Friday, April 15, 2005

மும்பாய் X'பிரஸ்..

முதல் நாள் அடிச்சு புடிச்சு போயி படம் பார்த்தாச்சு.. எங்க ஊர்ல கமல் படத்துக்கு இவ்வளவு கூட்டம் பார்த்து நாளாச்சுங்க.. அதுவும் படம் ரெண்டு பெரிய தியேட்டர்ல (சாந்தி & ATSC) போட்டும் கூட்டம் வந்திருக்கு...

படம் பார்த்துட்டு வெளிய வரும் காதுல விழுந்தது
--------------

என்னடா படம் இது, ஒரு பைக், ஒரு குண்டு பையன், கமலு கூட மூனு பேரு.. இதையே எப்படி மாப்ள 2.30 மணி நேரம் பார்க்கிறது.. இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன், முதல்நாளே அடிச்சு புடிச்சு கமல் படத்துக்கெல்லாம் போகனுமான்னு..!!!

கமல் கலக்கிட்டாப்புல சகா.. நீட்டா ஒரு fastcomedy.. .. சூப்பர்டா..

ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சிருக்கானுகளே.. பின்னிருப்பாங்கன்னு நினைச்சேன்.. வழக்கம் போல கமல் வெறுப்பேத்திட்டருப்பா.. இவரு எதுக்கு தேவயில்லாம இப்படி 'வித்தியாசமா' செய்யறேன்னு நம்மள வதைக்கிறாரு..

படம் நல்லாத்தான் நண்பா இருக்குது.. 2.30 மணி நேரம் கும்முன்னு போகுது... என்ன, ஒரு லவ் இல்ல, அன்பே சிவம் மாதிரி பெரிய விஷயம் எதுவும் இல்லை.. ஆனா எங்கயும் போரடிக்காம போகுது..

இதை பார்க்கிறதுக்கு தான்.. என்னை கூட்டிட்டு வந்தியா.. கம்முன்னு 'துரைஸ்'ல சச்சின் போட்டிருக்கான்.. அதுக்கு போயிருக்கலாம்.. ஒரு குத்தாவது போட்டுட்டு வந்திருக்கலாம்..

ஏன் ராசு.. படம் நல்லாத்தான இருக்குது.. நம்மாளுகளுக்கு.. ஒரு டூயட், ஒரு சண்டை.. இல்லாட்டி ஆகாது'ம்பாங்களே..

---

இன்னைக்கு காலையில தினமலர் லோக்கல் நியூஸ்:
மும்பாய் xபிரஸ் ஓடும் சாந்தி மற்றும் ATSC தியேட்டர் வாசலில் ஆர்ப்பாட்ட்ததில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கைது

எனக்கு தெரிஞ்சு.. நேத்து காலையில சாந்தி தியேட்டர் முன்னாடி ஒரு டி.வி.ஸ்.50ல ரெண்டு பேரு கருப்பு கொடி கட்டிகிட்டு வந்து, காவலுக்கு நின்ன போலீஸ்காரங்க கூட சிகரெட் புடிச்சுட்டு இருந்தாங்க.. அவ்வளவுதான்.. இதுக்கு பேர் தான் 'ஆர்ப்பாட்டமா'

-----
ச்சே.. நேத்து ஒன்னாந்தேதி கோயிலுக்கு போகனும் அது இதுன்னு எங்கம்மா படுத்தினதுல
தலைவர் படம் மிஸ்ஸாயிருச்சு..தலைவர் படமெல்லாம்.. ஒரு ரெண்டு சுத்துல போகனும்.. அப்பத்தான் அது தலைவர் படம், இன்னைக்கு சாய்ந்தாரம் சக்தி சியர்ஸ்ல டேபிள் போட்டாச்சு.. 'சந்திரமுகிய்ய்ய்...' டிக்கெட் வாங்கியாச்சேய்.... டண்டடனக்கு ..டண்டடனக்கு...

Wednesday, April 13, 2005

நடேசன் காபி சாப்பிட போன கதை

 



கொஞ்சம் ஒல்லியா.., கொஞ்சமில்ல ரொம்பவே.. ஒல்லியா, கிட்டத்தட்ட ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி, எலும்பும் தோலுமா இருப்பானே, நம்ம நடேசன், அவன்பாட்டுக்கு தனியா பஸ்ஸ்டான்டுல நின்னுகிட்டிருந்தானுங்க. பஸ்ஸ்டாண்ட்ல எதுக்கு நிப்பாங்க? எல்லாம் பஸ்ஸுக்காகத்தான்!.நடேசனுக்கு அப்படி இப்படி, ஒரு பொண்ணுக்குகாகவெல்லாம் காத்திட்டுருக்கிற ஆளில்லை, அவனே பாவம், ஒருத்தியும் திரும்பி பார்க்க மாடேங்கிறான்னு நொந்து போய் இருக்கான், நீங்க வேற..

திடீர்ன்னு ஒரு கார் அவன் பக்கத்துல வந்து நிக்குது, அதுலேயிருந்து ஒரு அழகான பொண்ணு அவன பார்த்து கைகாட்டி, 'வண்டியில ஏறுடா நடேசு'ன்னு கூப்பிடுது. நம்ம நடேசனுக்கு 'யாருடா இது. நம்மளை ஏன் கூப்பிடுது'ன்னு ஒரு சந்தேகம், இருந்தாலும் பொண்ணு, அதுவும் அழகா வேற இருக்கு, அப்புறம் எப்படி போகாம இருக்கிறதுன்னு, கிட்ட போய் பார்த்தா, "நிர்மலா".

நிர்மலா யாருடாங்கரீங்களா? அதாங்க, நடேசன் கூட காலேஜ்ல படிச்சுதே, அந்த பொண்ணுக்கு கூட காலேஜ்ல ஏகப்பட்ட பேரு போட்டி போட்டாங்கன்னு நடேசன் ஒருமாதிரி விரக்த்தியா சொல்லுவானே, அதே நிர்மலா தான். 'என்னடா காலேஜ்ல நம்மளை ஒரு குப்பையா கூட கண்டுக்காத பொண்ணு, இப்படி காருல வந்து கூப்பிடுதே'ன்னு, நம்ம பையனுக்கு ஒரு கலக்கம் இருந்தாலும், இப்பவாது அவ பக்கம் உக்கார ஒரு சான்ஸ் கிடைச்சுதேன்னு டக்குன்னு காருல ஏறிட்டான்.

காரும் போகுது, நம்ம நடேசனுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ' ஒரு கப் காபி சாப்பிடுறயா என்கூட?'ன்னு நிர்மலா கேட்டதும், நடேசனுக்கு, காலேஜ்ல அவ காபி சாப்பிடுற அதே நேரத்துல கான்டீன்ல இன்னோரு மூலையிலகூட இவனுக்கு காபி சாப்பிட குடுத்த வைக்காததெல்லாம் நினவுக்கு வர, அத்தனை டிராபிக்கான டி.பி. ரோட்டுல பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி வெள்ளை டிரஸ் தேவதையெல்லாம் அப்படியே 'லாலாலா'ன்னு பாடிட்டு வர்ற மாதிரி தோனியிருக்குது, உடனே தலைய ஆட்டிட்டான். 'இப்பப்போனா கடையெல்லாம் கூட்டமா இருக்கும், என்னோட வீட்டுக்கு போயிடலாம், அங்கதான் அமைதியா இருக்கும்'ன்னு நிர்மலா சொல்ல்ட்டு நிர்மலா பாட்டூக்கு வண்டியா ஒட்டுது. நம்ம பையன் ஒரு புல் பாட்டில கிங்பிஷர் பக்கத்துலவச்சு ஓப்பன் பண்ணினாலே உளர ஆரம்பிச்சுடுவான், அவனைப்பார்த்து ஒரு அழகான் பொண்ணு, அதுவும் ஆட்டோகிராப் படம் மாதிரி, காளேஜ்ல சைட் அடிச்ச பொண்ணு, வீட்டுக்கு போய் தனியா காபி சாப்பிடாலாம்ன்னு கூப்பிட்டா, எதோ முதல் முதல்லா சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போற ஸ்கூல் பையன் மாதிரி ஒரே படபடப்பா தலையாட்டிருக்கான். அப்புறம் அவன் என்ன செய்யுவான், பேச்சு வந்தாத்தான?

வீட்டுக்கும் போயிட்டாங்க..'. என் பெட்ரூம்ல உக்காந்துக்கலாமே, அங்க தான் ஏ.சி.யிருக்கு சில்லுன்னு இதமா இருக்கும்'ன்னு நிர்மலா சொல்ல, இங்க நடேசனுக்கு, உடம்புல இருக்கிற அத்தனை ஹார்மோன் சமாச்சரங்களும், (வியர்வையும் சேர்த்துதான்) ஊத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏ.சி. ரூமுக்குள்ள வேர்த்து விறுவிறுத்து நிக்கிறவனை பார்த்துட்டு நிர்மலா 'ஏய், ஏன்டா உனக்கு இப்படி வேர்க்குது, எதுக்கும் சட்டைய கழட்டிட்டு இப்படி கட்டில்ல உக்காரு, இதோ நான் ஒரு நிமிஷத்துல வந்துர்ரன்'ன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டா, நடேசனுக்கு அவன் பத்து வருஷம் முன்னாடி முருகன் தியேட்டர்ல பார்த்த 'டியுசன் டீச்சர்'ல இருந்து போன வாரம் கனகதாராவுல பார்த்த 'தி டூ விமன்' வரைக்கும் அந்த நேரத்துல ஏன் ஞாபகம் வருதுன்னு ஒரே குழப்பம், அந்த குழப்பத்துக்கு நடுவாலயும் நிர்மலா சொன்ன மாதிரி சட்டைய கழட்டி வச்சுட்டு, (இந்த இடத்துல, நடேசனுக்கு பனியன் போட்டுக்கிற வழக்கம் இல்லைங்கிற முக்கியமான விஷயத்தை நாம் மறந்துரக்கூடாது) கட்டில்ல உக்காந்திருக்கான்.

இதோ வர்றேன்னு போன நிர்மலா அஞ்சு நிமிஷமா வரலை, இங்க நடேசனுக்கு, காலேஜ் டூர்ல நிர்மலா போட்டுட்டு வந்த டைட் ஜீன்ஸும், லோகட் டாப்ஸும், திடீர்ன்னு ஞாபகத்துக்கு வந்து பாடா படுத்துது.

பத்து நிமிஷம் ஆச்சு, நிர்மலா ரூமுகுள்ள வர்றா.... அவ கூட ரெண்டு சின்ன குழந்தைக, உள்ள வந்ததும் அந்த குழந்தைக கிட்ட சட்டையில்லாம உரிச்ச கோழி மாதிரி உக்காந்திருக்கிற நடேசன காட்டி 'பாத்துக்கங்க கண்ணுகளா, நீங்க ஒழுங்கா ஹார்லிக்ஸ், காம்ப்ளான், எல்லாம் குடிக்காட்டி இப்படித்தான் இந்த மாமா மாதிரி ஒல்லியாயிடுவீங்க'ன்னு சொல்ல சொல்ல
"அய்யோ! நம்ம நடேசன் ஏங்க திடீர்ர்ன்னு நெஞ்ச புடிச்சுட்டு கட்டில்ல சாயுறான், யாராவது ஒரு ஹார்லிக்ஸ் இல்லாட்டி காம்ப்ளான் கலந்துட்டு வாங்களேன்"

-----------------------
கவிதை (மாதிரி எதாவது) எழுதினா, காதலா?ன்னு கேக்கிறாங்க, (தாடி வச்சுட்டு சுத்துன காலத்திலயும் அதே கேள்வி தான் கேட்டாங்க), அதுனால இனிமேல் கவிதை கிவிதை எல்லாம் எழுதி இலக்கியசேவை செய்யிரது இல்லைன்னு முடிவு செஞ்சுட்டேனுங்க, (நமக்கும் பெருசா ஒன்னும் தோணலைங்கைறது தான் நிசம்).
எப்பவோ எங்கயோ கேட்ட ஒரு மேட்டர சும்மா கொஞ்சம் பில்டப் குடுத்து கதை மாதிரி எழுதி பார்ப்பமேன்னு தோனுச்சு, முயர்ச்சி செஞ்சிருக்கேன்.. ம்ம்.. என்ன செய்யிறது.. உங்க தலைவிதி இப்படி இருக்குது, எனக்கு இப்படியெல்லாம் தோணுது..

(உனக்கு மட்டும் எப்படிரா ராசா.. என்னவோ போடா..)

-----

மேலே எழுதியிருக்கிற பதிவு ஏற்க்கனவே ஒரு காபி? ங்கிற பேருல பதிவு செஞ்ச விஷயம்தானுங்க.. சும்மா ஒரு gapfillingக்காக மறுபடியும்.. ஹி.... ஹீ....

Saturday, April 9, 2005

மழையும் யானையும் பின்னே 'நேத்ரா'வும்..

ஊருபக்கம் நல்ல மழைங்க.. ஒரு மாசத்துக்கு தண்ணி வாங்கி ஊத்த வேண்டாம்ங்கிற அளவுக்கு தட்டிஎடுத்துட்டு போயிருக்குதுங்க, அதுக்குள்ள இந்த வேசை முடிஞ்சிரும்னு ஒரு நம்பிக்கை, இல்லாட்டி பழையபடி தண்ணி லோடு அடிக்கவேண்டியதுதான்...

பொதுவாவே, மழைபேய்ஞ்சுதுன்னா எங்காவது மலங்காட்டு பக்கமா போறது நம்ம வழக்கம்ங்க, சரி.. ஒரு வாரமா மழை கொட்டிட்டு இருக்குதுன்னு, நம்ம சகா மூணு பேர் சேர்ந்து ஒரு நாள் பரம்பிக்குளம் வரைக்கும் போயிருநதம்ங்க், அதுல ஒருத்தன் அவனோட ரெண்டரை வயசு 'நேத்ரா'வயும் எடுத்துட்டு வந்துட்டான் ('நேத்ரா'வோட அம்மா அவுங்கப்பாவ கண்காணிக்கா செஞ்ச ஏற்ப்பாடு அது! :-)). டாப்ஸ்லிப்ல இருந்து பரம்பிக்குளம் போற வழியில கொஞ்சம் ரோட்ட விட்டு ஒதுங்கி ஒரு கி.மி. நடந்தா ஒரு ஓடை வரும்ங்க, அங்க போயி ஓடுற தண்ணியில, 'தண்ணி'யோட கொஞ்ச நேரம் ஆடிட்டு, அப்படியே கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுட்டு படுத்துகிடந்துட்டு வந்தோம். சரி, இவ்வளவு தூரம் சின்ன குழந்தைய எடுத்துட்டு வந்துட்டோம் யானை சவாரி செய்ய வைப்போம்னு ஆசைப்பட்டு, டாப்ஸ்லிப்ல இருக்குற 'கூப்'புக்கு போனோம்ங்க. (சூரியன் படத்துல மொட்டை சரத் வேலை செய்யிற 'கூப்', ஆனா அது கூப்'புகார கவுண்டருது கிடையாதுங்க, கவருமெண்ட் 'கூப்').

யானை மேல ஏத்தி விடுற வரைக்கும், குஷியா இருந்த 'நேத்ரா', யானை நகர ஆரம்பிச்சதும் ஒரே ஆழுகை ஆர்ப்பாட்டம்ங்க, என்னடா இவ்வளவு நேரம் 'யானை, யானை, யானை மேல போறேன்'னு குஷியா இருந்த குழந்தை இப்படி அழுகுதேன்னு நமக்கும் கஷ்டமா போச்சுங்க. அப்புறம் என்ன செய்யறது, சீக்கிரமா எறக்கிவிட்டு, (இருந்தாலும் நம்ம் வீம்புக்காக, ஒரு சுத்து சுத்த விட்டுடனுங்க) அவளுக்கு புடிச்ச alpenlebe லாலிப்பாப் குடுத்து சமாதனபடுத்துனோம்.
அழுகை எல்லாம் சமாதனமானதுக்கப்புறம், 'ஷேம், ஷேம், என்ன இப்படி பயப்படுற நீ'ன்னு சும்மா வம்பிழுத்தனுங்க, அதுக்கு அவ ஒரு பதில் சொன்னா பாருங்க 'நான் ஒன்னும் பயந்துட்டு அழுல, என்னை இறக்கி விடாதீங்கன்னு தான் அழுதேன், நீங்க தான் என்னை சீக்கிரம் எறக்கி விட்டுடீங்க'ன்னு.. நான் அப்படியே ஆடிப்போயிட்டனுங்க. ம்.ம். இந்த புள்ளைக எல்லாம் வயசு வந்தா.. சாமி கஷ்டம் தான்.. கம்முன்னு சொல்றத கேட்டுகிட்ட போயிடனும். எல்லாம் நேரம்.. பொதுவா என் சகா கொஞ்சம் அமைதியான ஆளு அவன்புள்ளயே இவ்வளவு பேசுதுன்னா, நமக்கு நாளைக்கு ஒரு காரியம் ஆகி, நமக்கு ஒன்னு வந்து பொறந்து.. அய்யா..!! இவ்வளவு காலம் தான் இப்படி பெத்தவங்க பேச்ச கேட்டே போச்சுன்னா, இனி வர்ற காலமும் இப்படி பெத்ததுக பேச்ச கேட்டே போயிரும் போல இருக்குதுங்க..
வரும் போது கார்ல சகாகிட்ட "நங்கை உன்னை பார்த்துக்க ரெண்டரை வயசு புள்ளைய அனுப்புதேன்னு நினைச்சேன், ஆனா அதுல ஒன்னும் தப்பபில்ல பங்காளி, அடுத்த தடவை இந்த தப்ப செஞ்சிராத'ன்னு ஒரு எச்சரிக்கை குடுத்தேன், சரிதானுங்க!?

Tuesday, April 5, 2005

நெஞ்சமெல்லாம் காதல்

Song: Nenjamellam kaadhal
Movie: Ayutha Ezhuthu
Singers: Adnan Sami, Sujatha
Lyrics: Vairamuthu
MD: AR Rahman
============================

ஓர் உண்மை சொன்னால்
நேசிப்பாயா

நெஞ்சமெல்லாம் காதல்
தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞசம் கம்மி
காமம் கொஞசம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(உண்மை)

நேசிப்பாயா.. நேசிப்பாயா.. நேசிப்பாயா.. நேசிப்பாயா

பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதர்க்கு

(உண்மை சொன்னால்)


காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லம் மார்கழி தான்
என் கனவெல்லம் கார்திகை தான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தம் இல்லை

(ஓர் உண்மை சொன்னால்)

============================

inspired from :: http://tamillyrics.blogspot.com/

Friday, April 1, 2005

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது


"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ அதை இழப்பதற்க்கு.."


என்னாடா இப்படி கீதாஉபதேசமெல்லால் சொல்றானேன்னு பார்க்கரீங்களா.. அப்புறம் வேற என்னங்க செய்ய சொல்றீங்க, 4 1/2 இஞ்ச் போர்... 600 அடி போட்டு.. புகையா போனா வேற என்ன செய்ய சொல்றீங்க.
ஏற்க்கனவே மாசம் 50 நடை தண்ணி லாரியில வாங்கி ஊத்திட்டு இருக்கம்ங்க. நடைக்கு 300 ரூவா..!!

ம்..ம், இதே காசு, ஒரு 4 வருஷம் முந்தி சென்னைபட்டனத்துல, ஜெமினி மேம்பாலத்துகிட்ட, பொண்ணுக காலேஜ் எதிர்த்தாப்புல, ஏ.சி.யில உக்காந்து வேலைபாத்துட்டு, ஒரு மாசத்து வருமானமா வாங்கிட்டு இருந்தப்ப பெருசா தெரியலைங்க. இப்ப தெரியுது..

'சரி, மேற்க்கயாவது தண்ணி இருக்கில்ல, இதுக்கு ஏன் சலிச்சுக்கிற'ன்னு சாதரணமா சொல்லிட்டு போறாரு எங்கய்யன், நமக்கு தான்.. வயித்த கலக்குதுங்க.. பத்தாவது படிக்கிறப்போ 'the road not taken'ன்னு ஒரு poem இருந்துச்சுங்க, அதெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க..

என்னவோ போங்க..
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்"