Wednesday, October 20, 2004

ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!

(வர வர, இந்த தலைப்பு வைக்கிற சமாச்சாரத்துல ஏகப்பட்ட குழப்பம் வருதுங்க, ஆனாலும் இந்த மாதிரி யாருக்கும் புரியாம, எதோ பெரிய சமச்சாரம் இருக்கிற மாதிரி தலைப்பு வைக்கிறதுங்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது)

சினிமா:

வழக்கமா எதாவது நல்ல படம் வந்தா (ஒரு எதிர்ப்பார்ப்பு தான்), டக்குன்னு எந்த விமர்சனத்தையும் படிக்காம படத்தை பார்த்துட்டு, அப்புறம், படத்தை பத்தி நம்ம பெரியவங்க எல்லாரும் விமர்சனம் எழுதினதை படிச்சுட்டு, மறுபடியும் ஒருதடவை போய் அந்த படத்தை பார்க்கிறது நம்ம பழக்கம்ங்க. இந்த தடவை ஒரு பட விமர்சனத்தையும் காணோம், இந்த வீரப்பன் சமாச்சாரம் சூடா இருக்கிறதுனால இதை எல்லாரும் கிடப்புல போட்டுட்டாங்க போலிருக்குதுங்க.
7gr


செல்வராகவனின்' 7 G ரெயின்போ காலனி படத்துக்கு போயிருந்தனுங்க, ஏற்க்கனவே அவரோட 'துள்ளுவதோ இளமை' படம் புடிச்சுப்போய், அப்புறம் 'காதல்கொண்டேன்' பார்த்து ரொம்ப புடிச்சு போய் (இந்த படத்தை பார்க்க எங்க அப்பா, அம்மாவோட போனேன், அது ஒரு தனி சோகக்கதை!) 7gr பாட்டெல்லாம் கேட்டு, அதுனால கொஞ்சம் ஜாஸ்த்தி எதிர்ப்பார்ப்போட தியேட்டருல போய் உக்காந்தேன். சத்தியமா, தியேட்டருலதாங்க பார்த்தேன்! எங்க ஊருல எல்லாப்படமும் ரிலீஸ் தேதியன்னைக்கே சீ.டி. கிடைக்கும், ஆனாலும் சீ.டி'யில புது படம் பார்க்கிறதில்லைங்கிறது நம்ம கொள்கை. (சந்தடி சாக்குல நம்ம நேர்மையா கொஞ்சம் தம்பட்டமடிச்சாச்சு!!).. சரி படத்துக்கு வருவோம்.

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துக்கு, அடிப்பம்புல தண்ணியடிக்கிற (குடிக்கிறதண்ணிங்க!) பையன், அங்க வந்து குனிஞ்சு குடத்தை எடுக்கிற ஆன்ட்டிகளை பார்க்கிறது, கூட்டமான பஸ்ஸுல அடிச்சு புடிச்சு ஏறிட்டு பஸ் எடுக்கிரறதுக்கு முன்னாடி கீழ எறங்கிவந்து மத்த பசங்களை பெருமையா(!) பார்க்கிறதுன்னு.. போக, நமக்கு "ஆஹா! ஏற்க்கனவே ஷங்கரும், சுஜாதா'சாரும் பட்டது போதாதா, இவுங்களுமா?"ன்னு ஒரு பயம் வந்திருச்சு. ஆனா நேரம் போக போக படம் கொஞ்சம் அப்படியே வேற பாதையில போனதும் தான் நமக்கு கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் நம்ம விஜய் டி.வி. சலனம் 'ஷாலினி'யை சும்மா ரெண்டே ரெண்டு பிரேம்ல காமிச்சுட்டு அப்புரம் காமிக்கவே இல்லைங்கிறது கொஞ்சம் மன்சுக்கு கஷ்டமாத்தாங்க இருந்துச்சு.. சரி.. என்ன செய்ய்றது.. சென்ஸார்போர்ட்டோட சதி போல!

எல்லாம் வழக்கம் போல கொஞ்சம் பெரிய எடத்து பொண்ணை டாவடிக்கிற வயசு பையன் கதை தான்.. என்ன கொஞ்சம் நிஜமா! (நிஜத்துக்கு ரொம்ப பக்கமா?) நம்மளை சுத்தி நடக்கிற மாதிரி காமிச்சதுலதான் சாமர்த்தியம்.

எல்லாரும், ஏற்க்கனவே சோகமா இருக்கிற ஹீரோவை பாட்டு பாடுன்னு கிண்டல் செய்யும் போது, பையன் அப்படியே ரொம்ப பீலாகி கொஞ்ச நேரம் நின்னுட்டு டக்குன்னு 'கண் பேசும் பாஷைகள் புரிவதில்லை'ன்னு பாடுற சீனுல, தியேட்டருல, பாட்ஷா படத்துல ரஜினி 'உள்ளே போ'ன்னு சொல்லுவாரே, (ரஜினி படம் வேண்டாம்னு நினைச்சா, 'ரன்' படத்துல மாதவன் சுரங்க பாதையில ஓடிப்போய் ஷட்டரை மூடுவாரே அதை வச்சுக்கோங்க), அப்ப வர்ற மாதிரி விசிலும், கைதட்டலும் சும்மா கிளப்புது பாருங்க.., "நீங்க என்னதான் கதை கதைன்னு படம் எடுத்தாலும் நாங்க அதுலயும் ஹீரோயிஸம் கண்டுபுடிப்பமில்லை"னு நம்ம ஆளுக சொல்லாம சொல்றாங்கன்னு எனக்கு தோனுச்சுங்க.

அப்புறம், வழக்கமா, எப்பப்பாரு ராத்திரி பூரா கண்னு முழிச்சு படிச்சுட்டு, பயத்தோட காலேஜ் வர்ற படிப்பாளி பொண்ணு மாதிரியே முகத்தை வச்சுகிட்டு, எல்லா சீனுலயும் (டூயட் சீன்லயும்! - மதுர!) வர்ற சோனியா அகர்வால், இந்த படத்துல சும்மா சூப்பரா நடிச்சிருக்குது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துறதுல செம கலக்கல், இது கொஞ்சம் (எனக்கு) ஆச்சிரியமான விஷயம் தான்.

ஹீரொயின் பத்தி சொல்லிட்டு ஹீரொ பத்தி சொல்லாட்டி அப்புறம் என்னை தப்பா நினைச்சுகவீங்க, அதுனால.. ஹீரோ 'ரவிகிருஷ்னா'வும் நல்ல செஞ்சிருக்காரு, ஆனா வேற வேஷமெல்லாம் இவருக்கு பொருந்துமான்னு தெரியலை.. ஒரே ஒரு குறை.. கொஞ்சம் கண்ண மூஉடிட்டு இவர் பேசுறதை கேட்ட தனுஷ் பேசின மாத்ரியே இருக்குது (ஒரு வேளை செல்வராகவன் அப்படி பேச சொல்லியிருப்பாரோ?)
ஏன் இந்த மாதிரி நல்ல டைரக்டர்கள் எல்லாருமே (உ.ம். பாலா.) டிராஜெடியை மையமா வெச்சே படம் எடுக்கிறாங்க, ஒரு வேளை டிராஜெடியா படம் எடுத்தாத்தான், இந்த இலக்கியவாதிகளை சந்தோஷப்படுவாங்கன்னா?
அதுக்காக படத்துல ஒரேயடியா டிராஜடியும் கிடையாது.. காலையில 5 மணிக்கு ஆலாரம் வச்சுட்டு ஹீரோ அவரோட நண்பனை படாதபாடு படுத்தற சீனெல்லாம் காமெடிதான், ஆனா, கொஞ்சம் பழைய வாசனை வருது. (எத்தனை டிராஜெடியா படமெடுத்தாலும், பாலுமகேந்திரா படத்துல நடு நடுவால மெல்லிசா ஒரு காமெடி வருமே, அது மாதிரி கொஞ்சம் இருந்திருக்கலாம், அந்த வகையில பாலா கலக்கறாரு)

அப்பாயின்மென்ட் ஆர்டரை அப்பா(விஜயன்)கிட்ட போய் குடுத்ததும் நல்லதா நாலு வார்த்தை எதும் சொல்லாம, அப்புறம் தனியா போய் விஜயன் பையனை பத்தி பெருமையா பேசுறது, கொஞ்சம் 'உன்னால் முடியும் தம்பி' பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளைய ஞாபகப்படுத்தினாலும், அடுத்த நாள் காலைலயில அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவால நடக்கிற அந்த காட்சிகள்,ம்.. அதுவும் எந்த வசனமும் இல்லாம வெறும் விஷுவலாவே, ஒரு இயல்பான, சந்தோஷமான தடுமாற்றத்தை காட்டியிருக்கிறது கலக்கல்.

படத்தோட கதைய ஒரே வரியில சொல்லனும்னா, படத்துல வர்ற பாட்டு இருக்குதே "முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே"ன்னு, அதுதான்..

யாராவது சீக்கிரமா ஒரு விமர்சனம் எழுதுங்கய்யா. படத்தை மறுபடியும் பார்க்கனும் போல இருக்குது..

-----------------------
சந்திப்பு:

நம்ம துகள்கள் சத்தியராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தாருங்க. என்னை மறக்காம எனக்கு ஒரு மடல போட்டு, எனக்கு முகவரி எல்லாம் குடுத்தாரு (நம்ம வீட்டுக்கு 1 கிமி. தூரத்துல தான் இருந்திருக்காரு!), அவரை போய் பார்த்து நிறையா பேசனும்னு நினைச்சேன் (அப்படி ஒன்னும் உருப்படியா நாம பேசிறப்போறதில்லை, இருந்தாலும் அவர் எதாவது சொன்னா கேட்டுகிலாம்னு தான்!!), ஆனா நம்ம வேலைக்கு நடுவால எங்க முடியுது, அவரு கிளம்புற அவசரத்துல, கொட்டுற மழைக்கு நடுவால, ஒரு நடை போய் பார்த்து, ஒரு வணக்கம் போட்டுட்டு வந்தேன். (சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் குடுத்தாரு). அவரும் என்னைய பார்கனும்னு ஆசையா இருந்திருப்பாருப்பாரு(!) போல, ஆனா, என்னையா பார்த்ததும் பாவம், இவன் கிட்ட என்னத்த பேசறதுன்னு, ரொம்ப குழம்பி போயி.. (அப்புறம், நமக்கும் இலக்கியத்துக்கும் தான் பயங்கிர நெருக்கமாச்சே).. சிரிச்சுகிட்டே இருந்தாரு.
என்ன செய்யரீங்க, எங்க இருக்கரீங்க, குடும்பத்தை பத்தின்னு கொஞசம் பேசிட்டு வந்துட்டேன். அடுத்த தடவை வந்தா கண்டிப்பா பார்க்கலாம்னு சொல்லியிருக்காருங்க.. பார்ப்போம்..நல்லா எழுதரீங்கன்னு வேற சொன்னாரு.. :-)
(அடப்பாவி.. எதோ பேசனுமேன்னு சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னேன் அதை போய் இவன் சீரியசா எடுத்துகிட்டானே -சத்யராஜ்குமார்)

3 comments:

donotspam said...

thats was hillarious. had a hearty laugh. thanks raja

Boston Bala said...

'விஜய் டி.வி. சலனம் ஷாலினி' யாருங்க? பார்ப்பதற்கு ஷோபனா மாதிரி இருப்பாங்களே... அவரா?

எதிர்பார்ப்பை அதிகபடுத்தியிருக்கிறது உங்க விமர்சனம். நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.