Tuesday, November 23, 2004

தெய்வம் தந்த வீடு..

அம்மாடி... பதினைஞ்சு நாளா வீட்டுல வேலை 'பெண்ட' நிமித்திருச்சுங்க.. புதுசா ஒரு வீட்டுக்கு குடி போறது கூட பரவாயில்லைங்க, இருக்கிற வீட்டை சுத்தம் செஞ்சு பெயின்ட் செய்யனும்னா.. அதுவும் பத்து வருஷமா பெயின்ட் பண்ணாம, மொத்தமா எல்லாப்பொருளையும் வெளிய எடுத்து வச்சு, சுத்தம் செஞ்சு, மறுபடியும் உள்ள அடுக்கிவச்சு, சாமி, இதுக்குதானுங்க வீட்டுல பொண்ணுக வேணும்ங்கிறது.. ஒத்த பையனா இருந்தா சந்தோஷம்ங்கிறாங்க, எனக்குத்தான தெரியும் நிஜம்.
என்ன கலர் பெயிண்ட் அடிக்கிறதுங்கிறதுல இருந்து, எந்த சாமானத்தையெல்லாம் மறுபடியும் வீட்டுக்குள்ள கொண்டு போறதுன்னு ஒவ்வொவ்வுக்கும் பெரிய விவாதமே நடத்த வேண்டியதா போச்சுங்க, மரத்தடியே பரவாயில்லை போல.. (ஹி..ஹி.. சும்மானாச்சுக்கும்.. தமாசு!!)
நான் காலேஜ் போயே அஞ்சு வருஷம் ஆச்சுங்க, எங்கம்மா அவுங்க அந்த காலத்துல அவிநாசிலிங்கத்துக்கு கொண்டுபோன கூடைப்பையை இன்னும் என் ரூம் மேல் 'லாப்ட்'ல பத்திரமா வச்சிருந்தங்க, அதையெல்லாம் மறுபடியும் உள்ளயே வச்சுகனும்னு அவுங்க ஒரு பக்கம், 'வீடா, குப்பத்தொட்டியா இது?, எல்லாத்தையும் தூக்கு வெளிய எறி'ன்னு எங்கய்யன் ஒருபக்கம். இப்பத்தான் ஒவ்வொரு சண்டையா முடிஞ்சுட்டு இருக்குது.. (ம், அவரவருக்கு தானுங்க தெரியும், ஒவ்வொரு பொருள்லயும் என்னன்னா வரலாறு எழுதியிருக்குதுன்னு..)
ஒவ்வொரு அறையா சுத்தம் சுத்தம் செய்ய செய்யத்தான், எதோ அலிபாபா குகை மாதிரி எப்பவோ வாங்கிவச்ச பொக்கிஷமெல்லாம் கண்னுக்கு தட்டுபட்டுதுங்க,எங்க சித்தப்பா பையனுக்கு வாங்கின தூளிமெத்தை (அவன் இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறான்), நான் நாலாவது படிக்கும் போது எங்கய்யனுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகி அப்போ வாங்கின வெயிட் (கால்ல கட்டி தூக்கி தொங்க விடுவாங்களே அது), 'பேக்' பிரிக்காத எலெக்ட்ரானிக் சைக்கிள் பெல் (என் சைக்கிள எங்கூட்டாளியோட தம்பி எடுத்துட்டு போயே பத்து வருஷம் ஆச்சு), இதுக்கு நடுவால எப்பவோ அலமாரியோட மேலைரையில நான் வச்சுட்டு மறந்து போன ஒத்தை 'கிங்ஸ்'. (நல்லவேளை, அதை எடுக்கும் போது அய்யன் அம்மா யாரும் கிட்டத்துல இல்லை..)
எப்படியோ ஓயாம பெயின்ட் தூசிக்கு நடுவால சண்டை போட்டுகிட்டே, 'இப்படியா வீட்டை வச்சிருப்பீங்க'ன்னு அம்மா மேல பழியபோட்டுட்டு (நீ, குடும்பம் நடத்தும் போது பார்க்கத்தான போறேன்னு வேற பயமுருத்தறாங்க) மறுபடியும் வீட்டுக்குள்ள வந்தாச்சுங்க..
இனி ஒரு வாரம் மறுபடியும் புது பெயின்ட் வாசத்துல படுத்து தூங்கி, சளி புடிச்சு.. அய்யோ சாமி...
இந்த குடைச்சலுக்கு நடுவால "மாப்ள, சிக்கிட்டியா, சொல்லவே இல்லை, எப்ப?, யாரு?"ன்னு கேக்கறவனுக்கெல்லாம், "அதெல்லாம் இல்லைடா சும்மா ரொம்ப நாளேச்சேன்ன்னு பெயின்ட் அடிச்சோம் அவ்வளவுதான்"னு பதில் சொல்லியே வெறுப்பாகிபோச்சுங்க.

ஆனாலும், கலரெல்லாம் மாத்தி, வீடெல்லாம் ஒழுங்கா அடுக்கி வச்சுபார்த்தா.. நம் வூடுங்கூட அழகாத்தாங்க இருக்குது..




1 comment:

Unknown said...

//ஒவ்வொவ்வுக்கும் பெரிய விவாதமே நடத்த வேண்டியதா போச்சுங்க, மரத்தடியே பரவாயில்லை போல.. (ஹி..ஹி.. சும்மானாச்சுக்கும்.. தமாசு!!)//

ராசா, உங்களுக்கு இப்போ சனிதசை நடக்குதா :-))?