Friday, September 1, 2006

தேன்கூடு-தமிழோவியம் போட்டி: செப்டம்பர்' 06 தலைப்பு

'உனக்கெல்லாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க பாரு, அவுங்கள சொல்லனும். இது வரைக்கும் எவ்வளவு அருமையா உறவுகள், மரணம், வளர்சிதைமாற்றம்'ன்னு தலைப்பெல்லாம் குடுத்தாங்க, எத்தனை அருமயான படைப்பெல்லாம் வந்துச்சு. நல்லா போயிட்டிருக்கிற போட்டிய சொதப்பிராத, கம்முன்னு பயணம், தோல்வி இந்த மாதிரி எதாவது சொல்லிடு'

இதை தான் தலைப்பா குடுக்கப்போறேன்னு சொன்னதும், நம்ம சகா ஒருத்தன் கிட்ட இருந்து வந்த முதல் ரியாக்ஷன் தான் நீங்க மேலே பார்க்கிறது. அப்படி என்னடா தலைப்பு சொன்னேன்னு கேக்கரீங்களா? அவசரப்படாதீங்க, அதை சொல்லத்தான பதிவு போட்டிருக்கேன், சொல்றேன்.

முதபரிசு வாங்கி, தலைப்பு சொல்ற பெருமையெல்லாம் வாங்கிருக்கோம், சும்மா நீங்க வந்ததும் சொல்லிட முடியுமா? ம்ம் .. (யாருங்க அங்க அற்பனுக்கு வாழ்வு வந்தா..'ன்னெல்லாம் முனங்கிறது?)

சும்மா ஒரு வார்த்தையில தலைப்பு குடுத்துட்டு இருக்காதீங்க, முன்ன மரத்தடி'யில கூட குடுத்தாங்களே 'சிவாஜி வாயுல ஜிலேபி'ன்னு அந்த மாதிரி எதாவது குடுங்களேன்னு, தேன்கூடு நண்பர்கள் கூட சொன்னாங்க. சட்டுன்னு நமக்கு தோணுனது 'கஃப் வச்ச ஜாக்கெட்', பாப்பா கூட ஜாலி' இப்படித்தான்.. 'ஏன் இதுக்கு பதிலா அஞ்சரைக்குள வண்டி'ன்னு தலைப்பு குடுத்திடேன்'னு மறுபடியும் நம்ம சகா உதைக்க வந்துட்டேன்.

என்னடா செய்யலாம்னு பொட்டி முன்னால போயி உக்காந்தா நம்ம மயில்பொட்டியில ஒரு 'thanku - e - card'.... ஆஹா தலைப்பு கிடைச்சிருச்சின்னு அர்ச்சிமிட்ஸ் யுரேகா ய்ரேகா'ன்னு கத்திட்டு ஓடுன மாதிரியெல்லாம் விவகாரமா ஓடாமா, கட்டியிருந்த லுங்கியோடவே ஒரே குதியாட்டமா போயி என் சகா கிட்ட சொன்னேன், அதுக்கு அவன் குடுத்த பதில் தான் மேல சொன்னது.

ஆனாலும் இந்த தடவை அவன் பேச்சுக்கு நான் தலைப்பை மாத்திறதா இல்லை.. பரிசு வாங்கினது நான்.. ஒரே ஒரு ஓட்டு போட்டுட்டு, இவ்ளோ பண்னாட்டு பண்றானுக, அந்த ஒரு ஓட்டுக்கும் 'டென்னிஸ்'ல நான் தான கார்ட் தேச்சேன். பார்ட்டி வாங்கிட்டு ஓட்டு போட்ட உனக்கெல்லம் கேள்வி கேக்க உரிமை இல்லைன்னு சொல்லிட்டேன். :)

நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் என்னைக்காவது யாருகிட்டயாவது லிப்ட் கேட்டிருப்போம் அல்லது குடுத்திருப்போம் இல்லைன்னா ஒரு லிப்ட் கிடைக்கதான்னு ஏங்கி கூட இருப்போம். அது நடு ரோட்டுல நின்னுகிட்டு அடுத்த வண்டிக்காரன் கிட்ட கேக்கிற லிப்ட்'ஆவும் இருக்கலாம் அல்லது வாழ்க்கையில ஒரு தளத்துல இருந்து இன்னொரு தளத்துக்கு போக நமக்கு கிடைக்கிற லிப்ட்'ஆவும் இருக்கலாம்.

"ஒரு லிப்ட் கிடைச்ச போதும்ப்பா, கிளப்பிரலாம்"னு வேலையிடத்துல அல்லது தொழில்ல 'நம்பிக்கை' எட்டிப்பார்க்கிற அந்த வார்த்தைகள எத்தனை தடவை கேட்டிருப்போம், நீங்க கூட சொல்லியிருக்கலாம். கடைசிவரைக்கும் அவனுக்கு ஒரு லிப்டே கிடைக்கலைன்னு விரக்தியா கூட கேட்டிருக்கலாம்.

ஊருக்குள்ளார சும்மாவே சுத்திட்டு இருக்கயேன்னு எல்லாரும் கரிச்சு கொட்டிட்டு இருந்த ஒரு ஆள், ஒரு நாள் வால்பாறையில இருந்து இறங்கும் போது ஒருத்தருக்கு லிப்ட் குடுக்க போயி, அதுனால இப்ப அவர் 'லிப்ட்' ஆகி ரெண்டு தரம் எம்.எல்.ஏ'வாக கூட இருந்தாரு. ஒரு சின்ன லிப்ட் தான்!

ராத்திரி நேரத்துல தனியா நிக்கறானேன்னு பாவப்பட்டு லிப்ட் குடுக்கபோயி கையில கழுத்துல இருந்தத மட்டுமில்லாம வெள்ளி அரைஞான கழட்டி குடுத்தும், வயுத்துல ஸ்டில்ட்டோ குத்து வாங்கி, நுரையீரல் ஓட்டையோட மாசக்கணக்குல ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சவனும் இருக்கான்.

சும்மா நடந்து போனவன, வலிய போயி லிப்ட் குடுத்து, அடுத்த திருப்பத்துல குழியில இறக்கி முதுகெலுமை உடைச்ச கதை கூட நம்மள சுத்தி நடந்திருக்கு.

ஒவ்வொரு லிப்ட்'க்கும் பின்னால ஒவ்வொரு கதை!

அட அடுத்தவங்கள விடுங்க, நமக்கு கூடத்தான்.

காலையில பத்து மணி சென்னை அண்ணா சாலை ட்ராபிக்ல, என்னோட முதல் வெற்றிகரமான இன்டர்வ்யூக்கு போக தேனாம்பேட்டை சிக்னல்ல இருந்து நந்தனம் வரைக்கும் லிப்ட் குடுத்திருந்தவர் போட்டிருந்த சட்டையோ முகமோ இன்னைக்கு ஞாபகம் இல்லை, ஆனா போன வாரம் கார்ப்பரேஷன் சர்கிள்ல இருந்து ஜங்ஷன் வரைக்கும் நான் லிப்ட் குடுத்தவங்க கிட்ட இருந்து அடுத்த நாள் காலையில வந்த 'thanks e-card'அ பார்த்ததும், அந்த பதட்டமான குரலும் , (குர்லா டைம் சேஞ்ச் பண்ணிட்டாங்களாம்.. ரிசர்வேஷன் டிக்கெட்ல போடவே இல்லை) அந்த சென்ட் வாசமும் (ஆர்ச்சீஸ் டீப் க்ரீன்?) ஞாபகம் வருது. :)
(லிப்ட் குடுத்த கேப்'ல மெயில் ஐடி வரைக்கும் குடுத்திட்டயான்னு எல்லாம் கேட்டு, விவாகரத்தை கிளப்பக்கூடாது, அதெல்லாம் அப்புறம் நம்ம பதிவுல வச்சுக்கலாம், யூ நோ? திஸ் ஈஸ் அஃபீஷியல் ஃபார் தேன்கூடு.. ஓகே?)



இவ்ளோ மகத்துவம் வாய்ஞ்சது 'லிப்ட்', அதுனால இந்த மாசத்துக்கான (செப்டெம்பர் 06) தேன்கூடு தமிழோவியம் போட்டிக்கான தலைப்பு

'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'

அவ்ளோதான், மக்களே இனி என் பேரை காப்பாத்தறது உங்க கைவிரல்ல மாட்டிட்டு முழிக்க போற கீ போர்ட்ல தான் இருக்கு.

எனக்கென்னமோ வழக்கம் போல நட்பு, காதல், நினைவுகள், நம்பிக்கை'ன்னு சென்டியான கதைகளாகவோ, இல்லை லிப்ட் கேக்கிறது வச்சு தமாசா'ன கதையா மட்டும் இல்லாம இந்த தலைப்புக்கு யாராவது ஒரு நல்ல க்ரைம்/ஹாரர் கூட முயற்ச்சி செய்வாங்கன்னு தோணுது. செய்வீங்க தானே.. ?:)

போட்டியில கலந்துக்கபோறவங்க எல்லாம் ஜூட்.. வாழ்த்துக்கள்.

மக்களோடு மக்களா, நானும் உங்க படைப்புகளை படிக்க காத்திட்டிருக்கேன்.. அடிச்சு ஆடுங்க பார்க்கலாம்.. :)

அடச்சே.. ஒரு மேட்டர விட்டுட்டேன் பார்த்தீங்களா.. இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி குடுத்த தேன்கூட்டிற்க்கும், தமிழோவியத்துக்கும் .. ரொம்ப தாங்ஸ்ப்பா'

--
கூடுதல் தகவலுக்கு>>


போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php

படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - செப்டம்பர்' 20, 2006

செப்டம்பர்' 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் செப்டம்பர்' 26-27 அறிவிக்கப்படும்.

--
#204

28 comments:

ILA (a) இளா said...

பொள்ளாச்சிகாரரே!

நல்லா இரும்யா. நல்லா!!!

Anonymous said...

'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா'
நல்ல தலைப்பு ராசா. கலக்கல் மாதம் ஆரம்பம். ஒன்னு மட்டும் நிச்சயம் புதுசா வலைப்பதிவில் எனக்கு பிடிச்ச வெட்டிப்பய, ராசுக்குட்டி கலக்க போறார் பாருங்க. நமக்குதான் ஒன்னும் தோணமாட்டேங்குது.

SP.VR. SUBBIAH said...

சொல்லீட்டில்ல சாமி!
எழுதி, நம்ம அய்யன்ட்ட கொடுத்தனுப்பிச்சிடுறேன் சாமி!

Udhayakumar said...
This comment has been removed by a blog administrator.
பொன்ஸ்~~Poorna said...

Super ராசா.. நல்ல தலைப்பு :)

அருள் குமார் said...

//சும்மா நடந்து போனவன, வலிய போயி லிப்ட் குடுத்து, அடுத்த திருப்பத்துல குழியில இறக்கி முதுகெலுமை உடைச்ச கதை கூட நம்மள சுத்தி நடந்திருக்கு.//

ஆமாங்க! நான் எங்க பாட்டி ஊர்லேர்ந்து(கிராமம்) விருத்தாசலத்துக்கு அப்பாவோட ஸ்கூட்டர்ல போனபோது ஒரு முறை இப்படி பண்ணிட்டேன்! ஆனா முதுகெலும்பு அளவுக்கெல்லாம் போகல. சின்ன பெரிய சிறாய்ப்புகளோட சரி. "என்னா தம்பி இப்படி பண்ணிட்ட..?!" என்று கேட்டுவிட்டு வண்டியை பொறுக்குவதற்கு உதவியதுடன், மீண்டும் என்னுனேயே நம்பிக்கையாக ஏறி வந்த அந்த கிராமத்து மனிதரை மறக்கவே முடியாது!

ம்.. வித்தியாசமான தலைப்புதான்... பாக்கலாம் :)

துளசி கோபால் said...

போட்டிக்கு ஒரு லிஃப்ட் கொடுத்தாச்சு:-))))

கூந்தல் இருக்கறவன்(ள்) அள்ளி முடிஞ்சுக்கட்டும், என்னா நாஞ்சொல்றது?

துளசி கோபால் said...

'இருக்கறவர்'னு போட்டுருக்கலாமோ?

ILA (a) இளா said...

'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா'
நல்ல தலைப்பு ராசா. கலக்கல் மாதம் ஆரம்பம். ஒன்னு மட்டும் நிச்சயம் புதுசா வலைப்பதிவில் எனக்கு பிடிச்ச வெட்டிப்பய, ராசுக்குட்டி கலக்க போறார் பாருங்க. நமக்குதான் ஒன்னும் தோணமாட்டேங்குது.

ராசுக்குட்டி said...

ராசா... ஒரு முடிவோடத்தான் கிளம்பிருக்கீங்க...

லிப்ட் குடுக்கும்போது எப்படிய்யா மெயில் ஐ.டி கை மாறுச்சு... அத ஒரு பதிவா போட்ட்ருங்களேன்!

அன் அப்போஸ்ட்டா அதுக்கு மொத பரிசு குடுத்துரலாம் இந்த மாதம்!

Anonymous said...

உங்களுக்கு போய் ஓட்டு போட்டு அவார்டு குடுத்த மக்களுக்கு நல்லா வேணும். பாவம்

Pavals said...

இளா >>
//நல்லா இரும்யா. //
நான் நல்லாத்தான் இருக்கேன்.. தலைப்ப பார்த்துட்டு உங்களுக்கு தான் எதோ ஆயிடுச்சு போல?

சுப்பையா >> எழுதி தள்ளுங்க அய்யா.. அதுக்கு தான காத்திட்டு இருக்கோம்

பொன்ஸ் >> நன்றி.. அப்படியே சூப்பரா ஒரு கதையும் எழுதிடுங்க.. ஆமா, கப்பல்ல எல்லாம் லிப்ட் கேக்க முடியுமா (ஒரு ஒன்னரை மணி நேரம் ஹாலிவுட் படத்துக்கே, ஒன்லைனர் சொல்றியே ராசா.. ம்ம் :) )

Pavals said...

அருள்குமார் >> //பார்க்கலாம்// கண்டிப்பா பார்க்கனும் :)

துளசி >> 'லிப்ட்' குடுத்ததுக்கு நன்றி

ராசுகுட்டி >> மெயில் ஐடி மேட்டரெல்லாம் கேக்க கூடாது, அதெல்லாம் அப்புறம்.. இப்போ போட்டி முக்கியம்.. இந்த தடவை ஒரு பத்து படைப்பு எதிர்பார்க்கலாமா ? :)

WA >> X-(

Pavals said...

ஹரன்ப்ரசன்னா >> வாழ்த்துக்கு நன்றி..
//மரத்தடியில் வரவில்லை. ராயர் காபி க்ளப் குழுமத்தில் வந்தது.//
ஓஹோ.. ரைட்டு


பாருங்க மக்களே.. ராசா, அந்த ரெண்டு குழுமத்திலயும் இருந்திருக்கான்.. சும்மா லேசு பட்ட ஆளில்ல :)

Anu said...

Just saw this
wow..such a different tilte
REally nice

Jeyapalan said...

தமிழோவியம், தேன் கூடு நடாத்தும் போட்டி. தமிழில் எழுத வேண்டும் என்பது சொல்லாத சட்டம் என நினைத்தேன். இப்பொழுது தலைப்பைப் பார்த்தால், தங்கிலீசு. பேச்சு வழக்கில் என்னத்தையாவது கலந்து குழைச்சுப் பேசிக் காலத்தைக் கடத்தி விடலாம். ஆனால் எழுத்தில், உயிரோட்டமான படைப்புக்களைக் கொடுக்கும் போதாவது, தமிழை கொல்லாமலிருக்கலாமே. தலைப்பை மாற்றினால் சந்தோசமடைவேன்.

Boston Bala said...

Jeyapal,
Suvaiyaaana titlekku Suvaiyaana Karuthu. Lack of thamizh fonts :-( mannikka...

After your feedback, I got the folloing ideas....

1. Konjam Lift Kidaikkumaa - Lift kind of words does not need a Lift by using them. That could be the implicit rasoning of the title. everybody is using english for day to day use; then they use
tamil just for mundane purposes.

2. Tamil needs to a lift - how to bring it to common man? Instead of lift, what are the suitable tamil words. How a commoner can use it on day to day life without sounding like a pulavar. what should be done

ராசுக்குட்டி said...

//இந்த தடவை ஒரு பத்து படைப்பு எதிர்பார்க்கலாமா ? :)//
ராசா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...

இளா வேற மேல ஏதோ கலாசராரு... நான் இந்த பக்கமே வரலய்யா!

Pavals said...

ஜெயபால் >> அடுத்த முறை ஜெயிக்கும் போது கண்டிப்பா தமிழ்ல தலைப்பு குடுக்கறேன்.. இந்த தடவை இதை எப்படி தமிழ் படுத்தறதுன்னு தெரியாததால.. உங்களை சந்தோஷப்படுத்த முடியல.. :(

அப்புறம் நம்ம நினைச்சா எல்லாம் தமிழை கொல்லவும் முடியாது'ங்கிறது 'என்' அபிப்பராயம்..

Pavals said...

பாபா >> எதோ பெரிய சமாச்சாரம் பேசியிருக்கீங்க.. ம்ம்.. :)

ராசுகுட்டி >. என்னாங்க இது? இப்படி எல்லாம் ஒதுங்கினா எப்படி.. எதிர்பார்ப்பு கூடியிருக்கறதுனால வர்றது தானே அது..

மணியன் said...

இராசா, நீங்கள் கதை தலைப்பையும் கொடுத்து கதை கருவினையும் கொடுத்து விட்டீர்கள்ளே :) நீங்கள் சொன்னவற்றிலிருந்து விலகி ஒன்றும் யோசிக்க முடியவில்லை. ஆக உங்கள் one linersஐ இலக்கியத் தரத்துடன் விரிவுபடுத்துபவர்களுக்குள் தான் போட்டியே!

வயசுக் (வயதான)கோளாறு: Archies Deep Green பெண்களுக்கான சென்ட்தானே.. அவங்கதான் நன்றிக் கடிதம் எல்லாம் போடுவாங்க :))

Pavals said...

மணியன் >> அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. புதுசா அடிப்பாங்க பாருங்க.. கொஞ்சம் குழப்பி விடத்தான் நானே ரெண்டு மூணு கருவை சொல்லிட்டேன்.. புதுசா யோசிக்கனும்னு கொஞ்சம் மெனக்கெடுவாங்க இல்ல.. இல்லாட்டி நம்மள மாதிரி ஆளுக கொசுவர்த்தி சுத்தி சுத்தி மக்களுக்கு போர் அடிச்சுடும் பாருங்க.. :)

அப்புறம்.. ஆர்ச்சீஸ் டீப் க்ரீன் பெண்களுக்கானது தான்.. (இல்லாட்டி லிஃப்ட் குடுத்திருப்பமா, இல்ல அதை தான் ஞாபகம் வச்சிருப்பமா?)
உங்க காலத்துலயும் இந்த 'வாசம்' உண்டா ;)

Jeyapalan said...

பாஸ்டன் பாலா, உங்கள் ஆதரவுக்கு நன்றி.
கொங்கு ராசா,
"லிப்ட்" என்பதற்குத் தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையென்றால் சரி. உங்களுக்கு உதவியாக இதோ.
"கொஞ்சம் ஏற்றிச் செல்கிறீர்களளா?"

அடுத்து; தமிழைக் கொல்வது பற்றி உங்கள் கருத்தையும் தெரிவித்திருந்தீர்கள்.
//
அப்புறம் நம்ம நினைச்சா எல்லாம் தமிழை கொல்லவும் முடியாது'ங்கிறது 'என்' அபிப்பராயம்..
//
நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது நக்கலா? ஆங்கிலத்தில் பிழையாகப் பேசுவோரைப் பார்த்து "இராணியைக் கொல்லாதே" எனச் சொல்லும் வழக்கு ஆங்கிலத்தில் உண்டு. அதற்கொப்பமான கருத்தே "தமிழ்க் கொலை" என்பதற்கும்.

நன்றி,
அன்புடன்
ஜெயபால்

இரா.சுகுமாரன் said...

இந்த நாட்டில தமிழில் தலைப்பே கிடைக்கலியா?.

தமிழில சொல்ல முடியலைன்னா அதை மொழி பெயருங்கள் அல்லது அந்த தலைப்பையே கொடுக்காதீங்க.

அது தான் தற்காலத் தமிழர்கள் தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாக இருக்கும்.

Pavals said...

ஜெயபால் நீங்க சொல்ல வந்தது புரிஞ்சுதுங்க.. தமிழ்ல குடுத்திருக்கலாம் தான். ஆனா எனக்கென்னமோ இந்த தலைப்புக்கு அப்படி தோணலை.. 'லிஃப்ட் கிடைக்குமா?'ன்னோ இல்ல ' அது வரைக்கும் ட்ராப் பண்றீங்களா?ன்னோ தான் கேட்டு பழக்கம். அப்படியே வந்திருச்சு..

அப்புறம் நீங்க சொன்ன "கொஞ்சம் ஏற்றிச் செல்கிறீர்களளா?" இது முழுமையா இல்லைன்னு நினைக்கிறேன்..

//நக்கலா// குத்தலா எல்லாம் சொல்லைங்க. கோவிச்சுக்காதீங்க.. நம்ம பேச்சு வார்த்தைகளே அப்படித்தான் இருக்கும்.. :(

இதுக்கு மேல 'இங்க' நான் தொடர விரும்பலை..

Pavals said...

இரா.சுகுமாரன் >>
//இந்த நாட்டில தமிழில் தலைப்பே கிடைக்கலியா?.// கிடைக்கும்ங்க.. ஆனா இது அப்போதைக்கு எனக்கு தோணுச்சு, புடிச்சிருந்துச்சு..என்ன செய்ய.. இன்னும் நிறையா பேருக்கு வேற புடிச்சிருக்காம்..

//மொழி பெயருங்கள் அல்லது அந்த தலைப்பையே கொடுக்காதீங்க.// மன்னிக்கவும், நமக்கு சொல்புத்தியே கிடையாது.. :)

ஓகை said...

பாபா, ராசா,

இந்தப் பதிவைப் பார்த்தீர்களா?

http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post.html

உங்களைக் குறிப்பிட்டு எழுதியதற்கு கோவிக்காதீர்கள் ராசா. என் ஆதங்கத்தையே வெளிப் படுத்தினேன்.

மதுமிதா said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்

நல்லா யோசிச்சு தலைப்பு வெச்சதுக்கு
நன்றி ராசா:-)

அடுத்த தலைப்பு என்ன
யோசிங்க