வழக்கம் போல பின்னிரவு சாப்பாடா இல்லாம, இன்னைக்கு கொஞ்சம் நேரமே எழரை மணிக்கெல்லாம் உக்காந்தாச்சுங்க. வழக்கமெல்லாம் மாறுது :)
சப்பாத்தி குருமா. சப்பாத்தியுல கொஞ்சம் உப்புதூக்கல், மெதுமெதுன்னு இருக்க சேர்த்துன தயிர் வாசம் கொஞ்சம், முதநாள் ஆச்சே, ஆர்வத்துல தாளிக்கும்போது அள்ளிபோட்ட கடுகு குருமாவுல பட்டானிக்கு சமமா மிதக்குது. சாப்பிட்டுமுடிச்சுட்டு மெல்ல கண்ணை உயர்த்தி சிரிச்சுகிட்டே 'ம்'ன்னு தலையாட்டுறவன, பழிப்பு காட்டி 'அதை வாய திறந்துதான் சொல்லேன், தட்டை வை, நான் எடுத்துக்கிறேன்.. போய் கைய கழுவு'ன்னு சொல்லிட்டு சமையல் ரூம்பக்கம் போறவள பார்த்து சிரிச்சுகிட்டே எழுந்திருக்கும் போது, மேசை மேல இருந்த கைப்பேசியில 'ஆசை நூறு வகை'. நம்ம சகா வட்டத்து ரிங்டோன்..
நம்ம பய தான்..
'சொல்லு மாப்ள'
'டேய், சாப்பிட வரமாட்டேன், கால் இருக்கு.. எனக்கு சேர்த்து செய்யாத.. ' வழக்கம் போல அவசரக்குரல்.
'.... '
'ஹலோ.. ?'
'நான் இப்பத்தான் சாப்பிட்டேன்'
'அதுக்குள்ளயே...... ச்சே.. மறந்துட்டேன் பார்த்தியா.. நீ எங்க கூட இருக்கிற நினப்புலயே கூப்பிட்டுட்டேன்.'
'வேலையா?'
'ஆமான்டா, நை நைங்கிறானுக, அப்புறம் பேசறேன் உங்கிட்ட.. குட் நைட்!'
'டேய், நாளைக்கு இங்க வந்திரு சாப்பிட.'
'சொல்லாட்டியும் அங்கதான்.. அம்மணி மதியமே கூப்பிட்டு பேசிருச்சு.. நான்தான் இப்ப வேலை அவசரத்துல மறந்து, தங்கான கூப்பிடறதுக்கு பதிலா உன்னைய கூப்பிட்டுட்டேன்'
'.. சரி.. காலையில கூப்பிடுறேன்'
'ம்ம்.. .. டேய்'
'என்ன?'
'கதவுல ஒட்டி வச்சிருந்தியே..'
'என்னது..?'
' "இதுவும் கடந்து போகும்"ன்னு.. போகுமா.'
'போடாங்க... வாயுல நல்லா வருது.. போ, போய் வேலைய பாரு.. காலையில பேசலாம்... '
அழைப்பை துண்டிச்ச பிறகும்.. கைய கூட கழுவாம அப்படியே விட்டத்தை பார்த்து உக்காந்திருக்கறவன, தட்டு கழுவிவச்சுட்டு வந்து, சுவத்துல சாஞ்சுகிட்டு புருவத்தை தூக்கி, கண்ணாலயே 'என்ன?'ன்னு ஒரு கேள்வி..
என்னன்னுங்க சொல்றது..

'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?
pic : http://redshift.shutterchance.com/
--
#213