Tuesday, October 7, 2008

♫ ஆண்பாவம் - கொல்லங்குடி கருப்பாயி ♫


கூத்து பார்க்க அவரு போன.. தன்னானேனானே..
கோடி சனம் கூட வரும் தில்லேல்லேலேலே

ஆத்து பக்கம் அவரு போனா தன்னானேனானே..
ஆதவன் கொடப்புடிக்கும் தில்லேல்லேலேலே

திருப்பதில நிப்பாரு பாரு தன்னானேனானே..
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவரு பேரு தானே ..

பாட்டு கேக்க

Friday, October 3, 2008

கருத்து

வழக்கமா மாசம் ரெண்டு தடவை வந்து போகும் அதே ஏசி செமிஸ்லீப்பர் பஸ்.. 10.00 மணி'க்கு கிளம்பறதா டிக்கெட்டுல போட்டிருப்பாங்க, வழக்கமா 10.30க்கு தான் வண்டி கிளம்பும், அன்னைக்கு அதிசியமா 10.05'க்கு எல்லாம் கிளம்பிருச்சு. பெங்களூர் ட்ராஃபிக் தெரியும் தான, பொம்மனஹள்ளி போயி சேரவே 40 நிமிசம்.. அங்க தான் பெரும்பாலும் நம்ம பொட்டி தட்டுற மக்கள் எல்லாம் ஏறுவாங்க.. பொம்மனஹள்ளி'யில பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது பார்த்து, பழகி.. இப்போ ஐப்பசி'ல கல்யாணம்.. ஒரு சகா'க்கு.. ஆனா இந்த பதிவு அதை பத்தி இல்லை. :)

பொட்டிதட்டுற மக்கள் எல்லாம் ஏறி, கூகிள் உதவியில்லாம டிக்கெட்ல இருக்கிற சீட்டு நம்பர ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு குழப்பி குழம்பி, ஒரு வழியா உக்காந்து.. வண்டி  எடுச்சாச்சு..

ஒசூர் தாண்டி ராயக்கோட்டை வழியா விட்டுட்டானுக அன்னைக்கு.. ஹைவேஸ்ல ரோட்டு வேலை நடக்கறதால, பெரும்பாலும் அந்த வழி தான் இப்போ எல்லாம்.. முன்னாடி சீட்டுல உக்காந்திருந்த தலைவர் நல்லா தலை வரைக்கும் கம்பிளிய போர்த்திகிட்டு தூங்கியாச்சு..  ஆனாலும் அவர் மொபைல் ஹெட்போன்ல இருந்து பாட்டு எனக்கு நல்லாவே கேக்குது..

திடீர்னு தூக்கம் கலைஞ்சிருச்சு..  எனக்கு ஒரு பழக்கம், வண்டி நிக்கும் போது தூங்க முடியாது.. மூவிங்ல இருந்துட்டா ஓகே.. ஆனா நின்னுட்டா தூக்கம் கலைஞ்சிரும்..  ஏசி பஸ் வேறைங்களா.. ஜன்னல திறக்கவும் வழி இல்ல.. வெளிய இருட்டுல நிறைய வண்டி நின்ன மாதிரி இருந்துச்சு.. சரி  எதோ ட்ராஃபிக் போல'ன்னு மறுபடி தூங்க முயற்ச்சி செஞ்சேன். ஒரு அரை மணி நேரம், தூங்கவும் முடியல.. வண்டியும் நகரலை.. மெதுவா எந்திருச்சு யார் தூக்கத்தையும் கலைக்க கூடாது இல்ல.. முன்சீட்டு தலைவர் வேற லைட்டா குறட்டையோட சுகமா தூங்கறாரு..

வண்டிய விட்டு இறங்குனா. எதோ மெப்கோ'க்கு போறா சரக்கு லாரிபோல.. நடு ரோட்டுல தலைகீழா பார்க் ஆயிருந்துது.. நம்ம மக்கள் வழக்கம் போல. ரிக்கவரி வேன் கூட ஸ்பாட்டுக்கு வர முடியாத மாதிரி ரெண்டு பக்கமும் வண்டிய போட்டுவச்சுட்டு நின்னிருந்தாங்க..  இவனுகள திருத்தவே முடியாது.. சரியா நாலுமணிநேரம்.. ஒரு வழியா மேட்டுர்ல இருந்து  க்ரேன் வந்து, இழுத்து போட்டு, தாறுமாரா நின்னிருந்த வண்டிகள  எல்லாம் ஒழுங்கு பண்ணி.. வண்டி கிழம்புறதுக்குள்ள நமக்கு போதும் போதும்னு ஆயிருச்சு.. சும்மா நின்னு டிரைவர் கிட்ட வாங்கின 'ஸ்மால்'ஊதிட்டு வேடிக்கை பார்க்கவே..

வண்டி எடுத்ததும் சீட்டுக்கு வந்தா.. முன்சீட்டு தலைவர் ஆனந்த சயனம்.. ஹெட்ஃபோன் காதுல இருந்து நழுவி வெளிய தொங்குது.. கொடுத்து வச்சன்னு நினைச்சுகிட்டேன்..

வழக்கமா 7 மணி வாக்குல பொள்ளாச்சி கொண்டு போயி சேர்த்துவாங்க.. இன்னைக்கு இங்கயே நாலு மணிநேரம் லேட்டு..  எப்படியும் மதிய சோத்துக்கு தான் நினைச்சுகிட்டே தூங்கி போயிட்டேன்..

காலையில ஒரு 6.30 மணிக்கு தூக்கம் கலைஞ்சு பார்க்கும் போது திருப்பூர நெருங்கிட்டு இருந்துச்சு வண்டி.. பரவாயில்ல அடிச்சு ஓட்டிட்டு வந்துட்டார் போலன்னு.. சந்தோசப்பட்டுகிட்டேன்..

மணி 7.20. திருப்பூர்ல எறங்கவேண்டிய ஆளுக எல்லாம் இறங்கியாச்சு.. டிரைவர் எதோ இன்வாய்ஸ் பேப்பரோட கீழ இறங்கி நின்னுட்டிருக்காரு.. மொத்தமா திருப்பூர்ல வண்டி நின்னே ஒரு 3 நிமிசம் தான் இருக்கும்..  அப்பத்தான் முன்சீட்டுக்காரர் செல்ஃபோன் அலறுச்சு..  எதோ ஒரு mp3 ரிங்டோன்.. தடாபுடான்னு தூக்கம் கலைஞ்சு  எந்திருச்சு கம்பிளிய விலக்கி.. ஹெட்ஃபோன கழட்டி, தடவி, ஒரு வழியா பட்டன அமுக்கி பேசுனாரு.. பாவம் நல்ல தூக்கத்துல இருந்தாரு போல..

எல்லாம் வூட்ல இருந்துதான் போல..   7 மணிக்கெல்லாம் வந்திரவேண்டிய வண்டி இன்னும் வரலைன்னு கூப்பிட்டுருப்பாங்க, தலைவர் ஸ்க்ரீன விலக்கி வெளிய எட்டி பார்த்தாரு, சுத்தி முத்தி பதட்டமா பார்த்தாரு.. அப்புறம் போன்ல ஒரு கருத்து சொன்னாரு பாருங்க.. " இந்த கருமம் புடிச்ச வண்டில வந்தாலே இப்படித்தான், அங்க அங்க நிறுத்தி வச்சுக்குவான்..  இப்போ திருப்பூர்ல நிறுத்தி வச்சிருக்கான்.. டிரைவர வேற காணோம், அதுக்கு தான் நான் இந்த வண்டில வர்றதே இல்ல.."ன்னு ஆரம்பிச்சு..அப்புறம் அதுக்குமேல எனக்கு ஒன்னுமே கேக்கல..

பயபுள்ளைக எப்படியெல்லாம் 'கருத்து சொல்றானுக..

நாலுமணி நேரம் ஒரே இடத்துல நின்னும்.. சமாளிச்சு ஓட்டி ரெண்டுமணி நேர டிலே'ல கொண்டுவந்துட்டிருக்காங்க.. இவரு சூப்பரா தூங்கிட்டு, சட்டுன்னு எந்திருச்சு ஒரே நிமிசம் வெளியபார்த்துட்டு போட்டு தாக்குறாரு..

Wednesday, September 24, 2008

செம்மானம் இடறுது



"எங்கயோ செம்மானம் இடறுதுன்னு நான் நினைச்சேன்.. 
இங்க தான் எம்மானம் இடறுதுன்னு அறியலையே.."


"நீங்க செத்துபோயிட்டா நான் என்னன்னு பாடி அழுகறது"ன்னு சாவோட வலி தெரியாம  கேட்ட 9 வயசு பேரனுக்கு அவுங்க அப்பாரு சொல்லி குடுத்த ஒப்பாரி பாட்டு இது..   அன்னைக்கு அந்த பேரனுக்கு பொறந்த நாள் வேற..  அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பொறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையவே கிடையாது அவருக்கு.

இன்னைக்கு அந்த பேரனுக்கு 61வது பிறந்த நாள்.. இந்த நாள் ஞாபகம் இருக்கறதே, அவரோட தம்பி பையன் பொறந்தநாளுங்கிறதால தான். இன்னைக்கும் வழக்கம் போலவே எதும் விசேஷம் இல்ல.. . அப்பாரு சொல்லிகுடுத்த பாட்டை முதன்முதலா ரெண்டாம்மனுசங்க - மகனும் மருமகளும் - கிட்ட சொன்னது தவிர..

இன்னும் எதேதோ நினைவுகள்.. சப்-ஜெயில் வார்டனா இருந்த அவுஙக் அப்பாரு மீசை, வெள்ளை டவுசர், காக்கி பட்டை'ன்னுபெருமைய எல்லாம் சொல்லிகிட்டிருக்காரு.. மகனுக்கு புடுங்க வேண்டிய ஆணிகளோட ஞாபகம்.. 11.30 மணிக்காவது வேலையிடத்துக்கு போகனுமே.. சாயங்காலம் பேசுவோம்ன்னு ஒடியாந்துட்டான்..

வந்து ஆணி புடுங்கறதுக்கு நடுவால.. இந்த பதிவு.!!

இந்த 29 வயசுல ரெண்டாவது தடவையா எங்கய்யன் கண்ணுல கண்ணீர் எட்டிபார்க்கிறத பார்த்திருக்கேன்.. சாயங்காலம் நேரத்தோட வூட்டுக்கு போகனும்.. யாரவது வந்து 'ஆணிய புடுங்க வேண்டாம்னு' சொல்லுங்களேன்..


* செம்மானம் - செவ்வானம்
* இடறுது - இடி இடிக்கிறது
- கொங்கு பேச்சு வழக்கு


Friday, September 19, 2008

அப்பா

"ஒன்னு கேக்கனும் தம்பி", 'இன்னைக்கு ராத்திரிக்கு தாங்காதுங்கிறத டாக்டர் பதமான இங்கிலீசுல சொல்லிட்டு போனது ஆஸ்பத்திரி கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து சன்னமா கேட்டதுக்கப்புறம் உள்ளார வந்து பக்கத்துல நிக்கிற எம்மவன் கிட்ட கேட்டேன்.

"சொல்லுங்க" கொஞ்சம் குழப்பமா பதட்டமா பார்த்தான்.

" நீ இப்போ இங்க எதுக்கு வந்த?" வத்திபோயிட்டு இருக்கிற சக்தியெல்லாம் சேர்த்து வச்சு, தேவையில்லாத கேள்வி தான் கேட்டேன், ஆனாலும் எனக்கு தெரிஞ்சுக்க ஆசை.

"என்ன கேக்கரீங்க?" கண்ணுல குழப்பம் அதிகமானாலும், உதட்டோரம் சின்ன சிரிப்பு எட்டிப்பாக்குது

"இல்ல.. பதில் சொல்லு" தொண்டை அடைக்கிற மாதிரி இருக்கு, ட்ரிப்ஸ் போட்ட இடத்த லேசா வருடிக்குடுத்துக்கறேன்.

" நீங்க என் அப்பா, நான் இந்த நேரத்துல இங்க இருக்கனும்" கொஞ்சம் அழுத்தமாவே சொன்னான்.

"அதில்ல.. " தலைய ஆட்ட பார்த்தேன், முடியல.

ஒரு பெருமூச்சு அவன்கிட்ட இருந்து, அப்போ நான் இருந்த மாதிரியே நல்லா உடம்ப வச்சிருக்கான், மூச்சுவிடும் போது டீ சர்ட்ட துறுத்திட்டு ஏறி இறங்குது.. என் கிட்ட வந்து "என்ன சொல்ல வர்றீங்க?" என் மணிகட்டை புடிச்சிகிட்டே கேக்கிறான்.

"ஒண்ணுமில்ல விடு" பார்வைய ஜன்னல் பக்கம் திருப்பிகிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா போச்சு, மருமவபுள்ள துணி மாத்த வீட்டுக்கு போயிருக்கலாம். குழந்தைக எல்லாம் பள்ளிக்கூடத்துல இருந்து களைச்சி போயி வந்திருக்கும்.. அவன் பக்கம் பார்க்காம ஜன்னலுக்கு விட்டத்துக்கும் நடுவால பார்வைய அலையவிட்டேன்.

மனசுக்குள்ளார என்ன என்னமோ ஓடுது. அவன் வழியில நான் எப்பவுமே குறுக்க போனதில்ல, அவன் வாழ்க்கைய அவனே வாழ்ந்துக்க விட்டேன், அவன் முடிவுகள அவனே எடுக்கனும்னு நினைச்சேன். பல பேர் மாதிரி என் வாழ்க்கைய அவன வாழவச்சு பார்க்கனும்னு நினைக்கவே இல்ல நான். என்ன படிக்கிறதுன்னு அவனே தான் முடிவு செஞ்சான், நான் கையெழுத்து மட்டும் தான் போட்டேன், அவனே வேலை தேடிகிட்டான், தப்பான ஒரு ஜோடி கூட தேடிக்கிட்டான். சின்ன புள்ளையா இருக்கும் போது கூட அவன எதிலயுமே தடுத்தது இல்ல, அவன் சேக்காளிகள்ல எவனயாவது புடிக்கலைன்னாகூட, எனக்குள்ளய வச்சுக்குவேன், அவன் கிட்ட சொன்னதே இல்ல. அவன் தப்புகள அவனே தான் தெரிஞ்சு திருத்திகனும்.

"உனக்கு ஞாபகம் இருக்கா.. " பேசனும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு மெதுவா " அப்போ, உனக்கு நான் சைக்கிள் ஓட்ட சொல்லி குடுத்தப்போ.. "

குனிஞ்சு தரைய பார்த்து உக்காந்திருந்தவன், தலை நிமிந்து.. "ம்ம்.. ஞாபகம் இருக்கு, ஒரு நா நீங்க வந்தீங்க.. அப்புறம், நானே தனியா க்ரவுண்ட்டுக்கு எடுத்துட்டு போயி ஓட்ட கத்துகிட்டேனே.." குரல்ல கொஞ்சம் நிறையவே அழுத்தம் இருந்த மாதிரி பட்டுது.

நான் மறுபடி ஜன்னல் பக்கம் பார்வைய திருப்பி, அமைதியாயிட்டேன்.




[pic : http://www.burnside.sa.gov.au]




Friday, September 12, 2008

ஓர் இரவு / ஒரு கேள்வி

"உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்ங்க", ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் மேசையில இருந்து வூட்டம்மிணி தட்டெடுத்துட்டு நகர்ந்ததும் அய்யன் கிட்ட கேட்டேன். ராகி குழாபுட்டும் சுண்டகடல குருமாவும், அவ சமைச்சது, முததடவையா, எங்கய்யனுக்கும் ரொம்ப புடிச்ச ஐட்டம்.., எனக்கும்.

"கேளு" கையத்தொடச்சிகிட்டே கேட்டாரு.

மிச்ச பாத்திரங்கள எடுக்க மறுபடி மேசைக்கு வந்த வூட்டம்மிணிய விலக்க வேண்டி அவசரமா குருமா பாத்திரத்தையும் காலி டம்ளரையும் நகர்த்தி குடுத்தேன். மெலிசா சிரிச்சுகிட்டே வாங்கிட்டு போனா. "கேக்கிறதுக்கு முன்னாடியே சொல்லீறனுங்க, கண்டிசனா சரியான பதில சொல்லோனும்"

" அப்படி என்னத்த கேக்க போற?"

வேகமா தலையாட்டுறேன் "கண்டிசனா சொல்றேன்னு சொல்லுங்க, கேக்குறன்"

கைய தொடச்ச துண்டை மடியில போட்டுகிட்டு நல்லா சாய்ஞ்சு உக்காந்துகிட்டு சரிங்கற மாதிரி தலையாட்டினாரு.

"ரொம்ப நாளாவே கேக்கனும்ன்னு தானுங்க நினைச்சிட்டிருந்தன்.. " கொஞ்சம் தண்ணி குடிச்சிகிட்டேன், "என்னைய பத்தி நிசமாலுமே பெருமையா நினைச்சுக்கறீங்களா...?

....

# 70 [பழைய நினப்பு]