Thursday, December 22, 2005

தொலைத்துவிட்டேன்!



அவள்..

நேர்மையை எனக்கு அறிமுகபடுத்தியவள்
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை உணர்த்தியவள்

அவளுடைய நேர்மையை காட்டி என்னை பயங்கொள்ள செய்தவள்

என்னை முழுமையாக மாற்றியவள்..
நம்பிக்கைஉடையவனாக.. நம்பத்தகுந்தவனாக

ஆனால்...

இன்று
அவள் நேர்மையை தொலைத்துவிட்டாள்


நானும் தொலைத்துவிட்டேன்,
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை..

--
#128

Monday, December 19, 2005

எங்க முறையிடுவேன்..?

pic courtesy :http://peeron.com

சட்டை கிழிஞ்சிருந்தா...
தச்சு உடுத்திக்கலாம்..

நெஞ்சு கிழிஞ்சிருச்சே...
எங்க முறையிடுவேன்...?


----
சும்மா,..காலையில ரெயின்போ எப்.எம்'ல தலைவர் பட பாட்டு கேட்டுகிட்டே வண்டி ஓட்டுனதுலைருந்து, இதே வரியத்தான் பாடிகிட்டு இருக்கேன்.. உங்களுக்கும் சொல்லாலாமேன்னு தான் :-)

--
#127

Wednesday, December 14, 2005

அதே மெனு


நம்ம வீட்டுல இந்த டிசம்பர் மாசம் ஆம்பிச்சா வருஷம் தவறாம ஒரு நாடகம் நடக்கும்ங்க, ஒண்ணாந்தேதி வாக்குல இருந்தே 'புது சேலை எடுக்கனும்'னு எங்கம்மா ஆரம்பிப்பாங்க, 'ஆமா ஏற்க்கனவே எடுத்து வச்சிருக்கிறதுல எதாவது ஒண்ணு கட்டிக்க வேண்டியதுதான'ன்னு எங்கய்யனும் வழக்கம் போல கடைசி நேரம் வரைக்கும் பிகு பண்ணிகிட்டே இருப்பாரு, எப்படியும் முத நாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும், 'வண்டியில முன்னாடி சீட்டுல ஒரு கவர் இருக்குது பாரு'ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு கைகால் கழுவ போயிருவாரு, எங்கம்மாவும் படபடப்பா ஒரு சிரிப்போட போயி அந்த கவரை எடுக்கிறதும், அதுக்குள்ளார ஒரு புது பட்டுசேலை இருக்கிறதும்..
நானும் நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்த பார்த்துட்டு தாங்க வர்றேன், எப்படியும் அடுத்த நாள் எனக்கு அவ்வளவா புடிக்காத ஆனா எங்கய்யனுக்கு புடிச்ச ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் உண்டு..கூடவே எங்கய்யன் புதுதுணி உடுத்திலைங்கிற புலம்பலோட..
வருஷம் தவறாம இதே 'மெனு' தானான்னு நான் சும்மா அலுத்துகிட்டாலும், நிஜத்துல இன்னும் நிறையா வருஷம் இதே மாதிரி ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் சாப்பிடனும்னு தான் ஆசைப்படுறேன்.
பார்த்தீங்களா எல்லாம் சொன்னேன், ஆனா என்ன விஷேசம்னு சொல்லாமயே விட்டுட்டேன்.. நான் இப்படித்தாங்க சொல்ல வந்தத விட அதை சுத்தி இருக்கிறதுல தான கவனம் போகும் எனக்கு..
விஷேசம் என்னன்னா எங்க வீட்டுல எங்க்கய்னுக்கும், அம்மாவுக்கும் இன்னைக்கி (14-டிசம்பர்) கல்யாண நாள்.. 29வது வருஷம்..

நம்ம சகா ஒருத்தன் காலையில என்கிட்ட 'நீ என்ன கிப்ட் குடுத்தே'ன்னு கேட்டேன்.. 'ச்சே ச்சே, நமக்குத்தான் இந்த கிப்ட் குடுக்கிற பழக்கம் எல்லாம் இல்லையே, வழக்கம் போல 'இதே மெனுவா'ன்னு அலுத்துகிட்டு சாப்பிட வேண்டியதுதான்.. ;-)


--
#126

Tuesday, December 13, 2005

போன மச்சான் திரும்பி வந்தான்..

எல்லாருக்கும் வணக்கம்ங்க..
ரொம்ப நாள் கழிச்சு, சொந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு, திரும்பவும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கேன்.
நடுவால கொஞ்ச நாள் காணாம போன காலத்துல இங்க நிறைய விஷயம் நடந்திருக்கு, எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து படிக்கனும்.
அப்புறம்.. ஊர்ல மழை பரவாயில்லைங்க.. ஊரெல்லாம் பேய் மழை அடிச்சிருக்கு, நிறையா பேருக்கும் மழைய பத்தி இப்ப பேசுனாலே பத்திக்கிட்டு வரும், ஆனா நம்மூருபக்கம் பக்கம் அந்தளவுக்கு பேய் மழை இல்லீங்க, ஆனா நல்ல மழை..
நாலு வருஷமா தண்ணியில்லாத கிணத்துல, அதுல இருந்த மோட்டார கூட கழட்டி வச்சிருந்தோம், இப்போ அதுல கடை எடுத்துவிட்டு, பொழுதுக்கும் வாய்க்கால்ல தண்ணி வெளியபோயிட்டிருக்கு, அந்தளவுல நல்ல மழை. நாலு அஞ்சு வருஷமா மழையே இல்லாம, என்னாடா இது தெரியாத்தனமா இப்படி விவசாயம்னு வந்து மாட்டிகிட்டமோன்னு நினைச்சேன், ஆனா இந்த மழை இன்னும் ரெண்டு மூனு வருஷம் எல்லாம் ஒழுங்கா போகும்னு தோணுதுங்க..
வேற என்னங்க..
கொஞ்ச நாள் கேப் விட்டுட்டு மறுபடியும் வந்ததுல என்ன எழுதறதுன்னே தெரியலைங்க, இதுக்கு முன்னால மட்டும் அப்படி என்ன உருப்படியா எழுதி கிழிச்ச்னேன்னு கேக்கரீங்களா, அதுவும் சரிதான்..
ஆனாலும் எதாவது எழுதுவேன்.. இப்போதைக்கு இவ்ளோதான்..

மீண்டும் வருவேன்..

என்றும் அன்புடன்
உங்கள்
கொங்கு'ராசா

--
#125

Wednesday, October 5, 2005

இடைவேளை..!!



வாழ்க்கையில மாற்றம்ங்கிறது மட்டுமே மாற்றமில்லாதது'ன்னு சொல்லுவாங்க, அதுவும் என்னை பொருத்த வரை மாற்றங்கலுக்கு நடுவால தான் நான் ஓடிட்டே இருந்திருக்கேன்.. முன்னால ஒரு நாள் ஒருநாள் வலைப்பூ'வில அறிமுகத்துக்காக மதி எங்கிட்ட என்னை பத்தி கேட்டப்ப, சும்மா சரசரன்னு ஒரு பக்கம் எழுதிட்டு, அப்புறம் அதை படிச்சு பார்த்ததுல எனக்கே ஒரு மாதிரி சிரிப்பா வந்துருச்சுங்க.. அவ்வளவு 'U' டர்ன் அடிச்சிருக்கேன் நான்.. அந்த மாற்றங்கள் வழியில இப்ப இன்னொரு மாற்றம்.. இந்த முறை ஆசைக்காக இல்லாம, சில சொந்த காரணங்களுக்காக.

என் சகா ஒருத்தன் சொல்லுவான் 'குழந்தையாவே இருந்திருக்கலாம்டா, என்ன அடிக்கடி கீழ மேல விழுந்து கை கால்ல காயம் பண்ணிபோம் அவ்வளவுதான, இப்ப வளர்ந்துட்டு கை கால பத்திரமா வச்சுகறோம், ஆனா மனசுல காயம் பண்ணிக்கறோம்'ன்னு, கரெக்ட்டுதான்.. ஆனா அதுக்காக வளராம குழந்தையாவே இருக்க முடியுமா..என்ன? .. மனவளர்ச்சி குன்றியவன்'ன்னு சொல்லி தூக்கி பைத்தியகார ஆஸ்பத்திரியில போட்டுர மாட்டாய்ங்க.
மாற்றம் என்னதான் வளர்ச்சிய குடுக்குதுன்னாலும் சில நேரம் சங்கடம் தான்.. சரி.. சரி..!! வழக்கம் போல சொல்ல வந்தத சொல்லாம வெட்டி கதை பேச ஆரம்பிச்சுட்டன் பார்ட்தீங்களா... இந்த பழக்கம் மட்டும் மாறவே மாட்டேங்குது .. மாற்றமில்லாததும் உண்டுங்கிறதுக்கு இது ஒரு சாட்சி.. ;-)..
சரி.. சொல்ல வந்தத சொல்லிடறேன்..
இந்த மாற்றம் முடிஞ்சு ஒரு மாதிரி செட்டில் ஆகி, அதாவது அடுத்த மாற்றத்த எதிர்கொள்ள தயார் ஆகிற வரைக்கும் ;-), இந்த பக்கம் வந்து என் 'ராசபார்வை'ய செலுத்த முடியாது போல இருக்குங்க.. நானும் எவ்வளவு நாள் தான் வெட்டியா ஒரு படத்தையும் பாட்டையுமே போட்டுகிட்டு இருக்கிறது.. அதான் யாரும் கல்விட்டு எரியறதுக்கு முன்னாடி நானே மரியாதையா உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு போயிரலாம்னு வந்திருக்கேன். நான் பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போயிட்டா அப்புறம் பயபுள்ள இவத்தையே திரிஞ்சுகிட்டு இருந்தான், திடீர்ன்னு காணாத போயிட்டான்னு நீங்க யாரும் விசனப்பட கூடாது பாருங்க, அதான்.. சொல்லிட்டேன். 'ராசபார்வை' வராதே ஒழிய, நான் தமிழ்மணம் மூலமா உங்களை மேல எல்லாம் என் பார்வைய வீசிகிட்டே தான் இருப்பேன்.. ;-)

எப்ப திரும்பி வருவே?ன்னு கேட்டீங்கன்னா..

இந்த சினிமாபடத்துல எல்லாம் கோட்டும் கண்ணாடியும் போட்ட டாக்டருக கோமா பேஷண்ட்டுகள பத்தி சொல்ற மாதிரி.. 'இந்த பதிவு எப்ப வேணா பழைய நிலமைக்கு வரலாம், ஒரு வாரத்துல, ஒரு மாசத்துல, ஒரு வருஷத்துல, ஏன் நாளைக்கே கூட அது நடக்கலாம்.. ஒரு வேளை பழைய நிலமைக்கு வராம கூட போயிரலாம்.. நம்ம கையில எதுவுமே இல்லைங்க..'

நன்றி மக்களே.. மீண்டும் சந்திப்போம்..!!



--
#124