ஒரு வேலையா என் சகா ஒருத்தன், நிதின்'னு, அவனை பார்க்க கோயமுத்துர் சவுரிபாளையம் வரைக்கும் போக வேண்டியிருந்ததுங்க, லேசா மழை வேற தூறிட்டே இருந்துச்சுங்களா, சரி எதுக்கு வம்பு, நமக்கு ஏற்க்கனவே
விழுந்த அனுபவம் உண்டேன்னு, ஹெல்மெட்ட எடுத்து மாட்டிகிட்டு கிளம்பிட்டேன்.. போன காரியமெல்லாம் ஒழுங்கா முடிஞ்சு, கிளம்பும் போது நிதின், அவனை psg techல எறக்கி விடச்சொன்னான், சவுரிபாளையத்துல இருந்து அலுங்காம திருச்சி ரோட்ட புடிச்சு உக்கடம் போக வேண்டியவன்.. அவன் சொன்னானேங்கிறதுக்காக பீளமேட்டு பக்கம் வண்டிய விட்டேன்.. அவனை
PSG சிக்னல்ல இறக்கி விட்டுட்டு கிளம்புனேன். வானம் வேற கருக்கிட்டு இருந்துச்சு, வழக்கமா இப்படி ஒரு சூழ்நிலை இருந்தா, அழுத்திட்டு பறந்திருப்பேன்.. ஆனா பாருங்க, அன்னைக்குன்னு பார்த்து சனிக்கிழமை சாயங்காலமா போச்சு, கோயமுத்தூர்'காரங்க, இல்லை இங்க படிச்சவங்களுக்கு தெரியும், சனிக்கிழமை சாயங்காலம் பீளமேட்டுல சுத்துற விஷேசம். ச்சே.. இதுக்குதான் நான் அடிக்கடி இப்பவெல்லாம் கோயமுத்தூரே வர்றதில்லை.. தேவையில்லாம மனசு கெட்டு போகுது, ஆனாலும், மழை வந்தா வருதுன்னு மெதுவா ஒரு ஓரமா அப்படியே பராக்கு பார்த்துட்டே நவ்-இந்தியா சிக்னல் வரைக்கு வண்டிய விட்டேன்.. அதுக்கப்புறம்.. சரி இனி என்னத்துக்கு மெதுவான்னு ஒரு அழுத்து அழுத்துனேன்.. டக்குன்னு டிவைடர் மேல இருந்து ஒரு ஆள மூஞ்சிக்கு நேரா துப்பாக்கி மாதிரி ஒரு சமாச்சாரத்த நீட்டிக்கிட்டே குதிச்சு ஓடி வந்தாரு.. இன்னொரு பக்கம் ரெண்டு மூணு போலீஸ் ஜீப், பைக்கெல்லாம் வேற நிக்குது.. எனக்கு ஒரு நிமிஷம் வெடவெடத்து போச்சுங்க.. ஆஹா நான் வேற கருப்பு ஹெல்மெட், காலர் இல்லாத டீ.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், போட்ஷூவுமா, பொதுவா போலீஸ்காரங்களுக்கு புடிக்காத காஸ்ட்யூம்ல இருக்கேன், நம்மள ஏதும் திவிரவாதின்னு நினைச்சுடாங்களா, இப்பத்தான் லண்டன்ல வேற, யாரோ ஒரு அப்பாவிய தீவிரவாதின்னு சுட்டுபுட்டாங்களாம்.. அங்கயே அப்படின்னா.. நம்ம போலீச கேக்கவே வேண்டியதில்லை.. டிவைடர் மேல இருந்து குதிச்சு, துப்பாக்கிய காட்டிகிட்டே விஜயகாந்த் மாதிரி ஓடி வேற வர்றாங்க..

'கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கோமே'ன்னு எங்கம்மா அழுவுறதெல்லாம் ஒரு நிமிஷம் எதோ பாரதிராஜா பட எடிட்டிங் எபட்க்ட்ல வந்து போகுது.. அப்படியே நடு ரோட்டுல வண்டிய நிறுத்திட்டேன். துப்பாக்கிய காட்டிட்டு ஓடி வந்த போலீஸ்காரர் கிட்ட வந்து டக்குனு துப்பாக்கிய திருப்பி மூஞ்சிக்கு நேரா நீட்டி '
52 52'ன்னாரு.. என்னடா இது.. இப்படி போறவன நிறுத்தி 52ங்கிறாங்க.. எதும் துப்பாக்கி மாடலா இருக்குமோ, அதை ஏன் நம்ம கிட்ட சொல்றங்க, ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயிண்ட் போனா பேப்பர் வாங்கி குடுங்க, பேனா வாங்கி குடுங்கன்னு சொல்ற மாதிரி, நம்ம கிட்ட எதும் புல்லட் வாங்கிகுடுக்க சொல்றாங்களான்னு குழம்பிபோயி பார்த்தேன்.. ரோட்டோரமா இருந்து ஒரு போலீஸ்காரர் வந்து 'வாங்க.. வாங்க.. வந்து இப்படி ஓரமா போடுங்க வண்டிய'ன்னாரு.. மறுபடியும் நமக்கு குழப்பம்.. 'வாங்க'வா.. நம்மூரு போலீஸ்காரங்க, என்னைக்கு பைக்க நிறுத்தி இப்படி மரியாதையா பேசியிருக்காங்க, எடுத்த உடனே அலப்பறையா இல்ல பேசுவாங்க.. அப்புறம்தான 'சார்'ன்னு குழைவாங்கன்னு யோசிச்சுகிட்டே, பைக்க ஓராங்கட்டுனேன்..
கையில ஸ்கூல பசங்க வச்சிருக்கிற மாதிரி பரிட்ச்சை பேடு ஒன்னு வச்சிருந்த ஒரு போலீஸ்காரர் கிட்ட வந்து..
'எவ்ளோ?'
'என்ன எவ்ளோ?'
'ஸ்பீடு'
'என்ன் ஸ்பீடு?'
'அவர் சொல்லியிருப்பரில்ல'.. துப்பாக்கி வச்சிருந்தவர காட்டுனாரு..
அவர் இன்னொரு பைக்காரர் முன்னாடி துப்பாக்கிய நீட்டிகிட்டு இருந்தாரு.. அப்பத்தான் கவனிச்சேன்.. அது துப்பாக்கியில்லை.. எதோ வேகம் அளக்கிற சமாச்சாரம் போல.. வண்டியில வரவங்க மேல காட்டி வேகத்தை கண்டுபுடிக்கறாங்களாம்.. அதோட பின்பக்கத்துல இருக்கிற ஸ்க்ரீன்ல எவ்ளோ வேகம்னு காட்டும் போல, அதை காட்டித்தான் 52.. 52ன்னு சொல்லியிருக்காங்க போல..
'52ன்னு சொன்னாரு'
'ஓவர் ஸ்பீடுங்க'
'ஸ்பீடெல்லாம் இல்லைங்களே'
'சும்மாவா நிறுத்துனாங்க.. கம்ப்யூட்டர்ல பார்த்துதான் நிறுத்தியிருப்பாங்க.. கண்ணுச்சாமி... சாருக்கு ப்ரிண்ட் குடுக்கலையா??'
'கம்ப்யூட்டரா?'
'அதான், அவர் கையில வச்சிருக்காரே, அதுலயே இப்ப ப்ரிண்ட் வந்திரும்' எதோ தானே கண்டுபுடிச்ச மாதிரி சொன்னாரு..
'இப்ப என்ன செய்யனும்?'
'ஸ்பாட் பைன் சார்.. 300 ருபா, அங்க எஸ்.ஐ கிட்ட போங்க'ன்னு சொல்லிட்டு அடுத்த ஆளுகிட்ட போயிட்டாரு..
'ஓவர் ஸ்பீடா.... அடப்பாவிகளா.. இதுக்கா.. இப்படி டிவைடர் மேல இருந்து குதிச்சு ஓடி வந்து நிறுத்துனீங்க.. நான் கொஞ்சம் அசந்திருந்தா.. மேல விட்டு தூக்கிருப்பனே.. அப்புறம்,
'ட்யூட்டியில இருந்த போலீஸ்காரர் மேல் பைக் ஏற்றி கொல்ல முயற்ச்சி'ன்னு காலையில ந்யூஸ் போட்டிருப்பாங்களே.. நல்லவேளை.. ஸ்பீடு இல்லை.. கரெக்ட்டா நிறுத்திட்டேன், அதுக்கே ஓவர் ஸ்பீடுங்கிறான்..
'52 கி.மி ஸ்பீடுல போறதே ஒவரா'ன்னு ஒரு மாதிரி விவேக் மாடுலேஷன்ல புலம்பிட்டே பைக் மேல வச்சு கேஸ் எழுதிட்டு இருந்த எஸ்.ஐ கிட்ட போயி கேட்டேன். 'யெஸ்.. யூ சீ, தேர் ஈஸ் போர்ட்.. ஒன்லி 32 கிமி ஸ்பீடு அளவ்டு'..
நம்மள எதோ நைஜீரியாவுல இருந்து வந்து படிக்கிற ஆளுன்னு நினைச்சுட்டாரோ என்னமோ..
நான் டக்குன்னு
'32ஆ.. ஏங்க, அதெல்லாம் நடக்கிற காரியமா.. பக்காவா டிவைடர் போட்டு 3 லேன் இருக்கு, இதுல 32ல போறதுன்னா.. என்னங்க இது?'
'ரூல்ஸ் இருக்குதுங்க, பார்த்து போகமனுமில்லீங்க.. பீக் டைம் பாருங்க. அப்புறம் நாங்க தான் பதில் சொல்லனும்..@#%#%@..'
அடப்பாவிகளா.. ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அட்வைஸ் மழைய'ன்னு மனசுகுள்ள கருவிகிட்டே..
'சரி, எவ்ளோ பைன்'னு சொல்லுங்க'
'ஸ்பாட் பைன் 300 ரூவா, சார்.. இல்லைன்னா சார்ஜ் ஷீட் வாங்கிட்டு திங்கட்கிழமை கோர்ட்டுல வந்து பார்த்துக்கோங்க'
எல்லாம் நேரம் 120-130ல பறந்திருக்கேன் இதே ரோட்டுல.. இன்னைக்கு '52'க்கு.. டேய் நிதினு.. நான் பாட்டுக்கு திருச்சு ரோட்டுல போயிருப்பேன்.. சைட் அடிக்க ஆசை காட்டி என்னை இந்த ரோட்டுல கூட்டிட்டு வந்து..ம்.. அவனை சொல்லி என்ன செய்யிராது.. நம்ம நேரம் அப்படி.
'இதுக்கு கோர்ட்டுக்கு வேற வராங்க.. ஷீட் எழுதுங்க.. கட்டிறேன்'
'பேர், அட்ரஸ் சொல்லுங்க'
சொன்னேன்..
'நீங்களே இப்படி வேகமா போலகலாமா?' மறுபடியும் அட்வைஸ் மழை..
சார்ஜ்ஷீட் வாங்கிகிட்டு. 300 ரூபாய் எடுத்து குடுத்தேன்..
டக்குன்னு வாங்கி பேண்ட் பாக்கெட்டுல வச்சுகிட்டு பழக்க தோஷத்துல 'சரியா இருக்குமில்ல'ன்னாரு, அடப்பாவிகளா.. சார்ஜ்ஷீட் போட்டு லீகலா வாங்கிற பைன கூட இப்படியா..
பைன் பில்லு எழுதிகிட்டே..'பாருங்க.. அவரெல்லாம் எப்படி டக்குன்னு கட்டிகிட்டு போறாரு.. நீங்க சும்மா நின்னு புலம்பிட்டே இருக்காதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. ஜீப்புல கமிஷன்ர் இருக்காரு.. பைன் கட்டுங்க.. இல்லை சார்ஜ் போடுறேன்.. கோர்ட்டுக்கு வாங்க'ன்னு சொல்லி, பக்கத்துல பாவமா நின்னுகிட்டு இருந்த
'சக- க்ரிமினல்'களோட வயத்தெரிச்சல கிளப்பி விட்டாரு. எல்லாரும் காலேஜ் பசங்க.. அவனவன் ஆளுகள சனிக்கிழமை காந்திபுரத்துல பிஸ்லரி பாட்டில் வாங்கி குடுத்து ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியது.. இப்படி லேட்டாகுதேன்னு கடுப்புல நின்னுட்டிருப்பான், இதுல நம்மள வேற இவர் உதாரணம் காட்டி வைக்கிறாரு. எல்லாபயலும் மனசுக்குள்ள 'இவன் பாட்டுக்கு பைன் கட்டிட்டு போறான்.. இனி நம்மளும் அழுகனும்'ன்னு என் பரம்பரையவே திட்டியிருப்பானுக..
'ஜீப்புல கமிஷனர் இருக்காரா?' சரி ஒரு வார்த்தை பேசுவோம்னு.. போயி அவர் கிட்ட சார்ஜ்ஷீட்டை காட்டி சொன்னேன்.. 'யெஸ், வீ கான் டூ எனிதிங், திஸ் ஈஸ் த ஆக்ட் 183'ன்னு ஒரு பத்து நிமிஷம் சட்ட பாடம் எடுத்தாரு..
'அதெல்லாம் சரிங்க, அதென்ன 32 கிமி லிமிட்?'
'அது பழைய ப்ரிட்டீஷ் முறைங்க.. 20 மைல்ஸ் ஈஸ் த லிமிட்'
'அதெல்லாம் ப்ரிட்டீஷ் காலத்துல சரிங்க.. இப்ப வர்ற வண்டிகளுக்கும், இத்தனை கூட்டத்துக்கும் 20மைல் எல்லாம் ஒத்து வருமா, கொஞ்சம் பார்த்து.. செய்யுங்க சார்'..
'சார்ஜ் எழுதறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கலாம் இல்ல நீங்க'
'அது ஒன்னும் ப்ரச்சனை இல்லைங்க.. நான் பைன் கட்டிட்டேன்.. ஆன ப்யூச்சர்ல கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. ஒரு 50கிமின்னாவது லிமிட் வைங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.. மையமா சிரிச்சாரு.. செய்வாரான்னு தெரியலை.. மனசுக்குள்ள 'போடா வெண்ணை'ன்னு கூட சொல்லியிருக்கலாம்.. எனக்கு தெரியலை.. ஆனா புது sp வந்ததுக்கப்புறம் போலீஸ்காரங்க, எடுத்த உடனேயே மரியாதையா பேசறாங்க..
வரும் போது இன்னொரு போலீஸ்காரர் சொன்னாரு.. '
டார்கெட் சார்.. அதான்'..
இந்த கலெக்க்ஷனுக்கு கூடவா
'டார்கெட்'..
வாழ்க காவல்துறை!. வாழ்க நிதித்துறை!!பி.கு:வீட்டுக்கு வந்ததும்,
எங்கய்யன் 'என்னடா கோயமுத்தூர்ல சுகுணா கிட்ட போலீஸ் கூட பேசிட்டிருந்த..'
'பார்த்தீங்களா?'
'ஆமா, நான் ஜென்னி'யில இருந்து வந்துட்டிருந்தேன்'
'போலீஸ் கிட்ட நிக்கிறேன்.. என்ன ஏதுன்னு நின்னு பார்க்கிறதில்லையா நீங்க'
'ஆமா, நீ எங்கயாவது, எச்சு பண்ணிட்டு நிப்ப, நானும் வந்து அங்க நிக்கனுமாக்கும், சல்லுன்னு வ்ந்துட்டிருந்தேன்.. வந்து கேட்டுகலாம்னு அப்படியே வந்துட்டேன்'
'சல்லுன்னு வந்தீங்களா?.. காருக்கு வேற ஸ்பீடு லிமிட்டா..??' அடப்பாவிகளா.. என்னைய மட்டும்தான் நிறுத்துவீங்களா?? இனி 'ஒவர் ஸ்பீடு' '52 கிமி தான்'னு சொன்னா நம்பவா போறாரு..
யாரவது வந்து 'ராசா நல்ல பையன்'ன்னு எங்கய்யனுக்கு சொல்லுங்களேன்.. :-(
--
#110