Thursday, February 27, 2014

Monday, February 3, 2014

கனவின் கனவே - லூசியா


லூசியா.. வெகுநாட்களாக கிடப்பில் போட்டுவைத்து, நான் சமீபத்தில் பார்த்த, முதன்முதலாக இணையத்தில் தரவிறக்கி பார்த்த, இரண்டாம் முறையும் பார்த்த - ஒரே கன்னடத்திரைப்படம். LUCIA.

கன்னடத்திரைப்படங்களில் தற்போதைய நிலை.. தரம், அவர்கள் எப்படி உன்னதமான சினிமாக்களை அந்தக்காலத்தில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. இன்னும் எவ்வளவு அருமையான படைப்பாளிகள் அங்கே யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள், இந்த படத்தின் கதை எப்படி சென்ற இடத்தில் எல்லாம் நிராகரிக்கப்பட்டது, பின்னர் crowd financing மூலம் எப்படி இந்த லூசியா எடுக்கப்பட்டது.. அதன் மூலம் மற்றவர்கள் (முக்கியமாக தமிழ் சினிமா வெற்றியாளர்கள்) கற்றுக்கொள்ள வேண்டியது என்ன.. இன்னபிற, சமூக -பண்பாட்டு-கலை-அற-ஈனவெங்காயங்கள் எல்லாம் கொண்ட விமர்சனங்கள் நிறைய வந்திருக்கவேண்டும், ஒன்லைனர்கள் தவிர நான் எந்த தமிழிணைய லூசியா விமர்சனங்கள் எதுவும் (இன்னும்) படிக்காததால் சுட்டி கொடுக்க முடியவில்லை..

லூசியா என்ற பெயரே, கொஞ்சம் ஆர்வமாக‘எட்டிப்பார்க்க’ வைத்த பெயர் தான்.. அதற்கு, இலவசமாக இணையத்தில் கிடைத்ததையெல்லாம் இறக்கும்/இரக்கும் வியாதி உச்சத்தில் இருந்த காலத்தில் சப்டைட்டிலும் இல்லாமல் முழுப்படத்தையும் ம்யூடிலேயே பார்த்த ஸ்பானிய ’செக்ஸ் & லூசியா’ திரைப்படத்தில் அந்த ’லூசியா’ எனும் சொல் ஞாபகம் இருந்தது தான் காரணமாக இருக்கவேண்டும்.அதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என்று இந்த படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. நிம்மதி.

கனவுகள்,கனவுகளுக்குள் கனவுகள், நிகழ்வுகளோட சங்கமிக்கும் கனவுகள் என்று நோலனார் நமக்கு திகட்ட திகட்ட காட்டிய களம் தான்.அத்தகைய பிரம்மாண்டங்கள் எல்லாம் இல்லாமல், அந்தரத்தில் பல்டி எல்லாம் அடிக்காமல், கிடைத்ததில்  கனகச்சிதமாக அடித்து விளையாடியிருக்கிறார்கள். உறக்கமின்றி தவிக்கும் ஒருவன் உறக்கத்துக்காக ‘லூசியா’ என்ற ஒரு தெருவோர வஸ்த்துவை எடுத்துக்கொள்கிறான். ‘Lucid Dream'நிலைக்கு கொண்டு செல்கிறது.அந்த கனவையும் நிகழ்வையும் கனவின் கனவையும் மாற்றி மாற்றி திரையில் நமக்கு எந்த குழப்பமும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் இரண்டு நிமிட நூடில் கருமாந்திரம் போல ஆரம்பமும் முடிவுமற்று அலங்கோலமாய் போய்விட சாத்தியமுள்ளதை அழகாக ஒரு தேர்ந்த பரோட்ட மாஸ்டர் போட்ட முட்டைகொத்து சாப்பிட்டால் எப்படி கொஞ்சம் கூட பரோட்டாவின் மைதா அரூபருசி தெரியாமல், முட்டையும் தக்காளியும், சால்னாவும், குருமிளகும், வெங்காயமும் கண்ணுக்கு தனித்தனியாக தெரிந்தாலும், நாவுக்கு ஒரு சேர சேர்ந்து ருசிக்குமோ அது போல.

கதை? அதெல்லாம் வழக்கம் தான்.

(1)
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டு பெரும்பணத்துடன் அனாதையாக வாழ்ந்து, சினிமா நடிகனான புகழ்பெற்ற பின்னும் உள்ளூர ‘ஆள்கூட்டத்தில் தனியே’ ரேஞ்சில் நிஜ அன்புக்காக ஏங்கும் ஒரு ‘நிக்கி’. அவனுக்கு கிடைக்கும் ஒரு காதல், இழப்பு, விரக்தி.கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்ட ஆந்திரா தயாரிப்பாளர், தமிழ் இயக்குனர், வழியும் சக நாயகி, நிழல் உலக வசூல்கள்.

(2)
சிறு கிராமத்தில் இருந்து வந்து ஒரு மாநகரத்தின் ஓரத்தில் வாழ்ந்துகெட்ட திரையரங்கில் உதிர்ந்துகொண்டிருக்கும் கூரைக்கு கீழ் பார்வையாளர்களுக்கு இருட்டில் உட்கார இடம்காட்டும் ‘டார்ச் போடும்’ வேலையை விசுவாசமாக பார்த்துக் கொண்டு, முதலில் உதாசீனப்படுத்திய சூப்பர்-பேமிலி பிகரை செண்டியாக நடந்து மயக்கி, அவளும் வந்து இவனை கொஞ்சமாவது செல்லுபடியாக்க இங்கிலீசு எல்லாம் கத்துகொடுக்க முயற்சிக்கும் செல்வராகத்தனம் பூசிய விக்கிரமன் பட நாயகன் போல் ஒரு ‘நிக்கி’.

ரெண்டு லைனுமே, தாழ்வுமனப்பான்மையில் காலங்காலமாக தவித்துக்கொண்டிருக்கும் ஒரு சாமன்ய ரசிகனுக்கு அப்படியே லட்டு மாதிரி.. கூட்டமா போயி, இருட்டில விசிலடிச்சு, காகிதத்த பறக்கவிடு மனசுகுள்ளார பீலிங்க்சோட, மகிழ்ச்சியா படம் பார்த்துட்டு வெளிய வர வைக்க முழு காரண்டியான களம், இதை வச்சுகிட்டு எப்படிய்யா.. பெஸ்டிவல், விருது எல்லாம், அது தான் டெக்னிக்கி :) விஞ்ஞானம்.!!

இதில் ஒருவனின் கனவில் இன்னொருவன், அவன் கனவில் இவனா, இவன் கனவில் அவனா என்று பார்வையாளனை அப்படியே மிதக்கவிட்டு, சுவாரஸ்யமா முடிச்சை இருக்கி.. அழகா கொஞ்சம் சுமாராவே அவிழ்க்கிறார்கள். இந்த இரண்டு கனவுக்கு நடுவில் ஒரு குற்றம், போலீஸ், தனியார் டிடெக்டிவ், புலனாய்வு, ஆஸ்பத்திரி .. இன்னும் சில.

இப்படி ஒரு படத்துக்கு முதுகெலும்பு.. எது படத்தொகுப்பாளர் தான். கச்சிதமா வெட்டி ஒட்டியிருக்கார். நாயகன் சதீஷ் - அட்டகத்தி படத்தில் தினேஷை பிடித்த அளவுக்கு இவரையும் பிடித்தது... வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.. இரண்டு கலரில், கனவிலும் நினைவிலும் வருபவர் வேறு வேறோ என்று சில நிமிடங்கள் நினைக்குமளவுக்கு அற்புதமாக நடை
பாவனை பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். எதாவது நல்ல தியேட்டர், ஆர்ட் ஹவுஸ் என்று சிக்கி பிழைத்துகொள்ள வேண்டும்.. வேறு என்னத்த சொல்ல. நாயகி ஸ்ருதி - அழகு, பிடிஎம் காபிடே’யில் கூட இதே போல்.. சரி வேண்டாம், அது நம் பர்ஸனல் :)  கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம். அல்லது பின்னர் வசனங்களில் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக செய்தார்களோ என்னவோ, சில இடங்களில் உதட்டுக்கு ஒட்டாமல் ஓடியது. சப்டைட்டில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஓவர் தான் என்றாலும்.. சொல்ல வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறதே.

நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்காம், வாங்க இருக்காம்.. ம்ம் தியேட்டரில் பார்த்திருக்கலாம். விட்டாச்சு. அதுக்கு பரிகாரமா இந்த இயக்குனரின் அடுத்த படத்தை அரங்கத்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தாயிற்று.. பார்க்காதவர்கள் இறக்கி பார்க்கவும். அல்லது 5$ கொடுத்து பார்க்கவும் நல்ல ப்ரிண்ட், சப்டைட்டிலோடு கிடைக்கும். எறக்கசெலவழித்த அலைத்தொகுப்புக்கும் பார்க்க செலவழித்த நேரத்துக்கும்.. இதை எழுதத்திருடிக்கொண்ட நேரத்துக்கும் சேர்த்தே..
**பைசா வசூல் - மீட்டர் வட்டியுடன்**