அன்னைக்கும் எப்பவும் போல டீக்கடை
'போசு' ஜன்னலை தட்டி
'டீ வச்சிருக்கண்ணே'ன்னு கத்திட்டு போற குரல் கேட்டுத்தாங்க முழிச்சுகிட்டேன். பொழப்புக்காக சென்னைபட்டனம் போயி டீ.நகர் மேன்ஷன்ல சகாக்களோட கூட்டா தங்கி, பொட்டி தட்டுற வேலைய வாங்கின நாள்ல இருந்து ஆறு மாசமா போசு குரல் கேட்டுத்தான் கண்ணை தொறக்கிறதுங்கிறது வழக்கமா இருந்துச்சுங்க. முத்துநகர் மாம்பலத்துக்கு வர லேட்டு ஆனாலும் ஆகும், போசு ஜன்னலை தட்டி டீ வச்சுட்டு போற நேரம் மட்டும் லேட்டு ஆகவே ஆகாதுங்க. ராத்திரி எத்தனை சுத்து போனாலும், நீ மட்டும் எப்படிடா காலங்காத்தால சரியா ஆபீஸ் வர்றேன்னு நம்ம சக பொட்டிதட்டியாளர்கள் கேக்கும் போதெல்லாம் எனக்கு போசு தான் ஞாபகத்துக்கு வருவான். சின்ன பையன், ஒரு பதிமூனு பதினாலு வயசிருக்கும்..
'விருதாச்சலம் பக்கம்ண்ணே, அப்பா, அக்கா, ஒரு சின்னபய, எல்லாம் அங்க தான் இருக்குதுக, அப்பப்போ அப்பா வந்து துட்டு வாங்கிக்கினு போவாரு', எப்பவோ ஒரு சனிக்கிழமை ராத்திரி பதினோரு மணிவாக்குல தலைசுத்தல குறைக்க கட்டஞ்சாயா அடிக்கும் போது, அவன் சொன்னதா லேசா ஒரு ஞாபகம்.
எஸ்.கே'ல பொங்கலும் வடையும் சாப்பிட்டு, நுங்கம்பாக்கத்துல இருக்கிற ஆபீஸுக்கு கிளம்பினேன், அப்ப ஒரு வருஷம் நம்ம தினப்படி பயணமெல்லாம் ரயில்வண்டியில தான். சீசன் டிக்கெட் வச்சுகிட்டு மாம்பலத்துக்கு நுங்கம்பாக்கத்துக்கும் தோணுனப்ப எல்லாம் பயணப்படுவோம். 8.50 லேடீஸ் ஸ்பெஷல் வண்டிக்கு முன்னால 8.43க்கு வர்ற வண்டியிலயே போயிடறது தாங்க நம்ம வழக்கம், அன்னைக்கு எப்படியே 'டைமிங்' மிஸ் ஆகிப்போச்சுங்க, நான் ஸ்டேஷனுக்குள்ளார போகும்போது 8.43 வண்டி மூவ் ஆகிடுச்சு, நானும் ஒரே ஓட்டமா மெளனராகம் க்ளைமாக்ஸ்ல மோகன் ஓடுவாரே அந்த மாதிரி ரெண்டு ரெண்டு படியா தாண்டி ஓடினேன், ஆனாலும் நான் ப்ளாட்பாரத்துக்கு போறதுக்கு முன்னாடி வண்டி ப்ளாட்பாரத்தை தாண்டியிருச்சு, அப்புறம் என்னத்த செய்யிறது 'போகுதே போகுதே'ன்னு கடலோர கவிதைகள் சின்னப்பதாஸ் மாதிரி ஆடு ஒன்ன புடிச்சு கையில வச்சுகிட்டு இளையராஜா, எஸ்.பி.பி உதவியோட சோககீதமா இசைக்க முடியும், அடுத்து வரப்போற லேடீஸ் ஸ்பெஷல்லுக்க்காக காத்திருக்கிற மக்களை எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டே ஓரமா நின்னுட்டேன்.
8.50 வண்டி லேடீஸ் ஸ்பெஷல்ங்கிறதால அதுக்கு அப்புறம் 8.57 வண்டி எப்பவும் பயங்கிற கூட்டமா இருக்கும், அதுனால தான் நான் எப்பவும் அதுக்கு முன்னாடி போயிட பார்க்கிறது.. அப்படியே வேடிக்கை பார்த்துகிட்டு நின்னதுல நேரம் ஆனதே தெரியலைங்க லேடீஸ் ஸ்பெஷல் வந்து போயும் இன்னும் சேலை சுடிதார் கூட்டம் இருக்கத்தான் செய்யுது. 8.57 வண்டி வழக்கம் போல, கட்டுக்கு அடங்காம திமிறிகிட்டு இருக்கிற வக்கப்போரு லாரி மாதிரி நிறைஞ்சு வந்துச்சு, எப்படியோ ஒரு காலை.. காலா, ஒரு ரெண்டு விரலை வைக்க கதவுகிட்ட இடம் கிடைச்சுது, கிடைச்ச கேப்புல எங்கயோ மேல இருந்த ஒரு கம்பிய புடிச்சுகிட்டு தொத்திகிட்டேன், இதெல்லாம் சென்னபட்டணத்துல காலை பயணத்துல சகஜம் தானே..வயசுப்பையன் இதுக்கெல்லாம் அசரலாமா. ஒரு கையால மேல இருந்த கம்பிய எப்படியோ புடிச்சாச்சு, உசரமா இருக்கிறது நிறையா நேரம் வசதி தாங்க. இன்னொரு கையில புடிச்சுக்க எதாவது சிக்குமான்னு பார்த்தா, பக்கத்துல தொங்கிறவனோட காட்டன் சர்ட் தான் கிடைக்குது.. ரெண்டு விரலால காலை பாலன்ஸ் பண்ணிக்கிட்டே ஒரு கையால மேல்கம்பிய புடிச்சுகிட்டு காத்தார கோடம்பாக்கம் போயி சேர்ந்தாச்சு. இப்படி விவகாரமா தொங்கிட்டு போறதும் ஒரு த்ரில் தாங்க. கோடம்பாக்கத்துல ஒரு கூட்டம் இறங்குது, அதை விட ரெண்டு மடங்கு கூட்டம் ஏறுது.. ம்ம் எல்லாம் ஒரு ரெண்டுநிமிஷ லேட்டுனால.. மறுபடியும் அதே ரெண்டுவிரல் ஒத்தக்கை தொங்கல். இப்ப முன்னவிட இன்னும் வண்டிய விட்டு வெளிய தள்ளி தொங்கற மாதிரி இருக்குது. கம்பமெல்லாம் கிட்டக்க இருக்கிற மாதிரி இருந்துச்சு.
வழக்கமா கோடம்பாக்கம் தாண்டி ஒரே அழுத்துல அடுத்த ஸ்டாப்புக்கு போற வண்டி அன்னைக்குன்னு கிழட்டு மாட்டை பூட்டுன கட்ட வண்டி கணக்கா ஊறிட்டே போகுதுங்க, மொத்த உடம்பும் கிட்டத்தட்ட வண்டிக்கு வெளிய காத்துல தொங்குது, கால் பக்கம் ஒரு ரெண்டு விரல் தான் சப்போர்ட்டா, எத்தனை நேரம் தான் ஒரு கை தாங்கும்.. அப்படி ஒரு வலி. கைய மாத்தி புடிக்கலாம்னாலும் வழியே இல்லை. சென்னப்பட்டணத்தோட ஏப்ரல் மாச இளங்காலை(!) வெய்யிலோ இல்ல அந்த கூட்டமோ இல்ல படபடன்னு அடிச்சுக்கற மனசோ எது காரணம்னு தெரியலைங்க உள்ளங்கை எல்லாம் வேர்க்க ஆரம்பிச்சிருச்சு. மேல்கம்பியில புடிச்ச கையோட இறுக்கம் அப்படியே மெல்ல குறையுது, கொஞ்சம் எத்தி புடிக்கவும் வழி இல்லை.. இருக்கிறது ஒரே ஒரு புடிதான், இன்னொரு கை காத்துல.. இதுல எப்படி எத்தி கெட்டியா புடிக்கிறது.. அந்த இன்னொரு கையால எதையாவது புடிக்கலாம்னா நான் நின்ன வாக்குல இருந்து திரும்பவும் முடியலை. எப்படியும் இன்னும் ஒரு நிமிசத்துல வேர்வையில நனைஞ்ச கை எப்படியும் புடிய நழுவ விட போகுது.. காலை கொஞ்சம் ஆழமா உள்ள நகர்த்தனும்னாலும் கைப்புடி கொஞ்சம் பலமா இருக்கனும்.. முகமெல்லாம் வேர்த்து தொண்டை எல்லாம் வரண்டு.. பேச்சே வரலை.. கருவேப்பிலை கொத்து மாதிரி வூட்டுக்கு ஒரே புள்ளை, போகாத போகாதேன்னு எங்கய்யன் சொன்னதெல்லாம் ஞாபகம் வருது. விழுந்து செத்துப்போனா போஸ்ட்மார்டம் பண்ணுவாங்களோ? 24 மணி நேரத்துக்கு ரத்தத்துல இருக்கும்னு சொல்லுவாங்களே, நேத்து ராத்திரி பத்து மணிக்குமேல ஆரம்பிச்சது.. இன்னும் 12 மணி நேரம் கூட ஆகலையே, கண்டு புடிச்சிடுவாங்களோ? அய்யனுக்கு தெரிஞ்சா..? உயிர் போகலைன்னாலும் தண்டவாளத்துல விழுந்தா கைகால் போயி.. அடிவயத்துல கலக்கமா இருக்குது, அய்யோ 'எம்பையன் சிறுசுல ஒரு நாள் கூட பாயை நனைச்சதில்ல'ன்னு பெருமையா சொல்லுவீங்களேம்மா.. சாமி கும்பிட்டு பார்ப்பமா, பத்து வருஷமா அந்த பக்கமே போகலை, இப்ப கும்பிட்டா நடக்குமா?..'தன்மான வீரனை வருக வருக என வரவேற்க்கும் தென்னக ரயிலே மஜும்தார் யூனியன்', 'டாக்டர் அய்யா அழைக்கிறார்..!' வரிசையா சுவத்துல எழுதியிருக்கானுக, பார்வை கொஞ்சம் கலங்கலா இருக்குது, அழுகப்போறனோ? கடைசியா எப்ப அழுதேன்? சம்பந்தமில்லாம எது எதுவோ ஞாபகம் வருது. அழுகற மாதிரி இருந்தா அதுக்கு முன்னாடி நம்மளே விழுந்திடனும்.. தடுமாறி பக்கத்துல தொங்கறவனை இழுக்காம, நம்மளே கைய விட்டிரலாமா,.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷம் தான, தாக்குபுடிக்க முடியுமா.. கை புடியோட இறுக்கம் விலகிட்டே இருக்குது... புடிய விட்டிரலாமா... தொண்டை எல்லாம் அடைக்குது...கால் நழுவற மாதிரி இருக்குது, உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது. நடுங்கறனா? நானா?.. ' மொத்தம் ஏழு பேரு, ட்ராப்டர், ஸ்க்ரூ ட்ரைவர், ஹோஸ் பைப் எல்லாம் வச்சிருக்கானுக, நம்ம மாப்ள ஒத்த ஆளு, உக்காந்திருக்கிற வாட்டர் டாங்க் திட்டை விட்டு எந்திரிக்கக்கூட இல்ல, அப்படியே கால் மேல கால் போட்டு தம்மா உக்காந்திருக்கான்' ராத்திரி ஜமா சேர்ந்த உற்சாகத்துல நம்ம சகா காலேஜ் கதைய கதைய பேசுனப்ப கிளுகிளுப்பாத்தான் இருந்துச்சு.
இதுக்கு மேல முடியாது கைய விட்ருவோம், ஆனது ஆகட்டும்.. கண்ணை முடிக்கிட்டேன்... சட்டுன்னு யாரோ இடுப்பை அணைச்சு உள்ள இழுக்கறாங்க.. யாருன்னு கூட பார்க்கலை அப்படியே கண்ணை மூடினபடி மேல் கம்பிய புடிச்சிருந்த கைய இறுக்கிட்டேன்.. நுங்கம்பாக்கம் வந்திருச்சு. கூட்டம் அதுவா நம்மள இறக்கி விட்டிருச்சுங்க.. அப்படியே பக்கத்துல இருந்த பெஞ்சுல உக்காந்துட்டேன், அதே பெஞ்சுல உக்காந்திருக்கிற, நான் வழக்கமா பார்க்கவே புடிக்காத, அந்த அழுக்கு பிச்சக்காரனக்கூட கவனிக்கலைங்க. இன்னும் நடுக்கம் போகலை எனக்கு. வண்டி கிளம்பிருச்சு, சட்டுன்னு, யாரு நம்மள புடிச்சது.. தலைய தூக்கி நான் தொங்கிட்டு வந்த கதவு பக்கம் பார்க்கிறேன்.. இன்னும் நிறைய பேரு தொங்கறாங்க..வண்டி வேகம் எடுத்திருச்சு, சட்டுன்னு எந்திருச்சு இலக்கில்லாம தேடுறேன்.. ஒரு நீலக்கலர் முழுக்கை சட்டை போட்ட கை, டாட்டா காமிச்சு, விரல் உயர்த்தி காமிக்குது, பின்னால திரும்பி பார்க்கிறேன், யாரும் இல்லை, எனக்குத்தான் போல இருக்குது.. ச்சே, என்ன ஆளுடா நம்ம, ஒரு தாங்க்யூ கூட சொல்லலை.. எனக்கே வெக்கமா இருந்துச்சுங்க.
ஸ்டேசன் விட்டு வெளிய வந்து ஒரு 'ராஜா'வை பத்த வச்சகிட்டே, கண்ணுல நீர் கோர்த்துகிட்டதையும், உடம்பு நடுங்கினதையும் நினைச்சு சிரிச்சுக்கறவன, மேலயும் கீழயும் வித்தியாசமா பார்த்துகிட்டு ஹிண்டுவ மடிச்சுக்கிட்டே போனாரு ஒருத்தர். நுங்கம்பாக்கத்து ஸ்டேசன்ல காதல் காவியம் எழுதப்போற கிறுக்குபயன்னு நினைச்சிருப்பாரு.. :)
அந்த முகம் தெரியாத, நீலக்கலர் முழுக்கை சட்டைகாரருக்கும் எனக்கும்
என்ன உறவு ?? யார் அவரு? இன்னைக்கு வரைக்கும் தெரியலைங்க.. கோயிலுக்கு போற பழக்கம் வேற இல்லை.. இருந்திருந்தா நீலக்கலர் சட்டை'ங்கிற பேருல ஒரு அர்ச்சணையாவது செஞ்சிருக்கலாம் :)
(மக்கள் விருப்பத்துக்கு அடிபணிந்து, 'தேன்கூடு' போட்டிக்கு சேர்த்திருக்கேன்)
--
#197