Wednesday, October 27, 2004

பேரும் தெரியாம, மொழியும் தெரியாம, ஒரு விமர்சனம்.

நான் பொதுவா இந்த சீரியல் பார்க்கிற நேரத்துல (7-9 மணி வரை) வீட்டு பக்கமே போறதில்லைங்க, நேத்து மழையினால கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு, என்ன செய்யறதுன்னு தெரியாம ரிமோட்ட கையில எடுத்துட்டு சும்மா எல்லா சேனலையும் ஒரு சுத்து வந்தேன். (நான் வீட்டுக்குள்ளார வந்து ரிமோட்ட கையில எடுத்துட்டா, அப்புறம் நம்ம வீட்டுல யாரும் டீ.வி. பக்கமே வரமாட்டாங்க!).. சும்மா அப்படியே சுத்திட்டு இருந்தப்போ, திடீர்ன்னு ஒரு சேனல்ல நம்ம மொளனிகா சாயல்ல ஒரு சின்ன பொண்ணு பாட்டு பாடுற மாதிரி இருந்துச்சு, டக்குனு நிறுத்தி பார்த்தா, "தேஜா டீ.வி" யில நிஜமாவே மொளனிகா தான்.. கொஞ்சம் சின்ன வயசு மொளனிகா, எதோ படம்ன்னு கொஞ்சம் அசுவராசியமா மறுபடியும் சேனல் தாவ ஆரம்பிச்சுட்டேன், ஒரு சுத்து சுத்தி மறுபடியும் 'தேஜா'பக்கம் வந்தா இப்போ அடர்த்தியான தாடியோட, அழுக்கு கோட்டு ஒண்ணு போட்டுகிட்டு பானுசந்தர், சரி ஒரு ரெண்டு நிமிஷம் பார்க்கலாம்னு அதே சேனல்ல நின்னுட்டேன், அப்புறம் தான், அதிகமா லைட்டிங் இல்லாதது, மோளனிகா கூட பஸ்ஸுல இருந்த பொண்ணு வச்சிருந்த பெரிய சிவப்பு பொட்டு, இதெல்லாம் கவனிச்சேன்.. ஓஹோ, நம்ம பாலுமகேந்திரா படம் போலிருக்குன்னு அப்படியே டீ.வி. முன்னால செட்டிலாகிட்டேன்.

நமக்கு தெலுங்கு சுத்தமா தெல்லேதுன்னாலும், பாலுமஹேந்திரா பெருசா வசனத்தை நம்பி படமெடுக்க மாட்டாருங்கிற தைரியத்துல முழு படத்தையும் பார்த்தேன். அங்கங்க கொஞ்சம் வசனம் புரியலைன்னாலும் மொத்தமா கதையும் சம்பவங்களும் புரிஞ்சதுனால ரசிச்சு பார்த்தேன்..

ரொம்ப சிக்கலெல்லாம் இல்லாத கதை, ஹீரோ முரளி (பானுசந்தர்) ஒரு ஆனாதை பாரஸ்ட் ஆபீசர், புதுசா டிரான்ஸ்பர் ஆகி ஆதிவாசி குடியிருப்பை ஒட்டுன காட்டுக்கு வேலைக்கு போறாரு(அப்புறம் பாரஸ்ட் ஆபிஸர் வேற எங்க போவாரு!). அங்க அவர் பாவம் சமைக்க தெரியாம கஷ்ட்டப்பட, அந்த பழங்குடி கூட்டத்துல இருக்கிற ஒரு குடிகார மரவெட்டி கிழவனோட பொண்ணு துளசி (அர்ச்சனா) சமைச்சு குடுக்க வருது. அந்த பொண்ணுமேல அவருக்கு ஒரு இது.. (ஆனா சொல்லிக்கிறதில்லை).. திடீர்ன்னு ஒரு நாள் ஊருல இருக்கிற அவரோட நண்பனை பார்க்க போறாரு, அங்க அந்த நண்பன் ஒரு விபத்துல சிக்கி செத்து போனதை கேள்விப்பட்டு, இனி அவருக்கு துளசிய விட்டா யாருமில்லைன்னு சோகமா திரும்பி வர்றார்.. இந்த இடத்துல இருந்து தான் படத்தோட கதை ஆரம்பமாகுது.. சோகமா திரும்பி வர்ற முரளியை போலீஸ் வேறொரு கிரிமினெல்லோட சாயல்ல இருக்கிறதுனால, இவரை தப்பா கைது செஞ்சிடுறாங்க. போலீஸ்ஸ்டேஷன்ல இவரொரு பாரஸ்ட் ஆபீஸர்ன்னு சொல்றதை யாரும் நம்பாம இவரை அவமானப்படுத்த, ஒரு கட்டத்துல கோபமாகி அங்கிருந்து தப்பிக்க முயற்ச்சி செய்யறாரு. அந்த முயற்ச்சி ஒரு போலிஸ்காரரை இவர் அடிச்சு கொல்றதுல முடிஞ்சிருது. தப்பு செய்யாம போலீஸ்கிட்ட மாட்டி, அப்புறம் ஒரு கொலைகாரனா ஜெயிலிக்கு போறாரு. அஙகேயும் அவமானங்கள், சக ஜெயில்வாசியியோட சோகம், தப்பிக்க நினைச்சு அப்புறம் மாட்டிகிட்டு அடிவாங்கிறது,துளசி இவர பார்க்க ஜேயிலுக்கு வர்றதுன்னு போகுது. (ஒரு தடவை துளசியோட குடிகார அப்பா வந்து இருமலுக்கு நடுவால எதோ நிறையா பேசிட்டு போனாரு, ஆனா நம்ம தெலுங்கு புலமைக்கு அது என்னன்னு புரியலை..ஹி..ஹி..!)
தனக்காக துளசி காத்திட்டிருக்க வேண்டாம்னு, ரிலீஸ் ஆகி வெளிய போற ஒருத்தர் கிட்ட, தான் வெளிய இருந்து எழுதின மாதிரி ஒரு லெட்டர் எழுதிகுடுத்து வெளிய போய் போஸ்ட் பண்ண சொல்லி குடுத்து விடுறாரு (அப்படித்தன்னு நினைக்கிறேன், நிறையா அழுதுட்டே பானுசந்தர் பேசுன தெலுங்கில எனக்கு அப்படித்தான் புரிஞ்சுது!). அப்புறம் கொஞ்ச நாள்ல எதோ காரணத்துனால திடீர்னு இவரை விடுதலை செஞ்சிடுறாங்க (காரணம் சொல்லுவாங்க, ஆனா நம்ம மொழிப்பிரச்சினைதான்...!!)
ரிலீசானதும், வழக்கமா மத்த படங்கள்ல வர்ற மாதிரி, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின அந்த ஒரிஜினல குற்றவாளியை தேடி குதிரை எல்லாம் ஏறாம, அமைதியா, அந்த காட்டு கிராமத்துக்கு துளசிய பார்க்க போறாரு,
அங்க, துளசி மழையில நிறையா விளக்கெல்லாம் பத்த வெச்சுகிட்டு (கலை!) இவருக்காக காத்திட்டிருக்காங்க.. இவரும் போய் கட்டி புடிச்சு.... அதோட.. 'a film by balumahendra' போட்டுடறாங்க..

இதுல மொளனிகா எங்க வாந்தாங்கன்னு கேக்கரீங்களா?.. காட்டுக்கு திரும்பி வர்ற ஹீரோ ஒரு ஸ்கூல் பஸ்சுல லிப்ட கேட்டு வர்றாரு, அந்த பஸ்சுல வர்ற கூட்டத்துல பாட்டு பாட ஒரு ஆளு வேனுமே, அதுதான் மொளனிகா, அந்த பஸ்சுல வரும் போது ஹீரோ தன் கதைய பிளாஷ்பேக்குல சொல்லுறாரு..

படத்துல நிறையா டைட் க்ளோசப், அப்புறம் அடிக்கடி கொஞ்சி பேசுற அர்ச்சனா, ரொம்ப தெளிவா நடிக்கிற துனை நடிகர்கள், காட்டுல திரியற பூனைக்குட்டிக, சும்மா வெட்கமெல்லாம் படமா இயல்பா தொட்டு பேசுற ஹீரொயின், போலீஸ்ஸ்டேஷன் மற்றும் ஜெயில் காட்சிகள்ல வர்ற எதார்த்தம்னு நிறையா பாலுமஹேந்திரா 'டச்'ன்னு இருந்தாலும்.. இருந்தாலும், எனக்கென்னவோ பாலுமஹேந்திரா திரைக்கதை லாஜிக்ல ரொம்ப சொதப்பின மாதிரி இருந்துச்சு.. (ரொம்ப பேசுறனோ?)

யாராவது இந்த படத்தை பார்த்திருக்கரீங்களா? அப்படி பார்த்திருந்தா, படதோட பேரு என்னன்னு சொல்லுங்க (விளம்ப்ர இடைவேளையில 'ஈ சித்திர'ன்னு எதோ சொன்னாங்க, அதுதான் படத்து பேரோன்னு நினைச்சு பக்கத்துல உக்காந்திருந்த எங்கய்யன் கிட்ட சொன்னேன்.. அதுக்கு அவர் பார்த்த பார்வை.. சரி விடுங்க, நான் எங்கய்யன்கிட்ட எதாவது சொல்றதும் அப்புறம் அசிங்கப்படுறதும், அது வழக்கம் தான் ..) . கூடவே நான் புரிஞ்சுகிட்ட கதையும் சரிதானான்னு யாரவது சொல்லுங்கய்யா..

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன், பாலுமஹேந்திரா காமிரா வழியா அர்ச்சனாவை, அதுவும் ரவிக்கை இல்லாம பார்க்கும் போது.. கொஞ்சம் கிளுகிளுப்பாத்தாங்க இருந்தது..
இன்னொரு விஷயம், தன்னோட படத்துல எங்கயாவது ஒரு சீன்லயாவது கதாநாயகன சட்டயில்லாம காட்டிருவாரு பாலுமஹேந்திரா'ன்னு என் சகா ஒருத்தன் சொல்லுவான், அந்த வார்த்தைய இந்த படத்துலயும் காப்பாத்திருக்காரு..

1 comment:

ரா.சு said...

இந்த படம் மலையாளத்தில் பாலுவால் எடுக்கப்பட்ட "யாத்ரா"(பயணம்) வின் கதையை ஒத்திருக்கிறது. மம்முட்டி, ஷோபனா,மொளனிகா(பாடலில் மட்டும்) நடித்தது. இ(சை)ளயராஜா பிண்ணனியில் கலக்கியிருப்பார். ரொம்ப காலத்திற்கு முன் பார்த்ததால், நீங்கள் சொல்லும் காட்சிகளின் வசனங்கள் ஞாபகமில்லை. ஆனால், கதையின் ஒட்டம் நீங்கள் குறிப்பிட்டது போலத்தான்.