'
நீதான்டா எப்படியாவது சொல்லனும், மத்தவங்களை எல்லாம் கேக்க முடியாது'ன்னு கெஞ்சலா கேட்ட பாபுக்காக, '
நான் முடிச்சு குடுக்கறேன்'னு பந்தாவா சொல்லிட்டு, பஸ்ல கோயமுத்தூர்ல இருந்து பொள்ளாச்சி வர்ற வரைக்கும், '
இரு சிட்கோ கேட் தாண்டட்டும், கிணத்துகிடவு வரட்டும், முள்ளுபாடி கேட் தாண்டட்டும்னு' உள்ளார நடுங்கிட்டு வெளிய மிதப்பா உக்காந்திருந்ததா நினைச்சுட்டு இருந்த என்னை பொள்ளாச்சி பஸ்ஸ்டான்ட்ல எறங்கினதும் '
என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே, பாபு எதாவது கேக்க சொன்னானா?'ன்னு நிதானமா சுகன்யா கேட்ட அன்னைக்குத்தான் இந்த
'காதல்'ங்கிற சமாச்சாரத்தை நிஜத்துல கிட்டக்க பார்த்ததுங்க.
எப்பவுமே சாயம் போன கலர்ல சட்டையும், ப்ரவுன் கலர் முழுக்கால் டரவுசருமே போட்டுகிட்டு திரிஞ்சவன், திடீர்ன்னு க்ராஸ்கட் ரோடெல்லாம் சுத்தி டீ-ஷர்ட்'ம் ஜீன்ஸ் பேண்ட், ஆக்க்ஷன் ஷு'னு வாங்கினப்ப கூட பெருசா உறைக்கலைங்க, ஆனா, காலங்காத்தால அஞ்சரை மணிக்கு சைக்கிள் மிதிச்சுட்டு வந்து மூச்சு வாங்க எங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு '
ராசு, எல்லாம் வாங்கினோம், ஆனா சாக்ஸ் வாங்காம வந்துட்டோம், உன் சாக்ஸ் ஒன்னு குடு'ன்னு கேட்டு வாங்கிட்டு போறவனுக்கு ரகசியமா கட்டைவிரல் காட்டி அனுப்புனேன் பாருங்க அன்னைக்குத்தான், இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரம் நம்மள ரொம்ப நெருங்கி வந்து போனது.
இந்த பொதுசேவை'களுக்கு அப்புறம், பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்ங்கிற மாதிரி நானும் '
தொடதொட மலர்ந்ததென்ன' கேட்டு கண்மூடி உக்காந்த நேரம்,
'நாம பெரிய ஆளாயிட்டோம்னு' தோணுச்சுங்க..
அப்புறம் சட்டுன்னு ஒரு நாள் '
நீ கண்டிப்பா இஞ்சினியர் ஆகி, இந்த உலகத்துக்கு சேவை செய்யனும்னு' ஊரை விட்டு தள்ளி கொண்டுபோயி உக்காரவச்சிருச்சுங்க விதி. அங்க போன பின்னாடி 'கண்மூடி' உக்கார வழக்கம் எல்லாம் 'சின்னபுள்ளதனமா' போயி, கழட்டி விட்ட மேல் பட்டனும், துவைக்காத ஜீன்ஸும் சாக்ஸ் போடாத பவர்ஷூவுமா, நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும் மறுகையில ராஜா'வுமா உக்காந்து பண்னாட்டு பண்ணிட்டு இருந்தகாலம் அது. கண்மூடி ஆகாசத்துல பறக்கிறவன லைட்டா உசுப்பேத்தி, அவன் காசுலயே சிந்தாமனி, ராஜம்னு நோம்பி கொண்டாடிட்டு, அப்புறம் சாவுகாசமா ஹாஸ்டலுக்கு வந்து '
இந்த மாதிரி எத்தனைய பார்த்திருக்கேன் போய் பொழப்பா பாருங்கடா டேய்'ன்னு உதாரா சொல்லிகிட்டு இருந்தேன்.
எவனோ திமிருக்கு செஞ்ச ப்ரச்சனைக்காக, வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ,
'பங்கு, ப்ரின்சி பேசிக்கலாம்னு கூப்புடறாரு, நீயும், செல்லானும் போங்க, அது தான் சரிவரும்'ன்னு சொல்லி மொத்த கூட்டத்தையும் விலக்கிட்டு 'ஹோ'ன்னு இரைச்சலுக்கு நடுவால படியேத்தி விட்டப்போ, கண்மூடி ஆகசத்தை பார்க்கிறவங்கள பார்த்து
'நாம அதெல்லாம் தாண்டி வந்துட்டோம்னு' தோனுச்சுங்க.
'டேய், வாழ்க்கை போயிரும்டா, பர்ஸ்ட் க்ளாஸ் கூட வாங்கலைன்னா எப்படி?'ன்னு HOD கூப்பிட்டு, டீ வாங்கி குடுத்து, உக்காரவச்சு பேசினதுல, ஒரு பதினைஞ்சு நாள் முன்னாடியே புஸ்தகத்தை எல்லாம் தேடி எடுத்து, மிச்சமிருந்த மூனு பேப்பரையும் முடிச்சு, எப்பவும் முதல் மார்க் வாங்கற 'காக்ஸ' கடுப்படிச்சு, பர்ஸ்ட்கிளாஸ தொட்டு பார்த்ததுட்டு. ரத்தகட்டும் சஸ்பென்ஷனுமா போயி நின்னப்போ நடந்தத நினைச்சுகிட்டே எங்கய்யன் கிட்ட கொண்டு போயி ஆர்டரை காட்டிட்டு , விழுந்து விழுந்து படிச்சவெனெல்லாம் அப்ரன்டீசா இருக்க, நாம டயர் கம்பெனியில ப்ரடொக்க்ஷன்ல பெருமையா சேர்ந்து, ராத்திரி ஷிப்டுல மலையாள சேட்டங்கிட்ட கத்திரியோட உலகநிகழ்வுகள், நவீனம், சிவப்புகொடின்னு பேசும் போது '
இப்பத்தான் நிசமாவே தாண்டியிருக்கோம்'னு தோனுச்சுங்க..
அப்புறம் சென்னைப்பட்டணதுக்கு வாழ்க்கை பட்டு போயி, சால்ட் பிஸ்கட்டும் டீயும் அடிச்சுட்டு, தினம் தினம் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வீதியெல்லாம் சுத்தி, எப்படியோ 'சாஃப்டா'ன ஆளா மாறி, அதுவரைக்கும் போடாத ப்ளைன் சர்ட்டெல்லாம் போட்டு டக் பண்ணி, ஆகசத்துல பார்த்த ப்ளைட்டெல்லாம் உள்ள போயி பார்த்து, கன்ஸ் அன் பேரல்ஸ்'ல பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துட்டு, சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு, சந்தோஷமா அவ ரிசப்சனுக்கு போயி போட்டாவுக்கு நின்னு, ஈசிஆர்'ல 100 -110 எல்லாம் சாதரணா தொட்டு, நீலாங்கரை தாண்டி கடல் மணல்ல படுத்துகிட்டு 'மண்டை' எபக்ட்டுல,
'வாழ்க்கை எப்படி மாறுது பார்த்தியா?'ன்னு ஆரம்பிச்சு நான் கோர்வையா பேசுறத வாயத்திறந்து பார்த்துகிட்டு இருந்த சகா'க்க மத்தியில '
நாம ரொம்ப தூரம் தாண்டி வந்துட்டோம்'னு தோனுச்சுங்க.
'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும்,
'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும்,
'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா?'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும்,
'ஏங்கண்ணு சித்தப்பா ஒரு ஜாதகம் சொல்றாரு'ன்னு சாப்பாட்டுக்கு மத்தியில மெதுவா எங்கம்மா ஆரம்பிக்கும் போதும், '
திஸ் ஈஸ் நாட் தி பைனல், யூ ஹாவ் டூ ப்ரூவ் மோர்'னு கோட்டு போட்ட பெருசு கைகுடுத்து பாராட்ட, கூட இருந்தவன் எல்லம் கைதட்டும் போதும்,
'துரை, சாப்பாடு வச்சிருட்டுமா, சீக்கிரம் வந்துருவயா? லேட்டான கேப் புடிச்சு வா, டூ வீலர் வேண்டாம்'ன்னு நம்ம சகாவுக்கு போன் போட்டு பொறுப்பா பேசிட்டு, ராத்திரியில குக்கர் வைக்கும் போதும் கூட மறுபடியும் தோணுச்சுங்க..
'நாம அதெல்லாம் தாண்டிட்டோம்'னு.
வாரக்கடைசியில, நம்ம இடுப்பு அளவு உசரம் இருக்கிற பசங்கள கூட்டிட்டு
'அதெல்லாம் இல்ல சிக்ஸ்தான் அது'ன்னு தெரியாத மொழியில அரைகுறையா பேசி சண்டைபுடிச்சுட்டு இருக்கும் போதும், எல்லாரும் ரொம்ப சுவாரசியமா படம் பார்க்கையில 'ஜீசஸோட பேத்தி நீதான்னு' நம்ம ஹீரோ சொல்லும் போது,
'இன்னுமா இந்த ஊரு உன்னை நம்புது'ன்னு கைபுள்ள கணக்கா சவுண்ட் விட்டு, மொத்த தியேட்டரும் அரை நிமிஷம் சிரிக்கும்போதும், பக்கத்து மாடியில இருக்கிற பொண்ணுக மொட்டைமாடிக்கு போகுற நேரம் பார்த்து நாமளும் மொட்டைமாடிக்கு புஸ்தகமும் ராஜா'வுமா போகலாம்ங்கிற போது தாங்க தோணுது.. '
அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..!'ன்னு.
ஒரு வேளை இதையும் தாண்டி போவமோ என்னமோ, ஆனா அதுக்கெல்லாம் விருப்பமில்லைங்க..
'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன்
so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :). சமர்பணம் : வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.(என்ன்டா புலம்பியிருக்கான்னு புரியாதவங்களுக்கு..
இங்க பாருங்க.. சும்மா ஒரு ஆசை.. ஹி.ஹி.. )
---
#184