Wednesday, August 29, 2007

ஒரு கவிஞன் ஒரு கவிதை

நம்ம நடேசு இருக்கான் பாருங்க நடேசு, அவனே தாங்க, அவனும் வெகு காலமா இந்த கவிதை கிவிதை எல்லாம் எழுதிட்டு தான் இருக்கான், என்ன ஒரு பயலும் அதை கவிதைன்னு ஒத்துகிடறதில்ல.. அவன் அதுக்கெல்லாம் சளைச்சுகிறதே இல்லை. 'நாலு பேரு நாலும் சொல்லுவாங்க, அதுக்காக நம்ம நம்ம கடமைய கை விட்றமுடியுமா என்ன?'ன்னு சொல்லிட்டு எழுதி தள்ளிகிட்டே தான் இருக்கான். இன்னைக்கு நேத்து ஆரம்பிச்சதுங்களா அது, பத்தாப்பு படிக்கும்போதும் அமராவதி ஸ்கவுட்கேம்ப்'ல மூணு நாளும் பார்க்கும் போதெல்லாம் இவன பார்த்த்து சிரிச்ச அவிலா'ப்ரின்ஸ்மேரி, நாலவது நாள் கேம்ப் முடிஞ்சு அவுங்கவுங்க ஸ்கூல்பஸ்ல ஏறும் போது இவன்கிட்ட ஒரு 'சீ..யூ' கூட சொல்லிக்காம போனாளே, அன்னைக்கு தான் அதுவரைக்கும் கோணக்கால் நடேசனா சுத்திட்டு இருந்தவன் 'நடேச கவிஞனார்'ன்னு ஆனது, அந்த கொடுமை இன்னைக்கு வரைக்கும் தொடருது.

ஒரு 'சீ.. யூ' கூட கிடைக்கலையேன்னு மனசு வருத்தப்பட்டு எழுத ஆரம்பிச்சது, அது பாட்டுக்கு காலத்துக்கு தகுந்தாப்புல விதவிதமா மாறிட்டு தாங்க இருந்துச்சு, மூணு வரியுல எழுதினா ஹைக்கூ, மடிச்சு போட்ட உரைநடையா இருந்தா புதுக்கவிதை, செவப்பு சாயத்துல அடிபட்ட மக்களுக்காக, பிரிவு வலியுல, சமுக கோவத்துல'ன்னு பல விதமா எழுதிதள்ளிட்டடே தான் இருக்கான். ஆனா பாருங்க எழுதினது அத்தனையும் எல்லாருக்கும் வாசிக்க விடறதில்லை.. எதுக்கு வம்புன்னு தான். மனுசங்க எல்லா நேரத்துலயும் அஹிம்சைய கடைபுடிக்கறதில்லையே, பல நேரத்துல கவிதைக்கு விமர்சணமா அடி உதை கிடைக்க ஆரம்பிச்சதும், அவனுக்குன்னு தனியா ஒரு நோட்ட போட்டு வச்சுக்க ஆரம்பிச்சுட்டான்.எங்க கூட்டத்துல என்னதான் அவன லூசு நடேசுன்னு கூப்பிட்டாலும் இந்த வகையில நடேசு புத்திசாலி தான்.

சில நேரத்துல அவன் எழுதிற கவிதை அவனுக்கே புடிச்சு போச்சுன்னாவோ, இல்ல அவனுக்கு அடுத்த தடுப்புல உக்காந்திருக்கற சின்ன புள்ளைக்கு புடிச்சிருந்தாலோ, பொதுவா அப்ரைசல் கிட்ட வர்ற காலத்துல இவன் கிறுக்கிறது அந்த புள்ளைக்கு புடிக்க ஆரம்பிச்சுரும். அந்த மாதிரி நேரத்துல தான் நமக்கு கோடும் கட்டமும் சரி இல்லாம போறது. அப்படி புடிச்சு போன கவிதை எல்லாம் நம்ம மெயில் பாக்ஸ்ல வந்து நிறையும். அப்படித்தான் போன வாரம் ஒரு கவிதை வந்துச்சு, எனக்கே அது ரொம்ப புடிச்சிருந்துன்னா பாருங்களேன். :) சிவப்போ, வலியோ, கோவமோ இல்லாம ஒரு சிற்றின்ப கவிதை (எது சிற்றின்பம், எது பேரிண்பம்'ன்னு ஒரு குளருபடி இருக்குதுதான்.. இப்போதைக்கு நடைமுறையில இருக்கிற கருத்த எடுத்துக்குவோம்) உருகி உருகி ஒரு காதல் கவிதை, ஒரு காதலன் தன் காதலிக்காக தன் காதலை சொல்ல எழுதின மாதிரின்னு வச்சுக்கோங்களேன். காலம்போன காலத்துல நடேசனுக்கு எதுக்கு காதல் கவிதைன்னு மனசு கேட்டாளும்.. கவிதை சுமாரா நல்லா தான் இருந்துச்சுங்க.



இந்த மெயில் அனுப்பிற விசயத்துல நடேசு பாகுபாடெல்லாம் காட்டுறதில்லைங்க.. தெரிஞ்சவன், தெரியாதவன், ரெண்டு நிமிச சந்திப்புல மெயில் ஐடி குடுத்தவன், ஃரிபரன்ஸ்சுக்காக மெயில் அனுப்பிச்சவன், இப்படி ஒரு வகைதொகையே இல்லாம எல்லாருக்கும் அடிச்சு விடுறது தான் அவன் வழக்கம்.. வழக்கபடி அந்த காதல் கவிதையும் அனுப்பிச்சு வச்சான். அங்க தான் அவனுக்கு கோடும் கட்டமும் சரி இல்லாம போச்சு. ஊரு உலகம் பூராவும் அனுப்பிச்சவன், அப்படியே சுமதி'க்கும் அனுப்பிச்சு வச்சிருக்கான். சுமதி யாருன்னு கேக்கரீங்களா, சொல்லுவனில்ல.. இவ்வளவு சொன்னவன் அதை சொல்ல மாட்டனா? சுமதி'ய நானும் அவனும் தான் போன வாரம் சந்திச்சோம், வழக்கம் போல வார இறுதிக்கு ஊரு பக்கம் போகும் போது ரயில் பயணத்துல எங்க கூட ஒரு கூபே'வில வந்த புள்ளை. இங்க தான் புதுசா ஆணிபுடுங்கிற வேலையில இருக்காம்.. விடிய விடிய நடேசு கூட பேசிக்கிட்டே தான் வந்துச்சு, நமக்கு இந்த விசயமெல்லாம் அவ்வளவு விவரம் பத்தாததால, நான் பாட்டுக்கு மேல் பர்த்துல ஏறி சால்வைய போத்தி கனவுல இறங்கிட்டேன்.

இவன் பாட்டுக்கு bccல போட்டு எல்லாருக்கும் கவிதைய அனுப்பி வைக்க, அந்த புள்ளைக்கும் அது போயிருக்கு. எப்பவும் போல இல்லாம கவிதை வேற கொஞ்சம் சுமாரா இருக்க, அதுல புள்ளை லேசா ஜெர்க் ஆயிருச்சு போல இருக்கு. மறுநாள் பதட்டமா நடேசு கிட்ட இருந்து ஃபோன் வருது 'மாப்ள சுமதி கிட்ட இருந்து ஒரு மெயில், உனக்கு ஃபார்வர்ட் செஞ்சிருக்கேன் கொஞ்சம் பாரு'ன்னு.. என்னடா இது ஒரு சிட்டு கிட்ட இருந்து வந்த மெயில நமக்கு ஏன் அனுப்பியிருக்கான்னு ஒரு குழப்பம் வந்தாலும், பொதுவாவே நமக்கு இருக்கிற கிசுகிசு படிக்கிற ஆர்வத்துல நான் ஆணிய பாதியில விட்டுட்டு மெயில் பக்கம் போனேன். ம்ம்.. நடேசு பதட்டமா இருந்த காரணம் நமக்கும் புரிஞ்சுது.. இவன் ஊருக்கே அனுப்பின கவிதைய தனக்கு தான் அனுப்பியிருக்கான்னு நினைச்சிருச்சு போல அந்த புள்ளை, கவிதையில இவன் சொன்ன காதல் தன் கிட்ட தான்னு நினைச்சு அங்க இருந்து ஒரு பதில் 'எனக்கும் ஓகே, நீங்க ஃபார்மலா உங்க வீட்டு பெரியவங்க மூலமா வந்து எங்க வீட்டுல பேசுங்க'ன்னு நடு நடுவால மானே தேனே எல்லாம் போட்டு, எனக்கு சிரிக்கிறதா அழுவறதான்னு தெரியல.. இப்பத்தான் முப்பதா தாண்டற கோப்புல நடேசுக்கு நல்ல இடமா ஒன்னு வந்திருக்கு, தேதி கூட முடிவாகி மணடபத்துக்கு அட்வான்ஸ்சும் குடுத்திருக்கு, இந்த நேரத்துல இப்படி ஒரு கலாட்டா. :)

சரி ஆயிரம் இருந்தாலும் நம்ம நண்பன் நடேசன் அவனுக்கு உதவாட்டி எப்படின்னு அவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்த புள்ளைக்கு ஒரு நீளமான மெயில் தட்டினேன்.. இப்படி இப்படி நடேசு இந்த மாதிரி கவிதை கிறுக்கெல்லாம் ரொம்ப காலமா இருக்குது.. நீ தான் தப்பா நினைச்சுட போல இருக்கு அப்படி இப்படின்னு வழக்கம் போல நீட்டு முழக்கி விவரமா எழுதி அனுப்பிச்சேன்.

அனுப்புன மறுநாள் சுமதி கிட்ட இருந்து பதில் வந்திருச்சு.. நம்ம நடேசு பய கிட்ட எல்லாம் சரி ஆயிருச்சு, குழம்பாம வேலைய பாருன்னு சொல்லிட்டேன். அவன் தான் சும்மா எப்படி? என்ன?ன்னு விவரம் கேட்டுக்கிட்டே இருக்கறான்.. நான் சொல்லவே இல்லை.. அவனுக்கு வருத்தம் தான்.. இருந்தாலும் அதுக்காக அதை எப்படிங்க அவன் கிட்ட சொல்றது.. நீங்களே சொல்லுங்க.

அந்த புள்ளை குடுத்த பதிலோட சாரம்சம் இது தான் "இந்த கவிதை எழுதிற நாய்கள எல்லாம் சுட்டு கொல்லனும், சும்மா வார்த்தைக்கு வார்த்தை பொய்ய எழுதி தள்ளராங்க.. இனிமேல் செத்தாலும் ஒரு கவிஞன் கூட நட்பு வச்சிக்க மாட்டேன்" அப்படி இப்படின்னு ஒரு முழ நீளத்துக்கு கவிஞர்களையும் கவிதைகளையும் திட்டு திட்டுன்னு திட்டி. இதைய போயி அவன் கிட்ட சொல்லனுமா என்ன..?


நன்றி : கலீல்ஜிப்ரன் :)
pic : http://www.joycegordongallery.com/

--
#243

2 comments:

Anonymous said...

I enjoyed this post very much.Excellent post as usual.

Rumya

அனுசுயா said...

எப்டி இப்டி கலக்கறீங்க. ஆனா சுமதி சொன்னது உண்மைதானுங்கோவ் :)