Tuesday, August 7, 2007

சொகம்!

ஊருக்கு தெக்கால நெருக்கிட்டு நிக்கிற தென்னந்தோப்புகள தாண்டி, பருவகாலத்துல மட்டும் செவையேன்னு செம்மண்ணு தண்ணி ஓடுற சூலக்கல் ஓடக்கரைக்கு பக்கமா, கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஆள்ஆரவம் எதுவுமேயில்லாம வத்தலும் தொத்தலுமா விரிஞ்சு கிடக்கற சோளக்காட்டுக்கு நடுவால, பெரிய சந்தையில தக்காளி கூடை இறக்க போனப்போ ஒட்டஞ்சத்திர துலுக்கன் கிட்ட விடாப்பிடியா பேரம் பேசி மோனக்காரரு வாங்கிட்டு வந்த அந்த நஞ்சுபோன கனகாம்பரக்கலர் ஃபுல்கை அங்கராக்கும் வெளிரிப்போயி நூலெல்லாம் பிரிஞ்ச யானைக்கால் குழாயக்கும் ஊடால பிதுங்கிக்கிட்டு எட்டிப்பார்க்கிற வக்கப்புல்லும், ஒறட்டான் கையில எந்தி கிடக்கற கரித்துணியும், மண்சட்டியில காவியும் கரியும் குழைச்சு போட்ட தல வேசமுமா தன்னந்தனியா வரப்புக்கு நடுவே மூங்ககழியில தொக்கி நின்னுகிட்டிருக்கான் அவன்.


டவுன்கார இஞ்சினீரு தோட்டத்து சாலையில எப்பவும் இளைப்போட கயித்துகட்டில்ல கிடக்கற அவுங்க அப்பாரு மாதிரி, "இப்படி பேச்சு துணைக்கு கூட யாருமில்லாம ரவும்பகலும் காட்டுக்கு நடுவால நின்னு நின்னு சடஞ்சு போயிருப்பே, பாவம் நீயு"ன்னு ஒரு சோலிய அவன தாண்டி போகும் போது கேட்டு வச்சேன்.
"அப்படியெல்லாம் இல்ல.. நாலு உசுர பயமுறுத்தறுதல இருக்கற சொகம் இருக்கே, அது கிடைக்கிற வரைக்கும் ஒரு பொழுது கூட நான் சடஞ்சுக்கமாட்டேன்"
"ஆமாமா, அதென்னமோ நிசம் தான், எனக்கும் அந்த சொகம் தெரியும்" ஒரு நிமிசம் ரோசணையா அவன பார்த்து சிரிச்சுகிட்டே சொல்லிவச்சேன்.
"காஞ்ச வக்கப்புல்ல இப்படி உள்ளார தினிச்சு என்னைய மூங்கிகழியில தூக்கி நிப்பாட்டினவங்களுக்குத்தான் அது தெரியும்" - சட்டுன்னு பதில் வந்துச்சு.
அந்த பதில் நான் சொன்னத ஆமோதிச்சு சொன்னதா இல்ல நம்மள குத்திக்காட்டவா'ன்னு விவரம் புரியாம குழப்பத்தோட சோலிய பார்க்க போயிட்டேன்.
வருசமாச்சு அவன பார்த்து. பின்னாடி ஒரு நாள் வேறொரு சோலியா அந்தபக்கம் போனப்போ தான் கவனிச்சேன், பருவமழையில சாயம் கரைஞ்சு காவியும் கருப்புமா கலந்து கிடந்த அவன் சட்டித்தலைக்கு கீழே, அந்த கனகாம்பர கலர் வெளுத்து போன அங்கராக்கு இன்னும் கொஞ்சம் பெருசா கிழிஞ்சு, வெளியே தெரிஞ்ச வக்கபுல்லுல... ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சு பொறிச்சிருந்தது.. 'ம்ம் எல்லாப்பயலும் ஒரு நா சடஞ்சு போயித்தான ஆகனும்'.



நன்றி : கலீல்ஜிப்ரன் (கொஞ்சம் ஓவராத்தான் போறனோ!)

--
#240

3 comments:

த.அகிலன் said...

படிக்க சொகமாத்தான் இருக்கு

யு.எஸ்.தமிழன் said...

சூப்பர் ராசா! அருமையான ஆழமான விஷயத்த இப்படி ஆனாயசமா தட்டிட்டு போற பாரு... அத படிக்கையில ஒரு தனி சொகம்... அரோமா பேக்கரி பப்ஸும் சக்கர தூக்கலா ஆத்தாத டீயும் அடிச்சுகிட்டே ஆர் எஸ் புரம் பிகர்கள ரசிச்சா மாதிரி இருக்கு ராசா!

Anonymous said...

படிக்க நல்லா சொகமா இருக்குது. வரிகளோட நீளத்தைக்குறைச்சுக்கிட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்குமுங்க