Thursday, October 18, 2007

கற்றது தமிழ்

சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி ஐஸ்கட்டிகளுக்கு நடுவால முன்னாடி போட்டத விட சின்ன டவுசர் போடவிட்டு இடுப்புல் இடுப்புல சேர்த்திவச்சு ஒரு குத்தப்போடுறத விட்டுட்டு, இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..

நாலு வயசுல இருந்து தொடைய தட்டி 'சரிகமபத்நி' கத்துகிட்ட தினவுல ராஜா என்னைக்குத்தான் சுதி விலகாம பாடுவாரோன்னு பேசுன நம்ம சகா மூஞ்சிய பார்த்து "நல்ல" வார்த்தையா நறுக்குன்னு சொல்லிட்டு 'பறவையே எங்கு இருக்கிறாய்'ன்னு நாமளும் கண்ண திறந்துட்டே எங்கயோ பறக்கும் போதும் நல்லாத்தான் இருக்கு..

ஆனா, படம் எப்படின்னு கேட்டீங்கன்னு.. 'போடா லூசு'ன்னு தான் சொல்லனும்.

"அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்
பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து :-) ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று."
அப்படின்னு நம்ம ப்ரகாஷ் சொல்றாரு..

எனக்கு தெரிஞ்சு பராசக்தி காலத்துல இருந்து divided society ப்ரச்சனைய பத்தி எடுத்துட்டு தான் இருக்காங்க... இப்போ என்ன புதுசா.??? எதோ ஐடி'னால மட்டும் தான் இப்படிங்கற மாதிரி நிறையா பேரு எழுதறாங்க, பேசறாங்க.. என்னங்க இது அநியாயம்.. மொத்தமா இந்தியாவ எடுத்துகிட்டா.. சரி வேண்டாம், அது பெரிய ஏரியா.. தமிழ்நாட்டை எடுத்திகிட்ட.. சென்னை'ங்கிற ஒரு பெரு நகரத்துல தான் ஐடி மக்கள் இருக்காங்க.. கோவையில இருக்காங்க. அது ரொம்ப கொஞ்சம்.. மதுரையுல அதைவிட கொஞ்சம்.. இந்த மூணு ஊரையும் விட்டிருவோம்.. இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு தெக்கத்திகுக்கிராமத்த எடுத்துக்குவோம், (அது தான் இப்ப ஃபேஷன், சவுத்துல ஒரு வில்லேஜ்'ன்னு ஆரம்பிச்சா உடனே கோடம்பாக்கத்துல கதை சொல்ல வர சொல்றாங்களாம்.. ) அங்க இந்த மாதிரி சமுதாய பிரிவினை இருக்ககூடாதில்ல.. தினம் தினம் கோழியடிச்சு விருந்து வச்சு கொண்டாடுற விவசாயியும் உண்டு, வருசத்துல அறுபது எழுபது நாள் மட்டும் அரிசி கஞ்சி சாப்புடுற விவசாயியும் உண்டு, அவுங்க economicial status differece'க்கும் ஐடி தான் காரணமா?? என்ன சாமி இது அநியாயம், மாசம் பூராவும் நைட்ஷிப்ட் பார்த்து மாசக்டைசியில 20-25ரூவா சம்பளம் வாங்கி அதுல 10ரூ வாடகைய குடுத்துட்டு பாதிபணத்த ஊருல கூலி வேலைக்கு கூட போக முடியாம கிடக்குற குடும்பத்துக்கு அனுப்பற பலபேரை எனக்கு தெரியும். நானே கிட்டத்தட்ட ஒரு 15-20 பேரை "வெறும் டிகிரி வச்சுகிட்டு என்னங்க செய்யிறது"ன்னு லாரியில க்ளீன்ராவும், சந்தையில லாரிக்கு டோக்கன் போட்டுட்டும் இருந்த ஆளுகள கூட்டுட்டு வந்து BPO'ல தள்ளி விட்டிருக்கேன். அவுங்க வூட்ல எல்லாம் மூணு நேரம் இப்ப அரிசிச்சோறு சாப்பிடுறாங்க.. ஒரு நோம்பிநொடின்னா குடும்பமே சென்னைசில்க்ஸ் போயி நல்ல துணி எடுத்து போடுது. அவன் இங்க ஐடி'யில வேலை பார்க்கிறது தான் குத்தமா படுது உங்களுக்கு.. என்ன சிந்தனை கர்ம்மம்ங்க இது.

இதுல ":சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல்"
ன்னு வேற ப்ரகாஷ் சொல்றாரு.. கண்டிப்பா ஷங்கர் படத்துல சொல்ற தீர்வு எல்லாம் அபத்தம் தான், ஆனா அதே நேரத்துல

"B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு கேக்கிறதும் நீ மட்டும் உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிருக்கே, நான் பிஞ்ச செருப்பு போட்டிருக்கேன்னு, போயி சண்டை புடிக்கிறதும்" எந்த வகையில அபத்தம் இல்லைன்னு என்ககு புரியவே மாட்டேங்குதுங்க.

[ஷங்கர் படத்துல அவர் சொல்ற அபத்த தீர்வுகளாது ஒத்த மனுசன் மொத்த லஞ்சத்தையும் அழிக்கறதுங்கிற மாதிரி மேட்டர், நம்ம பய கவுந்தடிச்சு படுத்துட்டு கனவுல அதை செஞ்சு பார்த்துட்டு, காலையில எழுந்திருச்சு வழக்கம் போல வேலைய பார்க்க போயிடுவான்]

இந்த ஐடி'ங்கிற ஒரு வார்த்தை எனக்கெல்லாம் தெரியவர்றதுக்கு முன்னாடியே வெறும் pucயோ இல்ல +2வோ diplamoவாதான் படிச்சதுனால கடைவீதியில செட்டியார் கடையில கணக்குபுள்ளையாவோ, இல்ல லாட்டிரி கடையில போர்டு எழுதவோ இல்ல சிப்காட்'ல லேத்' ஓட்டவோ போன ஆளுகளுக்கும் டிகிரி முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி கவர்மென்டுலயோ, இல்ல பேங்க்லயோ, எல்.ஐ.சி'யிலயோ வேலைபார்த்தவங்களுக்கும் இடையே economical inequality இருந்துட்டு தான் இருந்துச்சு, 800ரூ/1000ரூ சம்பளம் வாங்கிற ஆளுக 7/8ஆயிரம் சம்பளம் வாங்கிறவங்களால ஏறிப்போன வீட்டு வாடகையும் காய்கறி விலையாலயும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தாங்க.. ஒவ்வொரு தடவை சம்பளகமிஷன் இப்பவும் அதே நிலமைதான்.. எதோ புதுசா ஐடி'ன்னு ஒன்னு வந்திட்டதால தான் இந்த நிலமைன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டிட்டு இருக்கம்னு தான் தோணுது.

Social inequalityங்கிறது தவறான அரசு கொள்கைகளும்ம், தனிமனித சுயநலமும் தான் காரணமா இருந்திருக்கு, இருந்திட்டிருக்கு.. ITன்னால மட்டும் புதுசா எதுவும் ஆயிடல.. 'எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்'னு டீசன்ட்டா சொல்லுவாங்க நம்ம சுத்துவட்டாரத்துல அந்த கதையா சும்மா சும்மா ஐடி'ய மட்டம் தட்டாம.. உருப்படியா எதாவது யாராவது செய்யுங்க.. மொத்த ஐடி சனமும் உங்களுக்கு உறுதுணையாத்தான் இருக்கும் :)

மொத்தத்துல முத்து சொல்ற மாதிரி
"இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்க"

இந்த பந்தா பகட்டெல்லாம் வேண்டாம்னா, தமிழ் படிச்சுட்டு, வாழ்க்கைக்கு (bread winning) எதாவது ஒரு கடையில பொட்டலம் கட்டிட்டு, தனக்கு புடிச்ச தமிழ் மேல நேசத்தோட நாலு பேருக்கு தமிழ் கத்து குடுத்துட்டு இருக்கனும். ஒரு வேளை தமிழே கூட க்ளிக் ஆயிட்டா அப்புறம் கவியரசு மாதிரி அதையும் வித்து பொழைக்கலாம்.. [BPO'ல சேர்ந்து பொட்டிதட்டிட்டு உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிகிட்டு இணையத்துல தமிழ் வளர்க்க கூட வந்திருக்கலாம்] அதை விட்டுட்டு இந்த படத்துல கூட நம்ம ஹீரோ சும்மா சுத்திட்டு ஊருக்கெல்லாம் கிடைச்சது நமக்கு ஏன் கிடைக்கலைன்னு ஒரு போறாமையால, சுயநலத்தால தான் இப்படி லூசுத்தனமெல்லாம் செய்யறது எல்லாம் நல்ல சிந்தனையுமில்ல வெங்காயமும் இல்ல.

Growing economical imbalance is not good.. ஆனா IT is not the (sole) reason for that..
நல்லா கவனிங்க 'Growing'.. இப்ப ஐடி வந்து தான் இதைய புதுசா உருவாக்கிடல.. நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நம்ம ஊருல இருந்திருக்காங்க..

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு 'அபத்தம்' தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

[ பொதுவா திருட்டு சிடி'யில படம் பார்க்கிறது இல்லைன்னாலும், ஒரு வாரம் முன்னாடி எத்தேசையா ஒரு சகா வீட்டு இந்த படம் பார்க்க கிடைச்சது.. பார்த்ததுமே எழுதனும்னு தோனுச்சு.. ஆனா எப்படியோ தள்ளிப்போயிருச்சு. நேத்து வேலையிடத்துல ஆணி கம்மியானதுல சட்டுன்னு எதோ தோணி, கூட இருந்து ரெண்டு தடியனுகள கூட்டிட்டு பார்டர் தாண்டி ஒசூர்ல படத்த போயி பார்த்துட்டு வந்தாச்சு, அதுனால சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்.. மன்னிக்கறவன் மனுசன்.. மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுசன்னு விருமாண்டி கூட சொல்லியிருக்காரு.. மனுசனா நடந்துக்கங்க, ஆமா :) ]

--
#251

14 comments:

karthick said...

/B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு/
வரி விலக்குக்காக தமிழ் எம்.ஏ., வை கற்றது தமிழ் என மாற்றிய இயக்குனரிடம் நாம் என்ன கேட்லாம்.

Kasi Arumugam - காசி said...

//நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நல்ல ஊருல இருந்திருக்காங்க..//

கொன்னுட்டீங்க ராசா.

அனுசுயா said...

காய்க்கற மரந்தான கல்லடி படும் :0

prakash said...

ராசா :

படத்திலே பிரபாகர் கேட்கிற கேள்வியை நீங்க சரியாகப் புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன். தன்னுடைய அத்தனை இழப்புகளுக்கும் காரணம் ஐடிதுறைதான் என்று அவன் தீர்ப்பு அளிக்கிறானா? இல்லையே? தன்னுடைய வயசு, சமமான படிப்பு, அனுபவம் இருக்கிற ஒருவனுக்கும், தனக்கும், லைஃப்ஸ்டைல் அளவிலே ஏன் இத்தனை வித்தியாசம் என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறான். மேலும் 'மவனே ஐடி படிக்காட்டா அப்பீட்டேய்' என்று படிக்கிற காலத்திலேயே எச்சரிக்கை கொடுக்காத அதிகார மையங்களை நோக்கித்தான் அந்தக் கேள்விகளை வைக்கிறான். பிரபாகரின் மனநிலை பிறழ்ந்த சமயம் பார்த்து சாஃப்ட்வேர் நண்பனும், பிபிஓ அப்பாவியும் மாட்டிகிட்டது எதேச்சையானது. சமுதாயத்தைச் சுத்தம் செய்ய்றேங்கற பேரில பார்க்கில தூங்கறவனையும், ரோட்டிலே எச்ச துப்பறவனையும் போட்டுத் தள்ளின அன்னியனை கைதட்டி ரசிச்சமில்லையா? அதே லாஜிக் தான்.

துட்டு சம்பாதிப்பதற்கு நான் என்றைக்குமே எதிரி இல்லை. சொல்லப்போனால், நான் குற்றம் சொல்வதாக நீங்க சொல்ற அதே ஐடிதுறை இல்லைன்னா எனக்கு தினசரி பூவா கிடையாது. ஐடிதுறை நம் நாட்டுக்கு அளித்த பணம், புகழ், சோ கால்ட் மரியாதை, வேலைவாய்ப்பு இத்தியாதிகளை மறுக்கவுமில்லை. ஆனால், நானும் என்னைச் சுற்றி
இருப்பவர்களும் சௌக்கியமாக இருப்பதால், அகில இந்தியாவும், அதே சௌக்கியத்துடன் இருக்கிறது என்று நினைத்தேன் என்றால் என்னை விட கொடுமைக்காரனும் இருக்க முடியாது.

நீங்க சம்பாதிப்பதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், உங்களுக்கு வாய்ப்பு கிடைத்த மாதிரி எல்லோருக்கும் இந்தச் சமூகத்தில் நல்லபடியா வாழ வாய்ப்பு, by default இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் பாருங்கள், அதைத்தான் தப்பு என்கிறேன். அதுவுமில்லாமல், இங்கு இருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஐடி துறைதான் காரணம் என்று அவசர அவசரமாக ஜட்ஜ்மெண்ட் அளித்தார்கள்? இல்லை. இன்னும் இல்லை :-). வீட்டு வாடகை, நிலங்களின் விலை, ஐடி துறை அல்லாத பிற வேலைகளுக்கு ஆள் கிடைக்காமை, ஆராய்ச்சிப் படிப்பில் மாணவர்கள் ஈடுபடாமை, சாஃட்வேர் ஆசாமிகளைக்
குறி வைத்துத் துவங்கும் மால்கள், சினிப்ளெஸ்சுகள் என்று நகர வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களில் ஆய்வு செய்தால், அதிலே ஐடி துறையின் ஊதியம், அவர்களின் லைஃப்ஸ்டைல் பற்றி பேச்சு வரத்தான் செய்யும்.'நாங்க அன்னிய செலவாணி சம்பாதிச்சுக் குடுக்கிறோம்.. அதனால யாரும் எங்களைப் பத்தி எதுவும் பேசக் கூடாது' என்று தடைஉத்தரவு போடமுடியுமா? ஐடி பத்தி பேச்சு எடுத்தாலே உங்களுக்கு அவ்ளோ கோவம் வருமா? :-)அது என்ன யாரும் தொடக்கூடாத புனிதப் பசுவா?

வளர்ச்சி என்பது எல்லாதரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம். நான்
பேசுவது சோசலிசமும் அல்ல, எடுப்பது ஐடி நிறுவனங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையும் அல்ல. சிம்பிள் காமன்சென்ஸ். சமூகத்திலே ஒரு சாரார் மட்டும் வளர்ச்சி அடைந்து, மற்றொரு சாராரின் வாழ்க்கை கவலைக்கிடமாக இருந்தால், அது ரொம்ப டேஞ்சர் என்று நினைக்கிறேன். பெங்களூர் அருகாமையில் இருக்கிற கிராமத்தில் வசிக்கிற ஒர்த்தன், ஒரு நாள், ஒரே ஒரு நாள், Forum க்கு உள்ள ரெண்டு மணி நேரம் செலவு பண்ணான்ன, அடுத்த நாளைக்கு அவனுக்குத் தூக்கம் வருமா? அது சரி, அவன் தலையெழுத்து.. அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? :-) இல்லன்னா,
"அப்படி இல்ல.. எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, நான் தான் சின்ன விஷயத்தைப் பெருசாக்கறேன்னு" சொல்லுங்க, புள்ளி விவரத்தோட வரேன்.

காய்ச்ச மரம், கல்லடி ன்னு கமண்ட் அடிக்கிறதுல இருக்கிற குரூரத்தை, அந்தப் பக்கம் இருந்து பார்த்தா ஈசியா
புரிஞ்சுக்கலாம். "எங்களுக்குத் திறமை இருக்கு, படிச்சோம், உள்ள பூந்தோம்,சம்பாதிக்கறோம், உன்னால முடிஞ்சா நீயும் வேணா வந்து சம்பாதிச்சுக்கோ... ஏன் இந்தப் பொறாமை"... என்று சொல்வதன் இன்னொரு வர்ஷன் தான் அது. " எங்க தாத்தா அந்த காலத்து ஐஏஎஸ். கணக்கு நல்லாவரும்னு என் டிஎன்ஏவிலேயே எழுதி வச்சிருக்கு. எனக்கு மூளை இருக்கு,அறிவிருக்கு, 99.99 % மார்க் எடுத்தேன். எனக்கு நான் கேக்கற காலேஜிலே சீட்டு வேணும். உனக்குத் திறமை இருந்தா நீயும் படிச்சு வா"... என்று ஒரு காலத்துல கோஷ்டி கானம் எழுந்தப்ப, நாம எப்படி ரியாக்ட் பண்ணோம்னு நமக்கு ஞாபகம் இருக்குங்களா? :-)

//சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்//

அது சும்மா ஜோக்குக்குச் சொன்னது... சீரியஸா எடுத்துக்க வேண்டாம்.

பிகு : நீங்க நீங்க ன்னு சில இடங்களிலே குறிப்பிடறது, தனிப்பட்ட முறையிலே உங்களை அல்ல.

கொங்கு ராசா / Raasa said...

//ோட்டிலே எச்ச துப்பறவனையும் போட்டுத் தள்ளின அன்னியனை கைதட்டி ரசிச்சமில்லையா? அதே லாஜிக் தான். // 100% ரைட்டு, அதையே தான் நானும் சொல்றேன்.. ஷங்கர் படத்துக்கு இணையான ஈடான அபத்தம் தான் கற்றது தமிழ் படமும்.. :)

//உங்களுக்கு வாய்ப்பு கிடைத்த மாதிரி எல்லோருக்கும் இந்தச் சமூகத்தில் நல்லபடியா வாழ வாய்ப்பு, by default இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் பாருங்கள், அதைத்தான் தப்பு என்கிறேன்.//
//சமூகத்திலே ஒரு சாரார் மட்டும் வளர்ச்சி அடைந்து, மற்றொரு சாராரின் வாழ்க்கை கவலைக்கிடமாக இருந்தால், அது ரொம்ப டேஞ்சர் என்று நினைக்கிறேன்.//
மறுபடி 100% ரைட்டு, ஆனா இந்த 'நெனப்பு' புதுசா ஐடி வந்ததுனால வரலை..
ஒரு வேளை நகர்ப்புறத்துல ஹிண்டு'வும் எக்ஸ்ப்பிரஸும் படிச்சுட்டு உத்தியோகத்துக்கு போயிட்டிருந்த மத்தியத்தரத்துக்கு வேணும்னா புதுசா அவுங்கள விட சம்பாரிக்கற ஆளுக நிறைய ஆனதுனால புதுசா இந்த நெனப்பு வரலாம், சின்ன சின்ன வேலைய பார்த்துகிட்டு விவசாயத்துலயும், மில்கூலியா வாழ்ந்தவங்களுக்கு இந்த வித்தியாசம் எப்பவுமே கண்முன்னாடியே இருந்தது தான்.. இது ஒன்னும் புதுசில்லைன்னு தான் நான் சொல்றேன்..

//ஐடி பத்தி பேச்சு எடுத்தாலே உங்களுக்கு அவ்ளோ கோவம் வருமா? :-)அது என்ன யாரும் தொடக்கூடாத புனிதப் பசுவா? // எவன்சொன்னான்..? :) ஒரு டப்பா படத்தை வச்சு, அதாவது இவ்வளவு சொங்கியான ஒரு ஆயுதத்த வச்சு இடிக்கறீங்களேன்னு தான் கோவம் :)

முத்து பதிவுல சொன்ன மாதிரி "தப்ப இப்படி எல்லாம் தப்பா சொல்லி கொஞ்ச நஞ்சம் தப்போன்னு யோசிக்கறவங்களையும் இது தான் சரி'ன்னு முடிவு செய்ய வச்சிடுவாங்க போல.."

//சமூகத்திலே ஒரு சாரார் மட்டும் வளர்ச்சி அடைந்து, மற்றொரு சாராரின் வாழ்க்கை கவலைக்கிடமாக இருந்தால், அது ரொம்ப டேஞ்சர் என்று நினைக்கிறேன்.//

//பெங்களூர் அருகாமையில் இருக்கிற கிராமத்தில் வசிக்கிற ஒர்த்தன், ஒரு நாள், ஒரே ஒரு நாள், Forum க்கு உள்ள ரெண்டு மணி நேரம் செலவு பண்ணான்ன,// அவ்வளவு தூரம் ஏன் போறீங்க, புதுசா கல்யாணமான ஜோர்ல அம்மணிய அங்க கூட்டிட்டு போனேன் ஒரு தடவை, அதுக்கப்புறம் கூப்பிடாகூட அவுங்க அங்க வர்றதில்லை.. அங்க போயிட்டு வந்தா தூக்கமே வர்றதில்ல வேண்டாம்னு சொல்லிடறாங்க :)
[ஐடி'யில இருக்கிற எல்லாரும் ஃபோரம் போறதுமில்லை, அது வேற விசயம், எனக்கு தெரிஞ்சு நிறையா ஐடிமக்கள், ஆந்திரா மெஸ் பார்சல் சாப்பாடு சாப்பிட்டு காசு மிச்சம் செஞ்சு ஊருக்கு அனுப்பறதும் உண்டு. கண்ணெதிரே 8 பேர் இப்படி நான் காட்ட முடியும்)

//காய்ச்ச மரம், கல்லடி ன்னு கமண்ட் அடிக்கிறதுல இருக்கிற குரூரத்தை, அந்தப் பக்கம் இருந்து பார்த்தா ஈசியா
புரிஞ்சுக்கலாம்.// ஸாரி அந்த வாக்கியம் எனக்கு உடன்பாடு இல்லைதான் :)

//பிகு : நீங்க நீங்க ன்னு சில இடங்களிலே குறிப்பிடறது, தனிப்பட்ட முறையிலே உங்களை அல்ல.// இது இப்படி தனியா சொல்ற அளவுக்கு நான் மோசமில்லைங்க :)

//"அப்படி இல்ல.. எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, நான் தான் சின்ன விஷயத்தைப் பெருசாக்கறேன்னு" சொல்லுங்க, புள்ளி விவரத்தோட வரேன்.// நான் கண்டிப்பா அப்படி சொல்லலை.. இது பெரிய விசயம் தான், ஆனா இது புதுசா இன்னைக்கு நேத்து ஐடி'கூட வந்ததுங்கிற மாதிரி சொல்றீங்களே, அது தான் இல்லைங்கிறேன்.. மேல காசி'யோட பின்னூட்டம் பாருங்க.


கடைசியா "ஷங்கர் படத்துக்கு இணையான ஈடான அபத்தம் தான் கற்றது தமிழ் படமும்.."

தேவ் | Dev said...

//ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..//

:)))

மோகன்தாஸ் said...

//[ஐடி'யில இருக்கிற எல்லாரும் ஃபோரம் போறதுமில்லை, அது வேற விசயம், எனக்கு தெரிஞ்சு நிறையா ஐடிமக்கள், ஆந்திரா மெஸ் பார்சல் சாப்பாடு சாப்பிட்டு காசு மிச்சம் செஞ்சு ஊருக்கு அனுப்பறதும் உண்டு. கண்ணெதிரே 8 பேர் இப்படி நான் காட்ட முடியும்)//

எப்படிங்க என்னை மாதிரியே யோசிக்கிறீங்க. இருங்க வந்து யாராவது கிணற்றுத் தவளைன்னு சொல்வாங்க ;).

PS: இரண்டு மூணு நாளா சரியா தூக்கம் இல்லை ;)

லக்ஷ்மி said...

தெளிவா எழுதி இருக்கீங்க ராசா. ஆனா ஒன்னு, செலவைக் குறைச்சு ஊருக்குப் பணம் அனுப்பறவங்களோட எண்ணிக்கை ரொம்ப சொற்பமாத்தான் இருக்கும். பர்சன்டேஜ் அடிப்படைல பாத்தா மால்களுக்குப் போற வாய்ப்பும் வசதியும் மென்பொருள் துறைக்காரங்களுக்குத்தான் அதிகம்ன்றதையும் அவங்களைக் குறிவைச்சே கடைவிரிக்கப்படுதுன்றதையும் மறுக்க முடியாது. மால்கள் மட்டுமில்லை, நேரடியா செல்போன் கம்பெனிகளில் ஆட்களைப் பிடிச்சு அங்கேர்ந்து பெரிய மென்பொருள் கம்பெனியின் ஊழியர்கள் நம்பரா எடுத்துகிட்டு அவங்களுக்கு போன் போட்டு கிரெடிட் கார்டு வாங்கிக்கோ.. லோன் வாங்கிக்கோன்னு டார்ச்சர் தர்ர பாங்கிங் ஏஜென்ஸீஸும் இப்பல்லாம் நிறைய ஆயிட்டாங்க. இப்படி ஒரு பெரிய படையே மென்பொருள் மக்களைக் குறிவைச்சு அவங்களை செலவழிக்க வைப்பதே தங்கள் குறிக்கோள்ன்னு அலையறாங்க. தப்பிக்கறவங்களோட எண்ணிக்கை ரொம்பவே குறைவுதான்.

அப்புறம் பிரகாஷ், சங்கர் படத்தை ரசிச்சயே இதையும் ரசிச்சுட்டுப் போன்னு சொல்றது நம்ம அரசியல் கட்சிகளோட தாக்கம் போல இல்லத் தெரியுது? இவங்க கிட்ட கேட்டா அவங்க ஆட்சில பண்ணலையான்னுவாங்க. அவங்க கிட்ட கேட்ட இவங்களைப் பத்தி தெரியாதான்னுவாங்க. அதுபோல் ஒரு அபத்தத்தைக் காரணம் காட்டி இன்னொன்னை நியாயப் படுத்த முடியாதில்லையா?

மோகன்தாஸ் said...

//பர்சன்டேஜ் அடிப்படைல பாத்தா மால்களுக்குப் போற வாய்ப்பும் வசதியும் மென்பொருள் துறைக்காரங்களுக்குத்தான் அதிகம்//

ஃபோரம் மாலின் நிரந்தர வாடிக்கையாளன் என்ற முறையில் சில விஷயங்கள்.

பர்சன்ட்டேஜ் படி பார்த்தா கூட arguably காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான் அதிகம் வருவாங்க; ஃபோரமில் வண்டி கொண்டு வரணும்னா தான் 10ரூபாய் செலவு ஆகும் அப்படியில்லாமல் ஃபோரம் வந்து உட்கார்ந்து அழகுகளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டோ இல்லை காதல் என்னும் இன்பக்கடலில் மூழ்கியிருந்துவிட்டோ போவதற்கு பைசா எதுவும் கேட்பதில்லை ஃபோரம் நிர்வாகம்.

இதை ஒரு வேலையாகவே வைத்துக் கொண்டு சனி ஞாயிறுகளில் ஃபோரத்தின் வெளியிலும் தியேட்டர் பகுதியின் படிக்கட்டுக்களிலும் உட்கார்ந்திருக்கும் மக்கள் ஃபோரத்தில் வாங்க வந்தவர்களாக நான் நினைக்கவில்லை. மெட்ராஸில் பீச் இல்லாத குறையை தீர்த்துவைப்பது
கருடா மற்றும் ஃபோரம் மால்கள் தான்.

அங்கே காசு கொடுத்து பொருள் வாங்குபவர்கள் சாஃப்ட்வேர் மக்கள் தான் என்பதில் எனக்கு இருவேறு கருத்து கிடையாது. ஆனால் வருபவர்கள் என்று பார்த்தால் மற்றவர்கள் அதிகம் இருக்க வாய்ப்புண்டு.

PS: இதுக்கு பேர் தான் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு தொங்குவது என்பது.

PS2: என்னுடன் என் சகோதரிகள் வருவார் என்பதால் என் ஃபோரம் அனுபவங்களைப் பற்றிய வீண் கற்பனைகளைத் தவிர்க்கவும்.

Narain said...

பிரகாஷ் சொன்னதில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடு உண்டு. இந்த சமச்சீரற்ற தன்மை என்பது ஒரு முக்கியமான பிரச்சனை. படத்தில் சில காட்சிகள் தமிழ்சினிமா தான் என்பதில் சந்தேகமில்லை. காதலிக்காக என்பதின் பின்னிருக்கும் தமிழ்சினிமாத்தனம் [உண்மையில் இது உலக சினிமாத்தனம், காதலிக்காக எல்லாம் செய்வது என்பது. சந்தேகமிருப்பின் மேட்ரிக்ஸ் 2 & 3 பாருங்கள், இல்லையெனில் அனாகின் ஸ்கைவாக்கர் - ஸ்டார் வார்ஸ் பாருங்கள்]

இதற்கு முன்னால் இப்படி இல்லையா என்று கேட்டால் கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் யாருக்கும் அடுத்தவர் மீது பொறாமையும், வெறுப்பும் கொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை. 50களில் மிராசுதார்களும், அதற்கு முன்னால் ஜமீன்களும் இருந்த ஊர்தான் இது. ஆனால் ஒரு ஊருக்கு ஒரு ஜமீன் அதனால் பெரியதாக பிரச்சனைகளில்லை. இங்கே கதை வேறு.

தன்னிலையில் உள்ள ஒருவன், சடாலென மாற்றம் பெருவதும், அதனை சமூகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும் எல்லா சமூகங்களிலும் பல பேரின் வயிற்றில் புளியை கரைக்கும். வளர்ச்சி என்பது ஒருமித்த வளர்ச்சியாக "இப்போது" இருக்க வேண்டும் என்பதில் சந்தேகங்களில்லை. இப்போது என்று அழுத்திச் சொல்ல காரணம், இதே படம் 1990களில் வந்திருப்பின் நானே நக்கல் செய்திருப்பேன். புது தொழில்கள், புது பொருளாதார சிந்தனையனைத்தும் தொடங்கிய சமயமது. நாம் உலகமயமாக்கலை தொடங்கி கிட்டத்திட்ட 16 வருடங்கள் முடிய போகிறது. இன்னமும், ஒரு சாரார்தான் இந்த ஏகபோகத்தில் இருக்கவேண்டும், அதை கேள்வி கேட்டால் தப்பு என்பதின் பின்னிருக்கும் அபத்தத்தையும் / அரசியலையும் என்பதிவில் தனியாக எழுதும் உத்தேசமிருக்கிறது. முன்னேறிய நாடுகள் என கருதும் அமெரிக்காவில் கூட விவசாயத்திற்கு மானியமுண்டு. Libralisation, market economy என பல விஷயங்கள் பேசினாலும், ஒரு சாதாரணன் வாழ்வதற்கான சாத்தியங்களும், சுதந்திரங்களும் அமெரிக்காவில் நிறைய உண்டு. இந்தியாவில் கிடையாது. பிரச்சனை அங்கே தான் ஆரம்பிக்கிறது.

உங்களுக்கு சென்னை சுற்றிலும் இருக்கக்கூடிய ஊர்கள் பற்றி ஒரளவிற்கு தெளிவிருந்தால், அவ்வூர்களின் அதாரணமான நில விலையினை பற்றி தனியாக எழுத முடியும். இத்தனைக்கும் 3 வருடங்களுக்கு முன் கட்டாந்தரைகளாக இருந்த இடங்கள் அவை. அவற்றினை இவ்வளவு விலைபெற்ற பொருளாக மாற்றிய பெருமை BPO / IT/ ITES / New Economy தொழில்களில் பணிபுரிவோர்களை சாரும். நீங்கள் எங்கள் ஏரியாவுக்கு வாருங்கள். வேம்புலி அம்மன் கோயில் என நானிருக்கும் கே.கே.நகரில் ஒருபுறம் சீப்ராஸ், ஜெயின்ஸ் என அடுக்கங்கள், அதனாலேயே தள்ளுவண்டியில் வரும் காய்கறிகளின் விலை அதிகம். இதை தள்ளுவண்டி அடுத்த தெரு போனால் காய்கறியின் விலையில் மாற்றத்தினை பார்க்க முடியும். ஆக ஒரு சாராரால் கொடுக்கமுடியும் என்பதால் ஏறும் விலையேற்றம் பல பேரால் கொடுக்க முடியாது என்பது தான் bottomline. இதற்கு சம்பந்தமில்லாமல், ஆனால் சம்பந்த படுத்திக் கொள்ளும் அள்விற்கான இன்னொரு உரல் - http://www.livemint.com/2007/10/17224713/Dear-Rahul-Gandhi.html

மற்றபடி நானும் IT யில் தான் இருக்கிறேன். எனக்கும் படத்தில் வரும் சில காட்சிகளோடு ஒப்புமைகள் இல்லை. ஆனாலும் மொத்தமாக பார்த்தால் பல விஷயங்களில், முக்கியமாக இந்த சமச்சீரற்ற தன்மை என்பதில் முழுக்க முழுக்க உடன்பாடே.

Narain said...

கொஞ்சம் லேட்டா படிச்சாதால, இதை போட முடியல. உலகமயமாக்கம், சந்தை பொருளாதாரம் என பேசுபவர்கள் எல்லோரும் உச்சரிக்கும் ஒரு பெயர் ஐ.எம்.எப்[International Monetary Fund] நாம் பலவிஷயங்களுக்கு அங்கேதான் கையேந்துகிறோம். அப்பேர்பட்ட, புஜபலபராகிரமங்களுடைய ஐ.எம்.எப்பே உலகமயமாக்கலும், அன்னிய செலவாணி அதிகமாக்கலும் தான் சமச்சீரற்றதன்மைக்கு காரணம் என்று இந்த அரையாண்டிய World Economic Outlook/Oct 2007-இல் ஒத்துக் கொண்டிருக்கிறது.

> Over the past two decades, income inequality has risen in most regions and
countries. At the same time, per capita incomes have risen across virtually all
regions for even the poorest segments of population, indicating that the poor are
better off in an absolute sense during this phase of globalization, although
incomes for the relatively well off have increased at a faster pace.
> Technological advances have contributed the most to the recent rise in
inequality. Increased financial globalization—and foreign direct investment in
particular—has also played a role in increasing inequality, but contrary to
popular belief, increased trade globalization is associated with a decline in
inequality.
> It is important to ensure that the gains from globalization and technological
advances are more broadly shared across the population. Reforms to strengthen
education and training would help ensure that workers have the appropriate
skills for the evolving global economy. Policies that broaden the access of finance
to the poor would also help, as would further trade liberalization that boosts
agricultural exports from developing countries.

ஆதாரம்: http://www.imf.org/external/pubs/ft/weo/2007/02/pdf/text.pdf 250 பக்க ரிப்போர்ட், நான் முதல்வன் அர்ஜூன் இல்லை வெறுமனே ரிப்போர்டுகளை தூக்கிப் போட்டு ஜல்லியடிக்க, இதை மொத்தமாக படிக்க நேரமில்லை யென்றாலும், இதில் நான்காவது சாப்டர் மட்டுமாவது படியுங்கள் - Globalization and Inequality

ஆக, இது ஒரு பெரும் பிரச்சனை, இதை வெறுமனே IT Vs. Others என பங்கு பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதை சொல்லும் அதை சமயம், நான் கம்யுனிஸ்டோ, சோசலிஸ்டோ கிடையாது. நான் ஒரு பக்கா சந்தை பொருளாதார ஆசாமி :) மற்றபடி நீங்கள் எழுதியதிற்கு பின்னிருக்கக்கூடிய ஆதாரமான கோவங்கள் எனக்குமிருக்கின்றன என்பது வேறு விஷயம்.

கொங்கு ராசா / Raasa said...

நன்றி லஷ்மி :)

தேவ் :)

// இரண்டு மூணு நாளா சரியா தூக்கம் இல்லை ;)// என்னா வில்லத்தனம் :)

கொங்கு ராசா / Raasa said...

//பிரகாஷ் சொன்னதில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடு உண்டு. இந்த சமச்சீரற்ற தன்மை என்பது ஒரு முக்கியமான பிரச்சனை. படத்தில் சில காட்சிகள் தமிழ்சினிமா தான் என்பதில் சந்தேகமில்லை. காதலிக்காக என்பதின் பின்னிருக்கும் தமிழ்சினிமாத்தனம்// அதே. அதே!!

//ஆனாலும் யாருக்கும் அடுத்தவர் மீது பொறாமையும், வெறுப்பும் கொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை. // இருந்ததே இல்லைங்கறீங்களா? இல்ல அன்னைக்கு இத்தனைப்பேருக்கு தீனி போட வேண்டிய அவசியம் மீடியாவுக்கு இல்லாததால தெரியலைங்ளா?
சினிமாவுலயே எடுத்து சொல்றதுன்னா? 'பராசக்தி'யில பைத்தியாகார வேசத்துல வர்ற காட்சிகளும் வசனமும்.. ரொம்ப பின்னாடி 'நிழல்கள்' படத்துல ட்ரைவ்-இன்'ல ஜனகராஜ் வெளுத்தகட்ட பின்னனியில "அம்மா சோறுபோடுங்க"ன்னு குழந்தைகள் பிச்சைகேக்கிறதும், ரவி ஜனகராஜ போட்டு அடி பின்றதும்.. இன்னைக்கு கற்றதுதமிழ்'ல வர்றதுக்கு டெக்னிக்கல் முன்னேற்றம் தவிற வேற எந்த வித்தியாசமும் இல்லைங்களே.

//ஆனால் ஒரு ஊருக்கு ஒரு ஜமீன் அதனால் பெரியதாக பிரச்சனைகளில்லை.// அது 50கள்ல நடுவால 60/70/80 தொண்ணூரின் ஆரம்பத்துல ஐடி வர்ற வரைக்கும் இந்த பிரச்சனை பெரியதாக இல்லைன்னு சொல்றீங்களா.. - இந்த ஒரு விசயத்துல தான் நாராயன் நான் கொஞ்சம் விலகி நிக்கறேன்.. மத்தபடி கண்டிப்பாக "என்னா ப்ரச்சனை, எல்லாம் நல்லாத்தானே இருக்குன்னு" பறக்கிற க்ரெடிட்கார்ட் தலைமுறை கிட்ட இப்படி எல்லாம் பேசி அடிக்கடி 'அடி' வாங்கிற ஆசாமி தான் நான்.

//மற்றபடி நானும் IT யில் தான் இருக்கிறேன். எனக்கும் படத்தில் வரும் சில காட்சிகளோடு ஒப்புமைகள் இல்லை. ஆனாலும் மொத்தமாக பார்த்தால் பல விஷயங்களில், முக்கியமாக இந்த சமச்சீரற்ற தன்மை என்பதில் முழுக்க முழுக்க உடன்பாடே// கண்டிப்பக எனக்கும்..

//உங்களுக்கு சென்னை சுற்றிலும் இருக்கக்கூடிய ஊர்கள் பற்றி ஒரளவிற்கு தெளிவிருந்தால், அவ்வூர்களின் அதாரணமான நில விலையினை பற்றி தனியாக எழுத முடியும்.// அதெல்லாம் 2000லயே விவரமா வாங்கிபோட்டு துட்டு பார்த்த எமகாதகன் தான்.. அந்த தகிரியத்துல தான 'ஐடி'பெரிய புண்ணாக்குன்னு பந்தா பண்ணிட்டு விவசாயம் பார்க்க போனேன் :)

////ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல் // ப்ரகாஷின் இந்த ஒரு வரியில் கடுப்பாகி :) போட்ட பதிவுதான் இது, மற்றபடி "அதெப்படி ஐடி'ய பத்தி சொல்லலாம்"னு எல்லாம் ஒரு கோவமும் இல்லை.

நன்றி நாராயன்.

ILA(a)இளா said...

எனக்கு வந்த அதே ஆதங்கம்தான் உங்களுக்கும் வந்து இருக்கும். என் பதிவையும் படிச்சுட்டுதான் இந்தப்பதிவு போட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன், நான் சுத்தி வளைச்சு சொன்ன ஒரு விஷயத்தை சட்னு அடிச்சுட்டீங்க.