Tuesday, January 31, 2006

சீசருடன் ஒரு நாள் - சில குறிப்புகள்!!

நாயே.. நாயே!!

சும்மா சும்மா திட்றவங்க எல்லாரும் நாயே நாயேன்னு திட்றாங்க.. அப்படி நாய் கிட்ட என்னதான் கெட்ட புத்தி இருக்குதுன்னு பார்க்கலாம்னு, நம்ம வீட்டு 'சீசர்'கூட ஒரு நாள் பூரா உக்காந்து, ஒரு பெரிய ஆராய்ச்சி செஞ்சனுங்க.

ஒரு நாள் பூராவும் மெனக்கெட்டு ஆராய்ச்சி செஞ்சதுல, என்னோட முடிவு என்னன்னா, நாய்கிட்ட இருந்து நம்ம கத்துக்க வேண்டியது தான் நிறையா இருக்குனு தோணுது.




என்னோட நாய் ஆராய்ச்சியின் கண்டுபுடிப்புகள இங்க லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேன். வேற யாராவது மேற்க்கொண்டு இந்த ஆராய்ச்சிக்கு அவுங்களோட கண்டுபுடிப்பிகள குடுத்தாலும், ஏத்துக்க தயாரா இருக்கேன்..


  1. நம்மாளுக யாரும் வீட்டுக்கு வந்தா வாசலுக்கு ஓடிப்போயி வரவேற்க்கனும்.
  2. வேற யாரும் உங்க எல்லைய கடந்து வந்தா, உடனே அவுங்களுக்கு அதை தெரிவிக்கனும்
  3. தூங்கி எந்திருச்சதும், கை காலை எல்லாம் நல்லா நீட்டி நெட்டி முறிச்சு சுறுசுறுப்பாகனும்
  4. தினமும் அங்கயும் இங்கயும் ஓடி ஆடி விளையாடனும்
  5. நல்லா ரசிச்சு ருசிச்சு ஆசையா சாப்பிடனும்
  6. விசுவாசமா இருக்கனும்
  7. வேஷம் போடாமா நீங்க நீங்களாவே இருக்கனும்
  8. உங்களுக்கு தேவையானது மண்ணுக்குள்ள இருந்தாலும் தோண்டி எடுத்தறனும்.
  9. சும்மா சத்தம் போட்டோ இல்லை எதாவது சேட்டை செஞ்சோ உங்களுக்கு வேண்டியவங்க கவனைத்தை கவரனும்.
  10. சும்மா சத்தம் போட்டாலே போதும்ங்கிற இடத்துல தேவையில்லாம கடிக்க கூடாது.
  11. வேய்யில் காலத்துல நிறைய தண்ணி குடிச்சுட்டு, எக்டாவது நிழல்ல போயி படுத்தகனும்.
  12. சந்தோஷமான நேரத்துல சும்மா குதிச்சு கும்மாளம் போடனும்
  13. யாரு எவ்ளோ திட்டுனாலும், சட்டுன்னு அதை மறந்துட்டு, ஓடிப்போயி மறுபடியும் அவுங்கள நட்பாக்கிக்கனும்.
  14. எவ்ளோ வேலை இருந்தாலும், சும்மா ஒரு வாக் போயிட்டு வந்தாலே உற்சாகமாயிடனும்

-----

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் பத்மபூஷம் பட்டம் எல்லாம் குடுக்கிறாங்க.. யாருக்காவது, இவ்ளோ ஆராய்ச்சி செய்யிற இந்த ராசாவுக்கு ஒரு பட்டம் குடுக்கலாம்னு தோனுதா..?

என்ன செய்யிறது?

ஆத்து நிறையா வெள்ளம் போனாலும், நாய் நக்கித்தானே குடிக்கனும் !!!

---
#139

Monday, January 30, 2006

அது ஒரு அழகிய ___ காலம்!

கொடுமை கொடுமையின்னு கோயலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை விரிச்சு போட்டுகிட்டு ஜிங்குங்குன்னு ஆடுச்சான்'ன்னு சொல்லுவாங்க ஊரு நாட்டுல, வர வர அந்த கதையாயிட்டு வருதுங்க, தமிழ்பதிவுக பக்கம் வர்றாதுன்னாலே நிறைய பேரு பயப்படுறாங்க, பயப்படாமா வந்து மட்டும் நம்ம என்னத்த கிழிச்சுபுட்டோம்னெல்லாம் கேள்வி கேக்ககுடாது.

இது எப்படி இருக்குதுன்னா, காட்டுல வேலை செய்யிற ஆளுக வேலைக்கு நடுவால அப்படியே கொஞ்சம் எளப்பாராலாம்னு, ஓரமா இருக்கிற புங்கமரத்தடியால போயி உக்காந்தங்களாம். அட அங்க நாலு நல்ல மனுசங்க இருக்காங்கன்னு இன்னும் நாலு பேரு வந்து உக்காந்தாங்களாம்.. எல்லாரும் வந்து உக்காந்து எதாவது பாட்டு பாடுறது, பழமை பேசுறதுன்னு நேரத்தை உருப்படியா கடத்திட்டு, சுறுசுறுப்பா வேலைய பார்க்க போயிட்டிருந்தாங்க. சரி இது நல்லாயிருக்குதே, நாலு பேரு கூடிபேசுனா, நாலு நல்ல விசயம் சந்திக்கு வருதுன்னு, ஒரு கூட்டம் மரத்துக்கடியால நல்லா காரை திண்ணை கட்டி இன்னும் பத்து பேரு வந்தாலும் உக்காந்து பேச வசதியா ஒரு சவுரியம் செஞ்சாங்க, அதுல அது நொள்ளை இது நொள்ளைன்னு சில பேரு ஆரம்பிச்சாங்க, அது ஒரு பக்கம் இருந்துச்சாம்.. காரை எல்லாம் போட்டு நல்லா சவுரியம் செஞ்சு வச்சதும் கொஞசம் கொஞ்சமா முழுநேரமும் அந்த மரத்தடியில வந்து உக்காந்துக்க ஆரம்ப்பிச்சாங்க சில மைனர்க, அங்க தான் ஆரம்பிச்சது சிக்கல்.. எதோ வேலை வெட்டிக்கு நடுவால நாலு பேரு உக்காந்து சிரிச்சு பேசி சிணுங்கிட்டிருந்த இடம் இப்போ சட்டசபை மாதிரி ஆகிபோச்சுங்க, அங்க தான் அவைகுறிப்பு நீக்கமெல்லாம் செய்யவேண்டியிருக்கும்.

என்னென்னமோ சொல்லனும்னு தோனுது, வேண்டாம் விடுங்க..
'அது ஒரு அழகிய வலைப்பூ காலம்....'!,

--
#138

Friday, January 20, 2006

பேரரசு.

" பார்த்தீங்களா, தீபாவளிக்கு வந்த 'ஆதி' பீதிய தூண்டுதாம், 'பரமசிவன்' பரலோகத்துக்கு கூட்டிட்டு போகுதாம், 'பாசக்கிளிகள்'ல பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன், ஏன்னா எனக்கு நாகரீகம் தெரியும், இப்படி பொங்கல் படங்கள பார்த்து நீங்கெல்லாம் வெறுத்து போயிருப்பீங்க, அதுனால தான் உங்களுக்கு, இந்த தமிள் மக்களுக்கு, எதாவது செய்யனும்னு, அடுத்த வாரம், இந்த குடியரசு தினம்'ன்னு ஒரு நாள் வருது, அதாங்க கொடியேத்துவாங்க ஆனா முட்டாய் எல்லாம் குடுக்கமாட்டாங்களே அந்த நாள் வருது, அன்னைக்கு 'பேரரசு'வ வெளியிடுறேன்.. சும்மா நான் கூட்டம் போட்ட வந்து உக்காந்திட்டு கைதட்டிட்டு போகாம உங்க ஆதரவ தியேட்டர்ல படம் பார்த்து காட்டுங்க, ஏன்னா நான் பணத்தோட அரசியலுக்கு வந்தவன், ஆனா தயாரிப்பாளர் அப்படியில்லை..!"


--
#137

Thursday, January 19, 2006

smsல் வந்த ஆதி விமர்சனம்

இன்னைக்கு காலையில என் சகா ஒருத்தன் அனுப்பின smsல் வந்த ஆதி விமர்சனம்

தங்கச்சி பாசமா? திருப்பாச்சி பாரு
தாய்ப்பாசமா? சிவகாசி பாரு
தம்பி பாசமா? பகவதி பாரு
ஆன் த ஸ்பாட் சாகனுமா? ஆதி பாரு

இப்படிக்கு
பாதிக்கபட்டவன்
;-)
--
#136

Wednesday, January 18, 2006

கலந்தால் இனிக்கும்


பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள்
துள்ளாதோ எண்ணங்கள்

வானெங்கும் ஊர்வலம்
வா(வெ)என்னும் உன் முகம்
கண்டால் மயக்கும்
கலந்தால் இனிக்கும்
---
#135

Tuesday, January 17, 2006

கலைந்த சபதம்


நமக்கு ஒரு காலத்துல அஜித்'படம்னா ரொம்ப புடிக்கும்ங்க, ஒரு பக்கம் இளையவரு எதுக்கெடுத்தாலும் அடிக்குரல்ல 'அது ஒரு ஃபீலிங்'குன்னு ஆரம்பிச்சு ஒரே தத்துவமா சொல்லி பின்னி பெடலெடுத்தாருங்களா, அந்த நேரம் நம்ம தல உன்னை நினைத்து, முகவரி, அமர்க்களம், தீனா'ன்னு ஒரு அளவுக்கு உக்காந்து பார்கிறவன வெறுப்பேத்தாம நடிச்சதுல அஜித் படம்னா சட்டுன்னு கூட்டமா கெளம்பி போயிகிட்டிருந்தோம், ஆனா சிட்டிசன்'னு ஒரு படத்தை தேவி தியேட்டர்ல என்னைக்கு முத நாள் முதஷோ பார்த்த்னோ அன்னையில இருந்தே நமக்கு எதோ இந்த சூடு பட்ட பூனை கணக்கா, தல படம் ஓடுற தியேட்டர் பக்கமே தலைவச்சு படுக்கறதில்லீங்க.
அவரும் நம்ம சபதத்தை எப்படியும் கலைச்சுற கூடாதுன்னு, ரெட்'ல ஆரம்பிச்சு, ஆஞ்சநேயா வரைக்கும் உறுதியா இருந்தாரு, ஒரு ரசிகனோட சபதம் கலையகூடாதுன்னு நம்ம தல இவ்ளோ தூரம் மெனக்கெடுறாரேன்னு நானும் சந்தோஷமா இருந்தனுங்க.. ஆனா பாருங்க.. ஒரு சபதம்னு ஒன்னு எடுத்தா, அதை கலைக்கிறதுக்குன்னு யாராவது இருப்பாங்க, விசுவாமித்ரருக்கே ஒரு மேனகை உள்ளார பூந்து தவத்தை கலைச்சுட்டாங்களாம், நம்மெள்ளாம் எம்மாத்திரம், நம்ம சபத்தை கலைக்க 'உதய'ன்னு ஒரு நாதேரிப்பய ரெண்டு வருஷம் கழிச்சு அமேரிக்காவுல இருந்து வந்து சேர்ந்த்தான்.
நான் பாட்டுக்கு பட்டி முடிஞ்சு, வண்டி கட்டிட்டு மால கோயலுக்கு போயிட்டு வந்த சலிப்புல சிவனேன்னு வூட்டுல உக்காந்துட்டு இருந்தேன், 'மாப்ள தல மூனாவது கண்ணை திறந்துகாட்டுறாரம், போலாம் வாடா'ன்னு ஒரே நச்சு பண்ணிட்டிருந்தான், சரி பய ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கான், தல வேற ஜெயிச்சுட்டு பேசறேன்னு பெரிய பேச்செல்லாம் பேசியிருக்குன்னு நானும் போனேன்.. ஆனா பாசக்கார தல, நான் எடுத்த சபத்ததை இப்படி பொசுக்குன்னு சொல்லாம கொள்ளாம கைவிடுவேன்னு நினைக்கலை போல, வழக்கம் போல ஒரே பின்னல் தான்.. செம ஆக்ஷன் படம், உள்ளார போன உடனே, 'ஏண்டா வந்த, ஏண்டா வந்த'ன்னு மூஞ்சி மேலயே உதைக்கிறாரு. ஆள் இளைச்சு ரொம்ப அழகா இருக்காருன்னாங்க, எனக்கென்னவோ சீக்குபுடிச்சு ஒடைஞ்சு போன அடிமாடு மாதிரி இருக்காருன்னு தான் தோணுச்சு.
பக்கத்துலயே நல்லப்பாவுல 'தவமாய் தவமாயிருந்து' ஒட்டிட்டிருக்கு, என்னதான் சேரன் பொசுக்கு பொசுக்குன்னு மூஞ்சிய மூடிட்டு அழுதாலும், இவுனக நெத்தி கண்ணை திறக்கறாருனக, ஓரகண்ணை காட்டுறாருகன்னு போனதுக்கு, நல்ல நாளும் அதுவுமா அங்க போயி உக்காந்திருக்கலாம்..
'வுடு மாப்ள, அடுத்து திருப்பதி'யாம் அதுல திருப்த்யா நடிச்சுருவாரு தல, ஏ.வி.எம் படம், பேரரசு டைரக்ஷன் வேற'ன்னு நம்ம சகா வரும் போது சொன்னான்..'அதான் பயமே'ன்னு நினைச்சுகிட்டேன்.

வரும் போது தியேட்டருக்கு வெளிய நின்னுகிட்டு ஒருத்தரு, படம் எப்படிங்க?ன்னு விசாரிச்சாரு, எனக்கு நேரம்காலம் தெரியாம 'மவுனம் சம்மதம்' படத்துல மம்முட்டி, நாகேஷ பார்த்து கோவமா சொல்லுவாரே 'பரமநாயேசிவம்'ன்னு, அந்த டயலாக்குத்தான் ஞாபகம் வந்துச்சு.

--
#134

Thursday, January 12, 2006

பொங்கல்


ஊதக் காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்ப கூளம் பத்த வச்சுக் காயலாம்..
தை பொறாக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப்பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம்
பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிர நாள்தான் டோய்..

சும்மா இந்த மாதிரி தலைவர் பாட்டு பாடிகிட்டு, கண்டதையும் போட்டு கொளுத்தி, காத்தை கெடுக்காம, சும்மா ஒரு சாங்கியத்துக்கு வேணுமின்னா ஒரு கற்பூரத்த கொளுத்தி வச்சு, எல்லாரும் ஒழுங்கா, அமைதியா 'போகி' கொண்டாடுங்க சாமிகளா..

நமக்கு பொங்கலுக்கு நிறையா வேலை கிடக்குதுங்க, பட்டி தெப்பகுளம் கட்டனும், கலர் பேப்பர் ஒட்டனும்,.. ஊருபட்ட வேலை இருக்குங்க.. எல்லம் ஒழுங்கா முடிச்சு, பொங்கல் வச்சு, அப்புறம் மாட்டையையன் கோயில் போயி, போறவழி, வர்றவழியெல்லாம் நம்மாளுக செய்யிற வம்புகளையெல்லாம் பொறுத்துகிட்டு, இவனுகள பத்திரமா கூட்டிட்டு வந்து (நானா?.. நான் நல்ல பையன்ங்க..!!).. பெண்டு நிமிர்ந்துரும் நமக்கு..

இங்க சும்மா சடைஞ்சுகிட்டாலும், நிஜத்துல ரொம்ப ஆசையா எல்லாத்தையும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஆயிரம் வேலை வந்தாலும், வருஷத்துல ஒரு நா தானுங்க, இந்தா ஆட்டமெல்லாம்.. ஆடும் போதே ஆடிறனும்.. என்ன நாஞ்சொல்றது.?

பானையில பொங்கல் வைக்கிறவங்க, செப்பு பாத்திரத்துல வைக்கிறவங்க, குக்கர்ல வச்சு படைக்கிறவங்க, எதுவுமே வைக்காம கோயில்ல போயி சக்கர பொங்கல் வாங்கி சாப்பிடுறவங்க, இது எதும் இல்லாம வீட்டுல உக்காந்து சன் டீ.வி'யில ஐக்கியமாயிடுறவங்க, இதுவே ஊர்ல இருந்திருந்தான்னு வெளியூர்ல, வெளிநாட்டுல உக்காந்துட்டு பெருமூச்சு விடுறவங்க...
எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..


--#133

தேசிய இளைஞர் தினம்.



தேசிய இளைஞர் தினம். ஜனவரி 12, விவேகானந்தர் பிறந்தநாள்.

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்

  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா

  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.


--விவேகானந்தர்

---
#132

Tuesday, January 10, 2006

நமக்குன்னே வாறாய்ங்க..!!

நம்மாளு ஒருத்தரு ஒரு வேலைய செஞ்சு முடிக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தாருங்க. எப்படியாவது அந்த விஷயத்துல ஜெயிக்கனும்னு ரொம்ப போராடிட்டு இருந்தாரு, ஆனா அவரு நேரமோ என்னமோ, அவருக்கு தோல்வியா இருந்துச்சு, எனக்கு அவர் எங்க தப்பு செய்ய்றாருன்னு கொஞ்சம் விளங்குச்சு, ஆனா நாம போயி சொன்னா அவர் எதும் தப்பா எடுத்துக்க போறாருன்னு, நானும் அமைதியா இருந்துட்டேன்.
என் நேரம், அவர் எந்த வேலைய செய்ய படாதபாடு பட்டாரு, அதே வேலைய நான் செய்ய வேண்டியதா போச்சுங்க, நமக்கு தான் அவர் ஏற்க்கன்வே எங்க தப்பு செஞ்சாருன்னு தெரியுமே, கொஞ்சம் உசாரா பார்த்து சல்லிசா அந்த வேலைய முடிச்சுட்டேன். நான் அந்த வேலைய முடிச்சுட்டேன்னு தெரிஞ்சதும், நம்மாளு என்னை தேடி வந்தாரு, 'எப்படிங்க, நானும் நாலு மாசமா படாதபாடு படுறேன் ஒன்னுங்குதிர மாட்டேங்குது, நீங்க பாட்டுக்கு சட்டுன்னு முடிச்சுட்டீங்க'ன்னு ஒரே புலம்பல்.
நானும், சரி பாவம் மனுஷன் ரொம்ப நொந்து போயிருக்காரேன்னு, அவர் செஞ்ச தப்பெல்லாம் சொல்லி, சரியான வழிய காட்டி விட்டேன். ஒரு நல்ல காரியம் செஞ்சோம்னு நிம்மதியா இருந்தனுங்க..
ஆனா அது ரொம்ப நேரம் நிலைக்கலைங்க.. இப்பத்தான் என் சகா ஒருத்தன் கூப்பிட்டான், அவன் கிட்ட நம்மாளு சொன்னாராம் 'என்னமோ அவனுக்குத்தான் எல்லம் தெரியும்னு பேசாறான் ராசு, இத்தன தலைக்கனம் ஆகாது மனுசனுக்கு'ன்னு, எம்மேல பெரிய குற்ற பத்திரிக்கையே வாசிச்சிருக்காரு.. :-(

அடப்பாவிகளா.. உங்களுக்கு நல்லது செஞ்சாலும் தப்பு. எவனோ எப்படியோ செத்து ஒழிங்கடான்னு விட்டுட்டாலும் திட்டுவீங்க.. ஆனா அது பரவாயில்லையே, இப்படி நம்ம வேலைய விட்டுபுட்டு அடுத்தவனுக்கு சகாயம் செய்யபோயி அவன் வாயால திட்டு வாங்கிறதுக்கு..
இதைத்தான் 'பாத்திரம் அறிந்து இடு'ன்னு சொல்லியிருக்காங்க போல..

இவனுக்கு சொல்லிகுடுக்க போயி எங்கய்யன் ஒரு வேலை குடுத்தாரு, அதையும் பாக்கலை, இனி அவர் கிட்ட வேற பேச்சு வாங்கனும்..ம். சரி.. அது ஒன்னும் நமக்கு புதுசில்லைதான்.. இருந்தாலும்....

அடப்போங்கப்பா.. நமக்குன்னே வாறாய்ங்க..!! :-(


--#131

இலங்கேஸ்வரன்


எனக்கு பிடிச்ச வில்லன் நடிகர்கள்ல முக்கியமான நடிகர்..

டி.டி'யில நான் முதன்முதலா தொடர்ச்சியா எல்லா வாரமும் காத்திருந்து பார்த்தது 'சாணக்கியன்' நாடகம். எனக்கென்னவோ மனோகர் நடிச்சதுனால சாணக்க்யா சகுனி மாதிரி தெரிஞ்சாரு அப்போ !!

வண்ணக்கிளி'யில அடிக்கிற கைதான் அணைக்கும்' பாட்டுல சும்மா கிடா மீசை வச்சுகிட்டு வரும்போதும் சரி, தெய்வமகன்'ல ஸ்டைலா வரும்போதும் சரி..
அழகான வில்லன்கள் வரிசையில மனோகருக்கு தான் முதல் இடம்..

அவருக்கு நம் அஞ்சலி

மனோகர் மரணம்- சிஃபி செய்தி

--
#130