Saturday, August 14, 2004

ஒரு கவிதை

நேத்து எங்கய்யனுக்கு 'சாரதி'யா பாலக்காடு வரைக்கும் போயிருந்தனுங்க (அதையாவது உருப்படியா செய்யுங்கறீங்களா??). எங்கய்யனுக்கு ஒரு பழக்கம், எங்கே போனாலும் என்னை கண்டிப்பா கூட கூட்டிட்டு போய்டுவாரு(!), ஆனா போற இடத்துல என்னை வெளிய வண்டிக்கு காவல் விட்டுட்டு அவர் மட்டும் வேலைய பார்க்க போய்டுவாரு, (நம்ம மேல அவ்வளவு மரியாதை!!..ம்.ம்!!). அதுனால எப்ப எங்கய்யன் கூட வெளியூர் போனாலும் (ஆ.வி., குமுதம்'ன்னு) எதாவது ஒரு ரெண்டு புஸ்த்தகம் வாங்கி வண்டிக்குள்ள போட்டுக்குவேன். இந்த தடவை போகும்போது இந்த வார பதிப்பெல்லாம் ஏற்க்கனவே படிச்சுட்டதுனால, போற வழியில டீ சாப்பிட நிறுத்தும்போது 'மிருகபாலிகை'ன்னு ஒரு புஸ்த்தகம் வாங்கிவச்சேன். (அட்டை கொஞ்சம் விளம்பரமா இருந்துதா, சரி, இந்த மாதிரி புஸ்த்தகம் எல்லாம் கையில வச்சிருந்தாலாவது நம்ம கொஞ்சம் விவரமான ஆளுன்னு பாக்கிறவங்க நம்புவாங்களேன்னு வாங்கினேன்).
நான் இன்னும் அதை முழுசா படிக்கல, இருந்தாலும் நிறையா கவிதை நல்லா இருந்ததுச்சுங்க, அதுல இருந்து ஒரு கவிதை.

காதல்.

நீண்டதூரம் அழைத்துவந்து
சட்டென்று கை உதறி
மறைந்து கொண்டதில்
அல்லலுறுகிறது ஒரு காதல்.

அங்குமிங்கும் ஓடுகிறது.
அல்லாடுகிறது.
அலைபாய்கிறது.

சற்று நேரம்தான்.
எதுவும் கேட்கவில்லை
எல்லாம் புரிந்தது போல்
சட்டென்று ஒரு வழி பிடித்து
நடந்து மறைகிறது.

வந்ததும் தெரியாமல்
போனதும் தெரியாமல்.

- வஸந்த்செந்தில் (மிருகபாலிகை)

இதேமேட்டரத்தான் நம்ம வாசூல்ராஜ'வுல வைரமுத்து (கொஞ்சம் நமக்கு புரியர மாதிரி) எழுதி, கமல் பாடியிருக்காரு,
'ஆள்வார்ப்பேட்டை ஆண்டவா,
வேட்டிய போட்டு தாண்டவா,
ஒரே காதல் உலகில் இல்லையடா'.

இதெல்லாம் ரைட்டுதான்,
நமக்கு இங்க ஒன்னுக்கே வழிய காணல, இதுல இவுங்க வேற ஆள் மாத்தி ஆளு வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க.. ச்சே!! (நம்ம ஊருப்பக்கம் இப்போ அமேரிக்கா பையனகளுக்கு தான் மதிப்பு, நம்மள மாதிரி உள்ளூருல மாடு மேய்க்கிற பசங்களையெல்லம் ஒரு புள்ளையும் திரும்பிக்கூட பார்க்கிறதில்ல..)

ஒரு அஞ்சலி:
இந்த பாட்டெல்லாம் கேக்கறதுக்கு இல்லாம, 'பூவே உனக்காக' கிளைமாக்ஸ்'ல வர்ற 'ஒரு பூ செடியில இருந்து உதிர்ந்துட்டா, அது மறுபடியும் செடியுல ஒட்டாது'ன்னு விளங்காத தத்துவம் பேசிட்டு, UKG'ல இருந்து +2 வரைக்கு ஒட்டுக்கா படிச்ச என்னையும், 23 வருஷம் தங்கம் போல வளர்த்த அவுங்க ஆயிஅப்பனையும், விட்டுட்டு, 2 வருஷம் முன்னாடி இதே ஆகஸ்ட் 14ம்தேதி 'எக்கலக்ஸ்' குடிச்சுட்டு (கசப்பு தெரியாம இருக்க பெப்ஸி கலந்து) காதல்ல 'ஜெயிச்ச' எங்க முட்டாள் 'சிவசு'வை பெத்தவுங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.


r

5 comments:

KVR said...

கட்ஸீல மன்ஸ ஃபீல் பண்ண வெச்சுட்டிங்களே தலீவா

Balaji-Paari said...

ராசா...உங்க எழுத்த ரெகுலரா படிக்கிற ஆளு நான்.

எனது கைகள் உங்கள் தோள்களில் ஆதரவாக...

நட்புடன்
பாரி

Anonymous said...

romba nalla yatharthama ezhuthringa. I like it
Navin

ஞானதேவன் said...

"சிவசு"வின் ஆத்மாவிற்க்கு என் அஞ்சலி

பரி (Pari) said...

(நம்ம ஊருப்பக்கம் இப்போ அமேரிக்கா பையனகளுக்கு தான் மதிப்பு, நம்மள மாதிரி உள்ளூருல மாடு மேய்க்கிற பசங்களையெல்லம் ஒரு புள்ளையும் திரும்பிக்கூட பார்க்கிறதில்ல..)
>>
ஏ(ன்) ராசா வயித்தெரிச்சலக் கொட்டிக்கிறீங்க. புள்ளைங்க உங்களப் பாக்கலன்னாலும் நீங்களாச்சு புள்ளைங்களப் பாக்கலாமுல்ல. இங்க அப்படியா? :-)