Friday, September 19, 2008

அப்பா

"ஒன்னு கேக்கனும் தம்பி", 'இன்னைக்கு ராத்திரிக்கு தாங்காதுங்கிறத டாக்டர் பதமான இங்கிலீசுல சொல்லிட்டு போனது ஆஸ்பத்திரி கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து சன்னமா கேட்டதுக்கப்புறம் உள்ளார வந்து பக்கத்துல நிக்கிற எம்மவன் கிட்ட கேட்டேன்.

"சொல்லுங்க" கொஞ்சம் குழப்பமா பதட்டமா பார்த்தான்.

" நீ இப்போ இங்க எதுக்கு வந்த?" வத்திபோயிட்டு இருக்கிற சக்தியெல்லாம் சேர்த்து வச்சு, தேவையில்லாத கேள்வி தான் கேட்டேன், ஆனாலும் எனக்கு தெரிஞ்சுக்க ஆசை.

"என்ன கேக்கரீங்க?" கண்ணுல குழப்பம் அதிகமானாலும், உதட்டோரம் சின்ன சிரிப்பு எட்டிப்பாக்குது

"இல்ல.. பதில் சொல்லு" தொண்டை அடைக்கிற மாதிரி இருக்கு, ட்ரிப்ஸ் போட்ட இடத்த லேசா வருடிக்குடுத்துக்கறேன்.

" நீங்க என் அப்பா, நான் இந்த நேரத்துல இங்க இருக்கனும்" கொஞ்சம் அழுத்தமாவே சொன்னான்.

"அதில்ல.. " தலைய ஆட்ட பார்த்தேன், முடியல.

ஒரு பெருமூச்சு அவன்கிட்ட இருந்து, அப்போ நான் இருந்த மாதிரியே நல்லா உடம்ப வச்சிருக்கான், மூச்சுவிடும் போது டீ சர்ட்ட துறுத்திட்டு ஏறி இறங்குது.. என் கிட்ட வந்து "என்ன சொல்ல வர்றீங்க?" என் மணிகட்டை புடிச்சிகிட்டே கேக்கிறான்.

"ஒண்ணுமில்ல விடு" பார்வைய ஜன்னல் பக்கம் திருப்பிகிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா போச்சு, மருமவபுள்ள துணி மாத்த வீட்டுக்கு போயிருக்கலாம். குழந்தைக எல்லாம் பள்ளிக்கூடத்துல இருந்து களைச்சி போயி வந்திருக்கும்.. அவன் பக்கம் பார்க்காம ஜன்னலுக்கு விட்டத்துக்கும் நடுவால பார்வைய அலையவிட்டேன்.

மனசுக்குள்ளார என்ன என்னமோ ஓடுது. அவன் வழியில நான் எப்பவுமே குறுக்க போனதில்ல, அவன் வாழ்க்கைய அவனே வாழ்ந்துக்க விட்டேன், அவன் முடிவுகள அவனே எடுக்கனும்னு நினைச்சேன். பல பேர் மாதிரி என் வாழ்க்கைய அவன வாழவச்சு பார்க்கனும்னு நினைக்கவே இல்ல நான். என்ன படிக்கிறதுன்னு அவனே தான் முடிவு செஞ்சான், நான் கையெழுத்து மட்டும் தான் போட்டேன், அவனே வேலை தேடிகிட்டான், தப்பான ஒரு ஜோடி கூட தேடிக்கிட்டான். சின்ன புள்ளையா இருக்கும் போது கூட அவன எதிலயுமே தடுத்தது இல்ல, அவன் சேக்காளிகள்ல எவனயாவது புடிக்கலைன்னாகூட, எனக்குள்ளய வச்சுக்குவேன், அவன் கிட்ட சொன்னதே இல்ல. அவன் தப்புகள அவனே தான் தெரிஞ்சு திருத்திகனும்.

"உனக்கு ஞாபகம் இருக்கா.. " பேசனும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு மெதுவா " அப்போ, உனக்கு நான் சைக்கிள் ஓட்ட சொல்லி குடுத்தப்போ.. "

குனிஞ்சு தரைய பார்த்து உக்காந்திருந்தவன், தலை நிமிந்து.. "ம்ம்.. ஞாபகம் இருக்கு, ஒரு நா நீங்க வந்தீங்க.. அப்புறம், நானே தனியா க்ரவுண்ட்டுக்கு எடுத்துட்டு போயி ஓட்ட கத்துகிட்டேனே.." குரல்ல கொஞ்சம் நிறையவே அழுத்தம் இருந்த மாதிரி பட்டுது.

நான் மறுபடி ஜன்னல் பக்கம் பார்வைய திருப்பி, அமைதியாயிட்டேன்.




[pic : http://www.burnside.sa.gov.au]




2 comments:

Unknown said...

kongumanam achu asalai erukuthunkow...

Unknown said...

kongumanam Achu asalai.