Friday, December 31, 2004

ஆண்டொன்று போனால...

புது நாள், புது வருஷம், இன்னொரு புது ஆரம்பம்..

ம்.ம்... இந்த வருஷமும் எப்பவும் போல எந்த புதுவருஷ தீர்மானமெல்லாம் எடுக்காமத்தான் இருக்கப்போறனுங்க. எனக்கென்னவோ இந்த மாதிரி எடுக்கிற தீர்மானங்கள்ல எல்லாம் பெருசா நம்பிக்கையில்லைங்க, அதுவுமில்லாம, என்னால அப்படியெல்லாம் ஒரு தீர்மானம் எடுத்து அதை கெட்டியா புடிச்சுகிட்டு நம்மால நடக்கமுடியாதுங்கிறது முக்கியமான் விஷயம்ங்க.

நானும் ஒரு நாலு வருஷம் முன்னாடி, இதே மாதிரி ஒரு புது வருஷ நாள்ல தான், 'இனிமேல் தம்மடிக்க கூடாதுன்னு', 'சைட் அடிக்ககூடாது',... அப்படி இப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே போட்டேன், எப்படியோ அன்னைக்கு ஒரு நாள் பூராவும் எதையும் அடிக்காமத்தான் இருந்தேன், அப்புறம்.. ம்..ம்.. அது ஒரு தொடர்கதை... தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க..

இப்பவெல்லாம், ஜனவரி ஒன்னாம் தேதி விடுமுறையெல்லாம் இல்லை, எல்லாரும் ஒழுங்கா வந்து வேலைய பாருங்கன்னு 'அம்மா' சொல்லிட்டதுனால, எல்லாப்பயலும் ராத்திரி நேரத்தோட தூங்க போயிடறானுக. சீக்கிரமா போறானுக அவ்ளோதாம், அதுக்காக அமைதியா போரானுகன்னு அர்த்தம் இல்லீங்க. எல்லாரும் எப்படியும் 'கையெழுத்து' போட்டுட்டு தான் போவாங்க ('கையெழுத்து'கெல்லாம் விளக்கம் கேக்க மாட்டீங்கள்ல..??)

வழக்கமா, நம்ம சகாக்கள் எல்லாரும் சேர்ந்து காசு போட்டு புதுவருஷ பார்ட்டி நடத்துவோம், இந்த வருஷம் அந்த காசையெல்லாம் 'சுனாமி'நிதிக்கு அனுப்பிடலாம்னு முடிவு செஞ்சதுல, வழக்கமா கலெக்ட் ஆகிறத விட மூனு மடங்கு அதிகம் வசூலாச்சு.. அனுப்பி வச்சாச்சுங்க..

"ஆண்டொன்று போனால்.. வயதொன்று போகும்.."

Thursday, December 30, 2004

Tuesday, December 28, 2004

வார்த்தைகள் இல்லை...


என்னத்த சொல்றது போங்க.. :-(

Thursday, December 23, 2004

ஊருசுத்த போறேன்..

செமத்தியான வேலைக்கு நடுவால திடீர்ன்னு ரெண்டு நாள் வண்டிய எடுத்துகிட்டு மலைப்பிரதேசமா ஒதுங்கிறதுங்கிறது.. ரொம்ப சந்தோஷமான விஷயம்ங்க.. இப்போதைக்கு தலைக்கு மேல வேலை இருக்குதுன்னாலும் (இப்பத்தான் ஞாபகம் வருது, முடி வேற வெட்டிக்கனும்.. காலையிலயே எங்கம்மா கிட்ட பேச்சு வாங்கினேன்) அந்த சந்தோஷத்துலயே வேலையெல்லாம் கொஞ்சம் ஜரூரா நடக்குதுங்க..

பாத்தீங்களா.. எங்க போறேன்னே சொல்லாம என்னத்தையோ சொல்லிட்டு இருக்கேன்.. இந்த வருஷத்தோட கடைசி வாரக்கடைசிய 'மூனார்'ல கொண்டாடிவோம்னு நம்ம சகாக்கள் கூட்டத்துல முடிவு செஞ்சு, அவசரஅவசரமா, மூனார்ல இருக்கிற நம்ம 'டேனியல' புடிச்சு ஒதுக்குப்புறமா டெண்ட் அடிக்க இடம் புடிக்கச்சொல்லி.. வீட்டுல சொல்லி பர்மிஷன் வாங்கி (நாங்கெல்லாம் வீட்டுக்கு அடங்கின புள்ளைகளாச்சே!!), மூணு வண்டிய தயார் பண்ணி.. ம்ம்.. இருக்கிற வேலைக்கு நடுவால இது ஒரு தொல்லைன்னாலும், அந்த ரெண்டு நாள் கூத்துக்காக எல்லாத்தயும் சந்தோஷமா செஞ்சாச்சுங்க..
எங்கய்யன் வேற "இந்த வருஷம் குளிர் பயங்கிறமா இருக்குதாம், (மைனஸ்ல அடிக்குதாம்)எதுக்குடா இப்போ அங்க போறீங்க"ன்னு கேக்குறாரு அவருகிட்டபோயி .. "அதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்.. அதுக்கு தான் துணைக்கு smirnoff'ம் oldmonk'ம் இருக்குதில்லை"ன்னா சொல்ல முடியும்..

ம்... ரெண்டு நாள் எந்த தொல்லையும் இல்லாம ஏகாந்தமா சுத்திட்டு வரப்போறேன்.. குறிப்பா.. நம்ம செல்போன் வேற அங்க எடுக்காது, அதுவே ஒரு பெரிய சந்தோஷம்ங்க, (கிறுஸ்த்துமஸ் வேறயா... கேரளா களைகட்டி இருக்கும்..) வரட்டுங்களா.......

(இந்த மாதிரி வித்தியாசமான படமா புடிச்சு போட்டா, என்னையும் அறிவுஜீவி வகையில சேத்துக்குவாங்கதான??)

Thursday, December 9, 2004

கல்வெட்டுகள்

--------------------
காலம் கடந்து
பழைய பாதைகளில்
பயணிக்கிற போது
பழைய ஞாபகங்கள்..

அந்த
அறைகள்தான் எங்களின் சொர்கங்கள்..

அந்த
மைதானங்கள்தான்
எங்கள் நட்பு வளர்த்த ஊடகங்கள்..

அந்த
அடுமணைகள் தான்
அன்பு வேரோட தேனீர் ஊற்றிய
அட்சய பாத்திரங்கள்

காக்கைகளாய் தான்
இல்லை இல்லை
காக்கைகளாய் மட்டுமே வாழ்ந்தோம்

காரணமில்லாமல் இறுகிப்போனோம்

உயிரோடு உயிராய் உருகிப்போனோம்

பகலை இரவாக்கி
இரவை பகலாக்கி
காலத்தை வென்றிருக்கிறோம்

எங்கள்
குரல் கேட்காத திரையரங்குகள் இல்லை..

நாங்கள்
பயணிக்காத இரவு நேரப் பேருந் துகள் குறைவு

பணம் எங்களை பாகுபடுத்தவில்லை

குணம் பார்த்து நாங்கள் பழகியதில்லை

எதன் பொருட்டும் எங்கள் நட்பில்லை

அமைந்து போனது அப்படித்தான்..

பிரியும் நேரம் வந் தது

பிரிவு உபச்சரங்கள்
அழுகைகள்
அரவணைப்புகள்
ஆட்டோகிராப்புகள்

பிரிய மனமில்லாமல்
வேறு வழியில்லாமல்
பிரிந்து போனோம்

காலம் கடந்தது, வயது கரைந்தது..

நண்பர்கள் உயர்ந்தார்கள்
உருமாரிப்போனார்கள்

இறுகி உயிராய் கிடந்த
ஒரிரு நண்பர்கள் சந்தித்து கொண்டோம்
வாழ்க்கை பயணத்தில்

அழுது அரற்றிய அதே நண்பர்கள்

கண்ணீர் சிந்திய அதே கண்கள்

இரும்பாய் கனத்த அதே மனது

இவை எல்லாம்
இரண்டு நிமிடத்துக்கு மேல்
என்னோடு நேரம் செலவிட தயராய் இல்லை

அடுத்தமுறை
அவசியம் வீட்டுக்கு வா..

வீட்டருகே சொன்னார்கள்..

நேரத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு..

இபோழுதெல்லாம்
மரியாதைக்குரிய மனிதர்களை
எதிரிலே பார்த்தால்..
விலகியே போகிறேன்

காலத்தின் பிணைக்கைதிகள்..
அவர்கள் மீது தவறில்லை..

நிகழ்கால மாற்றம் பார்த்து
பழைய கல்வெட்டுகளை
அழித்தெழுத
நான் தயாராய் இல்லை...

----------------

யாரு எழுதினதுன்னு தெரியலைங்க.. forward mail'ஆ வந்தது..

இதை படிச்சதும் ஏனோ தெரியலைங்க.. எல்லா பசங்களுக்கும் போன் போட்டு சும்மானாச்சும் எதாவது பேசனும்னு தோனுச்சுங்க.. பேசிட்டேன்..


Tuesday, December 7, 2004

கனா காணும் காலங்கள்

(வழக்கம் போல) எங்கய்யனுக்கு சாரதியா கோயமுத்தூர் வரைக்கும் போக வேண்டியிருந்ததுங்க.. சூரியன் FM 105.8'ல்ல.. "குங்குமம், இந்த வாரம், எனக்கு திருமணத்தில நம்பிக்கை இல்லை" கமல் ப்ரத்தியேக பேட்டி"ன்னு நிமிஷத்துக்கு மூனு தடவை சொல்ற இரைச்சல் தாங்காம RAINBOW FM 103'க்கு தாவினேன்.. அப்பத்தான் ஹிந்தி பாட்டெல்லாம் முடிஞ்சு நம்மபக்கம் வந்திருந்தாங்க.. வந்ததும் முதல் பாட்டா.. 7Gரெயின்போ காலனியிலிருந்து

"கனா காணும் காலங்கள், கரைந்தோடும் நேரங்கள்.." போட்டாங்க.. அப்பா.. என்ன பாட்டுங்க அது.. 100-120ல போயிட்டிருந்த வண்டி எப்படி 40-50க்கு வந்ததுன்னே தெரியலைங்க.. எத்தனயோ தடவை கேட்ட பாட்டுதான் ஆனாலும் ஒவ்வொருதடவையும் இந்த பாட்ட கேக்கும் போது எதோ அப்படியே மிதக்கற மாதிரி இருக்குதுங்க ..

அப்படியே அந்த மிதப்புலயே போயிட்டிருந்தேன், ஆனா, டக்குன்னு அடுத்தபாட்டு 'சத்ரபதி'ல இருந்து போட்டு வெறுப்பேத்திட்டாங்க..
(ச்சே, இப்பெல்லாம் கேசட்டும் வாங்கிறதில்லை, இதுக்கு தான் இந்த செட்ட குட்டுத்துட்டு ஒரு நல்ல mp3 ப்ளேயர் வாங்கி மாட்டலாம்னு பாக்கறேன்.. யாராவது எது நல்லா இருக்கும்னு சொல்லுங்கப்பா)

ரொம்ப நாளைக்கு அப்புறம், பிதாமகன் - 'இளங்காத்து வீசுதே'க்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு mesmerising பாட்டு (நடுவால அலைபாயுதே'வில 'உண்மை சொன்னால் நேசிப்பாயா'வும் சேர்த்துக்கலாம்)
பாரதிராஜா - இளையராஜா -வைரமுத்து மாதிரி செல்வராகவன்-யுவன்சங்கர்-முத்துக்குமார் கூட்டணி வரும்போல தெரியுதுங்க..


=====================================
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயதில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம்,
இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்,
கடவுளின் ரகசியம்

உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவே இனி மழை வரும் ஒசை

நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வஎறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிகொண்டு அந்தி வேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம், தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மவுனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனொ மயக்கங்கள் பிறக்கும்

பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன்?
நில நடுக்கம்.. அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம்.. அது மிக கொடுமை
=========================================

Saturday, December 4, 2004

ஒரு பதிவு, 220+ பின்னூட்டங்கள்.

க்ருபாஷங்கர் : சென்னையை சேர்ந்த ஆங்கில வலைப்பதிவாளர்கள்ல ரொம்ப முக்கியமான ஆளுங்க இவரு. சும்மா போற போக்குல அப்படியே சொல்லிட்டு போற மாதிரியான நடையிலயே பல மேட்டர பதிவு செய்யிற ஆளு. திடீர்ன்னு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு விவகாரமான பதிவு ஒன்னு போட்டாருங்க, அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்க 220 தாண்டி போயிட்டிருக்கு (இன்னும் போகுது).
அப்பப்போ எதாவது விவகாரமான சமாச்சரத்தை பதிவுல எழுதி, அப்புறம் பின்னுட்டத்துல நம்ம ஆளுக பூந்து வூடு கட்டி அடிக்கிறதெல்லாம் சகஜம்தாங்க. ஆனாலும் இந்த சமாச்சரம் என்னமோ கொஞ்சம் ஓவராத்தாங்க தெரியுது..
பதிவுல சொல்லியிருக்கிற சாமாச்சரத்தை விட பின்னூட்டத்துல இருக்கிற விஷயங்கதான் கலக்கலா இருக்குது போய் பாருங்க..
சுட்டி...

(ஆமா, அது நிஜம்மாவே அவுங்க தானா?? )