Monday, January 24, 2005

ஒரு விளம்பரம்.. பாதி சினிமா..

வழக்கமா எங்கய்யன் டீ.வி பார்க்கிற நேரத்துல நான் ஹால் பக்கமேபோறதில்லீங்க, போனா, அவர் எதும் நக்கலா சொல்லுவாருங்க, நாம எதாவது வம்பா பேசுவோம், எதுக்கு வெட்டியா பிரச்சனைனு நான் ஒதுங்கிடறது.
நேத்து starplusல'காக்கி' போட்டாங்களா சரி பார்க்கலாம்னு உக்காந்தேன், எத்தேசையா அந்த ப்க்கம் வந்தவரு அமிதாப்பு படமான்னு கேட்டுட்டு அவ்ரும் கூடவே உக்காந்தாருங்க, அப்பவே மனசுக்குள்ள தோனுச்சுங்க, இனி படம் பார்க்க முடியாது எந்திரிச்சு போயிருவோம்னு, இருந்தாலும் அமிதாப்புக்காக (சரி, சரி... ஐஸ்வர்யாக்காவும் தான்) ரிஸ்க் எடுக்கலாம்னு உக்காந்தனுங்க.
படமெல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது, ஆனா நடுவால போட்ட அந்த விளம்பிரத்துல தானுங்க வந்தது வினை..

அப்படி என்ன விளம்பரம்ங்கரீங்களா??

அதாங்க இந்த UTI Mutual fundக்காரங்களோட புது விளம்பரம்.
பாத்திருக்கீங்களா??
அப்படி என்னடா இருக்குது அந்த விளம்பரத்துலங்கரீங்களா?? பெருசா ஒன்னுமில்லீன்ங்க.. இதுதானுங்க விளம்பரம்.

------------------------

ஒரு சர்தார் வீட்டு பையனுக்கு பிறந்த நாள்..


அப்பா அவனுக்கு வாழ்த்து சொல்லி, அவனுக்கு ஒரு புது போலீஸ் டிரஸ் குடுக்கிறாருங்க..


குஷியான பையன் புதுத்துணி மாத்திக்க ரூமுக்குள்ள போறானுங்க.. வெளிய அவனோட அப்பா அப்படியே சேர்ல சாஞ்சுகிட்டு, பையன் வளர்ந்து பெரியவன் ஆகி பெரிய போலீஸ் ஆபிசர் ஆகப்போறாங்கிற கனவோட அப்படியே பூரிச்சு போய் உக்காந்திருக்காருங்க..துணிமாத்திக்க போன பையன் வெளிய வரும்போது..
அவனுக்கு அவுங்கப்பா குடுத்த போலீஸ் டிரெஸ்ச, கொஞ்சம் மாத்தி, கொள்ளைக்காரன் மாதிரி போட்டுகிட்டு, "இனிமேல் நான் தான் ஃகப்பர் (ஷோலே!) "ன்னு சொல்லிட்டு துப்பாக்கிய தலைக்கு மேல சுத்திட்டு ஓட..


கொஞ்சம் பெருமிதத்தோட அப்படியே சிரிச்சுகிட்டு சாஞ்சு உக்காந்திருந்த அந்தப்பையனோட அப்பா அப்படியே ஷாக்காகி, அப்படியே பேயடிச்ச மாதிரி முழிக்கிறப்ப்போ, அப்படியே பின்னாடி UTI Mutual fund'ஓட children career plan பத்தி ஒரு குரல் வரும்..

--------------

விளம்பரம் முடிஞ்சதும் எங்கய்யன் அப்படியே நம்ம பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க, அதுல ஆயிரம் அர்த்தம்..ஆயிரம் நக்கல்..
நான், எதுக்கு வம்புன்னு அப்படியே பாதிப்படத்துல டக்குன்னு எஸ்கேப் ஆகி ஓடிப்போய் படுக்கைய போட்டுட்டேன்.. 'காக்கி' போனா போகுது இன்னொரு நாள் எப்படியும் போடுவான் அப்ப பார்த்துக்கலாம்...

Saturday, January 22, 2005

இன்றைய பாடம்..

ஒல்லும் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்


என்னடா திடீர்ன்னு திருக்குறள் எல்லாம் போட்டிருக்கான், எதும் கலங்கிருச்சான்னு பார்க்கரீங்களா? அதெல்லாம் இல்லீங்க, தினந்தினம் நம்ம வாழ்க்கையில புதுசு புதுசா எதாவது ஒரு விஷயம் கத்துகிட்டேதாங்க இருக்கோம், அந்த வரிசையில இன்னைக்கு நான் கத்துகிட்ட விஷயத்துக்கு ஏத்த மாதிரி ஒரு குறள் போட்டிருக்கேன் அவ்வளவுதான்..
சரி, இங்க எதுக்கு அதை போட்டிருக்கேன்னு கேக்கரீங்களா?? அடுத்தவங்க அனுபவத்துலிருந்து தன்னை திருத்திக்கிறவன் புத்திசாலிம்பாங்க,..
அப்ப நீங்க??

Friday, January 21, 2005

திருப்பாச்சி

சமீப காலத்துல நான் பார்த்த படங்கள்லயே அற்புதமான ஒரு படைப்புன்னா அது சூப்பர் குட் பிலிம்ஸின் திருப்பாச்சி தானுங்க, என்ன படம், என்ன கதை, பின்னீட்டாங்க, எல்லாரும் சும்மா சொல்லுவாங்க, ஒவ்வொரு படத்துக்கும் 'இது ஒரு வித்தியாசமான' படம்ன்னு, ஆனா நிஜம்மாலுமே சொல்றனுங்க, இந்த படம் ரொம்ப வித்தியாசமான் படம்ங்க.

ஊருல கொல்லம்பட்டரை வச்சிருக்கிற ஒருத்தன் (அதுதான் நம்ம விஜய் - சிவகிரி) பட்டணத்துக்கு தங்கச்சிய கட்டிகுடுத்துட்டு (சென்னை), அப்புறம் அங்க நடக்கிற ரவுடியிசம் பொறுக்க முடியாம தவிச்சு, நடுவால தன்னோட சினேகிதன் ஒருத்தன் அந்த ரவுடியிசத்துக்கு பலிகுடுத்து, .... அப்புறம் பொங்கியெழுந்து, தன் தங்கச்சி வயித்துல வளர 'அந்த சிசு மேல' சபதம் எடுத்து, அந்த குழந்தை பொறக்கறதுக்குள்ளார அந்த ஊருல இருக்கிற எல்லா ரவுடியயும் கொன்னு தன்னோட தங்கச்சி குழந்தைக்கு ஒரு அமைதியான சமுதாயத்த ஏற்படுத்தி குடுக்கறாரு.. எவ்ளோ வித்தியாசமான படம்...

நான் வழக்கமாவே ஒரு படம் பார்த்து, நல்லாயிருந்தா மறுபடியும் படத்து போலாம்னு கிளம்பினா அதே படத்துக்கு போயிருவேன், தேவையில்லாம இந்த மாதிரி ரிலீஸ் படத்துக்கு, அதுவும் ஏற்க்கனவே 'மதுர'ன்னு ஒரு சூப்பர் ஹிட் படம் பார்த்த அனுபவத்துல, இந்த படத்துக்கு போகும் போது கடைசி வரைக்கும், 'டேய் வேணாம்டா, மருபடியும் ஒருதடவை காதல் வேணுமின்னா பார்க்கலாம், இந்த பொங்கல் ரிலிஸ் திருப்பச்சி, ஐயா எதுவும் வேண்டாம்டா"ன்னு கடைசி வரைக்கும் போராடுன்னங்க, அதையும் மீறி "வாடா! காமெடியா இருக்கும் நம்மாளு எதாவது மெசேஜ் சொல்லூவான், கேட்டுட்டு வரலாம்னு"கூட்டிடு போயிட்டானுக.. எல்லாம் என் விதி...

அப்புறம் என்ன வித்தியாசம்ங்கரீங்களா?? சொல்றேன், படத்துல 'பான்ப்ராக்' ரவின்னு ஒரு வில்லன்,இது வித்தியாசம் நம்.1, அவன் கொலஒ செய்யிற ஸ்டயில் இருக்குதே அதுதான் ஹைலைட்டு, நம்ம் வூட்ட்ல கரப்பான் பூச்சி கொல்றதுக்கு வச்சிருப்பமே HIT அதை எதிராளியோட வாயுல அடிச்சே கொல்லுறாம் பாருங்க அது தான் வித்தியாசம் நம்.2..
இதுக்கு மேல இந்த படத்த பத்தி எழுத முடியலைங்க, எனக்கு அதை நினைச்சாலே, ..ம்ம்.. முடியலைங்க, பட்ட கால்லயே படும்பாங்க, எனக்கென்னவோ இந்த தை பிறந்த்தலிருந்தே இப்படியே நடக்குது..

சன் டீ.வி ஸ்டையில்ல சொன்னா : திருப்பாச்சி.. வெறுப்பாச்சி

Thursday, January 20, 2005

பொங்கல் சில குறிப்புகள்

ஒரு வாரமா நம்ம வூட்டு கம்ப்யூட்டர் கும்பகர்ணன் கணக்கா, எழுப்பவே முடியாத அளவுக்கு தூங்கிருச்சுங்க. இப்பத்தான் டவுனுக்கு போய் ஆள் புடிச்சுட்டு வந்து தட்டி எழுப்பியிருக்கனுங்க அதுனால தான் ஒரு பத்து நாளா நம்ம வலைபக்கம் வர முடியாம போச்சுங்க.
தமிழ்மணத்துல நம்ம மக்கள் எங்கடா நம்ம 'ராசாவ' காணோம்னு தவியாதவிச்சுட்டு இருபாங்களே, சரி ப்ரவுசிங் சென்டர் பக்கம் போயாவது நம்ம எப்படியாவது வலைச்சேவை'யாற்றிருவோம்னு நினைச்சு அங்க போனா, ஊருக்குள்ள ஒரு ப்ரவுசிங் செண்டர்லயும் கலப்பையும் இல்லை முரசும் இல்லை, கலப்பை தான் இல்லை சரி முரசு ஒரளவுக்கு எல்லாருக்கும் பரவலா தெரிஞ்ச விஷயம்தான, அது ஏங்க போட்டு வைக்கலைன்னு அந்த செண்டர்ல இருந்த பொண்ண கேட்டா, "யாரும் இதுவரைக்கும் கேக்கலைங்க, அதான் போடலை, உங்களுக்கு வேணுமின்னா சொல்லுங்க நாளைக்கு ஏற்பாடு செய்யறேன்"ன்னு சொல்லிட்டு போயிருச்சுங்க. சரி தொலையுது, இதுக்கு மேல என்னத்த பேசறதுன்னு விட்டுடனுங்க.

அப்புறம்,.., வேற என்னத்த சொல்றது போங்க, பொங்கல் வச்ச சடவு தீரவே இன்னும் ஒரு வாரம் அகும் போல இருக்குதுங்க, எதோ பட்டினத்து பக்கமா இருந்தா, குக்கர்ல ஒரு சீனிப்பொங்கல வச்சு, பேருக்கு சூரியனுக்கு காட்டிட்டு, அப்புறம் அதையே நாமளும் ஒரு கட்டு கட்டிட்டு, டீ.வி. பார்க்க உக்காந்திரலாம், இங்க அப்படியா, நமக்கு தான் கிரகம் இந்த சடங்கெல்லாம் பெருசா ஆர்வமில்லைன்னு சொல்லி நோம்பிக்கெல்லாம் தப்பிச்சுக்கப்பார்த்தாலும், பொங்கலுக்கு அப்படி முடியரதில்லீங்க, எங்கய்யன் விட்டாலும், எங்கம்மாவும், ஆள்காரங்களும் நம்மள விடுறதில்லீங்க.
மொத நாள் சூரியனுக்கு மூனு பொங்கல் வச்சு, அது எந்த பக்கம் விழுந்துச்சுன்னு ஒரு பெரிய அடிதடி நடத்தி.. அளாளுக்கு ஒரு பலன் சொல்லி..., அது கூட பரவாயில்லீங்க, அடுத்த நாள் மாட்டு பொங்கலுக்கு தான வேடிக்கை. தெப்பக்குளம் கட்டி, அதை சுத்தி அலங்காரம் செஞ்சுவச்சு, சீரியல் லைட் மாட்டி, மறுபடியும் மூனு பொங்கல் வச்சு (இது மாட்டையன் சாமிக்கு), எல்லா மாட்டுக்கும் அமுது ஊட்டி, தெப்பக்குளத்துல விரட்டி.. சாமீ.. சாப்பாட்டுக்கு உக்காரவே ராத்திரி மணி 12 ஆயிருச்சுங்க.. 12 மணிக்கு பச்சரிசி பொங்கல்ல மொச்சக்கொட்டை கத்திரிக்காய் குழம்ப ஊத்தி ஒரு புடிபுடிச்சுட்டு (அதுதான் பொங்கல் ஸ்பெஷல்!) எல்லாப்பயலும் மாட்டையன் கோயிலுக்கு பயணப்பட, நான் அப்படியே காட்டு சாலையிலயே சாஞ்சுட்டனுங்க.. நல்ல தூக்கம்.
திடீர்ன்னு, கோழி கூப்பிட 5 மணிக்கெல்லாம் வந்து எழுப்பி விட்டுடானுகக, பொங்கலுக்கு மாட்டையன் கோயிலுக்கு வண்டி கட்டிட்டு போன நம்ம பங்காளி அங்க எதோ தகராரு செஞ்சு, மண்டைய உடைச்சிட்டு வந்திருக்கான், அதுக்கு ஒரு பஞ்சாயத்து விடியக்காலையில... .. நானும் பார்க்கிறனுங்க, ஒவ்வொரு வருஷமும் ஜெகஜோதியா கிளம்பி போக வேண்டியது, வரும் போது எவனாவது ஒருத்தன் மண்டைய உடைச்சிட்டு வர வேண்டியது, அப்புறம் அதுக்கு ஒரு பஞ்சாயத்து..
எத்தனை பெரியாரு வந்தாலும் உங்களை திருத்த முடியாதுரா.. சாமி..

Saturday, January 8, 2005

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்.!

உலக பணக்காரங்க வரிசையில நான் 754,307,892வது ஆளுன்னு சொல்றாங்க.. நானா சொல்லலீங்க,
GlobalRichlistங்கிற தளத்துல நம்ம வருமானத்த வச்சு எதோ கணக்கு போட்டு சொல்றாங்க..
இப்படி ஒரு வரிசையில நம்ம வர்றதுல ஒரு அல்ப சந்தோஷம்ங்க, யாரு என்ன சொன்னாலும்.. நம்ம பொழப்புதனம் நமக்கு தானுங்க தெரியும்,

How rich are you? >>


I'm loaded.
It's official.
I'm the 754,307,892 richest person on earth!---------------------

பாலாவின் சிந்தனை

etamil பாலா அவரோட வலைப்பதிவுல கடந்த வாரத்தில் என்னை சிந்திக்க வைத்த தமிழ்ப்பதிவுகள் சில'ங்கிற தலைப்புல ஒரு பதிவு போட்டிருக்காருங்க, அதுல என்ன விஷயம்ன்னா அவரு அந்த லிஸ்ட்ல நம்மளோட முந்தயபதிவையும் சேத்திருக்காருங்க. நம்ம பதிவை படிச்சுபுட்டு அவர் என்ன சிந்திச்சாருன்னு தெரியலைங்க, எனக்கென்னவோ, "இப்படியெல்லாம் கூட வெட்டியா ஒரு பதிவு எழுதலாமா?"ன்னு சிந்திச்சிருப்பாருன்னு தோணுதுங்க, கரெக்டுங்களா பாலா?

-------------------------

தமாசு

Ms.Independent'ன்னு ஒரு பஞ்சாப்பகார அம்மணி அவங்களோட writings on d wallங்கிற வலைப்பதிவுல ஜோக் ஒண்ணு போட்டிருக்காங்கபோய் பாருங்க.. அய்யோ!!
ரெண்டாவது தடவை படிச்சு தான் அவங்களுக்கு அந்த தமாசு சமாச்சாரம் புரிஞ்சுதாம், நமக்கு நாலஞ்சு தடவை படிச்சு தாங்க புரிஞ்சுது,ம்ம், என்னத்த செய்யறது, நம்ம இங்கிலிபீஸ் அறிவு அப்படி.... (ஆயிரம் இருந்தாலும் நம்ம மெக்ஸிக்கோ ஜொக் மாதிரி வராதுங்க)

-------
புதுசு
புதுசா நம்ம வலைப்பக்கத்துல ஒரு கடியாரம் தொங்க விட்டிருக்கேன், நல்லா இருக்குதுங்களா??

Tuesday, January 4, 2005

சிங்கம்லே...

வழக்கமா ராக்கோழி மாதிரி, எப்பவுமே ரெண்டாவது ஆட்டம் தாங்க நம்ம சினிமாவுக்கு எல்லாம் போறது, இந்த ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போறதுல கொஞ்சம் விசேஷம்ங்க, படத்துக்கு போறதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு ரவுண்டு போறது, (ராத்திரி வீட்டுக்கு போக எப்படியும் ஒரு ரெண்டு மணியாகிடும் அதுக்குள்ள அய்யன் தூங்கிருவாரு, அதான் ரகசியம்) அப்புறம் காலையில ஏழு எட்டு மணி வரைக்கும் தூங்கி, பொழப்பு கெட்டுபோறதுன்னு, ஒரு தினுசா இருக்கும் சினிமாவுக்கு பொறதே.. திடீர்ன்னு ஞானயோதயம் வந்து, நேத்து ரொம்ப நாளைக்கு அப்புறம் முதலாட்டம் சினிமாவுக்கு போயிருந்தனுங்க.

'காதல்'. ஏற்க்கனவே 'சமுராய்'ன்னு விக்ரம வச்சு ஒரு ப்டம் குடுத்த பாலாஜிசக்திவேலோட ரெண்டாவது படம், டைரக்டர் ஷங்கரோட தயாரிப்புல வந்திருக்கிற முதல் படம்..(அவனவன் சுனாமி வந்து கவலையில கிடக்கறான், நீ சினிமாவுக்கு போன கதை எழுதறயா - மனிதாபிமானி)
சும்மா ஒரே வரியில புதுமுகங்கள் நடிச்சு வந்திருக்கிற இன்னொரு காதல் படம்னு சொல்ல முடியாத மாதிரி, கொஞ்சம் நல்லா எடுத்திருக்காங்க. வழக்கமா எல்லாரும் சொல்ற ஒரு பணக்கார பொண்னுக்கும் ஒரு சராசரிக்கும் கீழான ஒரு ஏழை பையனுக்கும் நடுவால வர்ற காதல் தான் படத்தோட கரு. என்ன வழக்கமா சொல்ற 'தெய்வீக'க்காதல்ன்னு எல்லாம் சொல்லாம எதார்த்தமா நம்ம நடைமுறையில பார்க்கிற அதே முட்டாள்த்தனத்த காட்டியிருக்காங்க. (கிளைமாக்ஸ விட்ருங்க!).
படத்தோட உயிரே அந்த மதுரை நேட்டிவிட்டியில தாங்க இருக்குது, ஹீரோ ஹீரோயின விடுங்க, (அவுங்களும் நல்லாத்தான் நடிச்சு இருக்காங்க), அதைவிட ஹீரோயினோட அப்பாவும் சித்தப்பாவுமா வர்றவங்க, அப்புறம் அந்த மெக்கானிக் கடை குட்டிப்பையன்.. கிளப்பியிருக்காங்க..
"ஒன்னுக்கு அடிக்கனும்னே"ன்னு வண்டியில இருந்து இறங்கி போற பையன்கிட்ட
"சீக்கிரமா வரனும் என்ன"ன்னு ஒரு மிரட்டலோட ஹீரொயின் வீட்டு அடியாள் சொல்ல.
" முடிஞ்சா வந்துருவமில்ல, அதை வச்சு நாங்க என்ன பெட்ரோலா எடுக்க போறோ'ம்னு தெனாவட்ட சொல்லிட்டு போறப்ப அந்த பையனோட நடிப்பும் டயாலாக் டெலிவரியும்..
அப்புறம் ஹீரொயினோட அப்பா வச்சிருக்கிற டாட்டா சூமோவுல எழுதியிருக்கிற அந்த வரி .. "சிங்கம்லே..". . அதாங்க மண்வாசனை. :-)
என்ன.. இடைவேளை வரை இப்படியே எதார்த்தமா போற படம் அப்புறம் கொஞ்சம் வழக்கமான காதல் படம் பாணியில (அதுவும் அந்த மேன்ஷன் பாட்டெல்லாம்.. சாமீ!) போகுதுங்க, அதுவும் கடைசி பத்து நிமிஷத்துல டைரக்டர் சொல்ல வர்ற மனிதநேயம் அசல் சினிமாத்தனம்.. , ஆனா டைரக்டர் அதுதான் உண்மை, அதை அடிப்ப்டையா வச்சுத்தான் படமேங்கிறாரு.. சரி அதுவும் நல்லாத்தான் இருக்கு, கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாத்தான சினிமா..
இந்த படத்த பத்தின விமர்சனம் படிக்க ஆசைப்படுறவங்க, ஹரன்பிரசன்னாவோட பதிவை பாருங்க.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம கூட வந்த சகாவுல ஒருத்தன் "ஹீரொயின விட, அந்த பொண்னு கூட கொஞ்சம் உயரமா கண்ணாடி போட்டுகிட்டு இன்னொரு பொண்னு வருதே அந்த பொண்ணு தாம் பங்காளி நல்லா இருக்குது'ன்னு புலம்பிகிட்டே இருந்தான், நான் தான் சரியா கவனிக்கல போலிக்குதுங்க (வழக்கமா நான் எப்பவுமே பொண்ணுகள அவ்வளவு தீவிரமா பார்க்கிறதில்லைங்க,, ஹி.. ஹீ..!)
படம் நல்லா இருக்குது, ரொம்ப தரமான படம்னு பேசிக்கறாங்க..

மொத்தத்துல.. 'காதல்' வழக்கமான காதல் படமில்லைங்க. எங்கேயும் போரடிக்காம, இடுப்ப குலுக்கிட்டு ஆட்டம் போடாம, பறந்து பறந்து சண்டை போடாம.. இயல்பா, எதார்த்தமா ஒரு .. "ம்..நல்லா இருந்துச்சு" வகை படம்..

(அதென்னமோ, முடிவு கொஞ்சம் சோகமா இருந்தா, இல்லை மனச சங்கடபட வச்சாத்தான், நல்ல படம்ங்கிறாங்க.. நமக்கு தான் அந்த கிரகமெல்லாம் புரியவே மாட்டேங்குதுங்க.)