Monday, October 13, 2008

ஊர் நிலவரம்

ஊர்ல யாருகிட்ட பேச்சுகுடுத்தாலும் பவர்கட் சமாச்சாரம் தான் டாபிக்.. யூ.பி.எஸ் போட்டாச்சா? எதோ பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிச்சாச்சாங்கிற மாதிரி கேக்கறாங்க.. ரெண்டு வருசம் முன்னாடி 8500ரூபா கேக்கராங்கன்னு அதெதுக்கு வெட்டியா, சிஸ்டத்துக்கு மட்டும் இருந்தா போதும்னு விட்டாச்சு.. இப்போ 20ஆயிரம் கேக்கிறாங்க.. ஓகே ரைட்டு, வந்து மாட்டிருங்க'ன்னா.. பதினஞ்சு நாள் ஆவும்ங்க.. ஒரே டிமான்டு'ன்னு பதில்வருது.. சரி சீக்கிரம் எப்படியாவது செய்யுங்கன்னு சொல்லியிருக்கு. அது வரைக்கும் தாங்கனும் எப்படியாவது..

ஷெட்யூல் போட்டு தாக்குறாங்க.. போன வாரம் வரைக்கும் ராத்திரி 12-1.30 வரைக்கும் இல்ல.. இந்த வாரம் காலையில 4.30-60 வரைக்கும், பாவம் படிக்கற புள்ளைக, ஒழுங்க தூங்கனும்.. அப்புறம் தான எந்திருச்சு படிக்கறது எல்லாம். ம்ம் எல்லாம் நம்மள மாதிரி அலாரம் வச்சு எந்திருச்சு மொட்ட மாடி லைட்ட போட்டுவிட்டு தூங்கியே படிச்சதா பேரு பண்ணிக்க முடியுமா, இன்னைக்கு அம்மாக்க எல்லாம் உஷாரா இருக்காங்க.. கூடவே வந்து உக்காந்துக்கறாங்களாம்.

"பகல் கூட பரவாயில்லை, ராத்திரியில ரெண்டு மணி நேரம் எல்லாம் ரொம்ப ஓவர்"ப்பான்னு எதார்த்தமா சொன்னேன், "உனக்கென்ன, மாசம் ரெண்டு தடவை வந்துட்டு ஓடிருவ, இங்க தொழில் செய்யரவனுக்கு தான் தெரியும் கதை"ன்னு ஆரம்பிச்சு கொட்டி தீர்த்துட்டான் கூட வந்த ஒரு தொழிலதிபர் சகா. "ஒரு நாள் ஆள் கூலி குடுத்தா வேலை செய்ய மூணு மணி நேரம் தான் கரண்ட் இருக்கு.. 300 பீசு ரெடியாகனும் பாம்பே ஆர்டர், இவனுக எல்லாம் என்ன கவர்மென்ட் நடத்துறானுகளோ, சரி மெஷ்ன் ஓடாத நேரம் கவர்மென்ட் வேலைய முடிக்கலாம்னு டாக்ஸ் ஆபீஸ் பக்கம் போனா,  எல்லாம் கம்ப்யூட்டர் மயம் செஞ்சாச்சு, அதுனால கரண்ட் இருக்கும் போது வாங்கன்னு வாசலோட அனுப்பிடுறாங்க.."ன்னு ஒரு மணி நேரம் திட்டி தீர்த்தாரு.. "கேரளாவுல பாருங்க இந்த பவர்ஷெட்டிங்'கெல்லாம் ஒண்ணுமே கிடையாது" - தோழர் ஒருத்தர் பெருமையா சொன்னாரு.. நம்ம உள்ளூர் தொழிலதிபர் கடுப்பாகி.. "ஆமா, அங்க என்ன தொழில் செய்ய விடறீங்க.. பூராப்பயலையும் கொடியபுடிச்சு தொரத்திருங்க.. எல்லாரும் இங்க பார்டர் தாண்டி வந்து தொழில்செய்யறான்.. அதான் இங்க பத்தாகுறையா இருக்கு"  பத்து நிமிசம் முன்னாடி இதே தொழிலதிபர் பேசுன பேச்ச நினைச்சா.. ம்ம்.. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு.

"ஆயிரம் சொன்னாலும் கேரளாக்காரம் வேக்யானமானவன் தான்.. இத்தனை வருசமா பொள்ளாச்சி ரயில்வே மதுரைக்கு கீழ தான் இருந்துச்சு, என்னத்த கழட்டுனாங்க.. இப்போ பாருங்க கேரளாவூக்கு தள்ளி விட்டதும் அவுங்க வந்து ப்ராட்கேஜ் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. ஒட்டஞ்சத்திரம், பொள்ளாச்சி சந்தைகளும் பழனிக்கு வர்ற பாலக்காட்டு கூட்டமும் அவங்களுக்கு சவுரியமா தெரியுது -   அங்க எதாவது ஒன்னு இலவசமா தர்றானா.. இங்க 1300கோடி சம்ஸ்டேஷன் வேல மூணு வருசமா பெண்டிங், ஆனா 6500கோடி செல்வௌ செஞ்சு டி.வி பொட்டி குடுக்கறாங்க.."தோழர் அடுக்கிட்டே போனாரு, சரி வெளியூர் கதைய விடுங்கப்பா, நம்மூர் கதையே ஆயிரமிருக்குன்னு ஒரு வழியா முடிச்சு வைச்சேன்.

ஆற்க்காடு வீராஸ்வாமிய தான் இன்னைய தேதிக்கு தமிழகத்தின் கெட்ட வார்த்தைன்னு நினைக்கிறேன், அந்தளவுக்கு மரியாதை அய்யா பேர சொன்னாலே :) தயாநிதிய தூக்கினப்போ சில சில்பான்ஸுக "அய்யகோ எல்லாம் போச்சே"ன்னு அலறுனதும், அறச்சீற்றம் கொண்டு எழுந்து "மந்திரி என்னையா மந்திரி, எல்லாம் சீஃப் செக்ரட்டரி தான்"னு சொன்னவங்க கூட இன்னைக்கு அதிகாரிகளவிட்டுட்டு ஆற்க்காட்டார தான் காரணம் காட்டிட்டு இருக்காங்க.. பாவம்.

பேசிகிட்டே "கத்திகப்பல்" ஓடுற தியேட்டர் பக்கம் வந்துட்டோம்.. அந்த தியேட்டர்ல நம்ம எப்பவும் டிக்கெட் வாங்கறதில்லை, அய்யன் சிநேகிதம், "மணிரத்னம் அசிச்டெண்ட்டாம், போலாமா?"ன்னு தொழிலதிபர் கேட்டதும், சரின்னு உள்ள போனோம், உள்ள நுளையும் போதே எதோ தப்பா தெரிஞ்சுது, ஒரு பரபரப்பே இல்ல, ஒரு நா முன்னாடி தான் படம் ரிலீஸுன்னாங்க.. தியேட்டர் மேனேஜர் வெளிய நின்னிகிட்டிருந்தாரு,  "எப்படின்னே? பார்க்கலாமா?" .. சிரிச்சாரு.. "மார்னிங்ஷோ ஒரு ஆள் கூட வரலை.. இப்போ ரெண்டு டிக்கெட் குடுத்திருக்கோம், மூணாவதா நீ வந்திருக்கே".. 40 வருட தியெட்டர் வரலாற்றில் முதல்முறையாக ஒரு புது ரிலீஸ் படத்துக்கு, ரெண்டாவது நாளே இந்த கதியாம்..  ஆஹா சாமி ஆள விடுங்க, அந்த பாவத்தை வேற நான் சுமக்கனுமான்னு ஒடியாந்துட்டோம்.

பொட்டி தட்ட திரும்ப கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன்'ல நின்னோம், வழக்கம் போல ஐலேண்ட் லேட்டு தான், ஆனா இன்னைக்கு அரைமணி நேரம் தான் டிலே.. ப்ளாட்பாரத்துல ஐபாடும், செல்ஃபோனுமா சிணுங்கிட்டு இருந்தவங்கள வேடிக்க பார்த்துகிட்டே சுத்தறப்போ, 10.30 மணிக்கு சரியா பவர்கட், ஒரு நிமிசம் இருட்டாகி, பேட்டரி லைட்டுக மறுபடியும் வெளிச்சம் கொண்டுவந்துச்சு.. கூட வந்த சகா சொன்னான் "இப்படி பவர் கட் ஆச்சுன்னா அப்புறம் ரயில் எல்லாம் எப்படி நேரத்துக்கு வரும்?" .. "உனக்கெல்லாம் எவன்டா அத்தாப்பெரிய கம்பெனியில மேனேஜர் போஸ்ட் குடுத்தானுக"ன்னு கேட்டேன், விடலையே அவன்,  மறுபடியும் கேட்டான் "கரெண்ட் போனா உடனே டீசலுக்கு மாத்திக்குவாங்களோ"..  ஸ்ஸப்ப்பா.. ராமா, என்னை ஏன்தான் இப்படிபட்ட ஆளுக கூடவே கூட்டு சேர்த்தரயோ..

2 comments:

நாமக்கல் சிபி said...

:)

ரொம்ப நாளாச்சு! எப்படி இருக்கீக?

கோபிநாத் said...

;))