Monday, June 13, 2005

இறைவா

தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் நினைச்சுக்கறவங்க ஒருவகை, அந்த மாதிரி ஆளுக கிட்ட எதாவது காரியம் ஆகணும்னா, கொஞ்சம் நாசூக்கா பேசி சமாளிக்கனும், இல்லாட்டி கஷ்டம், அவுங்கள கூட சமாளிச்சிடலாம்ங்க, ஆனா தனக்கு ஒன்னுமே தெரியாதுங்கிறதே தெரியாம இருக்கிறவங்கள சமாளிக்கிறது இருக்குதே..


அப்பா சாமீ... ரெண்டு நாளா நான் பட்ட கஷ்டம்..



"இறைவா!! எனனை ஏன்தான் இந்த மாதிரி கழிசடை பசங்க கூடவே கூட்டு சேர்க்கரயோ.."



---
#92

Wednesday, June 8, 2005

பழைய பேப்பர்

பழைய பேப்பர்
இந்த பழைய பேப்பர் படிக்கிறதுங்கிறது, எப்பவுமே கொஞ்சம் சுவாரசியமான சமாச்சாரம்ங்க, இந்த பஜ்ஜி கட்டி குடுக்கிற போன வாரத்து பேப்பரை விட, ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு பேப்பரோ இல்லை வாராந்திரியோ கிடைச்சதுனா நான் விடமாட்டனுங்க, எடுத்து அட்டை டூ அட்டை படிச்சிருவேன். இன்னைக்கு தேதிக்கு வர சென்சேஷன் விஷயங்கள விட அது ரொம்ப சுவாரசியமா இருக்கும், இந்த படத்தோட கதை இப்படி, இவன் இவகூட கல்யாணம் பண்ணிக்கபோறான், இவரு இந்த தேர்தல்ல கட்சி மாற போறாரு, அப்படி இப்படின்னு எத்தனை கதைய நம்ம ரிப்போர்ட்டர்க சூட குடுத்திருப்பாங்க, அந்த சூடெல்லாம் ஆறி, வீனாபோனதுக்கப்புறம் அதை எடுத்து பார்த்தா செம காமெடியா இருக்கும்ங்க. சில நேரம் ரொம்பவும் டச்சிங்கான விஷயம் கூட கிடைக்கும். நம்ம வீட்டுகள்ல சாதரணமா இந்த மாதிரியெல்லாம் கிடைக்காது, அதுதான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இங்க்லீஸ் பேப்பர்க்கு ஒரு ரேட், தமிழ் பேப்பர்க்கு ஒரு ரேட்டுன்னு பழைய பேப்பர்காரனுக்கு போட்டு எதாவது ப்ளாஸ்டிக் குடம், எவர்சில்வர் கரண்டின்னு வாங்கி வச்சிருவாங்களே, ஒரு வேளை லைப்ரரியில கிடைக்கும், நாம அந்த ஏரியா பக்கமே போறாதில்லைங்க, அதுனால அந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் அப்பப்போ எப்படியாவது பழையபேப்பர் ஒன்னு நம்ம கண்ணுல சிக்கிரும்.
திடீர்னு எப்பவோ நம்ம வீட்டு விஷேசத்துக்கு கிப்ட்'டா வந்து, நாம உபயோகபடுத்தாம (ஒருவேளை அம்மாவுக்கு ஆகாத நங்கை குடுத்ததா இருக்கும்) அட்டாலியில அடுக்கி வச்ச எவர்சில்வர் பாத்திரத்துக்குள்ள 'எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்'ன்னு ஹெட்லைனோட ஒரு பேப்பர் கிடைக்கும். எடுத்து குப்பையில போடறதுக்கு முன்னாடி ஒரு வரி விடாம அதை படிச்சிருவோம், அவ்ளோ சுவாரசியமா இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள் எங்க அத்தை வீட்டு அட்டாலிய சுத்தம் பண்றப்போ, அதுவரைக்கும் சும்மா twinkle, gokulam அதை விட்டா ராணிகாமிக்ஸ், தினமணி குழந்தைகள் மலர், குமுதத்துல ஆறு வித்தியாசம், விகடன்ல ஜோக்குன்னு பார்த்திட்டிருந்தவன் முதல் முதலா பாலகுமாரன படிச்சேன்.. (இரும்புகுதிரைகள்). அந்த புக்கை எங்க அத்தை எப்பவோ எங்கயோ ட்ரெயின்ல வாங்கும் போது வாங்கி, படிக்காமயே அட்டாலியல போட்டிருந்தாங்க, நம்ம வூட்டாளுக புஸ்தகம் வாங்கினதே பெரிசு, அதை படிக்கலைங்கிறதுக்காக ஒன்னுஞ்சொல்ல முடியாதுங்க.
என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. பழைய பேப்பர் படிக்கிறது பத்தி சொல்லிடிருந்தேன்.. என்னடா திடீர்ன்னு பழைய பேப்பர் தேடுற கழுதை (கழுதை.. அவ்ளோதான் கழுதைபுலியெல்லாம் கிடையாது ஆமாம்..) மாதிரி ஆயிட்டேன்னு கேக்கரீங்களா.. அது எல்லாம் கீழ போட்டிருக்கனே அந்த படம் நமக்கு மெயில் வந்ததுனால வந்த வினை.
படம் நிஜமானதா இல்லை எதாது போட்டொஷாப் கில்லாடியோட வேலையான்னு தெரியலை (காஞ்சிபிலிம்ஸ் மாதிரி கில்லாடிக யாராவது பார்த்து சொன்னா தேவலை)


[படத்து மேலஒரு அழுத்து அழுத்தி பெருசா பார்த்துக்கோங்க ]


நன்றி : ஒடையகுளம் செந்தான்

--
#91

Tuesday, June 7, 2005

கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள்

இந்த கழுதைப்புலி இருக்குதுங்களே.. ஒரு சாயல்ல ஓனாய் மாதிரி, இன்னொரு சாயல்ல பார்த்தா ஊருக்குள்ள திரியுமே சொறி புடிச்சு, எப்பவும் பல்லைகாட்டிட்டு, பார்க்கவே கொஞ்சம் பயமா.. வெறிநாய்ன்னு சொல்லுவாங்களே, அதே மாதிரி தான் இருக்கும், எப்பவாது டிஸ்க்கவரி சேனல்ல பார்த்திருப்பீங்க, அதை பத்தி தான் இந்த பதிவு.

 


 


கழுதைப்புலியில மூனு வகை இருக்குதுங்க, striped, brown and spotted, இதுல நம்மூர்ல, அதாவது இந்தியாவுல இருக்கிறாது striped வகைமட்டும்தான். எப்பாவுமே தனியாவோ, சிலநேரங்கள்ல ஜோடியா திரியும், ஆனா கூட்டமா இருக்கிறது ரொம்ப அபூர்வம்ன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல நிறையா பேரு கழுதைப்புலியயும் செந்நாய்'யும் குழப்பிக்கறாங்க, செந்நாய் எப்பவும் கூட்டமா திரியும், ஆனா கழுதைப்புலி அப்படிகிடையாது. நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும். மத்த மிருகங்க சாப்பிடாம விட்டுடர எலும்பு மாதிரியான சமாச்சாரங்கள் கூட கழுதைபுலி ரொம்ப சாதாரணமா சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். நம்மாளுக சொல்லுவாங்களே 'கல்லை தின்னாலும் ஜீரணமாகிற வயசு'ன்னு, அந்த மாதிரி. ஆனா என்னதான் இவ்ளோ பயங்கிறமா சொன்னாலும், ஒரு கழுதைப்புலியோட முக்கியமான உணவு என்னன்னு பார்த்தீங்கன்னா, காட்டுல இருக்கிற பூச்சிக, இந்த காட்டு எலி, முயல், புதர்ல கிடைக்கிற பறவைகளோட முட்டை.. சிலநேரங்கள்ல பழம் காய்கறின்னுகூட இருக்கும்.
பெரும்பாலும், நம்ம கரும்புதோட்டத்துல எல்லாம் திரியுமே குள்ளநரி, அந்த மாதிரி புதர்லயும், வங்குகள்லயும் தான் இருக்கும்.

 


 


மேல சொன்ன கழுதைப்புலி சமாச்சாரம், போன வருஷம் (வீரப்பன் சாவுக்கு ஒரு மாசம் முன்னாடி) பந்திப்பூர் காட்டுப்பக்கமா ஒரு வாரம் நம்ம கூட்டாளிக கூட ட்ரெக்கிங் போயிருந்தேன், அப்பொ அங்க ரேஞ்சர் ஆபீஸ்ல கைட்' வேலை பார்க்கிற 'மாரிசாமி'ங்கிற ('ச்' கிடையாது) ஆளு நமக்கு சொன்னதுங்க. என்னவோ திடீர்ன்னு இப்போ ஞாபகம் வந்துச்சு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, இவ்வளவு விஷயம் கழுதைப்புலிய பத்தி சொன்னாரே ஒழிய கடைசிவரைக்கும் மாரிசாமி மூனு நாள் காட்டுல சுத்தி ஒரு தடவை கூட அதை கண்ணுல காட்டல..அப்புறம் வந்து மிருககாட்சிசாலையில தான் பார்த்தோம். (ஒரு வேளை நம்மள பார்த்து பயந்துருச்சோ என்னமோ?)

பி.கு. :

இந்த பதிவுக்கும் தற்போது தமிழ்வலைப்பதிவுகள்ல பரவலா எல்லாரும் அலசிட்டு இருக்கிற 'கழுதைப்புலி' சமாச்சாரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை

--
# 90

Monday, June 6, 2005

மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்

ஒரு வேலையா கோயமுத்தூர் வரைக்கும் நேத்து போயிருந்தனுங்க, போன இடத்துல சும்மா இருக்காம 'ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா'ன்னு பேனர் கட்டியிருந்தாங்கன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த பக்கம் போனேன் பாருங்க அது தான் தப்பாயிப்போச்சுங்க. நமக்கும் இந்த மாதிரி கூட்டத்துக்கும் பெரிசா சம்பந்தம் இல்லைன்னாலும், இப்ப கொஞ்ச நாளா இங்க வலைப்பதிவுகள்ல இதை பத்தி நிறைய பேரு எழுதி, அதை படிச்சதுல கொஞ்சம் நமைச்சல் எடுத்து உள்ளார போயிட்டன். அதுவும் நான் மட்டும் போயி தொலைக்காம கூட வந்து எங்கய்யன் கூட்டாளியோட அவிலா'வுல பதினோராவது படிக்கிற புள்ளைய கூட்டிட்டு போனேன் பாருங்க, அது அதை விட பெரிய தப்புன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது.
நான் போகும் போது கூட்டமெல்லாம் ஆரம்பிச்சிருந்தது. வெளிய நமக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் அவரோட பட்டாளத்தோட நின்னுட்டிருந்தாரு. அப்பவே எனக்கு உரைச்சிருக்கனும், நான் கேனத்தனமா அவருக்கு கைய காட்டிட்டு, அதுக்கப்புறமும் உள்ள போனேன் பாருங்க, என்னை சொல்லனும்.
கரெக்டா நான் உள்ள போகவும், உள்ள இருந்து 'சமஸ்கிருதத்துல பேசுடா நாயே, ஏண்டா தமிழ்ல பேசுற.. ங்ஒ... .ஆ..ஊ..'ன்னு காதுல விழுந்தது, கூட வந்த புள்ளை நம்மள ஒரு மாதிரி பார்க்குது, எனக்குகூட எங்காவது திடீர்ன்னு முனிசிபால்டி கவுன்சிலர் கூட்டம் நடக்குதா?ன்னு ஒரு சந்தேகம் ஆகிபோச்சு, என்னா ஏற்க்கனவே சிலதடவை அங்க போயி இந்த மாதிரி அனுபவம் நமக்கு நிறையா இருக்கு.
அப்புறம் வெளிய இருந்து போலீஸ் உள்ள வந்து, எல்லாரையும் புடிச்சு வெளிய தள்ளி.. ஒரு பெரிய தமாசாகி.. அடப்போங்கப்பா, இவுங்க எல்லாம் சேர்ந்து வளர்த்துவிடாட்டி, தமிழ் வளராதா என்ன??. நம்மூருல ஒரு இருவது வருஷம் முன்னாடி எழுதபடிக்க தெரிஞ்ச ஆளுகளே ரொம்பவும் கம்மி, அப்பவெல்லாம் இலக்கியம் படிச்சு, இலக்கியம் வளார்த்து(!) தான் தமிழ் வளர்ந்துச்சா என்ன.. அவனவன் அவனவனுது பார்த்துட்டு இருந்தாலே எல்லாம் ஒழுங்கா இருக்கும். ரெண்டு மூனு பேருகிட்ட வெளிய வந்து பேச்சு குடுத்து பார்த்தேன், எனக்கென்னமோ அங்க ரகளை பண்னின ஆளுக நிறையா பேருக்கு ஜெயகாந்தன் என்ன பேசுனாருன்னே தெரியாதுன்னு தோனுது..
அடப்போங்கப்பா எனக்கு ஆயிரம் ஜோலி இருக்குது, அதை விட்டுட்டு..
சரி வந்தது வந்துட்டோம் ஜெயகாந்தன் பேசுறத கேட்டுட்டு போலாம்னு பார்த்தேன், ஆனா கூட வந்த ஆளு முறைச்ச முறைப்புல வேண்டாம்னு வந்துட்டனுங்க. வெளிய படியெறங்கும் போது எதோ 'மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள், 'ன்னு சத்தம் கேட்டுது, ஜெயகாந்தன்'தானாம் அது, காலையில பேப்பர்ல போட்டிருந்தாங்க. நானும் அதையே தான் திரும்பி வர்ற வழியெல்லாம் சொல்லிட்டு வந்தேன், பாவம் கான்வெண்ட்ல படிக்கிற புள்ளை,ஏதோ நம்மளையெல்லம் இது வரைக்கு படிச்ச ஆளுகன்னு ஒரு மரியாதையா பர்த்துட்டு இருந்துச்சு.. இனிமேல் எப்படின்னு தெரியல.. எனக்கு வேணும்..

நமக்கு முன்னாடியே பத்ரி இதை பத்ரி எழுதிட்டாரு :-(

--
#89

Thursday, June 2, 2005

இப்பத்தான் நிம்மதி


பதினஞ்சு நாளா இணையத்துல இணையவே இல்லைங்க, மெயில் பாக்காம, தமிழ்மணம் பக்கம் வராம... கொஞ்சம் கஷ்டமான சமாச்சரம் தான் போங்க.. என்னவோ பொறந்ததுலயிருந்து இணையத்துலயே வாழுற மாதிரி சலிச்சுக்கிறேன்னு நினைக்கரீங்களா.. அப்படியெல்லாம் ரொம்ப பெரிய சொந்தம் இல்லைன்னாலும், ஆறு வருஷமா எதுக்கெடுத்தாலும் கம்புயூட்டர், நெட்'டுன்னே இருந்துட்டு, திடீர்ன்னு இந்த மாதிரி தொடர்ச்சியா பதினஞ்சு நாள் (நடுவால, ஒரு நாள் ஒரு கால் மணி நேரம் மட்டும் விதிவிலக்கு) இணையபக்கமே வராம இருக்கிறது இப்ப தானுங்க.. இன்னைக்கு காலையில வீட்டுக்குள்ள வந்ததும், எங்கய்யன் 'முதல்ல பல்லு கில்லு தேய்ச்சு, மூஞ்சிய கழுவிட்டு வந்து உக்காருடா'ன்னு சொல்லியியும், நான், 'ஆன் பண்ணி விட்டுட்டு போயி விளக்கிகறனுங்க'ன்னுட்டு நேரா கம்ப்யூட்டர் பக்கம் தான் போனேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து நம்ம டயலப்ப தட்டி ப்ரவுசர்ல 'யாஹூ'வ பார்த்ததும் தான் ஒரு நிம்மதி. அதென்னமோ இப்பவெல்லாம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது இணையம் பக்கம் வராட்டியோ, இல்ல நம்ம செல்'ல கவரேஜு இல்லாட்டியோ, என்னமோ ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ் ஆகிபோகுதுங்க..
ஒரு ரெண்டு நாள் விட்டாலே நம்ம தமிழ்மணத்துல எக்கச்சக்கமா ஓடியிருக்கும், இப்போ பதினஞ்சு நாள்!!.. எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கனும்..
படிச்சுட்டு அப்புறம் வந்து வச்சுக்கிறேன் எல்லாரயும்..

--
# 88