கொஞ்சம் பெரிய பதிவு. எதும் உருப்படியான வேலை இருந்துச்சுன்ன அதை போய் பாருங்க, அப்புறம் சாவகாசமா படிச்சுக்கலாம் இதை..
-----
வென்னிலா கேக்
சென்னையில கத்திரி வெய்யில கொளுத்த ஆரம்பிச்சுட்டு இருக்கிற மே' மாசத்து காலை, டாண்னு ஏழேகாலுக்கெல்லாம் வெங்கிட்டநாராயண ரோட்டுக்கு வந்து கிளம்புர எங்க ஆபீஸ் ஷட்டில்ல ஏறி, ஜன்னலோர சீட்டா புடிச்சு, முதல் நாள் நைட்ஷோ 'ரிதம்' பார்க்க போனதுல கெட்டு போன தூக்கத்தை மறுபடியும் ஆரம்பிச்சேன்.
'ச்சே, காலங்காத்தால என்ன வெயிலு..'
சி.ஐ.டி நகர்.. சைதாபேடை... சின்ன மலை சிக்னல்.. ஆஅவ்வ்வ்!!
'ஹாய்!!.' திடீர்ன்னு காதுகிட்ட ஒரு உற்சாக குரல்.
அப்படியே மெதுவா பாதி கண்ணு திறந்து பார்க்கிறேன். 'ரஞ்சி'.
'அதுக்குள்ளாரயா அடையார் தாண்டியாச்சு.
'குட்மார்னிங் மை லார்ட்!!' எப்பவும் போல நக்கல்.
'குட்நைட்!!' கொஞ்சம் அழுத்தமா சொல்லிட்டு அப்படியே மறுபடியும் கண்ணசந்தேன். 'பிசாசு'.
ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கும்.
'ஆ..' தொடையில கிள்ளி வச்சுட்டா ராட்சசி.
'என்ன?'
'உன்னோட குறட்டைய கேக்கவா உன் பக்கத்துல வந்து உக்காந்தேன்'
'வேற எதுக்கு?' வெறுப்பா எந்திரிச்சு உக்காந்தேன்.
ரஞ்சி- முழுப்பெயர் சித்ராரஞ்சினி - கொஞ்சம் உயரம் கம்மிதான், களையான முகம், எப்பவும் சிரிக்கிற கண்ணு, லிப்ஸ்ட்டிக் போடத உதடு, இருக்குதா இல்லையான்னு தெரியாத மாதிரி சின்ன மைக்ரோ பொட்டு, கண்டிஷனர் உபயத்துல பறக்குற கூந்தல். எங்கூட போன பத்து மாசாமா வேலை பார்க்கிற ஈரோட்டு பொண்ணு, ஒரே ப்ராஜக்ட், அடுத்தவன் வாழ்க்கைய இன்சூரன்ஸ் செய்ய கப்யூட்டர கட்டிகிட்டு ப்ரோகிராம் எழுதற வேலை. பத்தே மாசத்துல என்னோட பெஸ்ட்ப்ரெண்டுகளோட டாப்டென் லிஸ்டல இடம் புடிச்ச ராட்சஸி.
'சும்மா முறைக்காத, காலங்காத்தால தூங்கிவழிஞ்சுட்டு.., ஆபீஸ் போற வரைக்கும் பேசிட்டுதான் வாயேன்'
'தினமும் உங்கூட பேசிட்டுதான இருக்கேன்' இன்னும் தூக்கம் கலையல எனக்கு.
'தினமும் தான் தூங்கற'
'அது பத்தாது'
'அப்ப, எங்கூட போதும்ங்கிற அளவுக்கு பேசிசட்டேங்கிறயா..ம்..?'
இவ இப்படித்தான், இவ கூட பேசி ஜெயிக்க முடியாது..
'ok !!, சொல்லு, என்ன பேசனும்' சரண்டர் ஆகறது தான் ஒரே வழி, இல்ல மறுபடியும் கிள்ளி வச்சிடுவா.
'நேத்து ஒன்னு நடந்துச்சு, அது பத்தி உங்கிட்ட சொல்லாம்னு தான்.. என்னன்னு சொல்லு பார்க்க்லாம்?' எப்பவும் ஏன் இந்த பொண்ணுக இப்படி புதிர் போட்டே பேசறாங்க.
'நேத்து நைட் சேகர் உனக்கு போன் செஞ்சானா?'
'யேய்!, உனக்கெப்படி தெரியும்'.. ஆச்சிரியப்படுறத கூட இந்த பொண்ணுக அழகாத்தான் செய்யறாங்க.
'நேத்து சாயங்காலம் ஆபீஸ் விட்டு வரும் போது, பயங்கிரமா வழிஞ்சுகிட்ட்டே என்கிட்ட உன் நம்பர் கேட்டானே'
'அவன் கேட்டதும் நீ குடுத்திட்ட?' முறைச்சாலும் அழகுதான்.
'வேற என்ன செய்ய சொல்ற.. அவன் தான் பத்து நாளா, நீ காபிடேரியா போனாலும் சரி, ரெஸ்ட் ரூம் போனாலும் சரி பின்னாடியே போறானே.. பாவம், அதான் குடுத்தேன்'
சித்ரா எப்பவுமே எல்லார் கூடவும் சகஜமா பழகுவா, ஆனா இதுவரைக்கும் 'காதல்' மட்டும் இல்லை.. நாலு பசங்க சேர்ந்து கிரிக்கெட் பார்க்க போன, இவளும் கூட சேர்ந்துக்குவா, ஆனா யாரவது 'சத்யம்'க்கோ இல்லை 'பாஷா'வுக்கோ கூப்பிட்டா போகவே மாட்டா. 'க்வின்கிஸ்'க்கு கூட கூப்பிட்டு வரமாட்டேங்கிரான்னு போன மாசம் சி.டி.ஸ்'க்கு போயிட்ட 'பாண்டே' பாவம் ரொம்ப வருத்தப்பட்டான். எங்க ஆபீஸ் சாப்ட்வேர் இன்ஜினியர்க மத்தியல 'அது கொஞ்சம் கஷ்டம்டா'ன்னு பேரெடுத்த பொண்ணு.
'உனக்கு எப்பப்பாரு, என்னை இப்படி மாட்டிவிடுறதுல ஒரு சந்தோஷம், இல்லை?' கோபம்.
'ச்சே! ச்சே!, நீ வேற, அவனை உங்கிட்ட மாட்டி விடனும்னு தான் ஆசைபட்டேன்.. அதுக்குதான்.. ஆ...' மறுபடியும் கிள்ளிவசுட்டா.. பிசாசு.
இந்த பத்து மாசத்துல, அவள முதல் முதல்லா ஓரியண்டேசன்ல எம்.ஜி.எம் ரிசார்ட்டுல, எதோ ஒரு சப்பை டம்ப்செராட்ஸ் விளையாடும் போது பேசுனது, அப்புறம் எங்க ப்ராஜக்டோட எக்ஸ்டென்ஷன்க்காக, எங்க டீம்லயே அவ சேர்ந்து, அவளுக்கு நான் மெட்ரிக்ஸ் சொல்லி தர ஆரம்பிச்சப்ப இருந்து இப்படித்தான்.
எங்களோட எல்லா சந்தோஷத்தையும் துக்கத்தையும் ரெண்டு பேரும் பேசிக்குவோம். அவ கிட்ட அப்பப்பொ என் மனச 'ஷேக்' பண்ணுற, எங்க புளோர்லயே இன்னொரு ப்ராஜெக்டல இருக்கிற ஆள்வார்ப்பேட்டை'மமதி'ல இருந்து இப்போ புதுசா HRல சேர்ந்திருக்குற 'ஸ்வேதா' வரைக்கும் எதையும் மறைச்சதில்லை, கொஞ்சம் அசிங்கமா திட்டிட்டு சிரிச்சுகிட்டே போயிடுவா. இவதான் என்னைய இந்த பளீர்ன்னு பட்டு வேட்டி கட்டிகிட்டு தொடைய தட்டி தட்டி பாடுற கர்நாடிக் கச்சேரிக்கெல்லாம் இழுத்துகிட்டு போவா, ஆனா அதுக்கு தண்டனையா திரும்பி வரும் போது எனக்கு பாண்டிபஜார்ல பொடிதோசை வாங்கிதரேன்னு சொல்லுவா, ஆன ஒரு நாள் கூட வாங்கிதந்ததில்லை, லேட்டாயிருச்சுனு ஓடிடுவா.
பஸ் ஆபீஸ் காம்பவுண்டுகுள்ள வந்தாச்சு.
பிசாசு, ரெண்டு தடவையும் நறுக்குன்னு கிள்ளிட்டா, ஆனா நான் வலிச்சதா காமிச்சுக்கலை :-)
---
மண்டைக்குள்ள மணியடிக்கர சத்தம், திடும்னு எந்திரிச்சு உக்காந்தேன், செல் போன் அடிக்குது.
'மணி என்ன?', ரூம்ல புதுசா மாட்டியுருக்கிற எலக்ட்ரானிக் வால் கிளாக், சித்ரா'வோட கசின் சிங்கப்பூர்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வந்தது..
'மணி சரியா 12.00'
தலையானைக்கு அடியில இருந்து என் செல்'லை எடுத்தேன்
'ஹலோ!'
'ஹாப்பி பர்த்டே.....' அவதான்.
'யேய்.. தாங்ஸ்! என்ன இப்படி சும்மா ஹாப்பி பர்த்டே சொல்ற.. நீ எதாவது சர்ப்ரைஸ் பார்ட்டி குடுப்பேன்னு நினைச்சேன்'
'அப்படியா??.. அப்ப அப்படியே எந்திரிச்சு வந்து உன் ரூம் கதவ திறடா செல்லம்'
'ஹே' கதுவுக்கு வெளிய, செல்போனும் கையுமா அவ, அவ மட்டுமில்ல, என்ன இது எங்க டீம்ல அத்தனை பேரும் இருப்பாங்க போல.. இதுக்கு தான் நம்ம பசங்க 'இன்னைக்கு நைட் இந்த டாக்குமெண்டேசன முடிச்சுட்டு வந்துடறோம், நீ கிளம்பு'ன்னானுகளா. 'ச்சே, நான் தான் புரிஞ்சுகாம விட்டுட்டேன்'
அப்புறம் மெழுகவர்த்திஎல்லாம் ஊதி, கேக் வெட்டி, ம்ம்.. மெழுகுவர்த்தி கணக்கு குவார்ட்டர் அடிச்சிருச்சு, மூஞ்சியெல்லாம் கேக் பூசி, தக்காளி தேய்ச்சு.. அப்பா!! இவ வேற முன்னே நான் காலையில ஜிம் போக ஆரம்பிச்சப்ப வாங்கி வச்ச முட்டைய ஞாபகப்டுத்தறா. யாருக்கும் தெரியாம 'அப்புறம் நான் நீ நேத்து கேட்ட ஹேரிபாட்டர் புக்க குடுக்கமாட்டேன்'னு சொல்லி அடக்கி வச்சேன்.
ஏற்க்கனவே அந்த புக்க எங்கிட்ட இருந்து ரெண்டு மூனு தடவை இரவல் வாங்கிட்டா, இப்ப மறுபடியும். ஒரு புது புக் வாங்கி அவளுகு பிரசண்ட் பண்ணனும்.
எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க, என் ரூம் மேட் ரங்கராஜ் 'மாப்ள, நாளைக்கு தங்கச்சிக்கு பொண்ணு பார்க்க வராங்க ஊர்ல, உனக்காக தான் இவ்வளவு நேரம் இருந்தேன், இப்ப கிளம்பினாத்தான் மதியம் 12 மணிக்காவது ஊர் போயி சேர முடியும்'ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
நாங்க ரெண்டு பேர் மட்டும் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு இருந்தோம்.
'நேரமாச்சு, கிளம்பு. நான் கொண்டு வந்து விடுறேன்'ன்னு என்னோட yamaha சாவிய தேடினேன்.
அவ அபார்ட்மெண்ட் வாசல்.
இங்க தான், மூனாவது மாடியில அவுங்க ஊர்ல இருந்து வந்து MBA படிக்கிற உமா கூட தங்கியிருக்கா.
'யேய்! ரஞ்சி.'
'ம்ம்.. என்ன?'
'தேங்க்ஸ்'
'அய்.. ரொம்ப செண்டி ஆகாத, கிளம்பு' அவளோட டிரேட்மார்க் சிரிப்பு
'எனக்கு கிப்ட வாங்கி தரேன்னு சொன்னத மறந்திராத'
'ஆமா, என்னோட பிறந்தநாளுக்கு உனக்கு கிப்ட் வாங்கி தர வேண்டியிருக்குது'
'அப்புறம், உன்னை மாதிரி அடிமுட்டாள இருந்தா அப்படித்தான்' இவ சிரிக்கும் போது மின்னலடிக்கிற மாதிரி இருக்குது
'கம்முன்னு எனக்கொரு ஹேரிபாட்டர் வாங்கி குடுத்துடு, இல்லை உன் புக்க எடுத்துக்குவேன், திருப்பி தர மாட்டேன்'
'அதை மட்டும் எடுத்துக்காத, அது என்னோட பெஸ்ட் பிரண்டு ரஞ்சி குடுத்தது, அதை நான் உங்கிட்ட குடுக்க முடியாது'
அதுக்கெல்லாம் அசரமாட்டா.
'பெஸ்ட் பிரண்டா, அப்ப நான் பெஸ்ட் பிரெண்ட் இல்லையா உனக்கு?'
'சரி.. சரி.. ஆமா உனக்கு இன்னும் எதுக்கு அந்த புக்கு?, நீ அதை ஒரு பத்து தடவை படிச்சிருப்ப'
'அது எதுக்கு உனக்கு, நீ எனக்கு ஒரு காப்பி வாங்கித்தர்ற அவ்ளோதான்' மறுபடியும் ஒரு சின்ன மின்னல்.
'குட்நைட்.' போயிட்டா.
நான் அப்படியே கொஞ்ச நேரம் பைக்ல சாஞ்சு நின்னுட்டிருந்தேன். அடையார்ல டி.நகரை விட நல்ல காத்து.
எங்க பேச்சு பூரவும் இப்படித்தான், எப்பவுமே விளையாட்டாவே, ஒருத்தர ஒருத்தர் வாரி விட்டுகிட்டு, எதாவது கேட்டுகிட்டு. ஆனா ராத்திரி 12 மணிக்கு என் ரூம் வாசல் வந்து அவ நின்னதுல இருந்து எதோ மாற்றம்...
'யேய்!' மேல இருந்து தண்ணி மாதிரி எதுவோ.
மேல பால்கனியில ரஞ்சி.
'இன்னும் அங்க என்ன பண்ணற?' கிசிகிசுப்ப சத்தம் போட்டா.
'ம்.. தண்னி தெளிச்சு விளையாடலாம்னு காத்துட்டு இருந்தேன்' நானும் கிசுகிசுத்தேன்
'போ போய் தூங்கு, நாளைக்கு விளையாடலாம், விடிய போகுது' பால்கனியில இருந்து ஒரு மின்னல்.
'சரி பாட்டி' நானும் ஒரு மின்னலுக்கு முயற்ச்சி செஞ்சேன்
'குட்நைட்!'
அன்னைக்கு எப்ப தூங்கினேன்னே தெரியல.. ராத்திரியில சென்னை ரொம்ப அழகா இருக்குது.
--
இந்த கிப்ட வாங்கிற விஷயத்துல நான் கொஞ்சம்.. இல்ல இல்ல ரொம்பவே மோசம். அவள ஒரு பத்து நாள் காக்க வெச்சேன், அப்புறம் வாங்கி குடுத்துட்டேன், ஹேரிபாட்டர் மட்டுமில்லை, அவளுக்கு புடிச்ச பாலகுமாரன், சுஜாதா'ன்னு ஒரு பெட்டி நிறையா தூக்க முடியாம தூக்கிட்டு போனேன்.
அதுக்கப்புறம் நான் அவ அபார்மெண்ட்டுக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சேன். நான் வாங்கி குடுத்த புஸ்த்தகத்தை எல்லாம் படிக்கிறதுக்கு, கிராதகி, இவ மட்டும் யாருக்கும் புஸ்த்தகம் ஓ.சி. குடுக்க மாட்டா.
'டேய் முண்டம்! சும்மா எல்ல புக்குலயும் பேப்பர மடிச்சு மடிச்சு வைக்காத, வெணுமின்னா, இங்க தான் இவ்வளவு அழகாழகா புக்மார்க் வெச்சிருக்கனில்ல அதை யூஸ் பண்ணு, அறிவே கிடையாதா உனக்கெல்லாம்'
அதுமட்டுமில்லை அவ ரூமல இருக்கிற புஸ்த்தகத்தை தொடுறாதுக்கு முன்னாடி கையெல்லாம் நல்ல கழுவனும்மாம்.
'பைக எடுத்துட்டு ரோடு ரோடா சுத்து, அப்படியே வந்து என் புக்குல மட்டும் கைய வைக்காத' என்னவோ சாமி சமாச்சாரம் மாதிரி.
'சும்மா ரொம்ப பேசாத, எல்லாம் நான் வாங்கி குடுத்தது தான, அதுவும் என் பிறந்த நாளுக்கு'
'அதுக்காக? இப்போ இதெல்லாம் என்னோடது'
'சரி, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நினைச்சென், நீ எனக்கு குடுக்க வேண்டிய பர்த்டே கிப்ட எங்க?'
'ம்ம்.. அது அப்போ உன் வயத்துல இருந்துச்சு, இப்போ கூவத்துக்கு போயி, கடல்ல சேர்ந்திருக்கும்'. மின்னல்.
'என்னது?' அவ பேசி எப்ப சட்டுன்னு புரிஞ்சிருக்கு
'ஞாபகமில்லையா, அன்னைக்கு கேக் வெட்டுனயே, அது நான் செஞ்சதுதான், அது தான் உனக்கு என்னோட கிப்ட்'
சுடுதண்ணி வைக்கவே சோம்பேறித்தனம் படுற பொண்னு
'நீயா! நீ செஞ்சயா? பொய் சொல்லாத'
டக்குன்னு சொல்லிட்டேன், பாவம் மூஞ்சி எல்லாம் சுருங்கிபோச்சு..
'உனக்காகத்தான் செஞ்சேன்'. சோகமான மின்னல்
'சொல்லவே இல்லை'
'நீ கேக்கவே இல்லை'
'சூப்பரா இருந்துச்சு, ஆனா நீ தான் எல்லாத்தையும் எம்மேல பூசியே தீர்த்துட்ட, யாரும் சாப்பிடவே இல்லை.'
'ஆமா பின்ன, அது நான் உனக்காக செஞ்சது.'
'ஆமா அதை செய்ய எவ்வளவு நேரம் ஆச்சு?' சூப்பர் கேக், லேயர் லேயரா மூனு டேஸ்ட்ல, வெண்ணிலா க்ரீம், மேல அழகா ஒரு பூ, என் பேரு, அவ்வளவும் இவளே செஞ்சிருக்கா, நம்பவே முடியல.
'ஒவ்வொரு லேயரும் செய்ய ஒவ்வொரு மணி நேரம், அப்புறம் எல்லம் ஒன்னா சேர்க்க ஒரு அரைமணி நேரம், அப்புறம் க்ரீம் போட்டு டிசைன் பண்ண ஒரு மணிநேரம்.'
ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை இவ, இப்போ இவ்வளவு சொல்றா.
'அப்போ அஞ்சு நேரம் உக்காந்தா அந்த கேக்க செஞ்ச?'
'ம்ம்... ஆமாம், அப்புறம் எல்லாத்தையும் கழுவ ஒரு அரைமணி நேரம்.' பளீர் மின்னல்
எனக்கென்ன சொல்றதுன்னே தெரியலை, சமைக்கிறாதுன்னாலே அலறுவா, இவளா?
'சொல்ல மறந்துட்டனே'
அமைதியா பார்த்துட்டு இருந்தேன் 'அந்த கேக் செய்யறதுக்கு முன்னாடி, ஒரு வாரம் பிராக்டீஸ் செஞ்சேன், அப்படியும் மூணு கேக் வீணா போச்சு'
'ஏன்?'
'முதல்ல செஞ்சது கருகிபோச்சு, ரெண்டாவது ஒழுங்கா பேக் ஆகல, மூனாவது நல்லா வந்துச்சு, ஆனா நான் சக்கரை போட மறந்துட்டேன்' சிரிச்சுகிட்டே சொல்றா.
இவ எப்பவுமே இப்படித்தான் நாம் எதாவது பேசுனா, அப்படியே பேச்ச மாத்திடுவா.
'ஆமா, எதுக்கு அவ்வளவு கஷ்ட்டப்பட்டு ஒரு கேக் செய்யனுமா?'
நான் என்னமோ சொல்லாதத சொல்லிட்ட மாதிரி பார்த்தா.
'உன் பிறந்தநாள்டா அது, வழக்கமா நீ தான எனக்கு எப்பவும் கிப்ட் வாங்கி குடுப்ப, அதை விட அசத்தனுன்ம்னு தான்' என்னமோ ஸ்டேட் பர்ஸ்ட வாங்கிட்ட மாதிரி சந்தோஷமா சொன்னா.
அவளுக்குன்னு நான் என்னைக்கும் எதுக்காகவும் ஒரு வாரம் செலவு பண்ணி செஞ்சதில்லை, சும்மா ஒரு ரெண்டு மணிநேரம் கூட.. கச்சேரிக்கு போறதுகூட அங்க கேண்டீல கிடைக்கிற நெய்ப்க்கோடாக்காக தான். அவளுக்கு எதாவ்து கிப்ட் வாங்கினா கூட, சும்மா பந்தாவா 'கார்ட' குடுத்துட்டு வெளிய நின்னுக்குவேன். என்னக்கே திடீர்ன்னு ஒரே பப்பி ஷேமா இருந்துச்சு.
'தேங்க்ஸ்'
வேற என்ன சொல்றது 'தேங்க்ஸ் எ லாட்'
'ஓய், சும்மா என்னை செண்டி ஆக்காத, போ... நேரமாச்சு'
போயிட்டேன்.
----
எனக்கு அடுத்த நாள் மதியானம் எங்க பாஸ் எதோ பேசனும்னு அவர் கேபினுக்கு கூப்பிடர வரைக்கும் அவ நினைப்பாவே இருந்துச்சு.
அவர் கேபினுக்கு போனதும், எப்பவும் போல 'என்னப்பா எல்லாம் ஒழுங்கா போகுதா, டெட்லைன் எல்லம் க்ரெக்டா மீட் பண்றாங்களா'ன்னு வழக்கமான 'டாக்'தான். அப்புறம் தான் சொன்னாரு 'உன்னை நியுஜெர்சி அனுப்பலாம்னு இருக்கோம், என்ன சொல்ற?'
ஒரு நாள் முன்னாடி அவர் என்னை அப்படி கேட்டிருந்தாருன்னா, ஒத்துட்டிருப்பேன், என்னால எங்க வேனும்னாலும் போயி வேலை செய்யம முடியும், ஆனா, இப்போ ரஞ்சிய விட்டுட்டு... எப்படி.. என்ன செய்யறதுன்னே புரியல.
'ஓகே தானே, ஒன்னும் பிரச்சனை இல்லயே'
'எப்ப கிளம்ப வேண்டி இருக்கும்?' இவர் கிட்ட எப்படி சொல்றது
'ஒன் மந்த்துல'
அப்படியே வெளிய டீக்கடைக்கு வந்து ஒரு தம் பத்த வசேன். அப்பத்தான் எனக்கு தோனுச்சு 'நான் சித்ராவை காதலிக்கறேன், im in luv with her'.
அதுக்கு முன்னாடி நிறையா தடவை எனக்கு..
'மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு, சில மின்னல்கள் என்னை உரசி சென்றதுண்டு'..
கரெக்ட்டா பாட்டு போடறான் டீக்கடையில.
இவள விட்டுட்டு போக முடியுமா என்னால.
---
'வாவ் நியுஜெர்சி.. ம்ம் கிரேட்டா!, அருமையான ஊராம் அது, நவம்பர் டிசம்பர் மாசமெல்லாம் பனி பொழியுமாமே'
நான் நியுயார்க போறதுல சித்ராவுக்கு ஒரே சந்தோஷம். அவளுக்கு என்னோட கஷ்டம் புரியல 'இவள விட்டுட்டு எப்படி இருக்க போறேன்?'
போகலைன்னு முடிவு செஞ்சிருந்தா கூட இப்ப அவகிட்ட என் நினைப்ப சொல்லியிருப்பேன். ஒரு வருஷமா இவளை எனக்கு தெரியும். சும்மா சின்ன சின்ன சீண்டல் இருக்குமே ஒழிய, காதல்', அப்படியெல்லம் நினைச்சதே இல்லை, அவ எனக்காக ஒரு வாரம் கஷ்டப்பட்டு கேக் செஞ்சது தெரியற வரைக்கும்.
சின்ன சின்ன விஷயம் கூட வாழ்க்கையில எவ்வளவு பெரிய மாற்றத்த கொண்டு வந்துருது.
'என்ன ஆச்சு' எம்மூஞ்சிய பார்த்துட்டு கேட்டா 'நியுயார்க் போறதுல உனக்கு சந்தோஷம் இல்லையா?'
'ம்.. அப்படியெல்லம் இல்லை, இப்படி திடீர்ன்னு, எல்லாம் நடக்குது, உனக்கே தெரியும், நான் அமேரிக்கா போகனுன்னெல்லாம் ஆசைபட்டதே இல்லை'
'லூசா நீ!.. நாலு இடம் பார்க்கனும்டா, அங்க பொண்ணுக எல்லாம் சூப்பரா இருப்பங்களாம்' ஒரு கிண்டலா சொன்னா.
'நீ இல்லாம எவ்வளவு அழகு இருந்து என்ன பிரயோஜனம்' வாய் வரைக்கும் வந்திருச்சு, ஆனா சொல்லலை.
இன்னும் ஒரு மாசம் தான் இவகூட. எனக்கு தெரிஞ்சு இவகிட்ட ப்ரபோஸ் பண்ணின எல்லா பசங்ககிட்டயும் மூஞ்சிக்கி நேராவே 'நோ' சொல்லிட்டா. எனக்கும் அப்படி நடந்துட்டா? கடைசி ஒரு மாசத்துல அந்த ரிஸ்க எடுக்கறதுக்கு நான் விரும்பல. யூ.எஸ். போயிட்டு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு வந்து சொல்லிக்கலாம். இவ இப்படியே இருந்தா..
அந்த மாசத்துல ஒவ்வொரு நாளாயும் ரசிச்சு அனுபவிச்சேன், சித்ராவ கூட்டிகிட்ட 'கோமளாஸ்'ல இருந்து பாண்டிபஜார் 'பொடிதோசை' கடை வரைக்கும் போனேன். என்கூட வந்து எனக்காக ஜெர்கின், ஷூ எல்லாம் செலக்ட் பண்ணுனா. சோப், டூத்பேஸ்ட்ல இருந்து எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு வச்சுகிட்டு ஞாபகபடுத்திகிட்டே இருந்தா.
'மறக்காம ஒரு நெயில் கட்டர் வாங்கி வச்சுக்கோ.' நானும் என் ரூம்மேட்டும் ஒன்னயே யூஸ் பண்ணிகிட்டிருந்தோம்
'போகும் போது நீ கையில எடுத்துட்டு போறதுக்காக, ஒரு பெரிய மருந்து லிஸ்ட்டே ரெடி பண்னியுருக்கேன்'
'ஒரு ரெண்டு பார்மல ஷூ வாங்கிகோ அப்படியே ஒரு பத்து டார்க் கலர் சாக்ஸும், அங்கயெல்லாம் டிரஸ் கோட் ரொம்ப பார்பாங்களாம், வாரத்துல ஒரு நாள் தான் நீ லாண்ட்ரிக்கு போக முசியும்'
'எத்தனை டை வச்சிருக்கே நீ?, ஆமா எந்த எந்த பேண்ட்டெல்லாம் சூட்டுக்கு வொர்கவுட் ஆகும்?'
'போறாதுக்கு முதல் நாள் முடி வெட்டிக்கோ, அங்க போயி ஒரு செட்டில் ஆகிற வரைக்கும் பிரச்ச்னை இருக்காது'
காலையில போன் பண்ணி 'நேத்து குடுத்த லிஸ்ட்ல இதையும் சேர்த்துக்கோ'ன்னு புதுசா எதாவது சொல்லுவா.
ஒவ்வொரு நாளும் போக போக எனக்கு அவ மேல காதல் அதிகமாயிட்டே இருந்துச்சு.
ஒரு மாசம் சீக்கிரம் ஓடிப்போச்சு.
நான் கிளம்பற நாள்.
'நீ கண்டிப்பா ஏர்போர்ட்டுக்கு வரனும்'
'அப்புறம், உன்னை அப்படியே விட்டுட்டா போயிருவேன். நான் வராம எப்படி'
எல்லா லிஸ்ட்டையும் செக்பண்ணிட்டு, 'ஓகே, கிளம்பலாம்'ன்னா.
மீனம்பாக்கம் இண்டெர்நேஷனல் டெர்மினல். மணி 10.00 தான் ஆகுது. பிளைட் 1.00 மணிக்குதான். ரஞ்சியும் ஒரு விசிட்டர் பாஸ் வாங்கிட்டு வந்து உக்காந்திருந்தா. நான் என்னோடோ பேக்கேஜ செக்-இன் பண்ணிட்டு வந்தேன். ஒன்னும் பிரச்சனையில்லை, வெயிட் எல்லாம் ரஞ்சி ஏற்கனவே செக் பண்னிடாளே. இன்னும் செக்யூரிட்டி செக் தான், அதுக்கு போக நேரமிருக்குது.
'எதாவது சாப்பிடுறயா?'
புட்கோர்ட்டுக்கு போய் உக்காந்தோம். என் மனசு பூரா இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இவள பார்க்க முடியாதுங்கிற நினைப்புதான் அலைமோதிட்டு இருந்க்குது.
'யேய்! என்னப்பா ஆச்சு?, ஒரு மாதிரி இருக்க.'
எப்பவும் என்னை என்னடா, முண்டம் அப்படி எல்லாம் தான் கூப்பிடுவா, எப்பாவது விஷேசமாத்தான் 'என்னப்பா' வரும்.
'எனக்கு போக புடிக்கல'
'எனக்கும்தான் நீ போறது புடிக்கல'
'உனக்கு புரியல ரஞ்சி' என்னால அதுக்கு மேல முடியலை.
'நீ என் பக்கத்துல இல்லாம..... என்னால முடியாதுடா'
என்னையே விறைச்சு பார்த்தா. அவ கண்ணுல எதோ புதுசா தெரிஞ்சுது. என்னன்னு எனக்கு புரியல..
'I am madly in love with you, ரஞ்சி.'
அவகிட்ட இருந்து விநோதமா ஒரு சத்தம் வந்துச்சு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவால.
'எங்கிட்ட இதை சொலறதுக்கு இப்படி ஒரு அருமையான நேரம் பார்த்திருக்கே'
அவ கண்ணுல இருந்து தண்ணி. அது அவ கன்னத்துக்கு வர்றதுக்கு முன்னாடி துடைச்சிட்டேன், என்னால முடிஞ்சது.
'எப்ப இருந்து உனக்கு இப்படி தோனுச்சு'. அவ கண்டிப்பா அழுகறா, என்ன செய்யிறதுன்னு எனக்கு தெரியல.
'நீ எனக்காக கேக் செஞ்சேன்னு சொன்னியே அப்ப இருந்து'
சிரிச்சா, அதே மின்னல்.
'அப்பத்தானா?.. என்னவோ சொல்லுவாங்களே a way to a man's heart is certainly through his stomach!ன்னு அப்படியா!, சரி ஒரு மாசமா அப்புறம் எதுக்கு என்னை கூடவே வெச்சுகிட்டு இப்படி வெஸ்ட் பண்ணின?' சிரிச்சுகிட்டே கேட்டா, கண்ணு நிறையா தண்ணியோட அவ சிரிக்கிறத பார்க்க அழகா இருந்துச்சு..
'எனக்கு கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு ரஞ்சி, நீ என்ன சொல்லுவியோன்னு, இப்பவும் நீ அழுகிறது எதுக்காகன்னு எனக்கு புரியல. நான் சொல்லி ஒரு வேளை நமக்குள்ள இருந்த உறவு போயிருச்சுனா, நீ ஏற்கனவே நிறையா பேரு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்ட'
'அது ஏன்னா.. i was in luv with youடா முண்டம்' டக்குன்னு சொன்னா.
'என்னது?'
'you have been in love with me??' அவ அப்படி சொல்லுவான்னு நான் எதிபார்க்கவே இல்லை 'how long?'
'உன் கூட டம்ப்செராட்ஸ் ஆடுனப்ப இருந்து'
'அது நாம் சந்திச்சுகிட்ட முதல் நாள்' திடீர்ன்னு என் இதய துடிப்பெல்லாம் வேகமாயிருச்சு.
'ஆமா, நான் எப்பவும் உடனே முடிவு எடுத்திருவேன், உன்னை மாதிரியில்லை.' பயங்கிர பெருமை
'அப்புறம் இவ்வள்வு நாள் நீ என்கிட்ட சொல்லாம இருந்துட்டு, என்னை ஏன் ஒரு மாசமா சொல்லைன்னு கேள்வி கேக்கிறயா?'
'உன் மரமண்டைக்கு, என்னை புரிஞ்சுக்க முடியல, நான் என்ன செய்யிறது?'
'ஆமா இந்த பொண்ணுக என்ன நினைக்கிறாங்கன்னு கண்டு புடிக்க நான் என்ன ஐன்ஸ்ட்டீனா?'
'முண்டம், ஐன்ஸ்ட்டீன் எங்க கண்டுபுடிச்சாரு, கேசனோவான்னா கூட ஒத்துக்கலாம்'
அப்படியே கரைஞ்சு போயிட்டேன் நான்.
'I love you.'
'அதான் தெரியுமே'
அப்படியே அவ கைய என் கையில எடுத்துகிட்டு, அவ கண்ண பார்த்தேன்.
அந்த ஸ்பரிசம் புதுசா இருந்துச்சு, அது வரைக்கும் பல தடவை அவள தொட்டிருக்கேன், அவன் கூட பைக்ல போகும் போது, அவ என்னை கிள்ளும் போது, 'ஹாய்' சொல்லும் போது, ஆனா இது வேற.
'என்ன?'
'நான் போகல' நான் ஆகாசத்துல இருந்தேன்.
'ஏன்?.. ஒழுங்கா போ, இன்னும் ரெண்டே மாசத்துல நான் அங்க இருப்பேன்.'
'எப்படி? டெபெண்டண்ட் விசாவுலயா?'
'ஆ' கிள்ளிட்டா..
'அதுக்கு இன்னும் நாளாகும், நான வேற ப்ராஜெக்ட்க்கு வர்றேன்'
'யேய்!.. சொல்லவே இல்லை' என்னால நம்பவே முடியலை.
'அப்புறம். நீ போறதுக்குள்ள ப்ரபோஸ் பண்னுவியான்னு எனக்கு தெரியல, அதுக்காக உன்னை நியுஜெர்ஸி வெள்ளைக்காரிகளுக்கு விட்டுதர முடியுமா என்ன, அதுனால தான், பாஸ்'அ புடிச்சு, HR'அ புடிச்சு, இன்னும் ரெண்டு மாசத்துல அங்க வர்ற மாதிரி வேற ப்ராஜெக்ட் மாத்திகிட்டேன், அதுல யாரோ திரும்பி ஊருக்கு வராங்களாம், அந்த இடத்துக்கு நான் வ்ர்றேன்.' கண்ணு கூசுற அளவுக்கு ஒரு மின்னல்.
'சரி, நான் இப்ப சொல்லைன்னா என்ன செஞ்சிருப்ப?' நமக்கு எப்பவுமே சந்தேக புத்தி.
'அங்க வந்து, அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி உன் பக்கத்துலயே இருந்திருப்பேன், இல்லாட்டி நீ என்னடா இவ பின்னாடியே தொங்கறான்னு நினைப்ப இல்ல'
'இப்ப மட்டும் தொங்கலையா நீ' மறுபடியும் கிள்ளு. இவ்வளவு அழகா பிளான் பண்னிட்டு, பிசாசு, 'அப்புறம் முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல?'
'நான் எவ்வள்வு ஹிண்ட் குடுத்தேன், உனக்குதான் புரியல, முண்டம்' சிரிச்சுகிட்டே சொன்னா 'நான் எல்லாத்தையும் விட உங்கூட தான் எல்லா நேரமும் இருந்தேன், அதை விட எப்படி உனக்கு புரிய வைக்கிறது?'
கரெக்ட் தான், அவ நான் எங்க டீம்ல யாரு கூட வெளிய போனாலும் அவ இருப்பா, க்ரிக்கெட் பார்க்க போனப்ப கூட நான் இருந்தேன். இப்பத்தன் எனக்கு விளங்குது.
'சரி, நான் உன்னை வேண்டாம்னு சொல்லியிருந்தா?' அவ என்னை ஒரு வருஷமா காதலிக்கறான்னு என்னால நம்பவே முடியல.
'ஆமா, உன்னை எனக்கு தெரியாதா? நான் ஒவ்வொரு தடவையும் யாரயாவது ரிஜக்ட் பண்னும்போதெல்லாம் உன் மூஞ்சில ஒரு லைட் எரியுமே, பார்த்துட்டு தான் இருக்கேன்'
அவளுக்கு தெரிஞ்சிருக்கு.
'ஹேய், சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.' மெதுவா கேட்டா ' இருந்தாலும், நான் சொன்னது நிஜம்தான?'
சிரிச்சுகிட்டேன் ' கரெக்ட்தான். நான் பயங்கிற சந்தோஷமா இருக்கேன். ஆனா நீ இன்னும் ஒன்னும் செஞ்சின்னா இன்னும் பயங்கிற சந்தோஷப்படுவேன்'
டக்குன்னு தள்ளி உக்காந்த்துட்டா ஜாக்கிரதையா
'வேற என்ன செஞ்சா?'
'நீ ஒழுங்கா வென்னிலா கேக் செய்ய கத்துகிட்டா..'
'ஆ' மறுபடியும் கிள்ளி வச்சுட்டா
நியுஜெர்ஸி பிளைட்டுக்கு செக்-இன் பண்ண கூப்பிடறாங்க மைக்குல....
------
13 comments:
அய்யா ராசா.. கொங்கு ராசா... பயங்கர ரொமண்டிக்கு.. படிச்சிட்டு அப்பிடியே ஒடம்பெல்லாம் புல்லரிக்குது! கலக்கீடிங்க..
Raasa,
A Very nice posting.
Rgds,
Mitra
ரொம்ப நல்லா எழுதீருக்கீங்க ராசா.
arumai arumai... romba arumai nanbare
mexicomeat
http://mexicomeat.blogspot.com
ராசா ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. முடிவில ஒரு எதிர்பாராத திருப்பம் இருக்கபோவுதுன்னு படித்து ஏமாந்தேன். நல்லா இருக்கு, பாராட்டுக்கள்.
இளவஞ்சி, இராதாகிருஷ்ணன், மித்ரா, mexicomeat, ஏமாந்த அனானிமஸ் எல்லாருக்கும் நன்றி..
அதென்னங்க மெக்ஸிகோமீட்??
எங்க தப்புன்னு யாருமே எழுதலீங்களே.. சின்ன பையன் ஏன் பாவம் அதை இதையும் சொல்லி வெறுப்பேத்தனும்னு விட்டுட்டீங்களா??
SUPER SUPER..Unga adutha padivu eppavo?/
miga nanraaga ezhuthi iruntheergal.
vaazhthukkal.
தப்போ ரைட்டோ...லவ் ஸ்டோரிக்கு எப்பவுமே + தான்!
அரும ராசா அரும...
சுதர்சன் >> நன்றி.
இவ்ளோ நாள் கழிச்சு இந்த பதிவு ரீ-சைக்கிள் ஆகறதுல இன்னும் சந்தோஷம்..
ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க.
படித்தபின் என்னால் ரஞ்சியை மறக்க முடியவில்லை.
நியூஜெர்ஸிக்கு போயிட்டாங்களா.
வலைசரம் மூலமாக வந்தேன்,வழக்கமான கதை என்றாலும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது,வாழ்த்துக்கள்
Post a Comment