Wednesday, July 11, 2007

'வாழக்கா பச்சி' - சமைப்பது எப்படி?

ஊரு உலகத்துல இப்போதைக்கு சமையல் பதிவு போடுறது தான் வழக்கா இருக்கு, நம்ம தான் எப்பவும் ஊரோட ஒட்டாத பயன்னு விலக்கி விலக்கி விட்டுறானுகளே, அதுனால இந்த தடவை ஊரோட ஒட்டி நானும் ஒரு சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டுறலாம்ன்னு பார்க்கிறேன்.

உனக்கு சமைக்கிறது பத்தி என்ன தெரியும்னு நீ இப்ப சமைப்பது எப்படின்னு எழுதப்போற?, அதுவும் பஜ்ஜி சமைக்கிறது பத்தி!!

இந்த லோலாயி பேச்செல்லாம் எல்லாம் எங்கிட்ட வேனாம், நம்ம சூப்பர் ரைட்டரு கூடத்தான் திரைக்கத எழுதறது எப்படின்னு புஸ்த்தகம் போட்டிருக்காரு, அவரு சோலோவா எத்தன வெற்றிகரமான திரைக்கத எழுதியிரருக்காரு சொல்லுங்க பார்ப்போம், அனுபவிச்சு எழுதறது ஒரு வகைன்னா அனுபவத்துல எழுதறதும் ஒரு வகை, நான் ரெண்டாவது வகையரான்னு வச்சுக்கோங்க.

ஒரு வாழக்கா பஜ்ஜி'க்கு இவ்ளோ பெரிய பேர இழுக்கறதெல்லாம் நல்லாயில்ல, பிரகாசரு சப்பாட்டிகல்ல இருக்காருங்கிற தகிரியமா? சரி அத விடு, அப்படி என்ன பஜ்ஜி அனுபவம் இருக்கு உனக்கு.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலுக்கு பொறவால இருக்கற போண்டா செட்டியார் கடையில ஆரம்பிச்சு கோயமுத்தூர் மரக்கடை மலையாளத்தான் கடை, மாம்பலம் ஆரியகவுடா வீதி, இன்னைக்கு மடிவாலா ஐயப்பன் கோவில் கிட்ட நிக்குற தள்ளுவண்டி, காந்திபஜார் டீ.வீ.ஜீ ரோடு கடைசியில இருக்கிற ஐயர் கடை, ஹனுமந்த்நகர் பஸ்டாப்புல ரஜினி வூட்டுக்கு திரும்புற திருப்பத்துல ராத்திரி பத்து மணிக்கு சூடா கிடைக்கிற பஜ்ஜி வரைக்கும் என்னோட பஜ்ஜி வரலாறு சொல்ல ஆரம்பிச்சா அப்புறம் இன்னைக்கு பூராவும் முடியாது, ஆனா என்ன படிக்கறவங்க பாவம், அதுக்காக பூகோள சுருக்கத்தோட நிப்பாட்டிக்கிடுறேன்

சரி பேசிகிட்டே இருக்காத 'எப்படி சமைக்கிறது'ங்கிற சமாச்சாரத்துக்கு வா

வந்தாச்சு வந்தாச்சு. முதல்ல பஜ்ஜி மாவை அளவா உப்பு போட்டு நல்ல தண்ணி வுட்டு கொஞ்சம் கெட்டியா கரைச்சுக்கனும்

பஜ்ஜி மாவா? அதென்னடா அது, அது எங்க கிடைக்கும்.

அட அன்னைக்கு இடுப்பு வரைக்கும் ஒத்த பின்னலும் டைட் ஜீன்ஸுமா ஒரு புள்ளைய பார்த்தமோ, அந்த கடையி பேரு என்ன

இந்தியன் ஸ்டோரு

ஆங். அதேதான் அந்த கடையில கூட வடக்க மூணாவது சந்துல நாலாவது ராக்குல மேல் வரிசையில கூட பஜ்ஜி மாவு வச்சிருந்தாங்க, அதுவும் அனில் மார்க், அங்கயெல்லாம் கிடைக்குது, உனக்கு கிடைக்காத, தெருமுக்கு அண்ணாச்சி கடையில போயி கேளு தருவாரு.

சரி விடு, அண்ணாச்சி கடையில அக்காச்சி சாயங்காலமா தான் வரும், அப்ப போயி வாங்கிட்டு வந்திடுறேன், நீ மேல சொல்லு

நல்ல வாழக்காயா வாங்கிட்டு வந்து தோலை லேசா சீவிட்டு அரிஞ்சு வச்சுகிற. வடக்கஞ்சேரிக்காரன் சிப்ஸ்'க்கு போடுற மாதிரி அரிஞ்சுடாத, நல்ல நீளமா அயிர மீனு அரியற மாதிரி அரியனும். அப்புறம் கரைச்சு வச்சிருக்கிற மாவுல உங்க எளையதளபதி அந்த சூ.. ச்சே யூத்து படத்துல சொல்லுவாரே 'அப்படியே லேசா வயசு பொண்ணு உதட்டுல முத்தம் குடுக்கற மாதிரி பட்டும் படாம மாவுல முக்கி எடுத்து எண்ணையில போடனும்'

ஆமா, அதெப்படி பட்டும் படாம முத்தம் குடுக்கறது

அடப்பாவிகளா! ஏதோ ஜனரஞ்சகமா சொல்லுவமேன்னு எளைய தளபதி வசனத்த சொன்னேன், நான் எதோ ஹாலிடே ப்ரைம் டைம்'ல கேப் ஃபில்லிங்க்கு சமையல் ப்ரோக்ராம் சொன்னா நீ சனிக்கிழமை ராத்திரி லேட்நைட் ஸ்பாட்டுக்கு ப்ரோக்ராம் செய்ய சொல்லுவ போல இருக்கு. அதுக்கெல்லாம் வேற ஆளுக இருக்காங்க.. நமக்கு அந்தளவுக்கு அனுபவம் பத்தாது அதுல..

உனக்கு எதுல தான் பத்துற அளவுக்கு இருக்குது, சரி, பஜ்ஜி சமாச்சாரத்துக்கு வா..

இன்னும் என்னத்த வர்றது.. அதான் எண்ணையில போட்டாச்சே.. நல்லா செவந்து பொறிஞ்சதும் எடுத்து சல்லடை பாத்திரத்துல போட்டு வை. வீட்டுல என்ன பேப்பர் வாங்கற.

ஒன்னாம் நம்பர் தான்

ஒன்னாம் நம்பரா, நீ ரத்தத்தின் ரத்தமாச்சேடா,, நீயுமா? சரி நீயெல்லாம் சகாயத்துல கிடைச்சா சாணிபவுடர கூட சரஞ்சரமா சாக்குல கட்டி வாங்கிற சல்லிபயலாச்சே வேற எத வாங்குவ.
(ஆஹா தொடர்ந்து எத்தன 'ச', மடிச்சு போட்டு எழுதனா அடுத்து கவித எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு கூட வரும் போல இருக்கே)

அதெல்லாம் நீ பேசாத, பேப்பர் வச்சு என்ன செய்யறதுன்னு மட்டும் சொல்லு

பேப்பர் வச்சு எண்ணைய இழு. அந்த பேப்பர் என்னைய இழுக்கலைன்னாலும் எண்ணை நல்லா இழுக்கும். இழுத்ததும், வரமிளகாய் போட்டு ஆட்டுன தேங்காய் சட்னிய தொட்டுகிட்டு கணக்கு பார்க்காம சாப்பிடு, மழை காலத்துல இதமா இருக்கும்.

அடப்பாவி இந்த குறிப்பு சொல்லவா இந்த பாடு படுத்துன.. நாங்கெல்லாம் மழை காலத்துக்கு அடுத்த வீதி கவுடாஷாப்'ல போயி ஒரு பாட்டிலும் கூடவே சூடா ஒரு பொட்டலம் சில்லி'யும் வாங்கிட்டு வந்து சன்னலோரம் உக்காந்தே சொர்க்கத்த பார்துருவோம், பஜ்ஜி சாப்பிட்ட இதமா இருக்குமாம.. திருவாத்தானோட்ட பேசிட்டு கிடக்காத போயி ஆகிற வேலைய பாரு, சும்மா மொக்கைய போடாம..

(வேலையிடத்துல அழுத்தம் கொஞ்சம் ஓவராப்போச்சு அவ்ளோ தான், வேற ஒன்னுமில்ல, ஹி. ஹி.. )

---
#234

7 comments:

அனுசுயா said...

புதினா சாதம், வாழைக்கா பஜ்ஜி என்ன கொடுமையிது ராசா? ஒன்னும் விளங்கல

//ஆஹா தொடர்ந்து எத்தன 'ச', மடிச்சு போட்டு எழுதனா அடுத்து கவித எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு கூட வரும் போல இருக்கே//
அடுத்தது அது வேறயா? ரைட் ரைட் :)

Anonymous said...

இதெல்லாம் ஓவர்..ஹிஹிஹி

ramachandranusha said...

ஐயகோ, தம்பி தவறிழைத்து விட்டாயே? தலைப்பில் சொற்குற்றமும், பொருட் குற்றமும் இணைந்து வருகிறதே? பச்சியை
சமைக்க மாட்டார்கள். போடுவார்கள் அதாவது வாழைக்காய் பச்சி போடுவது எப்படி என்றல்லவா இருக்க வேண்டும்?????

கொங்கு ராசா said...

//ஒன்னும் விளங்கல// நிசமாவா.. அப்போ நான் எலக்கியம் படைக்க ஆரம்பிச்சுட்டனா... ஆஹா :)

துயா >> ஹீ ஹீ..

கொங்கு ராசா said...

உஷா >> எதை தவறு என்கிறீர்கள்..?? வட மொழி கலப்பில்லாமல் நான் பச்சி என்று'ச'கரம் உபயோகித்ததையா அல்லது 'போடுவது' என்று கொச்சையாக சொல்லி தமிழை கொலை செய்பவர்களுக்கு மத்தியில் சரியான வினையாக 'சமைப்பது'என்று நான் சொன்னதையா? ஐயகோ நீங்கள் விந்தியமலைக்கு அப்பால் குடியேறும் போதே நினைத்தேன் இது போன்ற தமிழ்துவேச காத்து உங்கள் மீது அடித்துவிடும் என்று.. அய்யொ.. அக்காய்.. இப்படி ஆகி விட்டதே.. :(

(ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதே :) )

ILA(a)இளா said...

வாத்தி தனியா இருக்காரு அதனால நம்மகிட்ட படம் போட்டு பிலாகுராறு. உமக்கு என்னையா?
அதுசரி, தாராபுரம் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இருக்கிற அண்ணாச்சி கடையில பஜ்ஜி சாப்பிட்டு பாருங்க. எனக்கு தெரிஞ்சு அந்த பஜ்ஜிய அடிச்சுக்க முடியாது. ஒரு டீ வாங்கி ஒரு பஜ்ஜி கடிச்சு, அப்புறமா 23 பஜ்ஜிக்கு காசு கட்டினோம் 4 கூட்டாளிங்களுக்கு. அவ்ளோ ருசின்னா பார்த்துக்குங்களேன்.

Kupps said...

சரியான வினை "பஜ்ஜி இடுவது"....எண்ணையில் இட்டு பொரிப்பதனால் இடுவது என்று ஆகி விட்டது.

இதவிட 'சரியான வினை' வேற வேண்டாம் என்று நினைபது தெரியுது :)