக்கறையே இல்லை..
என் வாழ்க்கையே சூனியமாகி போச்சு....

கணவனின் டயிரி:
3/8/04


இன்னைக்கு மேட்ச்சுல இண்டியா தோத்திருச்சு...ச்சே.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இப்படி அநியாயமா சொதப்பி தோத்துடானுகளே....!!
---------------------------

இதை படிச்சதும்.. நான் ஒரு தெளிவுக்கு வந்துட்டேன்.. நீங்க..????

Monday, August 2, 2004

சில விமர்சனங்கள் !!

சில விமர்சனங்கள் !!
சில கேள்விகள்!!
சில தீர்க்கதரிசனங்கள்!!
இந்த மூணுல எதை தலைப்பா வைக்கறதுன்னு பயங்கர குழப்பத்துக்கப்புறம்,
எண், கனித, நாடி, கைரேகை, முகரேகை, வாஸ்த்து (நம்ம ஊரு முறை, சைனீஸ் முறை ரெண்டும்!!), 'ன்னு எல்லா வகை ஜோஸியத்ததையும் பார்த்து (கிளி ஜோஸியம் மட்டும் விட்டு போச்சு.. மன்னிச்சுக்குங்க!!), கடைசியா எங்க ஊரு மாரியம்மன் கோவில்ல பூக்கேட்டு சில விமர்சனங்கள் !! அப்படிங்கிற இந்த தலைப்பை வெச்சிருக்கேன் (யப்பா!! இதுக்கே மூச்சு வாங்குது..)

போனதடவை கடைசியா கேள்வியை சொன்னது மாதிரி இல்லாம .. இந்த தடவை ஒரே கேள்விகள் தான் போங்க... ஆனா பதில் மட்டும் கடைசியா!!


கேள்வி 1:
பள்ளிகூடத்தில ஒழுங்கா கணக்கு போடாம "இந்த சாதாரன கணக்கு கூட உன்னால போடமுடியலயே, நீயெல்லம் வாழ்க்கையில எந்த நேரத்திலும் உருப்படவே மாட்டே"ன்னு டீச்சரி கிட்ட பேச்சு வாங்கின பையன், பிற்காலத்தில பெரிய விஞ்ஞானி ஆயிட்டராம்.. யாரு அந்த பையன்??

கேள்வி 2:
நாலு வயசுல நிமோனியா காய்ச்சல் வந்து, இடது கால் பாதிக்கப்பட்டு கம்பி கட்டி நடந்துட்டு இருந்த புள்ள, திடீர்ன்னு ஒரு 13 வயசுல கம்பிய கழட்டி வீசீட்டு இனிமேல் நான் இப்படியே நடப்பேன்னு சொன்னதோட மட்டுமில்லாம ஒட்டபந்தயங்களிலுல் கலந்துக்க ஆரம்பிச்சா. கொஞ்ச காலத்தில் தான் ஓடுன எல்லா பந்தயதிலும் அந்த புள்ளையே ஜெயிச்சதா சரித்திரம் சொல்லுது.. யாரு அந்த பொண்னு??

கேள்வி 3:
1940ல செஸ்டெர்கார்ல்ஸன்'னு ஒருத்தர் அவரோட கண்டுபிடிப்பை எடுத்துகிட்டு அமேரிக்காவுல இருக்கிற பெரிய பெரிய கம்பெனிக்கு போனாரு, கிட்டத்தட்ட ஒரு 20 கம்பெனிக்காரங்க அவரோட கண்டுபிடிப்பை ஒதுக்கீட்டாங்க, அப்புரம் ஹலாய்ட்'ன்னு நியுயார்க்'ல ஒரு சின்ன கம்பெனி அவரோட கண்டுபிடிப்பை விலை கொடுத்து வாங்கிருச்சு, அதை சந்தையில அறிமுகம் செஞ்சு, பின்னாடி ஹலாய்ட்'ங்கிர அவுங்க கம்பெனிய அந்த கண்டுபிடிப்பு பேருக்கே மாத்திட்டாங்க... அந்த கம்பெனி பேரு என்ன??

கேள்வி 4:
1962ல 4 சின்ன பசங்க 'டெக்காரெகார்டிங்' கம்பெனியில அவுங்களோட முதல் record audition(இதை எப்படீங்க தமிழ்ல சொல்றது..- அய்யா ஈழநாதன் please help!! குரல்வளபரிட்ச்சை'ன்னு சொல்லலாமா??) முடிஞ்சதும், அங்க இருந்த ஒருத்தர் சொன்னாரு 'என்னமோ ஆளுக்கு ஒரு கிதார வெச்சுகீட்டு சும்மா எதோ ச்வ்ய்ண்ட் உடுறானுகாப்பா, இது போணியாகாது'.. யாரு அந்த 4 சின்ன பசங்க??

கேள்வி 5:
ரேடியோவில செய்தி வாசிக்க போய், 'இந்த குரலையெல்லாம் மக்கள் கேக்க பிரியபடமாட்டங்க, அதுவும் இப்படி ஒரு நீளமான பேரு வெச்சுகிட்டு பிரபலம் ஆக ஏம்ப்பா நீ ஆசப்படுறது தப்பு'ன்னு, விமர்சணம் செய்யப்ப்ட்டா ஆளு யாரு?

கேள்வி 6:
1944'ல ஒரு மாடாலிங் ஏஜன்சிக்கு வேலைகேட்டு போய்,' நீ கம்முன்னு செக்ரட்டரி வேலை கத்துக்கோ, இல்லை கல்யாணம் பன்னிக்கோ, நீ எல்லாம் மாடலிங்க்கு லாயக்கு இல்லை'ன்னு அறிவுறை வாங்கிட்டு வந்தது யாரு?

கேள்வி 7:
1954'ல ஒரு இசைசங்கத்துல இவர் பாடுன முதல் கச்சேரியோட வெளியனுப்பினதுமில்லாம, அந்த மெனேஜர் கிட்ட 'நீ எல்லாம் லாரி ஓட்டத்தான் லாயக்கு'ன்னு பாராட்டு வாங்குனது யாரு?

கேள்வி 8:
தொலைத்தொடர்ப்புக்கு இவர் கண்டுபிடிச்சதை பார்த்துட்டு ரூதர்ஃபோர்ட் (அப்போதைய அமேரிக்க ஜனாதிபதி) ' அற்புதமான கண்டுபிடிப்பு, ஆனா யாரு இதை உபயோகப்படுத்தபோறங்க'ன்னு சொன்னராம். யாரு அவரு, அவர் என்ன கண்டுபுடிச்சாரு?
பதில் 1:
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (இவரே கணக்குல வீக்குதானா, ஸ்கூல் படிக்கும் போது தெரியாம போச்சு!!!)

பதில் 2:
3 தடவை ஒலிம்பிக்குல தங்கம் ஜெயிச்ச 'வில்மா ருடொல்ஃப்'

பதில் 3:
அந்த கம்பெனி 'ஜெராக்ஸ் கார்ப்பரேஷன், அந்த கண்டுபிடிப்பு தான் 'எலெக்ட்ரோஸ்டேட் பேப்பர் காப்பியிங்'

பதில் 4: அந்த நாலு சின்ன பசங்களைத்தான் பின்னாடி உலகம் 'பீட்டில்ஸ்'ன்னு கொண்டாடுச்சு (இப்பவும் அடிக்கடி poggo சேனல்ல பாட்டு பொடறாங்க)

பதில் 5:
அமித்தாப்பச்சன் (இவரு எகிப்து போனப்போ அந்த நாட்டோட பாதி மிலிட்டரி இவரோட பாதுகாப்புக்கு போச்சாமே??)

பதில் 6: இன்னைக்கு வரைக்கும் காத்துல பாவாடை பறக்குறதும் அதை ஹீரோயின் ஸ்டைலா புடிக்கறதும் எல்லா படதுலயும் வருதே.. அந்த சீனுக்கு பிதாமகள் மார்லின்மன்ரோ

பதில் 7:
எல்விஸ்ப்ரஸ்லீ (நம்ம ஊரு 'ஐயம் ஏ டிஸ்கோ டான்சர்களோட பிதாமகன்)

பதில் 8:
டெலிஃபோன் கண்டுபுடிச்ச 'அலக்ஸாண்டர் கிரகாம் பெல்'க்கு கிடைச்ச பாராட்டு அது.

நம்ம ஆளுக தீர்க்கதரிசனத்தை நினைச்சா அப்படியே எனக்கு புல்லரிக்குது போங்க.. இந்த மாதிரி விமர்சனங்களால எத்தனை பேரு வீணாப்போனங்களோ???

என்னைக்கூட இப்படித்தான்.. எங்கய்யன் " நீ எல்லாம் எங்க உருப்படப்போற, மாடு மேய்க்க கூட லயக்கு இல்லாத ஆளு நீ" அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்காரு.. "சரித்திரம் நாளைக்கு உங்களுக்கு பதில் சொல்லும்"னு வீறாப்பா சொல்லீட்டு திரியறேன்... இதுக்கு நடுவால எங்கம்மா வேற "டேய் உங்கய்யனுக்கு கருநாக்கு, அவரு சொன்னா பலிச்சுரும்டா"ன்னு பயங்காட்டுறாங்க....

ஒன்னுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது

Thursday, July 29, 2004

விடை கிடைச்சிருச்சேய்...!!!!

இத்தனை நாளா எம்மனசை அரிச்சுகிட்டு இருந்த அந்த கேள்விக்கு விடை கிடச்சிருச்சு. அதை உங்களுக்கும் சொல்லாம்னுதான் இந்த பதிவு. எந்த கேள்வின்னு சொல்லுடா மடையாங்கரீங்களா?? அதை தான சொல்ல வர்றேன், அதுக்குள்ள அவசரப்படுரீங்களே, கேள்வியை விட, அதுக்கு எப்படி விடை கிடைச்சுதுங்கிரது தான் முக்கியம். அதுனால அங்கே இருந்து வர்ரேன், கடைசியா கேள்வி என்னன்னு பார்ப்போம்..(இந்த இடத்துல ஒரு கொசுவர்த்தி சுருள் சுத்துர மாதிரி எபக்ட்டு குடுத்துட்டு மேற்க்கொண்டு படிங்க..)
நேத்து நம்ம காலேஜ் கூட்டாளி ஒருத்தன பார்த்து பேசிட்டு இருந்தேன் . ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் ஊருப்பக்கம் வர்ரான். philadelphia'ல உக்காந்து கணிப்பொறிய பிரிச்சு மேயுற வேலை, அவுங்க அப்புச்சி பாஷையில சொன்னா 'அமேரிக்காவுல கம்பிஓட்டுற எஞ்சினீரா இருக்கான்'. கொஞ்சம் என் கலர்ல இருந்தவன் இப்போ சனிக்கிழமையன்னைக்கு கோயமுத்தூர் க்ராஸ் கட் ரோட்டுல ஃபிகர் பார்க்க போற காலேஜ் பசங்க மாதிரி சும்மா பளபள'ன்னு ஜம்முன்னு ஆயிட்டான் (அதெப்படி சனிக்கிழமை மட்டும், க்ராஸ்கட் ரோடு வர்ற பசங்க அவ்ளோ கலக்கலா இருக்காங்க??.. சரி அந்த மேட்டர் இன்னொரு பதிவுக்கு வெச்சுக்குவோம்..!!). வந்தவங்கூட பேசுன மேட்டர்ல ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டன் பாருங்க.. ச்சே இதுதானுங்க, இந்த எழுத்தாளர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். எதை சொல்ல வந்தமோ அதைவிட்டுபுட்டு எல்லா விஷயத்தையும் சொல்றது. சரி விஷயத்துக்கு வர்ரேன்.
ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்னு சொல்றதுனால தப்பா எடுத்துக்கதீங்க.. நேர்ல பார்க்கிறது மட்டும் தான் ரெண்டு வருஷம் கழிச்சு, ஆனா தினம் ஒரு தடவையாவது யாஹூ'ல எப்படிடா இருக்கேன்னு கேட்டுகிட்டு தான் இருப்போம், அதுனால, ரொம்ப நாள் கழிச்சு வெளியூருல இருந்து வர்றவங்களை பார்த்ததும் 'எப்படிரா இருக்கிற? உடம்பு பாதியா போச்சு, ஒழுங்க சாப்பிடுறயா? அங்கேல்லாம் சோறு கிடைக்குமா?ன்னு அடுக்கு அடுக்கா கேள்வி கேக்குறதோ, இல்லை, வந்தவுங்க 'நம்ம ஊரு இன்னும் மாறவே இல்ல மாப்ள.. அங்கேயெல்லம் வந்து பாரு'ன்னு ஆரம்பிச்சு அவுங்க ஊரு பத்தி அடிச்சு விடுறத நம்மளும் வாய தொறந்துட்டு(கொஞ்சம் பொறாமாயோட..!) கேக்குற வாய்ப்போ இல்லாம போச்சு. 'பிரயாணம் சொளக்கியமா இருந்துதா?, பிளைட்டுல எதாவது ..ம்.ம் ??, கஸ்டம்ஸ்ல எவ்ளோ புடுங்கினாங்க?,'ங்கிரதை தவிற வேற ஒன்னும் புதுசா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது இல்லாம போச்சு. (எனக்கு என்ன வங்கிட்டு வந்தேன்னு கேக்க மாட்டனே, கேட்டா கிருபாஷங்கர் அண்ணாச்சி மரத்தடியில உக்காந்து பீல் ஆகிடுவாரு)
'அப்ப என்னத்ததாண்ட பேசுனீங்க', சும்மா வெட்டியா அதையும் இதையும் சொல்லிட்டு இருக்கிற..நற நற.... ரொம்ப பல்ல கடிக்காதீங்க, அதத்தான சொல்ல வர்றேன்..
தினம் தினம் யாஹூல பேசுனாலும், மாசம் ஒருதடவை போன்ல கூப்பிட்டு பேசுனாலும், நேர்ல பார்த்தா பேச பல விஷயம் இருக்குதானுங்களே..!! நாங்களும் பேசினோம், பேசினோம், சூர்யன் எப்.எம்'ல 'கிட்டுமாமா-சூசிமாமி' போடும் போது ஆரம்பிச்ச பேச்சு, கடிநேரம் தாண்டி, இல்லத்தரசிகள் நேரம், சிறுவர் நேரம், காதலர்கள் நேரம்ன்னு எல்லா நேரத்தையும் தாண்டி, சென்னை சில்க்ஸ்'சின் என்றும் இனியவை முடியற வரைக்கும் பேசிட்டே இருந்தோம். இந்த பழங்கதை பேசுறதுங்கிறது அப்படி ஒரு சுகமான விஷயம் போங்க, அதுவும் கல்லூரி கால லூட்டிகளை அசை போடுறது எப்பவுமே சலிக்காது போல. இதுக்கும் நாங்க படிச்சு முடிச்சு ரொம்ப நாளெல்லாம் ஆகுல, இப்பத்தான், ஒரு 5 வருஷம் தான் ஆச்சு, (இன்னும், முன்னாடி போற வண்டியில இருக்கிற பிகர பார்க்க போய் கீழே விழுந்து கைய ஒடிச்சுகிர வயசுல தான் இருக்கோம்!!)
எல்லாம் பேசிட்டு, கடைசியா பொழுதோட வூட்டுக்கு போனதும், எங்கம்மா 'அப்படி என்னத்தடா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீங்க, அதுவும் பொழுது சாயுர நேரத்தில பாலத்துல உக்காந்துட்டு ?'ன்னு கேட்டுது, நானும் யோசிச்சு பார்த்தேன், என்ன தான் பேசுனோம், 'முதன்முதலா கோவை குற்றாலம் போய் பீர் அடிச்சதுல இருந்து, TCS IPOவிடுறது வரைக்கும்' பேசியிருக்கோம், என்னன்னு சொல்றது 'பேசுனோம், அவ்ளோதான்'ன்னுட்டு போய்ட்டேன். அதுக்கு எங்கம்மா 'ஆமா வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருக்கறது தான் உங்களுக்கு ஸ்கூல் போற காலத்துல இருந்தே வழக்கம் ஆச்சே'ன்னுட்டே கொல்லை பக்கம் மாட்டுக்கு தீவனம் வைக்க போயிட்டங்க. சடார்ன்னு, அப்பத்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது, , தினம் தினம் எங்க ஊரு மாரியாத்தா கோயில தாண்டி போகும்போதெல்லம், அங்க கோவில் திண்ணையில உக்காந்து பேசிட்டு இருக்கிற பெருசுகளை பார்க்கும் போதெல்லாம், அந்த கேள்வி என்மனசுகுள்ள தோணும்.'அப்படி பொழுதுக்கும் என்னத்த தான் இதுக பேசும்?ன்னு..(அப்பா ஒருவழியா விஷயத்துக்கு வந்தாச்சு!!). இப்போ அதுக்கு விடை கிடைச்சுருச்சு.. அதுக்கு பேரு 'வெட்டி அரட்டை'. இப்பத்தான் எனமனசுல ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குதுங்க, இத்தனை நாளா என்மனசை அரிச்சுட்டு இருந்த அந்த கேள்விக்கு விடை கிடச்சிருச்சு. (மேலே சொன்னதை அப்படியே நடிகர்திலகம் செவாலியே சிவாஜி கணேசன் குரல்ல படிச்சுக்கோங்க) அதை உங்களுக்கும் சொல்லாம்னுதான் இந்த பதிவு. அப்பா எப்படியோ கஷ்டப்பட்டு சொல்லி முடிச்சுட்டேன்.. போய்டு மறுக்கா வரனுங்க..!!!

( அமேரிக்கா ரிட்டர்ன் இஞ்சினீயர்ல ஆரம்பிச்சு, சூரியன் எப்.எம் வழியா, க்ராஸ்கட் ரோட்டுக்கு போய், கல்லூரி வாழ்க்கை பத்தியெல்லாம் பேசிட்டு வந்து, இப்படி சப்புன்னு முடிச்சுட்டியேடா பாவி, இதுக்கா நாங்க இதை படிசோம்னு கோவப்படுரவங்க எல்லாரும், இதுக்கு முன்னாடி நான் எழுதின பதிவை பாருங்கோவ்....)

ஒன்னுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

Sunday, July 25, 2004

யாரும் இதை படிக்காதீங்க..!!

இங்கே உருப்படியான விஷயம் எதுவும் இல்லீங்க.. அதுனால மேற்கொண்டு இந்த பதிவை படிக்காதீங்க..


அட.. அதுதான் சொல்றேனில்ல..இது ஒன்னும் சுவரசியமான எழுத்தில்லீங்க..யாரும் இதை படிக்கறதுமில்லை, இதை படிக்கனும்னு நினைக்கறதுமில்லீங்க. இதை படிக்கறதுக்காக உங்க பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க..அய்யோ நான் சொல்றத ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கரீங்க, படிக்கதீங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க இன்னும் படிச்சுட்டே இருக்கறீங்க.. எனுங்க, உங்க நேரத்தை இப்படி ஒரு உதவாக்கரை விஷயத்தை படிக்க செலவு செய்யரீங்க?. எப்படி இந்த மாதிரி ஒரு வெட்டியான விஷயத்தை உங்க மனசு ஏத்துக்குது? உங்களுக்கே தெரியலையா, இது வெறும் குழப்பமான,ஆகாவலி விஷயம்ன்னு?..அட போங்க நீங்க ஒன்னும் கேக்குற மாதிரி இல்லை, நான் உங்களுக்காகத்தான் இவ்ளோ சொல்றேன், உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், இதையெல்லாம் படிக்கதீங்க. தயவு செஞ்சு வேண்டாங்க. இது சுத்தமா ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத, ஒரு அர்த்தமும் இல்லாத குப்பை, இதைப்போய் எதுக்கு இப்படி நான் சொல்ல சொல்ல படிக்கறீங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது போங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு விடாம இன்னும் இதை படிச்சுட்டே இருக்கறீங்க.


ஓ!! நீங்க யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ரொம்ப அடம்புடிக்கிர ஆளு போல, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேங்கரீங்க, நான் சொல்றத காதுலயே போட்டுக்க மாட்டீங்க போல??.. இது உன்மையிலயே படு முட்டாள்தனமுங்க, வடிகட்டுன கிறுக்குதனமுங்க..... சரி!!. எப்படியோ போங்க!!.. நான் எதுக்கு என்னோட உருப்படியான நேரத்தை இந்த மாதிரி ஒரு அளுகிட்ட வெட்டியா புத்திசொல்லிட்டு இருக்கனும், அதுவும் நான் சொல்றத கேக்கவே மாட்டேன்னு அடம் புடிக்கற ஆளுகிட்ட நான் எதுக்காக கெஞ்சிட்டு இருக்கனும், அதுனால, இத்தோட சரி, இனி நான் உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்லப்போறதில்ல்.. படிக்கறதுன்னா படிங்க.. உங்க இஷ்டம் அது... ஆனா எனக்காக ஒரே ஒரு சகாயம் மட்டும் செய்யுங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இதை படிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..
 

Monday, July 19, 2004

எழுத்து திருட்டு..

இலக்கிய உலகத்தில தான் என் எழுத்தை அவர்(ன்) பேருல வெளியிட்டுடான், என் எழுத்தை அவர்(ன்) காப்பியடிச்சுட்டான்னு அடிக்கடி பரபரப்பு ஆகும் (பெரிய அடிதடி எல்லம் நடக்குது இந்த மேட்டருக்கு!!)..ஆனா அது இலக்கிய எழுத்துக்கு மட்டுமில்ல எல்லா வகை எழுத்துக்கும் பொருந்தும் போல இருக்குங்க.. உலகம் பூராவும் வியாபாரத்தில சக்க போடு போட்ட 'you can win' எழுதின நம்ம ஊரு 'ஷிவ்கேரா' இப்ப அப்படி ஒரு ப்ரச்சனையில மாட்டியிருக்காரு.. அவரு லேட்டஸ்டா எழுதி(!) வெளியிட்டுருக்கிற Freedom is Not Free'ங்கிற புஸ்தகம் தான் பல பிரச்சனைய கிளப்பிவிட்டுருக்கு.
அம்ரித்லால்'ன்னு ஒருத்தர், ரிட்டயரான நம்ம ஊரு ரயில்வே ஆபிசர், (இவரும் கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டு புஸ்தகம் எழுதியிருக்காரு,பாவம் நம்ம ஆளுக யாரும் பெருசா அதுக்கு ஆதரவு குடுக்கல). இருந்து இருந்தாப்புல ஒரு நாள் இவருக்கு நம்ம ஷிவ்கேர கிட்ட இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கு, இவரும் போய் பார்த்து பேசியிருக்காரு. அப்போ ஷிவ்கேர நம்ம பிற்காலத்தில 'ஒட்டுக்கா சேர்ந்து வேலை பார்ப்போம்'னு சொல்லியிருக்காரு, இவரும் தலைய ஆட்டிட்டு வந்திட்டாரு, அங்கே இருந்து வந்ததும்,வரும் போது ஷிவ்கேர இவருக்கு கிஃப்டா குடுத்த அவரோட Freedom is Not Free'ங்கிர புஸ்தகத்த படிச்சதும் தான் இந்த மனுஷனுக்கு ஷிவ்கேர 'ஒட்டுக்கா சேர்ந்து வேலை பார்ப்போம்'ன்னு சொன்னதோட அர்த்தம் புரிஞ்சிருக்கு.. அந்த புஸ்தகத்தில பல இடங்கள்ல, நம்ம அம்ரித்லால் ஒரு 9 வருஷத்துக்கு முன்னாடி எழுதி பெருசா விற்ப்பனையில சாதிக்காத India—Enough is Enough'ல இருந்து ரொம்ப சர்வ சாதரணமா ஷிவ்கேர பல மேட்டர சுட்டிருக்காரு, அதுவும் எந்த விதமான acknowledgement'ம் இல்லாம.. மேட்டர சுட்டது மட்டும் இல்லாம, அப்படியே வரிக்கு வரி 'ஈ-யடிச்சான் காப்பி' மாதிரி அம்ரித்லால் புஸ்தகத்தில எழுதினத அப்படியே அவரோட எழுத்தா எழுதியிருக்காரு.
அம்ரித்லால் பயங்கிர கடுப்பு ஆகி ஷிவ்கேரவோட அந்த புஸ்த்கத்த வெளியிட்ட McMillanக்கு 'நான் கோர்ட்டுக்கு போவேன்னு' காட்டமா ஒரு மெயில்'ல தட்டி விட்டிருக்காரு, அப்புறம் பல முயற்ச்சிக்கு பிறகு ஷிவ்கேர'வை கோர்ட்டுக்கு இழுக்காம இருக்க ஒரு பெரிய தொகைக்கு சமரசம் ஆகியிருக்காரு (25 லட்சம்ன்னு பேசிக்கிறாங்க!!)
இதுல ஷிவ்கேர என்ன சொல்றாரருன்னா, 'நான் அப்பப்ப படிக்கிற, கேள்விப்படுற, எனக்கா தோணுற விஷயம் எல்லாத்தையும் உடனே கம்ப்யூட்டருல ஏத்தி வெச்சுக்குவேன், இது என்னோட 25 வருஷ பழக்கம், அப்புறம் ஒரு புக் எழுதும் போது அந்த விஷயங்களை எல்லாம் ரெஃபர் பண்ணிப்பேன், அதுனால என்னோட எல்லா எழுத்துக்கும் நான் தனித்தனியா acknowledgement குடுக்கிறதுங்கிறது நடக்குர காரியம் இல்லை'ங்கிறார். இதுமட்டுமில்லாம இன்னும் ஒரு சமாச்சாரம் சொல்றார் 'பேடண்ட் வாங்காத எழுத்துல இருந்து எதாவது விஷயங்களை எடுத்து உபயோகப்படுத்தறது ஒன்னும் சட்ட ரீதியா தப்பு இல்லா'ங்கிறாரு.

ஊருல இருக்கவனுக்கு எல்லாம் எப்படி நேர்மையா முன்னுக்கு வர்றதுன்னு சொல்றதுக்கு புஸ்தகம் எழுதற ஆளு, அதெப்படிங்க இன்னொருத்தர் எழுத்த எடுத்து தன் பேருல எழுதிட்டு அது ஒன்னும் சட்டரீதியா தப்பு இல்லைன்னு, பெருமையா சொல்றாரு..???
ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..

இது பத்தி இன்னும் விலாவாரியா தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்க.. இங்க போய் பாருங்க
(acknowledgement'க்கு நல்ல தமிழ் வார்த்தை என்னன்னு யாரவது, ஈழநாதன் மாதிரி, விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..)


அஞ்சலி..!!

cry

பெரியவர்கள் செய்த அஜாக்கிரதைகளுக்கு, தங்கள் வாழ்க்கையை கருக்கிகொண்ட இளம் மொட்டுகளுக்கு

கண்ணீர் அஞ்சலி

Tuesday, July 13, 2004

கிருஷ்னபரமாத்மா - கம்யூனிசத்தின் தந்தை

மார்க்ஸ், லெனின், மாவோ, மாத்ரி கம்யூனிச தலைவர்களுக்கெல்லம் நம்ம கிருஷ்னபரமாத்மா முன்னோடின்னு நம்ம 'வாழும்கலை' ஷ்ரி ஷ்ரி ரவிஷங்கர் ஹிந்துஸ்த்தான்டைம்ஸ்'ல் Lord Krishna, the father of communism'னு ஒரு கட்டுரை எழுதியிருக்காருங்க(எங்க ஊர் பக்கம் இப்போ இவரோட வாழும் கலைப்பயிற்ச்சி, சத்சன்ங். எல்லாம் ரொம்ப பிரசித்தம்).
அவரு என்ன சொல்றாருன்னா..
"எல்லாரும் எல்லாம் சமமா கிடைக்கனும், தப்பு செய்யறவங்களுக்கு கடுமையான தண்டனை குடுக்கனும், இது மூலமா ஒரு சுயநலமில்லாத, மக்களை எந்த வகையிலும் ஒடுக்காத சமூகம் உருகவாகனும்ங்கிறது தான் கம்யூனிசத்தோட அடிப்படை. 5230 வருஷங்களுக்கு முன்னாடியே கிருஷ்னர்'ங்கிற அந்த வரலாற்று(/இதிகாசத்து) கதாபாத்திரத்தோட வாழ்க்கையும், அவரோட கருத்துகளை சொல்ற பகவத்கீதை'யும் அதே கருத்துகளை தான் வலியுறுத்துது, அதுனால கிருஷ்னர் தான் உண்மையில 'கம்யூனிசத்தின் தந்தை' அப்படீங்கிறார். கிருஷ்னர் தான் உண்மையில பல சமூக மாற்றங்களையும், வழிபாட்டு முறைகளில் பல புரட்ச்சிகளையும் கொண்டு வந்தார்ங்கிறார்." (அதென்னமோ இந்திரனுக்கு செஞ்சிட்டு இருந்த பலிகளை மாத்தி, கோவர்தன பூஜை'ங்கிறத கொண்டு வந்தார்ன்னு சொல்றார்-- இந்த மேட்டரைப்பத்தியெல்லம் எனக்கு ஒரு மண்ணும் தெரியாதுங்க!!).
இன்னும் இந்த மாதிரி நிறைய சொல்லியிருக்காருங்க..நடுவுல இன்னொன்னும் சொல்றாரு, "அதாவது மேலை நாடுகள்ல தான் மதநம்பிக்கைக்கு எதிரா விஞ்ஞானிக யாராவது எதாவது சொன்னா அவங்கள புடிச்சு கொடுமைபடுத்தறதெல்லம்.. நம்ம ஊருல (அதாவது இந்து மதத்தில).. அப்படியெல்லம் இல்லை..அந்த மாதிரி யாராவது சொன்னா அவங்கள உற்சாகப்படுதிருகாங்க.". அப்படிங்கிறார்.
அப்படியே சன்னமா சும்மா கம்யூனிசம் பேசறவங்களை ஒரு எத்து எத்தராரு..'இங்கே பல பேரு கம்யூனிசம் பேசிட்டு முதலாலித்துவ வாழ்க்கை வாழறாங்க அப்படிங்கிறார்.. (ச்சே.. ஏன்தான்..இந்த நேரத்தில புத்தக வெளியீட்டு விழாவில நம்ம தமிழினத்தலைவர் கருணாநிதி 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்'னு சொன்னது நினைப்புக்கு வருதோ!!)
இதெல்லாம் விட முடிவா அவரு ஒண்ணு சொல்லியிருக்கார் பாருங்க..'கேரளாவில குருவாயூருக்கு போற கம்யுனிஸ்ட்டுகளும், பெங்கால்ல துர்கா பூஜையில கலந்துக்கிற கம்யுனிஸ்ட்டுகளும் இனிமேல் அதுக்காக சங்கடப்படவேண்டாம்,, ஏன்னா அதுவும் கம்யூனிசம்தான்'ங்கிறார்
நமக்கு வழக்கம் போல ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..