ஒரு வாரமா நம்ம வூட்டு கம்ப்யூட்டர் கும்பகர்ணன் கணக்கா, எழுப்பவே முடியாத அளவுக்கு தூங்கிருச்சுங்க. இப்பத்தான் டவுனுக்கு போய் ஆள் புடிச்சுட்டு வந்து தட்டி எழுப்பியிருக்கனுங்க அதுனால தான் ஒரு பத்து நாளா நம்ம வலைபக்கம் வர முடியாம போச்சுங்க.
தமிழ்மணத்துல நம்ம மக்கள் எங்கடா நம்ம 'ராசாவ' காணோம்னு தவியாதவிச்சுட்டு இருபாங்களே, சரி ப்ரவுசிங் சென்டர் பக்கம் போயாவது நம்ம எப்படியாவது வலைச்சேவை'யாற்றிருவோம்னு நினைச்சு அங்க போனா, ஊருக்குள்ள ஒரு ப்ரவுசிங் செண்டர்லயும் கலப்பையும் இல்லை முரசும் இல்லை, கலப்பை தான் இல்லை சரி முரசு ஒரளவுக்கு எல்லாருக்கும் பரவலா தெரிஞ்ச விஷயம்தான, அது ஏங்க போட்டு வைக்கலைன்னு அந்த செண்டர்ல இருந்த பொண்ண கேட்டா, "யாரும் இதுவரைக்கும் கேக்கலைங்க, அதான் போடலை, உங்களுக்கு வேணுமின்னா சொல்லுங்க நாளைக்கு ஏற்பாடு செய்யறேன்"ன்னு சொல்லிட்டு போயிருச்சுங்க. சரி தொலையுது, இதுக்கு மேல என்னத்த பேசறதுன்னு விட்டுடனுங்க.
அப்புறம்,.., வேற என்னத்த சொல்றது போங்க, பொங்கல் வச்ச சடவு தீரவே இன்னும் ஒரு வாரம் அகும் போல இருக்குதுங்க, எதோ பட்டினத்து பக்கமா இருந்தா, குக்கர்ல ஒரு சீனிப்பொங்கல வச்சு, பேருக்கு சூரியனுக்கு காட்டிட்டு, அப்புறம் அதையே நாமளும் ஒரு கட்டு கட்டிட்டு, டீ.வி. பார்க்க உக்காந்திரலாம், இங்க அப்படியா, நமக்கு தான் கிரகம் இந்த சடங்கெல்லாம் பெருசா ஆர்வமில்லைன்னு சொல்லி நோம்பிக்கெல்லாம் தப்பிச்சுக்கப்பார்த்தாலும், பொங்கலுக்கு அப்படி முடியரதில்லீங்க, எங்கய்யன் விட்டாலும், எங்கம்மாவும், ஆள்காரங்களும் நம்மள விடுறதில்லீங்க.
மொத நாள் சூரியனுக்கு மூனு பொங்கல் வச்சு, அது எந்த பக்கம் விழுந்துச்சுன்னு ஒரு பெரிய அடிதடி நடத்தி.. அளாளுக்கு ஒரு பலன் சொல்லி..., அது கூட பரவாயில்லீங்க, அடுத்த நாள் மாட்டு பொங்கலுக்கு தான வேடிக்கை. தெப்பக்குளம் கட்டி, அதை சுத்தி அலங்காரம் செஞ்சுவச்சு, சீரியல் லைட் மாட்டி, மறுபடியும் மூனு பொங்கல் வச்சு (இது மாட்டையன் சாமிக்கு), எல்லா மாட்டுக்கும் அமுது ஊட்டி, தெப்பக்குளத்துல விரட்டி.. சாமீ.. சாப்பாட்டுக்கு உக்காரவே ராத்திரி மணி 12 ஆயிருச்சுங்க.. 12 மணிக்கு பச்சரிசி பொங்கல்ல மொச்சக்கொட்டை கத்திரிக்காய் குழம்ப ஊத்தி ஒரு புடிபுடிச்சுட்டு (அதுதான் பொங்கல் ஸ்பெஷல்!) எல்லாப்பயலும் மாட்டையன் கோயிலுக்கு பயணப்பட, நான் அப்படியே காட்டு சாலையிலயே சாஞ்சுட்டனுங்க.. நல்ல தூக்கம்.
திடீர்ன்னு, கோழி கூப்பிட 5 மணிக்கெல்லாம் வந்து எழுப்பி விட்டுடானுகக, பொங்கலுக்கு மாட்டையன் கோயிலுக்கு வண்டி கட்டிட்டு போன நம்ம பங்காளி அங்க எதோ தகராரு செஞ்சு, மண்டைய உடைச்சிட்டு வந்திருக்கான், அதுக்கு ஒரு பஞ்சாயத்து விடியக்காலையில... .. நானும் பார்க்கிறனுங்க, ஒவ்வொரு வருஷமும் ஜெகஜோதியா கிளம்பி போக வேண்டியது, வரும் போது எவனாவது ஒருத்தன் மண்டைய உடைச்சிட்டு வர வேண்டியது, அப்புறம் அதுக்கு ஒரு பஞ்சாயத்து..
எத்தனை பெரியாரு வந்தாலும் உங்களை திருத்த முடியாதுரா.. சாமி..
3 comments:
பட்டி நோம்பியன்னைக்கு ஒருசந்தி இருந்தீங்களா?
மாட்டைய்யன் கோயில்? மால கோயிலா, இல்ல இது வேறயா? எங்க இருக்குது?
மால கோவில் மாடையன் கோவில் எல்லாம் ஒன்னுதாங்க காசி.. அதே 'ஆல்கொண்டமால்' கோவில் தான்.
Post a Comment