Wednesday, June 30, 2004

நம்ம வரிசையில் இனி பில்கேட்ஸும்..!!

சொந்தமா வலைப்பூ வெச்சிருக்கவங்க எல்லாரும் இனிமேல் காலர தூக்கி விட்டுக்கலாம்.. (நம்மளை மாதிரி சட்டை போடாத ஆளுக தலையில கட்டியிருக்கிற துண்டை தூக்கி விட்டுக்கலாம்.. இதெல்லம் சொல்லித்தர வேண்டியிருக்கு..!)..
பின்னே என்னங்க.. நம்ம இங்கே எழுதறத பத்தி ஒரு கூட்டம் (சரி..சரி.. நம்ம இல்ல.. 'நீங்க' போதுமா!!!.) இதெல்லம் வேலையத்தவன் செய்யிர வேலை, வெட்டிப்பசங்க கூட்டம் அப்படி. இப்படின்னு நிறையா சொல்றவங்களுக்கு பதில் சொல்ல ஒரு மேட்டர் கிடைச்சிருக்குங்க..
ஆனானப்பட்ட.. பில்கேட்ஸ் கூட அவருக்கே அவருக்குன்னு ஒரு blog ஆரம்பிக்கபோறாருங்க..
யாருக்கு எப்படியோ.. நமக்கு ஊருக்குள்ள 'அப்படி என்னத்ததாண்ட கம்ப்யூட்டருல செய்யுற??'ன்னு கேக்குறவனுக கிட்ட பெருமையா சொல்லிக்கலாம்.. 'நான் ஏற்க்கனவே செஞ்சிட்டு இருக்கிற வேலையத்தான் இனிமேல் பில்கேட்ஸ் கூட செய்யபோறாருன்னு'..

போற போக்குல கொங்குபாஷைய பதிவு செய்ய ஒரு பதிவு ஆரம்பிச்சி இருக்கிறத பார்த்தேன். நாமளும் அதுல் பங்கெடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.. (இது ஒண்ணு தான் குறைச்சல்!!)

Sunday, June 27, 2004

BBC நண்பர்கள்

மூக்கன்'ணன் மாறும் மதிப்பீடுகள்'ல அவர் கூட படிச்ச 'பெரிய செட்டு' பசங்களை பத்தி எழுதினதை படிச்சதும் நமக்கும் பழைய நினைப்பு வந்திருச்சுங்க.. எங்க காலேஜுல 'பெரிய செட்டு' கிடையாது.. BBC நண்பர்கள் தான்..அதென்ன BBCன்னா... அதாங்க Back Bench Commitee .
எந்த புரபஸர், என்ன பாடம், எப்படி எடுத்தாலும்..நாங்க பாட்டுக்கு எங்கேயோ இடி இடிக்குது எங்கேயோ மழை பேய்யுதுங்கர மாதிரி உக்காந்திருப்போம். அவுங்களும் இதுகளை எந்த கொம்பன் வந்தாலும் திருத்த முடியாதுன்னு விட்ருவாங்க.
நாலு வருஷமும்....,
பக்கத்து தியேட்டர்ல ஓடுற எல்லா படமும் 2-3 வாட்டி பார்த்ததும்.. வேற வழியில்லம கிளாஸ் பக்கம் போய்..
சரளமா கானா எடுத்து விடும் எங்க சபையின் 'ஆஸ்த்தான புலவர் திரு.டகால்டி' (இப்போ அவன் செக்க்ஷன் இன்ஜினியர்...), எங்க ஹால் வழியா அடிக்கடி போற PG dept'ன் கேரளத்து பைங்கிளிகளை பத்தி மெல்லிய குரலில் பாட்டு எடுத்து விடுறத கேக்கிறதும்,
எல்லா பாடத்திலும், எல்லா நேரத்திலும், டவுட் கேக்கும் முன்பெஞ்ச்சு பார்ட்டிகளை வம்பிழுப்பதும்,
கொஞ்சம் நம்மள மதிக்கிற வாத்தியாரா இருந்தா..'இதா தண்ணி குடிச்சுட்டு இப்போ வந்திருவோம்'னு சத்தியம் பண்ணி நேரா தம் அடிக்கபோறதுமாவே போச்சு..
நாலு வருஷம் படிச்சு.. கடைசி கடைசியா ஒவ்வொருத்தருகிட்டேயும் ஆட்டோக்ராஃப் வாங்கும் போது, 'உன் கூடவெல்லம் contact வெச்சு என்ன செய்ய போறேன்?'னு முன்பெஞ்ச்சு பார்ட்டி ஒருத்தன் ஆட்டோக்ராஃப் எழுதாம போனபோதுதாங்க.. நேர நடுமண்டையல ஒரு தேங்காய்குலையே நச்சுன்னு விழுந்த மாதிரி இருந்தது..
ஆனா, அதுக்கப்புறம் அப்படி சொன்னவனே ஒரு வருஷத்தில, சென்னப்பட்டனதுல புதுசா வேலைக்கு வந்து எங்க எங்கேயோ சுத்தி ரூம் சவுகரியப்படாம, நிகழ்ச்சியாளரா (அதாங்க programmer) வேலையில இருந்த என்கூட வந்து தங்கினது தான்ங்க தமாசு.. (ஒரே ரூம்ல இருந்த்துட்டு ஆபீஸ் போய் thanq & sorry'ன்னு கார்ட் அனுப்பினத சொல்லி இன்னும் அவன கலாய்ச்சுட்டு தான் இருக்கோம்)

ஒன்னு மட்டும் எனக்கு புரியலீங்க..!! BBC'ல பாதி பேருக்கு மேல அமேரிக்கா, ஐரோப்பான்னு, இருந்துகிட்டு யாஹூல வந்து hi buddy!ன்னு, இங்கே இருக்கவனுக கூட பீட்டர் வுட்டுகிட்டு இருக்கும் போது.. முன்பெஞ்ச்சு பார்ட்டிக சிலர் இன்னும் apprenticeஆகவும், traineeஆகவும் இருக்காங்களே அது ஏன்?? ...'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

Saturday, June 26, 2004

sms குழப்பம்..??!!!

அதென்னமோ தெரியலைங்க ஒரு 2 -3 வாரமா எனக்கு வர்ற sms (இதுக்கு தமிழ்ச்சொல் என்னான்னு யாரவது வெவரமானவங்க சொல்லுங்கய்யா.. நான் பாட்டுக்கு எதாவது சொல்லி அது ஒரு பிரச்சனைய கிளப்பிட போகுது..)எல்லாம் கல்யாணம், காதல்ன்னு ஒரு ரேஞ்சாவே வருது..

உதாரணமா..

காதல் கல்யாணம் நல்லதா? இல்லை வீட்டுல பார்த்து வைக்கிற கல்யாணம் நல்லதா??? -- ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. ஒண்னு தற்க்கொலை. இன்னொண்னு கொலை...அவ்ளோதான்'

ஜோசியர்: உனக்கு ஒரே ஒரு தோஷம் இருக்கு, கல்யாணம் பண்னினா அந்த தோஷம் போய்டும்.. ராசா:அதென்னங்க தோஷம்...ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்...

இந்த மாதிரி தினம் 3-4 மெஸ்ஸேஜ் வருதுங்க.. இதென்ன தென்மேற்க்குபருவமழை மாதிரி எதாவது கல்யாணமெஸ்ஸேஜ்மழை சீசனா???

இப்பத்தான் எங்க அய்யா 'உனக்கும் கழுதை வயசு ஆகுது.. ஒரு பொண்னு பாத்துரலாமா தம்பி? கூடமாட தோட்டத்துல வேலைக்கும் ஒரு ஆளு ஆகுமில்ல'ன்னு கேக்க ஆரம்பிச்சிருகாரு.. அதை எப்படியோ மோப்பம் புடிச்ச மாதிரி எல்லாப்பயலும் தமாசுங்கிற பேருல ரவும்பகலும் இந்த மாதிரியே மெஸ்ஸேஜ் அனுப்பி குழப்புறானுக.... (இந்த மாதிரி நேரத்தில தான் ஏன்டா இந்த Aircellக்காரங்க மெஸ்ஸேஜ் ஃப்ரீயா குடுக்கிறாங்கன்னு தோணும்). நாம ஏற்க்கனவே ஒரு பெரிய குழப்பவாதி.. மொத்தத்தில... எப்பவும் போல...'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'



Friday, June 25, 2004

எங்கிருந்தாலும் வாழ்க!!!!

வலைப்பதிவு செய்யரவங்க எல்லாரும் சென்னை மாநகரத்தில்.. சைதைக்கரையோரம் ஒரு மீட்டிங் போடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. எல்லாரும் வந்து கலந்துக்கனும்னு நம்ம கிருபாக்கன்னு கூப்பிட்டிருக்குது..
நம்ம பா.ரா. வருவாங்க , ஐகாரஸ்பிரகாஷ் வருவாங்க , கிருபாக்கன்னு வருவாங்க, மற்றும் நம்ம உறவு வலைப்பதிவுக்காரங்க எல்லாரும் வருவாங்க.. நாமளும் போலாம்னு நினைக்கும் போது நல்லாத்தாங்க இருக்கு.. (அதுலயும் பீச்சோர பானி பூரி வேறயாமே!!) ஆனா இங்கே தென்னந்தோப்பையும், மாடு கண்ணுகளையும் விட்டுட்டு நான்பாட்டுக்கு சென்னப்பட்டனம் வந்துட்டா.. அப்புறம் இங்கே நடக்கபோற பானிப்பட் யுத்தத்த நினைச்சு பார்த்து, நமக்கு உக்கடம் பஸ்டாண்ட் பானி பூரியே போதும்னு மனசதேத்திக்கிட்டேனுங்க.. (ஆஹா!!! உக்கடம் பஸ்டாண்ட் பானி பூரி.. அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சுருச்சேய்!!) எல்லத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்ங்க!! (இத தான் எங்க ஊருல 'ஆசை இருக்கு தாசில் செய்ய, ஆனா அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'ம்பாங்க!!... என்ன ஒரு வித்தியாசம் .. நான் மாடு மேய்கிறேன்..)

ஆகவே நண்பர்களே... " நான் எங்கே இருந்தாலும் என் மனசு உங்க மீட்டிங்க சுத்தி சுத்தியே வரும்" (இதை மட்டும் கொஞ்சம் பாரதிராஜா பட கிளைமக்ஸ் வசனம் மாதிரி படிச்சுக்கோங்க.!! )... யாருப்பா அங்கே 'அப்பா நிம்மதி!!!'ன்னு குரல் குடுக்கிறது..!!!!

கூட்டம் நம்ம கிருபா ஆசைப்படி சூப்பரா சொதப்ப.. எல்லாம் வல்ல பாபாவை.. ச்சே..அது பழசு.. எல்லாம் வல்ல 'ஜக்குபாய்'ய வேண்டி என்னோட இந்த பதிவை முடிச்சுக்கிறேனுங்க

All the Best Folks.......Hats Off to all the initiators ....

Thursday, June 24, 2004

சிவப்பு விளக்கு எரியுது..

ஆஹா..!! பிறவிப்பயனை அடைந்துவிட்டது மாதிரி ஒரு சந்தோசம்... நம்ம பேருக்கு நேரா ஒரு சிவப்பு சுழல் விளக்கு போட்ருக்காங்க.... (எங்க ஊர் ப்ரசிடெண்ட் வூட்டுக்கரம்மா கார்ல எரியர மாதிரி)bloglist'ல

'இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் ராசா!!'ன்னு சந்தோஷம் ஒருபக்கம் ..
'இனி தான் மகனே இருக்கு!!'ன்னு கலக்கம் ஒரு பக்கம்...
'ஐய்யோ இருக்கிறா தொல்லயில இவன் வேறயான்னு' உங்களோட பரிதாப குரல் ஒருபக்கம்...

என்ன எழுதறதுன்னு ரொம்ப யோசிச்சபோது.. நமக்கு கருத்து சொல்லி உதவிய 'நாமக்கல் ராஜா', 'ஷ்ரெயா', கார்திக்ராம்ஸ்'க்குகாகவாது இனிமேல் வாரம் இருமுறை இங்கே எதாவது எழுதறதுன்னு முடிவு பண்ணிடேன்...
(background'லா பாட்ஷா மாதிரி.. 'ராசா..ராசா..' அப்படின்னு ஓடுற மாதிரி கற்பனை பண்ணிகோங்க..)

ரஜினி போய் விஜயகாந்த் வந்தாச்சு... டும் டும் டும்.... ..

ரஜினி போய் விஜயகாந்த் வந்தாச்சு டும் டும் டும்.... ..
அதென்னமோ நம்ம ராமதாஸ் அண்ணனுக்கும் நம்ம தென்னகத்துச்சிங்கங்களுக்கும் 7ஆம் பொருத்தம் போல.. இப்போதான் ஒரு பாபா பிரச்சனை ஒய்ந்த மாதிரி இருந்த்தது (ஒய்ந்ததா இல்லயாங்கிறது அந்த ஜக்குபாய்க்கு தான் வெளிச்சம்..).. அதுக்குளள் இப்போ கஜேந்திரா பிரச்சனை...
நம்ம 'கருப்புத்தங்கம்' அண்ணன் விஜயகாந்த் எதோ கல்யாண காரியமா கள்ளகுறிச்சி பொயிருக்கார்.. போனவரு.. கல்யாணத்த பார்தோமா முதல் பந்தியில சாப்டமான்னு இல்லாம.. 'மக்களை சந்திக்காமல் எம்.பி. ஆவது தப்பு.. அதுலேயும் மந்திரி ஆவது அயோக்கியத்தனம்' அப்படி இப்படின்னு அவரோட பட க்ளைமாக்ஸ் சீன்ல வர்ற மாதிரி நீளமா வசனம் பெசியிருக்காரு....
அடுத்த நாளே நம்ம மரவெட்டி டாக்டர் ராமதாஸ்.. தன்னுடய பதிலறிக்கையை வுட்டாரு பாருங்க... அடடா.... என்ன மாதிரி ஒரு புள்ளி விபரம்... 'ஏன் காமராஜர் முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம் எம்.எல்.ஏ ஆகலயான்னு ஆரம்பிச்சு.. ஒரு பெரிய லிஸ்ட் குடுதாரு.. அப்புறம் கூடவே.. நம்ம விஜயகாந்த்க்கு ஒலுங்கா உங்க வேலைய மட்டும் பாருங்கன்னு ஒரு அறிவுரை வேற குடுத்தாரு.. விட்டாங்களா அத்தோட... மருபடியும் ஆறிக்கை போர் (நம்ம தினசரிகளுக்கு நல்ல தீனி..) ஒரு பக்கம் காடுவெட்டி அண்ண்ன் விஜயகாந்த் படம் தமிழ்நாட்டுல எங்கேயும் ஓட பா.ம.க தோண்டர்கள் விடக்குடாதுன்னு அன்பா கேட்டுகிட்டாரு..
உடனே எதிர் தரப்புல இருந்து (அப்புறம் சும்மவா.!! கேப்டன் ரசிகர்களாச்சே!!!) எங்க தலைவர் படம் ஓடுற எல்லா தியேட்டர்களுக்கும் நாங்களே பாதுகாப்பு குடுப்பம்னு ஒரு அறிக்கை...!!!


அடுத்த மகக்ளவை தேர்தல மனசுல வெச்சு.. அரசியல்ல இறங்க விஜயகாந்த் எடுக்கும் முதல் அடி இதுன்னு ஒரு தரப்பு சொல்லுது..

எல்லாம் கூடிய சீக்கிரம் வரப்போற 'கஜேந்திரா'வுக்கு ஒரு விளம்பரம்னு ஒரு தரப்பு சொல்லுது..

அதெல்லம் காரணமக இருந்தாலும் விஜகாந்த் சொல்லுறதுல தப்பு என்ன இருக்குதுன்னு ஒரு தரப்பு சொல்லுது...

அதெப்படி ராமதாஸ் சொல்ர மாதிரி காமராஜரே இப்படி பதவி வகிச்சிருக்கரே.. அன்புமனி செஞ்சா மட்டும் தப்பான்னு ஒரு தரப்பு கேக்குது...

நமக்கு எப்பவும் போல... 'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

Monday, June 21, 2004

புலம்பல்...

ஒரு ஆர்வத்தில, தமிழ் எழுதியே பல வருஷம் ஆச்சேன்னு வலைப்பூ ஒண்னு ஆரம்பிச்சாச்சு, இப்போ என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சு போனது தான் மிச்சம்.. 2 நாளா நானும் யோசிச்சு பார்த்துட்டேனுங்க.. ஒன்னுமே புடிபடல... யாரவது ஒரு நல்ல (சுமாரா இருந்தாலும் பரவாயில்லை!!!) யோசனை இருந்தா சொல்லுங்கய்யா!!!

(இந்த லொல்லுக்கு எல்லாம் குறைச்சல் இல்லேன்னு நீங்க திட்டுறதும் காதுல கேக்குது...!!!)

Saturday, June 19, 2004

மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணி.....

பார்வைகள்..


ஆச்சு... இப்படி ஊருல குளம் குட்டை..கம்மாயெல்லம் தண்ணி நிரம்பி பார்த்து.. 6-7 வருஷம் ஆச்சு எல்லாம் மாரியம்மன் நோம்பி சாட்டுன நேரம்...
-- எங்க வீட்டு பெருசு

எல்லாம் எங்க ஆளுக ஜெயிச்சு.. டெல்லி போன நேரம் தான் பங்காளி...
-- கழக ஈடுபாடுள்ள என் நண்பன்..

இனி இவனுக ஆடுர ஆட்டம் தாங்க முடியதுப்பா.. சும்மா டீ குடிக்க 'ப்ளஷர்ர' எடுத்துட்டு கோயமுத்தூர் போவனுக...
-- மழை கொஞ்சம் கம்மியான பக்கத்து ஊர்காரர்

ம்ஹும்.... இனி அவ்ளோதான்.. வண்டி எல்லம் மறுபடி குஜராத், மஹாரஷ்ட்ரா பக்கம் தான் ஒட்டனும்..
-- ரிக் வண்டிக்காரரின் கவலை

இந்த மழை எல்லம் சும்மா.. கேரளாவுல பேய்யர மழையோட சாரல்ப்பா...இதெல்லம் பத்தாது...
--எப்பவும் புலம்பும் எங்க ஊரு வாத்தியார்

வணக்கமுங்க..!!!

என் இணிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய கொங்குராசா blogகுகிறேன்... இது வரை தென்னந்தோப்புக்கு பாத்தி கட்டுவதும்.. அந்தி சாய்ந்தால் மாடுகளுக்கு தண்ணி கட்டுவதுமாக பொறுப்பாக இருந்தவன்... இந்தமுறை வலைப்பூ'வில் பாத்தி கட்டி தண்ணீர் கட்ட வந்திருக்கிறேன்... (எல்லாம் எங்க ஊருப்பக்கம் 5-6 வருஷம் கழிச்சு மழை நல்லா அடிச்சதுனால வந்த விணை.!!!) .. இனி வரும் காலங்களில் இங்கே என்னுடைய பிரதாபங்களும்(?), புலம்பல்களும், ரவுசுகளும், அல்ப்பத்தனங்களும், வியாக்கியானங்களும், (முடிந்தால் தத்துவங்களும்).. இங்கே கொட்டப்படும்..



அய்யா... யாரவது இந்த பக்கம் வந்தா....(தெரியாம வந்தாட்டாலும்!!) எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா...