Wednesday, July 19, 2006

இன்று

கண்களுக்குள் வெதுவெதுப்பாக சூடு பறவுகிறது
மனது எதோ இருப்பில்லாமல கொஞ்சம் மிதப்பாக சுற்றுகிறது

ஒரு நாளைக்கு இரண்டு என்று உத்திரவாதத்தை
வழக்கம் போல இல்லாமல் இன்று மதிக்க தோன்றுகிறது

நேரம் ஆக ஆக,
உடம்புக்குள் எதோ புகுந்துவிட்டதை போல நடுக்கம்
அக்வாஃபினா கூட ஏனோ கசப்பாக உள்ளே இறங்குகிறது


'டேய் கொதிக்குது, இங்க ஏ.சி'யில உக்காந்து என்னடா செய்யுற, வூட்டுக்கு போ'
எத்தேசையாக தொட்டு பார்த்த சகா சொன்னதும் தான் புரிந்தது

இது 'காய்ச்சல்'. ;)
ஒரு டோலொ சாப்பிட்டு தூங்கனும்.. :(


---
#193

Wednesday, July 12, 2006

பாதுகாப்பு

உலகம் நொம்ப கெட்டுபோச்சுங்க, எங்க பார்த்தாலும் ஒரே கேப்மாரித்தனமா இருக்குங்க, 'இங்க எவனுக்கும் எதுக்கும் பாதுகாப்பு இல்லை'ன்னு குருதிப்புனல் கமல் மாதிரி கீச்சுன்னு கத்ததோணுதுங்க.
(ச்சே, சனிக்கிழமை சும்மாயிருக்காம 17 வது முறையா 'குருதிப்புனல்' பார்த்தது தப்பா போச்சு, எதுக்கெடுத்தாலும் அந்த பட வசனமே வருது)

ஒரு மனுசன் எவ்ளோ தான் பாதுகாப்பா இருக்க முடியும் சொல்லுங்க.. அட கோயிலுக்கு போயி நிம்மதியா சாமி கும்பிடலாம்னு வெளிய விட்டிருக்கிற செருப்பை எவனும் அடிச்சுட்டு போயிடாம இருக்கனும்ங்கிறது தான் முத வேண்டுதலா இருக்குது நிறையா பேருக்கு. இது பத்தி எங்கயோ எப்பவோ ஒரு 'ஹைக்கூ' படிச்சதா நினப்பு.. எங்க எப்ப என்னன்னு ஞாபகம் இல்லை.. மனசுகுள்ளார இருக்கிறத யாரு வந்து லவட்டிட்டு போறாங்கன்னு தெரியலை..

ஆனா, இங்க பாருங்க ஒருத்தர், வெளிய விடுற செருப்புக்கு எவ்ளோ பாதுகாப்பு வச்சிருக்காருன்னு..


நம்மாளுக எப்பவும் இந்த மாதிரி விசயத்துல எல்லாம் கெட்டிதான். :)


--
#192

Tuesday, July 11, 2006

அசிரீரி

அவன் பாட்டுக்கு மனசுகுள்ளார 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'ன்னு எஸ்.பி.பி. அளவுக்கு இல்லைன்னாலும், எதோ அவனுக்கு புடிச்ச மாதிரி சங்கதி எல்லாம் மாத்தி போட்டு பாடினபடியே சுத்திமுத்தியும் வேடிக்கை பார்த்துகிட்டு வீதியில போயிட்டிருந்தானுங்க, யாருடா அவன்'ங்கரீங்களா, அதெல்லாம் எதுக்குங்க, நம்ம பய, இது போதாதா.. சரி.. சரி கதைக்கு வாங்க.

அப்படியே போயிட்டிருந்த பயலுக்கு திடீர்ன்னு எங்கிருந்தோ ஒரு குரல் 'நில்லு! இன்னொரு அடி முன்னாடி எடுத்துவைக்காத, வச்சியன்னா மேல இருந்து ஒரு விளம்பர பலகை உன் மண்டை மேல விழுந்திரும்'ன்னு. என்னடா இது சத்தம்ன்னு அவனும் சுத்தியும் பார்க்கிறானுங்க, ஒருத்தரையும் பக்கத்துல காணோம், நேத்து ராத்திரி சாப்ட்ட 'சிம்ரனாஃப்' தாக்கமா இல்லை நிசமாலுமே இந்த அசிரீரிம்பாங்களே அந்த மாதிரி எதாவதா இல்லாங்காட்டி இந்த வடிவேலுவை கலாய்க்கிற பார்த்திபன் மாதிரி எவனாவது 'நம்மள வச்சு காமெடி கீமெடி செய்யுறானான்னு' ஒரு டவுட்டுல அப்படியே நின்னு யோசிக்கறவன் விருக்குன்னு துள்ற மாதிரி 'டமால்'ன்னு அவனுக்கு ஒரு ரெண்டுஅடி முன்னால அந்த யானை விலைக்கு விக்குற காத்தடைச்ச புளிச்ச சிப்ஸை கையில வச்சபடி சாயிஃப் அலிகான் தலைகீழா கிடக்கறாரு.

'ஆஹா.. இதென்னடா வம்பாபோச்சு, நல்ல வேளை அந்த குரலை அலட்ச்சியப்படுத்தாம நின்னோம், இல்லாங்காட்டி அத்தச்சோடு பலகை தலைமேல விழுந்து, இவன் மண்டைக்குள்ளார ஒன்னுமில்லைங்கிற ரகசியத்தை இந்நேரம் இந்த ஊரு உலகத்துக்கெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்குமே'ன்னு யோசிச்சிகிட்டே விசனத்தோட நடக்க ஆரம்பிச்சான்ங்க.

சும்மாவே நம்ம பய இலக்கியவாதிக கூட்டத்துல மாட்டுன கோயிஞ்சாமி மாதிரி தாங்க இருப்பான், பாவம் நம்மள மாதிரி பயந்த பய பாருங்க, இதுல இப்படி ஒரு 'அசிரீரி' கேட்டதுல ரொம்பவே 'டர்ரி'யாயிட்டான்ங்க. அதே நினப்புல அப்படியே வீதிய தாண்ட போனவன் காதுகுள்ளார, 'நில்லு!' மறுபடியும் அதே குரல். இந்த தடவை எதையும் யோசிக்காம சட்டுன்னு அப்படியே டிஸ்க் ப்ரேக் அடிச்ச புல்லட் மாதிரி டக்குன்னு நின்னுட்டான். எதுக்குடா நின்னோம்னு யோசிக்கும் போதே ஒரு அவன கிட்டத்தட்ட உரசிட்டு போகுது ஒரு புத்தம்புது சான்ட்ரோ. எவனோ சொகுசா கேம்பஸ்ல செலக்ட் ஆகி வந்தவன் ஈ.எம்.ஐ'ல வாங்கினது போல இருக்கு, பின்னாடி கண்ணாடி வழியா பார்த்தா ட்ரைவர் சீட்டுல ரெண்டு தலை தெரியுது, இவனுக அலம்பல் தாங்க முடியலை சாமி.

சரி, அதை விடுங்க அதை பத்தி எல்லாம் கவலைப்பட நம்ம உதை இருக்காரு, நமக்கு எதுக்கு அந்த கிரகமெல்லாம். நம்மாளு சமாச்சாரத்துக்கு வருவோம். நம்ம பயலுக்கு பயங்கிர ஆச்சிரியம் என்னடா இது நமக்கு ஒரு 'ஆபத்து'ன்னா உடனே குரல் கேக்க்து, நமக்கு எதும் 'ஐயர் தி க்ரேட்' மம்முட்டி மாதிரி இந்த இந்த ஈஎஸ்பி'யோ இல்லை யூஎஸ்பி'யோ சொல்லுவாங்களே, அது வந்திருச்சான்னு ஒரு குழப்பம்.

சரி, நமக்கு கேக்குதில்லை, அது மாதிரி நம்ம பேசுனா அதுக்கும் கேக்கும்னு முடிவு பண்ணி 'ஹலோ, யாருங்க அது!'ன்னு ஒரு மாதிரி தைரியமா கேட்டுட்டானுங்க. ஒரே அமைதி ஒரு பதிலையும் காணோம். நம்மாளுக்கு லைட்டா வயித்த கலக்குற மாதிரி ஆயிருச்சுங்க, இருந்தாலும் நம்ம கமல் குருதிப்புனல்'ல சொன்ன மாதிரி 'தைரியம்ங்கிறது பயப்படாத மாதிரி நடிக்கிறது'ங்கிற வேதவாக்கை நினைச்சுகிட்டு மறுபடியும் ஒரு தடவை சத்தமா 'யாருய்யா அது?'ன்னு ஒரு குரல் விட்டான்ங்க.

ஒரு நிமிஷம் ஒரு பதிலும் இல்லை, அப்புறம் பக்கத்துல இந்த விட்டலாச்சாரியர் படத்துல வர்ற மாதிரி காத்துல கலங்கலா ஒரு உருவம், இந்த கேஸ்பரோ ஜாஸ்பரோ சொல்லுவாங்களே அந்த மாதிரி. நம்ம பயலுக்கு இப்ப நிசமாலுமே வயித்த கலக்க ஆரம்பிச்சிருச்சு. அந்த உருவம் அவனை பார்த்து சிரிச்சுகிட்டே 'பயப்படாத, நான் உன் நலம் விரும்பி, உன்னை காப்பாத்துறது தான் என் வேலை, நீ செஞ்ச புண்ணியங்களுக்காக, உன்னோட நல்ல மனசுக்காக ஆண்டவன் என்னை அனுப்பி வச்சிருக்காரு, உனக்கு எதாவது ஒரு ஆபத்துன்னா நான் உடனே வந்து உன்னை காப்பாத்திருவேன்'ன்னு சொல்லுச்சுங்க.


'ஓ! அப்படியா'ன்னு ஆச்சிரியமா கேட்டுகிட்டே இருந்தவன், சட்டுன்னு கோவமாயி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி.. 'ஆமா இந்த மாதிரி சின்ன ஆபத்துக்கெல்லாம் வந்திரு, போன வாரம் எனக்கு கல்யாணம் ஆச்சே அப்ப எங்க போயி தொலைஞ்ச, இப்ப வந்து காப்பாத்துரேன் கீப்பாத்துரேன்னுட்டு'.

நம்ம பய இப்படியெல்லாம் கோவப்படவே மாட்டான், என்னவோ தெரியலைங்க இப்பவெல்லாம் இப்படி ஆயிட்டான்.

---
#191

Friday, July 7, 2006

கனவுக்குள் காவல்



வெந்நீரில் நீ குளிக்க,

விறகாகித் தீக்குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.


விழிமூடும்போதும் உன்னை,
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.

- நா.முத்துகுமார் / காதல் / உனக்கென இருப்பேன்
ராகா 'சுட்டி'



---
#190

Tuesday, July 4, 2006

காற்றினிலே வரும்...


ஜன்னலின் வழியே சுற்றி தவழும் காற்றில்
காதருகே மெலிதாக கேட்கிறது அந்த குரல்.
நான் கண்களை மூடிக்கொண்டதும்
சற்று சுதந்திரமாக, கொஞ்சம் சத்தமாகவே..

இரவும் பகலும் காற்றில் கலந்து
நான் போகுமிடமெல்லாம் பரவுகிறது.
கண்களை மூடிக்கொண்டு காதை திறந்துவைக்கிறேன்
காற்றில் வரும் அந்த குரலை கேட்க.

என் நினைவுகளை புரட்டி போட்டு,
அனுமதியின்றி இதயத்தில் நுழைந்து
என் எண்ணங்களை அள்ளிச்சென்ற பின்னும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது காதருகில் வீசும் காற்றில்.

நடுச்சாமத்தை நெருங்குகையில்
தென்றலாய் என்னை அமைதிப்படுத்திவிட்டு
சட்டென்று காதருகே ஒலித்துவிட்டு போகிறது..
'உடனே போகனுமா..?' ... காற்றில் அதே குரல்

மீண்டும் ஒரு தென்றலுக்காக காத்திருக்கிறேன்..
ஜன்னலருகிலேயே!

pic: http://www.bastet.it/

--
#189