Friday, January 17, 2014

படிமம்

‘(சம்வித்யாகம் போறா) இயக்கம் பத்தாது, இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கவேண்டும், நாயகனுக்கு கொஞ்சம் கூடுதல் க்ளோசப் வைத்திருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் பரபரப்பு சென்று சேரும்’ என்று தொடங்கும் உரையாடல் தான் கதை நாயகன் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் முதல் வசனம்.

‘த்ரிஷ்யம்’ - திரைப்படத்தின் நாயகன் அதன் இயக்குனர் ஜீத்துஜோசப் தான். இயக்கம் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை எழுதியவரும் அவரே. அந்த முதல் வசனத்தில் சொலவது போல் எந்த ’கைநாற்காலி’ விமர்சகரும் சொல்வதற்க்கு வழியில்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்.

மலையாளம் கண்ட மாபெரும் வெற்றிப்படமான ‘யவனிகா’வுடன் இந்தப்படத்தையும் அதே தளத்தில் வைத்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. யவனிகா’வும் ‘த்ரில்லர் வகைதான், ஆனால் அது வேறு தளம் இது வேறு தளம். யவனிகா’வின் பரப்பு இன்னும் கொஞ்சம் விஸ்தீரமானது. ‘த்ரிஷ்யம்’ வேறு வகை. தெளிவாக பார்வையாளர்களை கவரவேண்டும் என்ற மசாலாபடங்களின் ஒரே குறியை வைத்து திட்டமிட்டு பின்னப்பட்ட கதை தான்.

ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவன் குடும்பத்தை பற்றிசொல்லி, அவன் பூர்வீகத்தை அலசி, அவனைப்பற்றி மானே தேனே போட்டு நல்லவிதமாக பார்ப்பவர்கள் மனதில் ‘ச்சே எம்புட்டு நல்லவன்’ என்று முழுவதுமாக ஒத்துக்கொள்ளுமாறு காட்சியமைப்புகளை நகர்த்தி, பார்வையாளர்கள் அந்த குடும்பத்தை முழுவதுமாக நேசிக்கும் பொழுது திடும் என்று ஒரு சிக்கல் வந்து நிற்கிறது - டொட்டடய்ங் என்ற இசையில்லாமல். அதுவும் இரண்டு சின்ன பெண்கள் இருக்கும் அழகிய குடும்பத்தில், (கொஞ்சம் நிறையவே பூசினாற்போல் இருந்தாலும் பெண்களின் தாயாக வரும் மீனா இன்னும் அழகு தான்) வயசுவந்த பெரிய பெண் தான் சிக்கலின் மையப்புள்ளி. வயசுபுள்ளைக்கு சிக்கல் எனும்போதே அரங்கில் அமர்ந்திருக்கும் 90சதம் பேருக்கும் அடிவயிறு கலங்கித்தான் போகிறது. குறி தவறவே இல்லை.

வந்த சிக்கலுக்கும் கொஞ்சம் பலம் வேண்டுமே, எம்ஜிஆருக்கு ஏற்ற நம்பியார் போல், வில்லனுக்கு கெத்து இருந்தாத்தான ஹீரோவுக்கு மரியாதை, இங்கே நாயக்ன் சாமான்யன். நம்மூரில் பெரும்பான்மையோர் மிரள்வது அதிகாரவர்கத்தின் கோரமுகத்துக்கு தான், அதைவிடவா சிக்கலுக்கு வெயிட் வேண்டும், பெரும் அதிகாரத்தில் இருப்பவரின் வாரிசு தான் உள்ளே நுழைந்த சிக்கல். சிக்கலை துரத்திவிட்டு சட்டத்தில் இருந்து தப்பிக்க போராடுவது தான் மிச்சம். சாமன்ய நாயகன் மற்றவரைப்போல் ஆகாயசூரனாக இருக்கமுடியாது ஆனால் புத்திசாலி, புத்தியை உபயோகித்து தப்பிக்க திட்டமிடுகிறான், அதிகாரவர்கத்தையே ஏமாற்ற வேண்டுமே, கொஞ்சம் பலமான திட்டமிடல் தான். படிப்பதற்க்கு ஒன்றுமே விசேஷமாக தெரியவில்லை அல்லவா, ஆமாம் அதே தான். ஆனால் இதை 2.45 மணிநேரம் பார்ப்பவர்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப்போட்டு பார்க்க வைத்ததில் தான் வெற்றி இருக்கிறது.

இரண்டரை மணிநேர திரைப்படத்தில் சவுத் இண்டியன் புல்மீல்ஸ் போல வகைக்கொன்றாய் பாடல்கள், நடனங்கள், தனிக்குலுக்கல்கள், கூட்டுகுலுக்கல்கள், நமது ட்வீட்டரில் சுட்டு பாலீஷ் போடப்பட்ட நகைச்சுவைத்தோரணங்கள், அதிரடி சண்டைகள், பறக்கும் கார்கள், அயல்தேச அழகிய லொக்கேஷன்கள், தங்கத்தில் சுவரெழுப்பும் நவீன ஆசாரிகளின் வேலைப்பாடுகள் என்றெல்லாம் நிறைத்தும் படம் பார்ப்பவன் என்னவோ பொது கக்கூசில் சங்கடத்துடன் உக்கார்ந்திருப்பவன் மனநிலையில், ‘எப்படா முடிப்பீங்க’ என்று கதறும்படியான சமகால திராபைப்படங்களுக்கு நடுவில் ‘த்ரிஷ்யம்’ கொண்டாடப்படவேண்டியது தான்.

நமது புரட்சிகலைஞரின் பாணியை பின்பற்றி நாயகனே கடைசியில் ஒரு நீண்ட வசனத்தில் ‘ஒரு பெரும் சிக்கல் எங்கள் குடும்பத்திற்க்கு வந்தது, அந்த சிக்கல் எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துபோடப்பார்த்தது, நாங்கள் கெஞ்சி கதறினோம் போராடினோம் அதற்கிடையில் எதிர்பாராமல் அந்த சிக்கல் என்றென்னைக்குமாய் எங்கள் குடும்பத்தை மீண்டும் தொந்தரவு செய்யாதபடி செய்ய நேர்ந்துவிட்டது, எங்களுக்கு வேறு வழி இல்லை, இனி அந்த சிக்கல் எங்களை நெருங்காது என்ற நிம்மதி இருந்தபோதும், தெரிந்தோ தெரியாமலோ சிலரின் கனவுகளை சிதைத்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள்’ என்று ‘கதையின் சாரம்சம்சத்தை சொல்லி விமர்சகர்களின் வேலையை சுலபமாக்கிவிடுகிறார். அந்த இடத்தில் படம் முடிந்துவிட்டது தான், இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு முந்தய சீனிலே கூட படம் முடிந்துவிட்டது தான்.. ஆனால் அதற்க்கு அப்புறமும் ஒரு சீன் வைக்கிறார் பாருங்கள்.. அங்கே தான் சாமான்யன் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு போகிறார்.. அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.. அங்கே நிற்கிறார் இயக்குனர்..  ஜீதுஜோசப் - இனி நமது ‘should not miss list'ல் இவர் கண்டிப்பாக இருப்பார்.

கேரளா லொக்கேஷன் நல்லாஇருந்தது, மோகன்லால் நல்லா நடித்தார், துணை கதாப்பாத்திரங்கள் கூட அருமையான நடிப்பு என்ற விஷயங்களை எல்லாம் இந்த படத்தின் விமர்சனங்களில் சொல்லியிருப்பார்கள், படித்துக்கொள்ளவும்.

படம் முடிந்து வெளிவரும்பொழுது உடன் வந்த நண்பர் ”இதை தமிழில் எடுப்பதாக சொன்னார்களே, அதுவும் சமீபமாக ராடான்’ நிறுவனம் தான் மலையாளத்தை தமிழ் ‘படுத்தி’ வருகிறது.. ஒருவேளை சரத் அல்லது சேரனை வைத்து இந்தப்படம் தமிழில் வந்துவிடுமோ” என்ற சந்தேகத்தை  கேட்டு என் ஒட்டுமொத்த திரையனுபவத்தையும் கெடுத்துவிட்டார் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். 

Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia 

Monday, July 29, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 2

ஒரு நல்ல இதமான வெயில்காலத்து மதியத்தில் லால்பாக்’ல ‘இயற்கை’ அழகை திகட்ட திகட்ட காலாற நடந்து ரசிச்சு முடிச்சட்டு மேற்க்கு வாசல் வழியா வெளியேறி எதும் கொறிக்கலாமா’ன்னு யோசிக்கும்போது தான் கூட வந்த ஒரு சகா கேட்டான்.

 ‘திண்டி பீதி போகலாமா?’

லேசான பீதியோட என்னடா அது’ன்னு கேட்டா..  கன்னடத்துல Foot Streetன்னு சொல்றது, chat Streetன்னும் சொல்லுவாங்கன்னான்.

ஒரு வீதியவே நேர்ந்துவிட்டிருக்காங்களா.. அதை கேள்விபட்டதுக்கப்புறம் வேண்டாம்னு நான் யோசிச்சிருக்காமாட்டேன்னு உங்களுக்கே தெரியும்..  

<கட் பண்ணா திண்டிபீதி aka Food Street, VV Puram>

உணவு வீதி’ன்னு சொன்னாலும், அது நிஜத்துல ‘வீதி உணவு’. ஒரு மொத்த வீதியும் இந்த கடைசியில சஜ்ஜன்ராவ் சர்க்கிள்ல இருந்து அடுத்த கடேசி முக்கு வரைக்கும் பூராவும் பலவகையான கையேந்திபவன்கள். இதுதான்னு இல்லாம வடக்கு தெற்க்கு இந்தோசைனீஸ்’ன்னு எல்லாம் வகை உணவுகளுக்கனுமான ஒரு வீதி இது.

வீதிகிட்ட போகும் போது வரும் ஒரு நறுமணம் இருக்கே.. அதுக்காகவே போக வேண்டிய இடம் இது.

வீதியோட ஆரம்பத்துல இருக்கிற VB Bakeryல இருந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும். வழமையான கேக்கு பன்னுன்னு பல ஐட்டங்க நல்லா இருந்தாலும் இவுங்களோட விசேஷ வெரைட்டி தம்ரூட், காரா பன்பட்டர் காங்கிரஸ் KBC.
இந்த KBC ஒரு சுவாரசியமான சாதாரண ஐட்டம், கார/மசால பன்னுல நடுவால வெண்ணையும் வறுத்தகடலையும் கொஞ்சம் மிளகாய்சாஸும் தடவி.. ஒரு மாதிரி குழப்பமா காங்கிரஸ் மாதிரியே இருக்கும்.. ஆனா நல்லா இருக்கும் :) 
இங்க ஆரம்பிச்சு அப்படியே வீதிக்குள்ளார நுழைஞ்சீங்கன்னா.. போண்டா வடை ரவாவடை, மதூர்வடா, பஜ்ஜில ஆரம்பிச்சு, இட்லி, பலவகை தோசை, நம்மூர் தோசை, இந்த ஊர் தோசா, அக்கிரொட்டி, ராகிரொட்டி, சோளரொட்டி,பெர்சரெட்டு எல்லாமே எல்லா வகை சட்னிகளுடன்.
 சில்லி கோபி/மஞ்சூரியன் ஐட்டங்கள், அதுல ரோல்கள்
 இந்த ஐயங்கார் புளியோகரே, நிலக்கடலை போட்ட லெமன் சாதம், பல வகை ‘பாத்’கள், சாட் வகைகள், பாவ்பாஜி மாதிரி அமித்து ஐட்டங்கள்.
 ப்ரூட்சாலட் வித்  குல்கந்த் வித் ஐஸ்க்ரீம், சூடா காரெட்/பாதாம் அல்வா, ஜாமூன், ஜிலேபி மசாலா பால்  குல்ஃபி, மசாலா சோடா / மசாலா கோக் அப்படின்னு அங்க அங்க ஊர்பூராவும் விக்கிற எல்லாமே ஒரே வீதியில பல கடையில எல்லாம் ஃப்ரெஷ்சா இருக்கும்.. the choice is yours and they will make sure to spoil you with the available choices :)
பாத்-தோசா’ன்னு ஒண்ணு உண்டு, அதுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை, ரெகுலர் தோசையில மடிச்சு குடுக்கும்போது நடுவே எலுமிச்சசாதம் வச்சு குடுப்பான், அஷ்ட்டே, விவரம் தெரியாம பந்தாவா அர்டர் பண்ணிட்டு ‘பல்ப்’ வாங்கினேன் முதல்தடவை.

ஆத்தெண்ட்டிக் இந்தோ-ச்சைனீஸு வெரைட்டிகள் இப்ப சமீபத்துல நிறையா சேர்த்திருக்காங்க, 4-5 வருசம் முன்ன அவ்வளவு இல்லை.

அப்படியே இந்த கடேசில KBCயோட ஆரம்பிச்சு நடக்க ஆரம்பிச்சா அந்த கடேசியில மசாலா கோக் குடிக்கும் போது ரெண்டுமணி நேரம் ஆயிருக்கும். 

இந்த உடனடி சாப்பாடு ஐட்டங்கள் மட்டும் இல்லாம, நடுவுல இந்த ‘நிப்பட்டு’ , முறுக்கு, ஹோளிகே மாதிரி வூட்டுக்கு வாங்கிட்டு வந்து அமுக்கற ஐட்டங்களுக்கான கடைகளும் உண்டு.

வீதியில நின்னு சாப்பிட, அந்த வகை உணவுகள் புடிக்கும்ன்னா இந்த வீதிய விட்டுறாதீங்க.. சாயங்காலம் 5:30 / 6  மணிவாக்குல போயிட்டீங்கன்னா நல்லது.. மத்த ஊர் மாதிரி இல்லாம வீதி கடைய 8:30 /9 மணிக்கு அடைச்சிடுற ஊர் இது :)

குடும்பம் குழந்தைகளோட போறதுக்கும் - recommended.
வேடிக்கைபார்க்க போக நினைப்பவர்களுக்கும் ;)  -recommended

எது நல்லாயிருக்கும், அது நல்லாயிருக்காதுன்னு நான் சொல்லவே இல்லை.. நல்லாயில்லை’ன்னு இங்க ஒண்ணு இல்லைன்னு நினைக்கிறேன்.. உங்க சுவை ரசனைக்கு ஒத்துவர்றது வராதது மட்டுமே.. So please explore. :)



வீதியில எங்கயும் மாமிசமோ முட்டையோ கூட கிடைக்காது என்பது ஒரு சின்ன வருத்தம் தான், ஆனா அந்த கவலைய போக வேற வீதிகள் இருக்கு.. அது பின்னாடி.



Thursday, July 25, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 1

”நம்மூர் ஹோட்டல்ல தோசைன்னு சொன்னா ரோஸ்ட் தான இதென்ன இப்படி ஊத்தாப்பமும் இல்லாம கல்தோசையும் இல்லாம ஒரு கிரகத்தை குடுக்கறான்”

”அது தோசை, இது தோசா” - என்று ஒரு மாபெரும் ரகசியத்தை சகநட்பு விளக்கி சொல்லி் முதன்முதலில் ஒரு அதிகாலையில் பெங்களுர் உணவகங்களிடன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான், தோசா’வை தொடர்ந்து இந்த ஊரில் புளிச்சட்னி/வெங்காயசட்னி என்பதோ யாரும் கேள்வியேபட்டிராத ஒரு வஸ்து என்பதை தெரிந்தகொண்டபோது ‘ஐயகோ’ என்று இருந்தது.

ஐயகோ’க்கள் அத்துடன் நிற்கவில்லை, ஏறக்குறைய கஞ்சி பக்குவத்தில் தயிர்பச்சிடியுடன்  பரிமாறப்படும் வெண் பொங்கலும், எதாவது ஒரு ‘நீர்க்காய்’ போட்டு வெல்லத்தில்‘அசட்டு தித்திப்பு’டன் வழிந்து ஓடும் சாம்பாருமாக, ‘தப்பு பண்ணிட்டயே ராசா’ என்று உள்ளூர ஒரு உதறுல் ஏற்படுத்திவிட்டன.

பின் மெதுவாக காலையில் உடுப்பிசாம்பாரும் அதில் மிதக்கவிட்ட உளுந்துவடையும் இட்லியும் - மதிய நேரத்து ரைஸ்பாத் / மொசுரு அன்னா - இரவுக்கு ரொட்டி-கறி அல்லது செட்தோசை (பல்யா பேடா, சட்னி எக்ஸ்ட்ரா கப் கொடி) என்று ஒரு டிசிப்ளின் உருவாகி அந்த உதறலை மட்டுபடுத்தின.
பின்னர் 6 மாசம் கழித்து யாராவது புதிதாக வந்து ’ஐயோ பெங்களூர்ல சாப்பாடு ஒத்துவராதே எப்படி சமாளிக்கற’ன்னு கேட்டா ஒரு மணி நேரம் உக்கார வச்சு காதுல ரத்தம் வர்ற அளவுக்கு கதற கதற பெங்களூர் சாப்பாட்டு புராணங்களை பொழிந்துதள்ளும் அளவுக்கு முன்னேறியாச்சு. :) அந்த புராணங்களை எல்லாம் ஆவனப்படுத்தி கல்வெட்டுல வெட்டிவச்சுட்டா நமக்கு பின்னாடி வர்ற சந்ததியினர் அதை பார்த்து படிச்சு தெரிஞ்சு தெளிவா நடந்துக்கவாங்கன்னு.. இதோ...

(புதிய நாகரிக, கார்ப்பரேட் கார்டுகளை தேய்க்க மட்டுமே என பல இடங்கள் உண்டு, அதெல்லாம் வெள்ளிக்கிழமை TOIல வரும் பார்த்துகிடுங்க, இந்த தொகுப்பு பழைய / சின்ன / உள்ளூர் / சுவையான, இடங்கள் மட்டும்)
@venkiraja கேட்டமாதிரி 

காலை :

நகரெங்கும் வியாபித்திருக்கும் SLV, சாகர், காமத், அ.ஆ.ப, உடுப்பி மாதிரியான வழமையான இடங்களை தாண்டி விசேஷமான (நான் போன) சிலது மட்டும்

# ப்ராமின்ஸ் காஃபி பார்
கொஞ்சம் பழைய பெங்களூர் வாசத்தோட, பசவனகுடி’க்கும் சாம்ராஜ்பேட்’க்கும் நடுவால சங்கரமடத்துக்கு பக்கத்துல இருக்கும் ஒரு பழைய கடை. 50வருசமா இருக்காம், பெஸ்ட் இட்லி அவார்ட் எல்லாம் வாங்கியிருக்காங்களாம். அருமையான இட்லி, பொதுவா இந்த ஊர் சாகர்’களில் கிடைக்கும் அரிசி ஜாஸ்த்தி போட்ட உதிரிப்போகும் இட்லியா இல்லாம, நல்ல மல்லிப்பூ மாதிரியான இட்லி, நிறையா நெய்யும் முந்திரியும் மிதக்கும் கேசரி, காரபாத் (வெள்ளைரவை தான் கொஞ்சம் கேரட்டும் பட்டானியும் போட்டு டகால்டி வேல காட்டுனது) , அவ்ளோ தான் மொத்த கடையோட மெனுவுமே, வேற ஒண்ணும் கிடைக்காது, சாம்பாரும் கிடையாது, சட்னி மட்டுமே (அன்லிமிட்டட்). இங்க வழக்கமா வர்ற ஆசாமிகள் மேல காசுகுடுத்து ஒரு துண்டு வெண்ணைய வாங்கி இட்லிமேல தடவிக்கறாங்க, நமக்கு அதுல உவப்பில்லை, நல்ல மொறுமொறுப்பான வடையும் அந்த அளவுகாரம் போட்ட சட்னியும், சுவையில ஆகாஓகோ தான், பில்டர் காப்பி குறை சொல்ல முடியாது, டீ’யும் உண்டு.
கையிலேந்தி தெருவில் நிற்க்கும் வசதி மட்டுமே உண்டு, உக்காரவெல்லாம் முடியாத்

#NMH (ந்யூ மார்டன் ஹோட்டல்) http://www.newmodernhotel.com/
இதுவும் ஒரு பழைய இடம், பழைய காங்கிரஸ் தலைவர்கள் படம் எல்லாம் வச்சிருப்பாங்க (அது ஜனதா கட்சிக்காரங்கன்னு ஒருத்தன் சொல்றான், நம்ம வேலைய நம்ம பார்ப்போம்),
அதே இட்லி வடை காரபாத் ஐட்டங்கள். கூடவே தோசையும் உண்டு. ’பட்டர் காலி’, தட்டே இட்லி, மசாலா தோசா எல்லாம் ரொம்ப விசேஷம். அதிலும் முக்கியனாம விசேசம் ‘இருளி சாம்பார்’ - சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் பக்கெட்ட கொண்டாந்து உங்க டேபிள்ல வச்சதும் நாக்கு கொஞ்சம் கங்கம்டான்ஸ் ஆடிரும். இங்க காப்பி குடிச்சுட்டே தான் பல பழைய கன்னட படங்களுக்கான திரைக்கதை உருவாச்சாம்,
பாதாம் அல்வா / பெனி / சிரொட்டி - சிறப்பு. MTR மாதிரி காலைடிபனுக்கு காத்துநிக்க வேண்டியிருக்காது
மதியம் மீல்ஸும் உண்டு, அதுல இஞ்சி கொத்துமல்லி போட்ட மோர் தான் ஹைலைட்டு.
விவி.புரம் - மினர்வா சர்கிள் பக்கம் - MTRல இருந்து 1 - 1.5 கிமி, அந்த தோசையை பிச்சு வாயுல போட்டுகிட்டு ஸ்பூன்ல சாம்பாரை டேஸ்ட்டும்‘இதர் ஆவோ’அமித்துகள் கூட்டம் இல்லாமல் சாப்டலாம் ;)

#வித்யார்ததிபவன்
90களில் ஷகீலா படத்துக்கு தியேட்டர்வாசல்ல நின்னா மாதிரி ஒரே பெருசுக கூட்டமா இருக்கும், மணியடிச்சா தான் கடைதிறப்பாங்க, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு இவுங்க :) 7 -11, 2-8 மட்டுமே
காந்திபஜார், பூஜைசாமான் கடைகளுக்கும் பூக்கடைகளுக்கு மத்தியில ஒரு சின்ன இடம். ரொம்ப ‘பாடல் பெற்ற’ இடம்.
மசால்தோசா = வி.பவன். அஷ்ட்டே.. நோ சாம்பார், ஒன்லி சட்னி, மத்த இடம் மாதிரி இல்லாம கொஞ்சம் பொட்டுகடலை அதிகம் போட்ட தேங்காச்சட்னி. ஒரு டஜன் தோசை தட்டை சர்க்கஸ்க்காரன் மாதிரி எடுத்துட்டு வர்ற சர்வர போட்டோ எடுத்துதள்ளும் ஆப்பிளர்களும், கிட்ட வந்ததும் மேல வச்சிருந்த தட்டு தன்னோட தோசையில பட்டு சுகாதரக்கேடு விளைவிக்குமோன்னு யோசிச்சுட்டே சாப்பிடும் ஆட்களும் சூழ்ந்த இடம். NHM பழைய சினிமாக்காரங்கன்னா, இது அந்தக்கால பெரியாப்பீசர்களும் ப்ரொபசர்களும் வரும் இடம்.
இட்லி கிடையாது, ரவா வடா உண்டு. காப்பி - இந்த கள்ளிச்சொட்டு வகையறா.

#த்வாரகாபவன்
என்.ஆர்.காலனி.
பெங்களூரின் பெஸ்ட் ‘பட்டர் காலி’ கிடைக்கிறது இங்க தான்.

#உடுப்பி க்ருஷ்ணபவன்
பாலபெட்/சிக்பெட் - 1926ல இருந்து இந்த கட்டடம் 1902ல இருந்து வியாபரம் இருக்காம்.
ரவா இட்லி, சாகுமசால்தோசை - விசேஷம். காப்பி - உன்னதம்.. ஒரிஜினல் உடுப்பிசாம்பாரில் மிதக்கும் வடை. வாழையிலையில் சுத்தின இட்லி.
காலையில என்னடா க்யூ நிக்கிறாங்கன்னு யோசிக்காம வாங்கி அடிச்சிருங்க - சூப்பர் ஷேவிகேகீர் (பாதாம் சேமியா பாயாசம்)

#CTR (செண்ட்ரல் டிபன் ரூம்) - மல்லேஸ்வரம்.
இதுதான் MTR விட பெஸ்ட்டுன்னு துண்டைபோட்டு தாண்டுற மண்ணின் மைந்தர்கள் உண்டு. வெங்காயம்/பூண்டு சேர்க்காத சமைக்கிற இடம்.

#வீணாஸ்டோர்ஸ் - மல்லேஸ்வரம்
பாத்திரகடைன்னு நினைச்சுறாதீங்க. கையேந்தி நிக்கும் இட்லிவடை காப்பி கடைதான். கூட்டம் மட்டும் எதோ ஆடிதள்ளுபடி சென்னைசில்க்ஸ் அளவுக்கு இருக்கும்

என்னடா ஒரே மாதிரி போகுதே, ஒரு மசாலா வாசமே வரலைன்னு நினைக்கறீங்களா.. ஹிஹி.. இத்தோட இத முடிச்சு அங்க போயிடுவோம்.

#SG ராவ் மிலிட்டரி ஹோட்டல்.
நூறு வயசு தாண்டியாச்சுன்னு சொல்றாங்க, இந்த ஸ்டீம் குக்கிங்/ கேஸ் குக்கிங் எல்லாம் கிடையாது, விறகு அடுப்பு தான். பழையகாலத்து வீடு மாதிரியான இடம்.
சிக்கன்புலாவ், மட்டன்புலாவ் (பிரியானி தான்). கொஞ்சம் குழைஞ்சாப்புல இருக்கும். சாப்ஸ், கீமா
முதல்தடவை காலையில 6 மணிக்கு கூட்டமா வரிசையில நின்னு பிரியாணி வாங்கிறத பார்த்தேன், பெரும்பாலும் பார்சல், 8 மணிக்கு போன, மதியானம் வா’ன்னு சொல்லிடுவாங்க :( மதியம் ராகிகளிஉருண்டை கிடைக்குமாம்.
முன்னொருகாலத்தில் நைட் அவுட் அடிக்கும் பல சனியிரவுகளின் நீண்ட பயணம் ஞாயிறு காலையில் இங்க முடிவதுண்டு

#தனபால் மிலிட்டரி
சின்னயன்பாளையா, அடுகோடி
இட்லி-பாயா / போட்டி - யோசிக்காம நேரா போயிடுங்க. கார் எல்லாம் வேண்டாம், ரெண்டுசக்கரம் தான் ஆகும்.

#சிவாஜிமிலிட்டரி ஹோட்டல் - பனஷங்க்கரி
காலையில தோசை, ஆட்டுக்கால் சூப், கீமா, பிரியாணி (ஆனா மதியம் கிடைக்கிறது இதைவிட பெட்டர் வெர்ஷன்)
#ரங்கன்னா மிலிட்டரி - கே.ஆர்.ரோடு
இட்லி, தோசை, ராகிமுத்தே, சாப்ஸ் -

மேல சொன்ன ரெண்டும் அகில உலக பேமஸ் ‘தொன்ன’ பிரியாணி கிடைக்குமிடங்கள் :)

இதை அப்படியே ஒரு தொடரா கொண்டுபோக ஆசை, அதை நம்பி தான் தலைப்புல -1-ன்னு போட்டிருக்கேன்..
பயங்கிற பிசி, நேரமில்லைன்னு ஸ்டைலா பேசலாம், ஆனா உண்மை என்னான்னா.. “பேசிக்கல்லி ஐயம் ஏ சோம்பேறி - லெட்ஸ் சீ”..

அப்புறம் முக்கியமா.. நீண்டு நெளிந்து மணிக்கணக்கில் சென்ற கஸ்டமர் காலுக்கு இந்த பதிவு சமர்பணம் ;)






Thursday, November 5, 2009

சும்மா குறிச்சு வச்சுக்க

நட்பு வட்டத்துல ஒவ்வொருத்தனா கல்யாணம் செஞ்சுக்கா ஆரம்பிச்சப்போ போட்ட பதிவு இது... காலச்சக்கரம் சுத்திட்டே இருக்குங்களே நம்ம மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன, அதுவும் கடந்து போச்சு. அடுத்த கட்டத்துக்கு போகனுமில்லைங்களா. சும்மா ரகளையா "உங்க தங்கச்சி புள்ளை வளைகாப்புக்கெல்லாம் நான் லீவு போட முடியாது, மார்க்கெட் இருக்கிற நிலவரத்துல"ன்னு சலிப்பா விட்டுக்கு போன் பேசிட்டு சுத்திட்டு இருந்த பயலுக எல்லாம், "வீட்டுல அவுங்க அப்பாவுக்கு கேட்ராக்ட் மாதிரி இருக்கும் போல, அரவிந்த் கூட்டிட்டு போகனும், அதுனால அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு"ன்னு 'ஷை'யே படாம பேச ஆரம்பிச்ச காலமும் வந்து தானுங்களே ஆகனும்.. அதுக்கப்புறம் ராத்திரி வெள்ளிக்கிழம ராத்திரி ஒரு பத்து பதினோரு மணி வாக்குல அடுத்தநாள் ஷெட்யூல் கன்பர்ம்ங்க செய்யலாம்னு போன போட்டா.. பாசமா 'மாமா..'ன்னு ஆரம்பிச்சு "அப்புறம் கூப்பிடறன்.. ஜூனியர் அழுவாச்சி ஆரம்பிச்சுருச்சு"ன்னு சொல்லி வைச்சுட்டு, மறுபடி திங்கட்கிழமை காலையில மெசஞ்சர்ல வந்து.. "அப்புறம்.. அன்னைக்கு கூப்பிட்ட, அப்புறம் கூப்பிடலாம்னு அப்படியே மறந்துட்டேன்"னு ஆரம்பிப்பானுக... ம்ம்.. நாமளும் இதுக்கெல்லாம் தப்பிக்க முடியாது பாருங்க.. நமக்கு அதுக்கான் நேரம் வந்துது..

லக்கி எழுதின மாதிரித்தான்னாலும் அந்தளவுக்கு அதிகமா அலைக்கழிக்க படாம, ஒரு சின்ன சுத்துக்கப்புறம் சட்டுன்னு ரெண்டு நாள் வெயிட் பண்ணி கன்பர்ம் ஆனதுல பெரும்பான்மை மாதிரி ஹோம் டெஸ்ட் - ஆஸ்பத்திரி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாம டக்குன்னு 'Dad in waiting' ஸ்டேட்டஸ் வந்திருச்சு..

அப்ப இருந்தே குடும்ப சகா'க்க கூட்டம் சேரும் போதெல்லாம், இதே பேச்சு தான்.. பையனா? பொண்ணா? இது வரைக்கும் பையன் பொறந்த கூட்டாளிக எல்லாத்தையும் "அப்புறம் செஞ்ச அட்டகாசத்துக்கெல்லாம், ஒரு பையன் பொறந்து அதே ஆட்டம் ஆடித்தான தண்டனை குடுக்கனும்".. "எல்லா தல்லவாரிகளுக்கும் பையன் தான்.. அனுபவிக்கனும் இல்ல"ன்னு வம்பாவே பேசிட்டு இருந்தாச்சு. எல்லா கூட்டத்துலயும் எல்லாருமே முடிவாத்தான் இருந்தாங்க.. பையன் தான்.. வயிரு பெருசே ஆகலை பையன் தான்.. அப்படி இருக்கு, இப்படி இருக்கு அதுனால பையன் தான்'னு ஆளாளுக்கு தீர்ப்பு சொல்லிட்டே இருந்தாங்க.. நம்ம வுட்டம்மிணி உட்பட.. உள்ளார இருக்கிறவன் கிட்டத்தான் கம்ப்ளெயின்ட் செய்யிறத எல்லாம்.. உம் கடைசியில நம்மள பத்தி சொல்லிகுடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சு அவுங்களுக்கும்..
இப்படியே பேசிட்டு இருந்த ஒரு நாள் தான், வீட்டுக்கு வந்த ஒரு தோழி, எல்லாரும் பேசு கத்தி கலாய்ச்சு அமைதியான பிறவு சொன்னா.. 'உனக்கு பொண்ணுதான்டா... பொறுப்பான பசங்களுக்கு பொண்ணுதான்.. வேணா பாரு'ன்னா.. அவளுக்கு பையன்.. பாவம் அவ வீட்டுக்காரன் மேல அவளுக்கு என்ன கோவமா.. என்ன இருந்தாலும் இந்த தோழிக தோழிக தான்.. நம்மள சரியா புரிஞ்சுக்கறவங்க அவுங்க தான் :)

நமக்கும் மனசுல.. 'பொண்ணாயிருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு.. மூணு தலைமுறையா எங்க வூட்ல பொண்ணுகளே பிறக்கல.. (அதுக்கு முன்னத்துன வரலாறு எல்லாம் தெரியற அளவுக்கு பாரம்பரிய பலம் இல்லைங்க நமக்கு) நான் பொறந்ததுக்கே எங்காத்தா ஒரு நா கழிச்சு தான் வந்து பாத்துதாம்.. வந்ததும் எங்கம்மா கிட்ட.. 'வாசக்கூட்டி கோலம் போட ஒரு புள்ளை வேணும்னு இருக்கேன்.. நீ பையன பெத்து வச்சிருக்கே'ன்னு புலம்பியிருக்காங்க. அவுங்க விதி அதுக்கப்புறம் வந்த ரெண்டு மருமகளும் கூட அவுங்க ஆசைய நிறைவேத்த முடியல... அந்த ஆசை தான் வேதாளம் மாதிரி எங்காத்தாவோட பெரிய பேரன்'ங்கிற முறையில என் தோள்ல தொங்கிட்டு இருந்துச்சோ என்னவோ.. ஆனா வூட்டம்மிணியும் எங்கய்யனும் கூட்டணி போட்டு ஸ்ட்ராங்கா 'பையன் தான்'ன்னு சொல்லும் போது.. சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டு இருந்தேன்..

நம்ம வாரிசு நம்மள மாதிரி தான் இருக்கும்.. அவசரக்குடுக்கையா.. சொன்ன தேதிக்கு 17 நாள் முன்னாடியே உள்ளார எதோ ரகளைய செஞ்சு, சரி இன்னைக்கே எடுக்கனும்னு உள்ள தள்ளிட்டு போயிட்டாங்க... எல்லாரும் கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தாங்க.. நானும் எங்கய்யனும் வழக்கம் போல.. இப்படி மார்பிள்ஸ் போட்டதுக்கு பதிலா டைல்ஸ் போட்டிருக்கனும் ஆஸ்பத்திரியில எல்லாம் வழுக்கிட்டா கஷ்டமில்லன்னு எங்க சமூக அக்கரைய வெளிக்காட்டிட்டு உக்காந்திருந்தோம்.. அம்மா முறைச்சு பார்க்க.. சரி நாமளும் கொஞ்சம் பொறுப்பா இருப்பம்னு அதுக்கும் முயற்ச்சி செஞ்சேன்.. அதுக்கு புவியியல் சதி செஞ்சு ஒர்க் அவுட் ஆகாம போயிருச்சு..

அப்புறம் 'யாவரும் நலம்'ன்னு கூப்பிட்டு கையில குடுத்துட்டு உடனே வாங்கிட்டாங்க.. நம்ம அம்மணி அரைமயக்கத்துல சிரிக்க முடியாம ஒரு புன்னகையோட படுத்திருக்கு.. என்ன செய்யன்னு தெரியாம.. கங்கிராட்ஸ்'ன்னு மட்டும் கைய அழுத்திட்டு சொல்லிட்டு வந்துட்டேன்.. வெளிய எல்லாருக்கும் ஒரே குஷி.. பெருசு பெருசா ஸ்வீட் பாக்ஸ் வாங்கி எல்லாருக்கும் குடுத்துட்டு, ஒவ்வொரு வட்டத்துலயும் ஒவ்வொரு சகா'க்கு போன போட்டு சொல்லி, எல்லாருக்கும் சொல்லிடு, நான் அப்புறம் பேசுறன்னு வந்துட்டேன்.. பொறுப்பான புருஷனா இருக்கனுமில்ல..

அப்புறம் ஒரு நாலு மணி நேரம் கழிச்சு இணையபக்கம் வந்தா.. ஒரு சகா எல்லாருக்கும் மெயில் போட்டிருக்கான் குரூப்ஸ்ல, "ஒரு சந்தோஷமான வருத்த செய்தி.. ராசு தல்லவாரி இல்ல.. பொறுப்பான ஆள்ன்னு சொல்றம் மாதிரி ஆயிருச்சு"ன்னு ... வயத்தெரிச்ச புடிச்ச பயலுக.. "ஒருத்தன், லைஃப் லாங்கா தல்லவாரியாவேவா இருப்பான்"... திருந்தவே கூடாதா, ப்ளடி ஃபெல்லோஸ்.. அப்புறம் நானே எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன், "நாங்களும் பொறுப்பு தான்.. பொறுப்பு தான்.. எல்லாரும் பார்த்திகிடுங்க.." ரேஞ்சுல..

பிகு:
தகப்பனான சந்தோசத்துல.. சின்னம்மை வந்து பொண்டாட்டி புள்ளைய கண் கொண்டு பார்க்க முடியாம ஒதுக்கி வச்சிருக்காங்க.. வாரிசு நலமா இருக்கிறதா போன்ல தான் க்ஷ்சொல்றாங்க.. 'அப்படியே பெங்களூர் போயிரு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வா'ன்னு உத்தரவு வேற.. ம்ம்.. எங்க போயிரப்போகுது வந்து பார்த்துக்குவோம்..