Thursday, April 27, 2006

கள்ளக்காதல் !!??



கள்ளத்தனமாக..
அவனுக்குள்ளே சிரித்து கொள்கிறான்
அவளை நினைக்கும் போதெல்லாம்..

மொட்டைமாடி சுவற்றில்
காபியை ரசித்தபடி அவளும் சிரிக்கிறாள்
அவனை பற்றி பேச்சு வந்தால்..

தினமும் சந்தித்துகொள்கிறார்கள்
வெட்கத்துடன் கடந்து செல்கிறார்கள்

சொல்லமுடியாமல் தவிக்கிறார்களா..?

இல்லை

இந்த கள்ளத்தனத்தை ரசிக்கிறார்களா?


---
# 167

Tuesday, April 25, 2006

படிகள்!


'ஏறி வந்த படிகளை திரும்பி பார்க்கனும், அதான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு'ன்னு சொன்னாங்க..


பார்த்தாச்சு.. !!

கொஞ்சம் சாய்ஞ்சாப்புல திரும்பி பார்த்துட்டேன் !! :)

--
# 166

Monday, April 24, 2006

விதி வலியது..!!



இந்த விதி விதி'ன்னு ஒரு சமாச்சாரம் சொல்லுவாங்களே, இந்த மோகன், பூர்ணிமா எல்லாம் நடிச்ச 'விதி'யில்லீங்க.. நம்ம கோடு கட்டம் எல்லாம் ஒழுங்குபடுத்தி நம்ம வாழ்க்கைய நிர்ணயம் செய்யுதும்மாபாங்களே, அந்த விதி.. அதை நீங்க நம்பியிருக்கீங்களா?.. நான் பொதுவா யாராவது இதைபத்தியெல்லாம் பேசுனா, அதையெல்லாம் கண்டுக்கறதில்லீங்க.. நம்ம தான் பதிவு எல்லாம் எழுதற அளவுக்கு பெரிய(!) ஆளாயிட்டமில்ல.. இன்னும் அதெல்லாம் நம்பறதா சொல்லிகிட்டு இருந்தா அப்புறம் நல்லாயிருக்காதுபாருங்க.. அடப்போங்கடான்னு சொல்லிட்டு வேலைய பார்க்க போயிருவேன்.. ஆனா பாருங்க, நேத்து தான் எனக்கு அதுல ஒரு பெரிய நம்பிக்கையே வந்துச்சு.. ஒருத்தனுக்கு கோடும் கட்டமும் சரியில்லைன்னா அவன் கையில பெட்ரமாக்ஸ் என்னங்க 1000w சர்ச் லைட் குடுத்துவிட்டாகூட சரியா போயி பாழுங்கிணத்துல விழுந்து தான் தீருவான் என் கூட்டளி 'சித்திர' சொல்லுவான்.. அவன நான் நக்கல் பண்ணிட்டு கிடப்பேன்.. ஆனா அப்படி ஒரு சமாச்சாரம் நமக்குன்னு வந்து வாய்ச்சாத்தான்.. அதுவுஞ்சரிதான்னு தோணுது..


நான் ரொம்ப நச்சு பண்ணுணேன்னு சென்னைப்பட்டனத்துல இருந்து நம்ம சகா ஒருத்தன் 'மலைகள்ள'ன கூரியர்ல அனுப்பிவச்சதுக்கப்புறமும், போனவாரம் வந்திறங்கின நம்ம பையன் ஒருத்தன் பாசமா குடுத்த 'கருப்பும் வெள்ளையும்' பொட்டலம் பிரிக்காம அட்டாலியில அம்போன்னு தூங்கிறத பார்த்ததுக்கப்புறமும், பக்கத்தால சந்தியாவுல செகன்ட் (செகன்டா, தேர்டா??) ரிலீஸ் ஆயிருக்கிற 'காக்ககாக்க' போஸ்டர பார்த்துக்கப்புறமும், லூசுத்தனமான திரைக்கதை, கேணத்தனமான காட்சியமைப்பு, வெளெக்கெண்ணெய்த் தனமான வசனங்களை' - இதையெல்லாம் படிச்சதுகப்புறமும், கரெக்ட்டா நம்ம ஆளுக பக்கத்துல போனதும் மூடின கவுன்டரை பார்த்ததுக்கப்புறமும், பார்க்கிங் டோக்கன் வாங்கிற ஆளுகிட்ட பேசி டிக்கெட்டுக்கு கூட இருவது ரூவா குடுத்து 'திருப்பதி' பார்த்தப்போ தாங்க தெரிஞ்சது..

விதி வலியதுன்னு..!!



--
# 165

குறிப்பு : கொஞ்சம்கொஞ்சம் சுதர்சனின் வேண்டுகோளுக்கினங்க.. இன்றிலிருந்து ராசபார்வையின்எழுத்துருக்கள் கொஞ்சம்கொஞ்சம் பெருசாக்க பட்டிருக்கிறது.. :)

Tuesday, April 11, 2006

GrowUp Man..!!

கடைசியா அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு ஜனவரி மாசத்து நிறைஞ்ச முகூர்த்த நாள்ல வடக்கத்திக்காரங்க ஸ்டைல்ல கட்டுன ஒரு பிங்க கலர் பட்டுபுடவையில லார்ட்ஸ் ஹாஸ்பிடல் சர்ஜன் 'ரஞ்சித்'கூட ஜோடியா நம்மூர் வழக்கப்படி 'வரவேற்ப்பு'க்கு நின்னப்ப பார்த்தது, அதுக்கப்புறம் இப்பத்தாங்க, நேத்து சகா ஒருத்தன வண்டி ஏத்திவிட போனப்ப எத்தேசையா சுமி'ய பார்த்தேன். கொஞ்சம் பூசினாப்புல ஆயிட்டா.

'ஹேய்..எப்படிப்பா இருக்கே?' இன்னும் கண்ணுல அதே சிரிப்பு..
'ரஞ்ச், இது ராஜ், என் ஸ்கூல்மேட், நம்ம மேரேஜ்ல மீட் பண்ணினது, டு யூ ரிமம்பர்?'.. டாக்டர் அப்ப மாதிரியே ட்ரிம்மா இருக்காரு. கல்யாணத்தன்னைக்கு ஒரு பூங்கொத்து குடுத்து சம்பிரதாயமா பேசுனது, அதுவும் ஆறு வருஷம் முன்னாடி, பாவம் அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இருந்தாலும் 'யா!யா!..ஹவ் டு யு டூ?'ந்னு ஒரு ஆச்சிரிய புன்னகையோட கைகுடுத்தாரு.

ஒரு மாச லீவுல வந்திருக்காங்களாம், சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு, அப்படியே கொஞ்சம் ஊர்சுத்தல், இப்ப ரஞ்ச்'க்கு எதொ கான்ஃப்ரன்ஸ் அட்டன்ட் பண்ணனுமாம், அதுனால சுமி'மட்டும் சென்னையில இன்-லா வீட்டுக்கு போறதுனால ட்ராப் பண்ண வந்திருக்காராம்..
சுமி சொன்னத சுருக்கி குடுத்திருக்கேன், சரியான வாயாடி.. ஸ்கூல் படிக்கும் போது சுமி, மரக்கடை செட்டியார் பொண்ணு பொன்னரசி, நான், அப்புறம் துரை எல்லாரும் ஒரே பெஞ்ச். (ஃபார் யுவர் இன்போ : நாங்க படிச்சப்போ எங்க ஸ்கூல்ல நாலாவது வரைக்கும் தான் கோ-எட்) பக்கத்துல உக்காந்துட்டு, பெஞ்ச், டேபிள் எல்லாம் பென்சில்ல கோடு போட்டு, இதை தாண்டி உன் நோட்டு, பென்சில்பாக்ஸ் எதுவும் வரக்கூடாதுன்னு என்னையும் துரையனையும் ஒரு வழி பண்ணிருவா.. மிஸ் கிட்ட சொன்னாலும் கடைசியில எங்களுக்கு தான் திட்டு விழும், சில நேரங்கள்ல அடியும்.. ஏன்னா இவ வாய் சாமார்த்தியம் அப்படி, அது போக நம்ம துரையன் ட்ராக் ரெக்கார்ட் அப்படி..(நான் குட்பாய்!)

நாலாவதோட ஸ்கூல் மாறி போயிட்டாலும், அடுத்த வீதியில தான் சுமி'யும் இருந்தாங்கிறதுனால அந்த நட்பு மட்டும் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. நமக்கு சும்மா புஸ்தகத்தை பார்த்தாலே எதோ பேயடிச்ச மாதிரி ஆயிடும், தினமும் 'இப்படியே போனா நீ சினிமா கொட்டாயில முறுக்கு விக்கத்தான் போக போற'ன்னு தினமும் வீட்டுல சாபம் குடுப்பாங்க.. நமக்கு மனசுகுள்ள ஒரே சந்தோஷம், அப்படி போன தினமும் சினிமா பார்க்கலாமேன்னு, அதுனால நம்ம வீட்டாளுக எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி நான், சிவா, ஸ்ரீ, மங்கை அப்படின்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி பத்தாவது படிக்கும் போது எல்லாம் சுமி வீட்டுல தான் க்ரூப் ஸ்டடி..
எல்லாரும் ஒழுங்கா படிக்க, நான் மட்டும் மும்முரமா புஸ்தகத்தோட பின்னட்டையில படம் வரைஞ்சுகிட்டு இருப்பேன், சுமி' பயங்கிற தொணதொணப்பு, எதாவது பேசிகிட்டே இருப்பா. 'நான் இன்னைக்கு கருப்பு பென்சில் வாங்கினேன், கருப்பு பேனா வாங்கினேன், கருப்பு டாப்ஸ் வாங்க போறேன்னு, ஒரே கருப்பு புராணமா இருக்கும்..அவளுக்கு கருப்பு ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிருக்காம், 'ஐ ஹாவ் ஸ்டார்டர்ட் லவ்விங் ப்ளாக்'ன்னு அவ சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் தெரியும் அவ கண்ணுல.. கருப்பா ஒருத்தன தான் கட்டிக்குவேன்னு வேற சொல்லுவா..

நமக்கு வீட்டுல் உக்காந்து வரைஞ்சாத்தான் எங்க அம்மா 'படிக்கறத வுட்டுபோட்டு என்னடா எப்பப்பாரு கிறுக்கிட்டே கிடக்கற'ன்னு தொணதொனக்க ஆரம்பிச்சிருவாங்கன்னு இங்க வந்தா, இவ வேறன்னு ஒரே எரிச்சலா இருக்கும்.. இதுக்கு நடுவால மத்தவங்க வேற பயங்கிர படிப்பாளிக நம்மள இவகிட்ட விட்டுட்டு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டாங்கன்னா அவ்ளோ தான், சுமி'யோட அம்மா காம்ப்ளான் கொண்டு வந்தாத்தான் புஸ்தகத்துகுள்ளார இருந்து தலைய எடுக்குங்க.. அன்னைக்கு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டது, இன்னைக்கும் கம்ப்யூட்டருக்குள்ளார தலையவிட்டுட்டு கிட்க்கறாங்க.. ஒரு வித்தியாசமும் இல்ல..

அப்படி இருந்த நாங்க இந்த அஞ்சு வருஷமா மட்டுமில்லீங்க, அதுக்கு முன்னாலயும் ஒரு நாலு வருஷம் எந்த தொடர்புமில்லாம தான் இருந்தோம்.. அதுக்கு காரணம் 'சந்துரு', அவனும் எங்க செட்' தான். அவனுக்கு சுமி' மேல 'தெய்வீக' காதல், அப்படித்தான் எங்கிட்ட சொன்னான்!.. நான் இன்னொன்னு சொல்லலையே, சுமி' எங்க ஏரியாவும ரொம்ப பிரபலமான் 'பிகர்', தெரு முக்குல ஒரு கூட்டமே அவ தரிசனத்துக்கு நிக்கும், ஆனா நம்ம தான் பள்ளிகூடம் தாண்டுற வரைக்கும் பச்சபுள்ளையாவே இருந்துட்டமா, அதுனால அந்த தெரு முக்குல நிக்கிற சமாச்சாரத்துல எல்லாம் நான் (அப்போ!) கலந்துகிட்டதில்லைங்க..
(அவங்களும் நம்மள சேத்திக்கலைங்கிறது வேற விஷயம்)

அந்த கூட்டத்துல முக்கியமான் ஆள் இந்த சந்துரு'. நம்மகிட்ட வந்து 'மாப்ளே, நீ தான்எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்'ன்னு சொல்ல, அதுவரைக்கும் நம்மள ஒரு பொருட்டா கூட சீன்டாத பசங்க, நம்மள வந்து மாப்ளே'ங்கிறானுகன்னு ஒரு மிதப்பாகி நானும் பெருமையா அவன்கிட்ட இருந்து 'லவ்லெட்டர்' வாங்கி போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், அப்படியே இதை சாக்கா வச்சு, அவனுக கூட்டத்துல கலந்துடனும், நாமளும் அப்படியே ஒரு ஜமாவா தெருமுக்குல நிக்கனும்னு ஒரு நப்பாசை. எவ்ளோ நாள் தான் குட்பாய்'யாவே இருக்கிறது.. !

நம்மள எதோ அல்லக்கை வேலைக்கு அவனுக பயன்படுத்திருக்கானுகங்கிறதெல்லாம் பிற்காலத்துல தான் நமக்கு தெரிஞ்சுது.. அப்படி ஒரு கேடுகெட்ட போஸ்ட்மேன் வேலை பார்த்ததுல தான் சுமி'க்கு பயங்கிற கோபம், என்னை கிட்டத்தட்ட சட்டைய புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிட்டா,எப்படிடா நீ இதை செய்யலாம், உன் மூஞ்சியிலயே இனிமேல் முழிக்க மாட்டேன்னு அழுது சத்தம் போட்டுட்டு போயிட்டா...எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, ச்சே அந்த பெரிய பசங்க கூட்டத்துல சேர ஒரு சான்ஸ் கிடைச்சுது. இவ இப்படி அதை கெடுத்துட்டாலேன்னு.. நல்ல வேளை வீட்டுல யாரு கிட்டயும் சொல்லாம விட்டாளேன்னு ஒரு சந்தோஷம்..

அப்புறம் அப்படியே கொஞ்ச நாள்ல அவுங்க வீட்டுல வேற பக்கம் வீடுகட்டி அங்க குடி போயிட்டாங்க, நாமளும் அப்புறம் +2 பிசி, வெளியூர்ல காலேஜ்ன்னு அப்படியே வேற மாதிரி போயிட்டோம். அப்புறம் அவ கல்யாணத்துக்கு எங்கய்யன் எங்கயோ வேற வேலையா போனதுனால எங்கம்மாவுக்கு சாரதியா போயி, ரிசப்ஷன்ல வாழ்த்து சொல்லிட்டு வந்ததோட சரி.. அதுக்கப்புறம் நேத்து தான் பார்க்கிறேன்...

'வண்டி வேற ஒரு மணிநேரம் லேட்டு, ரஞ்சித்துக்கு எதோ அப்பாயின்ட்மென்ட் இருக்காம், ஒரே போர்ப்பா'ங்க, நான் 'ஃப்ரி தான், நான் இருக்கேன், வண்டி கிளம்பர வரைக்கும்னு' சொல்லி ரஞ்சித்த அனுபிச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் காபிஷாப்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்..
மலரும் நினைவுகள் எல்லாம் பேசிட்டு இருந்தோம், அப்போத்தான் சுமி கேட்டா, 'கல்யாணம் எப்படா?'. வர வர யாரை பார்த்தாலும் இதே கேள்விய தான் கேக்குறாங்க, நானும் வழக்கம் போல சிரிச்சுகிட்டே 'பண்ணிக்கலாம்னு' வழக்கம் போல சொன்னேன்.. 'யாராவது பார்த்து வச்சிருக்கியா?' இது அடுத்த கேள்வி.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவளே 'உன்கிட்ட போயி இதை கேக்குறேன் பாரு , நீ எங்க போயி...'
'ஏன் அப்படி, என்னை பார்த்தா அவ்ளோ இளக்காரமா இருக்கா என்ன?'
'பின்ன என்ன, உனக்கு என்னைக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்கு.. சரி அதை விடு.. சிவா,எப்படி இருக்கான்'ன்னு அப்படியே பேச்ச மாத்திட்டா... நானும் கண்டுக்கல.. அப்புறம் ஒரு மணி நேரம் லேட்டுன்ன வண்டி ஒன்னரை மணி நேரம் கழிச்சு கிளம்ப தயாராக, (என்னைக்காவது ஏர்-டெக்கான் நேரத்துக்கு கிளம்புமா.. ஒரு போட்டியே வைக்கலாம் போல அதுக்கு) நாங்க பரஸ்பரம் போன் நம்பர், ஈமெயில் ஐடி எல்லாம் குறிச்சுகிட்டோம்.

போகும் போது கடைசியா 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, இப்ப பார்க்க கொஞ்சம் கலராயிட்ட'ன்னு சிரிச்சுகிட்டே கிளம்புனா.. 'ம்ம்.. அப்படியா'ன்னு பக்கத்துல இருந்த கண்ணாடியில பெருமையா பார்த்துகிட்டேன்.. 'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா, growup man! ஆல் தி பெஸ்ட்'ன்னு சொல்லிட்டு டாடா காமிச்சுட்டு போயிட்டா..



திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சுகிட்டே வந்தேன்.. 'growup man'?.. நம்மள பார்த்து எதுக்கு அப்படி சொன்னா??... ம்ம்.. அப்படியே யோசிக்கிட்டே போயி சிக்னல்ல வண்டிய நிறுத்துனேன். இந்த 200 செகன்ட் சிக்னல்ல நிக்கிறது மாதிரி ஒரு கொடுமையே இல்லீங்க.. எப்எம்'ல எதோ இங்க்லீஸ் பாட்டு.. ஆயிரம் இருந்தாலும் ரெயின்போ மாதிரி வராதுன்னு மனசுகுள்ள சொல்ல சொல்ல.. டக்குன்னு
அவ சொன்னது ஞாபகம் வந்துச்சுங்க 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, கொஞ்சம் கலராயிட்ட'..

நமக்கு எல்லாமே லேட்டாத்தான் புரியுது.. இன்னும்..!!


pic courtesy: http://www.modernartimages.com/



---
#164